மூலிகை கட்டுரை: கழிச்சலை போக்கும் காட்டாத்தி


இரைப்பையானது உணவை பிசைந்து, முன் சிறுகுடல் வழியாக சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் என சக்கையாக வெளித்தள்ளுகிறுது. சீராக இயங்கிக் கொண்டிருக்கும் குடலில் ஏதேனும் தொல்லை ஏற்பட் டால் குடல் வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்துவிடும். அப்பொழுது குடலில் உள்ள உணவுகள் செரிக்கபட முடியாமலும், நீர்ச்சத்து உறிஞ்சப்பட முடியாமலும், ஏற்கனவே குடலில் தங்கியுள்ள பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளுடன் சேர்ந்து குடலில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தி கழிச்சலாக வெளியேற ஆரம்பிக்கும். இதுவே கழிச்சல் என்றும், வயிற்றுப்போக்கு என் றும் பேதி என்றும் அழைக்கப்படுகிறது. கழிச்சலின் போது குடலில் சீழ் தங்கி வெளியேறுவது சீதக்கழிச்சல், ரத்தம் வடிவது குருதிக் கழிச்சல் மற்றும் நுண்கிருமிகளால் குடல் அழுகலுடன் மலம் வெளியேறுவது நாற்றக் கழிச்சலாகவும் காணப்படும்.

கழிச்சலின் போது நீர்ச்சத்தும், வைட்டமின்களும் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்களும், உப்புகளும் அநாவசியமாக வெளியேறிவிடுவதால் ரத்த அழுத்தக் குறைவு, கண் பஞ்சடைதல், உடல் சோர்வு, உடல் எடை குறைதல், பலஹீணம், தலைச்சுற்றல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகின்றன. நீர்ச்சத்து அதிகமாக வெளியேறுவதால் செல் மற்றும் ரத்தத்தின் சமச்சீர் நிலை பாதிக்கப் படுவதால் சிலர் கோமா எனப் படும் ஆழ் மயக்க நிலைக்கோ, மரணத்திற்கோ ஆட்படுகின்றனர். பெரும்பாலும் சிறு குழந்தைகள், முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் பெண்களே கழிச்சலின் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

பலவிதமான காரணங்களாலும் ஏற்படும் கழிச்சல் நீக்கி, குடற்புண்களை ஆற்றி, நீர்ச்சத்தை தங்க வைக்கும் அற்புத மூலிகை காட்டாத்தி, உட்போர்டியா பிரக்டிகோசா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லித்ரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறு மரங்கள் வட மாநிலங்களில் ஏராளமாக விளைகின்றன. வேலக்காய் என்ற பெயராலும் அழைக்கப் படும். இந்த சிறு மரங்களின் பூக்களே காட்டாத்திப் பூ என்றும் நாட்டு மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

காட்டாத்திப் பூக்களை உலர்த்தில் பொடித்து 3 முதல் 6 கிராமளவு தினமும் ஒன்று அல்லது இரண்டு வேளை தேன், தேநீர் கசாயம் அல்லது மோருடன் கலந்து சாப்பிட கழிச்சல் நீங்கும். காட்டாத்திப் பூக்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து 500மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து, 100மிலியாக சுண்டியப் பின்பு வடிகட்டி, தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்பு குடித்து வர குடல் புண்கள் ஆறும், கடையில் விற்கப்படும் அரிஷ்டம், ஆசவம் போன்றவை தயார் செய்வதற்கு காட்டாத்திப் பூக்களை கசாயம் செய்து சர்க்கரை கரைசலில் கலந்து, புளிக்க வைத்து பயன் படுத்துகின்றனர். இவை உட் கொள்ளும் மருந்தின் தன்மையை எந்தவித உபாதையும் இல்லாமல் குடல் ஏற்றுக் கொள்ள உதவுகின்றன.

%d bloggers like this: