தாயுமானாவர்! (ஆன்மிகம்)


“அம்மா…’ என்ற சொல் தான், ஒவ்வொரு குழந்தையின் வாயில் இருந்து வெளிப்படும் முதல் வார்த்தை. தாயில்லாத குழந்தைகள் அன்புக்காக ஏங்குகின்றனர்; அவர்களுக்கெல்லாம் தாயாக விளங்குகிறார் தாயுமானசுவாமி. இவர், திருச்சி, காவிரிக்கரையிலுள்ள மலை மீது அருள் செய்கிறார்.

ஆடிப்பெருக்கு திருவிழா காண வருபவர்கள், தாயுமான சுவாமியை அவசியம் வணங்கி வர வேண்டும். குறிப்பாக, புதிதாக திருமணமானவர்களும், குழந்தை இல்லாதவர்களும் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தால், புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. பிரசவம் எளிதாக அமையவும், வீடு கட்டும் பணிகள் சிறப்பாக முடியவும் இவரை வணங்குகின்றனர். செவ்வந்திநாதர் என்று பெயர் பெற்றிருந்த இவர், தாயுமானவராக மாறு வதற்கு காரணம் இருக்கிறது.

திருச்சியில் வசித்த தனதத்தன் என்பவரின் மனைவி ரத்தினாவதி, மலைக்கோட்டையில் இருந்த செவ்வந்திநாதரை வழிபட்டு வந்தாள். தனக்கு மகப்பேறு வேண்டுமென பிரார்த் தித்தவள், இறையருளால் கர்ப்பமடைந்தாள். பிரசவ காலம் நெருங்கியது. தனதத்தன் வெளியூர் சென்றுவிட்டார்.

பிரசவ வலி ஏற்படவே, தன் தாய்க்கு தகவல் சொல்லி அனுப்பினாள். காவிரியின் மறுகரையிலிருந்த அவள், மகள் வீட்டுக்கு வேகமாக வந்து கொண்டிருந்தாள். அப்போது, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பரிசல்காரர்கள், சுழல்மிக்க ஆற்றில் தங்களால் பரிசல் ஓட்ட முடியாது என சொல்லிவிட்டனர். அவள் தவித்துக் கொண்டிருந்தாள்.

தாயைக் காணாத மகளுக்கு பிரசவ வலி அதிகமாகவே, அவள் துடித்துக் கொண்டிருந்தாள். “செவ்வந்திநாதரே… நீயே துணை…’ என்று கதறினாள். அப்போது கதவு திறக்கும் சப்தம் கேட்டது. அந்தப் பெண்ணின் தாய் உள்ளே வந்தாள். அம்மா வந்ததால் அந்தப் பெண் மகிழ்ச்சியடைந்தாள். சுகப்பிரசவத்தில், அழகான குழந்தை பிறந்தது.

கடைத்தெருவுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவதாக மகளிடம் சொல்லி, கிளம்பினாள் அந்தத் தாய் . சற்றுநேரம் கழித்து பதைபதைப்புடன் திரும்பினாள். “மகளே! குழந்தை பிறந்து விட்டதா? நேற்று முழுவதும் தனியாக இருந்தாயே! யார் பிரசவம் பார்த்தார்கள்?’ எனக் கேட்டாள். ஒன்றும் புரியாத அந்த மகள், “அம்மா, நீ தானே என்னருகில் இருந்து பிரசவம் பார்த்தாய், உனக்கு என்னாயிற்று?’ என்றாள்.

“நேற்றிரவு காவிரியில் கடும் வெள்ளம்; காலை யில் தான் குறைந்தது. அவசரமாக, இப்போது தானே வருகிறேன்…’ என அவள் சொல்ல, அதிசயித்த அவள், செவ்வந்திநாதரே தனக்கு தயை செய்து, பிரசவம் பார்த்ததை உணர்ந்தாள்.

“எனக்கு தாயும் ஆகி, பிரசவம் பார்த்த தயாபரனே…’ என்று அவரைப் புகழ்ந்தாள். இதனால், செவ்வந்திநாதருக்கு “தாயுமான சுவாமி’ என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே நிலைத்து விட்டது. 82 மீட்டர் உயரமுள்ள மலையில், 417 படிகள் ஏறி இவரைத் தரிசிக்கலாம். இவருடன் மட்டுவார் குழலம்மை அருள் செய்கிறாள். இங்குள்ள உச்சிப்பிள்ளையார் மிகவும் பிரசித்தி பெற்றவர். தாயுமானவரின் அருள்பெற்ற ரத்தினாவதிக்கும் சிலை இருக்கிறது.

“மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்

செந்தண் புனலும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடை ஊரும் எம்தம் அடிகள், அடியார்க்கு அல்லல் இல்லையே…’ என்ற பாடலைத் தாயுமானவரை மனதில் எண்ணி, கர்ப்பகாலத்தில் பாடி வர, எளிதாக பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

%d bloggers like this: