Daily Archives: ஓகஸ்ட் 30th, 2009

கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த சில வழிகள்

என்னதான் நம் வாழ்க்கையுடன் கம்ப்யூட்டர் இணைந்து விட்டாலும், பாதுகாப்புடன் அதனைப் பயன்படுத்த நூறு சதவிகித உத்தரவாதம் தர முடியாத நிலையில் தான் நாம் இருக்கிறோம். சாலையில் விபத்து நேர்கிறது என்பதற்காக நாம் சாலையில் நடக்காமலோ, பயணம் செல்லாமலா இருக்கிறோம். கவனமாகச் செல்வதில்லையா! அது போல கம்ப்யூட்டர் பயன்படுத்துவதிலும் சில எச்சரிக்கை வழிகளைக் கையாண்டால், பாதுகாப்பாகப் பணி புரியும் சூழ்நிலையை உருவாக்கலாம். கீழே இதற்கான சில சின்ன சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விளக்கப்பட்டுள்ளன. இவை பலமுறை இங்கு கூறப்பட்டாலும் அவற்றை மீண்டும் நினைவில் கொண்டு அமல்படுத்துவது நல்லதல்லவா!

1. பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தரும் மைக்ரோசாப்ட் நிறுவனம், இதில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை பேட்ச் பைல் என்ற வகையில் தருகிறது. மாதம் ஒருமுறை தரப்படும் இந்த பேட்ச் பைல்களை நம் கம்ப்யூட்டர்கள் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் தாமாகப் பெற்று அப்டேட் செய்திடும் வகையில் நம் சிஸ்டத்தில் செட் அப் செய்து வைக்க வேண்டும்.

2. இன்டர்நெட் உலகில் பல வைரஸ் புரோகிராம்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே இதனைக் கண்டறிந்து தடுக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லை எனில் புதிதாய் வரும் வைரஸ்களுக்கு எதிரான தடுப்பு வழிகள் கிடைக்காமல் போகலாம்.

3. ஏதேனும் ஒரு வழியில், இமெயில் அல்லது டவுண்லோட் ஆகும் புரோகிராம் போன்றவற்றின் மூலம், பல ஸ்பைவேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து, நம் சிஸ்டத்தில் உள்ள நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அடுத்தவருக்கு அனுப்புகின்றன. எனவே ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட், விஸ்டாவுடன் விண்டோஸ் டிபன்டர் மற்றும் ஸ்பை ஸ்வீப்பர் புரோகிராம்களைத் தருகிறது.

4. நம் கம்ப்யூட்டருக்குள் வரும் ஸ்பை வேர் புரோகிராம்களைத் தடுக்கும் ஒரு வழி பயர்வால் ஆகும். நம் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டால் அதிலிருந்தும் இது போன்ற புரோகிராம்களைச் செல்ல விடாமல் பயர் வால் தடுக்கிறது. எனவே இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். விஸ்டாவுடன் இதுவும் தரப்படுகிறது. ஸோன் அலார்ம் போன்ற இலவசமாகக் கிடைக்கும் பயர்வால்களையும் பயன்படுத்தலாம்.

5. பயர்வால் புரோகிராம் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும். இவை இரண்டு வைத்துக் கொண்டாலும் ஒரு முறை ஒன்றைப் பயன்படுத்து வதே நல்லது.

6. நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயலவில்லை என்றால் http://www.passpub.com என்ற தளத்தை அணுகவும்.

7. எந்த பாஸ்வேர்டையும் எந்த நேரமும் மாற்றக் கூடிய வசதியினை இன்டர்நெட்டில் உள்ள தளங்கள் தருகின்றன. எனவே பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

8. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

9. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் சிறிய அளவில் அதனை சிறிய அளவில் மாற்றிக் கொள்ளலாம்.

10. ரௌட்டர் இல்லாமல் பிராட்பேண்ட் கனெக்ஷன் வைத்துக் கொள்ளக் கூடாது. அது வயர்டு அல்லது வயர்லெஸ் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவை கட்டாயம் NAT மற்றும் SPI ஆகியவற்றை சப்போர்ட் செய்திட வேண்டும்.

11. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

12. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும். ஆட்டோ ரன் நிறுத்த எக்ஸ்பி சிஸ்டத்தில் கை வைக்க வேண்டும். ஆட்டோ பிளே நிறுத்த ட்வீக் யு.ஐ. (Tweak UI) பயன்படுத்தலாம்.

13. விண்டோஸ், தான் இயங்கும் போது பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் மேல் ஒரு கண் இருக்க வேண்டும். தேவையற்றது அல்லது நீங்கள் அறியாதது என்று இருப்பின் அதனை நிறுத்தலாம். அதனால் கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு பிரச்சினை இல்லை என்றால் நீக்கி வைக்கலாம்.

14. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே அதன் தளத்தைத் தொடர்பு கொள்ளவும்

15. உங்களுக்கு வந்துள்ள இமெயில் செய்திகளில் ஏதேனும் லிங்க் கொடுத்து அவற்றைக் கிளிக் செய்திட உங்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறதா? அவசரப்பட்டு உடனே கிளிக் செய்திட வேண்டாம். அனுப்பியவர் நம்பிக்கைக்குரியவர் என்றாலே கிளிக் செய்திடவும். ஒரு வேளை அவரும் ஏமாந்திருப்பார் என்று எண்ணினால் அவருக்கு இது குறித்து இமெயில் ஒன்று அனுப்பிக் கேட்கவும்.

16. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.

17. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.

18. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.

19. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன் படுத்துங்கள்.

20.ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக் கூடாது.

21. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகிறீர் களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’என S சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.

22. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.

26. பொதுவான பப்ளிக் கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளியேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள்.

27. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail.com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.

28. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.

29. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.

30. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர்பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 ஆகியவை மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.

யு–ட்யூப்தளத்திற்கான பத்து சேவைகள்

எந்த தகவலை எடுத்தாலும், பொருள் குறித்துத் தேடினாலும் அதனை சிறிய வீடியோவாக அமைத்துத் தருவது தற்போது வாடிக்கையாகிறது. இப்போதெல்லாம் மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்ற வீட்டு சாதனங்கள் வாங்கினால், அவற்றை எப்படி இயக்கிப் பார்க்க வேண்டும் என்ற தகவல்கள் எல்லாம் சிறிய வீடியோ கிளிப்களாக நமக்கு ஒரு சிடியில் தரப்படுகின்றன. எனவே தான் மக்கள் அனைவரும் தங்களுக்கான தகவல்களைத் தேடுகையில் முதலில் வீடியோ காட்சிகளாக அவை கிடைக்கின்றனவா என்று தேடுகின்றனர். இந்த வகையில் நாம் அனைவரும் தேடும் தளம் யு–ட்யூப் தளமாகும். இங்கு தேடும் பொருள் குறித்த மற்றும் சார்ந்த வீடியோ காட்சிகள் அதிகம் கிடைக்கின்றன. ஆனால் இவற்றைத் தேடிப் பெறுவதோடு நாம் நின்றுவிடுவதில்லை. இவற்றை டவுண்லோட் செய்து மீண்டும் மீண்டும் பார்க்க எண்ணுகிறோம். கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, நம் ஐ–பாட் மற்றும் மொபைல் போன்களில் கூட இவற்றைப் பதிந்து வைத்துக் காண விரும்புகிறோம். அவற்றிற்கு உதவும் சில புரோகிராம்கள் மற்றும் வழிகள் இங்கு தரப்படுகின்றன.

1. வீடியோ பார்மட் மாற்ற:

யு–ட்யூப் வீடியோக்களை flv, .3gp, ,mp3, ,AVI போன்ற பார்மட்டுகளுக்கிடையே மாற்றிப் பதிந்து கொள்ள Anjo.to என்னும் ஆன்லைன் வசதி இலவசமாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட வீடியோ கிளிப்பினை இயக்கிப் பார்த்து அதன் தள முகவரியைக் குறிப்பிட்டால், இந்த தளம் நமக்கு அதனை நாம் கேட்கும் பார்மட்டில் மாற்றி அமைத்து நம் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கும். இந்த வசதி பெற செல்ல வேண்டிய தள முகவரி: en.anjo.to

2. வேகமாக டவுண்லோட் நடைபெற:

வீடியோ காட்சிகளை டவுண்லோட் செய்து பார்க்க அந்த தளம் சீரான வேகத்தில் நம் கம்ப்யூட்டரை அடைய வேண்டும். இல்லையேல் சிறிது சிறிதாக இடைவெளி விட்டுத்தான் அவை நமக்குக் கிடைக்கும். இந்த டவுண்லோட் செய்திடும் பணியை வேகமாக மேற்கொள்ள நமக்குக் கிடைப்பதுதான் SpeedBit Video Accelerator என்ற புரோகிராம் ஆகும். இது Download Accelerator போலவே செயல் படுகிறது. இது ஒன்றுக்கு மேற்பட்ட சேனல்களைத் திறந்து வீடியோ காட்சியினைக் கைப்பற்றி வேகமாக அதனை கம்ப்யூட்டருக்கு இறக்குகிறது. இதனைப் பெற செல்ல வேண்டிய தள முகவரி: http://www.videoaccelerator.com/

3. பயர்பாக்ஸில் வேகத்தைத் துரிதப்படுத்த:

மீடியா பைரேட் (Media Pirate) என்னும் நிறுவனம் வீடியோ டவுண்லோடர் (Downloader) என்னும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை உருவாக்கித் தந்துள்ளது. இது பிளாஷ் பிளேயர் போன்றவற்றில் எம்பெட் ஆகியுள்ள வீடியோ காட்சிகளை மிக வேகமாக நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து கொள்ள உதவுகிறது. இந்த புரோகிராம் கிடைக்கும் முகவரி http://www.mediaconverter.org/

4. யு–ட்யூப்பினை எடிட் செய்திட:

ஆன்லைனில் யு ட்யூப் ரீ மிக்சர் (youtuberemixer) என்று ஒரு வசதி கிடைக்கிறது. இதன் மூலம் யு–ட்யூப் பயன்படுத்துபவர்கள் அதனை அதன் தளத்தில் வைத்தே எடிட் செய்யலாம்; மாற்றி அமைக்கலாம் மற்றும் மெருகூட்டலாம். இது அடோப் பிரிமியர் எக்ஸ்பிரஸ் டெக்னாலஜி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் கிராபிக்ஸ் காட்சிகளை ஒரு பிரேமில் நுழைக்க முடிகிறது. அத்துடன் டெக்ஸ்ட் மற்றும் ஆடியோ பைல்களையும் இணைக்கலாம். இது குறித்த முழு தகவல் களையும் அறிய http://www.sizlopedia.com/2007/06/17/youtuberemixertheonlineyoutubevideoeditor/ என்ற முகவரியில் உள்ள தகவல்களைப் பெறவும்.

5. யு–ட்யூப் வீடியோவை கம்ப்யூட்டரில் இயக்க:

ஆன் லைனில் FLV Player என்ற ஒரு புரோகிராம் கிடைக்கிறது. இதன் மூலம் யு–ட்யூப் தளத்திலிருந்து டவுண்லோட் செய்த வீடியோக் களைக் காணலாம்.இந்த புரோகிராம் தரும் எளிய கண்ட்ரோல்கள் மூலம் யு–ட்யூப் வீடியோக்களை இயக்கி அவற்றின் முன்னும் பின்னும் செல்லலாம். இந்த புரோகிராமினைப் பெற http://www.download.com/30002139_410505954.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

6. பயர்பாக்ஸிற்கான யு–ட்யூப் பிளேயர்:

யு–பிளேயர் (YouPlayer)  என்ற பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஓர் ஆட்–ஆன் தொகுப்பு இணையத்தில் கிடைக்கிறது. இது பயர்பாக்ஸ் வெப் பிரவுசரில் யு–ட்யூப் வீடியோ பிளேயரை இணைக்கிறது. இதில் உங்களுக்குப் பிடித்தமான யு–ட்யூப் வீடியோக்களைக் காணலாம். இதனை ஒரு புக் மார்க்கர் ஆகவும் பயன்படுத்தலாம். இதில் யு–ட்யூப் லிங்க்குகளை இழுத்து வந்து இதில் விட்டுவிட்டால் தேவைப்படும்போது பார்த்துக் கொள்ளலாம். இது குறித்த முழுமையான தகவல்களை https://addons.mozilla.org/enUS/firefox/addon/5709 என்ற முகவரி யில் உள்ள தளத்தில் பெறலாம்.

7. டெஸ்க்டாப்பில் ஒரு டவுண்லோடர்:

ஆர்பிட் டவுண்லோடர் (Orbit Downloader) என்ற பெயரில் இலவச டெஸ்க்டாப் புரோகிராம் ஒன்று இணையதளத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் பலவகையான தளங்களிலிருந்து வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட முடியும். டவுண்லோட் செய்திடும் வழி மிகவும் எளிமையானது. இந்த புரோகிராமினை இயக்கிய பின்னர், குறிப்பிட்ட வீடியோ மீது மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லவும். அங்கு �Get It�ல என்ற ஒரு பட்டன் கிடைக்கும். அதில் கிளிக் செய்தால் குறிப்பிட்ட வீடியோ பைலாக இறக்கப்படும். http://www.orbitdownloader.com/ என்ற முகவரிக்குச் சென்றால் மேலும் தகவல்களும், இந்த புரோகிராமும் கிடைக்கும்.

8. வீடீயோ பைலை அப்லோட் செய்திட:

மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என நாம் விரும்பும் வீடியோ காட்சிகளை அப்லோட் செய்திட யு–ட்யூப் தளம் வழி தருகிறது. யு–ட்யூப் அப்லோடர் (YouTube Uploader) என ஒரு புரோகிராம் அந்த தளம் செல்லாமலேயே வீடியோக்களை அப்லோட் செய்திட நமக்கு உதவுகிறது. http://www.softplatz.com/Soft/AudioMultimedia/VideoTools/FreeYouTubeUploader.html என்ற முகவரியில் இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்திடலாம்.

9. யு–ட்யூப் வீடியோவின் பார்மட் மாற்ற:

யு–ட்யூப் தளத்தில் கிடைக்கும் வீடியோக்களை அனைத்து சாதனங்களிலும் பிளே செய்து பார்க்க முடியாது. எந்த சாதனத்தில் இயக்கிப் பார்க்க வேண்டுமோ அதற்கான பார்மட்டிற்கு அதனைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த பார்மட் மாற்றும் வசதியினை கன்வெர்ட் ட்யூப் (Convert Tube) என்னும் புரோகிராம் தருகிறது. ஆன்லைனிலேயே பார்மட்டை மாற்றி,பெர்சனல் கம்ப்யூட்டர், ஐ–பாட், பி.எஸ்.பி., ஐ–போன், மொபைல் போன் இவற்றிற்குக்க் கொண்டு சென்று இயக்கிப் பார்க்கலாம். http://converttube.com/  என்ற தளத்திற்குச் சென்று இந்த புரோகிராமினை இலவசமாகப் பெறவும். இதில் ஒரு ருசியான தகவல் என்னவெனில், இந்த தளத்தை வாங்க உங்களுக்கு விருப்பம் என்றால் 2000 டாலருக்கு மேல் குறிப்பிடும் தொகையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

10. ஐ–பாட் மற்றும் ஐ–போனுக்கு மாற்ற:

யு–ட்யூப் வீடியோக்களை ஐ–பாட் மற்றும் ஐ–போனில் பார்த்து ரசிக்க அவற்றை அதற்கேற்ற வகையில் மாற்ற வேண்டும். http://www.dvdvideosoft.com/freedvdvideosoftware.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் தொகுப்பு இந்த வேலையை மேற்கொள்கிறது. மேலே குறிப்பிட்ட தளங்களில் தரப்பட்டுள்ள சாதனங்களை இறக்கி, உங்களுக்குப் பிடித்த யு–ட்யூப் வீடியோக்களைப் பார்த்து ரசிக்கவும்.

பயர்வால் : ஏன் ? எதற்காக ?

பயர்வால் என்பது நம்முடைய கம்ப்யூட்டரை நெட்வொர்க் ( இன்டர்நெட் போன்ற) ஒன்றில் இணைக்கையில், அதனை நாம் அறியாமல் தாக்கவரும் ஒரு புரோகிராமினைத் தடுக்கும் ஒரு ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் புரோகிராமாகும். இங்கு “தாக்குதல்’ என்பது கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்கும்போது, அவற்றின் பலவீனமான கட்டமைப்பினைப் புரிந்து கொண்டு அவற்றின் வழியாக உள் நுழைந்து கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடக்கும் அல்லது கைப் படுத்தும் புரோகிராம் செயல்பாட்டினைக் குறிப்பதாகும்.

இதில் பலவீனம் என்பது என்ன என்று இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காணலாம். சில நேரங்களில் ஆடியோ அல்லது வீடியோ பைல் ஒன்றை இயக்க முயற்சிக்கையில் கம்ப்யூட்டரில் உள்ள மல்ட்டி மீடியா பிளேயர், இந்த பைல் புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் இருக்கிறது; இருந்தாலும் இயக்கிப் பார்க்கவா என்று கேட்கும். நாமும் நம் ஆர்வத்தில் சரி என்று கட்டளையிடுகையில், மல்ட்டி மீடியா பிளேயர் கிராஷ் ஆகி முடங்கிப் போகும் சூழ்நிலை ஏற்படலாம். அந்த நேரத்தில் அந்த ஆடியோ அல்லது வீடியோ பைலில் எழுதப்பட்ட கெடுதல் விளைவிக்கும் வரிகள் உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வகை புரோகிராம்கள் செயல்பட வழி ஒன்றைத் தானாக அமைத்துக் கொள்ளும்.

இரண்டா வதாக, இன்டர் நெட்டில் கம்ப்யூட்டர் இணைப்பில் இருக்கை யில், இது போன்ற கெடுதல் விளை விக்கும் கம்ப்யூட்டரி லிருந்து தொடர்ந்து உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு வழி கேட்டு ஆணை கள் வரலாம். அப்போது உங்கள் கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்கத் தொடங்கலாம்; ஊர்ந்து போய் நின்று விடலாம்; அல்லது கிராஷ் ஆகி முடங்கிப்போகலாம்.

பயர்வால்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள, தெரிந்த மற்றும் தெரிய வரும், இந்த பலவீனமான இடங்களை அடைத்திடும். இதனை இரண்டு வழிகளில் இவை மேற்கொள்கின்றன. சிஸ்டத்தின் உள்ளாக பயர்வால் ஒன்று அமைக்கப்பட்டு அவை நெட்வொர்க் ஒன்றிலிருந்து வரும் டேட்டாவினை முழுமையாகச் சோதனை இட்டு சரியான டேட்டாவினை மட்டும் அனுமதிக்கிறது.

இன்னொரு வகை பயர்வால் சிஸ்டத்தின் வெளியாக அமைக்கப்படுகிறது. இது உங்கள் கம்ப்யூட்டரின் ஒரு பகுதி இது போன்ற புரோகிராம்களால் பாதிக்கப்பட்டிருந்தால், மோசமான டேட்டாவினை நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டர்களுக்கு அனுப்புவதனைத் தடுக்கிறது. மிகச் சிறப்பான பயர்வால்கள் இந்த இருவகை தடுப்பு சுவர்களையும் அமைத்துச் செயல்படுகின்றன. பயர்வால் ஒன்று இருப்பதனாலேயே, உங்கள் கம்ப்யூட்டர், கெடுக்கும் புரோகிராம் களிடமிருந்து முழுமையான பாதுகாப்பில் உள்ளது என்று கூறிவிட முடியாது. அத்தகைய சந்தர்ப்பங்களை அது பெரும்பாலும் தடுத்துவிடும்.

‘Firewall’’என்ற சொல் Fire மற்றும் Wall என்ற சொற்களை இணைத்து உருவாக்கப் பட்டுள்ளது. வீடு, அலுவலகம் மற்றும் அது போன்ற கட்டடங்களில், ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குத் தீ பரவுவதைத் தடுக்க அமைக்கப்பட்ட சுவரினை இது குறிக்கிறது. அதே போல கம்ப்யூட்டரில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் பரவுவதனை இது தடுக்கிறது. விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்புடன் பயர்வால் ஒன்று தரப்படுகிறது. இன்டர்நெட்டில் இருக்கையில் நம் கம்ப்யூட்டரை இது பாதுகாக்காதா?

ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் இந்த பயர்வால், நீங்கள் சர்வீஸ்பேக் 2 இயக்கி இருந்தால், தானாக டிபால்ட் பயர்வால் ஆக அமைக்கப்படும். இருப்பினும் இதற்கும் மேலாக, அல்லது இதற்குப் பதிலாக, இன்னொரு பயர்வால் அமைப்பதே நல்லது. விண்டோஸ் பயர்வால் வெளியிருந்து உள்ளே வரும் கெடுதல் புரோகிராம்களை மட்டும் தடுக்கிறது. உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் அல்லது ஸ்பைவேர் தொகுப்பினால் பாதிக்கப் பட்டால், பாதிக்கப்பட்ட உங்கள் கம்ப்யூட்டரி லிருந்து அதே கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் செல்வதை அது தடுக்காது.

விண்டோஸ் எக்ஸ்பியின் பயர்வால் நவீன சில வசதிகளைக் கொண்டிருக்காது. சில பயர்வால் தொகுப்புகள் ஒரு ஐ.பி. முகவரி யிலிருந்து தொடர்ந்து கெடுதல் விளைவிக்கும் டேட்டா வந்தால், பின் அந்த முகவரியிலிருந்து எது வந்தாலும் தடுக்கும் தன்மையினைக் கொண்டுள்ளன. இது போன்ற கெடுதல் வேலையைச் சில தளங்கள் மேற்கொள்வதாகக் கண்டறியப்பட்டால், சில பயர்வால்கள் மொத்தமாக அந்த தளங்கள் நெட்வொர்க்கில் இணைவதனையே நிறுத்திவிடுகின்றன.

சில சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் தங்களின் தாய்வீட்டுத் தளத்தினைத் தொடர்ந்து காண்டாக்ட் செய்து கொண்டே இருக்கும். அந்த அப்ளிகேஷன்களுக்கான அப்டேட் எதுவும் வெளியாகி உள்ளதா என்று தெரிந்து கொள்வதற்காக. பல வேளைகளில் இது போன்ற நடவடிக்கைகள் அந்த சாப்ட்வேர் தயாரித்தவர் தன் புரோகிராம்கள் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்று அறிவதற்காக இருக்கலாம். இவ்வாறான நடவடிக்கைகளைக் கண்ட்ரோல் செய்திட வெவ்வேறு பயர்வால் களை செட் செய்து அமைக்கலாம்.

இலவச பயர்வால் தொகுப்புகளை எந்த எந்த தளத்திலிருந்து பெறலாம்?

பயர்வால் கட்டாயம் நமக்குத் தேவை என உணர்ந்த பின்னர் அனைவரும் கேட்கும் கேள்வி இது. இணைய தளத்திலிருந்து கிடைக்கக் கூடிய சில திறமையான பயர்வால்களை இங்கு காணலாம்.

ஸோன் அலார்ம் (ZoneAlarm) என்னும் பயர்வால் தொகுப்பினை Zone Labs என்னும் நிறுவனம் தயாரித்து இலவசமாக இணையத்தில் வழங்குகிறது. இது தனிநபர் பயன்பாட்டிற்கு இலவசம். இந்த தளத்தில் சரியாகச் சென்று இலவச பதிப்பினைக் கிளிக் செய்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். Zone Alarm Security Suite  மற்றும் Zone Alarm Pro என்ற பெயரில் விலைக்குக் கிடைக்கும் பயர்வால்களும் இங்கு கிடைக்கும்.

Sunbelt Keiro  என்னும் தனி நபர் பயன்பாட்டிற்கான பயர்வால் தொகுப்பினை Sunbelt Software என்ற நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இதனை 30 நாட்கள் மட்டுமே இலவசமாகப் பயன்படுத்தலாம். இதற்கான பதிவுக் கட்டணத்தை 30 நாட்களுக்குப் பின் செலுத்தாவிட்டால் இந்த புரோகிராமின் திறன் சிறிது சிறிதாகக் குறைந்து விடும்.  என் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையும் தொடர்ந்து அப்டேட் செய்து வந்தாலும் பயர்வால் ஒன்று நிறுவ வேண்டுமா?

நீங்கள் எச்சரிக்கையாக அனைத்து சாப்ட்வேர் தொகுப்பினையும் அப்டேட் செய்தாலும் உங்கள் சிஸ்டத்திற்குக் கட்டாயம் பயர்வால் ஒன்று தேவை. இதற்கு முதல் காரணம் சாப்ட்வேர் தொகுப்புகளில் காணப் படும் பலவீனமான இடங்களைச் சரியாகக் கண்டறிந்து அவற்றிற்கான பேட்ச் பைல்களை எழுத சில நாட்கள், ஏன் சில மாதங்கள், வருடங்கள், கூட ஆகலாம். இது போன்ற பலவீனமான இடங்கள் இருக்கும் செய்தி மிக வேகமாகப் பரவுகிறது. ஆனால் தீர்வு கிடைக்க மிக மிக தாமதமாக ஆகும். மேலும் பயர்வால் தயாரிப்பவர்கள் வேகமாகச் செயல் படுவார்கள். பேட்ச் பைல் எழுது பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி வரும். மேலும் பயர்வால் தொகுப்புகள் ஏற்கனவே பல வகையான கெடுதல் முயற்சிகளை முறியடிப்பதால் புதிய முயற்சிகளும் எளிதாக முறியடிக்கப்படும். பேட்ச் பைல்களால் இது காலதாமதமாகலாம்.

ஒரு சிலர் விண்டோஸ் பயன்படுத்தாமல் மேக் / லினக்ஸ்/சோலாரிஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துவதால் வைரஸ்கள் தாக்காது என்று எண்ணிக் கொண்டு பயர்வால்களைப் பயன்படுத்து வதில்லை. இது தவறு. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அதில் இயங்கும் புரோகிராம்கள் மட்டுமே பலவீனமாக இருக்கிறதென்று ஹேக்கர்கள் இதற்கான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை எழுதுவதில்லை. அதிகமான எண்ணிக் கையில் இவை பயன்படுத்தப் படுகின்றன என்ற எண்ணத்தில் தான் விண்டோஸ் மற்றும் விண்டோஸ் இயக்க அப்ளிகேஷன்களைத் தாக்க முயல்கின்றனர்.

மேலும் சோலாரிஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கும் அவ்வப்போது பேட்ச் பைல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அப்படி என்றால் அவற்றிலும் ஹேக்கர்கள் பயன்படுத்தக் கூடிய இடங்கள் இருக்கின்றன என்றுதானே பொருளாகிறது. Secunia  என்ற தளத்திற்குச் (http://secunia.com/product/96) சென்றால் மேக் சிஸ்டத்தில் உள்ள அனைத்து பலவீனமான இடங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருப்பதனைக் காணலாம்.

எனவே வேறுபட்ட ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதனாலேயே நீங்கள் இன்றைய மற்றும் எதிர்கால தாக்குதல் களிலிருந்து விடுபட்டிருக்கிறீர்கள் என்று எண்ணுவது தவறு. இந்த தாக்குதல்கள் அனைத்திலிருந்தும் ஒரு பயர்வால் உங்களைக் காப்பாற்றுவது அரிது என்றாலும் அவை அவற்றிற்கான சந்தர்ப்பங்களை தவிர்க்கும் அல்லவா!