தேவைகளை நிறைவேற்றும் – தகுதிகளைப்பணமாக்கும்

வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைனில் உங்கள் திறமை எதுவானாலும் அதனைப் பணமாக்கும் வழியைத் தரும் இணைய தளம் ஒன்று www.8KMiles.com என்ற பெயரில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இணைய தளம் மூலம் உங்கள் அலுவலகம் மற்றும் பிற வேலைகளுக்கான தகவல் தொழில் நுட்ப வசதிகளையும், திட்டங்களையும் குறைந்த செலவில் இந்த தளத்தில் பெற முடியும். இதனால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்கென கம்ப்யூட்டர், சர்வர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கெனச் செலவழிக்கும் முதலீடு மிச்சமாகிறது. இவற்றை இந்த தளம் மூலம் பயன்படுத்துவதற்குத் தகுந்தாற் போல கட்டணம் செலுத்தினால் போதும். மற்றபடி தளத்தில் நம்மைப் பதிந்து கொள்வது, நம் தகுதிகளைப் பட்டியலிடுவது, நம்மைத் தேடிவரும் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வது, வாடிக்கையாளர்களுடன் கான்பரசிங் செய்து முடிவெடுப்பது, அவர்களின் காண்ட்ராக்ட்களை மேற்கொள்வது, பணம் பெறுவது போன்றவற்றிற்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை என்பது இந்த தளத்தின் சிறப்பு.
அதே போல சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான தகவல் தொழில் நுட்ப வேலைகளை, சாப்ட்வேர் அப்ளிகேஷன் தயார் செய்து கொடுக்கும் பணியினை யார் நிறைவேற்றித் தருவார்கள் என்று பொதுவாக இதன் மூலம் தேடலாம்; அல்லது அறிவிப்பு கொடுக்கலாம். இதனை அறிந்து வேலைகளை மேற்கொள்ள முடியும் என நினைப்பவர்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்பவர்களின் தகுதி மற்றும் திறமையினை ஆய்வு செய்து, வேலைக்கான கட்டணம் எவ்வளவு என முடிவு செய்து, காலக்கெடு நிர்ணயம் செய்து பெறலாம்.
அதே நேரத்தில் தங்கள் அலுவலகத் தேவைக்கான கம்ப்யூட்டர் சர்வர் மற்றும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் தேவை உள்ளவர்கள் இந்தத் தளத்திற்குத் தங்கள் தேவைகளைக் கேட்டால் உங்களுக்குத் தேவையான வசதி, அது எதுவாக இருந்தாலும் அமைக்கப்பட்டு ஆன்லைனிலேயே தரப்படும். அதனைப் பயன்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். உங்கள் விருப்பப்படி மேற்கொள்ளப்படும் வேலை, பாதுகாப்பாக நீங்கள் மட்டுமே பார்க்கும்படி வைக்கப்படும். ஆன்லைனில் இது போல தேவை உள்ளவர்களையும் அந்த தேவைகளை நிறைவேற்றும் தகுதி உள்ளவர்களையும் இணைக்கும் ஓர் இனிய, எளிய டிஜிட்டல் பாலமாக http://www.8KMiles.com அமைக்கப்பட்டுள்ளது. இதனை நிறுவிய அனைவருமே பொறியியல் படித்த தமிழர்கள். அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா மற்றும் உலக வர்த்தகத்தில், முன்னணி இடத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கான சாப்ட்வேர் மற்றும் அலுவலகப் பணிகளுக்கான பலவகைப்பட்ட தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நாளில், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில், திறமை பெற்ற இளைஞர்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து திறமையைப் பயன்படுத்தும் விதமாக இந்த தளம் இயங்குகிறது. இதனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். தங்கள் திறமையின் அடிப்படையில் சேவை வழங்கத் திட்டமிடுபவர்களை “Service Provider” என இத்தளம் அழைக்கிறது. இவர்கள் தனிநபராகவோ அல்லது தங்களுக்குள் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் சார்பாகவோ அல்லது நிறுவனத்தின் சார்பாகவோ இந்த தளத்தில் பதிந்து கொள்ளலாம். தளத்தில் நுழைந்தவுடன் “Service Provider” என்ற இடத்தில் கிளிக் செய்ய வேண்டும். நிறுவனத்தின் சார்பில் என்றால் “I represent a company” என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். இதன்பின் உங்களுடைய கல்வித் தகுதிகள், வேலை அனுபவம், வேலைக்குக் கிடைத்த சான்றிதழ்கள், உங்களைப் பரிந்துரை செய்யக் கூடிய நபர்கள் அல்லது நிறுவனங்களின் முகவரிகள் ஆகிய பல தகவல்களைத் தரலாம். பின் இறுதியாக அரசாங்கம் உங்களுக்கு வழங்கிய புகைப்படம் கொண்ட அடையாள அட்டை ஒன்றை (டிரைவிங் லைசன்ஸ், வருமானவரி பான் கார்ட், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) ஸ்கேன் செய்து அதனை அப்லோட் செய்திட வேண்டும். கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தையும், போட்டோ அடையாள அட்டை உட்பட, இந்த தளத்தை இயக்குபவர்கள் சரி பார்த்து “Verified” எனச் சான்றழித்து தளத்தில் ஏற்றுவார்கள். இதன் மூலம் உங்களின் சேவையைப் பெற விரும்புவோருக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும். இவ்வாறு பதிவு செய்திடும்போதே உங்களுக்கென உங்களின் இமெயில் முகவரியை யூசர் பெயராகவும் அதற்கான பாஸ்வேர்டையும் நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். உங்களைப் பற்றிய தகவல்கள் அப்லோட் செய்யப்பட்டவுடன் நீங்கள் இந்த தளத்தில் நுழைந்து அதில் பதியப்பட்டுள்ள வேலைகளை பைல் மெனுவில் “Find Work” என்பதில் கிளிக் செய்து பார்வையிடலாம். பின் உங்களால் நிறைவேற்ற முடியும் என்று எண்ணுகின்ற சாப்ட்வேர் திட்டங்கள் மற்றும் பிற வேலைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பதிந்தவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்கள், திட்டம் நிறைவேறத் தேவையான காலம், அதற்கான கட்டணம் ஆகியவை குறித்து தகவல்களை நேரடியாக அனுப்பலாம். நீங்கள் தகவல்கள், கால அவகாசம், அதற்கான பணம் செலுத்தும் முறை ஆகியவற்றை அவர்களுக்கு நிறைவைத் தரும் வகையில் எந்த சந்தேகமும் இன்றி அனுப்ப வேண்டும். இதன்பின் அந்த வேலைத் திட்டத்தினைப் பதிவு செய்தவர் உங்களுடன் இமெயில் அல்லது வீடியோ கான்பரசிங் வழி தொடர்பு கொண்டு தங்கள் தேவைகள் குறித்து விளக்கி நீங்கள் தந்துள்ள காண்ட்ராக்ட் குறித்த சந்தேகங்களை நீக்கிக் கொள்வார். இந்த நேரத்தில் அவர்கள் அளிக்கும் கூடுதல் தகவல்களின் அடிப்படையில், நீங்கள் உங்கள் காண்ட்ராக்ட் கண்டிஷன்களை மாற்றிக்கொள்ளலாம்.
இருவருக்கும் ஒத்துப் போன நிலையில் வேலைக்கான கம்ப்யூட்டர் சூழ்நிலையை நீங்கள் வரையறை செய்திடலாம். வேலை திட்டத்தினை உங்களுக்கு அளிப்பவர் தாங்கள் குறிப்பிடும் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் தான் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றால் அதனை 8KMiles வழங்கும். இதனை பணி மேற்கொள்பவர் ஆன்லைனில் பயன்படுத்திக் கொள்ளலாம். இது இருவருக்குமே பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்கிறது. முதலாவதாக வேலை நடந்ததற்கான ஆதாரம் கிடைக்கிறது. இதனால் மேற்கொண்ட அளவிற்கு ஏற்கனவே ஒத்துக் கொண்ட பணம் கிடைக்கும். பணி முன்னேற்றத்தில் வேலை தந்தவருக்கு திருப்தி இல்லை என்றால், நிறைவேறியவரைக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, இந்த நிலையில் அடுத்தவருக்கு அந்த வேலைத் திட்டத்தினைக் கொடுக்கலாம். அனைத்திற்கும் 8KMiles பாதுகாப்பளிக்கிறது. வேலை செய்பவர் ஒத்துக் கொண்டபடி, ஒவ்வொரு நிலையிலும் பணி நிறைவேற்றப்படும்போது, அதற்கான இன்வாய்ஸை அனுப்பலாம். வேலை தந்தவர் அதற்கான பணத்தினை 8KMiles அக்கவுண்ட்டில் செலுத்துவார். பின் அந்தப் பணம் வேலை முடித்தவருக்கு வழங்கப்படும். இவ்வளவு வசதிகளுக்கும் வேலை முடிந்த பின்னரே தனக்கான 7.5% கமிஷனை, இந்த தளம் எடுத்துக் கொள்கிறது. இதனையும் நம்பாமல், வேலை தருபவர் முதலிலேயே ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைச் செலுத்த வேண்டும் என எண்ணினால், அந்த பணியையும் இந்த தளம் மேற்கொள்கிறது. திட்டத்தின் கட்டணத்திற்கான குறிப்பிட்ட சதவிகிதப் பணத்தை இந்த தள அக்கவுண்ட்டில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படும். இது டெபாசிட் போல வைத்துக் கொள்ளப்படும். சர்வீஸ் புரவைடர் மட்டுமின்றி வேறு நிலைகளிலும் ஒருவர் வேலைத் திட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். பல திறமை பெற்றவர்களைக் கொண்டு இயங்குபவர் ப்ராஜக்ட் மேனேஜராக (“Project Manager”) இயங்கலாம். இவர் வேலைத் திட்டத்தை வாங்கிக் கொண்டு தன்னுடன் இணைந்துள்ளவருக்கு வேலையைப் பிரித்துக் கொடுத்து பணி முடித்து பணம் பெறலாம். சர்வீஸ் புரோக்கராகவும் (“Service Broker”) ஒருவர் செயல்படலாம். பல நிறுவனங்கள் மற்றும் வல்லுநர்கள் பலரிடம் சிறப்பான தொடர்பு கொண்டுள்ளவர்களுக்கு, இந்த ஆன்லைன் குஞுணூதிடிஞிஞு ஆணூணிடுஞுணூ நிலை சரியாக இருக்கும். இவர் 8KMiles தளத்தினைத் தன் ஆன்லைன் அலுவலகமாக இயக்கித் தேவை பட்டவர்களுக்குச் சரியான வல்லுநர்கள் மூலம் வேலையை நிறைவு செய்து தரலாம். இதன் மூலம் நீங்கள் நிறுவனங்களையும் உங்கள் குழு உறுப்பினர்களையும் சந்தித்து, வேலை தொடர செலவில்லா ஆன்லைன் அலுவலகச் சூழ்நிலை கிடைக்கிறது. இனி தனக்கு சேவை வேண்டுபவர் என்ன செய்ய வேண்டும் எனப் பார்க்கலாம்? இவர் 8KMiles தளத்தில் “Buyer” ” என்பதில் கிளிக் செய்து யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டைப் பெறலாம். தன்னைப் பற்றியோ அல்லது தன் நிறுவனத்தைப் பற்றிய தகவல்களைத் தர வேண்டும். இவற்றைத் தந்தவுடன் ஒரு அக்கவுண்ட் ஒன்றையும் நீங்கள் திறக்க வேண்டும். இதற்கு உங்கள் கிரெடிட் கார்ட் (பன்னாட்டளவிலான கார்ட்) அல்லது பேங்க் அக்கவுண்ட் (தற்போதைக்கு அமெரிக்க பேங்க் அக்கவுண்ட் மட்டும்; விரைவில் ஆன் லைன் பேமென்ட் தரும் பே பால் அக்கவுண்ட் சேர்க்கப்பட உள்ளது) விபரம் தரப்பட வேண்டும். இதற்கு 8KMiles தளத்தில் “Setup Payment” என்ற மெனுவில் கிளிக் செய்திட வேண்டும். அதன்பின் “Authorize” என்பதில் கிளிக் செய்து பின் “Action” என்பதன் கீழாக உங்கள் கிரெடிட் கார்ட் அல்லது பேங்க் அக்கவுண்ட் தகவல்கள் தரப்பட வேண்டும். உடனே உங்கள் அக்கவுண்ட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் இரு பணப் பரிமாற்றத்தினை 8KMiles தளத்திற்கு ஏற்படுத்த வேண்டும். இந்த பணம் கட்டணம் அல்ல; உங்கள் கிரெடிட் கார்டினை அல்லது பேங்க் அக்கவுண்ட்டினை உறுதிப்படுத்தும் வேலையே ஆகும். உறுதி செய்து கொண்ட அடுத்த நிமிடம் இந்த பணம் மீண்டும் உங்கள் அக்கவுண்ட் டில் திரும்பச் செலுத்தப்படும்.

இந்த பணம் செலுத்தும் முறை சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவுடன் நீங்கள் Projects மெனு சென்று உங்கள் தேவைகளை பதியலாம். அந்த மெனுவில் உங்கள் வேலை குறித்த தகவல்களைத் தெளிவாகத் தர பல ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. இவை தரப்பட்டவுடன் அவை ப்ராஜக்ட் குறித்து தேடுகையில் பட்டியலிடப்படும். நீங்கள் விரும்பினால் இதனை “Invite Only”, என்ற அடிப் படையிலும் வைக்கலாம். அப்போது நீங்கள் விரும்புபவர்கள் மட்டுமே இதனைக் காண முடியும். உங்கள் திட்டம் பதியப்பட்டவுடன் பல சர்வீஸ் புரவைடர்கள் அதற்கான பட்ஜெட் மற்றும் தங்கள் தகுதிகள், அனுபவங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிப்பார் கள். உடன் நீங்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து பேசி முடிவிற்கு வரலாம். எப்போது எந்த அளவில் இந்த திட்டம் முடிவடைய வேண்டும் என உறுதி செய்திடலாம். அதே போல பணம் வழங்கும் நிலைகளையும் அமைத்திடலாம். உங்களிடம் காண்ட்ராக்ட் பெறுபவர் உங்களுக்காக மேற்கொள்ளும் வேலையை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கேற்ற கம்ப்யூட்டர் வசதிகள் அமைந்த சூழ்நிலையை 8KMiles தளம் சிறிய கட்டணத்தில் வழங்கும். இதில் மட்டுமே உங்கள் சர்வீஸ் புரவைடர் பணியை மேற்கொள்ள வேண்டும் எனக் கட்டாயப்படுத்தலாம். இதனால் நீங்கள் பணம் செலுத்த செலுத்த அந்த பணி உங்கள் கைகளில் கிடைக்கும். வேலை முடியும் ஸ்டேஜ் களுக்கேற்ப இன்வாய்ஸ் பெற்று தளத்தின் மூலம் பணம் வழங்கலாம். உங்கள் வேலைக்கான சர்வீஸ் புரவைடர் மட்டுமின்றி உங்கள் சார்பாகப் பணியாற்றும் புராஜக்ட் மேனேஜர்கள், பிரதிநிதிகளையும் இங்கு தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக் காட்டாக அமெரிக்காவில் இயங்கும் ஒரு நிறுவனம் இந்தியாவில் ஒரு சிறு பணியை முடித்துப் பெற்றுக் கொள்ள விரும்பினால் அதற்கான ஒரு நபரை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தலாம். அத்தகைய நபர்களையும் இந்த தளத்தில் அடையாளம் கண்டு பயன்படுத்தலாம். இந்த தளம் தகவல் தொழில் நுட்ப பணிகள் மட்டுமின்றி வறு எத்தகைய வேலை என்றாலும் இணைப்பை ஏற்படுத்துகிறது. கம்பெனிக்கான அறிக்கைகள் தயார் செய்தல், பட்ஜெட் உருவாக்குதல், மொழி பெயர்த்தல், சட்ட ரீதியான ஆவணங்களை தயாரித்தல், சில்லரை பொருட்கள் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்தல், அக்கவுண்டிங் செய்தல் என ஒரு சிறிய நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து வேலைகளுக்கும் தகுதியான நபர்களை அடையாளம் கண்டு வேலைகளை முடிக்க இந்த தளம் உதவுகிறது. இன்டர்நெட் இணைந்த கம்ப்யூட்டர் ஒன்றை வைத்துக் கொண்டு இவை அனைத்தையும் ஆன்லைனிலேயே முடிக்க முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. திறமைசாலிகளுக்கு உலகச் சந்தையை இந்த தளம் விரித்து வாய்ப்புகளைத் தருகிறது. சிறிய நிறுவனங்களும், உலகத் தரத்திலான தகவல் கட்டமைப்பில் இயங்கி பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட இது உதவுகிறது.

தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அமெரிக்காவில் பல வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள இந்த தளம் குறித்து இதனை உருவாக்கி இதன் செயல் து�ணைத்தலைவராக இயங்கும் பிரபு கருணாகரன் அளித்த பேட்டி.

இந்த நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

நான் அமெரிக்காவில், மேல் படிப்பிற்காகச் சென்ற போது, அங்குள்ள நிறுவனங்கள் தகவல் தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சியில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட அதிக மூலதனம் இல்லாமல் தவிப்பதனைப் பார்த்தேன். அதே நேரத்தில் நம் ஊர் இளைஞர்கள் பொறியியல் மட்டுமின்றி கம்பெனி நிர்வாகம் மற்றும் சார்ந்த பணிகளில் திறமையை வளர்த்துக் கொண்டு, சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதனையும் கண்டேன். இந்த இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிந்தால், அனைவருக்கும் பலனாக இருப்பது மட்டுமின்றி, இவர்களின் நிறுவனங்களும் நாடுகளும் வளம் பெறும் என்ற அடிப்படையில் இந்த நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டோம். இவர்கள் சந்திக்கச் சரியான ஒரு பிளாட்பாரம் அமைப் பது மற்றும் அவர்களுக்குத் தேவையான கம்ப்யூட்டர் சிஸ்டங்களை அமைத்துக் கொடுப்பது என்ற இரு வழி உதவிகளை வழங்கும் வகையில் தளம் ஒன்றை அமைப்பதை எங்கள் இலக்காக வைத்துக் கொண்டுள்ளேம். என் நண்பர்கள் டாக்டர் சுரேஷ்,விக்டர், ஹரீஷ், பத்மநாபன் மற்றும் பிரவீண் ஆகியோருடனும் இது குறித்துப் பல நாட்கள் சிந்தித்ததன் விளைவாகவே இந்நிறுவனம் உதயமானது. பல ஆண்டுகள் இதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் செய்து பல சோதனைகளையும் நடத்தினோம். அனைத்தும் சரியாக அமைந்து வெற்றிகரமாக இயங்க முடியும் என்ற நிலையில் சென்ற மார்ச் 31 அன்று இதனைத் தொடங்கினோம்.

இந்த நிறுவனத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே?
இந்த உலகப் பரப்பின் விட்டம் 8000 மைல்களாகும். அதனை அடிப்படையாகக் கொண்டே, உலகமனைத்தையும் உங் கள் கைகளில் கொண்டு வருகிறோம் என் பதை உணர்த்த இந்த நிறுவனத்தின் பெயர் 8KMiles என அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த நிறுவனம் யாரை இலக்காகக் கொண்டுள்ளது?
முதலீட்டுச் செலவின்றி தங்கள் தரத்தை உலகளாவிய நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்திட விரும்பும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்; தங்களிடம் பணியாற்றும் தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களின் திறமையை, அனைத்து நாடுகளிலும் உள்ள நிறுவனத்தேவைக்குப் பயன்படுத்திடத் திட்டமிடும் நிறுவனங்கள்; விற்பனை மற்றும் வர்த்தக ரீதியில் அசாத்திய திறமை கொண்டு நல்ல நெட்வொர்க் ஏற்படுத்தியுள்ள நிறுவனங்கள் மற்றும் தனி நபராக இயங்கும் திறமைசாலிகள்; வணிகத் திட்டங்களைச் சரியாக அமல்படுத்தி லாபம் ஈட்ட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் சுதந்திரமாகச் செயல்பட்டு தங்களின் திறமையைப் பணமாக்கி வாழ விரும்பும் வல்லுநர்கள் ஆகியோரே எங்களின் இலக்குகள்.

பதிந்து கொள்ள எவ்வளவு கட்டணம்? திறமையுள்ள நம் இளைஞர்களுக்கு அது தடையாக இருக்காதா?
கொஞ்சம் கூட கட்டணம் இல்லை. பதிந்து கொள்பவர்கள் மற்றும் நிறுவனங்களின் தரப் பரிசோதனை செய்தபின் இலவசமாக இமெயில் வசதி, தகவல் வெளியே கொண்டு வர சேட் போர்ட், வீடியோ கான்பரன்சிங், சட்டரீதியான பாதுகாப்பு, பணப் பரிமாற்றத்திற்கான நியாயமான வழிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இதனை ப் பயன்படுத்தலாம். இந்திய கிராமங்களில், குறிப்பாகத் தமிழகத்தில், அதிக அளவில் இளைஞர்கள் பொறியியல் படித்துத் திறமை இருந்தும் அவற்றைக் காட்டச் சரியான வாய்ப்பின்றி உள்ளனர். இவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவே நிறைய பணம் தேவைப்படுகிறது. இவர்கள் குழுவாக இணைந்தோ அல்லது தனி நபராகவோ இந்த தளம் மூலம் உலக அளவிலான வாய்ப்பினைப் பெறலாம். இதன் வழி வேலைத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது மட்டும் திட்டச் செலவில் 7.5% கட்டணமாகப் பெறுகிறோம். கம்ப்யூட்டர், சர்வர், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை இவர்கள் ஆன்லைனில் பயன்படுத்தினால் பயன்படுத்தும் நேரத்திற்கு மட்டும் மிகவும் குறைந்த கட்டணம் வசூலிக்கிறோம்.

என்ன மாதிரியான சாப்ட்வேர் கட்டமைப்பினை ஆன்லைனில் வழங்குகிறீர்கள்?

லினக்ஸ் மற்றும் விண்டோஸ் அடிப்படையிலான அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர்களையும் ஆன்லைனில் அளிக்கிறோம். இவை தங்களுக்குப் போதாது என்று எண்ணுபவர்கள், எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் கேட்டாலும் உடனே அமைத்துத் தருகிறோம்.

உங்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி என்ன என்ன வேலைகளை மேற்கொள்ளலாம்?
அறிவுத் திறனைக் கொண்டு என்னவெல்லாம் ஒரு நிறுவனத்திற்கு ஒரு திறமைசாலி செய்ய முடியுமோ அனைத்தையும் எங்கள் தளம் மூலம் மேற்கொள்ளலாம். ஒரு சிலவற்றை இங்கு கூறுகிறேன். நிறுவன நிர்வாகத்திற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை உருவாக்குதல், வெப் சைட் உருவாக்கி நிர்வகித்தல், கிராபிக் டிசைன்ஸ் மற்றும் மல்ட்டிமீடியா புரோகிராம்களைத் தயாரித்தல், நிறுவனங்களுக்குத் தேவையான டேட்டா பேஸ்களை உருவாக்கி தொடர்ந்து அப்டேட் செய்தல், ஹார்ட்வேர் நெட்வொர்க்கிங்கிற்குத் தேவையானதை அமைத்துக் கொடுத்தல், கட்டடக் கலை பொறியியலுக்குத் தேவையானவற்றைத் தயாரித்தல், டாகுமென்ட் தயாரித்து எடிட் செய்து தருவது, ஆடியோ, வீடியோ மற்றும் போட்டோ காட்சிகளை எடிட் செய்தல், வர்த்தக நிறுவனங்களுக்கான ஆலோசனை வழங்குதல், கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், அக்கவுண்டிங் சாப்ட்வேர்களை உருவாக்குதல், உடல்நலம் சார்ந்த அறிவுரை வழங்க அப்ளிகேஷன்களை தயாரித்தல், ஆன்லைனில் ஆபீஸ் அசிஸ்டண்ட்களை உருவாக்கி உதவுதல் என ஒரு நிறுவனத்தின் அனைத்து தேவைகளையும் இதன் மூலம் நிறைவேற்றலாம். இவற்றிற்கான சிஸ்டங்கள் எதிலும் இவர்கள் முதலீடு செய்திட வேண்டியது இல்லை. இவற்றை எங்கள் தளம் ஆன்லைனிலேயே தரும். அத்துடன் வேலை மேற்கொள்வதற்கான பாதுகாப்பு, பணம் பெற்றுத் தருதலை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

இதே முறையில் உங்களின் எதிர்கால விரிவாக்கம் எப்படி இருக்கும்?

இந்த தளம் மூலம் அனைத்து துறைகளிலும் சிறந்த வல்லுநர் அமைப்பு ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்ள முயற்சிப்போம். அதே போல, தகவல் தொழில் நுட்பத்தில் சிறப்பாகச் செயலாற்றக் கூடிய நிறுவனங்களும் இங்கு கூட்டாக எங்கள் நிறுவனத்திடம் இருக்கும். பன்னாட்டளவில் இவர்களை யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தவித அடிப்படைக் கட்டமைப்பு செலவும் இல்லாமல், வர்த்தக முன்னேற்றத்தையும் நிர்வாகத்தையும் ஒரு நிறுவனம் மேற்கொள்ள முடியும் என்பதனை உறுதி செய்வோம். பொதுமக்களாகிய தங்கள் வாடிக்கையாளர்களை அனைத்து வகை நிறுவனங்களும் எளிதாக எந்தச் செலவுமின்றி அணுக வழி செய்யும் நிறுவனப் பிரிவுகளையும் தளங்களையும் அமைக்க இருக்கிறோம். இது குறித்து எந்த சந்தேகங்கள் இருந்தாலும் இமெயில் மூலமாக contactus@8kmiles.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பலாம். எங்களைப் பற்றி அமெரிக்க ஐரோப்பிய நாளிதழ்கள், சாப்ட் வேர் அமைப்புகள் எழுதிய குறிப்புகள் மற்றும் பேட்டியைக் கீழ்க்காணும் தளங்களில் காணலாம்.

http://www.prweb.com/releases/8KMiles/Web20/prweb2275634.htm

http://www.youtube.com/watch?v= 2LKEjpWOKyQ

http://www.prweb.com/releases/2009/07/ prweb2613924.htm

http://telephonyonline.com/business_services/news/cloudcomputing

smallbusinessoutsourcing0707/index.html

%d bloggers like this: