Daily Archives: ஓகஸ்ட் 13th, 2009

திருவள்ளுவர்-சர்வக்ஞர்-ஒற்றுமையின் ஒற்றுமை

ஏழைகள் வாழும் பணக்கார நாடு இந்தியா என்றார் ஒரு கவிஞர். இந்தியா இயற்கை வளம் நிறைந்த நாடு மட்டுமல்ல, இலக்கிய வளமும் நிறைந்த நாடு. நம்மிடம் இருக்கும் இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்தத் தவறியதால்தான் இயற்கையில் வளம்மிக்கவராக, பணக்காரர்களாக இருந்தும் ஏழைகளாக வாழ்கிறோம். அதேபோல் வாழ்க்கையை வளப்படுத்தும் இலக்கிய வளத்தை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியதால் நெறியற்ற வாழ்க்கையை நோக்கி இன்றைய சமுதாயம் பயணிக்கிறது. இயற்கையாலும், இலக்கியத்தாலும் இந்தியா ஒன்றுபட வேண்டும்.

இத்தகைய மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க எங்கோ ஓர் ஆரம்ப எழுத்து உதித்தாக வேண்டும். அது இன்று உதிக்க ஆரம்பத்திருக்கிறது. அதற்கு வித்திட்டிருக்கும் இருபெரும் இலக்கியவாதிகள் அய்யன் திருவள்ளுவரும், அப்பன் சர்வக்ஞரும்.

இப்படி இரு மாநில ஒற்றுமையை ஏற்படுத்திய இந்த இருமாபெரும் இலக்கியவாதிகளிடமும் மாபெரும் ஒற்றுமை மண்டிக் கிடக்கிறது. அய்யன் திருவள்ளுவர் ஈரடியில் இந்த வாழ்வியலை அளந்தவர். இரண்டு கண்கள் எப்படி சரியான பாதையில் செல்ல வழிவகுக்கிறதோ அப்படி வள்ளுவரின் ஈரடிகள் வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டியாக உள்ளது என்றால் மிகையில்லை.

சர்வக்ஞர் மூன்றாவது கண்ணிலும் நம்பிக்கை உடையவராக இருந்ததால் – ஆம் சிவன் மீதும் ஆழமான பக்தி கொண்டதால் – மூன்று கண்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது என்று எண்ணியதால் ஓர் அடி ஓர் கண்ணாக மூவடிகளில் அவர் வாழ்க்கைக்கு வழிகாட்டினார் என்று எண்ணத் தோன்றுகிறது.

“”நெருப்புக் கிணற்றில் விழுந்ததுபோல் இந்த உலக வாழ்க்கைத் துன்பத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு மேலே வரவேண்டுமென்றால் – இறைவனின் பாதத்தைப் பற்றி மேலேறி வர வேண்டும்” என்கிறது சர்வக்ஞரின் ஓர் பாடல்… இப்பாடல்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

என்ற குறளின் கருத்தை ஒத்திருப்பதை நாம் அறியலாம்.

“”யார் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்க்கைச் சக்கரத்தை நன்கறிந்தவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு அவர்களைக் குருவாகக் கொண்டு வாழ வேண்டும்” என்கிறார் சர்வக்ஞர்.

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன்அறிந்து தேர்ந்து கொளல்

என்று பெரியாரைத் துணைக் கோடல் என்ற அதிகாரத்தில் நமது அய்யனின் குறள்கள் அனைத்தும் அதே கருத்தைத்தான் வலியுறுத்துகின்றன.

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்

உழன்றும் உழவே தலை’

இது அய்யன் திருவள்ளுவரின் வரிகள்.

“”உலகில் உள்ள அத்தனை திறமைகளிலும் தலைசிறந்தது உழவே. உழவே இந்த வாழ்க்கைச் சக்கரத்தைச் சுற்றுகிறது. அது இல்லை என்றால், இன்றைய இந்த உலகம் பாழ்படும்”

இது சர்வக்ஞரின் வரிகள்… எவ்வளவு ஒற்றுமை பார்த்தீர்களா… இந்த மாபெரும் கவிஞர்களின் மன ஒற்றுமைதான் மாநில ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கிறதோ?

அடுத்து வாய்மையைப் பற்றி சொல்லும்போது…

“”வாய்மை பேசுபவனின் முன்னால் இந்த உலகமே தலைவணங்குகிறது. ஒரு தாய் எப்படித் தன் மகனை அன்புடன் அழைத்து அருகில் வைத்துக் கொள்வாளோ அதேபோல இறைவன் அவர்களைத் தன்னருகில் வைத்துக் கொள்கிறார்”.

சர்வக்ஞரின் இந்த மூவடி

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்

அதாவது ஒருவன் உள்ளம் அறிய பொய் பேசாமல் வாழ்வானானால் உலகத்தார் எல்லோருடைய உள்ளங்களிலும் இடம்பெற்று போற்றப்படுவான் என்ற நம் ஐயன் ஈரடிக்கு ஒத்தாக உள்ளது என்பது வியப்பே.

எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டும் இக்கவிகள் எப்படிப் பேச வேண்டும் என்று இந்த உலகிற்குச் சொன்னதிலும் கருத்தொற்றுமை உள்ளது வியப்பை அளிக்கிறது.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்டவடு

நம் அய்யனின் இந்த வைர அடிகளுக்கும் “”அன்பான வார்த்தைகள் நிலவு பொழியும் ஒளியைப் போன்றது; அதேசமயம் கடுமையான சொற்கள் காதில் ஆணியை அடிப்பது போன்று கொடுமையானது”.

என்ற சர்வக்ஞரின் அடிகளுக்கும் எவ்வளவு ஒற்றுமை பார்த்தீர்களா?

எப்படி வாழ வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று கூறிய கவிகள் எப்படி உண்ண வேண்டும் என்று கூறுவதிலும் ஒற்றுமை இருக்கிறது.

மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின் தான் முன்னர் உண்ட உணவானது நன்கு செரித்துவிட்ட தன்மையைத் தெளிவாக அறிந்து கொண்ட பிறகு ஒருவன் தக்க அளவு மட்டுமே உட்கொள்வானேயானால் அவனுடைய உடம்புக்கு மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை.

இன்னொரு குறள் கூறுகிறது.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து.

ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்துள்ளதை அறிந்து கொண்டு உடம்பிற்கு மாறுபாட்டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு மிக நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.

உடம்பைப் பேணுவதில் சர்வக்ஞர் என்ன சொல்கிறார் பார்ப்போம்.

பசிக்காத போது உண்ணாதே… ஆம் செரித்துப் பசிக்காமல் உண்ணாதே – அதிக சூடானது அதிக குளிரானது எடுத்துக் கொள்ளாதே – மருத்துவனின் தயவில் வாழாதே… சர்வக்ஞர் நாடோடியாகச் சுற்றித்திரிந்தாலும் – உடல் நலம் இல்லையென்றால் வாழ்க்கை நலம் பயக்காது என்று இச்சமூகத்தின் பால் அக்கறை கொண்ட கவிஞராகத் திகழ்கிறார்.

இப்படி இன்னும் எவ்வளவோ கருத்துகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களின் பாடலில் கருத்து ஒற்றுமை மட்டுமல்ல; சில சொற்களை இவர்கள் கையாண்ட விதமும் ஒற்றுமையாக இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு

அன்பினைப் பற்றி நம் வள்ளுவர் கூறும்போது அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.

அன்போடு பொருந்தி இயங்கும் உடம்பு தான் உயர்ந்தது. அப்படி இல்லாதது எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்ட வெற்றுடம்பாகும் என்ற உயரிய கருத்தை எடுத்துரைக்கிறார்.

சர்வக்ஞர் “”எலும்பின் மேல் தோல் போர்த்திய இந்த உடம்பிற்கு – ஏன் சாதியின் பெயரைச் சொல்லி வேறுபடுத்துகிறீர் என்கிறார்.”

ஆக உயர் பண்பு இருந்தால்தான் இது உடம்பு; அன்பு போன்ற உயர்பண்பும் இல்லாமல் வேற்றுமை பாராட்டக்கூடிய மனப்பாங்கும் இருந்தால் இது வெறும் எலும்பு மேல் போர்த்திட்ட தோல் என இருபெரும் கவிஞர்களுமே உணர்த்துகிறார்கள்.

வள்ளுவர் வாழ்ந்ததோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால். சர்வக்ஞர் காலமும் மிகச் சரியாகக் கணக்கிடப்படவில்லை. ஆனால் 17-ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்திலிருந்து அவரைப் பற்றிய கதைகளும் செய்திகளும் உலா வருகின்றன என்பது வரலாறு. வள்ளுவர் முறையான இல்வாழ்க்கை வாழ்ந்தவர். சர்வக்ஞர் ஒரு துறவியைப்போல நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர் என அறிகிறோம். வள்ளுவரை நீண்டு வளர்ந்த தாடியுடன் தூக்கி முடிந்த கொண்டையுடன் பார்க்கிறோம். சர்வக்ஞர் முழுதும் மழித்த தலையுடனே காட்சியளிக்கிறார்.

வள்ளுவரின் கருத்துகளில் சாந்தம் இருந்திருக்கிறது. ஆனால் அதே கருத்துகளை கூறும்போது சர்வக்ஞர் சற்று கனல் பறக்கவே கூறியிருக்கிறார். சர்வக்ஞர் என்று எல்லா பாடல்களின் முடிவிலும் தன் பெயரைப் பதித்திருக்கிறார்.

இப்படி சின்னச் சின்ன வேற்றுமைகளைத் தவிர இந்த இரு கவிஞருக்கும் ஒற்றுமையே மேலோங்கியிருக்கிறது. அதனால் பெங்களூரில் வள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையும் மாநிலங்களின் ஒற்றுமை முயற்சியைப் பறைசாற்றுகிறது. இன்று பக்கத்து மாநிலங்கள் சில காரணங்களுக்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் உறவுப் பாலமாகத் திகழ்கிறார்கள் இவர்கள்.

நம் மாநிலத்தை வணங்குவோம்; மற்றவரின் நியாயமான விருப்பத்திற்கு இணங்குவோம் என்ற உயரிய தத்துவத்தோடு, தேசிய எண்ணம், ஒரே நாடு என்ற எண்ணத்தோடு வாழ்வோம். அதுவே இந்த மகா கவிஞர்களுக்கு நாம் செலுத்தும் வணக்கம் ஆகும்.

சிக்கியது யாகூ

இணையத்தில் நவீன தேடல் தொழில்நுட்பத்தின் முன்னோடி யாகூ. இன்று அதே தொழில்நுட்பத்துக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் கையேந்தியிருக்கிறது. இதற்காக கடந்த 29-ம் தேதி இரு நிறுவனங்களும் ஒப்பந்தமும் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையில் தோல்விக்கான யாகூவின் ஒப்புதல்தான் இந்த ஒப்பந்தம். யாகூவிடம் தனித்து வெற்றி பெறுவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என்பதும் இதன்மூலம் வெளிப்படையாகியிருக்கிறது.

இரு நிறுவனங்களும் ஏதோ மனமுவந்து இந்தக் கூட்டுக்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன என நினைத்தால் அது தவறு. இந்த நிறுவனங்களுக்கு கைகோர்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதுதான் உண்மை.

கடந்த சில ஆண்டுகளாகவே கூகுளின் வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாத மைக்ரோசாஃப்ட், யாகூவைக் கைப்பற்றுவதில் குறியாக இருந்தது. கடந்த ஆண்டில் 44 பில்லியன் டாலர்களுக்கு ஒட்டுமொத்தமாக யாகூவை விலை பேசியது. இந்த பேரம் படியாமல் போனதால், இப்போது புதிய ஒப்பந்தம் போட்டு யாகூவை வளைத்திருக்கிறது மைக்ரோசாஃப்ட்.

இந்த ஒப்பந்தப்படி, யாகூ இணையதளத்தில் இயங்கிவரும் தேடும் வசதி, மைக்ரோசாஃப்டின் “பிங்’ தேடுபொறியின் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும். இதற்குப் பதிலாக மைக்ரோசாஃப்டின் ஆன்லைன் விளம்பரங்களைச் சந்தைப்படுத்தும் பணியை யாகூ மேற்கொள்ளும். இதற்காக 400 பேர் கொண்ட யாகூ ஊழியர் குழுவை மைக்ரோசாஃப்ட் சுவீகரித்துக் கொள்ள இருக்கிறது. யாகூ தேடுபொறி, பிங் உதவியுடன் செயல்பட்டாலும் தேடல் வருவாயில் 88 சதவீதம் யாகூவுக்கே கிடைக்கும் என்கிறது இந்த ஒப்பந்தம்.

10 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்க இந்த ஒப்பந்தத்தின் முதல் நோக்கம், இணையத் தேடல் சந்தையில் 65 சதவீதத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கூகுளை வீழ்த்துவதுதான் என்பதில் சந்தேகமேயில்லை.

இரண்டாவது நோக்கம், வீழ்ந்து கிடக்கும் யாகூவைச் சுதாரிக்கச் செய்வது. இதற்காக யாகூவுக்கு 4 பில்லியன் டாலர்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கொடுத்து உதவப் போவதாகவும் பேச்சு அடிபட்டது. இதனால், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குச் சற்று முன்வரை யாகூவின் பங்குகளின் மதிப்பு சரசரவென உயர்ந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி, நிதியுதவி எதுவும் தரப்படாததால், யாகூ பங்குகள் சரியத் தொடங்கின. அதேநாளில் மைக்ரோசாஃப்ட் பங்குகளின் விலை சற்று உயர்ந்தது. இதிலிருந்தே ஒப்பந்தம் யாருக்குச் சாதகமானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

யாகூ முதலீட்டாளர்கள் இப்போது தலையில் கையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக யாகூவை விற்றிருந்தால்கூட, ஒரு பங்குக்கு 33 டாலர்கள் கிடைத்திருக்கும். ஆனால், இன்று அந்த விலையில் பாதிக்கும் கீழே பங்குகளின் மதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது.

இருந்தாலும், இந்தப் புதிய கூட்டு மூலம் தேடுபொறிச் சந்தையிலும் பங்குகளின் விலையிலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை (அறிவிக்கப்படவில்லை) ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (இதுவும் அறிவிக்கப்படவில்லை) எட்ட முடியாவிட்டால் உறவை முறித்துக் கொள்ளலாம் என்னும் விதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது யாகூவுக்கு மிகச் சாதகமானது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், சிறிய அளவில் நிதியுதவியை அளிக்க மைக்ரோசாஃப்ட் முன்வந்திருக்கிறது. இப்போதைய நிதிநெருக்கடியைச் சமாளிக்க இந்த நிதி யாகூவுக்கு உதவும்.

இன்னொரு பக்கம், இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னால் யாகூவை வீழ்த்தும் சதி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அதாவது, யாகூ இணையதளத்தில் பிங் தொழில்நுட்பத்துடன் கூடிய தேடல் வசதி அமைக்கப்பட்டாலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது இணையதளங்களில் பிங் தேடும் வசதியைத் தொடர்ந்து இயக்கும். இதுபோக, தனியாக பிங் இணையதளமும் செயல்படும். இவற்றுக்கு எந்தக் கட்டுப்பாடும் ஒப்பந்தத்தில் இல்லை. இதனால், தேடல் சந்தையில் மைக்ரோசாஃப்டின் பங்கு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும்.

அதேநேரம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமது தேடல் தொழில்நுட்பத்தை விட பிங் தொழில்நுட்பம் சிறந்தது என யாகூ மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறது. இதனால் பிங் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அந்தப் பரபரப்பு, யாகூ இணையதளத்தில் தேடுவதைவிட பிங் இணையதளத்துக்கே சென்று தேடலாம் என்கிற மனோபாவத்தை இணையத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதனால் பிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆக, பிங் தேடுபொறியைப் புதிதாகப் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர், யாகூவைக் கைவிட்டுவிட்டு வந்தவர்களாக இருப்பார்களேயொழிய, கூகுளிலிருந்து வந்தவர்களாக இருக்கப்போவதில்லை. இதனால், கூகுளை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறாமல் போவதுடன், தனது தேடல் சந்தையையும் யாகூ இழக்க வேண்டியிருக்கும்.

எப்படியோ மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆக்டோபஸ் கரங்களில் யாகூ சிக்கிவிட்டது. தூக்கி விடுவதும் போட்டு உடைப்பதும் கால மாற்றங்களைப் பொறுத்தது.

கலர் கலராய் உணவா, மருந்தா

கலர் கலராய் சத்தான உணவு வகைகளை சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றாவிட்டால், நாற்பதுக்கு மேல், கலர் கலராய் மருந்துகளை விழுங்க வேண்டியிருக்கும். இது ஒவ்வொரு டாக்டரும் சொல்லும் ஆலோசனை தான்.

போக்குவரத்து சிக்னலில் உள்ளது போல, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிறத்தில் உள்ள காய்கறி, பழங்களை சாப்பிட்டு வந்தால், எந்த வயதிலும் இளமை; ஆரோக்கியம் தான். கீரை முதல் ஆரஞ்சு பழம் வரை கலரை கண்டுகொள்ளுங்கள். உணவா, மருந்தா…நீங்களே முடிவு செய்யுங்க.

உடம்பை சற்று அசையுங்களேன்

“ஏ.சி.’ அறையில் தூக்கம் முடிந்து படுக்கையை விட்டு எழுந்தவுடன் அசையாமல் போய், பத்திரிகை படித்தபடி காபி; அதன் பின் குளியல்; பைக், காரில் ஏறி ஆபீஸ்; ஆபீசில் கம்ப்யூட்டரே கதி; மாலையில் வீடு திரும்பினால் “டிவி” பெட்டி முன் நகராமல் உட்கார்வது; மீண்டும் “ஏ.சி.’ அறை வாசம். இப்படி இருந்தால் எப்படி சர்க்கரை, ரத்த அழுத்தம் வராமல் இருக்கும். உடம்பை சற்றாவது அசைத்தால்தானே கலோரி குறையும். கொழுப்பு நீங்கும். அதற்கு யோகா, உடற்பயிற்சி தேவை. இதுவரை இல்லேன்னாலும், இப்பவாவது வாக்கிங் போங்க.

எதற்கெடுத்தாலும் மருந்து கடை

சிலருக்கு வீட்டைவிட்டு வெளியே கிளம்பினால், மருந்துக்கடைக்கு போகாமல் இருக்க முடியாது. ஏதோ, மளிகை வாங்குவது போல, மாத்திரை, மருந்துகளை வாங்கி குவிப்பர். தினமும் ஏதாவது மாத்திரையை போட்டுக்கொள்ளாவிட்டால், ஏதோ இழந்தது போல இருக்குமாம். இந்தப் பழக்கம் மிக கெடுதல்; முடிந்தவரை தலைவலி , வயிற்று வலிக்கு எல்லாம் மருந்துக்கடைக்கு போகாதீர்கள். அதிக வலி இருந்தால் டாக்டரிடம்தான் போக வேண்டும்.

இன்சூரன்ஸ் எடுங்க; நேரத்தில் உதவும்

எதுக்குமே இன்சூரன்ஸ் எடுக்காமல் காலத்தை ஓட்டும் பழக்கம் இந்தியாவில் தான் அதிகமாக இருக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்சூரன்ஸ் எடுக்காமல் நழுவ முடியாது. குறிப்பாக சுகாதாரத்துக்கு கண்டிப்பாக இன்சூரன்ஸ் பாதுகாப்பு முக்கியம். இப்போது பல மருத்துவமனைகளில் “கேஷ்லஸ்’ வசதி வந்து விட்டது; அதாவது, பணம் கட்டாமல், இன்சூரன்ஸ் பாலிசி மூலம் ஈடு செய்யும் வசதி. இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதில் உள்ள விழிப்புணர்வு நம்மில் பலரிடம் குறைவுதான்.

வாட்டர் தெரபி தெரியுமா

வெயிட் குறையுதா, மன அழுத்தமா, சோர்வு, தலைவலி, உடல் வலி போன்றவை எல்லாம் பறந்து போகணுமா? அப்படியானால், நீங்கள் கண்டிப்பாக ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இது மட்டுமல்ல, உடல் தோல் பளபளக்க கூட இந்த தெரபி கைகொடுக்கும். அது என்ன தெரியுமா? தினமும் காலை எழுந்ததில் இருந்து குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்புறம் பாருங் கள் எல்லாம் பறந்து போச்சு.

இன்டர்நெட் வியாதி வந்தாச்சு

மொபைல் போனை காதில் மணிக்கணக்கில் வைத்து பேசினால் காது “டமார்’ ஆகி விடும்; மூளையில் பாதிப்பு வரும் என்று டாக்டர்கள் கத்திக்கத்தி ஓய்ந்து விட்டனர். இப்போது, இன்டர்நெட் வியாதியும் வந்து விட்டது.

ஆம், இன்டர்நெட்டில் மணிக்கணக்கில் உட்கார்ந்து கொள்வதால் ஏற்படும், இன்டர்நெட் நோய் இது. பல வகை கோளாறுகளுக்கு காரணமாக இது அமைகிறதாம்.

சீனாவில், 20 கோடி பேர் இளைஞர்கள்; இவர்களில் பெரும்பாலோர் இன்டர்நெட்டுக்கு அடிமையானவர்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க பீஜிங் உட்பட பல நகரங்களில் தெருவுக்கு தெரு நூற்றுக்கணக்கான கிளினிக்குகள் முளைத்து விட்டன. இவற்றின் பெயர் “இன்டர்நெட் தெரபி’ கிளினிக். ஹும், இந்தியாவிலும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கத்தினால் எந்த காது நல்லா கேட்கும்?

இரு காதுகளில் எந்த காது நன்றாக கேட்கும் என்றால் என்ன சொல்வீர்கள்? இரண்டு காதுகளும் கேட்கும் திறன் பெற்றவை தான். ஆனால், எந்த கூட்டமாக இருந்தாலும், இடது காதை விட, வலது காது தான் உடனே தகவல்களை சுலபமாக கிரகித்துக்கொள்ளுமாம்.

இத்தாலி நாட்டு நரம்பியல் நிபுணர்கள் இது தொடர்பாக 240 பேரை வைத்து ஆய்வு நடத்தியது. இதில், பாதி பேரை நிறுத்தி வைத்து, “சிடி’யில் பாட்டை உரக்கக் கேட்கும் வகையில் ஓட விட்டு, அதற்கு நடுவே, சிலரை விட்டு கத்த வைத்தனர் நிபுணர்கள். இந்த கத்தலை கேட்டவர்கள், தங்கள் வலது காதில் கேட்டதால், எளிதாக புரிந்து, கத்திய தகவலை திருப்பிச்சொன்னார்கள். அதே சமயம், இன்னும் பாதி பேரை இடது காதால் கேட்க வைத்தனர். அவர்களுக்கு போதுமான தகவல் சரிவர தெரியவில்லை.

நிபுணர்கள் கூறுகையில், “வலது காதில் போகும் தகவல்கள், இடது காதின் வழி தான் மூளைக்கு சென்று கட்டளை பெறப்படுகிறது. இடது காது, மிகவும் நீண்ட, சிக்கலான வார்த்தைகள் வழி தகவல்களை கையாள்வதில் சிறப்பானது’ என்று தெரிவித்தனர். காதுல கூடவா இந்த வித்தியாசம்…?

தூக்கம் வரலே…ன்னு புலம்பினால் மட்டும் போதுமா?

பணத்துக்கும் குறைவிருக்காது; சந் தோஷத்துக்கும் குறைவிருக்காது; ஆனால், ராத்திரி படுத்தால் மட்டும் தூக்கம் வராது. கடன் தொல்லையால், கிரெடிட் கார்டு பாக்கியை கட்டாததால்…போன்ற காரணங்களால் தூக்கம் வராமல் தவிப்பவர் பலர் உள்ளனர்; ஆனால், எந்த காரணமும் இல்லாமல், தூக்கம் வராமல் தவிப்பவர்கள், புலம்பினால் மட்டும் போதாது.

இரவில் தூக்கம் வரலையா…? அப்படீன்னா, ஒரு கப் பால் சாப்பிடு; புத்தகம் படி; “டிவி’ பாரு… இப்படி யோசனை சொல்பவர்கள் இருக்கவே செய்கின்றனர். நம்மில் சிலர், டாக்டரை தவிர, எல்லாரிடமும் , இன்னும் சொல்லப்போனால், பார்மசியில் வேலை செய்யும் பணியாளிடம் கூட கேட்டு மருந்து சாப்பிடுவர்.

டாக்டரிடம் போங்க: டாக்டரிடம் மட்டும் போய் கேட்க மாட்டார்கள். உண்மையை அறிந்து சரியான தீர்வு காண வேண்டுமானால், டாக்டரிடம் போய் தானே தெரிந்து கொள்ள முடியும். நாமே காரணமாக உள்ள நிலையில் தூக்கம் வராமல் தவிக்கலாம். மன அழுத்தம், கடன் தொல்லை, நண்பர்கள் பிரச்னை, ஆபீஸ் பிரச்னை என்பதெல்லாம் அந்த பிரச்னை தீர்ந்த அடுத்த நிமிடமே சூப்பர் தூக்கம் வரும்.

அதை பலர் செய்யாமல், தூக்கம் வராததற்கு போய் மருந்து சாப்பிடுவர். கண்ணை மூடினாலும் கனவில் கடன்காரர்கள் தானே வருவர். நம் உடல் நலனுக்கு வைட்டமின்கள், கனிம சத்துக்கள் தான் மிக மிக முக்கியம். உணவில் கிடைக்காத நிலையில், மருந்து , மாத்திரை மூலம் ஈடு செய்வது டாக்டர்கள் வழக்கம். சத்தான உணவில் குறைவில்லாமல் இருந்தால், உடல் நலனில் குறைவே இருக்காது என்பது தான் டாக்டர்களின் அடிப்படை கருத்து.

சத்தான உணவு: தூக்கம் சரிவர வராததற்கு இரு முக்கிய சத்துக்கள் குறைபாடு தான் காரணம். ஒன்று, கால்சியம்; இன்னொன்று மக்னீசியம். குறிப்பாக, பெண்களுக்கு தூக்கம் வராததற்கு இவற்றின் குறைபாடு தான் காரணம். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது கால்சியம் தான்.

கால்சியம், எலும்புகளின் திடத்தன் மைக்கும் மிக முக்கியமானது. மூட்டு பாதிப்பு வராமல் இருக்க பெண்கள், கால்சியம் சார்ந்த பால் மற்றும் பால் பொருட்கள் , சோயா, வெங்காயம் போன்ற காய்கறி வகைகள், பாதம் பருப்பு உட்பட சில வகை தானியங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது.

இரும்பும் முக்கியம்: இதுபோலத்தான் மக்னீசியம், தூக்கத்துக்கு உற்ற நண்பன். கால்சியம், நரம்புகளை அமைதிப்படுத்துகிறது என்றால், மக்னீசியம், மூளையை அமைதிப்படுத்துகிறது. கரும்பச்சை நிறத்திலான கீரை வகைகள், காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 500 மில்லி கிராம் மக்னீசியம் சேர்த்துக்கொண்டாலே போதும். உணவில் பயன்படுத்தப்படும் சிலவகை தானியங்கள், கொட்டை வகைகள், பால் பொருட்களில் மக்னீசியம் உள்ளது.

இது மட்டுமின்றி, இரும்பு, செப்பு போன்ற கனிம சத்துக்களும் தூக்கத்துக்கு உதவுகின்றன. முட்டை, மீன் உணவு, சில வகை கொட்டை வகைகள் போன்றவற்றில் இந்த சத்துக்கள் உள்ளன. செம்பில், நோர்பின்பைன், இரும்பில் டோபாமைன் ஆகிய கனிம சத்துக்கள் உள்ளன. தூக்கத்துக்கு இந்த இரண்டும் தான் கைகொடுக்கின்றன. உடலில் இந்த சத்துக்கள் இல்லாததால், தூக்கம் கெடுகிறது.

வைட்டமின் பி: தூக்கம் வர வேண்டுமானால், வைட்டமின் பி சத்தும் தேவை. உடலில் ட்ரைப்டோபன் உட்பட சில வகை அமினோ ஆசிட் சத்துக்கள், தூக்கத்தை ஆழ்நிலைக்கு கொண்டு செல்கின்றன. மது, சிகரெட் பழக்கம் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் இந்த அமிலச்சத்துக்கள் குறைகின்றன. இதை ஈடு செய்ய, வைட்டமின் பி சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். சைவ உணவு சாப்பிடுவோருக்கு தூக்கம் வராமல் இருப்பதற்கு அவர்களின் சில உணவு முறைகள் தான் காரணம். இதனால் பலரும் வைட்டமின் பி மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்கின்றனர்.

இதுபோல, வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவையும் முக்கியம். நரம்பு மண்டலத்தையும், மூளையையும் சமப்படுத்தி உடல் செயல்பாடுகளை முடக்கி, தூக்கத்துக்கு வழி வகுக்கின்றன. தூக்கம் வராமல் தவிப்பதற்கு ஆசிட், மக்னீசியம் வைட்டமின், கனிம சத்துக்கள் குறைபாடு போல, சுரப்பிகளின் செயல்பாடும் முக்கியம். குறிப்பாக மேலடோனின் என்ற சுரப்பி, இரவில் அதிகம் சுரந்து தூக்கத்துக்கு அழைத்துச்செல்கிறது.

படுக்கப்போகுமுன்: அவசரம் அவசரமாக எழுவது, சாப்பிடுவது, அதே வேகத்தில் ஆபீஸ் போய் திரும்புவது, இரவில் திரும்பிய பின் சாப்பிடுவது, அதே வேகத்தில் படுப்பது என்ற பழக்கம் சரியானதல்ல. இப்படி செய்தால், நாற்பதில் வேலையை காட்டி விடும். அப்போது தான் டாக்டரிடம் அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும்; சாப்பிடும் உணவு குறைந்து போய், மருந்து , மாத்திரைகளை பட்டியல் போட்டு “டிக்’ அடித்து சாப்பிட வேண்டியிருக்கும். இது தேவையா?

மழைக் காலம்… உஷார்!

குழந்தைகளுக்கு நீரைக் கண்டாலே குஷி தான். மழையில் நனைந்து, சேற்றை அளைந்து, குதித்து விளையாடுவது, பச்சைத் தண்ணீரைக் குடிப்பது என, நம் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, ஆர்ப்பாட்டம் செய்யும் குட்டீஸ் ஏராளம். மழைக் காலத்தில் அவர்களைப் பாதுகாக்க சில யோசனைகள் இதோ:

நீரால் பரவும் நோய்களை தடுப்பது எவ்வாறு?

* தண்ணீரை குறைந் தது 20 நிமிடங்களாவது காய்ச்சிய பின் குடிக்க வேண்டும்; அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க வேண்டும்.

* உணவுப் பொருட்களை கையாளுவதற்கு முன்னும், சாப்பிடுவதற்கு முன்னரும், கழிவறை சென்று வந்த பின்னரும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

* வெளியிடங்களில், பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாலட்கள் மற்றும் வெட்டி வைத்திருக்கும் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

* வீட்டில் சுகாதாரத்தை பேண வேண்டும்.

* வீட்டிலேயும், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதற்கு முன், அவைகள் முறையாக கழுவப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வயிற்றுப் போக்கு அறிகுறியில் இருந்து விடுபட:

* வயிற்று போக்கு ஏற்பட்டால், உடலின் நீர் வற்றி விடாமல் இருக்க இளநீர் அல்லது எலுமிச்சை சாறுடன், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து அருந்தலாம்.

* குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கினால் உண்டாகும் நீரிழப்பை ஈடுகட்ட, தண்ணீர் கொடுக்க வேண்டும். உதடு மற்றும் நாக்கு வறண்டு போகாமல் இருக்க, பஞ்சில் நீரை தொட்டு, தேய்க்கலாம்.

* வயிற்றுப்போக்கு நிற்க தொடங்கியதும், படிப்படியாக, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆப்பிள், சூப், பருப்பு சாதம் போன்ற உணவுகளை சாப்பிட தொடங்கலாம்.

* வயிற்றுப் போக்கில் இருந்து முழுமையாக விடுபடும் வரை, பால், காபி மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* கண்கள் குழிந்து காணப்படுதல், வெளிறிய தோல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், குளிர்வது போன்ற உணர்வு மற்றும் எவ்வித உணவோ, தண்ணீரோ சாப்பிடாமல் இருந்தால், உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும்.

கொசு மூலம் பரவும் நோய்களை தடுப்பது எப்படி?

* கொசுக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், படுக்கையை சுற்றிலும், கொசுவலை கட்டுவதோடு, ஜன்னல்களிலும் வலை பொருத்தலாம்.

* கொசு உற்பத்திக்கான காரணிகளை தவிர்க்க வேண்டும். அதாவது, ஏர் கூலர்களில் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

* தோட்டம், குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* கொசுக்கள் அதிகளவில் காணப் பட்டால், வாசனையற்ற கொசுவர்த்திகள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தலாம். சிலருக்கு இந்த வாசனைகள், “அலர்ஜி’யை ஏற்படுத்தி விடும்.

* “டெங்கு’ காய்ச்சலை பரப்பும் கொசுக்கள், பகல் நேரத்திலும், மலேரியாவை பரப்பும் கொசுக்கள் மாலை நேரத்திலும் கடிக்கும். எனவே, அனைத்து வேளைகளிலும், கொசு கடிப்பதில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்.

பூஞ்சை தொற்றுக்களை தடுப்பது எப்படி?

* உடலை எப்போதும், சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தினம் இரண்டு வேளை குளிப்பது நல்லது.

* பூஞ்சை தொற்று ஏற்படாமல் தடுக்கும் சோப்புகளை பயன்படுத்தலாம்.

* பூஞ்சை தொற்றை தடுக்கும் பவுடர்களை, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை, தொடை, மார்பின் கீழ்பகுதி மற்றும் கால் ஆகிய பகுதிகளில் போடலாம்.

யாஹுவுடன் கை குலுக்கியது மைக்ரோசாப்ட்

பல மாதங்களாக நீடித்து வந்த இழுபறி நிலையை மைக்ரோசாப்ட் மற்றும் யாஹூ நிறுவனங்கள் ஒரு பத்தாண்டு ஒப்பந்தத்தினைப் போட்டு முடிவிற்குக் கொண்டு வந்துள்ளன. தேடல் இஞ்சின் தொழில் நுட்பத்திலும் அதனைச் சார்ந்த விளம்பர வர்த்தகத்திலும் கூகுள் கொண்டிருக்கும் முதல் இடத்தை அசைத்துப் பார்ப்பதற்காகவே இந்த ஒப்பந்தம் இருக்குமோ என்ற எண்ணம் இணைய உலகில் அனைவருக்கும் எழுந்துள்ளது.

தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தப்படி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சினைத் தன் தளத்தில் யாஹூ பயன்படுத்திக் கொள்ளும். அத்துடன் விளம்பர இட விற்பனையை உலக அளவில் மேற்கொள்ளும் உரிமையை யாஹூ மட்டுமே பெறுகிறது.

யாஹூ நிறுவனம், அதன் பயனாளர்கள் மற்றும் இணைய வர்த்தகச் சந்தை ஆகிய அனைத்திற்கும் பல பயன்களை இந்த ஒப்பந்தம் தரும் என்று யாஹூ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பால் ஸ்டீமர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் இரு நிறுவனங்களும் வெற்றி அடையும் ஒரு இனிய ஒப்பந்தம் இது என்று குறிப்பிட்டார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் யாஹூ நிறுவனத்தின் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தினைப் பத்து ஆண்டுகளுக்குப் பயன்படுத்த தனி உரிமையினைப் பெறுகிறது. இதனைத் தன் தளங்களில் இயங்கி வரும் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்துடன் ஒருங்கிணைத்து பயன்படுத்தும். 18 மாதங்களுக்கு முன்புதான் யாஹூவை எடுத்துக் கொள்ள மைக்ரோசாப்ட் தன் முதல் அஸ்திரத்தை வீசியது. பிப்ரவரி 1, 2008 அன்று 4,460 கோடி டாலருக்கு விலை பேசியது. இது யாஹூவைப் பெரிய அளவில் உலுக்கியது. அதன் தலைவர் இடத்தில் புதிய ஒருவர் பொறுப்பேற்றார். மூன்று புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டனர்.

இருப்பினும் திரை மறைவில் இந்த இரு நிறுவனங்களும் தொடர்ந்து உறவாடிக் கொண்டு தான் இருந்தன என்று பலரும் பேசிக் கொண்டிருந்தனர். எல்லாம் எதற்காக? இணையத் தொழில் நுட்பத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள கூகுள் நிறுவனத்தை அதன் இடத்திலிருந்து இறக்கத்தான் இந்த ஏற்பாடுகள். தற்போது வந்த ஒப்பந்த அறிவிப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை தனி ஒரு சர்ச் இஞ்சின் நிறுவனமாக இயங்கி வந்த யாஹூ அந்த அடையாளத்தினை இந்த ஒப்பந்தம் மூலம் முறித்துக் கொண்டுவிட்டது.

மைக்ரோசாப்ட் முதலில் அறிவித்த பங்கு முதலீட்டினை ஜெர்ரி யாங் காட்டமாக மறுத்துத் தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதி தீவிர முயற்சிகள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து அடுத்து பங்குகளைக் கொண்டிருந்த கார்ல் தன் பக்கத்திற்கு மூன்று இயக்குநர் இடங்களைப் பிடித்தார். தாக்குப் பிடிக்க முடியாத ஜெர்ரி யாங் தலைவர் பதவிலியிருந்து இறங்க கேரல் பார்ட்ஸ் யாஹூவின் தலைமை நிர்வாக அதிகாரியானார்.

ஒரு பெண்ணுக்குரிய நிதானம் மற்றும் வேகத்துடன் சிந்திக்கத் தொடங்கி கேரல் பல நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டே இருந்தது. இதற்கு வலுவான காரணமும் இருந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் தேவையான பணமும் இருந்தது; தேவைகளும் இருந்தன. இந்த பிரிவில் உயரச் செல்ல ஆசையும் இருந்தது. யாஹூ ஏற்கனவே உயரத்தில் இருந்ததால் அதனைப் பிடிக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டது. அதே நேரத்தில் யாஹூ தன் செலவுகளைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது. வெளியிலிருந்து சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தினைப் பெற்றால் ஆண்டுக்கு 50 கோடி டாலர் மிச்சம் பிடிக்க முடியும் என்று பார்ட்ஸ் கருதினார். இன்றைய ஒப்பந்தம் குறித்துப் பேசுகையில் அனைவரும் இந்த பணம் மிச்சமாவதனையே குறிப்பிட்டனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தின் திறனும் தன்மையும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே இது யாஹூ நிறுவனத்திற்கு பெரிய உறுதுணையாக இருக்கும். இப்போதைய ஒப்பந்தம் யாஹூவின் பணிக் கலாச்சாரத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த 18 மாதங்களாகத் தன் சர்ச் இஞ்சின் தொழில் நுட்பத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி முன்னேற்றப் பாதையினைப் பார்க்க உழைத்துக் கொண்டிருந்த யாஹூ திடீரென இன்னொரு நிறுவனம் அமைத்த தொழில் நுட்பத்தினைத் தழுவிக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் இரண்டு நிறுவனங்களுக்குமே ஒரு புதிய பாதையைக் காட்டியுள்ளன. ஒவ்வொரு மாதமும் தன் தளத்தில் வந்து தேடும் 30 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சேவை அளித்துத் தக்க வைக்க வேண்டிய நிலையில் யாஹூ உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விளம்பரங்களையும் விற் பனை செய்திடும் உரிமை யாஹூவிற்குப் பெரிய அளவில் கை கொடுக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஸ்டம் குறித்த தகவல்களை அறிய

உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இயங்கும் அனைத்து சாதனங்களின் திறன் குறித்து அறிய உங்களுக்கு ஆவலாக உள்ளதா! அதற்கான புரோகிராம் டவுண்லோட் தான் SIW என்பதாகும். இது System Information for Windows என்பதைக் குறிக்கிறது. சிஸ்டம் சாப்ட்வேர், நெட்வொர்க் மற்றும் பிற ஹார்ட் வேர் சாதனங்களின் திறன் குறித்து தெளிவாக எடுத்துரைக்கிறது. சிபியு கிளாக் செயல் வேகம், ராம் மெமரியின் அலைவேகம், பயாஸ், மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு, பேட்ச் பைல் இணைப்பு,லைசன்ஸ் குறித்த தகவல் என அனைத்து தகவல்களும் தரப்படுகின்றன. இவற்றுடன் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் குறித்த தகவல்களும் கிடைக்கின்றன.

இந்த புரோகிராமில் சென்சார் ஒன்று தரப்படுகிறது. இது ஒவ்வொரு சாதனப் பகுதியின் வெப்ப தன்மை குறித்து அறிவிக்கிறது. பாஸ்வேர்ட் மறந்து போனால் எடுத்துத் தரும் வசதியும் இதில் உண்டு. இது செயல்பட குறைந்த அளவில் மெமரியை எடுத்துக் கொள்கிறது. சில நொடிகளில் அனைத்து தகவல்களையும் பெற்றுத் தருகிறது.

இந்த அடிப்படை புரோகிராமினை இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். சில சிறப்பு வசதிகளுடன் கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்புகளும் உண்டு. இலவச புரோகிராமினைப் பெற http://www.techspot.com/downloads/155siwsysteminfo.html என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். விண்டோஸ் சிஸ்டத்தில் பதிந்து இயக்கப் படக் கூடிய புரோகிராம் ஒன்றும், தனியாகவே இயக்கக் கூடிய புரோகிராம் ஒன்றும் கிடைக்கிறது. எனவே அதனை ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து இயக்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி/விஸ்டா டிப்ஸ்…. டிப்ஸ்….

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பல சின்னஞ்சிறு வசதிகளை நாம் பயன்படுத்துவது இல்லை. அவற்றைக் கையாளும் விதம் குறித்து இங்கு பல குறிப்புகளும் டிப்ஸ்களும் தரப்படுகின்றன. விஸ்டா மற்றும் எக்ஸ்பிக்கான குறிப்புகள் இணைந்து இங்கே காட்டப்படுகின்றன. ஏதாவது ஒரு சிஸ்டத்திற்கு மட்டும் எனில் அது அடைப்புக்குறிக்குள் சுட்டிக் காட்டப்படுகிறது.

1. குயிக் லாஞ்ச் (எக்ஸ்பி – விஸ்டா)

ஸ்டார்ட் பட்டனின் வலது புறம் இருப்பது குயிக் லாஞ்ச் பார். அடிக்கடி பயன்படுத்தப்படும் புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் ஐகான்கள் இங்கு வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இது உங்கள் கம்ப்யூட்டரில் தெரியவில்லை என்றால் கீழ்க்கண்டவாறு செயல்படவும். டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் டூல்பார்ஸ் என்ற இடத்தில் லெப்ட் கிளிக் செய்திடவும். இதில் பாப் அப் ஆகும் பிரிவுகளில் குயிக் லாஞ்ச் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் வெள்ளைக் கலர் பேடில் பென்சில் வைத்தது போல ஒரு ஐகான் தென்படும். இது டெஸ்க் டாப் பெறுவதற்கான ஐகான். பல புரோகிராம்களைத் திறந்து செயல்படுகையில் டெஸ்க்டாப் வேண்டுமென்றால் புரோகிராம்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக மூட வேண்டியதில்லை. இந்த ஐகானில் கிளிக் செய்தால் டெஸ்க் டாப் கிடைக்கும். மீண்டும் அழுத்த புரோகிராம்கள் கிடைக்கும். விஸ்டா சிஸ்டத்தில் இது புளு கலரில் இருக்கும்.

2. ஸ்டார்ட் மெனு (எக்ஸ்பி)

உங்கள் கம்ப்யூட்டரில் நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திருந்தால் ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் ஆல் புரோகிராம்ஸ் பட்டியல் மிகப் பெரியதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் இருக்காது. இதனைப் பல வகைகளாகப் பிரித்து அடுக்கும் வசதியினை எக்ஸ்பி சிஸ்டம் தருகிறது. இதனைப் பயன்படுத்த ஸ்டார்ட் பட்டனில் லெப்ட் கிளிக் செய்து பின் ஆல் புரோகிராம்ஸ் மீது ரைட் கிளிக் செய்து மெனுவினைப் பெறவும்.

இதில் Open அல்லது Open All Users என்பதைத் திறக்கவும். இங்கு போல்டர்களில் இந்த புரோகிராம்கள் காட்டப்படும். இவற்றைப் புதிய துணை போல்டர்களை உருவாக்கி புரோகிராம்களை வகைப்படுத்தி வைக்கலாம். இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் Edit மெனு சென்று அதில் Undo என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

3. டபுள் கிளிக் (எக்ஸ்பி)

ஒரு போல்டரில் டபுள் கிளிக் செய்கையில் என்ன ஏற்பட வேண்டும் என்பதனை ஆல்ட் அழுத்தி மாற்றலாம். ஆல்ட் கீ அழுத்தியவாறே புரோகிராம் மீது அழுத்தினால் அந்த புரோகிராம் சார்ந்த ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் அந்த போல்டருக்கான ஐகானை மாற்றலாம்; வியூவினை மாற்றலாம். கண்ட்ரோல் அல்லது ஷிப்ட் கீயுடன் அழுத்துகையில் போல்டர் ஒரு புது விண்டோவில் திறக்கப்படும். ஷிப்ட் கீயுடன் அழுத்துகையில் போல்டர் வியூ எக்ஸ்ப்ளோரர் பாரில் இடது பக்கம் கிடைக்கும்.

4. குயிக் டாகுமென்ட்ஸ் (எக்ஸ்பி):

விண்டோஸ் விஸ்டாவில் ஸ்டார்ட் மெனுவில் டாகுமென்ட்ஸ் என்ற பட்டன் இருப்பதைப் பார்க்கலாம். எக்ஸ்பியில் இது இல்லை. ஆனால் மிக எளிதாக இது போன்ற ஒரு பட்டனை எக்ஸ்பி சிஸ்டத்திலும் சேர்க்கலாம். டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் ஸ்டார்ட் டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் Customize என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள Advanced டேப்பில் என்டர் அழுத்தி ஸ்டார்ட் மெனு காட்டும் பிரிவுகளில் My Documents என்று இருப்பதனைக் கண்டறியவும். இதில் வரிசையாக உள்ளவற்றில் ஸ்குரோல் பார் மூலம் கீழே சென்றால் Display as Menu என்று ஒரு வரி இருப்பதனைக் காணலாம். இதில் கர்சரால் கிளிக் செய்து அங்குள்ள கட்டத்தில் மார்க் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி மை டாகுமென்ட்ஸ் பட்டன் கிடைக்கும்.

5. வேகமாக ஷட் டவுண் செய்திட (எக்ஸ்பி):

கம்ப்யூட்டரில் வேலையை முடித்துவிட்டு வேகமாகச் செல்ல முயற்சிப்போம். ஆனால் கம்ப்யூட்டர் தான் ஷட் டவுண் ஆக நேரம் எடுத்துக் கொண்டு நம் பொறுமையைச் சோதிக்கும். இதனைச் சற்று வேகமாக ஷட் டவுண் செய்திட ஒரு வழி உண்டு. இதற்கு மவுஸ் பயன்படுத்தாமல் கீ போர்டினைப் பயன்படுத்தலாம். ஸ்டார்ட் பட்டனை ஒரு முறை அழுத்தவும். ஸ்டார்ட் மெனு கிடைக்கும். உடனே ‘U’ கீயை அழுத்தவும். இப்போது ஷட் டவுண் மெனு திரையில் காட்டப்படும். இப்போது மீண்டும் ‘U’ கீயை அழுத்தினால் கம்ப்யூட்டர் உடனே ஷட் டவுண் ஆகும்; ‘S’ கீயை அழுத்தினால் ரீஸ்டார்ட் ஆகும்; ‘H’ கீயை அழுத்தினால் ஸ்டேண்ட் பை நிலைக்குச் செல்லும்; ‘ஏ’ கீயைஅழுத்தினால் ஹைபர்னேட் என்னும் நிலைக்குச் செல்லும். இறுதியாகத் தரப்பட்டுள்ள ஹைபர்னேட் நிலைக்குச் செல்ல அதற்கென ஏற்கனவே கம்ப்யூட்டரை செட் செய்திருக்க வேண்டும்.

6. ஆட்டோமேடிக் ஸ்குரோலிங் :

மிகப் பெரிய நீளமான டாகுமெண்ட்டைப் படிக்கையில் தானாகவே இந்த டாகுமெண்ட்டை ஸ்குரோல் செய்திடலாம். மவுஸ் கொண்டோ, என்டர் கீ தட்டியோ, ஸ்குரோல் பாரில் மவுஸ் கொண்டு அழுத்தியோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மவுஸை டாகுமென்ட் உள்ளே சென்று வீலைக் கிளிக் செய்திடவும். மவுஸின் கர்சர் நடுவில் புள்ளியும் அதனைச் சுற்றி இரண்டு அல்லது நான்கு அம்புக் குறிகள் கொண்ட கர்சராக மாறும். இரண்டு அம்புக் குறிகள் என்றால் டாகுமெண்ட் தானாக மேலும் கீழும் செல்லும். நான்கு அம்புக் குறிகள் என்றால் நான்கு பக்கங்களிலும் செல்லும். இப்போது மவுஸை அசைத்தால் அந்த அடையாளம் நகரத் தொடங்கும். அந்நிலையில் எங்கு கிளிக் செய்தோமோ அங்கு இதே போன்ற டூப்ளிகேட் கர்சர் ஒன்று இருக்கும். இப்போது டாகுமெண்ட் பக்கம் தானாக நீங்கள் அசைத்த திசையில் நகரத் தொடங்கும். மவுஸை அசைத்து அது ஸ்குரோல் ஆகும் வேகத்தினைக் கட்டுப்படுத்தலாம்.

7. போல்டருக்கு ஷார்ட் கட்:

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருமே புரோகிராம்களுக்கு ஷார்ட் கட்கள் அமைத்துப் பயன்படுத்துகிறோம். ஒரு சிலரே போல்டருக்கும் ஷார்ட் கட் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து அவற்றிற்கும் ஷார்ட் கட்கள் அமைத்துப் பயன்படுத்தி வருகின்றனர். எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டெஸ்க்டாப் பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து நியூ என்பதில் கிளிக் செய்து கிடைக் கும் மெனுவில் ஷார்ட் கட் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது தோன்றும் சிறிய பாக்ஸில் போல்டர் உள்ள இடத்தின் பாத் அமைக்கவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்து இதற்கு ஒரு பெயர் கொடுக்கவும். அதன்பின் பினிஷ் என்ற இடத்தில் கிளிக் செய்தால் ஷார்ட் கட் உருவாக்கப்பட்டு டெஸ்க்டாப்பில் இடம் பெறும். இதில் கிளிக் செய்தால் நேராக போல்டருக்குச் செல்லலாம்.

8. எக்ஸ்பிக்கு சைட் பார்:

விண்டோஸ் விஸ்டாவில் இருப்பதைப் போல சைட்பார் ஒன்றினை எக்ஸ்பி திரையில் அமைக்க விரும்பினால் அதற்கு வழி உள்ளது. இதற்கு கூகுள் டூல் பார் ஒன்றை டவுண்லோட் செய்திட வேண்டும். http://pack.google.com என்ற முகவரியில் உள்ள தளம் சென்று அதனை டவுண்லோட் செய்திடவும். இந்த பைலை டவுண்லோட் செய்தவுடன் கூகுள் டெஸ்க் டாப் டாஸ்க்பாரில் தானாகவே காட்டப்படும். இதனை சைட் பாராகப் பயன்படுத்த அதன் அருகே உள்ள கருப்பு அம்புக் குறியில் கிளிக் செய்து அதன் பின் சைட்பார் என்பதில் கிளிக் செய்திடவும். இந்த சைட்பாரில் இன்னும் பலவித பயன்பாட்டு புரோகிராம்களை இணைக்கலாம். கால்குலேட்டர், கடிகாரம், நியூஸ் பீட் போன்ற பல புரோகிராம்கள் கிடைக்கும். அத்துடன் இந்த கூகுள் டெஸ்க்டாப் மூலம் பைல் மற்றும் போல்டர்கள், இமெயில் செய்திகள் ஆகியவற்றை எக்ஸ்பியில் தேடிப் பெறுவதைக் காட்டிலும் வேகமாகத் தேடிப் பெறலாம்.

9. பிரைவேட் போல்டர்:

யூசர் அக்கவுண்ட் உருவாக்கிக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினாலும் மற்றவர்களின் பைல்களை நீங்களும் உங்கள் பைல்களை அவர்களும் பெற்றுக் காணும் வாய்ப்பு உள்ளது. போல்டர்களை பிரைவேட் என மாற்றிக் கொண்டால் இந்த வாய்ப்பு தடைபடும். எந்த போல்டரை இவ்வாறு மாற்ற வேண்டும் என முடிவு செய்கிறீர்களோ அந்த போல்டரின் மீது ரைட் கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். பின் வரும் விண்டோவில் செக்யூரிட்டி டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு ADD என்னும் பட்டனைத் தட்டுவதன் மூலம் இந்த போல்டரை யார் எல்லாம் பார்க்கலாம் என்று அவர்களின் யூசர் நேம் மட்டும் தேர்ந் தெடுக்கலாம். இந்த அனுமதியிலும் பல வகை உள்ளன.

இதனை செட் செய்திட என்று Allow / Deny என இரு பாக்ஸ் கிடைக்கும். இவற்றை டிக் செய்வதன் மூலம் வெவ்வேறு வகையில் இவர்களை இந்த போல்டரைப் பார்க்க அனுமதிக்கலாம். உங்களிடம் விண்டோஸ் ஹோம் எடிஷன் இருந்தால் கம்ப்யூட்டரைப் பூட் செய்து சேப் மோட் சென்று அங்குதான் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எக்ஸ்பி புரபஷனல் எனில் நேராகவே இந்த மாற்றத்தை ஏற்படுத்தலம.

10. ரெகுலர் கடிகாரம் எதற்கு?

விஸ்டாவில் சைட் பார் உள்ளது. அதில் கடிகாரம் ஓடுகிறது. எக்ஸ்பியிலும் சைட் பார் உருவாக்கி அதில் கடிகாரத்தினை இயக்கிவருகிறீர்களா! அப்படியானால் டாஸ்க் பாரில் கடிகாரம் எதற்கு என்று எண்ணுகிறீர்களா? அதனை நீக்க வேண்டும் என முடிவு செய்தால் கீழ்க்குறித்தபடி இயங்கவும். வழக்கம்போல டாஸ்க்பாரில் காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் Notification Area என்று உள்ள இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Clock என்று உள்ள இடத்தில் Show the Clock முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

11. பைல் எக்ஸ்டென்ஷன் பெயர் தெரிய:

விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இரண்டிலும் பைல் ஒன்றின் எக்ஸ்டென்ஷன் பெயர் தெரியாமல் இருக்கும் வகையில் டிபால்ட்டாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்குச் சில வேளைகளில் பைல்களின் பெயர்கள் அதன் துணைப் பெயருடன் தேவையாய் இருக்கும்.

ஒரே பெயரில் பேஜ் மேக்கர், வேர்ட், பெயிண்ட் புரோகிராம்களில் பைல்களை உருவாக்கி இருப்போம். இவற்றில் நமக்குத் தேவையானதைப் பெற நமக்கு துணைப் பெயர் தெரியவேண்டியதிருக்கும். இந்த பெயரைக் காட்டும்படி சிஸ்டத்தினை செட் செய்திடலாம். இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து Tools மெனுவினைத் திறக்கவும்.

விஸ்டாவில் ஆல்ட் கீயினை அழுத்தவும். பின் போல்டர் ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வியூ டேப்பில் கிளிக் செய்து அதில் ‘Hide extensions for known file types’ என்று உள்ள வரியின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அடுத்து பைல்களின் பெயர்கள் காட்டப்படுகையில் அவற்றின் துணைப் பெயர்களோடு அவை காட்டப்படும்.

மூலிகை கட்டுரை: மறைமுக பிரச்னைக்கு கல்இச்சி

நாகரீக வளர்ச்சியின் அடையாளமாக தோன்றியதே ஆடைஅணியும் பழக்கமாகும். நாகரீக வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே இனப்பெருக்க உறுப்புகளை மறைவாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளவும், அவற்றில் நோய்கள் தோன்றிவிடாமலும், கிருமித்தொற்று ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்து வந்தனர். இருப்பினும் ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டால் அவற்றை சரிசெய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமுமே காடுகளில் தங்கள் அருகிலேயே கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன் படுத்தும் எண்ணமுமே சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாய் அமைந்தது.

முறையான குடும்ப நெறிமுறைகளையும், சுகாதார முறைகளையும் பின்பற்றுவதே மறைமுக பிரச்னைகள் மற்றும் ஆபத்தான பால்வினை நோய்கள் தோன்றாமலும், பரவாமலும் கட்டுப்படுத்துவதற்கான நிரந்தர தீர்வாகும். மறைமுக உறுப்புகளான ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளின் தோல் மிகவும் மென்மையானது மட்டுமின்றி, கிருமிகள் பல்கி பெருகி வளர்வதற்கும் சாதகமாக அமைந்துள்ளது. அது மட்டுமின்றி சிறுநீர் பாதையுடன் இணைந்தோ அல்லது அருகாமையிலோ இனப்பெருக்க பாதை அமைந்துள்ளதாலும், மலப்பாதையும் இனப்பெருக்க பாதையும் அருகில் இருப்பதால் பிற இடங்களில் தோன்றும் கிருமிகளும் மறைமுக உறுப்புகளை பாதிக்கச் செய்கின்றன.

ஆண்கள் தினமும் குளிக்கும்போதும், பெண்கள் தினமும் இரவிலும் இள வெந்நீராலோ, உப்பு கரைத்த சுத்தமான நீரினாலோ பிறப்புறுப்புகளை கழுவ வேண்டும். அதேபோல் மாதவிலக்கு நிற�வு பெற்றதும் பெண்ணுறுப்பைசுத்தம் செய்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயால் துடைத்து எடுக்க வேண்டும்.இதனால் உறுப்பு வறட்சி நீங்கும். இத போன்ற மருத்துவ அறிவு வளர்ச்சியடையாத அக்காலத்தில் இனப்பெருக்க உறுப்புகளை சுத்தம் செய்ய பயன்படுத்திய மூலிகைதான் இச்சிஎன்ற கல்இச்சி.

பைகஸ் மைக்ரோகார்பா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மோரேசியே குடும்பத்தைச் சார்ந்த கல்இச்சி மரங்கள் அனைத்து இடங்களிலும் வளர்ந்து காணப்படுகின்றன. இதன் மரப்பட்டை, இலை மற்றும் வேர் பகுதிகளிலுள்ள டானின்கள், ஆன்தோசையனின்கள் நுண்கிருமிகளை நீக்கி பிறப்புறுப்பு பாதைகளை சுத்தம் செய்கின்றன.

வெள்ளைப்படுதலில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் முதுகுவலி நீங்க கல்இச்சி மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து, ஒரு கைப்பிடியளவு எடுத்து, ஒரு லிட்டர் நீரில் போட்டு கொதிக்கவைத்து, 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி பெண் பிறப்புறுப்பு பாதையை கழுவ வேண்டும்.

இதே நீரால் கழுவி வர ஆண் இனப்பெருக்க உறுப்பு தோலின் மேல் தோன்றும் வெடிப்பு மற்றும் கசிவும் நீங்கும். பெண் இனப்பெருக்க உறுப்பு தளர்ச்சி மற்றும் உறுப்பில் தோன்றும் கிருமித்தொற்றினால் ஏற்பட்ட துர்நாற்ற கசிவு நீங்க கல்இச்சி பட்டையை இடித்து, பொடித்துசுத்தமான வெண்ணிற துணியில் முடிந்து பிறப்புறுப்பு பாதையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்து, பின் கழுவ வேண்டும்.

நுண்கிருமி தொற்றினால் ஏற்பட்ட வாய்ப்புண் மற்றும் நாக்கு வெடிப்பு நீங்க கல்இச்சி பட்டையை கசாயம் செய்து வாய்கொப்புளிக்க வேண்டும். ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்பு தளர்ச்சி நீங்க நன்கு பழுத்த கல்இச்சி பழத்தின் விதைகளை உலர்த்தி, பொடித்து தேன் அல்லது பாலுடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.