60 பிளஸ்…? சறுக்கி… வழுக்கி… தடுமாறி… விழவே கூடாது! : மெதுவா நடங்க; அஜாக்கிரதை வேணாம்

60 பிளஸ்…? சறுக்கி… வழுக்கி… தடுமாறி… விழவே கூடாது! : மெதுவா நடங்க; அஜாக்கிரதை வேணாம்

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன் றவை வந்தால், அதற்கான மருந்து, மாத்திரை சாப்பிட்டு, கன்ட்ரோலில் வைத்துக்கொள்ளலாம். ஆனால், 60 வயதை தாண்டி விட்டால், மிக மிக முக்கியமானது எது தெரியுமா?
வீட்டிலும், வெளியிலும் தடுமாறி விழாமல் இருப்பது தான், மற்ற எல்லாவற்றை விட முக்கியம். விழுந்துவிட்டால், அதனால் வரக்கூடிய விளைவுகள் படு மோசமானவை. அவர்களுக்கும் மீள முடியாத வேதனை; அவர்களின் குடும்பத்தினருக்கும் மாளாத கஷ்டங்கள். அதனால், அறுபது வயதை தாண்டியவர்கள் நடக்கும் போது, குளிக்கும் போது, கழிப்பறை செல்லும் போது, படுக்கை அறை மெத்தையில் படுக்கும் போது…

சிறிய அளவில் கூட அஜாக்கிரதையாக இருக்கவே கூடாது. எதனால் , தடுமாற்றம் வருகிறது, விழாமல் இருக்க என்ன செய்யலாம்? தடுப்பு முறைகள் என்னென்ன?

இதோ படியுங்கள்:

மருந்துகளால் எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்க நமக்கு மூளையின் திறன் முக்கியம். அதில் பலவீனம் ஏற்பட, வயதான காலத்தில் சாப்பிடும் மருந்துகளும் காரணம். சில நோய் தீருவதற்காக சாப்பிடும் மாத்திரை, மருந்துகள், மூளை திறனை பாதிக்கும்.

தடுப்பு முறை: எந்த மருந்தால் அடிக்கடி தடுமாற்றம் ஏற்படுகிறது. சோர்வு ஏற்பட்டு ஆளை தள்ளுகிறது என்பதை அறிந்து, அதை டாக்டரிடம் சொல்ல வேண்டும். டாக்டர் சொல்லாமல், பொதுவான மாத்திரையை கூட சாப்பிடவே கூடாது. மருந்து சாப்பிடுவோர், மதுவை தொடக்கூடாது.

உடற்பயிற்சியின்மை : ஓய்வு பெற்று விட்டால், வீட்டில் முடங்கி விடுவது தான் பலரின் வழக்கமாகி விட்டது. காலை எழுந்து, சாப்பிட்டு, இரவில் தூங்குவது தான் வேலை என்று நினைக்காமல், முடிந்தவரை உடற்பயிற்சி செய்வது முக்கியம். பாதுகாப்பாக வெளியில் சென்று வருவது, காலார நடப்பது, சிறிய வேலைகளை செய்வது முக்கியம். இது இல்லாவிட்டால், எலும்புகள் திடத்தன்மை குறையும். அதனால், உடல் அழுத் தத்தை அது தாங்காமல், ஆளை அடிக்கடி தள்ளும்.

தடுப்பு முறை: எலும்பு, தசைகள் பலவீனம் அடையாமல் இருக்க வீட்டில் சிறிய வேலைகளை செய்யலாம்; சிறிய அளவில் உடற்பயிற்சி செய்யலாம். பாதுகாப்பான முறையில் உடலை வளைத்து வேலை செய்யலாம். அளவுக்கு மீறி உடலை வருத்தக்கூடாது. பளுவான பொருட்களை தூக்கவே கூடாது.

பார்வை மங்குவதால் : வயதானால் பார்வை மங்கி விடும். வீட்டிலும், வெளியிலும் மிக உஷாராக நடக்க வேண்டும். அதிக வெளிச்சத்தை பார்க்கக்கூடாது. அப்படி பார்க்கும் போது தான் தடுமாறி விழ நேரிடும்.

தடுப்பு முறை: கண் டாக்டரிடம் அடிக்கடி செக்-அப் செய் வது முக்கியம். கருப்பு அல்லது கான்ட்ராஸ்ட் கலர் கண்ணாடி அணியலாம். தனியாக நடப் பதை தவிர்க்கலாம்.
எலும்பு முறிவு : வயதானவர்களுக்கு அடிக்கடிநேரும் பாதிப்பு எலும்பு முறிவு தான். கால்சியம், வைட்டமின் “டி’ சத்து இல்லாமல் இருந்தால் எலும்புகள் அப்பளம் போல நொறுங்கும். அதனால், லேசாக சறுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு தான்.

தடுப்பு முறை: பால், யோகர்ட், பாலாடை கட்டி, மீன் மற்றும் காய்கறி உணவுகளை சாப் பிட வேண்டும். டாக்டர் யோசனைப்படி, கால்சியம் மாத்திரைகளும் சாப்பிடலாம்.
சுற்றுப்புற பாதிப்பு : வீட்டில் பொதுவான சுற்றுச்சூழல் காரணங்களால் தான் வயதானவர்கள் விழுந்து அடிபடுகின்றனர். விளக்கு வெளிச்சம் இன்மை, நடக்க முடியாத அளவுக்கு பொருட்களை ஆங்காங்கு வைப்பது , ஆணி உ<ட்பட கூரிய பொருட்கள் சிதறி இருப்பது போன்றவை தான் இதற்கு காரணம்.

தடுப்பு முறை: வீட்டில் வயதானவர்கள் இருந்தால், கண்டிப்பாக அவர்களுக்கு ஏற்ப சோபா மற்றும் பொருட்களை வைக்க வேண்டும். கதவு, ஜன்னல்கள் வயதானவர் கையில் , காலில் இடிக்கும் வகையில் கூர்மையான வகையில் அமைக்கக்கூடாது.

* தரை வழுவழுப்பாக இருக்கக்கூடாது. தண்ணீர் சிதறி இருக்கக்கூடாது. தரை விரிப்பை திடமானதாக போட வேண்டும். இல்லாவிட்டால், வழுக்கி விடும். தரையில் எக்காரணம் கொண்டும் துணிகளை பரப்பக்கூடாது. அதிலும் வழுக்கும் படி தரை விரிப்புகளை போடக்கூடாது.

* குளியல் அறையில் , கைப்பிடி அமைக்க வேண்டும். பாத் டப்பும் வழுக்கும் வகையில் இருக்கக்கூடாது. கழிவறையில் டாய்லெட் இருக்கையை உயர்த்த வேண்டும். சோப்பு நுரை பரவி இருக்கக்கூடாது.

* அறைகளில் வெளிச்சம் அதிகமாகவும் இருக்கக்கூடாது; மங்கலாகவும் இருக்கக்கூடாது. வயதானவர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும். இரவிலும் எல்லா அறையிலும் இரவு விளக்கு போடவேண்டும்.

* படுக்கை அறையில், வயதான வர்கள் கட்டிலில் படுத்தால், பாதுகாப்பாக படுக்க வேண்டும். விழும்படி விளிம்பில் படுக்கக்கூடாது. பக்கத்தில் விளக்கு சுவிட்ச், கார்டுலஸ் போன் வைத்திருக்க வேண்டும்.

* மாடிப்படி உட்பட எந்த அறையிலும் கைப்பிடி வைக்கலாம். தரையை எப்போதும் சுத்தம் செய்ய வேண்டும். சிறிய பொருட்கள் கூட, காலில் குத்தி வயதானவர்களுக்கு பாதிப்பு தரலாம்.

%d bloggers like this: