Daily Archives: ஜூலை 23rd, 2009

நேர்மை உறங்கும் நேரம்!

இடதுசாரி இயக்கங்களின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாதவர்கள்கூட, அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்களிடம் காணப்படும் எளிமையையும் நேர்மையையும் பாராட்டவே செய்வார்கள். ஏனைய கட்சிகள் எதிலும் இல்லாத அளவுக்கு இடதுசாரி இயக்கங்களில் கட்டுப்பாடும், கொள்கைப் பிடிப்பும் உண்டு என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்த நிலைமை முற்றிலுமாக மாறி, இடதுசாரிக் கட்சிகள் அதிகார துஷ்பிரயோகம், ஊழல், உள்கட்சிப் பூசல்கள் என்று எல்லா விஷயங்களிலும் ஏனைய கட்சிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை சமீபகாலமாகத் தெளிவாக்கி வருகிறார்கள்.
கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மார்க்சிஸ்ட் கட்சியின் “பொலிட்பீரோ’ என்று அழைக்கப்படும் தலைமைக் குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருப்பது, எந்த அளவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியில் சித்தாந்த சீரழிவு ஏற்பட்டிருக்கிறது என்பதையும், அந்தக் கட்சியின் அதிகார மையத்தில் தனிநபர் செல்வாக்கு எந்த அளவுக்கு முன்னிலை வகிக்கிறது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கூட்டணி அரசு பல பகுதிகளில் செயலிழந்து, நிர்வாகமே மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் அதிர்ச்சி தரும் யதார்த்தங்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், கேரளத்திலும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் கட்சியின் மாநிலச் செயலர் பினராயி விஜயன் பொலிட்பீரோவால் நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கப்பட்டு, ஊழலுக்குத் துணைபோக மறுத்த முதல்வர் அச்சுதானந்தன் தண்டிக்கப்பட்டிருப்பது, இடதுசாரி இயக்கங்கள் நிலை தடுமாறி விட்டனவா என்கிற கேள்வியை எழுப்புகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள மூன்று நீர்மின் நிலையங்களை நவீனமயமாக்குவது என்று 1995-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசு முடிவெடுத்தது. இதற்காக டெண்டர் கோரப்பட்டு எஸ்.என்.சி. லாவ்லின் என்கிற கனடா நிறுவனம் அந்தப் பணிக்கு ஒப்பந்தமும் செய்யப்பட்டது. தொடர்ந்து பதவிக்கு வந்த மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின், மின்துறை அமைச்சராக இருந்தவர், மார்க்சிஸ்ட் கட்சியின் தற்போதைய மாநிலச் செயலர் பினராயி விஜயன்; அவரது பதவிக்காலத்தில்தான் லாவ்லின் நிறுவனம் தனது சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் பணியைத் தொடங்கி நடத்தியது.
இந்த ஒப்பந்தத்தின்படி பணிகளை நிறைவேற்றுவதில் 374 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. துப்புத் துலக்கி, தவறு செய்தவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தும் பணி மத்திய புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடத்திய மத்திய புலனாய்வுத் துறையினர், ஊழலில் பினராயி விஜயனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கோரினர். முதல்வர் அச்சுதானந்தனின் விருப்பத்தையும் மீறி, பினராயி விஜயன் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி தரக்கூடாது என்று ஆளுநருக்குக் கேரள அமைச்சரவை பரிந்துரை செய்தது.
“”குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டியது அவருடைய கடமை. விசாரணைக்குக் குறுக்கே அரசோ, கட்சியோ நிற்பது சரியல்ல” என்கிற தார்மிக நிலையை ஆரம்பம் முதலே எடுத்தார் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன். கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியது முதலே அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகத் தொடரும் அச்சுதானந்தன், ஏ.கே. கோபாலன், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு போன்ற மூத்த தலைவர்களின் வரிசையில் வந்தவர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
ஆளுநர், அமைச்சரவையின் பரிந்துரையையும் மீறி, பினராயி விஜயன் தொடங்கி அனைவர்மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய புலனாய்வுத் துறைக்கு அனுமதி அளித்தார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், காங்கிரஸ் கட்சியினரின் வற்புறுத்தலின்பேரில் ஆளுநர் ஒரு கட்சிக்காரராகச் செயல்பட்டு வருகிறார் என்றும் பினராயி விஜயனின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அமைச்சரவையின் பரிந்துரையை மீறி ஆளுநருக்கு இப்படி ஓர் அனுமதியை வழங்கும் அதிகாரம் கிடையாது என்பதுவரை இடதுசாரி இயக்கத்தினர், ஆளுநரின் செயலுக்குக் களங்கம் கற்பிக்க முயல்கிறார்கள். அவர்களது வாதத்தில் ஓரளவு உண்மை இருக்கிறது என்றாலும், அரசியல் சட்ட ஓட்டைக்குள் ஒளிந்து கொண்டு, விசாரணையிலிருந்து தப்பிக்க முயல்வது ஒரு நல்ல கம்யூனிஸ்டுக்கு அடையாளம் அல்லவே!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கு, அச்சுதானந்தனின் தனிப்பட்ட நேர்மையும், ஊழலற்ற நிர்வாகமும் காரணம் என்று யாரும் கருதவில்லை. ஆனால், கட்சிச் செயலர் பினராயி விஜயன் சம்பந்தப்பட்ட லாவ்லின் ஊழல்தான்.
இடதுசாரி இயக்கங்களின் ஒட்டுமொத்த நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி படுதோல்விக்கு வழிகோலியது என்பது உலகறிந்த உண்மை.
எளிமைக்கும், நேர்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும், சித்தாந்தப் பிடிப்புக்கும் பெயர்போன முன்னாள் திரிபுரா முதல்வர் நிரூபன் சக்ரவர்த்தி, கேரளத் தலைவர்கள் எம்.வி. ராகவன் மற்றும் கே.ஆர். கௌரி வரிசையில் இப்போது முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனும் பொலிட்பீரோவிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார். இதன் தொடர்விளைவாகக் கேரளத்தில் இடதுசாரி இயக்கங்கள் பலவீனமடைவது மட்டுமல்ல, ஊழலைப் பற்றியும், நேர்மையைப் பற்றியும் ஊருக்கு உபதேசம் செய்யும் தகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இழக்கவும் செய்கிறது.
நேர்மை உறங்கும் நேரம்… வேறு என்னவென்று சொல்ல?

செயல்பட வேண்டிய தருணம்!

சில தினங்களுக்கு முன் தனது இல்லத்தில் முன்னாள் சிவில் அதிகாரிகளுடன் பேசியபோது, “”முந்தைய ஆட்சியாளர்கள் சிலர் குறுகிய ஆதாயங்களுக்காகத் தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும் ஊக்குவித்து, அவர்களுக்குப் பயிற்சியும் வேறு சில உதவிகளையும் அளித்து வந்துள்ளனர். இதுதான் தீவிரவாதம் தலைதூக்க மிகப்பெரிய காரணம்” என்று ஜர்தாரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

1977-க்கும் 1988-க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள்தான் குறுகிய கால லாபத்துக்காக தீவிரவாதிகளை ஊக்குவித்து வந்துள்ளனர் என்பது அவரது குற்றச்சாட்டு. மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜியா உல் ஹக் தான் இதற்கு முக்கிய காரணம் என்று அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் இவ்வாறு கூறியுள்ளதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதும், பின்னர் திட்டங்களைத் தீட்டி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதும் உலகம் அறிந்த ரகசியம். தீவிரவாதிகளை வளர்த்துவிட்ட பாகிஸ்தானுக்கு இன்று தீவிரவாதிகளாலேயே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் சவால்களை எதிர்கொண்டு அவர்களை ஒடுக்க முடியாத நிலையில் இப்போது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் அதிபர் ஜர்தாரி.

தனது நாட்டு மண்ணில் இருந்துகொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்காதவரை பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். இதேபோல அமெரிக்காவும் பாகிஸ்தானின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொண்டு அந்த நாட்டுக்கு நிதியுதவி அளிப்பதையும், ஆயுதங்கள் வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கெனவே இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் பாகிஸ்தான் மண்ணில் இருந்துதான் தீவிரவாதிகள் தாக்குதல் செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளனர் என்கிற உண்மையையும் இந்தியா உலக அரங்கில் எடுத்துக் கூறியுள்ளது. இப்போது பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியும் உண்மையை ஒப்புக் கொண்டதன் மூலம் இந்தியாவின் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட வேண்டுமானால் அண்டைநாடுகளுடன் நல்லுறவைப் பேணவேண்டும் என்பதை இந்தியா நன்கு புரிந்து கொண்டுள்ளது. ஆனால், நமது அண்டை நாடுகள்தான் இதைப் புரிந்துகொள்ள மறுக்கின்றன. பாகிஸ்தான் இனிமேலாவது தீவிரவாதத்தை ஊக்குவிப்பதைக் கைவிட்டு அவற்றை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குமானால், அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், சுமுக உறவைப் பேணவும் இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

எந்த ஒரு நாடும் வன்முறையைத் தூண்டிவிடுவதும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதும், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வளர்த்து வருவதும் நல்லதல்ல; இதன் மூலம் குறுகிய லாபம் அடைந்தாலும் நீண்டகாலக் கண்ணோட்டத்தில் பார்த்தால் அதனால் ஏற்படும் தீமைகளே அதிகம்.

மும்பைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளே காரணம் என இந்தியா ஆதாரங்களுடன் கூறியுள்ளதை மனதில் கொண்டு, இந்தியா குறிப்பிட்டுள்ள தீவிரவாதிகளை விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்பிவைக்க பாகிஸ்தான் அதிபர் முன்வரவேண்டும்.

தீவிரவாதிகளுக்கு புகலிடமும் பயிற்சியும் அளிப்பதால் ஏற்படும் அபாயத்தை பாகிஸ்தான் இப்போதாவது புரிந்துகொண்டு பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க முன்வர வேண்டும்.

காஷ்மீர் உள்பட அத்தனை பிரச்னைகளையும் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள எப்போது பாகிஸ்தான் தயாராகிறதோ, மதவாதிகளின் பயமுறுத்தல்களையும், ராணுவத்தின் மேலாதிக்கத்தையும் ஒதுக்கித்தள்ளி தீவிரவாதத்தை தயவுதாட்சண்யமில்லாமல் எப்போது பாகிஸ்தான் ஒடுக்குகிறதோ, இந்திய எதிர்ப்பு என்கிற மஞ்சள் காமாலையிலிருந்து எப்போது பாகிஸ்தான் விடுபட்டு, சகோதர பாசத்துடன் இந்தியாவுடன் நட்புறவு கொண்டாடுகிறதோ அப்போதுதான் தெற்காசியாவில் நிரந்தர அமைதி ஏற்படும்.

மேலை நாடுகளும் சரி, அண்டை நாடான சீனாவும் சரி, இந்தியா – பாகிஸ்தான் இடையேயுள்ள பிரச்னைகளை முன்னிறுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சியைத் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றன. நாம் கை கோர்த்தால் உலக வல்லரசாகத் தெற்காசியா மாறிவிடும் என்று அவர்களுக்குத் தெரிகிறது. பாகிஸ்தானுக்குத் தெரியவில்லையே…

கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவும், பாகிஸ்தானும் ராணுவத்துக்காகத் தங்களது நிதிநிலை அறிக்கையில் செலவிடும் ஒதுக்கீடு ஆண்டுதோறும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. சில கோடிகளாக இருந்து, இப்போது சில ஆயிரம் கோடிகளாக நமது பாதுகாப்புச் செலவு அதிகரித்து இருக்கிறது. தெற்காசிய நாடுகளுக்கிடையே சுமுகமான உறவும், இந்தப் பகுதியில் அமைதியும் நிலவுமானால், ராணுவத்துக்கான ஒதுக்கீடு பாதிக்குமேல் குறைந்து கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிட முடியும். தெற்காசியாவில் வளர்ச்சி அபரிமிதமாக உயரும். இதை பாகிஸ்தான் உணரவேண்டும்.

ஜர்தாரி துணிந்து செயல்பட வேண்டிய தருணம் இது… தவறினால் நஷ்டம் அவருக்கும் பாகிஸ்தானுக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெற்காசியாவுக்கும்தான்!

புதிய சலுகை, புதிய கடன்

நிலுவையில் இருக்கும் பண்ணை சாரா கடன்களுக்கான வட்டியைக் குறைத்து, சில சலுகைகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதன் மூலமான ரூ.251 கோடி வட்டித் தள்ளுபடியை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று நிதியமைச்சர் க. அன்பழகன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு சலுகைகள் அளிப்பது அரசின் கடமை. அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்கவே முடியாது. ஆனால் இந்தச் சலுகைகள் உண்மையாகவே விவசாயிகளுக்குப் போய்ச் சேர்வதில்லை என்கிறபோது இந்த நோக்கம் முழுவதுமாக அடிபட்டுப் போகிறது என்பதுதான் கவலை அளிப்பதாக இருக்கிறது.

பண்ணை சாரா கடன் என்பது நேரடி விவசாயத்துக்கு ஆகும் செலவுகள் நீங்கலாக, விவசாயத்துக்கு நேரடியாகத் தொடர்பு இல்லாத செலவினங்களுக்காகத் தரப்படுவதாகும். இந்த வரையறைக்குள் கடன், வட்டிச் சலுகை அளிக்கப்படும்போது, விவசாயிகள் மட்டுமே பயன் பெறுவார்கள். ஆனால், சிறு தொழில் நடத்தவும், கட்டடம் கட்டவும் வாங்கிய கடன்களையும் பண்ணா சாரா கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்வதால் அந்தப் பலன் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை என்பதுடன் இதில் வேறு சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன.

ஏற்கெனவே, 2006-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அறிவிக்கப்பட்ட வட்டிச் சலுகைத் திட்டத்தின் கீழ் ரூ.509 கோடி வசூலாகியுள்ளதாகவும் ரூ.127 கோடி வட்டிச் சலுகை பெற்றுள்ளனர் (இத்தொகையை அரசு வங்கிகளுக்கு வழங்க வேண்டும்) என்று கூறிய நிதியமைச்சர் தற்போது இன்னொரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். “31.3.2007க்குள் கட்ட வேண்டிய இறுதித் தவணையைக் கட்டத் தவறிய பண்ணை சாரா கூட்டுறவுக் கடன்களுக்கு மட்டுமே இந்த வட்டிச் சலுகை’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை எப்போது தரப்படும் என்றால், நிலுவைத் தொகையில் 25 சதவீதத்தை உடனடியாகச் செலுத்தி, அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீதி 75 சதவீதத் தொகையைச் செலுத்தினால் 12 சதவீத வட்டியில் 6 சதவீத வட்டிச் சலுகை பெறலாம் என்பது அரசின் அறிவிப்பு.

கடன்பெற்றவர், உண்மையாகவே தொழிலில் நஷ்டப்பட்டிருந்தால், எடுத்த எடுப்பில் 25 சதவீதக் கடன்தொகையைச் செலுத்தவும், அடுத்த மூன்று மாதத்தில் 75 சதவீதத் தொகையைச் செலுத்தவும் முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் கூட்டுறவு வங்கிகள் தங்கள் கடன் நிலுவையை முழுமையாக வசூலித்த சாதனையை நிகழ்த்தும் இந்த வாய்ப்பைத் தவற விடாது. இத்தகைய கடனாளிகளுக்கு, தற்போதைய கடனை அடைக்கத் தேவையான பணத்தைப் புதிய கடனாக அளிப்பார்கள். வங்கியைப் பொருத்தவரை நிலுவையை வசூலித்து சாதனை. ஆனால், அந்த நஷ்டத்தில் இருக்கும் கடனாளிக்கு 6 சதவீத வட்டிச் சலுகை கழிந்ததுபோக மீதித் தொகை, அதே 12 சதவீத வட்டிக்கு புதிய கடன்சுமையாக நீடிக்கும்.

அதேவேளையில், லாபம் சம்பாதித்தாலும்கூட கடனைச் செலுத்தத் தவறிய, வேண்டுமென்றே இத்தகைய கடன் தள்ளுபடிக்காக காத்திருந்த வசதி படைத்தவர்கள் பயன் பெற்றுவிடுவார்கள். அரசு சொல்வதைப் போல முதலில் 25 சதவீதத் தொகையை செலுத்தி, 3 மாதங்களில் மீதித் தொகையைச் செலுத்தி வட்டிச் சலுகையில் பயன் பெறுவார்கள்.

கடன் தள்ளுபடி, வட்டித் தள்ளுபடி, அபராத வட்டித் தள்ளுபடி ஆகியவற்றை அரசு பொதுப்படையாக அறிவிப்பதால்தான் இந்த ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. கடனாளி நிரந்தக் கடனாளியாகவும், வசதி படைத்திருந்தும் கடன்செலுத்தாமல் காத்திருந்தவர்கள் பயனாளிகளாகவும் மாறுகிறார்கள்.

கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்கும்போது கடன் பெறுபவரின் சொத்து விவரம், சொத்துப் பத்திரங்கள், நிலப் பத்திரங்களை வாங்கி வைத்துக்கொண்டுதான் கடன் வழங்குகின்றன. கடன் பெற்றவர் உண்மையிலேயே கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவரா என்பதைக் கண்டறிவது மிகச் சுலபம்.

மேலும், சில ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியவருக்கும் இதே சலுகை, சில லட்சம் கடன் வாங்கியவர்களுக்கும் இதே சலுகை என்பது அர்த்தமற்றது.

கடன் பெறுபவரின் வசதி, சொத்து விவரங்களுக்கு ஏற்பவும், வாங்கிய கடன்தொகை அளவு, முறையாகத் தவணை செலுத்திய காலங்களும், செலுத்த முடியாமல் போன காலங்களும் என வகைப்படுத்தி, சலுகைகளை நிர்ணயித்தால்தான் அரசின் திட்டம் உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேரும். இல்லையென்றால், கூட்டுறவு வங்கிகளின் கணக்கு ஏடுகளில் வரவு வைக்கப்பட்டு, புதிய கடன்கள்தான் கணக்கில் ஏறும். இடையில் மக்கள் பணம் வீணாகும்.

செயல்பாட்டுக்குக் கட்டணமா?

ஒரே நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 154 கிளைகளையும் 1,540 தானியங்கிப் பணப்பட்டுவாடா மையங்களையும் திறந்திருக்கிறது “பாரத ஸ்டேட் வங்கி’. விழா அழைப்பிதழில் அந்த வங்கியே குறிப்பிட்டுள்ளதுபோல, “”உலகில் இதைச் செய்யவல்ல ஒரே வங்கி” இப்போதைக்கு “பாரத ஸ்டேட் வங்கி’ மட்டுமே. உலகெங்கும் பொருளாதார நெருக்கடியால் வங்கிகள் அடுத்தடுத்து மூடப்பட்டுவரும் நிலையில், நாட்டின் மிகப் பெரிய வங்கியின் இந்த வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அதுவும் பொதுத்துறை வங்கி என்பதாலேயே நம்முடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.

இந்தியாவைப் பொருத்த அளவில் ஓர் ஊரில் புதிதாக வங்கிக் கிளை திறப்பது என்பது சம்பிரதாயமானதல்ல. அது வெறும் பணப் பரிமாற்றத்தை மட்டுமே மேற்கொள்வதற்கானதுமல்ல. சேவை நோக்கத்தை மையமாகக் கொண்டே இந்திய வங்கித் துறையின் அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது.

புதிய பொருளாதாரக் கொள்கையின் அமலாக்கத்துக்குப் பிறகு இந்திய வங்கித் துறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, வெளிநாட்டு மூலதனத்தைக் கொண்ட வங்கிகளின் வருகை வங்கித் துறையில் கடும் போட்டியையும் புதிய போக்குகளையும் ஏற்படுத்தியது. இந்தப் புதிய சூழலை வியாபார அடிப்படையில் பார்த்தால், இந்திய வங்கிகள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டன என்றே சொல்ல வேண்டும்.

அதேநேரத்தில், இந்திய வங்கியியலின் அடிப்படை நோக்கத்தை நம் வங்கிகள் கொஞ்சம்கொஞ்சமாக இழந்துவருகின்றன என்பதுதான் வேதனை தரும் விஷயம். மக்களுக்கான வங்கிச் சேவை என்பது கொஞ்சம்கொஞ்சமாக லாபத்துக்காக மட்டுமே என்றாகிவிட்ட வங்கித் தொழிலாக மாறி வருகிறது. சாமானிய மக்கள் வங்கியில் கடன் பெறுவது என்பது இப்போதும் எளிதான விஷயமாக இல்லை.

வங்கியாளர்கள் பணத்தின் பாதுகாப்பு கருதி சில நடைமுறைகளைக் கையாள்வதாகக் கூறினாலும் வாராக்கடன் பட்டியல்கள் எப்போதுமே அவர்கள் கூற்றுக்குச் சாதகமானதாக இருந்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன் “இந்தியன் வங்கி’ திவாலாகும் நிலைக்கு வந்தபோது வங்கிகளை ஏமாற்றுபவர்கள் சாமானியர்களா, பண முதலைகளா என்பது வெட்டவெளிச்சமானது.

சாமானிய மக்கள் தங்கள் அவசரத் தேவைக்காக கடன் பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு எப்போதும் திறந்திருக்கும் ஒரே கதவு நகைக் கடன் மட்டும்தான். இந்தியாவில் 53,000-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உள்ள நிலையில், நகைக்கடன் அளிக்கப்படும் ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 10 பேர் நகைக்கடன் வாங்குவதாக மதிப்பிடப்படுகிறது.

எனினும், வங்கிகளைவிடவும் லேவாதேவிக்காரர்களே இந்தச் சந்தையைக் காலங்காலமாகக் கட்டுப்படுத்துகின்றனர்; வங்கிகளிலுள்ள நடைமுறைத் தாமதம் ஏதுமின்றி கடன் தொகையை இவர்கள் உடனே வழங்கிவிடுவதுதான் காரணம்.

வட்டிவிகிதம் அதிகம் என்பதால், இந்த நகைகள் பெரும்பாலும் மீட்கப்படுவதில்லை. இதனால், ஏழைகளின் வாழ்நாள் சேகரிப்பு கடன் வாங்கிய அடுத்த சில மாதங்களில் லேவாதேவிக்காரர்களுக்கு உரித்தானதாகிவிடும்.

இந்தத் துயரக் கடனுடன் ஒப்பிடுகையில் – ஏராளமான குறைபாடுகள் இருந்தாலும் – வங்கி நகைக் கடன் நல்ல மாற்றாக இதுவரை இருந்தது.

ஆனால், “பாரத ஸ்டேட் வங்கி’ நிர்வாகம் இப்போது எடுத்திருக்கும் ஒரு நடவடிக்கை சாமானிய மக்களை மீண்டும் லேவாதேவிக்காரர்களை நோக்கித் தள்ளுவதாக அமைந்திருக்கிறது. அதாவது, நகைக்கடனுக்கான செயல்பாட்டுக் கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ. 1,000 என்று அந்த வங்கி நிர்ணயித்திருக்கிறது. இதனால், ரூ. 5,000 நகைக் கடன் பெறுபவர்கூட ரூ. 1,000 செயல்பாட்டுக் கட்டணமாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, இந்திய வங்கிகளில் நகைக் கடனாளிகளிடம் செயல்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மாறாக, நகை மதிப்பீட்டாளருக்கான கட்டணமாக கடன் தொகையில் 0.5 சதம் முதல் 1 சதம் வரை வசூலிக்கப்படுவதுண்டு. அதுவும்கூட சில வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் இந்தக் கட்டணம் மிகாது.

“பாரத ஸ்டேட் வங்கி’யில் நகை மதிப்பீட்டாளர்கள் கிடையாது. அதனால், செயல்பாட்டுக் கட்டணமாக 0.5 சதத் தொகையை இதுவரை அந்த வங்கி வசூலித்துவந்தது.

இந்நிலையில், தனியார் வங்கிகள்கூட தயங்கும் ஒரு நடவடிக்கையை “பாரத ஸ்டேட் வங்கி’ மேற்கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஏறத்தாழ நாட்டிலுள்ள மூன்றில் ஒரு பகுதி வங்கிக் கிளைகள் அந்த வங்கியைச் சார்ந்தவை. தவிர, இந்தியாவில் “வங்கிகளின் வங்கி’யாகவும் “பாரத ஸ்டேட் வங்கி’ செயல்படுகிறது. ஆகையால், இந்த நடவடிக்கை எல்லா வங்கிகளுக்கும் பரவினால், எளியோர் யாருமே நகைக் கடனுக்காக வங்கிப் படிக்கட்டுகளில் ஏற முடியாது.

பணக்காரர்களுக்காகவும், மேல்தட்டு வர்க்கத்தினருக்காகவும், தொழிலதிபர்களுக்காகவும் மட்டும்தான் வங்கிச் சேவை என்கிற நிலைமை வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். 70 சதவிகிதத்துக்கும் மேலானோர், மத்தியதர மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில், மக்கள் நலனை முன்னிறுத்தித்தான் வங்கிச் சேவை அமைய வேண்டும்.

சேவைக்கு வரி! செயல்பாட்டுக்குக் கட்டணம்!! இது என்ன விபரீதம்?

வாக்கினிலே இனிமை வேண்டும்!

“”பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். இதில் நீர் எந்த வகை என்பது உமக்கே தெரியும்…” திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி கதாபாத்திரம் நக்கீரரிடம் பேசும் இந்த வசனத்தை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன அண்மைக் கால அரசியல் சம்பவங்கள்.

அரசியல்வாதிக்குப் பேச்சுதான் மூலதனம். அதைக் கொண்டுதான் தன் நியாயத்தை நிலைநாட்டுவதும் மக்கள் கவனத்தை தன் பக்கம் திருப்புவதும் சாத்தியமாகும். ஆனால், மக்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க் கட்சித் தலைவரை கண்ணியமற்ற, தரக்குறைவான சொற்களால் விமர்சனம் செய்யும்போது, தேவையற்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. அகில இந்திய அளவில் பேசப்படும் நபர்களாக அவர்கள் மாறிவிடுகிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் யார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர்களுக்கே கூடத் தெரியுமா என்பது சந்தேகம்தான். உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஹேமவதி நந்தன் பகுகுணாவின் புதல்வியான ரீட்டா பகுகுணாவின் பெயர் இப்போது இந்திய அளவில் அனைத்து ஊடகங்களிலும் பேசப்படுகிறது. அனைத்து செய்தித்தாள்களிலும் முதல் பக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாயாவதி அரசு நிதியுதவி அளிப்பது குறித்து விமர்சனம் செய்ய ரீட்டா பகுகுணாவுக்கு முழு உரிமை உள்ளது. கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், ரீட்டா பகுகுணா பயன்படுத்திய சொற்கள்தான் ஆட்சேபத்துக்குரியவை. குறிப்பாக, மாயாவதியும் ஒரு பெண், அவரை விமர்சனம் செய்யும் தானும் ஒரு பெண் என்ற உணர்வே இல்லாமல், தரக்குறைவாகப் பேசியதால்தான் அங்கே வன்முறைகளும், தீயிடும் சம்பவங்களும், கைதுகளும் நிகழ்ந்தன.

நடந்து முடிந்த தேர்தலின்போது, பாஜக வேட்பாளர் வருண் காந்தி ஒரு கருத்தைத் தெரிவிக்க, அது மிகப் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. அதுநாள்வரை, வருண்காந்தியைப் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைந்த நபர்கள்தான். ஆனால் அவரது பேச்சுக்குப் பிறகு இந்தியா முழுவதற்கும் அவர் பெயரைச் சொன்னாலே போதும் என்கிற அளவுக்கு பிரபல்யம் அடைந்தார். இதே மாயாவதி அரசு அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததும், அது தொடர்பாக எழுந்த கருத்து மோதல்களும் அவரை அரசியல்வாதியாக மாற்றிவிட்டன. இன்னமும் வழக்கு முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதில் கவலை தரும் விஷயம் என்னவென்றால், இப்படிப் பேசுபவர்களை அவர்கள் சார்ந்துள்ள கட்சித் தலைமை கண்டிப்பதோ அல்லது அவர்கள் பேச்சுக்காக தண்டிப்பதோ கிடையாது என்பதுதான்.

கட்சித் தலைமை மகிழ்கிறது என்பதற்காகவே இத்தகைய மோசமான, தரக்குறைவான பேச்சுகள் மற்றும் கேலிகள், விமர்சனங்களை முன்வைக்க இரண்டாம் நிலைத் தலைவர்கள் முற்படுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்படும்போது, கட்சித் தலைமை இத்தகைய தரக்குறைவான போக்கை அங்கீகரிப்பதாகவே அமைந்துவிடுகிறது. இத்தகையவர்களை தொடக்கத்திலேயே கண்டிக்கவும், பதவிகளிலிருந்து நீக்கவும் கட்சித் தலைமை முற்பட்டால், இந்த அநாகரிகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஒரு மனிதரின் நடவடிக்கை மீதான வெறுப்பு தனிநபர் மீதான வெறுப்பாக மாறுவது சரியான பண்பாடு அல்ல. ஆனால், தமிழக அரசியல் கட்சி மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும், தங்கள் கட்சித் தலைமை மேடையில் அமர்ந்திருக்க, எதிர்க்கட்சித் தலைமையின் கொள்கையை விமர்சிக்காமல் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகளை விமர்சித்து காயப்படுத்தி, கைத்தட்டல் பெறுவதுதான் அதிகம் நிகழ்கிறது.

“திரு. கருணாநிதி அவர்கள்’ என்று சொல்லியோ, “செல்வி ஜெயலலிதா அவர்கள்’ என்று சொல்லியோ அவர்களது கொள்கைகளை அழகான தமிழ்ச் சொற்களால் விமர்சிக்கும் நாநலம் இன்றைய அரசியலில் காணாமல் போய்விட்டது. இதே நிலைமைதான் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் காணப்படுகிறது. ஒவ்வோர் அரசியல் கட்சித் தலைவரும் நினைத்தால் இதை முற்றிலுமாக மாற்றி அமைக்க முடியும்.

பொய் சொல்லாதிருக்கும் “வாக்குச் சுத்தம்’ அரசியலில் மிகமிகக் கடினம்தான். “வார்த்தைச் சுத்தம்’ கூட அத்தனைக் கடினமா, என்ன?

அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்!-தகவல் பெறும் உரிமைச் சட்டம்

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் மேல் முறையீட்டு மனுக்கள் பெறப்படுகின்றன என்று மாநிலத் தகவல் ஆணையர் ஆர். பெருமாள்சாமி தெரிவித்திருக்கிறார்.

இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மேல்முறையீட்டு மனுக்கள் மாநிலத் தகவல் ஆணையத்துக்கு வருகின்றன என்றால், அதற்கு என்ன பொருள்? தகவல் பெறும் உரிமை குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள் என்பதாக நினைக்க வைத்தாலும், தகவல் மறுக்கப்படுவதால்தான் அதிக அளவில் மாநிலத் தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்கிறார்கள் என்பதுதானே உண்மையான பொருள்! அதாவது, தகவல் தர மறுப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்பதுதான் இதன் தன்னிலை விளக்கம்!

தகவல் பெறும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்கள் வரையிலும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. ஒளிவு மறைவு இல்லாமல் அதிகாரிகள் பதில் கூறினார்கள். இத்தகைய பதில்கள் அரசு நிர்வாகத்தின் கோளாறுகளை அம்பலப்படுத்தும் வலுவான சாட்சியங்களாக மாறுவதைக் கண்டவுடன், அரசாங்கமே “சில துறைகள் பதில் தர வேண்டியதில்லை’ என்று சட்டப்படி விலக்கு அளித்தது. அரசின் இந்த தவறான முன்னுதாரணம், அரசு அதிகாரிகளுக்கு தெம்பைக் கொடுத்துவிட்டது. அவர்களும் பதில் அளிக்காமல் இருக்கும் வழிகளைக் கண்டடைந்துவிட்டனர்.

அண்மையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் “ஒரு பள்ளிச் சுற்றுச் சுவர் அமைக்கும் பணிக்கு அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?’ என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் கேள்வி கேட்டார். “அந்தப் பணி அனுமதிக்கப்பட்டு, இத்தனை லட்சம் ரூபாய் செலவில் முடிக்கப்பட்டது’ என்று பதிலும் கிடைத்தது. அந்த பதில் கிடைத்தபிறகுதான் சுற்றுச்சுவர் எழுப்பாமலேயே பணம் கரைந்த ஊழலை அம்பலப்படுத்தவே இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார் என்பது அதிகாரிகளுக்குப் புரிந்தது. அதிகாரிகள் எச்சரிக்கை அடைந்துவிட்டனர். சக ஊழியர் பாதிக்கப்படுகிறார்; நாளை நமக்கும் இதே கதி ஏற்படலாம் என்ற புரிதலுடன் பதில் தர மறுக்கின்றனர் அரசு அதிகாரிகள்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 30 நாட்களுக்குள் பதில் தராவிட்டால் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கலாம். அபராதம் விதிக்கலாம். பதில் அளிக்காமல் இருந்தால்தானே இந்த பிரச்னை!. அதனால் பதில் அளித்துவிடுகிறார்கள். என்ன பதில் தெரியுமா? “”தாங்கள் கேட்டுள்ள கேள்விகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 2 (ஊ)-ல் குறிப்பிட்ட தகவல் என்ற வரையறையில் வராது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”.

இதற்காக அதே துறையில் மீண்டும் இரண்டாவது முறை முறையீடு செய்தாலும் இதே பதில்தான். ஆகவே மாநிலத் தகவல் ஆணையத்துக்கு விண்ணப்பிக்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். ஆகவேதான், மாநிலத் தகவல் ஆணையத்துக்கு மேல்முறையீட்டு மனுக்கள் குவிகின்றன. கடந்த ஜூன் மாதம் வரை ஒரு லட்சத்து பதினோராயிரம் மனுக்கள் பெறப்பட்டு அதில் 8341 மனுக்கள் மட்டுமே விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் அதிகமான மேல்முறையீட்டு மனுக்கள் வரும் என்றால், அவற்றுக்கு நியாயம் கிடைக்கச் செய்வது மிகமிக அரிது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் எத்தனைக் கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம். அவற்றில் சில கேள்விகள் வேண்டுமானால் “தகவல்’ என்ற வரையறைக்குள் வராமல் இருக்கலாம். ஆனால் எல்லா கேள்விகளையும் ஒட்டுமொத்தமாக மறுப்பது எந்தவகையில் நியாயம்? ஆனால் அப்படித்தான் செய்கிறார்கள்.

“ஓர் ஓய்வூதியதாரர் இறந்த மாதத்தில், அவர் உயிரோடு இருந்த நாள்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டுமா, இல்லையா?’ என்ற மிகச் சாதாரண கேள்விக்கு, தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீடு அலுவலர் இருவரும் சொல்லி வைத்தாற்போல, பிரிவு 2 (ஊ)-வை மேற்கோள்காட்டி பதில் தர மறுப்பதைக் காணும்போது, அதிகாரிகள் திட்டமிட்டுத் தெளிவாக செயல்படுகிறார்கள் என்பது புரிகிறது.

மாநில அரசு அதிகாரிகள்தான் இப்படியென்றால், பொதுத்துறை நிறுவனமான வங்கிகள்கூட இதே பாணியைக் கையாளுகின்றன. “எந்தெந்த வைப்பு நிதிக்காக (வருமான வரிப் பிடித்தம் தவிர்க்க) படிவம்-15ஜி தரப்பட்டது என ரசீது அல்லது அத்தாட்சியை வங்கி தன் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டுமா, இல்லையா?’ என்பது ஒரு சாதாரண கேள்வி. தரவேண்டும், வேண்டியதில்லை என்ற எந்த பதிலையும் தெரிவிக்கலாம். ஆனால் அவர்களும் கிளிப்பிள்ளை போல சொல்கிறார்கள்- “தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 2 (ஊ)-ல் குறிப்பிட்டுள்ள….’

முள்ளை முள்ளால் எடு, வைரத்தை வைரத்தால் அறு, சட்டத்தை சட்டத்தால் நெரி- அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

ஆடி ஷாப்பிங் செய்ய ரெடியாகிவிட்டீர்களா?

ஆடி மாதம் வரப்போகிறது; பெரும்பாலான கடைகளில் ஆடித் தள்ளுபடி விற்பனை துவக்கி விட்டனர். நீங்களும் ஆடி ஷாப்பிங் செய்ய ரெடியாகி விட்டீங்களா?

ஆடித் தள்ளுபடி எப்படி வந்தது என்று தெரியுமா உங்களுக்கு?

ஆடி மாதத்தில் திருமணம், புதுமனை குடிபுகல் உள்ளிட்ட சுபகாரியங்களை செய்வதை பலரும் தவிர்த்து விடுவர். அதனால், வர்த்தகக் கடைகளில் வியாபாரம் “டல்’லடித்து விடும். மேலும், தீபாவளி பண்டிகையின்போது அதிகமாக கொள்முதல் செய்த ஜவுளிகள், பொருட்கள் ஆகியவற்றை விற்று தீர்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. வியாபாரத்தை பெருக்கவும், பழைய சரக்குகளை விற்று தீர்க்கவும் வியாபாரிகள் கண்டுபிடித்த யுக்தி தான் ஆடித் தள்ளுபடி. இருந்தாலும், ஆடித்தள்ளுபடியில், உண்மையான சில சலுகைகள் கிடைப்பதையும் மறுக்க முடியாது. அந்த உண்மையான சலுகைகளை கண்டறிந்து வாங்குவது நம் புத்திசாலித்தனம்.

ஆடி ஷாப்பிங் செய்யும் முன், முதலில் வீட்டுக்கு உடனடியாக தேவைப்படும் பொருட்கள் என்னவென்று பட்டியல் எழுத வேண்டும். பின், கையிலிருக்கும் பணத்துக்கு ஏற்றவாறு, எந்தப் பொருட் களை எல்லாம் வாங்க முடியும் என்பதை குறித்து, பட்ஜெட் போட வேண்டும். கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், “ஏசி’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட்டில் வாங்க நினைக்கும் பொருட்களின் விலையை, ஆடித் தள்ளுபடி அறிவிப்புக்கு முன்பே அறிந்து கொள்ள வேண்டும்.

எந்த நிறுவனத்தின் பொருளை வாங்க வேண்டும் என்பதையும் முடிவு செய்வது அவசியம். அக்கம் பக்க வீட்டாரிடம் அந்த பொருளின் நிறைகுறை, அதை வாங்கிய கடையில் ஒழுங்காக சர்வீஸ் செய்து கொடுக்கின்றனரா என்பதை கேட்டு வைத்து கொள்வது புத்திசாலித்தனம். ஆடித் தள்ளுபடி துவங்கியதும், ஒவ்வொரு நாளும் எந்தெந்த கடைகளில் என்ன பொருட்கள், எந்தெந்த நிறுவனப் பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன என்பதை, தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில நாட்களாவது தள்ளுபடி விவரங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

குறைவான விலைக்கு பொருளை தரும், நம்பிக்கைக்கு உரிய கடையை தேர்ந்தெடுத்து, பொருளை வாங்க வேண்டும். கிரைண்டர், மிக்சி, வாஷிங் மெஷின், “ஏசி’ அயர்ன்பாக்ஸ் உள்ளிட்டவைகளில் ஒரு சில பொருட்களை இணைத்து, “காம்போ ஆபர்’ என்ற சலுகை விலையில் விற்பனை செய்வர். அந்த பொருட்களில் ஒரு சில மட்டும் நமக்கு தேவைப்படலாம். அப்படிப்பட்ட சூழலில் உறவினர், நண்பர்களோடு இணைந்து, “காம்போ ஆபரில்’ பொருட்களை வாங்கி பங்கிட்டு கொள்ளலாம். இதனால், எல்லாருக்கும் பயன் கிடைக்கும்.

ஜவுளியை பொறுத்தவரை, ஆடியில் தான் அதிகம் விற்பனையாகிறது. தள்ளுபடியில் கிடைக்கிறதே என்று, தரமற்ற ஜவுளிகளை வாங்கக் கூடாது. நான்கு கடைகளில் ஏறி இறங்கி, விலையை விசாரித்து, நல்ல ஜவுளிகளை தேர்ந்தெடுத்து சலுகை விலையில் வாங்க முயற்சிக்க வேண்டும். நகை வாங்குபவர்கள், அறிமுகமில்லாத கடைக்கு செல்வதை விட, நன்கு அறிமுகமான கடையில் வாங்குவது புத்திசாலித்தனம். அந்த நகைகளுக்கு “ஹால் மார்க்’ மற்றும் 916 தரமுத்திரை இருப்பதை உறுதி செய்து வாங்குவது நல்லது.

வியர்க்குருவை விரட்ட வெள்ளரி

ஒருவருக்கு வியர்த்தல் என்பது ஆரோக்கியமான நிகழ்வே. ஆனால், தற்போது கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால், பெரும்பாலானவர்கள் வியர்க்குரு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். முதுகு, கழுத்து அல்லது தலை போன்ற பகுதிகளில் தோன்றும் வியர்க்குருக்கள் அரிப்பை உண்டாக்கும்.

* கோடை காலத்தில் வியர்க்குரு தோன்றாமல் இருக்க அடிக்கடி குளிக்க வேண்டும். குளிக்கும் போது மூலிகையினால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்துவதே சிறந்தது.

* வெள்ளரிக்காயை வெட்டி, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறைகள் செய்யலாம். இதை வியர்க்குரு மறையும் வரை தொடர்ந்து செய்யலாம்.

* சோற்றுக் கற்றாழை ஜெல்லை, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்தால், நாளடைவில் குணமாகும்.

* வியர்க்குரு தோன்றியுள்ள பகுதிகளில், சாமந்தி பூவின் சாறு தடவினால் குணமடையும். சாமந்தி பூவை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட பவுடர்கள் மற்றும் ஆயின்மென்ட் போன்றவையும் கடைகளில் கிடைக்கின்றன.

* அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அதிக நறுமணம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதை தவிர்ப்பதே நல்லது.

* மூலிகைகளின் சாறுகளால் தயாரிக்கப்பட்ட தன்வந்த்ரம் தைலத்தை உடலில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம். இவ்வாறு தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்து வந்தால் வியர்க்குரு மறைந்து விடும்.

மழை நேரத்திலும் கவனம்…

பல இடங்களில் வெயில் சுட்டெரித்த போதிலும், சில பகுதிகளில் பருவமழைக் காலம் துவங்கி விட்டது என நிம்மதி பெருமூச்சு விடுகிறீர்களா? மழைக்காலத்தில் கவனமாக இருக்கவில்லை என்றால், பல நோய் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. அப்படி தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பது அவசியம்.

பருவமழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான நோய் தொற்றுகள்:

வயிற்றுப் போக்கு, டைபாய்டு, காலரா, வைரஸ் ஹெப்படைட்டிஸ் மற்றும் சீதபேதி போன்றவையே, பருவ மழைக் காலத்தில் ஏற்படும் பொதுவான நோய்த் தொற்றுகள். உலக சுகாதார மையத்தின் தகவல் படி, இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு, 97 லட்சம் பேர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படுகின்றனர். இதில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இத்தகைய தொற்று நோயால் ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் குழந்தைகளே அதிகம் என்பது வருத்தம் தரும் விஷயம். மேலும், பருவ மழைக்காலத்தில் நமது சுற்றுப்புறத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால், கொசுக்களின் எண்ணிக்கை பெருகி, மலேரியா, டெங்கு போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இவற்றை எல்லாம் தடுக்க வேண்டும் என்றால், அதற்கு சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

குடும்பத்தினர் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள்:

* சாப்பிட செல்வதற்கு முன்னும், கழிவறைக்கு சென்று வந்த பின்னும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.

* நாம் குடிக்க பயன்படுத்தும் குடிநீரை நன்கு கொதிக்க வைத்த பின்னரே அருந்த வேண்டும். தண்ணீரை 2 முதல் 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்தால் தான், கிருமிகள் முழுவதுமாக அழியும்.

* வீட்டை சுற்றி எங்கும் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். இதன் மூலம், மலேரியா மற்றும் டெங்கு போன்ற தொற்று நோய்களை பரப்பும் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகாமல் தடுக்க முடியும்.

* ஹெப்படைட்டிஸ் “ஏ’ மற்றும் டைபாய்டு போன்றவற்றுக்கான தடுப்பூசிகளை முறையாக போட்டிருப்பது அவசியம்.

தக்காளியை இரும்பு வாணலியில் வேக வைத்து…

காய்கறி விலை எக்கச்சக்கமாய், “எகிறி’ விட்டாலும், அதைச் சாப்பிடாமல் தவிர்த்தால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறையும். காய்கறியிலிருந்து கூடுதல் சத்தைப் பெற, சில எளிய வழிகள்:

இதய பாதுகாப்பு:

லைக்கோபீன் அதிகம் நிறைந்த தக்காளியை சூடுபடுத்தினால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால், இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் சத்துக்களை உடல் எளிதாக கிரகித்து கொள்ளுகிறது. எனவே சமையலில் தக்காளியை பயன்படுத்துவது இதய பாதுகாப்புக்கு சிறந்தது.

* புற்றுநோய் பாதுகாப்பை அதிகரித்தல்:

அதிகளவு சூடுபடுத்தும் போது பூண்டில் காணப்படும் புற்றுநோயை எதிர்க்கும் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்சைமான அலினேஸ் அழிந்து விடுகிறது. எனவே, பூண்டை நறுக்கியதும் அவற்றை 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இதனால், பூண்டில் சூட்டினால் உண்டாகும் சேதத்தை தடுக்கும் காரணி உற்பத்தியாகிறது.

* ஆன்டி-ஆக்சிடன்ட்களை இரட்டிப்பாக்குதல்:

சாலட்களில் மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயை எதிர்க்கும் காரணிகள் இரட்டிப்பாகும்.மேலும், இஞ்சி, மல்லித்தழை, புதினா மற்றும் சீரகம் ஆகியவை உடலுக்கு கிடைக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சதவீதத்தை அதிகப்படுத்துகின்றன.

* கண்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துதல்:

பருப்புகள், ஆலிவ் அல்லது பிற கொழுப்பு நிறைந்த பொருட்களை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ண காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான, ஏ, இ மற்றும் கே ஆகியவற்றின் அளவு அதிகரிக்கும். இந்த சத்துக்கள் பார்வைதிறன் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு திறன் ஆகியவற்றை அதிகரிப்பதோடு, ஸ்ட்ரோக் மற்றும் எலும்புத்தேய்வு போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கிறது.

* கால்சியம் சத்தை அதிகம் பெற:

வீட்டிலேயே சிக்கன் சூப் செய்யும் போது அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, வினிகர் மற்றும் தக்காளி போன்றவற்றை சேர்த்து செய்யலாம். அமிலத்தன்மை உடைய இந்த கலவை சிக்கன் எலும்புடன் சேரும் போது சூப்பின் கால்சியம் சத்து உயர்த்துகிறது.

* உடலுக்கு கேடு விளைவிக்கும் காரணிகளை அகற்ற:

கோழி இறைச்சியை சுத்தம் செய்து பூண்டு, சிடர் வினிகர், எலுமிச்சை சாறு அல்லது தயிரில் சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் சமைக்கும் போது அதில் உள்ள உடலுக்கு ஊறு விளைவிக்கும் காரணிகள் நீங்கி விடும்.

* காய்ச்சல், ஜலதோஷத்திற்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைக்க:

காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சிறிதாக நறுக்கினால் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால், அவற்றில் உள்ள சத்துக்கள் அழிந்து விடுகின்றன. காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை, பெரிய துண்டுகளாக நறுக்கும் போது அதில் உள்ள சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி, அதிகளவில் கிடைக்கும்.

* முக்கிய சத்துக்களை முழுவதுமாக பெற:

ஆப்பிள், உருளைக்கிழங்கு மற்றும் கத்தரிக்காய் போன்றவற்றின் தோலை உரிக்காமல் சாப்பிடுவதன் மூலம் சில முக்கிய சத்துக்களை அப்படியே பெற முடியும். பெரும்பாலான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் வெளித் தோல்களிலேயே காணப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கின் தோலில் அதிகளவு நார்ச் சத்து நிறைந்துள்ளது.

* 10 மடங்கு இரும்பு சத்து கிடைக்க:

அமிலம் நிறைந்த உணவுகளான தக்காளி, எலுமிச்சை போன்றவற்றை இரும்பு பாத்திரங்களில் சமைத்தால், நமது உடல் கிரகிக்கும் இரும்பு சத்தின் அளவு அதிகரிக்கும்.

அசிடிட்டி என்றால் என்ன?

வயிற்றில் சாதாரணமாகவே அமிலம் சுரக்கும். இவை உணவு செரித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமிலம், செரித்தல் நிகழ்வின் போது உணவுப் பொருட்களை சிதைக்கப் பயன்படுகின்றன. வயிற்றில் அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது ஏற்படும் சூழ்நிலையே “அசிடிட்டி’ எனப்படும். பொதுவாகவே வயிற்றில் சுரக்கும் அமிலத்திற்கும் குடலுக்கு வந்து சேரும் உணவுக்கும் இடையே ஒரு “ஒப்பந்தமே’ உண்டு. கடினமான உணவு வகைகள் இருந்தால், அதை ஜீரணிக்க அதற்குத் தேவையான அமிலம் அதிகளவு சுரக்க வேண்டும்; மிருதுவான உணவுக்கு குறைந்த அளவு அமிலம். இந்த ஒப்பந்தத்தை மீறி, இரண்டுமே செயல்பட்டால் பிரச்னை தான்.

அறிகுறிகள்:

நெஞ்செரிச்சல்: வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

அஜீரணம்: வயிற்றின் மேல் பகுதியில் எரிவது அல்லது வலிப்பது போன்ற உணர்வு; சில நேரங்களில் குடல் பகுதியில் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். அரிதாக சிலருக்கு எவ்வித வலியும் இருக்காது. ஆனால், வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, வயிறு ஊதல் மற்றும் வயிற்றுப் பொருமல் போன்றவை ஏற்படும்.

அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபட உணவு முறையில் சிறியளவில் மாற்றம் செய்து கொண்டாலே போதும்.

* சத்துள்ள பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். அப்போது உடலிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் முழு அளவில் கிடைக்கும்.

* பப்பாளி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் “புரோமிலெய்ன்’ ஆகிய என்சைம்கள் அதிகளவில் உள்ளன. எனவே, இப்பழங்களை அதிகளவில் சாப்பிடலாம்.

* சீரகம், புதினா, சோம்பு ஆகியவற்றுக்கு, ஜீரண சக்தியை அதிகரித்தல், வாயு தொல்லை மற்றும் வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் தன்மை உண்டு. எனவே, இவற்றை தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது.

* முட்டைகோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் எனும் அமினோ அமிலம் முட்டைகோசில் அதிகளவில் காணப்படுகிறது. முட்டைகோசு சாறை தனியே சாப்பிட முடியாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிடலாம்.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இஞ்சி டீ குடிக்கலாம்.

இவை செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது.

உணவு உட்கொள்ளும் சரியான முறை:

* சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை வயிற்றில் உணவு செரித்தலுக்காக சுரக்கப்படும் அமிலங்களை நீர்த்துப் போக வைத்து விடும்.

* செரிமான அமைப்பிற்கு அதிக பளு ஏற்படுவதை தவிர்க்க, நாள் முழுவதும் முறையாகவும், சிறிது சிறிதாகவும் உணவை சாப்பிடலாம்.

* வேகமாக சாப்பிடும் பழக்கம் இருந்தால் அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். உணவை ரசித்து மெதுவாக சாப்பிட வேண்டும். வாயில் சிறியளவு உணவை வைத்து அவற்றை நன்றாக மென்ற பின்னரே விழுங்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

* அசிடிட்டி உடையவர்கள், அமிலத்தன்மை நிறைந்தவைகளான சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* பொரித்த, பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இதை தவிர்க்க முடியவில்லை என்றால் வாரத்திற்கு 1-2 முறை சாப்பிடலாம்.

* அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் வயிற்றில் நீண்ட நேரம் தங்குவதோடு, செரிப்பதற்கும் கடினமாக இருக்கிறது. மேலும் அவை செரிமான அமைப்பிற்கும் அதிக பளுவை உண்டாக்குகிறது. எனவே, அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* காபின் நிறைந்த சாக்லேட் போன்ற உணவுப் பொருட்கள் இயற்கையிலேயே அமிலத் தன்மை நிறைந்தவை என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதாலும் அசிடிட்டி உருவாகிறது. மனஅழுத்தத்தின் போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது. இதனால் செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால், செரிமான நிகழ்வு குறைந்து, வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே, மனஅழுத்தத்தை எதிர்த்து சமாளிக்க, உடற்பயிற்சி, தளர்வாக இருத்தல் ஆகியவற்றை கடைபிடிக்கலாம்.