பயர்வால் : ஏன் ? எதற்காக ?

பயர்வால் என்பது நம்முடைய கம்ப்யூட்டரை நெட்வொர்க் ( இன்டர்நெட் போன்ற) ஒன்றில் இணைக்கையில், அதனை நாம் அறியாமல் தாக்கவரும் ஒரு புரோகிராமினைத் தடுக்கும் ஒரு ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் புரோகிராமாகும். இங்கு “தாக்குதல்’ என்பது கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்கும்போது, அவற்றின் பலவீனமான கட்டமைப்பினைப் புரிந்து கொண்டு அவற்றின் வழியாக உள் நுழைந்து கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடக்கும் அல்லது கைப் படுத்தும் புரோகிராம் செயல்பாட்டினைக் குறிப்பதாகும்.

இதில் பலவீனம் என்பது என்ன என்று இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காணலாம். சில நேரங்களில் ஆடியோ அல்லது வீடியோ பைல் ஒன்றை இயக்க முயற்சிக்கையில் கம்ப்யூட்டரில் உள்ள மல்ட்டி மீடியா பிளேயர், இந்த பைல் புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் இருக்கிறது; இருந்தாலும் இயக்கிப் பார்க்கவா என்று கேட்கும். நாமும் நம் ஆர்வத்தில் சரி என்று கட்டளையிடுகையில், மல்ட்டி மீடியா பிளேயர் கிராஷ் ஆகி முடங்கிப் போகும் சூழ்நிலை ஏற்படலாம். அந்த நேரத்தில் அந்த ஆடியோ அல்லது வீடியோ பைலில் எழுதப்பட்ட கெடுதல் விளைவிக்கும் வரிகள் உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வகை புரோகிராம்கள் செயல்பட வழி ஒன்றைத் தானாக அமைத்துக் கொள்ளும்.

இரண்டா வதாக, இன்டர் நெட்டில் கம்ப்யூட்டர் இணைப்பில் இருக்கை யில், இது போன்ற கெடுதல் விளை விக்கும் கம்ப்யூட்டரி லிருந்து தொடர்ந்து உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு வழி கேட்டு ஆணை கள் வரலாம். அப்போது உங்கள் கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்கத் தொடங்கலாம்; ஊர்ந்து போய் நின்று விடலாம்; அல்லது கிராஷ் ஆகி முடங்கிப்போகலாம்.

பயர்வால்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள, தெரிந்த மற்றும் தெரிய வரும், இந்த பலவீனமான இடங்களை அடைத்திடும். இதனை இரண்டு வழிகளில் இவை மேற்கொள்கின்றன. சிஸ்டத்தின் உள்ளாக பயர்வால் ஒன்று அமைக்கப்பட்டு அவை நெட்வொர்க் ஒன்றிலிருந்து வரும் டேட்டாவினை முழுமையாகச் சோதனை இட்டு சரியான டேட்டாவினை மட்டும் அனுமதிக்கிறது.

இன்னொரு வகை பயர்வால் சிஸ்டத்தின் வெளியாக அமைக்கப்படுகிறது. இது உங்கள் கம்ப்யூட்டரின் ஒரு பகுதி இது போன்ற புரோகிராம்களால் பாதிக்கப்பட்டிருந்தால், மோசமான டேட்டாவினை நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டர்களுக்கு அனுப்புவதனைத் தடுக்கிறது. மிகச் சிறப்பான பயர்வால்கள் இந்த இருவகை தடுப்பு சுவர்களையும் அமைத்துச் செயல்படுகின்றன. பயர்வால் ஒன்று இருப்பதனாலேயே, உங்கள் கம்ப்யூட்டர், கெடுக்கும் புரோகிராம் களிடமிருந்து முழுமையான பாதுகாப்பில் உள்ளது என்று கூறிவிட முடியாது. அத்தகைய சந்தர்ப்பங்களை அது பெரும்பாலும் தடுத்துவிடும்.

‘Firewall’’என்ற சொல் Fire மற்றும் Wall என்ற சொற்களை இணைத்து உருவாக்கப் பட்டுள்ளது. வீடு, அலுவலகம் மற்றும் அது போன்ற கட்டடங்களில், ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குத் தீ பரவுவதைத் தடுக்க அமைக்கப்பட்ட சுவரினை இது குறிக்கிறது. அதே போல கம்ப்யூட்டரில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் பரவுவதனை இது தடுக்கிறது. விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்புடன் பயர்வால் ஒன்று தரப்படுகிறது. இன்டர்நெட்டில் இருக்கையில் நம் கம்ப்யூட்டரை இது பாதுகாக்காதா?

ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் இந்த பயர்வால், நீங்கள் சர்வீஸ்பேக் 2 இயக்கி இருந்தால், தானாக டிபால்ட் பயர்வால் ஆக அமைக்கப்படும். இருப்பினும் இதற்கும் மேலாக, அல்லது இதற்குப் பதிலாக, இன்னொரு பயர்வால் அமைப்பதே நல்லது. விண்டோஸ் பயர்வால் வெளியிருந்து உள்ளே வரும் கெடுதல் புரோகிராம்களை மட்டும் தடுக்கிறது. உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் அல்லது ஸ்பைவேர் தொகுப்பினால் பாதிக்கப் பட்டால், பாதிக்கப்பட்ட உங்கள் கம்ப்யூட்டரி லிருந்து அதே கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் செல்வதை அது தடுக்காது.

விண்டோஸ் எக்ஸ்பியின் பயர்வால் நவீன சில வசதிகளைக் கொண்டிருக்காது. சில பயர்வால் தொகுப்புகள் ஒரு ஐ.பி. முகவரி யிலிருந்து தொடர்ந்து கெடுதல் விளைவிக்கும் டேட்டா வந்தால், பின் அந்த முகவரியிலிருந்து எது வந்தாலும் தடுக்கும் தன்மையினைக் கொண்டுள்ளன. இது போன்ற கெடுதல் வேலையைச் சில தளங்கள் மேற்கொள்வதாகக் கண்டறியப்பட்டால், சில பயர்வால்கள் மொத்தமாக அந்த தளங்கள் நெட்வொர்க்கில் இணைவதனையே நிறுத்திவிடுகின்றன.

சில சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் தங்களின் தாய்வீட்டுத் தளத்தினைத் தொடர்ந்து காண்டாக்ட் செய்து கொண்டே இருக்கும். அந்த அப்ளிகேஷன்களுக்கான அப்டேட் எதுவும் வெளியாகி உள்ளதா என்று தெரிந்து கொள்வதற்காக. பல வேளைகளில் இது போன்ற நடவடிக்கைகள் அந்த சாப்ட்வேர் தயாரித்தவர் தன் புரோகிராம்கள் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்று அறிவதற்காக இருக்கலாம். இவ்வாறான நடவடிக்கைகளைக் கண்ட்ரோல் செய்திட வெவ்வேறு பயர்வால் களை செட் செய்து அமைக்கலாம்.

இலவச பயர்வால் தொகுப்புகளை எந்த எந்த தளத்திலிருந்து பெறலாம்?

பயர்வால் கட்டாயம் நமக்குத் தேவை என உணர்ந்த பின்னர் அனைவரும் கேட்கும் கேள்வி இது. இணைய தளத்திலிருந்து கிடைக்கக் கூடிய சில திறமையான பயர்வால்களை இங்கு காணலாம்.

ஸோன் அலார்ம் (ZoneAlarm) என்னும் பயர்வால் தொகுப்பினை Zone Labs என்னும் நிறுவனம் தயாரித்து இலவசமாக இணையத்தில் வழங்குகிறது. இது தனிநபர் பயன்பாட்டிற்கு இலவசம். இந்த தளத்தில் சரியாகச் சென்று இலவச பதிப்பினைக் கிளிக் செய்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். Zone Alarm Security Suite  மற்றும் Zone Alarm Pro என்ற பெயரில் விலைக்குக் கிடைக்கும் பயர்வால்களும் இங்கு கிடைக்கும்.

Sunbelt Keiro  என்னும் தனி நபர் பயன்பாட்டிற்கான பயர்வால் தொகுப்பினை Sunbelt Software என்ற நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இதனை 30 நாட்கள் மட்டுமே இலவசமாகப் பயன்படுத்தலாம். இதற்கான பதிவுக் கட்டணத்தை 30 நாட்களுக்குப் பின் செலுத்தாவிட்டால் இந்த புரோகிராமின் திறன் சிறிது சிறிதாகக் குறைந்து விடும்.  என் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையும் தொடர்ந்து அப்டேட் செய்து வந்தாலும் பயர்வால் ஒன்று நிறுவ வேண்டுமா?

நீங்கள் எச்சரிக்கையாக அனைத்து சாப்ட்வேர் தொகுப்பினையும் அப்டேட் செய்தாலும் உங்கள் சிஸ்டத்திற்குக் கட்டாயம் பயர்வால் ஒன்று தேவை. இதற்கு முதல் காரணம் சாப்ட்வேர் தொகுப்புகளில் காணப் படும் பலவீனமான இடங்களைச் சரியாகக் கண்டறிந்து அவற்றிற்கான பேட்ச் பைல்களை எழுத சில நாட்கள், ஏன் சில மாதங்கள், வருடங்கள், கூட ஆகலாம். இது போன்ற பலவீனமான இடங்கள் இருக்கும் செய்தி மிக வேகமாகப் பரவுகிறது. ஆனால் தீர்வு கிடைக்க மிக மிக தாமதமாக ஆகும். மேலும் பயர்வால் தயாரிப்பவர்கள் வேகமாகச் செயல் படுவார்கள். பேட்ச் பைல் எழுது பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி வரும். மேலும் பயர்வால் தொகுப்புகள் ஏற்கனவே பல வகையான கெடுதல் முயற்சிகளை முறியடிப்பதால் புதிய முயற்சிகளும் எளிதாக முறியடிக்கப்படும். பேட்ச் பைல்களால் இது காலதாமதமாகலாம்.

ஒரு சிலர் விண்டோஸ் பயன்படுத்தாமல் மேக் / லினக்ஸ்/சோலாரிஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துவதால் வைரஸ்கள் தாக்காது என்று எண்ணிக் கொண்டு பயர்வால்களைப் பயன்படுத்து வதில்லை. இது தவறு. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அதில் இயங்கும் புரோகிராம்கள் மட்டுமே பலவீனமாக இருக்கிறதென்று ஹேக்கர்கள் இதற்கான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை எழுதுவதில்லை. அதிகமான எண்ணிக் கையில் இவை பயன்படுத்தப் படுகின்றன என்ற எண்ணத்தில் தான் விண்டோஸ் மற்றும் விண்டோஸ் இயக்க அப்ளிகேஷன்களைத் தாக்க முயல்கின்றனர்.

மேலும் சோலாரிஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கும் அவ்வப்போது பேட்ச் பைல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அப்படி என்றால் அவற்றிலும் ஹேக்கர்கள் பயன்படுத்தக் கூடிய இடங்கள் இருக்கின்றன என்றுதானே பொருளாகிறது. Secunia  என்ற தளத்திற்குச் (http://secunia.com/product/96) சென்றால் மேக் சிஸ்டத்தில் உள்ள அனைத்து பலவீனமான இடங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருப்பதனைக் காணலாம்.

எனவே வேறுபட்ட ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதனாலேயே நீங்கள் இன்றைய மற்றும் எதிர்கால தாக்குதல் களிலிருந்து விடுபட்டிருக்கிறீர்கள் என்று எண்ணுவது தவறு. இந்த தாக்குதல்கள் அனைத்திலிருந்தும் ஒரு பயர்வால் உங்களைக் காப்பாற்றுவது அரிது என்றாலும் அவை அவற்றிற்கான சந்தர்ப்பங்களை தவிர்க்கும் அல்லவா!

2 responses

  1. […] பயர்வால் : ஏன் ? எதற்காக ? […]

  2. I DONT NO COMPUTER ALL SO U WEPSITE IS GOOD

%d bloggers like this: