வேர்ட் பிரிண்ட் டிப்ஸ்

வேர்ட் மட்டுமின்றி எந்த ஆபீஸ் தொகுப்பில் பிரிண்ட் எடுப்பதாக இருந்தாலும் சில வழிகளைப் பின்பற்றினால் அது பிரிண்ட் எடுக்கும் பக்கங்களை எடுப்பாகக் காட்டுவதுடன் பிரிண்டருக்கான கார்ட்ரிட்ஜின் வாழ்நாளும் அதிகமாகும். இந்த நோக்கத்துடன் நாம் எடுக்கக் கூடிய சில நடவடிக்கைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

ட்ராப்ட் பிரிண்டிங்: ஒரு சிலருக்கு வேர்ட் டாகுமெண்ட்டில் ஸ்பெல்லிங் செக், பார்மட்டிங்கினால் ஏற்பட்டுள்ள தோற்றம் ஆகியவற்றை நேரடியாகத் திரையில் பார்ப்பது நிறைவைத் தராது. அச்சிட்டு தாள்களில் வைத்துத்தான் திருத்தங்களை மேற்கொள்வார்கள். இப்படிப்பட்ட, இறுதியாக்கப்படாத, அச்சுப் பிரதிகளை ட்ராப்ட் (Draft) என்னும் வகையில் எடுக்கலாம். இந்த வகை பிரிண்ட்டினை தற்போது அனைத்து பிரிண்டர்களும் சப்போர்ட் செய்கின்றன. இதனை வேர்ட் தொகுப்பிலிருந்து செட் செய்திடலாம். Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Draft output”என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி பின் பிரிண்ட் எடுத்தால் டாகுமெண்ட் ட்ராப்ட் வகையில் குறைவான டோனருடன் அச்சாகும்.

ப்ராப்பர்ட்டீஸ் பிரிண்டிங்: டாகுமெண்ட் அச்செடுக்கையில் பிரிண்ட் ப்ராப்பர்ட்டீஸ் தகவல்களை டாகுமெண்ட்டிலேயே அச்செடுத்து வைத்துக் கொள்வது நமக்கு பைலிங் செய்வதிலும் பின்னர் அச்செடுப்பதிலும் உதவியாக இருக்கும். இதனை அனைத்து அச்செடுக்கும் படிகளிலும் இருக்குமாறு செட் செய்திடலாம்.

Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Include with document”என்ற பகுதியில் “Document properties” என்ற வரியின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடினால் நீங்கள் அச்செடுக்கையில் ஒவ்வொரு டாகுமெண்ட்டிலும் அந்த டாகுமெண்ட் குறித்த தகவல்கள் தனியே கிடைக்கும். அலுவலகங்களில் இதனைக் கோப்பாக வைக்கையில் இந்த குறிப்புகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

முழுத்திரையில் பிரிண்ட் பிரிவியூ: டாகுமெண்ட் அச்செடுக்கும் முன் அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை பிரிண்ட் பிரிவியூ காட்டும். இதன் தோற்றம் ஸ்கிரீனில் தெரியும் போது டாஸ்க் பார் மற்றும் டூல்பார்களும் காட்டப்படும். இதனால் அதன் தோற்றத்தின் முழு பரிமாணம் நமக்குக் கிடைக்காது. இவற்றைத் தற்காலிகமாக மறைத்து பிரிண்ட் பிரிவியூ காட்சியைக் காட்டும்படி செட் செய்திடலாம்.

இதற்கு டாகுமெண்ட்டைத் திறந்த பின்னர் File மெனுவில் Print Preview தேர்ந்தெடுக்கவும். அதன் பின் மேலாக உள்ள Close பட்டன் அருகே Full Screen பட்டன் கிடைக்கும்.இதில் கிளிக் செய்தால் திரை முழுவதும் டாகுமெண்ட் Print Preview கிடைக்கும். தோற்றத்தை மதிப்பிட்டு என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அவற்றை மேற்கொண்ட பின்னர் கீழாக Close Full Screen பிரிவில் கிளிக் செய்திடலாம். அல்லது Esc கீ அழுத்தலாம்.

பேக் கிரவுண்ட் பிரிண்டிங்: வேர்டில் பெரிய அளவிலான டாகுமெண்ட்கள் அல்லது சார்ட் மற்றும் டேபிள்கள் அடங்கிய டாகுமெண்ட்களை அச்செடுக்கையில் அதிகமாக மெமரி தேவைப்படும். அது கிடைக்காத போதும் பிரிண்டரில் தேவையான மெமரி இல்லாத போதும் அச்செடுப்பதில் பிரச்சினை ஏற்படும். இதற்குக் காரணம் வேர்ட் தொகுப்பு பின்புலத்தில் டாகுமெண்ட்களை அச்செடுப்பதே. அதாவது ஒரு டாகுமெண்ட்டை பிரிண்ட் செய்கையில் நீங்கள் அதே டாகுமெண்ட் அல்லது வேறு ஒரு டாகுமெண்ட்டை எடிட் செய்திடலாம். இந்த வசதியை ஆஹா என நாம் வரவேற்கலாம். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் நீங்கள் மல்ட்டி டாஸ்க்கிங் என்ற வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதால் மெமரியின் பெரும்பாலான பகுதி அவற்றால் எடுத்துக் கொள்ளப்படும். எனவே பெரிய டாகுமெண்ட் ஒன்றின் அச்சுப் பிரதி அவசரமாகத் தேவைப்பட்டால் அல்லது நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் மிகவும் குறைவாக மெமரி இருந்தால் இந்த பேக்கிரவுண்ட் பிரிண்டிங் என்பதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்படவும்.

Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Background printing” என்ற பகுதியில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

ரிவர்ஸ் பிரிண்டிங்: பல பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட்களை அச்செடுக்கையில் நமக்கு ஒரு எரிச்சலூட்டும் அனுபவம் கிடைத்திருக்கும். 40 பக்கங்கள் அடங்கிய ஒரு டாகுமெண்ட் பிரிண்ட் ஒன்றை எடுப்போம். அச்செடுத்த பக்கங்கள் அதன் ட்ரேயில் வந்து விழும்போது பார்க்க அழகாக இருக்கும். அதனைக் காற்றில் பறக்கவிடாமல் பிடித்துக் கொண்டிருப்போம். அச்சுப் பணி முடிந்து அவற்றை எடுத்த பின்னர் 40 ஆம் பக்கம் மேலாகவும் பக்கம் 1 அடியிலும் இருக்கும். இதனைச் சரியாக அடுக்க அந்த 40 தாள்களையும் ஒவ்வொன்றாக அடுக்க வேண்டியதிருக்கும். இந்த கம்ப்யூட்டர் பிரிண்டில் இது ஒரு தொல்லை என்று முணுமுணுத்தவாறே அடுக்க ஆரம்பிப்போம். ஏன் இந்த தொல்லை. வேர்ட் 2003 தொகுப்பு உங்களுக்கு இந்த தொல்லையை நீக்கும் வழியைக் கொண்டுள்ளதே.

கடைசி பக்கத்தை முதலில் பிரிண்ட் செய்து பின் அப்படியே இறுதியிலிருந்து முதல் பக்கம் வரை டாகுமெண்ட் ஒன்றை அச்செடுக்கும்படி செய்திடலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்படவும். Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Printing options”என்ற பகுதியில் உள்ள “Reverse print order” என்பதில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும்.

பிரிண்ட் பிரிவியூவில் பல பக்கங்கள்: டாகுமெண்ட் ஒன்றின் பிரிண்ட் பிரிவியூ பார்க்கையில் ஒரு பக்கம் காட்டப்படுகிறது. ஆனால் அண்மையில் வாங்கிய உங்கள் எல்சிடி மானிட்டரில் பல பக்கங்களைக் காணும் வாய்ப்பு உள்ளது. ஏன், சிலர் இப்போது தங்கள் இல்லங்களில் உள்ள எல்.சி.டி. டிவியில் லேப் டாப் கம்ப்யூட்டரை இணைத்து அதன் திரையைப் பார்த்தவாறே கம்ப்யூட்டரில் வேலையை மேற்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட வசதியைக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களின் பிரிண்ட் பிரிவியூ காணவே விரும்புவார்கள். வேர்ட் இதற்கு வழி தருகிறது.

முதலில் டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து அதன் பிரிண்ட் பிரிவியூ பெறவும். டாகுமெண்ட் எந்த அளவில் (53%) சுருக்கப்பட்டு காட்டப்படுகிறது என்று ஓர் இடத்தில் காட்டப்படும். அதற்கு இடது புறமாக நான்கு சிறிய பட்டன்கள் அடங்கிய ஒரு சதுரம் கிடைக்கும். இதில் கர்சரைக் கொண்டு சென்றால் மல்ட்டிபிள் பேஜஸ் என்ற செய்தி கிடைக்கும். இதில் கிளிக் செய்தால்

* 1 x 1

* 1 x 2

* 1 x 3

* 2 x 1

* 2 x 2

* 2 x 3

என்ற பல அளவுகள் கிடைக்கும். இவை ஒரு திரையில் எத்தனை பக்கங்களைக் காணலாம் என்ற தகவலைத் தருகின்றன. இதில் எத்தனை பக்கங்களைக் காணவிரும்புகிறீர்களோ அதனைக் கிளிக் செய்தால் திரையில் அதற்கேற்ற வகையில் பிரிண்ட் பிரிவியூ பக்கங்கள் காட்டப்படும். தேவை இல்லை ஒரு பக்கமே போதும் என எண்ணினால் அந்த கட்டத்தின் இடது பக்கம் இன்னொரு சிறிய சதுரம் ஒரு பக்கம் இருப்பது போல் படத்தை வைத்துக் கொண்டு இருக்கும். அதில் கிளிக் செய்தால் மீண்டும் ஒரு பக்க பிரிண்ட் பிரிவியூ கிடைக்கும்.

வேர்டில் டெம்ப்ளேட் மாற்றம்

வேர்ட் தொகுப்பில் டெம்ப்ளேட்கள் பல தயாராய் கிடைக்கின்றன. டிபால்ட்டாக உள்ள டெம்ப்ளேட்டினையே அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதில் ஏதேனும் மாற்றங்கள் தேவை என்றால் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்த டிபால்ட் டெம்ப்ளேட் தேவையில்லை; எங்கள் அலுவலகப் பயன்பாட்டிற்கென தனியே ஒரு டெம்ப்ளேட் வேண்டும் என எண்ணினால் என்ன செய்வது? ஒவ்வொரு முறையும் இருக்கும் டெம்ப்ளேட்டினை மாற்றிக் கொண்டிருக்கக் கூடாதே. அதற்கா கம்ப்யூட்டர் இருக்கிறது? நமக்கென ஒன்றை உருவாக்கி அதை நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டாமா?

இதற்கு முதல் வேலை நாம் வேர்டின் டெம்ப்ளேட் விண்டோவிற்குச் செல்ல வேண்டும். இங்கு செல்வது நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பின் பதிப்பினைப் பொறுத்தது. வேர்ட் 2003 வைத்திருப்பவர்கள் பைல் மெனு சென்று நியூ என்பதில் கிளிக் செய்தால் கிடைக்கும் நியூ டாகுமென்ட் டாஸ்க் பேனில் ஜெனரல் டெம்ப்ளேட் என்ற பிரிவைக் காணலாம். இதில் “”உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது” என்று ஒரு பிரிவும், “”இணைய தளத்தில் உள்ளது” என இன்னொரு பிரிவும் இருக்கும். கம்ப்யூட்டரில் (On my Computer) உள்ள பிரிவைக் கிளிக் செய்தால் அது ஏழு வகையான டெம்ப்ளேட் உள்ள விண்டோவைத் தரும். அதிலேயே கீழாக Create New Template என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் விருப்பப்பட்டபடி டெம்ப்ளேட்டினை அமைத்து அதற்கு ஒரு பெயர் கொடுத்து அதனையே பயன்படுத்தலாம். இதனை சேவ் செய்திடுகையில் தானாக இன்னொரு டெம்ப்ளேட்டாக வேர்ட் இதனை சேவ் செய்திடும்.

One response

  1. […] வேர்ட் பிரிண்ட் டிப்ஸ் […]

%d bloggers like this: