அப்பளமாகும் எலும்புகள்!

அறுபதில் வர வேண்டியது முப்பதிலேயே வருது

இருபதில் துள்ளிக்குதித்து ஓடியவர் தான் தினேஷ்; ஆனால், முப்பதில் திடீரென மூட்டு வலி, முழங் கால் வலி, முதுகு வலி என்று எப்போது பார்த்தாலும் புலம்பித் தவிப்பார். டாக்டரிடம் போனால் தான், அவருக்கு எல்லாமே புரிகிறது. இருபது வயதில் செய்த சின்னச்சின்ன தவறுகள் தான், இப்போது வதைக்கிறது என்று. அப்படி என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம்? அவர் ஒன்றும், அதே வயதுள்ள மற்றவர்கள் செய்யாத தவறை செய்யவில்லை.

சத்தாக சாப்பிடவில்லை; பிட்சாவும், பர்கரும் சாப் பிட்டார்; எப்போதும் “ஏ.சி’., அறையில் தான் முடக்கம்; கம்ப்யூட்டரே கதி. வேலையும் கம்ப்யூட்டர் தான்; இ – மெயில் முதல் சினிமா படம் பார்ப்பது வரைக்கும் கம்ப்யூட்டர் தான். இது தான் அவர் செய்த தவறு. இதன் விளைவாக, அவருடைய வயதுக்கு தேவையான கால்சியம் சத்தும் கிடைக்கவில்லை; சூரிய ஒளி மூலமோ, சாப்பிடுவதன் மூலமோ கிடைக்க வேண்டிய வைட்டமின் டி சத்தும் கிடைக்கவில்லை.

இதனால் தான், அவருக்கு எலும்புகள் வலுவிழந்து உள்ளன. அதனால் மூட்டு பிரச்னை வந்துவிட்டது. அதாவது, அறுபது வயதில் வர வேண்டிய இது போன்ற மூட்டுத்தொல்லைகள், முப்பதிலேயே வந்து விட்டது.

மூட்டு கோளாறு ஏராளம்: ஆர்த்ரைட் டீஸ் என்று சொல்லப்படும் மூட்டு கோளாறில் பல வகை உள்ளன. இதுபோன்ற மூட்டு, எலும்பு பிரச்னைகள் வெறும் எலும்பு பிரச்னைகளோடு நின்று விடுவதில்லை. அறுபது வயதாகி விட்டால், மூட்டு பிரச்னை தான் வயதானவர்களை முடக்கிப்போடும். அப்படிப்பட்ட பிரச்னை, முப்பதிலேயே வந்து விட்டால், என்னவாகும் பாருங்கள். இந்த வயதினரில், ஆர்த்ரைட்டீஸ் தவிர, ஆஸ்டோமலாசியா, ஆஸ்டோபோரோசிஸ் ஆகிய மூன்று மூட்டு பிரச்னைகள் தான் அதிகம் வருகின்றன. டயபடீஸ் என்று சொல்லப்படும் சர்க்கரை வியாதி, முப்பது வயதில் பலரையும் தாக்கும் நோயாக முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்து “ஆஸ்டோபோரோசிஸ்’ தான் இவர்களை அதிகம் பாதிக்கிறது.

மூன்றரை கோடி பேர்: சமீபத்தில் எடுத்த பல சர்வேக்களில், 25 – 35 வயதுள்ளவர்களில் 3 சதவீதம் பேருக்கு இந்த பிரச்னை அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அளவை கட்டுப்படுத்தாவிட்டால், வரும் 2013க்குள் மூன்றரை கோடி பேருக்கு இந்த பாதிப்பு வரும் என்று இந்திய எலும்பு மற்றும் கனிம ஆராய்ச்சி சொசைட்டி எச்சரித்துள்ளது. ஆஸ்டோபோரோசிஸ் – எலும்புகள் அப்பளமாக நொறுங்கும் நிலையில் உள்ள நிலை. இதன் காரணமாக, தடுக்கி விழுந்தாலும், எலும்பு முறிவு ஏற்படும். இந்த பாதிப்புக்கு மூன்று முக்கிய காரணங்கள்: 1. சத்தான உணவு சாப்பிடாமை. 2. பரம்பரை வழி பாதிப்பு. 3. வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம்.

கால்சியம், வைட்டமின் டி: எலும்புகள் வலுவாக இருக்க காரணம், வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் தான். வைட்டமின் டி கிடைக்க வேண்டுமானால், நம் உடலில் சூரிய ஒளி பட வேண்டும். கால்சியம் சத்து கிடைக்க பால், பால் பொருட்கள் சாப்பிட வேண்டும்.

வளர்இளம் பருவத்தினருக்கு இரண்டுமே எதிரி. சூரிய ஒளி பட விட மாட்டார்கள். அதுபோல, பால் என்றாலே அவர்களுக்கு “ச்சீ’ என்ற நினைப்பு தான். இதில் கால்சியம் சேமிப்பது, எலும்புகள், பற்களில் தான். இங்கிருந்து தான் உடலின் மொத்த வளர்ச்சிக்கான கால்சியம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த இரண்டிலும் கால்சியம் குறைந்து போகும் போது, அறுபது வயதாகி விடுகிறது. அதனால் தான் மூட்டு வலி ஆரம்பமாகிறது. அப்போது, நடக்க முடியாது; உட்கார முடியாது. வயதான காலத்தில் இந்த கஷ்டங்களை பட்டுத்தான் ஆக வேண்டும்.

மூட்டுக்கு மட்டுமல்ல: கால்சியம் சத்து என்பது, ஏதோ மூட்டு, எலும்புகளின் வளர்ச்சிக்கு மட்டும் என்று நீங்கள் நினைத் தால் அது தவறு. ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, நரம்பு மண்டலம் இயங்குவது ஆகியவற்றுக்கு கால்சியம் முக்கியம்.

உடலில் போதுமான கால்சியம் கிடைக்காதபோது, எலும்புகளில் சேமித்து வைத்திருக்கும் கால்சியம் தான் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதனால், கால்சியம் பற்றாக்குறை அதிகரிக்கிறது. இப்படி பற்றாக்குறை ஏற்படும் போது தான், ஆஸ்டோபோரோசிஸ் எட்டிப்பார்க்கிறது. அதாவது, அப்பளமாகும் அளவுக்கு எலும்புகள் பலவீனம் அடையும் நிலை. வயதானவர்கள் , தடுக்கி விழுந்தாலும், எலும்பு முறிவு ஏற்பட காரணம் இந்த நிலை தான். இந்த நிலை முப்பது வயதில் வந்தால் எப்படியிருக்கும்?

எவ்வளவு தான் தேவை? இருபதில், என்னவேண்டுமானாலும் சாப்பிடலாம்; ஆனால், சத்தான உணவுகளை புறக்கணிக்கக்கூடாது. குறிப்பாக பால், தயிர் போன்ற பொருட்களை. பிரஷ்ஷான மீன், சோயா ஆகியவற்றிலும் கால்சியம் அதிகம் கிடைக்கும். பாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடுவதுடன் இவற்றையும் சேர்த்துக் கொண்டால், இந்த பிரச்னையே வராது. கால்சியம் ஒரு நாளைக்கு, குழந்தைக்கு 300 மில்லி கிராம், சிறியவர்களுக்கு 800 மில்லி கிராம், பெரியவர்களுக்கு 1,000 மில்லி கிராம், கர்ப்பிணிகளுக்கு 1,300 மில்லி கிராம் தேவை.

சூரிய ஒளி படட்டும்: காலையில் எழுந்திருக்கும் வரை, “ஏ.சி’., அறையில் தூக்கம். அடுத்து காரில் பயணம்; ஆபீசில் “ஏ.சி’., அறையில் முடக்கம். இரவில் வீடு திரும்பிய பின், “ஏ.சி’., அறை வாசம். இது தான் பலருக்கு கெடுதலாக உள்ளது. டாக்டரை போய்ப்பார்த்தால், முதலில் வெயிலில் காலாற நடங்கள்; வெயில் உங்கள் மீது படட்டும் என்பார். சூரியனும் ஒரு நல்ல டாக்டர் தெரியுமா? நம்மை அறியாமல் நமக்கு வைட்டமின் டி யை தருகிறார். இத்தோடு, கொஞ்சம் உடற்பயிற்சி இருந்தால் போதும்; மூட்டு வலியே வராது. உடற்பயிற்சி என்றால், சைக்கிள் ஓட்டுவது, வாக்கிங், ஸ்கிப்பிங் போதும்.

எத்தனை வகை: கால்சியம், வைட்டமின் டி சத்து இல்லாததால், எலும்பு பாதிப்புகள் பல உள்ளன; அவை: ஆஸ்டோமைலிடிஸ்: எலும்பு மஜ்ஜையில் கிருமிகள் தொற்றுவதால் ஏற்படும் பலவீனம்: ஆஸ்டலிடிஸ் பைபரோசா சிஸ்டிகா: வைட்டமின் டி சத்தில்லாததால், எலும்பு திசுக்கள் பலவீனம் அடைவது; ஆஸ்டோமலாசியா: எலும்புகள் மிகவும் இளகி விடுவது.

ஆஸ்டோபினியா: எலும்பு அடர்த்தி வெகுவாக சரியும் நிலை.

ஆஸ்டோபோரோசிஸ்: கால்சியம் குறைபாட்டால், எலும்புகள் வளர்வது குறையும் நிலை.

ஆஸ்டோஆர்த்ரைட்டீஸ்: எலும்புகள் தேய்மானம். குருத்தெலும்பு பாதிப்பு.

பெண்களுக்கு தான் : கால்சியம், வைட்டமின் டி சத்து போதுமான அளவு இல்லாவிட்டால்,  ஊ …ஆ…என்று இடுப்பு பிடிப்பது மட்டுமில்லாமல், எலும்புகள் அப்பளமாக நொறுங்கும் அளவுக்கு தொல்லைகள் அதிகரிக்கும்.

கம்ப்யூட்டரே கதி என்று இருப்போருக்கு, சாதாரண கழுத்து வலியில் ஆரம்பித்து, முழங்கை, முழங்கால் என்று எல்லாவற்றிலும் எலும்பு பாதிப்பு இருக்கும்.

ஆண்களை விட, பெண்களுக்கு தான் கால்சியம், வைட்டமின் டி சத்து வெகுவேகமாக கரையும் என்பதால், அவர்களுக்கு தான் அதிக பாதிப்பு இருக்கும். இதனால், பெண்கள் தான் இந்த விஷயத்தில் அதிக கவனமாக இருக்கவேண்டும்.

* பிறக்கும் போது 300 எலும்புகள் உருவாகும்; வளர்ந்த பின் 206 ஆக குறைந்துவிடும்.

* உடலில் மூன்றில் ஒரு பங்கு எலும்புகள் தான். ரத்தம், உறுப்புகளை அடுத்து முக்கியமானது.

* கடைசி வரை வலுவாக இருந்தால் தான், வாழ்நாள் நிம்மதியாக நீடிக்கும்.

அப்படியானால், எலும்புகளை காப்பாற்ற வேண்டாமா? இளம்வயதினரே, இப்போதே உஷார்.

%d bloggers like this: