மூலிகை கட்டுரை: மறைமுக பிரச்னைக்கு கல்இச்சி

நாகரீக வளர்ச்சியின் அடையாளமாக தோன்றியதே ஆடைஅணியும் பழக்கமாகும். நாகரீக வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே இனப்பெருக்க உறுப்புகளை மறைவாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளவும், அவற்றில் நோய்கள் தோன்றிவிடாமலும், கிருமித்தொற்று ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்து வந்தனர். இருப்பினும் ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டால் அவற்றை சரிசெய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமுமே காடுகளில் தங்கள் அருகிலேயே கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன் படுத்தும் எண்ணமுமே சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாய் அமைந்தது.

முறையான குடும்ப நெறிமுறைகளையும், சுகாதார முறைகளையும் பின்பற்றுவதே மறைமுக பிரச்னைகள் மற்றும் ஆபத்தான பால்வினை நோய்கள் தோன்றாமலும், பரவாமலும் கட்டுப்படுத்துவதற்கான நிரந்தர தீர்வாகும். மறைமுக உறுப்புகளான ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளின் தோல் மிகவும் மென்மையானது மட்டுமின்றி, கிருமிகள் பல்கி பெருகி வளர்வதற்கும் சாதகமாக அமைந்துள்ளது. அது மட்டுமின்றி சிறுநீர் பாதையுடன் இணைந்தோ அல்லது அருகாமையிலோ இனப்பெருக்க பாதை அமைந்துள்ளதாலும், மலப்பாதையும் இனப்பெருக்க பாதையும் அருகில் இருப்பதால் பிற இடங்களில் தோன்றும் கிருமிகளும் மறைமுக உறுப்புகளை பாதிக்கச் செய்கின்றன.

ஆண்கள் தினமும் குளிக்கும்போதும், பெண்கள் தினமும் இரவிலும் இள வெந்நீராலோ, உப்பு கரைத்த சுத்தமான நீரினாலோ பிறப்புறுப்புகளை கழுவ வேண்டும். அதேபோல் மாதவிலக்கு நிற�வு பெற்றதும் பெண்ணுறுப்பைசுத்தம் செய்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயால் துடைத்து எடுக்க வேண்டும்.இதனால் உறுப்பு வறட்சி நீங்கும். இத போன்ற மருத்துவ அறிவு வளர்ச்சியடையாத அக்காலத்தில் இனப்பெருக்க உறுப்புகளை சுத்தம் செய்ய பயன்படுத்திய மூலிகைதான் இச்சிஎன்ற கல்இச்சி.

பைகஸ் மைக்ரோகார்பா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மோரேசியே குடும்பத்தைச் சார்ந்த கல்இச்சி மரங்கள் அனைத்து இடங்களிலும் வளர்ந்து காணப்படுகின்றன. இதன் மரப்பட்டை, இலை மற்றும் வேர் பகுதிகளிலுள்ள டானின்கள், ஆன்தோசையனின்கள் நுண்கிருமிகளை நீக்கி பிறப்புறுப்பு பாதைகளை சுத்தம் செய்கின்றன.

வெள்ளைப்படுதலில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் முதுகுவலி நீங்க கல்இச்சி மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து, ஒரு கைப்பிடியளவு எடுத்து, ஒரு லிட்டர் நீரில் போட்டு கொதிக்கவைத்து, 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி பெண் பிறப்புறுப்பு பாதையை கழுவ வேண்டும்.

இதே நீரால் கழுவி வர ஆண் இனப்பெருக்க உறுப்பு தோலின் மேல் தோன்றும் வெடிப்பு மற்றும் கசிவும் நீங்கும். பெண் இனப்பெருக்க உறுப்பு தளர்ச்சி மற்றும் உறுப்பில் தோன்றும் கிருமித்தொற்றினால் ஏற்பட்ட துர்நாற்ற கசிவு நீங்க கல்இச்சி பட்டையை இடித்து, பொடித்துசுத்தமான வெண்ணிற துணியில் முடிந்து பிறப்புறுப்பு பாதையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்து, பின் கழுவ வேண்டும்.

நுண்கிருமி தொற்றினால் ஏற்பட்ட வாய்ப்புண் மற்றும் நாக்கு வெடிப்பு நீங்க கல்இச்சி பட்டையை கசாயம் செய்து வாய்கொப்புளிக்க வேண்டும். ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்பு தளர்ச்சி நீங்க நன்கு பழுத்த கல்இச்சி பழத்தின் விதைகளை உலர்த்தி, பொடித்து தேன் அல்லது பாலுடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

%d bloggers like this: