கலர் கலராய் உணவா, மருந்தா

கலர் கலராய் சத்தான உணவு வகைகளை சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றாவிட்டால், நாற்பதுக்கு மேல், கலர் கலராய் மருந்துகளை விழுங்க வேண்டியிருக்கும். இது ஒவ்வொரு டாக்டரும் சொல்லும் ஆலோசனை தான்.

போக்குவரத்து சிக்னலில் உள்ளது போல, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிறத்தில் உள்ள காய்கறி, பழங்களை சாப்பிட்டு வந்தால், எந்த வயதிலும் இளமை; ஆரோக்கியம் தான். கீரை முதல் ஆரஞ்சு பழம் வரை கலரை கண்டுகொள்ளுங்கள். உணவா, மருந்தா…நீங்களே முடிவு செய்யுங்க.

உடம்பை சற்று அசையுங்களேன்

“ஏ.சி.’ அறையில் தூக்கம் முடிந்து படுக்கையை விட்டு எழுந்தவுடன் அசையாமல் போய், பத்திரிகை படித்தபடி காபி; அதன் பின் குளியல்; பைக், காரில் ஏறி ஆபீஸ்; ஆபீசில் கம்ப்யூட்டரே கதி; மாலையில் வீடு திரும்பினால் “டிவி” பெட்டி முன் நகராமல் உட்கார்வது; மீண்டும் “ஏ.சி.’ அறை வாசம். இப்படி இருந்தால் எப்படி சர்க்கரை, ரத்த அழுத்தம் வராமல் இருக்கும். உடம்பை சற்றாவது அசைத்தால்தானே கலோரி குறையும். கொழுப்பு நீங்கும். அதற்கு யோகா, உடற்பயிற்சி தேவை. இதுவரை இல்லேன்னாலும், இப்பவாவது வாக்கிங் போங்க.

எதற்கெடுத்தாலும் மருந்து கடை

சிலருக்கு வீட்டைவிட்டு வெளியே கிளம்பினால், மருந்துக்கடைக்கு போகாமல் இருக்க முடியாது. ஏதோ, மளிகை வாங்குவது போல, மாத்திரை, மருந்துகளை வாங்கி குவிப்பர். தினமும் ஏதாவது மாத்திரையை போட்டுக்கொள்ளாவிட்டால், ஏதோ இழந்தது போல இருக்குமாம். இந்தப் பழக்கம் மிக கெடுதல்; முடிந்தவரை தலைவலி , வயிற்று வலிக்கு எல்லாம் மருந்துக்கடைக்கு போகாதீர்கள். அதிக வலி இருந்தால் டாக்டரிடம்தான் போக வேண்டும்.

இன்சூரன்ஸ் எடுங்க; நேரத்தில் உதவும்

எதுக்குமே இன்சூரன்ஸ் எடுக்காமல் காலத்தை ஓட்டும் பழக்கம் இந்தியாவில் தான் அதிகமாக இருக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்சூரன்ஸ் எடுக்காமல் நழுவ முடியாது. குறிப்பாக சுகாதாரத்துக்கு கண்டிப்பாக இன்சூரன்ஸ் பாதுகாப்பு முக்கியம். இப்போது பல மருத்துவமனைகளில் “கேஷ்லஸ்’ வசதி வந்து விட்டது; அதாவது, பணம் கட்டாமல், இன்சூரன்ஸ் பாலிசி மூலம் ஈடு செய்யும் வசதி. இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதில் உள்ள விழிப்புணர்வு நம்மில் பலரிடம் குறைவுதான்.

வாட்டர் தெரபி தெரியுமா

வெயிட் குறையுதா, மன அழுத்தமா, சோர்வு, தலைவலி, உடல் வலி போன்றவை எல்லாம் பறந்து போகணுமா? அப்படியானால், நீங்கள் கண்டிப்பாக ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இது மட்டுமல்ல, உடல் தோல் பளபளக்க கூட இந்த தெரபி கைகொடுக்கும். அது என்ன தெரியுமா? தினமும் காலை எழுந்ததில் இருந்து குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்புறம் பாருங் கள் எல்லாம் பறந்து போச்சு.

இன்டர்நெட் வியாதி வந்தாச்சு

மொபைல் போனை காதில் மணிக்கணக்கில் வைத்து பேசினால் காது “டமார்’ ஆகி விடும்; மூளையில் பாதிப்பு வரும் என்று டாக்டர்கள் கத்திக்கத்தி ஓய்ந்து விட்டனர். இப்போது, இன்டர்நெட் வியாதியும் வந்து விட்டது.

ஆம், இன்டர்நெட்டில் மணிக்கணக்கில் உட்கார்ந்து கொள்வதால் ஏற்படும், இன்டர்நெட் நோய் இது. பல வகை கோளாறுகளுக்கு காரணமாக இது அமைகிறதாம்.

சீனாவில், 20 கோடி பேர் இளைஞர்கள்; இவர்களில் பெரும்பாலோர் இன்டர்நெட்டுக்கு அடிமையானவர்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க பீஜிங் உட்பட பல நகரங்களில் தெருவுக்கு தெரு நூற்றுக்கணக்கான கிளினிக்குகள் முளைத்து விட்டன. இவற்றின் பெயர் “இன்டர்நெட் தெரபி’ கிளினிக். ஹும், இந்தியாவிலும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கத்தினால் எந்த காது நல்லா கேட்கும்?

இரு காதுகளில் எந்த காது நன்றாக கேட்கும் என்றால் என்ன சொல்வீர்கள்? இரண்டு காதுகளும் கேட்கும் திறன் பெற்றவை தான். ஆனால், எந்த கூட்டமாக இருந்தாலும், இடது காதை விட, வலது காது தான் உடனே தகவல்களை சுலபமாக கிரகித்துக்கொள்ளுமாம்.

இத்தாலி நாட்டு நரம்பியல் நிபுணர்கள் இது தொடர்பாக 240 பேரை வைத்து ஆய்வு நடத்தியது. இதில், பாதி பேரை நிறுத்தி வைத்து, “சிடி’யில் பாட்டை உரக்கக் கேட்கும் வகையில் ஓட விட்டு, அதற்கு நடுவே, சிலரை விட்டு கத்த வைத்தனர் நிபுணர்கள். இந்த கத்தலை கேட்டவர்கள், தங்கள் வலது காதில் கேட்டதால், எளிதாக புரிந்து, கத்திய தகவலை திருப்பிச்சொன்னார்கள். அதே சமயம், இன்னும் பாதி பேரை இடது காதால் கேட்க வைத்தனர். அவர்களுக்கு போதுமான தகவல் சரிவர தெரியவில்லை.

நிபுணர்கள் கூறுகையில், “வலது காதில் போகும் தகவல்கள், இடது காதின் வழி தான் மூளைக்கு சென்று கட்டளை பெறப்படுகிறது. இடது காது, மிகவும் நீண்ட, சிக்கலான வார்த்தைகள் வழி தகவல்களை கையாள்வதில் சிறப்பானது’ என்று தெரிவித்தனர். காதுல கூடவா இந்த வித்தியாசம்…?

%d bloggers like this: