Daily Archives: ஓகஸ்ட் 15th, 2009

முன்னேற்றத்தில் காலத்தின் பங்கு!

இன்றைய இளைஞர்கள் விழிப்புணர்வோடுதான் செயல்படுகிறார்கள். ஆனால் பிரச்சினைகள் வந்துவிட்டால் தடுமாற்றம் அடைகிறார்கள். பல நேரங்களில் என்ன செய்வ தென்று தெரியாமல் திகைத்து மலைத்துப் போகிறார்கள். பிரச்சினைகள் ஏற்படும் காலங்களில் எப்படி செயல்பட வேண்டும், காலம் கருதி முடிவெடுப்பது எப்படி? என்பது பற்றி இந்தக் கட்டுரையில் விளக்குகிறார் திருச்சி மண்டல வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குனர் ப.சுரேஷ்குமார்.
ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் சரி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் சரி, காலத்திற்கு பங்கு இருப்பதை உணர வேண்டும். காலம் என்பது பல கேள்விகளுக்கு அமைதியாக விடையளித்துக் கொண்டு வருகின்றது என்பதை நாம் காண முடிகின்றது.

ஒரு கருவுற்ற தாய் ஆரோக்கியமாக குழந்தையைப் பெறுவதற்கு 10 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. செடிகள், மரங்கள் ஒவ்வொன்றும் வளர்ந்து பூவாகி, காயாகி, கனியாவதற்கு சில காலங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. அந்த குறிப்பிட்ட காலம்வரை காத்திருந்தால் முடிவு இனிமையாகவே இருக்கும்.

கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது எளிது. ஆனால் தவறவிட்ட பொருளை கலங்கிய தண்ணீரில் கண்டு பிடிப்பது கடினம். அமைதியாக சற்று நேரம் பொறுத்திருக்கப் பழக வேண்டும். தண்ணீர் தெளிந்தவுடன் உற்று நோக்கினால் தவறவிட்ட பொருளை இனம் காணுவது எளிது. அதுபோல எந்தவொரு பிரச்சினைக்கு தீர்வு காணும்போதும் சற்று அமைதியுடனும், நிதானத்துடனும் முயற்சி மேற்கொண்டால் தீர்வு காண்பது சுலபம்.

நேரம் ஒதுக்குங்கள்:

எந்தவொரு செயலை செய்வதற்கும் முயற்சி, பயிற்சி தேவை. அப்போதுதான் வளர்ச்சியைக் காணமுடியும். இசைக் கலைஞர் தொடர்ந்து நேரம் ஒதுக்கி சாதகம் செய்து பழகினால்தான் மேடையில் இசை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடியும். ஓட்டப் பந்தய வீரரும் சரி, ஏதாவது ஒரு விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களும் சரி, முறையாக நேரம் ஒதுக்கி பயிற்சி மேற்கொண்டால்தான் களத்தில் சிறப்பாக செயல்பட முடியும்.

படிப்பில் சிறந்து விளங்குபவர்கள், நல்ல பணி வாய்ப்பை பெற்றவர்கள் ஆகியோர் திட்டமிட்டு, நேரம் ஒதுக்கி படித்து, எழுதிப் பார்த்து பிழைகளை திருத்திக் கொண்டு, உரியவர்களிடம் ஆலோசனைகளை கேட்டு தங்களை உயர்த்திக் கொண்டவர்களாகவே இருப்பர்.

அவசியமானவற்றை அறிந்திருத்தல்:

அன்றாட நடைமுறை வாழ்க்கையில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் பல இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் நீந்துதல், வாகனம் ஓட்டுதல், சமையல் கலையை கற்றிருத்தல், சிறு சிறு பழுதுகளை நீக்க பழகியிருத்தல் போன்றவற்றைக் கூறலாம்.

உலகசாதனை நீச்சல் வீரர் பெல்ப்ஸ் அளவிற்கு நீந்த தெரிந்திருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால் நீச்சல் கற்பது அவசியம்தான். ஓரளவு நேரம் ஒதுக்கி கற்காமல் நீச்சல் வராது. வாகனம் ஓட்டிப் பழகாமலேயே நினைத்தவுடன் வாகனம் ஓட்ட முடியும் என்று முயற்சி மேற்கொள்ளாமல் இருப்பதுவும் தவறு.

சிலர் அதிகம் படித்து பெரிய பதவி வகிப்பவர்களாகக் கூட இருப்பார்கள். ஆனால் வீட்டில் ப்ஸ் போன பல்பை மாற்றக்கூட பழகியிருக்க மாட்டார்கள். நடைமுறைக்கு தேவைப்படும் திறன்களைப் பெறுவதற்கு நேரம் ஒதுக்கி சிறிதளவு முயன்றால் போதும். அனைவரும் அவற்றை தெரிந்துகொண்டு உரிய நேரத்தில் பயன்படுத்த முடியும்.

இடர்பாடுகளை எதிர்கொள்ளுங்கள்:

பெரிய பொறுப்பில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, சாதாரணமாக அன்றாட வாழ்க்கையை நடத்துபவர்களாக இருந்தாலும் சரி, பிரச்சினைகள் வரும்போது அவற்றை எதிர்கொண்டு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் வாடி நின்றால் பிரச்சினைகள் நம்மை விட்டு ஓடி விடாது. முதலில் தூரத்திலிருந்து கொண்டு நமக்கு எச்சரிக்கை செய்யும். பின்னர் நம் வீட்டு கதவைத் தட்டும். அப்போதும் எதிர்கொள்ளத் தவறினால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து நம் வாழ்க்கைப் பாதையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்காலிகமாக சந்தோஷம் அளிக்கக் கூடிய ஒரு செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு அதன் பின்விளைவுகள் மற்ற பிரச்சினைகள் ஆகியவற்றைச் சிந்திக்காமல் இருக்கும் மனோபாவம் எதிர்காலத்துக்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும். நமது நேற்றைய சிந்தனை, செயல்பாட்டின் விளைவே இன்றைய நிகழ்காலமாக தொடர்கின்றது. இன்றைய சிந்தனை, செயல்களின் விளைவையே வருங்காலத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரத்தைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

பொறுப்பேற்று செயல்படுவது:

காலத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எத்தகைய செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? என்பது அவரவர் கைகளில்தான் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் பயில்பவர்கள் தினமும் நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். வீட்டிற்கும், வாழும் ச கத்திற்கும் உதவுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

அலுவலகங்களில் பணியாற்றுபவர்களில் சிலர் அதிக நேரம் அலுவலகப் பணியை மேற்கொள்வர். அதனால் வீட்டுப் பொறுப்புகளை கவனிக்க முடியாமல் குடும்பம் பாதிப்படையும். இன்னும் சிலர் அலுவலகத்தில் குறைந்த நேரமே பணியாற்றும் பழக்கத்தை கொண்டவர் களாக இருப்பார்கள். இதனால் அலுவலக செயல்பாடுகள் பாதிக்கும்.

ஒவ்வொரு செயலுக்கும் சரியாக நேரம் ஒதுக்கி, அதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டால் உரிய பலன் கிடைக்கும். இது அவரவரின் நேர மேலாண்மையைப் பொறுத்ததே. அனைவருக்குமே ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். ஒவ்வொருவரும் புத்திசாலித்தனமாக நேரத்தை ஒதுக்கி செயல்படுவதிலேயே வெற்றியும், முன்னேற்றமும் இருக்கிறது.

அவரவர்களின் செயல்களுக்கு அவர்களே பொறுப்பேற்றுக் கொள்ளப் பழக வேண்டும். பொறுப்பேற்று செயல்படும்போதுதான் பிரச்சினைகளை நாம்தான் எதிர்கொண்டு தீர்வு காண வேண்டும் என்ற யதார்த்த உணர்வும், தன்னம்பிக்கையும் ஏற்படும்.

பொறுப்பேற்றுக் கொண்டு செயல்பட மறுப்பதற்கு காரணம் விளைவுகளை எதிர் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் போவதே ஆகும். இது நாளடைவில் நாம் எடுக்க வேண்டிய முடிவை பிறரை எடுக்க அனுமதிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் விதிப்படி நடக்கின்றது என்று வேறு எதையோ, யாரையோ குற்றம் சுமத்திவிட்டு தாங்கள் நழுவிக் கொள்ளும் பழக்கத்துக்கும் காரணமாக அமைகிறது.

பெரும்பாலானவர்கள் தாங்களாகவே முடிவெடுத்து நல்லது, கெட்டது எது என்று ஆராய்ந்து அறியாமல் தங்களுக்காக பிறரை முடிவெடுக்க அனுமதிக்கும்போதுதான் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.

நமது வாழ்க்கை என்பது ஒரு வரைபடம் போன்றது. வரை படத்தை சரியாக கவனிக்கத் தவறினால் நாமாக கற்பனை செய்பவையே நம் கண்ணிற்கு தெரியும். யதார்த்தத்தை உணர முடியாமல் போய்விடும். வரைபடத்துடன் நாம் பிறப்பதில்லை. நம் முயற்சியால்தான் வரைபடம் உருவாக வேண்டும். எந்த அளவு நாம் உருவாக்கும் வரைபடம் வாழ்வு தழுவியதாக உள்ளதோ அந்த அளவிற்கு வாழ்வும் முழுமையானதாக அமையும். இது ஒரு தொடர் முயற்சியே. தினமும் நம்பிக்கையை புதுப்பித்துக் கொண்டு உலகை எதிர் கொண்டால் நாமும் ஜெயித்துக் காட்டலாம்.

எனவே உங்கள் செயலுக்கு நீங்களே பொறுப்பெற்று பழகுங்கள். பிரச்சினைகளை துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். நிதானமாக செயல்பட்டு தெளிவாக முடிவெடுங்கள். பிறரின் மீது பழியைப் போடுவதோ, உங்களுக்குப் பதில் பிறரை முடிவெடுக்க அனுமதிப்பதையோ தவிர்த்துப் பழகுங்கள். சரியான சுய கட்டுப்பாடு, காலத்தைப் போற்றி கடமையை செய்வது நல்ல பலனைத் தரும். உங்கள் வாழ்வை வளமாக்கும்.