மதுரை தியாகராசர் பொறியியற்கல்லூரி – யாஹூ ஒப்பந்தம்

தற்போது வேகமாகப் பெருகிவரும் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் இணைந்து பணியாற்ற மதுரையில் இயங்கும் தியாகராசர் பொறியியற் கல்லூரியும் யாஹு நிறுவனமும் மூன்று ஆண்டு கால ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. யாஹூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் சிதம்பரம், தியாகராசர் பொறியியல் கல்லூரியின் தாளாளர் கருமுத்து கண்ணன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தினை ஏற்படுத்தியுள்ளனர். சிதம்பரம் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில் இன்டர்நெட் சேவைக்கான ஆராய்ச்சியில் இந்தக் கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் கொண்டிருக்கும், ஆர்வம் மற்றும் உழைப்பினால் தான் மிகவும் கவரப்பட்டதாகக் குறிப்பிட்டார். அனைவருக்கும் சவால் விடுக்கும் இந்த தொழில் நுட்பத்தினை, இந்தக் கல்லூரி தேர்ந்தெடுத்து செயல்பட்டு வருவது தமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
பொதுவாக யாஹூ நிறுவனம் இத்தகைய அமைப்புகளுடன் மிகக் குறுகிய கால அளவிலான ஒப்பந்தங்களையே மேற்கொள்ளும் என்றும், முதல் முதலாக ஒரு கல்லூரியுடன் மூன்று ஆண்டுகால ஒப்பந்தம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டார். கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது ஒருவர் தன் ஆராய்ச்சியில் அல்லது பயன்பாட்டில் தனக்குத் தேவையான கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் வசதிகளை ஆன் லைனிலேயே பெற்று இயக்குவதாகும். இரு அமைப்புகளும் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், ஒவ்வொரு காலாண்டிலும் அதற்கான ஆய்வுத் தணிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கண்ணன் தெரிவித்தார். ஏனென்றால் இதில் பெருமளவு முதலீடு செய்யப்படுகிறது என்றும் கூறினார். பன்னாட்டளவில், இன்டர்நெட்டில் பல ஆண்டுகளாக இயங்கும் ஒரு நிறுவனத்துடன், ஆராய்ச்சிப் பிரிவில் ஒப்பந்தம் மேற்கொள்வது, கல்லூரிக்குப் பெருமை அளிப்பது மட்டுமின்றி உலக அளவில் கல்லூரியைக் கொண்டு செல்லும் என்றும் குறிப்பிட்டார். கல்லூரி முதல்வர் அபய்குமார் இது பற்றிக் கூறுகையில் கல்லூரி பேராசிரியர்களுடன் மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் பங்கு கொள்வார்கள் என்று அறிவித்தார்

%d bloggers like this: