Advertisements

ப்ளூவா… ப்ப்பூ…!* உதறித் தள்ள வேண்டுமா?

* கொஞ்சம் உடம்பை அசையுங்க

* “சூப்பர் புட் – 5’ஐ மறக்காதீங்க

என்னென்னவோ புதுப்புது பெயர்களில் “ப்ளூ’ காய்ச்சல் வருது; இப்போது “ஸ்வைன் ப்ளூ’ அறிமுகம். பன்றிக் காய்ச்சல் பாதிப்பு, இந்தியாவில் சதம் போட்டு விட்டது. இதுபோன்ற காய்ச்சல்களை தொற்றாமல் தடுக்க வெளியில் “வாய்மூடி’ அணிந்தால் வராதா? தடுப்பு மாத்திரை, மருந்து சாப்பிடலாமா? இரண்டு வினாடிக்கு ஒரு முறை கைகளை சுத்தம் செய்யலாமா? அப்படியானால் தொற்றாதா…?

அது தான் இல்லை. நம் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டால், “ப்ளூ’ மட்டுமில்லை, தலைவலி, ஹாச்…கள் மட்டுமல்ல, “ப்ளூ’ காய்ச்சலும் வரத்தான் செய்யும். எதிர்ப்பு சக்தியை மட்டும் வளர்த்துக்கொண்டால் போதும், எந்த “வியாதி’யும் நம்மை அண்டாது.

இரண்டே இரண்டு

சிலருக்கு ஜலதோஷம், தலைவலி, காய்ச்சல் போன்றவை எப்போதாவது தான் வரும். அதற்கு காரணம், அவர்கள் எல்லா வகையிலும் முழு ஆரோக்கிய முறைகளை கடைபிடிக்கின்றனர் என்பது தான் பொருள். லேசாய் தலை வலிக்கிறது என்றால் மாத்திரை போடும் ரகம் அல்ல இவர்கள்.

இப்படி தலைவலி முதல் ப்ளூ வரை மட்டுமல்ல, எந்த பெரிய நோயும் அண்டாமல் இருக்க இரண்டு தான் முக்கியம். ஒன்று, இளம் வயதில் இருந்தே போதுமான உடற்பயிற்சி; அடுத்தது, சத்தான உணவுகள். டீன்-ஏஜ் வயதில் உடலை பாதுகாத்து விட்டால், நடுத்தர வயதில் இளமையாக இருக்கலாம். நடுத்தர வயதில் அப்படி இருந்தால், வயதான காலத்தில் சர்க்கரை வியாதி, இதய நோய் என்று பயப்பட வேண்டாம்.

வைரசை விரட்டும்

உடம்பையே அசைக்காமல் இருப்பவர்களுக்கு தான் எல்லாம் படுத்தும். காலையில் படுக்கையில் எழுவதற்கே எரிச்சல் படுவர்; உடலை அசைக்காமலேயே, குளித்து விட்டு, சாப்பிட்டு விட்டு, ஆபீசிலும் நாற்காலியை விட்டு எழவே மாட்டார்கள். வீடு திரும்பினால், இருக்கையே கதி; “டிவி’யே பொழுதுபோக்கு. உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதுடன், சத்தானவை சாப்பிடாமல் இருப்பதால், உடலில் வைரஸ், பாக்டீரியா எளிதில் புகுந்து விடும். அப்புறம் என்ன, “ப்ளூ’ தான்.

உடற்பயிற்சி என்றால் ஏதோ “ஜிம்’முக்கு போய் செய்ய வேண்டும் என்று பொருளல்ல. உடலுக்கு கூடுதல் இயக்கம் தேவை. வாக்கிங், சைக்கிள் ஓட்டுவது, யோகா, மிதமான உடற்பயிற்சி போன்றவை இளம் வயதில் மிகவும் முக்கியம். இவை தான் வைரஸ், பாக்டீரியாவை விரட்டும்.

காற்று வாக்கில்

காற்று வழியாகத்தான் பெரும்பாலான வைரஸ், பாக்டீரியாக்கள் பரவுகின்றன. உடற்பயிற்சி செய்தால், “மேக்ரோபகஸ்’ என்ற செல் உற்பத்தி அதிகரிக்கிறது. இந்த செல்கள், சுவாசக்குழாயில் பாக்டீரியா, வைரஸ் புகவிடாமல் செய்யும். அதுபோல, ரத்த ஓட்டத்தை உடற்பயிற்சி சீராக்கும். அப்போது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், தொற்றுக்கிருமிகளை அழிக்கும் வெள்ளை அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். இது மட்டுமல்ல, மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய சுரப்பிகளை வேலை செய்ய விடாமல் செய்தும் விடுகிறது உடற்பயிற்சி.

“சூப்பர் புட் – 5′

உடற்பயிற்சியுடன் சத்தான உணவுகளை சாப்பிட பழகி விட்டால், அப்புறம் ப்ளூவாவது, வைரசாவது… எதுவும் எட்டிப்பார்க்க கூட பயப்படும். இதற்கு உடற்பயிற்சியுடன் தேவை, “சூப்பர் புட் -5′ உணவு முறை.

* தயிர்: சிலர் தயிர், மோர் சாப்பிடவே மாட்டார்கள்; சாப்பாட்டில் சாம்பார், ரசம் வரை வந்ததும் எழுந்து விடுவர். தயிரில் பல சத்துக்கள் உள்ளன. உடலில் நல்ல பாக்டீரியாவை தக்க வைத்துக் கொள்ள இது உதவும். ஒரு நாளைக்கு ஒரு கப் குடித்தால் போதும்.

* இறைச்சி: “சிங்க்’ எனப்படும் துத்தநாக கனிம சத்து , நம் உடலுக்கு மிக முக்கியம். உடலில் புகும் பாக்டீரியா, வைரசை விரட்டி விடும். சிக்கன் மூன்று நாள், மட்டன் இரண்டு நாள் என்று ஆரோக்கியமானவர்கள் சாப்பிடலாம். சைவப்பிரியர்களுக்கு பச்சைக் காய்கறிகள், கீரைகளில் இந்த சத்து உள்ளது. இந்த இரும்பு சத்துள்ள உணவுகளை சாப்பிடலாம். பால், தயிர் போன்ற பால் பொருட்களிலும் கனிம சத்துக்கள் உள்ளன.

* வைட்டமின் ஏ, சி: சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிற பழங்களை சாப்பிட்டாலே போதும். வைட்டமின் “ஏ’ கிடைக்கும். அது இல்லாமல் தான் சுவாசக்குழாய், ஜீரணப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் பாதிப்பு வருகிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க “சி’ வைட்டமின் முக்கியம். எலுமிச்சை, பப்பாளி, ஆரஞ்சு ஆகியவற்றில் இந்த சத்து உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு பிரஷ் “லைம் ஜூஸ்’ சாப்பிட்டாலே போதும்.

* மீன்: மீன் , ஷெல் பிஷ் வகை உணவு சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு உடலில் முழு எதிர்ப்பு சக்தி இருக்கும். சைவப்பிரியர்கள், மீன் எண்ணெய், ஒமேகா பேட்ஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம். வேண்டாத கொழுப்புகளை உடலில் இருந்து நீக்கி விடும்.

* பூண்டு: அல்லிசின், அஜியோன், தியோசல்பினேட்ஸ் ஆகிய தொற்றுக்கிருமிகளை எதிர்க்கும் சத்துக்கள் உள்ளன இதில். உணவில், ரசத்தில் தினமும் பூண்டு சேர்த்தால் மிக நல்லது. இந்த இரண்டு முறையையும் கடைபிடித்து பாருங்க; கண்டிப்பாக வைரஸ் ஓட்டம் பிடிக்கும்.

Advertisements
%d bloggers like this: