Daily Archives: ஜூலை 27th, 2009

மஞ்சள் பூசும் பழக்கம் உண்டா?

நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கொள்வதாய் இல்லை. மஞ்சள் பூசிய முகத்திற்கு முன்பெல்லாம் அதிக மவுசு உண்டு. இப்போது கிராமப் பெண்கள் தான் மஞ்சள் பூசுகின்றனர்; அதுவும் ஒரு சிலரே.

இந்திய கலாசாரத்தில் மஞ்சளின் முக்கியத்துவம்: இந்து கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக்கும் பழக்கம் உலக நாடுகளில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே தான், போட்டிகள், தேர்வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது.

ஆனால், “ஆண்கள் மஞ்சள் பயன்படுத்துவதில்லை. ஏன்? ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவசியமில்லை’ என்று, ஜகதீச அய்யர் என்பவர், இந்தியர்களின் கலாசாரம் குறித்த தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில், பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது.

பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி, பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்’ பூசப்படுகிறது.

சமையலில் மஞ்சளின் பயன்பாடு

இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இது இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதேபோல், வடஇந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது.

அழகு சாதனமாக பயன்படும் மஞ்சள்

வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை.மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர். இது முகத் தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்’சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சிகள், கரையான்கள் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளின் மருத்துவ குணம்:

* வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.

* உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.

* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.

* உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.

* மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.

* மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.

டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க ஆசையா?

காலையில் விழித்தெழும்போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என் னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், “டென்ஷன்’ தானாகவே தொற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க…

ஏற்கனவே, “ஹலோ தோழியே’ பகுதியில் எழுதியுள்ளது போல், முதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.

அடுத்த நாள் எழும்போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல் துலக்குவது, பால்/ காபி/ டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடித்த பின், முதல் நாள் இரவு எழுதிய பட்டியலைப் பார்த்துக் கொண்டால், எந்தெந்த வேலைகளை முதலில் செய்வது என்ற தெளிவு பிறக்கும்.

சுறுசுறுப்பாய் வேலைகளைச் செய்யத் துவங்கலாம். இது அடிப்படை. இது தவிர, தினமும் உங்கள் மனதை, “ரிலாக்ஸ்’ செய்து கொள்ள சில யோசனைகள்…

* இனிமையான சங்கீதம் கேட்க அடிப்படைத் தேவையாக அமைவது, குறைந்தபட்சம் ஒரு கருவி. அது கேசட் பிளேயராகவோ, எம்.பி.,3யாகவோ, கம்ப்யூட்டராகவோ இருக்கலாம்; இனிமையான சங்கீதத்தை இதமாகக் கேட்கும் வகையில், அறைகளில் ஸ்பீக்கர் வசதி செய்து கொண்டால், மிக நல்லது.

நீங்கள் பயன்படுத்தும் அந்தக் கருவி எந்தப் பிரச்னையும் இல்லாமல், சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியாக இயங்கவில்லை என்றால், அதைச் சரி செய்வதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது.

* செடி வளர்க்கலாம். தினமும் ஒரே ஒரு பூவாவது தரக் கூடிய வகையில், பூச்செடி வளர்க்கலாம். எந்தச் செடியையும், அதன் அருகில் அமர்ந்து பேசி, கொஞ்சி, தண்ணீர் விட்டு வளர்த்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, பூக்களைக் கொடுக்கும்.

அவற்றுக்கும் மனது உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். நாமே வளர்த்து, ஒரே ஒரு பூ பூத்தால் கூட, அதில் கிடைக்கும் மன நிறைவு, நமக்கு நிம்மதியைக் கொடுக்கும்.

* கவிதை எழுதப் பிடிக்குமா? அடி மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கவிதையாக அது அமைய வேண்டும். கவிதை எழுதப் பழகினால், மன வளம் பெருகும்; எழுத்து வளம் பெருகும். உங்களிடம் உள்ள வலிமையான கருத்துக்கள், பலவீனமான கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பாகுபடுத்திப் பிரித்துப் பார்க்கும் அறிவு வளரும்.

* பாட்டு பாடலாம், ஓவியம் வரையலாம், துணி தைக்கலாம், நகைகள் செய்யலாம். இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும்போது, உங்களிடையே உள்ள கலைத் தன்மை வெளிப்படும். இதுவே உங்களின் தனித் தன்மையை நிலைநாட்டும்.

* ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, தேவையற்ற விஷயங்களை மனதில் அசை போட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத் தும்போது வேலையில் கவனம் குறையும்.

அதுவே உங்களுக்கு ஆபத்தாய் அமைந்து விடும். முழுமையான பணி செய்த திருப்தி ஏற்படாது; மன நிம்மதி கெடும். மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றுவது மிகவும் கடினம் தான். வாழ்க்கையில் சந்தோஷமும் நிலைப்பதில்லை; துன்பங்களும் நிலைப்பதில்லை. இன்றைய தினத்தில் உள்ள கடமைகளையும், பணிகளையும் சீராகச் செய்யும்போது கிடைக்கும் நிம்மதியுடன், திருப்தியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!

மூலிகை கட்டுரை: கழிச்சலை போக்கும் காட்டாத்தி


இரைப்பையானது உணவை பிசைந்து, முன் சிறுகுடல் வழியாக சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் என சக்கையாக வெளித்தள்ளுகிறுது. சீராக இயங்கிக் கொண்டிருக்கும் குடலில் ஏதேனும் தொல்லை ஏற்பட் டால் குடல் வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்துவிடும். அப்பொழுது குடலில் உள்ள உணவுகள் செரிக்கபட முடியாமலும், நீர்ச்சத்து உறிஞ்சப்பட முடியாமலும், ஏற்கனவே குடலில் தங்கியுள்ள பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளுடன் சேர்ந்து குடலில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தி கழிச்சலாக வெளியேற ஆரம்பிக்கும். இதுவே கழிச்சல் என்றும், வயிற்றுப்போக்கு என் றும் பேதி என்றும் அழைக்கப்படுகிறது. கழிச்சலின் போது குடலில் சீழ் தங்கி வெளியேறுவது சீதக்கழிச்சல், ரத்தம் வடிவது குருதிக் கழிச்சல் மற்றும் நுண்கிருமிகளால் குடல் அழுகலுடன் மலம் வெளியேறுவது நாற்றக் கழிச்சலாகவும் காணப்படும்.

கழிச்சலின் போது நீர்ச்சத்தும், வைட்டமின்களும் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்களும், உப்புகளும் அநாவசியமாக வெளியேறிவிடுவதால் ரத்த அழுத்தக் குறைவு, கண் பஞ்சடைதல், உடல் சோர்வு, உடல் எடை குறைதல், பலஹீணம், தலைச்சுற்றல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகின்றன. நீர்ச்சத்து அதிகமாக வெளியேறுவதால் செல் மற்றும் ரத்தத்தின் சமச்சீர் நிலை பாதிக்கப் படுவதால் சிலர் கோமா எனப் படும் ஆழ் மயக்க நிலைக்கோ, மரணத்திற்கோ ஆட்படுகின்றனர். பெரும்பாலும் சிறு குழந்தைகள், முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் பெண்களே கழிச்சலின் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

பலவிதமான காரணங்களாலும் ஏற்படும் கழிச்சல் நீக்கி, குடற்புண்களை ஆற்றி, நீர்ச்சத்தை தங்க வைக்கும் அற்புத மூலிகை காட்டாத்தி, உட்போர்டியா பிரக்டிகோசா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லித்ரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறு மரங்கள் வட மாநிலங்களில் ஏராளமாக விளைகின்றன. வேலக்காய் என்ற பெயராலும் அழைக்கப் படும். இந்த சிறு மரங்களின் பூக்களே காட்டாத்திப் பூ என்றும் நாட்டு மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

காட்டாத்திப் பூக்களை உலர்த்தில் பொடித்து 3 முதல் 6 கிராமளவு தினமும் ஒன்று அல்லது இரண்டு வேளை தேன், தேநீர் கசாயம் அல்லது மோருடன் கலந்து சாப்பிட கழிச்சல் நீங்கும். காட்டாத்திப் பூக்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து 500மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து, 100மிலியாக சுண்டியப் பின்பு வடிகட்டி, தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்பு குடித்து வர குடல் புண்கள் ஆறும், கடையில் விற்கப்படும் அரிஷ்டம், ஆசவம் போன்றவை தயார் செய்வதற்கு காட்டாத்திப் பூக்களை கசாயம் செய்து சர்க்கரை கரைசலில் கலந்து, புளிக்க வைத்து பயன் படுத்துகின்றனர். இவை உட் கொள்ளும் மருந்தின் தன்மையை எந்தவித உபாதையும் இல்லாமல் குடல் ஏற்றுக் கொள்ள உதவுகின்றன.

அப்பளமாகும் எலும்புகள்!

அறுபதில் வர வேண்டியது முப்பதிலேயே வருது

இருபதில் துள்ளிக்குதித்து ஓடியவர் தான் தினேஷ்; ஆனால், முப்பதில் திடீரென மூட்டு வலி, முழங் கால் வலி, முதுகு வலி என்று எப்போது பார்த்தாலும் புலம்பித் தவிப்பார். டாக்டரிடம் போனால் தான், அவருக்கு எல்லாமே புரிகிறது. இருபது வயதில் செய்த சின்னச்சின்ன தவறுகள் தான், இப்போது வதைக்கிறது என்று. அப்படி என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம்? அவர் ஒன்றும், அதே வயதுள்ள மற்றவர்கள் செய்யாத தவறை செய்யவில்லை.

சத்தாக சாப்பிடவில்லை; பிட்சாவும், பர்கரும் சாப் பிட்டார்; எப்போதும் “ஏ.சி’., அறையில் தான் முடக்கம்; கம்ப்யூட்டரே கதி. வேலையும் கம்ப்யூட்டர் தான்; இ – மெயில் முதல் சினிமா படம் பார்ப்பது வரைக்கும் கம்ப்யூட்டர் தான். இது தான் அவர் செய்த தவறு. இதன் விளைவாக, அவருடைய வயதுக்கு தேவையான கால்சியம் சத்தும் கிடைக்கவில்லை; சூரிய ஒளி மூலமோ, சாப்பிடுவதன் மூலமோ கிடைக்க வேண்டிய வைட்டமின் டி சத்தும் கிடைக்கவில்லை.

இதனால் தான், அவருக்கு எலும்புகள் வலுவிழந்து உள்ளன. அதனால் மூட்டு பிரச்னை வந்துவிட்டது. அதாவது, அறுபது வயதில் வர வேண்டிய இது போன்ற மூட்டுத்தொல்லைகள், முப்பதிலேயே வந்து விட்டது.

மூட்டு கோளாறு ஏராளம்: ஆர்த்ரைட் டீஸ் என்று சொல்லப்படும் மூட்டு கோளாறில் பல வகை உள்ளன. இதுபோன்ற மூட்டு, எலும்பு பிரச்னைகள் வெறும் எலும்பு பிரச்னைகளோடு நின்று விடுவதில்லை. அறுபது வயதாகி விட்டால், மூட்டு பிரச்னை தான் வயதானவர்களை முடக்கிப்போடும். அப்படிப்பட்ட பிரச்னை, முப்பதிலேயே வந்து விட்டால், என்னவாகும் பாருங்கள். இந்த வயதினரில், ஆர்த்ரைட்டீஸ் தவிர, ஆஸ்டோமலாசியா, ஆஸ்டோபோரோசிஸ் ஆகிய மூன்று மூட்டு பிரச்னைகள் தான் அதிகம் வருகின்றன. டயபடீஸ் என்று சொல்லப்படும் சர்க்கரை வியாதி, முப்பது வயதில் பலரையும் தாக்கும் நோயாக முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்து “ஆஸ்டோபோரோசிஸ்’ தான் இவர்களை அதிகம் பாதிக்கிறது.

மூன்றரை கோடி பேர்: சமீபத்தில் எடுத்த பல சர்வேக்களில், 25 – 35 வயதுள்ளவர்களில் 3 சதவீதம் பேருக்கு இந்த பிரச்னை அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அளவை கட்டுப்படுத்தாவிட்டால், வரும் 2013க்குள் மூன்றரை கோடி பேருக்கு இந்த பாதிப்பு வரும் என்று இந்திய எலும்பு மற்றும் கனிம ஆராய்ச்சி சொசைட்டி எச்சரித்துள்ளது. ஆஸ்டோபோரோசிஸ் – எலும்புகள் அப்பளமாக நொறுங்கும் நிலையில் உள்ள நிலை. இதன் காரணமாக, தடுக்கி விழுந்தாலும், எலும்பு முறிவு ஏற்படும். இந்த பாதிப்புக்கு மூன்று முக்கிய காரணங்கள்: 1. சத்தான உணவு சாப்பிடாமை. 2. பரம்பரை வழி பாதிப்பு. 3. வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம்.

கால்சியம், வைட்டமின் டி: எலும்புகள் வலுவாக இருக்க காரணம், வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் தான். வைட்டமின் டி கிடைக்க வேண்டுமானால், நம் உடலில் சூரிய ஒளி பட வேண்டும். கால்சியம் சத்து கிடைக்க பால், பால் பொருட்கள் சாப்பிட வேண்டும்.

வளர்இளம் பருவத்தினருக்கு இரண்டுமே எதிரி. சூரிய ஒளி பட விட மாட்டார்கள். அதுபோல, பால் என்றாலே அவர்களுக்கு “ச்சீ’ என்ற நினைப்பு தான். இதில் கால்சியம் சேமிப்பது, எலும்புகள், பற்களில் தான். இங்கிருந்து தான் உடலின் மொத்த வளர்ச்சிக்கான கால்சியம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த இரண்டிலும் கால்சியம் குறைந்து போகும் போது, அறுபது வயதாகி விடுகிறது. அதனால் தான் மூட்டு வலி ஆரம்பமாகிறது. அப்போது, நடக்க முடியாது; உட்கார முடியாது. வயதான காலத்தில் இந்த கஷ்டங்களை பட்டுத்தான் ஆக வேண்டும்.

மூட்டுக்கு மட்டுமல்ல: கால்சியம் சத்து என்பது, ஏதோ மூட்டு, எலும்புகளின் வளர்ச்சிக்கு மட்டும் என்று நீங்கள் நினைத் தால் அது தவறு. ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, நரம்பு மண்டலம் இயங்குவது ஆகியவற்றுக்கு கால்சியம் முக்கியம்.

உடலில் போதுமான கால்சியம் கிடைக்காதபோது, எலும்புகளில் சேமித்து வைத்திருக்கும் கால்சியம் தான் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதனால், கால்சியம் பற்றாக்குறை அதிகரிக்கிறது. இப்படி பற்றாக்குறை ஏற்படும் போது தான், ஆஸ்டோபோரோசிஸ் எட்டிப்பார்க்கிறது. அதாவது, அப்பளமாகும் அளவுக்கு எலும்புகள் பலவீனம் அடையும் நிலை. வயதானவர்கள் , தடுக்கி விழுந்தாலும், எலும்பு முறிவு ஏற்பட காரணம் இந்த நிலை தான். இந்த நிலை முப்பது வயதில் வந்தால் எப்படியிருக்கும்?

எவ்வளவு தான் தேவை? இருபதில், என்னவேண்டுமானாலும் சாப்பிடலாம்; ஆனால், சத்தான உணவுகளை புறக்கணிக்கக்கூடாது. குறிப்பாக பால், தயிர் போன்ற பொருட்களை. பிரஷ்ஷான மீன், சோயா ஆகியவற்றிலும் கால்சியம் அதிகம் கிடைக்கும். பாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடுவதுடன் இவற்றையும் சேர்த்துக் கொண்டால், இந்த பிரச்னையே வராது. கால்சியம் ஒரு நாளைக்கு, குழந்தைக்கு 300 மில்லி கிராம், சிறியவர்களுக்கு 800 மில்லி கிராம், பெரியவர்களுக்கு 1,000 மில்லி கிராம், கர்ப்பிணிகளுக்கு 1,300 மில்லி கிராம் தேவை.

சூரிய ஒளி படட்டும்: காலையில் எழுந்திருக்கும் வரை, “ஏ.சி’., அறையில் தூக்கம். அடுத்து காரில் பயணம்; ஆபீசில் “ஏ.சி’., அறையில் முடக்கம். இரவில் வீடு திரும்பிய பின், “ஏ.சி’., அறை வாசம். இது தான் பலருக்கு கெடுதலாக உள்ளது. டாக்டரை போய்ப்பார்த்தால், முதலில் வெயிலில் காலாற நடங்கள்; வெயில் உங்கள் மீது படட்டும் என்பார். சூரியனும் ஒரு நல்ல டாக்டர் தெரியுமா? நம்மை அறியாமல் நமக்கு வைட்டமின் டி யை தருகிறார். இத்தோடு, கொஞ்சம் உடற்பயிற்சி இருந்தால் போதும்; மூட்டு வலியே வராது. உடற்பயிற்சி என்றால், சைக்கிள் ஓட்டுவது, வாக்கிங், ஸ்கிப்பிங் போதும்.

எத்தனை வகை: கால்சியம், வைட்டமின் டி சத்து இல்லாததால், எலும்பு பாதிப்புகள் பல உள்ளன; அவை: ஆஸ்டோமைலிடிஸ்: எலும்பு மஜ்ஜையில் கிருமிகள் தொற்றுவதால் ஏற்படும் பலவீனம்: ஆஸ்டலிடிஸ் பைபரோசா சிஸ்டிகா: வைட்டமின் டி சத்தில்லாததால், எலும்பு திசுக்கள் பலவீனம் அடைவது; ஆஸ்டோமலாசியா: எலும்புகள் மிகவும் இளகி விடுவது.

ஆஸ்டோபினியா: எலும்பு அடர்த்தி வெகுவாக சரியும் நிலை.

ஆஸ்டோபோரோசிஸ்: கால்சியம் குறைபாட்டால், எலும்புகள் வளர்வது குறையும் நிலை.

ஆஸ்டோஆர்த்ரைட்டீஸ்: எலும்புகள் தேய்மானம். குருத்தெலும்பு பாதிப்பு.

பெண்களுக்கு தான் : கால்சியம், வைட்டமின் டி சத்து போதுமான அளவு இல்லாவிட்டால்,  ஊ …ஆ…என்று இடுப்பு பிடிப்பது மட்டுமில்லாமல், எலும்புகள் அப்பளமாக நொறுங்கும் அளவுக்கு தொல்லைகள் அதிகரிக்கும்.

கம்ப்யூட்டரே கதி என்று இருப்போருக்கு, சாதாரண கழுத்து வலியில் ஆரம்பித்து, முழங்கை, முழங்கால் என்று எல்லாவற்றிலும் எலும்பு பாதிப்பு இருக்கும்.

ஆண்களை விட, பெண்களுக்கு தான் கால்சியம், வைட்டமின் டி சத்து வெகுவேகமாக கரையும் என்பதால், அவர்களுக்கு தான் அதிக பாதிப்பு இருக்கும். இதனால், பெண்கள் தான் இந்த விஷயத்தில் அதிக கவனமாக இருக்கவேண்டும்.

* பிறக்கும் போது 300 எலும்புகள் உருவாகும்; வளர்ந்த பின் 206 ஆக குறைந்துவிடும்.

* உடலில் மூன்றில் ஒரு பங்கு எலும்புகள் தான். ரத்தம், உறுப்புகளை அடுத்து முக்கியமானது.

* கடைசி வரை வலுவாக இருந்தால் தான், வாழ்நாள் நிம்மதியாக நீடிக்கும்.

அப்படியானால், எலும்புகளை காப்பாற்ற வேண்டாமா? இளம்வயதினரே, இப்போதே உஷார்.

லட்சுமி கடாட்சம்!

ஜூலை 31 – வரலட்சுமி விரதம்!

முன்பின் அறியாத வரை கைப்பிடித்து, அவரையே நம்பி வாழ்ந்து, குழந்தைகளைப் பேணி வளர்த்துக் காக்கும் தெய்வீ கக் குலம், பெண் குலம். அவர்கள் நீண்டகாலம் சுமங்கலிகளாக வாழ விரும்பி, பல விரதங்களை அனுஷ்டிக்கின்றனர்; அதில் ஒன்று, வரலட்சுமி விரதம். செல்வத்திற்கு மட்டுமல்ல, மங்களத்திற்கும் லட்சுமிபிராட்டியே அதிபதி. கழுத்து நிறைய நகை அணிந்திருந்தாலும், நெற்றியில் ஒரு பொட்டு வைத்தால் தான் அந்த அழகு முழுமையடையும்; அதிலும், நெற்றி வகிட்டில் குங் குமம் இட்டால், லட்சுமிகரமாக முகம் திகழும். இந்த வகிட்டில் லட்சுமியே வாசம் செய்வதாக ஐதீகம்.

நெற்றி வகிட்டிற்கு, “சீமந்தம்’ என்பது இன் னொரு பெயர்; அதனால் தான் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, “சீமந்தம்’ என்ற பெயர் ஏற்பட்டது. லட்சுமி என்றாலே, பணம் தருபவள் என்றே கருதி, அதற்காக பல பூஜைகளை செய் கிறோம்; ஆனால், பெண்ணினம் மட்டுமே அவளிடம் பணத் துக்குப் பதிலாக பலத்தைக் கேட்கிறது; அதுவே, மாங்கல்ய பலம். எந்த ஒரு குடும்பத்தில் பெண்கள் சரிவர பாதுகாக்கப்படுகின்றனரோ, மனம் மகிழும்படி நடத்தப்படுகின்றனரோ, அந்த வீட்டில் தலைமுறை, தலைமுறையாக சுமங்கலிகளாக பெண்கள் வாழ்வர் என்பது நம்பிக்கை. லட்சுமிதேவியின் அருகில் இருக்கும் யானைகள் இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன.

யானைகள் குடும்பம், குடும்பமாக வாழும் தன்மையுடையவை. அதன் தலைவராக கொம்பன் என்ற ஆண் யானை இருக்கும். நமது குடும்பங்களிலும் தந்தையை தலைவராக ஏற்றுக் கொள்கிறோம். யானைகள் வெளியே கிளம்பும்போது, கொம்பன் முன் செல்ல, மற்றவை பின் தொடரும். இன்றும், பல குடும்பங்களில் கணவர் முன்செல்ல, மனைவி, குழந்தைகள் பின்தொடர்வதைக் காண்கிறோம். பெண்கள் முன்னே சென்றால், அவர்களை அழைத்து, பெரியவர்கள் அறிவுரை சொல்வதையும் காண முடிகிறது.

இவ்வாறு, விட்டுக்கொடுத்துச் செல்லும் வாழ்க்கை கணவனுக்கும், மனைவிக்கும் நிம்மதியைத் தருகிறது. ஆணுரிமை, பெண்ணுரிமை என்ற பெயரில், “நீயா, நானா?’ என்ற போட்டி ஏற்படும்போது தான் பிரச்னை ஏற்படுகிறது. இந்த நிலை இல்லாமல், இனிமையான வாழ்வுக்கு ஆணும், பெண்ணும் அனுசரித்து செல்வது என்ற நிலையை இந்த அணிவகுப்பு நமக்கு உணர்த்துகிறது.

குடும்பத்திலுள்ள இளம் யானைகள் மோகவயப்பட்டு, பெண் யானைகளைத் துன்புறுத்தும். அப் போது, கொம்பன் யானை, அதைக் கட்டுப்படுத்தும். குடும்பத்திலும் குழந்தைகள் கெட்ட பழக்கங்களுக்கு ஆளா கும் போது, தந்தை கண்டித்து திருத்தி,னால், அந்தப் பிள்ளைகள் சீர் பெறுவர். இப்படி, நமது குடும்பம், யானையின் குடும்பம்போல நல்லதொரு குடும்பமாக அமைந்தால், யானைகளுக்கு நடுவில் இருக்கும் லட்சுமியைப் போல, நம் வீட்டிலும் லட்சுமி கடாட்சம் மையம் கொள்ளும். எந்த வீட்டில் ஒற்றுமை இருக்கிறதோ, அங்கே, மனநிம்மதி பெருகி, வாழ்நாள் நீடிக்கிறது. கணவர், நீண்டகாலம் வாழும் போது, மனைவியும் சுமங்கலியாக அவருடன் துணை நிற்கிறாள். எனவே, இந்த வரலட்சுமி விரத நாளில், குடும்ப ஒற்றுமைக்காக பெண்கள் பிரார்த்திக்க வேண்டும்.

இப்போதே செய்யுங்கள்! (ஆன்மிகம்)

ஊரில், ஒரு பெரிய மனிதன், பணக்காரன் என்றிருந்தால், அவன், நாலு பேருக்கு நன்மை செய்பவனாக இருக்க வேண்டும்; பிறர் சுக, துக்கங்களில் பங்கு கொண்டு, அவர்களுக்கு அனுகூலமாக இருக்க வேண்டும். அப்படியிருப்பவன்தான் பெரிய மனிதன்; பணக்காரன்; இல்லையேல், அகம்பாவம் பிடித்த பணமூட்டை என்ற பெயர் வரும். அரசன் என்பவன், குடிமக்களின் நன்மைக்கு பாடுபடுபவன்; மக்களையும், நாட்டையும் காப்பாற் றும் பொறுப்புடையவன். இவன் தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், மக்களும் அமைதியான வாழ்க்கையுடன் இவனைப் போற்றிப் புகழ்வர்.

இதுபோல தான் பகவானும்! தன்னால் படைக்கப்பட்ட ஜீவன் கள் சுகமாக வாழ வேண்டும்; புண்ணியசாலிகளாக விளங்க வேண்டும் என்று எண்ணுகிறவன்; அப்படியே, அவர்களை ரட்சித்தும் வருகிறான். ஒரு உழவன், எப்படி பயிர்களை காப்பாற்றுகிறானோ, அப்படியே தான், பகவானும் உயிர்களை காப்பாற்றுகிறான்; பகவானின் அருகிலுள்ள தேவியும் தக்க சமயத்தில் பயிர்களாகிய ஜீவன்களுக்கு, தர்மம், பக்தி போன்றவற்றை நீர் பாய்ச்சுவது போல் பாய்ச்சுகிறாள். ஜீவன் என்கிற பயிர் செழித்து வளர்கிறது. பயிர் முற்றிய பிறகு சாய்கிறது. ஜீவனாகிய பயிர், பக்தி என்ற நெல்மணியைத் தாங்கி பகவான் பக்கம் சாய்ந்து, சரணாகதி செய்கிறது. நிலத்தில் நஞ்சை, புஞ்சை என்றிருப்பது போல் மனிதர்களிட மும் உண்டு. நஞ்சையைப் போன்ற நற்செயல் செய்பவரும், புஞ்சையைப் போல் புண் செயல் புரிபவரும் உள்ளனர்.

பக்குவமான காலத்தில் உதிரும் நெல்லை எப்படி உமியும், தவிடும் மூடியிருக்குமோ, அதேபோல இந்த ஜீவனை ஸ்தூல, சூட்சம சரீரங்களாகிய உமியும், தவிடும் மூடியுள்ளன. மனிதன், மரணமடைந்ததும், உமியாகிற ஸ்தூல சரீரம் விலகி விடுகிறது. அதன்பின் ஜீவன், அர்ச்சா மார்க்கத்தில் சென்று, விரஜா நதியில் நீராடியதும், சூட்சும சரீரமாகிய தவிடும் விலகி விடுகிறது. பிறகு, திவ்ய அப்சரஸ்களால் ஜீவன் அலங்கரிக்கப்பட்டு, பகவானிடம் கொண்டு போய் சேர்க்கப்படுகிறது. பக்குவமான அரிசியாகிற பரம பக்தனான ஜீவனை, அன்புடன் ஏற்றுக் கொள்கிறான் பகவான். இப்படியாக, பகவானை உழவனாகவும், ஜீவன்களை பயிர் களாகவும் சொல்லி விளக்கியிருக்கின்றனர். அதாவது, பகவானை அடைந்து விடுவது சுலபமானதல்ல; ஏதோ பக்தி செய்தால், அவனை அடைந்து விடலா மென்று கதைகளில் படிக்கும்போது சுலபமாகத் தோன்றலாம்; அது அவ்வளவு சுலபமல்ல!

கடைசிக் காலம் என்பது எது, கடைசி மூச்சு என்பது எது, அந்த நேரத்தில் சுயநினைவு இருக்குமா, அருகிலுள்ளவர்கள் பகவானை நினைக்கவோ, அவன் நாமாவைச் சொல்லவோ விடுவரா? “எனக்கு என்ன வைத்திருக்கிறாய்… எங்கே வைத்திருக்கிறாய்?’ என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புவரே… அதனால் தான், “அப்போதைக்கப்போதே சொல்லி விட்டேன்…’ என்றார் ஒரு ஆழ்வார். “கடைசிக் காலத்தில் இதெல்லாம் நடக்காது; இப்போதே சொல்லி விடுகிறேன். அதைக் கடைசிக் காலத்தில் சொன்னதாக ஏற்றுக்கொள்…’ என்று பகவானை பிரார்த்திக்கிறார். உலக விசித்திரம் என்பது இதுதான். ஆயிரம் எண்ணங்கள், ஆயிரம் தீர்மானங்கள், எதை, எதை எப்போது செய்ய வேண்டும் என்று டைரியில் குறித்து வைத்துக் கொள்வர்; ஆனால், அங்கே பகவான் அவனது டைரியில் வேறு விதமாகக் குறித்து வைத்திருப்பானே… அவன் டைரிபடி தான் நடக்கும்; நாம் தான் ஜாக்கிரதையாக, போகும் வழிக்குப் புண்ணியம் தேடி வைக்க வேண்டும்.

வேர்ட் பிரிண்ட் டிப்ஸ்

வேர்ட் மட்டுமின்றி எந்த ஆபீஸ் தொகுப்பில் பிரிண்ட் எடுப்பதாக இருந்தாலும் சில வழிகளைப் பின்பற்றினால் அது பிரிண்ட் எடுக்கும் பக்கங்களை எடுப்பாகக் காட்டுவதுடன் பிரிண்டருக்கான கார்ட்ரிட்ஜின் வாழ்நாளும் அதிகமாகும். இந்த நோக்கத்துடன் நாம் எடுக்கக் கூடிய சில நடவடிக்கைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

ட்ராப்ட் பிரிண்டிங்: ஒரு சிலருக்கு வேர்ட் டாகுமெண்ட்டில் ஸ்பெல்லிங் செக், பார்மட்டிங்கினால் ஏற்பட்டுள்ள தோற்றம் ஆகியவற்றை நேரடியாகத் திரையில் பார்ப்பது நிறைவைத் தராது. அச்சிட்டு தாள்களில் வைத்துத்தான் திருத்தங்களை மேற்கொள்வார்கள். இப்படிப்பட்ட, இறுதியாக்கப்படாத, அச்சுப் பிரதிகளை ட்ராப்ட் (Draft) என்னும் வகையில் எடுக்கலாம். இந்த வகை பிரிண்ட்டினை தற்போது அனைத்து பிரிண்டர்களும் சப்போர்ட் செய்கின்றன. இதனை வேர்ட் தொகுப்பிலிருந்து செட் செய்திடலாம். Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Draft output”என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி பின் பிரிண்ட் எடுத்தால் டாகுமெண்ட் ட்ராப்ட் வகையில் குறைவான டோனருடன் அச்சாகும்.

ப்ராப்பர்ட்டீஸ் பிரிண்டிங்: டாகுமெண்ட் அச்செடுக்கையில் பிரிண்ட் ப்ராப்பர்ட்டீஸ் தகவல்களை டாகுமெண்ட்டிலேயே அச்செடுத்து வைத்துக் கொள்வது நமக்கு பைலிங் செய்வதிலும் பின்னர் அச்செடுப்பதிலும் உதவியாக இருக்கும். இதனை அனைத்து அச்செடுக்கும் படிகளிலும் இருக்குமாறு செட் செய்திடலாம்.

Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Include with document”என்ற பகுதியில் “Document properties” என்ற வரியின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடினால் நீங்கள் அச்செடுக்கையில் ஒவ்வொரு டாகுமெண்ட்டிலும் அந்த டாகுமெண்ட் குறித்த தகவல்கள் தனியே கிடைக்கும். அலுவலகங்களில் இதனைக் கோப்பாக வைக்கையில் இந்த குறிப்புகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

முழுத்திரையில் பிரிண்ட் பிரிவியூ: டாகுமெண்ட் அச்செடுக்கும் முன் அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை பிரிண்ட் பிரிவியூ காட்டும். இதன் தோற்றம் ஸ்கிரீனில் தெரியும் போது டாஸ்க் பார் மற்றும் டூல்பார்களும் காட்டப்படும். இதனால் அதன் தோற்றத்தின் முழு பரிமாணம் நமக்குக் கிடைக்காது. இவற்றைத் தற்காலிகமாக மறைத்து பிரிண்ட் பிரிவியூ காட்சியைக் காட்டும்படி செட் செய்திடலாம்.

இதற்கு டாகுமெண்ட்டைத் திறந்த பின்னர் File மெனுவில் Print Preview தேர்ந்தெடுக்கவும். அதன் பின் மேலாக உள்ள Close பட்டன் அருகே Full Screen பட்டன் கிடைக்கும்.இதில் கிளிக் செய்தால் திரை முழுவதும் டாகுமெண்ட் Print Preview கிடைக்கும். தோற்றத்தை மதிப்பிட்டு என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அவற்றை மேற்கொண்ட பின்னர் கீழாக Close Full Screen பிரிவில் கிளிக் செய்திடலாம். அல்லது Esc கீ அழுத்தலாம்.

பேக் கிரவுண்ட் பிரிண்டிங்: வேர்டில் பெரிய அளவிலான டாகுமெண்ட்கள் அல்லது சார்ட் மற்றும் டேபிள்கள் அடங்கிய டாகுமெண்ட்களை அச்செடுக்கையில் அதிகமாக மெமரி தேவைப்படும். அது கிடைக்காத போதும் பிரிண்டரில் தேவையான மெமரி இல்லாத போதும் அச்செடுப்பதில் பிரச்சினை ஏற்படும். இதற்குக் காரணம் வேர்ட் தொகுப்பு பின்புலத்தில் டாகுமெண்ட்களை அச்செடுப்பதே. அதாவது ஒரு டாகுமெண்ட்டை பிரிண்ட் செய்கையில் நீங்கள் அதே டாகுமெண்ட் அல்லது வேறு ஒரு டாகுமெண்ட்டை எடிட் செய்திடலாம். இந்த வசதியை ஆஹா என நாம் வரவேற்கலாம். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் நீங்கள் மல்ட்டி டாஸ்க்கிங் என்ற வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதால் மெமரியின் பெரும்பாலான பகுதி அவற்றால் எடுத்துக் கொள்ளப்படும். எனவே பெரிய டாகுமெண்ட் ஒன்றின் அச்சுப் பிரதி அவசரமாகத் தேவைப்பட்டால் அல்லது நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் மிகவும் குறைவாக மெமரி இருந்தால் இந்த பேக்கிரவுண்ட் பிரிண்டிங் என்பதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்படவும்.

Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Background printing” என்ற பகுதியில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

ரிவர்ஸ் பிரிண்டிங்: பல பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட்களை அச்செடுக்கையில் நமக்கு ஒரு எரிச்சலூட்டும் அனுபவம் கிடைத்திருக்கும். 40 பக்கங்கள் அடங்கிய ஒரு டாகுமெண்ட் பிரிண்ட் ஒன்றை எடுப்போம். அச்செடுத்த பக்கங்கள் அதன் ட்ரேயில் வந்து விழும்போது பார்க்க அழகாக இருக்கும். அதனைக் காற்றில் பறக்கவிடாமல் பிடித்துக் கொண்டிருப்போம். அச்சுப் பணி முடிந்து அவற்றை எடுத்த பின்னர் 40 ஆம் பக்கம் மேலாகவும் பக்கம் 1 அடியிலும் இருக்கும். இதனைச் சரியாக அடுக்க அந்த 40 தாள்களையும் ஒவ்வொன்றாக அடுக்க வேண்டியதிருக்கும். இந்த கம்ப்யூட்டர் பிரிண்டில் இது ஒரு தொல்லை என்று முணுமுணுத்தவாறே அடுக்க ஆரம்பிப்போம். ஏன் இந்த தொல்லை. வேர்ட் 2003 தொகுப்பு உங்களுக்கு இந்த தொல்லையை நீக்கும் வழியைக் கொண்டுள்ளதே.

கடைசி பக்கத்தை முதலில் பிரிண்ட் செய்து பின் அப்படியே இறுதியிலிருந்து முதல் பக்கம் வரை டாகுமெண்ட் ஒன்றை அச்செடுக்கும்படி செய்திடலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்படவும். Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Printing options”என்ற பகுதியில் உள்ள “Reverse print order” என்பதில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும்.

பிரிண்ட் பிரிவியூவில் பல பக்கங்கள்: டாகுமெண்ட் ஒன்றின் பிரிண்ட் பிரிவியூ பார்க்கையில் ஒரு பக்கம் காட்டப்படுகிறது. ஆனால் அண்மையில் வாங்கிய உங்கள் எல்சிடி மானிட்டரில் பல பக்கங்களைக் காணும் வாய்ப்பு உள்ளது. ஏன், சிலர் இப்போது தங்கள் இல்லங்களில் உள்ள எல்.சி.டி. டிவியில் லேப் டாப் கம்ப்யூட்டரை இணைத்து அதன் திரையைப் பார்த்தவாறே கம்ப்யூட்டரில் வேலையை மேற்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட வசதியைக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களின் பிரிண்ட் பிரிவியூ காணவே விரும்புவார்கள். வேர்ட் இதற்கு வழி தருகிறது.

முதலில் டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து அதன் பிரிண்ட் பிரிவியூ பெறவும். டாகுமெண்ட் எந்த அளவில் (53%) சுருக்கப்பட்டு காட்டப்படுகிறது என்று ஓர் இடத்தில் காட்டப்படும். அதற்கு இடது புறமாக நான்கு சிறிய பட்டன்கள் அடங்கிய ஒரு சதுரம் கிடைக்கும். இதில் கர்சரைக் கொண்டு சென்றால் மல்ட்டிபிள் பேஜஸ் என்ற செய்தி கிடைக்கும். இதில் கிளிக் செய்தால்

* 1 x 1

* 1 x 2

* 1 x 3

* 2 x 1

* 2 x 2

* 2 x 3

என்ற பல அளவுகள் கிடைக்கும். இவை ஒரு திரையில் எத்தனை பக்கங்களைக் காணலாம் என்ற தகவலைத் தருகின்றன. இதில் எத்தனை பக்கங்களைக் காணவிரும்புகிறீர்களோ அதனைக் கிளிக் செய்தால் திரையில் அதற்கேற்ற வகையில் பிரிண்ட் பிரிவியூ பக்கங்கள் காட்டப்படும். தேவை இல்லை ஒரு பக்கமே போதும் என எண்ணினால் அந்த கட்டத்தின் இடது பக்கம் இன்னொரு சிறிய சதுரம் ஒரு பக்கம் இருப்பது போல் படத்தை வைத்துக் கொண்டு இருக்கும். அதில் கிளிக் செய்தால் மீண்டும் ஒரு பக்க பிரிண்ட் பிரிவியூ கிடைக்கும்.

வேர்டில் டெம்ப்ளேட் மாற்றம்

வேர்ட் தொகுப்பில் டெம்ப்ளேட்கள் பல தயாராய் கிடைக்கின்றன. டிபால்ட்டாக உள்ள டெம்ப்ளேட்டினையே அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதில் ஏதேனும் மாற்றங்கள் தேவை என்றால் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்த டிபால்ட் டெம்ப்ளேட் தேவையில்லை; எங்கள் அலுவலகப் பயன்பாட்டிற்கென தனியே ஒரு டெம்ப்ளேட் வேண்டும் என எண்ணினால் என்ன செய்வது? ஒவ்வொரு முறையும் இருக்கும் டெம்ப்ளேட்டினை மாற்றிக் கொண்டிருக்கக் கூடாதே. அதற்கா கம்ப்யூட்டர் இருக்கிறது? நமக்கென ஒன்றை உருவாக்கி அதை நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டாமா?

இதற்கு முதல் வேலை நாம் வேர்டின் டெம்ப்ளேட் விண்டோவிற்குச் செல்ல வேண்டும். இங்கு செல்வது நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பின் பதிப்பினைப் பொறுத்தது. வேர்ட் 2003 வைத்திருப்பவர்கள் பைல் மெனு சென்று நியூ என்பதில் கிளிக் செய்தால் கிடைக்கும் நியூ டாகுமென்ட் டாஸ்க் பேனில் ஜெனரல் டெம்ப்ளேட் என்ற பிரிவைக் காணலாம். இதில் “”உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது” என்று ஒரு பிரிவும், “”இணைய தளத்தில் உள்ளது” என இன்னொரு பிரிவும் இருக்கும். கம்ப்யூட்டரில் (On my Computer) உள்ள பிரிவைக் கிளிக் செய்தால் அது ஏழு வகையான டெம்ப்ளேட் உள்ள விண்டோவைத் தரும். அதிலேயே கீழாக Create New Template என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் விருப்பப்பட்டபடி டெம்ப்ளேட்டினை அமைத்து அதற்கு ஒரு பெயர் கொடுத்து அதனையே பயன்படுத்தலாம். இதனை சேவ் செய்திடுகையில் தானாக இன்னொரு டெம்ப்ளேட்டாக வேர்ட் இதனை சேவ் செய்திடும்.

சிறப்பாக பிளாக் அமைய சில யோசனைகள்

http://www.sitesketch10.com/ என்ற முகவரியில் உள்ள தளம் பிளாக்குகள் அமைக்கவும் வெப்சைட்டுகளை உருவாக்கவும் பல வழிகளில் ஆலோசனை கூறும் தளமாக உள்ளது. இந்த தளத்தின் மேலாக உள்ள நேவிகேஷன் பாரில் இத்தளம் தரும் உதவிகளை வகைகளாகப் பட்டியல் இட்டுத் தந்துள்ளது. அவை:

Blogging Tips: இங்கு உங்களுடைய பிளாக்குகளைச் சிறப்பாக்க அவற்றில் தரப்படும் கருத்துக்கள் எதைப் பற்றி எப்படி இருக்க வேண்டும் எனவும் அந்த வலைமனைகளுக்கு நிறைய பேர் வருவதற்கான சூழ்நிலையை எப்படி உருவாக்க வேண்டும் எனவும் டிப்ஸ்கள் நிறைய தரப்பட்டுள்ளன.

Fonts: உங்களுடைய பிளாக்குகளின் தலைப்பை அமைக்க ஒரு நல்ல பாண்ட் வேண்டுமா? அதுவும் ஷார்ப்பாக சிறப்பாக இருக்க வேண்டுமா? அப்படியானால் இந்த பிரிவில் நிச்சயம் நுழைய வேண்டும். இங்கு இலவசமாகக் கிடைக்கக் கூடிய தளங்கள் குறித்தும் எழுத்து வகைகள் குறித்தும் தகவல் கள் தரப்படுகின்றன. உங்கள் வலைமனை களை எந்த எழுத்துக்களைக் கொண்டு கவர்ச் சியாக அமைத்திடலாம் என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது.

Graphics:  இங்கு உங்கள் வலைமனைகளுக்கான கிராபிக்ஸ் எங்கு கிடைக்கும் என்ற தகவல் தரப்படுகிறது. அத்துடன் மிகச் சிறப்பாக வெப் சைட்டுகளையும் பிளாக்குகளையும் அமைத்தவர்களுடன் பேட்டியும் தரப்படுகிறது. கிராபிக்ஸை எப்படி சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்ற அறிவுரையும் தரப்படுகிறது. குறிப்பாக பிளாக்குகளுக்கான டிசைன்களை வடிமைக்கையில் எப்படி கிராபிக்ஸ் உதவுகிறது என்றும் அறிவுரை தரப்படுகிறது.

Inspiration: இங்கு மற்ற பிளாக்குகளை எடுத்துக் காட்டி எப்படி உங்கள் வலைமனைகளை இன்னும் சிறப்பாக அமைக்கலாம் என்று எடுத்துச் சொல்லப்படுகிறது. இந்த தளத்திலேயே எனக்குப் பிடித்த பிரிவு இதுதான்.

Search Engines: பெரும்பாலான இணைய தளங்கள் அந்த தளங்களில் தங்களுடைய அல்லது பிற நிறுவனங்களின் சர்ச் இஞ்சின் எனப்படும் தேடுதல் தளங்களை அமைக்கின்றனர். தளம் அமைத்தவர்களுடையதோ அல்லது கூகுள் நிறுவனத்தினுடையதோ,  இன்டர்நெட்டில் உள்ள எத்தகைய தளத்திலும் ஒரு சர்ச் இஞ்சின் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது.  இந்த பிரிவில் அப்படிப்பட்ட ஒரு சர்ச் இஞ்சினை உங்கள் பிளாக்கில் எப்படி அமைப்பது என்ற விபரங்கள் தரப்படுகின்றன.

Updates: கடைசியாகத் தரப்பட்டுள்ள பிரிவானாலும் முக்கியமான பிரிவாகும். இதில் அண்மைக் காலத்தில் வந்த சைட் அப்டேட் பைல்கள் பட்டியல் தரப்படுகிறது. அன்றைய செய்தியும் கிடைக்கிறது. பிளாக்குகள் வைத்துள்ள அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இணைய தளம் இது.

எக்ஸெல் டிப்ஸ்

எக்ஸெல் தொகுப்பில் தங்களுக்கு உள்ள சந்தேகங்களை எழுதுகையில் வாசகர்கள் சந்தேகம் சார்ந்த டேட்டா விபரங்களையும் சுருக்கமாகத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த டிப்ஸ் பட்டியலில் சில பொதுவான ஷார்ட் கட் கீகளும் தரப்பட்டுள்ளன.

COUNTIF SUMIF பயன்பாடுகள்: மிகப் பெரிய அளவிலான டேட்டாக்களை எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஆய்வு செய்கையில் அவற்றைப் பல வகைகளில் கூட்டவும் பெருக்கிப் பார்க்கவுமான தேவைகள் ஏற்படும். எடுத்துக் காட்டாக ஒரு விற்பனை மையத்தில் நிறைய பொருட்கள் விற்பனைக்கு இருக்கும். ஒரு குறிப்பிட்ட பொருள் விற்பனை சார்ந்து அதன் விற்பனை லாபத்தைக் கணக்கிட விரும்புவோம். இந்த நோக்கத்திற்கு SUMIF பார்முலா நமக்கு உதவிடும். அதே பொருள் எத்தனை முறை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்று பார்க்க COUNTIF  பார்முலா பயன்படும். இதனை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்கலாம். இதன் வடிவமைப்பு கீழ்க்குறிப்பிட்டபடி அமையும்.

COUNTIF (range, criteria) SUMIF (range,criteria,sum_range) இந்த இரண்டு பார்முலாக்களும் ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்டிருக்கின்றன. Count if  பார்முலாவினைப் பயன்படுத்துகையில், ஒரு குறிப்பிட்ட வகைக்குள் அடங்கும் செல்களை எடுத்துக் கணக்கிட விரும்புவீர்கள். SUMIF  பார்முலாவிலும் அதே அணுகுமுறை இருந்தாலும் அதில் ஒரு வேறுபாட்டினைக் காணலாம். இந்த பார்முலாவிற்குள் வரும் ரேஞ்ச் குறிப்பிட்ட வகையிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம். = COUNTIF பார்முலா பயன்படுத்துகையில் எத்தனை முறை ஒரு நிகழ்வு நடந்தது என்ற கேள்விக்குப் பதிலை எதிர்பார்க்கிறோம். ஆனால் =SUMIF பார்முலாவில் இதற்கு ஒரு கண்டிஷனை அமைத்து அந்த கண்டிஷன் நிறைவேற்றப்படும் செல்களை மட்டும் கூட்டித்தரச் சொல்லிக் கேட்கலாம்.

நெட்டு வரிசையில் ஒரே டேட்டா : ஒர்க் புக் ஒன்றில் மாணவர்கள் எண், வரிசை எண், அப்ளிகேஷன் எண், மதிப்பெண்கள் என டேட்டா அமைக்கிறோம். சில வேளைகளில் ஒரே மாணவரின் விண்ணப்பத்தினை ஒரு முறைக்கு மேல் என்டர் செய்துவிடுவோம். அது போன்ற தவறுகளை இந்த டேட்டாவினை ஆய்வுக்கு எடுக்கும் முன்னர் களைய வேண்டும். இந்த வகை டேட்டாவில் சில தகவல்கள் தனித்தன்மை உடையதாய் இருக்கும். எடுத்துக் காட்டாக ஒரு மாணவரின் பதிவெண், விண்ணப்ப எண் இன்னொருவருக்கு இருக்காது. இதன் அடிப்படையில் தவறுதலாக ஒரு முறைக்கு மேல் என்டர் செய்தவற்றை அறிந்து நீக்கிவிடலாம். இதற்கு COUNTIF  பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக D  என்ற நெட்டுவரிசையில் 100 வேல்யு டேட்டாக்கள் தரப்பட்டுள்ளன. இதில் எந்த டேட்டாவும் இரண்டு முறை இருக்கக் கூடாது என உறுதி செய்திட வேண்டும். இதற்கான பார்முலா = countif ($D $1:$D $100, D1)ஆகும்.

அடிப்படையில் இந்த பார்முலா D1 வேல்யு அந்த காலத்தில் படுக்கை வரிசை 1 முதல் 100 வரை எத்தனை முறை உள்ளது என இது கண்டறிகிறது. இந்த பார்முலாவில் $ என்ற கேரக்டர் செல்களை லாக் செய்கிறது. இந்த பார்முலாவினை ட்ராக் செய்ய வேண்டியிருப்பதால் செல்களை லாக் செய்கிறோம். இது போல இன்னும் சில வழிகளில் டூப்ளிகேட் என்ட்ரிகளைக் கண்டறியலாம். pivot table பயன்படுத்தியும் காணலாம். ஆனால் இது எளிதான ஒரு வழியாகும்.

ஒரு ஒர்க் ஷீட்டில் உள்ள அனைத்து செல்களையும் அப்படியே காப்பி செய்து இன்னொரு ஒர்க் ஷீட்டில் அமைக்க விரும்புகிறோம். அப்போது அதில் உள்ள அனைத்து செல்களையும், டேட்டா இருக்கிறதோ இல்லையோ, காப்பி செய்திட வேண்டியதிருக்கும். கர்சரை வைத்து அழுத்தி செலக்ட் செய்வது சிரமமான வேலையாய் இருக்கும். அதற்குப் பதிலாக ரோ எண்கள் மற்றும் காலம் எழுத்துக்களுக்கு இணையாக இடது மேல் ஓரத்தில் இருக்கும் சிறிய சதுரத்தில் கர்சரை வைத்து கிளிக் செய்தால் முழு ஒர்க்ஷீட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.

பிரிண்ட் மெனு கிடைக்க பைல் மெனு போய் பிரிண்ட் எல்லாம் கொடுக்க வேண்டாம். CTRL + P கொடுத்தால் போதும். இதே பிரிண்ட் மெனு பெற இன்னொரு கீ காம்பினேஷனும் உள்ளது. அது:CTRL + SHIFT + F12 ஆகும்.  பிரிண்ட் செலக்ட் செய்த பின்னர் பிரிண்ட் பிரிவியூ வேண்டுமா? மீண்டும் மெனு செல்ல வேண்டாம். ALT + F கொடுத்து பின் V கொடுத்தால் போதும்.

ஆரோ கீகளை மட்டும் இயக்கினால் கர்சர் கீயின் திசைக்கேற்ப அடுத்த செல்லுக்குச் செல்லும். ஆனால் கண்ட்ரோல் + ஆரோ கீ (Ctrl + Arrow Key)  அழுத்தினால் டேட்டா உள்ள பகுதியின் முனைக்குச் செல்லும்.  ஆங்காங்கே நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளில் கொத்து கொத்தாக டேட்டாவினை போட்டு வைத்திருக்கிறீர்கள். இந்த வரிசைகளில் கர்சர் கீயினைக் கொண்டு சென்று என்ட் + ஆரோ கீ (End + Arrow key)அழுத்தினால் அந்த தொகுதியின் முடிவு அல்லது தொடக்கத்திற்கு கர்சர் செல்லும்.

அதே போல எண்ட் + ஹோம் (End + Home)  கீகளை ஒரு சேர அழுத்தினால் ஒர்க் ஷீட்டில் டேட்டா உள்ள செல்களில் கடைசி செல்லுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். படுக்கை வரிசை ஒன்றில் கர்சரை வைத்துக் கொண்டு எண்ட் + என்டர் (End + Enter) கீகளை அழுத்தினால் அதே வரிசையில் காலியாக இல்லாமல் டேட்டா உள்ள கடைசி செல்லுக்கு கர்சர் செல்லும்.  நெட்டு வரிசை முழுவதும் செலக்ட் செய்திட வேண்டுமா? கர்சரை அங்கு கொண்டு சென்று கண்ட்ரோல்+ஸ்பேஸ் பார் (Ctrl + Space bar) அழுத்தவும்.

படுக்கை வரிசை முழுவதும் செலக்ட் செய்திட கர்சரை அந்த வரிசையில் கொண்டு சென்று ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift + Space bar)அழுத்தவும். காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ K (Ctrl + Shft + O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும்.  தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTR L + அழுத்தவும்.

Ctrl+]  கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும். ஷிப்ட் + ஆரோ கீ (Shft + Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.  கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl + Shft + Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.  ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft + Home)  அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl + Shft + Home)கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.  கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl + Shft + End) கீகள் அழுத்தப்படுகையில் செலக் ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.

என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும். ஆல்ட் + என்டர் (Alt + Enter) அழுத்தினால் அதே செல்லில் அடுத்த வரிக்குக் கர்சர் செல்லும்.

டேப் கீ (TAB) அழுத்தப்படுகையில் கர்சர் இருக்கும் செல்லில் டேட்டா தருவது நிறைவடைந்து கர்சர் வலது புறம் இருக்கும் அடுத்த செல்லுக்குச் செல்லும்.  ஷிப்ட்+ டேப் (Shft + TAB) கீகளை அழுத்தினால் செல்லில் டேட்டா தருவது நிறைவடைந்து கர்சர் இடது புறம் இருக்கும் முந்தைய செல்லுக்குச் செல்லும்.  செல் ஒன்றில் என்டர் செய்த டேட்டாவினைக் கேன்சல் செய்திட எஸ்கேப் கீயை அழுத்தவும்.  செல் என்ட்ரிக்குள்ளாக ஆரோ கீ அழுத்தினால் ஆரோவின் திசைக்கேற்ப இடது, வலது, மேல், கீழாகச் செல்லும்.

ரீஸ்டார்ட் ஆகும் கம்ப்யூட்டர்

1. உங்கள் கம்ப்யூட்டர், இயக்கத்தில் சூடு அடைகிறது. ஏர் கண்டிஷனர் குளிரில் இருந்தாலும் உள்ளே சூடு உருவாகிக் கொண்டு தான் இருக்கும். அந்த சூட்டின் நிலை 60 டிகிரி செல்சியஸைத் தொடுகையில் கம்ப்யூட்டரின் சிபியு தானாக ரீஸ்டார்ட் ஆகும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.  எதனால் சூடு ஏற்படுகிறது? கம்ப்யூட்டரில் உள்ள டிஜிட்டல் சாதனங்கள் அப்படிப்பட்டவையே. அவை இயங்கும் போது நிச்சயம் வெப்ப ஆவி உருவாகி வெளியே வருகிறது. அதனால் தான் ப்ராசசர் சிப் மேலாக ஒன்றும் கேபினட் உள்ளாக ஒன்றும் என மின்விசிறிகள் அமைக்கப்பட்டு அவை அந்த வெப்பத்தை வெளியேற்றுகின்றன.

மேலும் இப்போதெல்லாம் இயக்கப்படும் புரோகிராம்கள் பெரிய அளவில் ப்ராசசரின் சக்தியை உறிஞ்சும் வகையில் உள்ளதால் சூடு அதிகம் உருவாகும் நிலை ஏற்படுகிறது. எடுத்துக் காட்டாக ஐ–ட்யூன்ஸ் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற வீடியோ ஆடியோ புரோகிராம்கள் அதிக சக்தியைப் பயன்படுத்துகின்றன. அதே போல் பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும் இந்த பிரச்சினை வரும். அடுத்ததாக அளவுக்கதிகமாக கம்ப்யூட்டர் கேபினுள் சேரும் தூசியும் சூடு வெளியாவதைத் தடுக்கும். சூட்டை வெளித் தள்ளும் மின்விசிறிகள் சரியான அளவில் இயங்குவதைத் தடுக்கும். இவற்றை அவ்வப்போது நீக்க வேண்டும். கேபினைத் திறந்து தூசியை வெளியே எடுக்கும் சாதனம் கொண்டு கேபினைச் சுத்தம் செய்திட வேண்டும்.

சூடு அதிகமாவதெல்லாம் என் கம்ப்யூட்டரில் இல்லை; இருந்தாலும் ரீ ஸ்டார்ட் ஆகிறது என்றால் அடுத்தபடியாக உங்கள் கம்ப்யூட்டரின் மெமரியைச் சோதனை செய்திட வேண்டும். உங்கள் ப்ராசசர் ராம் மெமரியின் சேதமடைந்த இடத்தில் உள்ள டேட்டாவினைப் பெற முயன்று தோற்றால் கம்ப்யூட்டர் உடனே ரீஸ்டார்ட் ஆகத் தொடங்கும். இதனைக் கண்டறிய உங்கள் ராம் மெமரி ஸ்டிக்குகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால் எந்த ஸ்டிக்கில் பிரச்சினை உள்ளது என்று தெரியவரும். அதனை மட்டும் மாற்றலாம்.

இதுவும் சரியாக உள்ளது என்று தெரிய வந்தால் கம்ப்யூட்டரில் உள்ள செட்டிங் ஒன்றை மாற்றினால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சிஸ்டம் எர்ரர் ஏதேனும் ஏற்பட்டால் உடனே ரீஸ்டார்ட் செய்யும்படி அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆப்ஷனை ஆப் செய்துவிட்டால் இந்த பிரச்சினை தீரும். இதனை மேற்கொள்ள Start, Control Panel என்று சென்று Performance and Maintenance என உள்ளதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள System  லிங்க்கில் கிளிக் செய்து பின் Advanced  டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள Startup and Recovery செக்ஷனில் Settings  பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் “Automatically Restart,” என்று தரப்பட்டு அதன் அருகே தரப்பட்டுள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து அதனை எடுத்துவிடவும். இது System Failure பிரிவில் இருக்கும். பின் ஓகே கிளிக் செய்து அனைத்து விண்டோக்களை மூடவும். இனி உங்கள் கம்ப்யூட் டர் எர்ரர் ஏற்படுவதனால் ரீஸ்டார்ட் ஆகாது.

இந்த செட்டிங்கை விண்டோ விஸ்டாவில் எப்படி செயல்படுத்துவது என்று பார்க்கலாம். Start>Control Panel சென்று “System” என்பதில் கிளிக் செய்திடவும்.  (இதனைப் பெற நீங்கள் கிளாசிக் வியூவில் இருக்க வேண்டும்) இந்த விண்டோவில் “Advanced System Settings” என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் “Startup and Recovery” என்பதன் கீழ் பார்க்கவும். இங்கு “Settings”  பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் “Automatically Restart”  என்பதன் கீழாக என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

அநேகமாக மேலே சொன்னவற்றில் இந்த ரீஸ்டார்ட் பிரச்சினை தீர்ந்துவிடும். இருப்பினும் நன்மையும் தீமையும் பிறர் தர வரா என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் அண்மையில் என்ன செய்தீர்கள் என்று பார்க்கவும். ஏதேனும் ஒரு புதிய சாப்ட்வேர் தொகுப்பு ஒன்றை நிறுவியிருக்கலாம். அல்லது ஹார்ட்வேர் சாதனம் ஒன்றை இணைத்திருக்கலாம். அப்படியானால், அதனை நீக்கிப் பார்க்கவும். பிரச்சினை தொடர்கிறதா என்று கவனிக்கவும். மீண்டும் பிரச்சினை இருந்தால் இணைத்த ஹார்ட்வேர் சாதனத்திற்கான புதிய டிரைவர் தொகுப்பினை அதனைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் தளத்திலிருந்து இறக்கிப் பதியவும்.

இந்த ரீஸ்டார்ட் பிரச்சினை ஏதேனும் வைரஸ் அல்லது ஸ்பைவேர் தொகுப்பினாலும் ஏற்பட 100 சதவிகித வாய்ப்புண்டு. எனவே நீங்களாகக் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து அண்மையில் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை ஸ்பைவேர் கண்டறியும் தொகுப்பினையும் இயக்கிப் பார்க்கவும்.  அடுத்ததாக கண்ட்ரோல் பேனல் சென்று அதில் உள்ள ஆட்/ரிமூவ் புரோகிராம் பிரிவிற்கான ஐகானில் கிளிக் செய்து உங்களுக்குத் தற்சமயம் தேவையில்லாத புரோகிராம்களை நீக்கவும். தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வதும் ரீஸ்டார்ட் பிரச்சினைக்கு ஒரு மருந்தே.

உங்களுக்குப் பிடித்தமான வீடியோவினைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இசையைக் கேட்டுக் கொண்டிருக்கையில், நண்பருடன் சேட்டிங் செய்து கொண்டிருக்கையில், பிரியமான கடிதத்தினைத் தயார் செய்து கொண்டிருக்கையில் கம்ப்யூட்டர் தானாக ரீஸ்டார்ட் செய்தால் நிச்சயம் என்ன கொடுமைடா என்று எண்ணத் தோன்றும். எனவே மேலே குறிப்பிட்ட வழிகளை ஒவ்வொன்றாகச் செயல்படுத்திப் பார்த்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுவே புத்திசாலித்தனம்.