ஜேம்ஸ்பாண்ட் கண்ணாடி

அந்தக் காலத்து ஜெய்சங்கர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களைப் பார்த்திருக் கிறீர்களா! அதில் வரும் ஜேம்ஸ் பாண்ட் தான் அணிந்திருக்கும் கண்ணாடியை ஒரு ஓரத்தில் தட்டுவார். பின் அடுத்த காட்சியில் அதில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோவை வைத்து வில்லனை மிரட்டுவார். ஆஹா! அப்படி ஒன்று இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா. கேமராவோடு பாட்டு கேட்பதற்கு எம்பி3 பிளேயரையும் இணைத்து ஒரு அழகான சன் கிளாஸ் (கூலிங் கிளாஸ் கண்ணாடி) ஒன்று அண்மையில் மார்க்கட்டில் வந்துள்ளது. இதன் பெயர் NU Spy Sunglasses ஆகும். அது குறித்து இங்கு காணலாம். கவர்ந்திழுக்கும் வடிவம், உள்ளாக அமைந்த கேமரா மற்றும் எம்பி3 பிளேயர் மற்றும் ரிமோட் மூலம் கண்ட்ரோல் செய்து போட்டோ எடுக்கும் வசதி என அசத்துகிறது இந்த கூலிங் கிளாஸ். என்ன ஆடியோவும் போட்டோவும் இன்னும் கொஞ்சம் நன்றாக வரும்படி செய்திருக்கலாம். இருந்தாலும் கொடுக்கும் காசுக்கு பஞ்சம் இல்லாமல் இது இயங்குகிறது.

இதன் வழியே நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதனை அப்படியே போட்டோவாக எடுக்கலாம். அதற்காக கண்ணாடியில் இருக்கும் பட்டனை யெல்லாம் அழுத்தினால் எதிரே உள்ளவர்களுக்குத் தெரிந்துவிடுமே. அதனால் மறைத்து வைத்து இயக்க ஒரு ரிமோட் தரப்பட்டுள்ளது. இதனுடன் இயர் போன் இணைத்து ஒரு எம்பி3 பிளேயர் இயங்குகிறது. இதனுடன் கிடைக்கும் பொருட்களைப் பார்க்கலாம்:

கேமரா சன்கிளாஸ் யு.வி.400 போலரைஸ்டு பிளிப் அப் லென்ஸ் (பிரவுன் மற்றும் வெள்ளை)

யு.எஸ்.பி. எக்ஸ்டென்ஷன் கேபிள்

ரிமோட் கண்ட்ரோல்,

சுத்தம் செய்திட துணி,

எப்படி இயக்க வேண்டும் என்பதற்கான விளக்க உரை நூல்,

இன்ஸ்டால் செய்திட சிடி.

வழக்கமான கூலிங் கிளாஸ் போலத்தான் இதுவும் உள்ளது. பக்கவாட்டில் இருக்கும் பிரேம் மட்டும் சற்று தடிமனாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள லென்ஸ்களை கழட்டி மாட்டலாம். இரண்டு கலர் லென்ஸ் தரப்படுகிறது. இதில் அல்ட்ரா வயலர் கதிர் பாதுகாப்பு உள்ளது. ஸ்கிராட்ச் ஏற்படாது. மேலும் போலரைஸ்டு என்பதால் எதிர் வரும் ஒளிச் சிதறல் கண்களைப் பாதிக்காது. இடது பக்கம் ஒரு சிறிய பட்டன் உள்ளது. கண்ணாடியை அணிந்த பின் இதனை இயக்கினால் பிளேயர் இயங்கும்; அணையும். வலது பக்கம் இரண்டு பட்டன்கள் உள்ளன. கண்ணை ஒட்டி உள்ள பட்டனை அழுத்தினால் போட்டோ எடுக்கப்படுகிறது. அதற்கு முன் பிளேயரை அணைத்துவிட வேண்டும். மியூசிக் இசைக்கையில் பட்டனை அழுத்தினால் அடுத்த பாடலுக்குச் செல்லும். அழுத்தியபடியே இருந்தால் வால்யூம் அதிகரிக்கும். வலது காதுக்கு அருகே உள்ள பட்டனை அழுத்தினால் பாடலின் தொடக்கத்திற்குச் சென்று இசைக்கும். அப்படியே அழுத்தினால் வால்யூம் குறையும். இதில் உள்ள சிறிய எல்.இ.டி.விளக்கு பிளேயர் என்ன நிலையில் உள்ளது என்று காட்டுகிறது. கண்ணாடியை பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைக்க ஒரு சிறிய யு.எஸ்.பி. போர்ட் உள்ளது.

இத்துடன் வரும் ஒரு சிறிய சார்ந்த சாதனம் இதன் ரிமோட் கண்ட்ரோல். கண்ணாடியில் உள்ள பட்டனைக் காட்டிலும் இதனை இயக்கினால் போட்டோ மிக அழகாக எடுக்கப்படுகிறது. இதனை அழுத்தி போட்டோ எடுக்கையில் மியூசிக்கை நிறுத்த வேண்டியதில்லை.மியூசிக் இசைக்கவும் தற்காலிகமாக நிறுத்தவும் பட்டன்கள் தரப்பட்டுள்ளன. இவ்வளவு இணைப்புகள் இருந்தும் கண்ணாடியின் எடை ஒன்றும் கூடுதலாக இல்லை. மற்ற கண்ணாடிகள் போலத்தான் இருக்கின்றன.

இதன் கேமரா 1.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. இதன் லென்ஸ் இருக்கும் இடத்தைக் கண்டறியவே முடியாது. கேமராவின் போகஸ் நிலையானது. ஆட்டோ போகஸ் கொடுத்திருக்கலாம். உங்கள் எதிரே உள்ள பொருளைத்தான் இது போட்டோ எடுக்க முடியும். ஒன்றிரண்டு போட்டோ எடுத்து கம்ப்யூட்டரில் பார்த்தால் உங்களுக்கு எந்த அளவில் இது போட்டோ எடுக்கிறது என்று தெரிந்துவிடும்.இதனை உளவு பார்க்கும் பணி மற்றும் பிறருக்குத் தெரியாமல் போட்டோ எடுக்கும் பணிக்கு மட்டுமே பயன்படுத்தலாம். ஒளி குறைந்த இடங்களில் கூட நன்றாக போட்டோ எடுத்துத் தருகிறது.

சன்கிளாஸ் செயல்பாடும் நன்றாக உள்ளது. குளிர்ச்சியாக உள்ளது. அல்ட்ரா வயலட் கதிர் பாதுகாப்பும் போலரைஸ்டு வசதியும் இதனைச் சிறப்பாக்குகின்றன. இதனைத் தனியாகப் பாட வைத்து கேட்க முடியாது. கண்களில் அணிந்துதான் கேட்க முடியும்.இதன் பேட்டரி ஐந்து மணி நேரம் தொடர்ந்து பாடல்களைக் கேட்க உதவுகிறது. தனியே ஐபாட், பின் கூலிங் கிளாஸ் என இருக்கும் இளைஞர்களுக்கு இது உகந்தது. 1 ஜிபி திறன் கொண்ட இதன் விலை ரூ.4,000.

%d bloggers like this: