Daily Archives: செப்ரெம்பர் 19th, 2009

உங்களுக்குத் தெரியுமா?

அடுத்து வந்து மாற்றத்தைத் தர இருக்கும் ஒரு கம்ப்யூட்டர் சாதனம் – புளுடூத் லேசர் விர்ச்சுவல் கீ போர்டு (Bluetooth Laser Virtual Keyboard). இது எந்த சமதளமான இடத்திலும் கீ போர்டு ஒன்றைக் காட்டும். இதன் மூலம் நீங்கள் எந்த டெக்ஸ்ட்டையும் டைப் செய்யலாம். டைப் செய்கையில் ஏற்படும் கிளிக் சத்தம் இதிலும் ஏற்படும். 63 கீகளுடன் கூடிய முழு குவெர்ட்டி கீ போர்டாக இது கிடைக்கும். ஒரு ஸ்டாண்டர்ட் கீ போர்டில் எந்த வேகத்தில் டைப் செய்திட முடியுமோ அந்த வேகத்தில் இதில் டைப் செய்துவிடலாம். வர இருக்கும் மிகச் சிறந்த அறிவியல் சாதனமாக இது இருக்கும்.

முதல் முதலாகத் தானாக இயங்கும் முழுமையான ஆட்டோமேடிக் மொபைல் சிஸ்டம்

(MTA Mobile Telephone System) எரிக்சன் நிறுவனத்தால் வடிவமைக்கப் பட்டது. வர்த்தக ரீதியாக 1956ல் இது வெளியிடப்பட்டது. இதன் ஒரே பிரச்சினை இதன் எடை தான். 90 பவுண்ட் அதாவது ஏறத்தாழ 40 கிலோ எடையில் இது இருந்தது. பின்னர் இதன் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ஒன்று ட்ரான்சிஸ்டர்களைக் கொண்டு (DTMF)  சிக்னல் வகையைப் பயன்படுத்தியது. தொடக்கத்தில் இதற்கு 150 வாடிக்கையாளர்கள் இருந்தனர். நடத்த முடியாமல் மூடியபோது இதன் வாடிக்கை யாளர்கள் எண்ணிக்கை 600. இது நடந்தது 1983ல்.

உலகின் முதல் வெப்சைட் CERN ஆகஸ்ட்6, 1991 ஆம் ஆண்டு ஆன்லைனில் வைக்கப்பட்டது.

World Wide Web  எப்படி இருக்கும் என்பதனை விளக்குவதற்காக இது ஆன்லைனில் அமைக்கப் பட்டது. அத்துடன் ஒருவர் எப்படி ஒரு வெப்சைட்டைத் தன்னு டையதாக அமைத்துக் கொள்ளலாம் என்றும் வெப் சர்வர் ஒன்றை எப்படி அமைக்கலாம் என்று விளக்கியது. இதுதான் உலகின் முதல் வெப் டைரக்டரியும் கூட. ஏனென்றால் பெர்னர்ஸ் லீ இதில் மற வெப்சைட்களின் பட்டியலையும் வெளியிட்டிருந்தார்.

இன்டர்நெட்டை மிகச் சிறந்த முறையில் வரையறைகளை வகுத்துக் கண்காணித்து வரும் World Wide Web Consortium (W3C)  என்ற அமைப்பு,1994 ஆம் ஆண்டு, மாசசு ட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பல்கலையில் பெர்னர்ஸ் லீ (BernersLee)யினால் அமைக்கப்பட்டது. இணைய வலையின் தன்மையை மேம்படுத்த எண்ணம் கொண்ட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கின. இந்த அமைப்புக்கான கட்டமைப்பு மற்றும் சார்ந்த கொள்கைகளையும், எந்தவிதமான ராயல்டி பணமும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாகத் தர முன்வந்தார். அதனாலேயே பல நாடுகள் அவற்றைப் பின்பற்ற முன்வந்தன.

1955, அக்டோபர் 28 – இது என்ன நாள்? பில்கேட்ஸ் பிறந்த நாள். சாதாரண பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்த பில்கேட்ஸ் தனக்கு கம்ப்யூட்டர் மேல் உள்ள ஆர்வத்தினைத் தன் 13 ஆவது வயதில் உணர்ந்தார். தன் 18 ஆவது வயதில், 1973ல், ஹார்வேர்ட் பல்கலையில் படிக்கும்போது மைக்ரோ கம்ப்யூட்டர்களுக்கான BASIC  என்னும் புரோகிராமிங் மொழியை உருவாக்கினார்.

புளுடூத் என்ற தொழில் நுட்பத்திற்கு ஏன் அந்த பெயர் வந்தது? சத்தியமாக பல்லுக்கும் கலருக்கும் இந்த தொழில் நுட்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பத்தாம் நூற்றாண்டில் ஒரு டேனிஷ் மன்னன் Harald Blatand என்ற பெயரில் இருந்தான். இந்த பெயரை புளுடூத் என்று உச்சரிக்க வேண்டுமாம். இந்த மன்னர் ஸ்காண்டிநேவியாவில் துண்டு துண்டாக இருந்த நிலப்பரப்பை ஒன்றினைத்து ஒரு நாட்டை உருவாக்கி அரசாட்சியை ஏற்படுத் தினாராம். புளுடூத் டெக்னாலஜியிலும் துண்டு துண்டான டேட்டாவை குறுகிய ஏரியாவிற்குள், எந்த இணைப்பும் இன்றி இணைப்பதால், புளுடூத் கண்டறிந்த வல்லு நர்கள் இந்த பெயரினைக் கொடுத்தார்கள்.

3ஜி போன் இதோ அதோ என்று இந்தியாவிற்கு வருவது இருக்கட்டும். விரைவில் 4ஜி வந்து இந்த உலகைப் புரட்டி எடுக்கப்போகிறது. 4ஜி மொபைல் இந்த உலகத்தை மட்டுமல்ல, உங்கள் தனிநபர் உலகினையும் மாற்றப் போகிறது. உள்ளங்கைக்குள் அடங்கும் போனாக அது இருக்கும். எடை என்பது குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்காது. நம் வர்த்தக பேரம், பேமென்ட் எல்லாம் இதன் வழியாக மாறிவிடும். இப்போது கடைகளில் பொருள் வாங்கிப் பணம் கொடுக்கச் சென்றால் கேஷா? கார்டா? எனக் கேட்கிறார்கள். 4ஜி வந்துவிட்டால் கார்டா? போனா? என்று கேட்பார்கள். நியூஸ் பேப்பர் வாங்க மாட்டீர்கள். இதிலேயே எளிதாகவும் மலிவாகவும் படித்துக் கொள்ளலாம். இதிலிருந்தே திரைப்படம் ஒன்றை சுவரில் காட்டிப் பார்க்கலாம். உங்கள் ஏர் கண்டிஷ னரையும், மைக்ரோ ஓவன் அடுப்பையும் இதன் மூலம் உங்கள் அலுவலகத்திலிருந்தே இயக்கலாம். விபத்து ஏற்பட்டால் இதன் மூலம் உங்கள் டாக்டர் என்ன செய்திட வேண்டும் என செய்து காட்டலாம்.

உங்கள் மேஜையில் வைக்கப்பட்ட உணவு தரமானது இல்லை என்று உங்கள் மொபைல் கூறும். “தொடர்ந்து போகாதே; அங்கு ஒருவன் துப்பாக்கியுடன் உள்ளான்’ என்று கூட எச்சரிக்கும். காத்திருங்கள் 4ஜி மொபைல் போனுக்கு. விண்டோஸ் இயக்கத்தில் பல புரோகிராம்களை எப்படி ஸ்டார்ட் அப் விண்டோவில் கிடைக்கும் ரன் கட்டத்தில் கொடுத்து வாங்குவது என்று இதற்கு முன் கம்ப்யூட்டர் மலரில் எழுதப்பட்டுள்ளது. கீழே இன்னும் சில புதிய கட்டளைகள் தரப்படுகின்றன. இவற்றைச் சரியாக ரன் கட்டத்தில் டைப் செய்தால் தரப்பட்டுள்ள இடத்திற்கான ஷார்ட் கட் கீகளாக அவை அமையும்.

1. மை கம்ப்யூட்டர் பெற:

explorer.exe /root,,::{20D04FE03AEA1069A2D808002B30309D}

2. மை கம்ப்யூட்டரில் சி டிரைவ் செலக்ட் செய்தபடி கிடைக்க
explorer.exe /select,c:

3. மை நெட்வொர்க் பிளேசஸ் செல்ல:

explorer.exe /root,,::{208D2C603AEA1069A2D708002B30309D}

4. ரீசைக்கிள் பின் பெற:
explorer.exe /root,,::{645FF0405081101B9F0800AA002F954E}

5. டாஸ்க் மேனேஜர் கிடைக்க:
taskmgr.exe

6. கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட் விண்டோவிற்கு:

compmgmt.msc

7. சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் கிடைக்க:
control.exe sysdm.cpl

8. வால்யூம் கண்ட்ரோல் கிடைக்க:
sndvol32.exe

9. டேட் மற்றும் டைம் ப்ராபர்ட்டீஸ் கிடைக்க:
sndvol32.exe

10. லாக் ஆப் செய்திட:
shutdown.exe l

11. யூசர் மாற்றவும் கம்ப்யூட்டரை லாக் ஆப் செய்திடவும்:
rundll32.exe user32.dll LockWorkStation

12. சிஸ்டம் ஹைபர்னேட் செய்திட:
rundll32.exe powrprof.dll,SetSuspendState

13. சிஸ்டம் ரீஸ்டார்ட் செய்திட:
shutdown.exe r

14. ஷட் டவுண் செய்திட:
shutdown.exe s

வேர்ட் தரும் விரும்பாத வசதிகள்

மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பில் அனைவரும் அதிகம் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பில், நாம் விரைவாகச் செயலாற்ற பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இவற்றை மவுஸ் மூலமாகவும், கீ போர்டில் ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இயக்குவது மூலமாகவும் பயன்படுத்தி வருகிறோம். சில வசதிகளை நாம் செட் செய்திட வேண்டும்; சில வசதிகள் டிபால்ட்டாக, மாறா நிலையில் அமைத்தே தரப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தையும் அனைவரும் விரும்புகிறோமா என்றால், பலர் இது எனக்கு வேண்டாம் என்றே சொல்வார்கள். அத்தகைய சில வசதிகளை இங்கு காணலாம்.

இவற்றைப் பார்க்குமுன் சில முன்னெச்சரிக் கைகளையும் மனதில் கொள்ள வேண்டும். இத்தகைய வசதிகளில் பெரும்பாலானவை AutoFormat As You Type என்ற டேப்பின் கீழ் தான் தரப்பட்டுள்ளன. அதில் தரப்பட்டுள்ள பல வசதிகள் AutoFormat  என்பதன் கீழும் இருப்பதனைப் பார்க்கலாம். இவற்றை மொத்தமாக செயல்படாத வண்ணம் நீங்கள் முடக்கி வைக்கலாம். பார்மட் மெனு சென்று அதில் இந்த டேப்களைக் கிளிக் செய்து இவை அனைத்தையும் நிறுத்தி வைக்கலாம். ஆனால் இதனால் உங்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே இவை வேண்டாம் என்றால், வேர்ட் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்தியவுடன், நீங்கள் உடனே கண்ட்ரோல் + இஸட் அழுத்தினால் போதும். ஆனால் டைப் செய்திடும் வேகத்தில் இதனை மேற்கொள்வது என்பது ஓடும் நம் கால்களில் நாமே கல்லைத் தூக்கிப் போடுவதற்குச் சமம். எனவே இவற்றை எந்த நிலையில் வைத்துப் பயன்படுத்தலாம் என்பதனைச் சற்று யோசித்து, பின் இயங்காமல் வைத்திடும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

1. டாகுமெண்ட் ஒன்றை நீங்கள் டைப் செய்கையில் ஏதேனும் வெப்சைட் முகவரியை டைப் செய்தால், வேர்ட் உடனே அதனை ஒரு லிங்க்காக மாற்றிவிடுகிறது. இதனை மாற்ற Tools | AutoCorrect  செல்லவும். பின் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் AutoFormat As You Type  என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். Replace As You Type என்பதன் கீழ் internet and network paths with hyperlinks  என்பதில் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் OK  கிளிக் செய்து வெளியேறவும்.

2. நீங்கள் டைப் செய்திடுகையில் சில எழுத்துக்களை கேப்பிடல் எழுத்துக்களாக வேர்ட் மாற்றுகிறது. இந்த செயல்பாடு பல சூழ்நிலைகளில் இயக்கப்படுகிறது. இதனை மாற்ற Tools | AutoCorrect  செல்லவும். பின் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் AutoCorrect  என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் கீழே கீழ்க்காணும் ஆப்ஷன்கள் இருக்கும். இதில் எது உங்களுக்கு எரிச்சலாகத் தோன்றுகிறதோ அதனை நீக்கிவிடலாம். வேர்டில் பெரும்பாலும் தமிழில் டைப் செய்பவர்களுக்கு இவை எதுவுமே உதவப் போவதில்லை. ஏனென்றால் இவை அனைத்துமே ஆங்கில மொழி பயன்பாட்டின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் ஆங்கிலத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு இவை தேவைப்படும். எது தேவை யில்லையோ அவற்றை மட்டும் நீக்கி வைக் கலாம். பின் தேவைப்படும்போது மீண்டும் இயக்க நிலைக்கு செட் செய்திடலாம். கிடைக்கும் வசதிகள் பின்வருமாறு:

Correct Two Initial Capitals

Capitalize First Letter Of Sentences

Capitalize First Letter Of Table Cells

Capitalize Names Of Days

Correct Accidental Use Of Caps Lock Key

3. நாம் டெக்ஸ்ட் டைப் செய்து கொண்டிருக்கையில் திடீரென எதிர்பாராத நேரத்தில் வேர்ட் சில குறியீடுகளை (ட்ரேட்மார்க், காப்பி ரைட் அடையாளங்கள்) ஏன், பெரிய அளவில் டெக்ஸ்ட்களை இணைக்கிறது. இது ஏன் என்று பலருக்குப் புரிவதில்லை. இதனை எப்படி சமாளிக்கலாம் என்று பார்க்கலாம். இதனை மாற்ற Tools | AutoCorrect செல்லவும். பின் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் AutoCorrect என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் இந்த முறை Replace Text As You Type  என்ற பாக்ஸைக் காணவும். இப்போது அங்கு காணப்படும் அனைத்து மாற்றங் களையும் வேண்டாம் என மொத்தமாக முடக்கி வைக்கலாம். அல்லது தேவைப்படும் செயல் பாட்டினை மட்டும் வைத்துக் கொண்டு, பிறவற்றை நீக்கலாம். இதைக் கொஞ்சம் கவனமாகக் கையாள வேண்டும். ஏனென்றால் நம்மில் பெரும்பாலானோர் இழைக்கும் ஸ்பெல்லிங் தவறுகள் பெரும்பாலானவை இந்த பட்டியலில் இருக்கும். டைப் செய்திடும் அவசரத்தில் நாம் செய்திடும் தவறுகளும் இருக்கும். வேர்ட் இவற்றைத் தானாகச் சரி செய்திடும் வகையில் இவை செட் செய்யப்பட்டிருக்கும். எனவே எந்த வகை தவறினை நீங்கள் செய்திட வாய்ப்பில்லையோ அவற்றை மட்டும் முடக்கி வைக்கலாம்.

4. சில நேரங்களில் சாதாரணமாக எண்களை டைப் செய்கையில் அவற்றை வேர்ட் சூப்பர் ஸ்கிரிப்ட் ஆக (சொற்கள் அல்லது எண்களுக்கு மேலாக சிறிய அளவில் எண்ணாக –  1st and 2nd போல) அமைக்கும். இதனை மாற்ற Tools | AutoCorrect செல்லவும். பின் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் Auto Format As You Type என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் Ordinals (1st) With Superscript  என்ற பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.

5. சில பின்னங்களை (1/2) அமைக்கும் போது, வேர்ட் தானாக வடிவமைத்த சில பார்மட்டுகளில் அவற்றை அமைக்கும். இதனை மாற்ற Tools | AutoCorrect செல்லவும். பின் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் AutoFormat As You Type என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் Fractions (1/2) With Fraction Character  என்ற பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.

6. அபாஸ்ட்ரபி (`) மற்றும் மேற்கோள் (“”) குறிகளை வளைவான குறியீடுகளாக வேர்ட் மாற்றும். நாம் விரும்பிய குறியீடுகளை இதனால் டாகுமெண்ட்டில் அமைக்க முடியாது. இதனை மாற்ற Tools | AutoCorrect  செல்லவும். பின் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் AutoFormat As You Type  என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் Straight Quotes With Smart Quotes  என்ற பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இதில் இன்னொன்றை இங்கே குறிப்பிட வேண்டும். இந்த மேற்கோள் அடையாளக் குறிகள் உங்களுக்குத் தேவை என்றால் அந்த அடையாளங்களை கீ போர்டு மூலம் ஏற்படுத்தலாம்.

ஆல்ட் அழுத்தியவாறு 0147 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால் தொடக்க நிலையில் அமைக்கப்படும் டபுள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும்.

ஆல்ட் அழுத்தியவாறு 0148 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால் முடியும் நிலையில் அமைக்கப்படும் டபுள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும்.

ஆல்ட் அழுத்தியவாறு 0145என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால் தொடக்க நிலையில் அமைக்கப்படும் சிங்கிள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும்.

ஆல்ட் அழுத்தியவாறு 0146 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால் முடிவு நிலையில் அமைக்கப்படும் சிங்கிள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்களை நம் லாக் கீயினை அழுத்திப் பின் அதன் கீழாக உள்ள கீ போர்டு மூலம் டைப் செய்திட வேண்டும்.

7. சொல் ஒன்றில் ஒரு சில எழுத்துக்களை மட்டும் அல்லது கேரக்டர்களை மட்டும் ஹைலைட் செய்து தேர்ந்தெடுக்க முயற்சிக்கையில், வேர்ட் அந்த சொல் முழுமைக்கும் ஹைலைட் செயல்பாட்டினைக் கொண்டு செல்கிறது. இதனை மாற்ற Tools | Options  சென்று Edit  டேப்பில் கிளிக் செய்திடவும். வலதுபக்கம் உள்ள Editing  என்ற தலைப்பின் கீழ் உள்ள ஆப்ஷன்ஸ்களில் When Selecting, Automatically Select Entire Word என்ற பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.

8. மூன்று அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் தொடர்ந்து ஹைபன் கேரக்டரை டைப் செய்தால் வேர்ட் அதனை முழு நீள பார்டர் கோடாக மாற்றுகிறது. எனவே நாம் மூன்று ஹைபன்கள் டெக்ஸ்ட்டில் தொடர்ந்து அமைக்க வேண்டும் என்றால் இயலாமல் போய்விடுகிறது. இதனை மாற்ற Tools | AutoCorrect செல்லவும். பின் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் AutoFormat As You Type என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் ஆணிணூஞீஞுணூ ஃடிணஞுண் என்ற பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இதே போல டேபிள் ஒன்றை திடீரென இணைக்கும் செயல்பாட்டினையும் நீக்கலாம். ஆனால் இந்த தேவை பலருக்கு ஏற்படாது. நிறைய ஹைபன்களையும் ப்ளஸ் அடையாளத்தையும் ஏற்படுத்தினால், ப்ளஸ் அடையாளத்தை செல்களைப் பிரிக்கும் கோடாகக் கொண்டு டேபிள் ஏற்படுத்தப்படும். ஒரு வகைக்கு இது நமக்கு உதவிடும் செயல்பாடுதான். எனவே இதனை முடக்காமல் இருப்பது நல்லது.

9. வேர்ட் தானாக புல்லட் குறிகள் மற்றும் எண்களை நாம் பட்டியலாகச் சிலவற்றை டைப் செய்திட முயற்சிக்கையில் அமைக்கிறது. வேர்ட் தொகுப்பு தரும் வசதிகளில் அதிக தொல்லை தரும் விஷயமாகப் பலரும் கருதுவது இதனைத்தான். 1 என டைப் செய்து புள்ளி ஒன்றை அமைத்திடுங்கள். உடனே எண்கள் பட்டியல் நீண்டு 2., 3. என அமைக் கப்படும். இதே போல நீங்கள் ஏதேனும் பட்டியல் ஒன்றை அமைக்கும் வகையில் டைப் செய்தால் உடனே புல்லட் அடையாளங்களுடன் பட்டியல் அமையத் தொடங்கும். இதில் என்ன பெரிய பிரச்சினை என்றால், எண்களுடன் இந்த பட்டியலை அமைத்த பின்னர், வழக்கம்போல டெக்ஸ் ட்டை அமைத்திருப்போம். பின் மீண்டும் பட்டியலை 1. என்று தொடங்குகையில் வேர்ட் நம்மை அதனை 1. ஆக வைத்திருக்க விடாது. ஏற்கனவே எந்த எண்ணில் லிஸ்ட்டை விட்டோமோ, அதற்கு அடுத்த எண்ணிலிருந்து தொடங்கும். என்ன மாற்றினாலும் இது மாறாது. சென்ற வாரம் கூட இது குறித்து கேள்வி பதில் பகுதியில் சிவகாசியிலிருந்து பள்ளித் தலைமையாசிரியரின் ஒருவரின் கேள்வி இடம் பெற்றிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். சரி, இதனை எப்படி முடக்கி வைக்கலாம் என்று பார்க்கலாம்.

இதனை மாற்ற Tools | AutoCorrect செல்லவும். பின் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் AutoFormat As You Type என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் Automatic Bulleted List  மற்றும் Automatic Numbered list என்ற பாக்ஸ்களில் உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிடவும். இரண்� டயும் எடுத்துவிட வேண்டும் என்ப தில்லை. தேவைப்பட்டாலே இவை இரண்டை யும் எடுத்துவிட வேண்டும். இல்லை எனில் எது தேவையில்லையோ அதனை மட்டும் நீக்கிவிடலாம்.

இதில் இன்னொரு சிக்கலும் உண்டு.இதனை நீக்கிய பின்னரும் நீங்கள் இது போன்ற பட்ட்யல் ஒன்றை அமைத்து பின் என்டர் தட்டினால் மீண்டும் பட்டியல் குறிகள் அல்லது எண்கள் ஒவ்வொரு வரியிலும் உருவாக்கப் படும். இந்த பார்மட்டிங் தொல்லைக்கு விடிவே இல்லையா என்று நீங்கள் உடனே புலம்பலாம். புலம்ப வேண்டாம். உடனே மீண்டும் ஒருமுறை என்டர் தட்டுங்கள். அவை நீங்கிவிடும்.

10. வேர்ட் டாகுமெண்ட் டைப் செய்கையில் ஹைபன்களை டைப் செய்தால், வேர்ட் அவற்றை எம் டேஷ் (em dash)  அல்லது என் டேஷ் (en dash) ஆக மாற்றும். ஒரு சொல்லை டைப் செய்து, பின் அடுத்து இரண்டு ஹைபன்களை டைப் செய்து பின் ஸ்பேஸ் விடாமல் இன்னொரு சொல்லை டைப் செய்திடுகையில், வேர்ட் ஹைபன்களை எம் டேஷாக மாற்றும். ஹைபன்களுக்கு முன்னும் பின்னும் ஸ்பேஸ் டைப் செய்தால் அவற்றை என் டேஷ் ஆக மாற்றும். இதனை மாற்ற Tools | AutoCorrect செல்லவும். பின் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் AutoFormat As You Type என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் Hyphens (–) With Dash () என்ற பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

வேர்டில் தரப்படும் வசதிகள் எல்லாம் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வேகமாகவும், சிறப்பாகவும், நிறைவாகவும் மேற்கொள்ளத் தான் அமைக்கப்படுகின்றன. எனவே ஒட்டு மொத்தமாக மேலே காட்டியவற்றை நீக்காமல் அதிக தொல்லை கொடுக்கும் அல்லது தேவையில்லாதவற்றை மட்டும் நீக்கி பயன்படுத்தவும்.

உங்கள் தோழனாக கண்ட்ரோல் பேனல்…

நம் கம்ப்யூட்டர் வீட்டில் பொருட்களை அமைத்து அவற்றைப் பயன்படுத்தி அதிக பட்ச பயன்கள் பெறும் வகையில் விண்டோஸ் நமக்குத் தரும் ஓர் இடம் கண்ட்ரோல் பேனல் ஆகும். இதன் பகுதிகள் மற்றும் அவை தரும் செயல்பாடுகளை உணர்ந்து கொண்டு இயக்கினால் தான் நாம் நம் கம்ப்யூட்டரில் அதிக பட்ச பயன்களைப் பெற முடியும்.

முதலில் கண்ட்ரோல் பேனல் பகுதியில் என்ன என்ன அமைக்கப் பட்டிருக்கிறது என்று பார்க்கலாம்.ஸ்டார்ட் (Start) பட்டனைக் கிளிக் செய்து வரும் மெனுவில் கண்ட்ரோல் பேனலைத் (Control Panel) தேர்ந்தெடுத்து என்டர் செய்திட கண்ட்ரோல் பேனல் கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருப் பவர்களுக்கு கேடகிரி வியூ மற்றும் கிளாசிக் வியூ (Classic View / Category View)   என இரு வகைகளில் கிடைக்கலாம். இதில் கிளாசிக் வியூவினைத் தேர்ந்தெடுத்து வியூவை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு மாற்றிக் கொள்வதற்கான வசதி கண்ட்ரோல் பேனல் கட்டத்தில் இடது பக்கப் பிரிவில் மேலாகத் தரப்பட்டுள்ளதைக் காணலாம். அதில் கிளிக் செய்து கிளாசிக் வியூவைப் பெறவும். விண்டோஸ் 95 அல்லது 98 பயன் படுத்தியவர்களுக்கு இந்த ஒரு வியூ மட்டுமே கிடைப்பதால், அதனை வைத்திருப் பவர்களுக்குப் பிரச்னை இருக்காது.

சிஸ்டம்: கண்ட்ரோல் பேனல் தொகுப்பில் மிக மிக முக்கியமான ஒரு பிரிவு உள்ளதென்றால் அது சிஸ்டம் (System)  எனப் பெயரிடப் பட்டதுதான். உங்களுடைய கம்ப்யூட்டர் செயல்பாட்டின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தும் அனைத்தும் இந்த பிரிவில் தான் உள்ளன. இதன் மீது இரண்டு முறை கிளிக் செய்தால் ஏழு டேப்கள் அடங்கிய ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் முதலாவது General  என்ற டேப் ஆகும். இதில் நீங்கள் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எது எனக் காட்டும். உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்துள்ள சர்வீஸ் பேக் எதுவென்றும் இங்கு தெரிந்து கொள்ளலாம். இவற்றுடன் கம்ப்யூட் டரில் உள்ள பிராசசர், அதன் வேகம், கம்ப்யூட்டரின் மெமரியின் அளவு ஆகிய வையும் தெரிய வரும். உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்னை என்றால் அது குறித்து ஆய்வு செய்கை யில் இவை உங்களுக்குப் பயன்படும். கம்ப்யூட்டரில் ஏதேனும் பழுது ஏற்பட்டு அது குறித்து உங்கள் மெக்கானிக் டெலிபோனி லேயே சில தகவல்கள் கேட்டால் அப்போது இதனைப் பார்த்துத் தான் தகவல்களைத் தர வேண்டியதிருக்கும்.

கம்ப்யூட்டர் நேம் (Computer Name) : அடுத்ததாக உள்ள கம்ப்யூட்டர் நேம் என்னும் டேப் உங்கள் கம்ப்யூட்டர் ஹோம் நெட்வொர்க்கில் இணைந்திருந்தால் உதவிடும்.

ஹார்ட்வேர் (Hardware): அடுத்ததாக உள்ள ஹார்ட்வேர் என்னும் டேப்பைக் கிளிக் செய்து கம்ப்யூட்டரின் உள்ளே மற்றும் வெளியே இணைக் கப்பட்டுள்ள சாதனங்களைச் சோதனை செய்திடவும் மாற்றி அமைத்திடவும் முடியும். இதனைக் கிளிக் செய்தால் வரும் திரையில் டிவைஸ் மேனேஜர் (Device Manager) என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதனை இயக்கினால் கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றில் முக்கியமானவை – டிஸ்க் டிரைவ்கள், மானிட்டர், நெட்வொர்க் கார்டு, மோடம், ஸ்கேனர், யு.எஸ்.பி. கண்ட்ரோலர்ஸ் ஆகியவை ஆகும். இந்த ஒவ்வொன்றிலும் அதன் உட் பிரிவுகளாக என்ன உள்ளது என்று அறிய விரும்பினால் அதன் இடது ஓரம் உள்ள + (பிளஸ்) அடையாளத்தின் மீது கிளிக் செய்தால் அதன் பிரிவுகள் கிடைக்கும். எந்த ஒரு சாதனத்தின் பெயர் அருகே ஒரு மஞ்சள் வண்ண ஆச்சரியக் குறி இருக்கிறதோ அந்த சாதனம் சரியாகச் செயல்பட வில்லை என்று பொருள். நீங்கள் சர்வீஸ் இஞ்சினியர் யாரிடமாவது உங்கள் கம்ப்யூட்டர் சாதனம் செயல்படா தன்மை குறித்து பேசப் போகிறீர்கள் என்றால் இவற்றை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு பேச வேண்டும். டிவைஸ் மேனேஜர் செட்டிங்ஸ் எதனையும் அவற்றின் நிலை தெரியாமல் மாற்றுவது தவறு. இதனால் ஒழுங்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டரும் செயல்படாமல் போகலாம். அடுத்த பிரிவில் உள்ள டிரைவர் சைனிங் பட்டன் உங்கள் கம்ப்யூட் டருக்கு மைக்ரோசாப்ட் அங்கீகாரம் செய்யாத டிரைவர் களை அதன் சாதனங்களுக்குப் பயன்படுத்தும் வழியைத் தருகிறது. இதனை அப்படியே கிடைத்தது போல்

(Default)  வைத்திருப்பது நல்லது. அடுத்ததாக உள்ள விண்டோஸ் அப்டேட் பட்டனைக் கிளிக் செய்து வைத்தால் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட்டில் இணைந்திருக்கையில் கம்ப்யூட்டர் தானாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் தந்திருக்கும் டிரைவர்கள் மற்றும் பேட்ச் பைல்களை டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் பதிந்து விடும். இதனை கிளிக் செய்து வைத்திருப்பது நல்லது. அடுத்து உள்ள அட்வான்ஸ்டு டேப் (Advanced Tab)

நீங்கள் எதிர் பார்ப்பது போல சிக்கலானது ஒன்றுதான். நீங்கள் கம்ப்யூட் டரை செட் செய்வதில் எக்ஸ்பர்ட் ஆக இல்லை என்றால் இதனை எதுவும் செய்திடாமல் வைப்பது நல்லது. பெர்பார்மன்ஸ் (Performance) பிரிவில் கிளிக் செய்தால் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் உள்ள செட்டிங்ஸ் (Settings)  பட்டன் ஓரளவிற்குச் சில அமைப்பு களை மாற்றம் செய்திட உதவிடும். விண்டோஸ் செயல்பாட்டில் உள்ள விசுவல் எபக்டுகளை, (எடுத்துக்காட்டாக ட்ரான்ஸ்பரன்சி, ஷேடோஸ் போன்றவை) மாற்றலாம். ஆனாலும் “Let Windows choose what’s best for my Computer” என்று இருப்பதைத் தேர்ந்தெடுத்து டிக் அடையாளம் ஏற்படுத்தி விட்டு சிவனே என்று இருப்பதுதான் நல்லது. இதில் உள்ள Remote  டேபை இயக்கினால் கம்ப்யூட்டர் இஞ்சினியர் எங்கோ ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் கம்ப்யுட்டருள் புகுந்து அதன் செட்டிங்ஸை மாற்றும் வழியைத் தரலாம். ஆனால் எதற்கு இந்த வீண் வேலை என்றிருப்பதே நல்லது.

ஹார்ட்வேர் இணைத்தல்: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டமானது உங்கள் கம்ப்யூட்டரில் எந்த ஒரு ஹார்ட்வேர் சாதனத்தை இணைத்தாலும் உடனே புரிந்துகொண்டு அந்த ஹார்ட்வேர் சாதனத்திற்கான டிரைவரை தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து எடுத்துக் கொள்ளும். அப்படி இல்லாத நிலையில் அந்த சாதனத்துடன் வந்துள்ள டிரைவர் டிஸ்க்கை சிடி டிரைவில் போடுமாறு கேட்டுக் கொண்டு அவ்வாறு போட்டவுடன் அந்த சிடியில் இருந்து தேடி எடுத்துக் கொண்டு டிரைவரைப் பதிந்து கொள்ளும். ஆனால் ஏதேனும் ஒரு ஹார்ட் வேர் சாதனத்தைக் கம்ப்யூட்டருடன் இணைத்து அதனை உங்கள் கம்ப்யூட்டரால் புரிந்து கொள்ள முடியாமல் போனால் வேறு சில நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டியதிருக்கும். அப்போது கண்ட்ரோல் பேனலில் உள்ள Add Hardware என்ற பிரிவைக் கிளிக் செய்து அதனுள் செல்ல வேண்டியதிருக்கும். இது தொடர்ந்து வரும் டயலாக் பாக்ஸைத் தரும். இதில் உள்ள கேள்விகளுக்குப் பதில் கொடுத்துக் கொண்டே போனால் உங்கள் ஹார்ட்வேர் சாதனத்தைப் பதிந்து கொள்ளலாம்.

புரோகிராம்களை பதியவும் நீக்கவும் (Add or Remove Programs):
ஏதேனும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பைப் பதிகையில் அதற்கான சிடியை ஸ்லாட்டில் செருகி அதன் இன்ஸ்டாலேஷன் சிடி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டால் புரோகிராம் பதியப் பட்டுவிடும். அப்படி இல்லாமல் புரோகிராம் பதிவதில் பிரச்னை இருந்தால் கண்ட்ரோல் பேனலில் உள்ள ஐகானைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் இடது பக்கம் உள்ள Add New Programs என்ற பிரிவைக் கிளிக் செய்திட வேண்டும். பின்னர் சிடி அல்லது பிளாப்பி என்று கேட்கும் கட்டத்தைக் கிளிக் செய்து அதன்பின் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து புரோகிராமைப் பதியலாம்.

கண்ட்ரோல் பேனலில் Add or Remove Programs  பிரிவு புரோகிராம்களை நீக்குவதற்கு மிகவும் பயன்படும். இந்த பிரிவைப் பெற்று பதியப்பட்டுள்ள புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து அதில்

Remove என்ற இடத்தில் கிளிக் செய்தால் எச்சரிக்கைச் செய்திக்குப் பின்னர் புரோகிராம் நீக்கப்படும். வழக்கமாக புரோகிராம் போல் டர்களில் அன் இன்ஸ்டால் (Un instal) என்று ஒரு ஐகான் தரப் பட்டிருக்கும். அதனைக் கிளிக் செய்து புரோகிராமினை நீக்க லாம். அது போலத் தரப்படாத புரோகிராம்களில் மேலே குறிப் பிட்டவாறு செயல்படலாம். இதில் விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள புரோகிராம்கள் எவ்வளவு இடத்தை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக் கொண்டுள்ளன என்ற தகவலையும் தரும். அத்துடன் எத்தனை முறை ஒரு புரோகிராம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் இறுதியாக எப்போது பயன் படுத்தப்பட்டது எனவும் காட்டும். இந்த புரோகிராம் பட்டியலில் விண்டோஸ் தொகுப்பினைச் செம்மைப் படுத்தும் சில அடிப்படை புரோகிராம்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட்டிங் புரோகிராம்ஸ் பதியப் பட்டிருக்கும். இவற்றை ஹாட் பிக்ஸ் (Hotfix) என்றும் சொல்வார் கள். இப்படிப்பட்ட புரோகிராம்களை நீக்கினால் விண்டோஸ் சிஸ்டம் செயல்படுவதில் பிரச்னைகள் ஏற்படலாம். கண்ட்ரோல் பேனலைப் பயன்படுத்தி விண்டோஸ் புரோகிராமை நீக்க முடியாது. ஆனால் அதற்கான துணைப் புரோகிராம்களை நீக்கவும் சேர்க்கவும் மேம்படுத்தவும் செய்திடலாம்.

கண்ட்ரோல் பேனல் என்பது கம்ப்யூட்டரின் மிக முக்கிய பகுதியாகும். இதில் ஏற்படுத்தப் படும் மாற்றங்கள் நமக்கு விரைவான மற்றும் எளிதான பயன்பாட்டினைக் கொடுக்கும். ஆனால் அதே நேரத்தில் தவறான செட்டிங்ஸ் ஏற்படுத்தினால், பல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். எனவே எந்த ஒரு மாற்றத்தினையும் ஏற்படுத்தும் முன், அதற்கு முன் இருந்த செட்டிங்ஸ் குறித்து குறிப்புகளைத் தயார் செய்து கொள்ளவும்.

ஏற்படுத்தும் மாற்றங்களையும் குறித்து வைக்கவும். இங்கு தரப்படாத சில பயன்பாடுகளையும் கண்ட்ரோல் பேனலில் மேற்கொள்ளலாம். முக்கிய பயன்பாடுகள் மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொள்ளவும்.

விக்கிபீடியா 30 லட்சம் கட்டுரைகள்

என்சைக்ளோபீடியா – கலைக் களஞ்சியம்: உலகின் எந்த பொருள் குறித்தும் தேவையான தகவல்களைத் தொகுத்துத் தன்னிடத்தே கொண்டிருக்கும் தகவல் தொகுப்பு. அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்புகள் தொடங்கிய நாள் முதலாக ஏற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் மாற்றங்களைத், தலைமுறை தலைமுறையாக மக்களுக்குத் தரும் அரிய பொக்கிஷம் இது. ஒவ்வொரு நாடும், இனமும் மக்களும் தங்கள் மொழியில் இதனைக் கொண்டிருந்தாலும், ஆங்கிலத்தில் உள்ள என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தான் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் அமைந்துள்ளது. இதே போல இணையத்தில் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு எழ, எண்ணம் முதிர்ந்து வளர்ச்சி பெற்று விக்கிபீடியா என்ற ஒரு அருமையான தகவல் தளம் நம் சந்ததிக்குக் கிடைத்துள்ளது. இந்த தளம் அண்மையில் ஒரு சாதனை மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த தளத்தின் கட்டுரைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலகத்தின் அறிவுத் தேடல்களையும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளையும் ஓர் இடத்தில் குவிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகப் பழமை வாய்ந்த அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் மூலம் ஏற்பட்டது. ஆனால் அச்சு வடிவில் இதனை ஒரு நூல் தொகுப்பில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் 18 ஆம் நூற்றாண்டில் தான் ஏற்பட்டது. அதன் முதிர்ச்சி தான் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.

இன்டர்நெட் வளரத் தொடங்கிய போது, பலர் இன்டர்நெட் என்சைக்ளோபீடியா திட்டங்கள் குறித்து சிந்திக்கத் தொடங்கினர். 1993ல் இன்டர்பீடியா (Interpedia) (http://en.wikipedia.org /wiki/Interpedia) என்று தொடங்கியதை இதன் முன்னோடி எனக் கூறலாம். இலவசமாக சாப்ட்வேர் வழங்கும் கோட்பாடினை முன்னுரைத்து அமல்படுத்திய ரிச்சார்ட் ஸ்டால்மேன் 1999ல் உலகளாவிய அளவில் கற்றுக் கொள்ள தொகுப்பாக என்சைக்ளோபீடியா ஒன்று இன்டர்நெட்டில் இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.

முதலில் நுபீடியா (Nupedia)  என்ற பெயரில் இன்டர்நெட்டில் ஓர் இலவச என்சைக்ளோபீடியா உருவாக்கப்பட்டது. இன்டர்நெட்டில் விளம்பரங்களைக் கையாண்டு வந்த பொமிஸ் (Bomis)  என்ற நிறுவம் இதனைத் தொடங்கியது. இதன் உரிமையாளர்கள் ஜிம்மி வேல்ஸ், டிம் ஷெல் மற்றும் மைக்கேல் டேவிஸ் ஆகியோர் இதற்கான முயற்சிகளைப் பல தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பங்களிப்புடன் கொண்டு வந்தனர். கன்னிங்காம் மற்றும் ஸ்டால்மேன் (Ward Cunningham and Richard Stallman)  என்ற இருவர் முதலில் இதனைத் தொடங்கினர்.

Nupedia தங்கள் பங்களிப்புடன் இதனை உருவாக்க எண்ணினார்கள். ஆனால் நுபெடியா துவண்டு போக விக்கிபீடியா உருவானது. 2001 ஆம் ஆண்டு வெப்சைட் உருவாக்குவதில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் மற்றும் தத்துவ ஆசிரியரான லாரி சாஞ்சர் ஆகியோர் அடங்கிய குழுவினரால் விக்கிபீடியா தொடங்க விக்கிமீடியா பவுண்டேசன் நிறுவப்பட்டது.

2001 ஆம் ஆண்டில் ஜனவரி 15ல் விக்கிபீடியா (Wikipedia)  என்னும் ஆன்லைன் என்சைக்ளோபீடியா வெளியானது. விக்கி (Wiki) என்ற சொல்லுக்கு ஹவாய் (Hawaii)  மொழியில் விரைவு என்னும் பொருள் உண்டு. விரைவாக மக்களுக்கு அறிவு சார் தகவல்களைத் தருவதால் இதற்கு விக்கிபீடியா எனப்பெயரிட்டனர். பலமுறை இதன் தன்மை, தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த ஆய்வுகள் வெளியான போதும் தொடர்ந்து இது இணைய வாசகர்களிடையே நம்பிக்கயைப் பெற்று வருகிறது. 2004 முதல் 2007 வரையிலான காலத்தில் இதில் ஏற்பட்ட முன்னேற்றம் புயல் வேகத்தில் இருந்தது. இன்று பல மொழிகளிலும் இது உருவாகி உள்ளது. உலகின் 267 மொழிகளில் விக்கிபீடியா உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆகஸ்ட் 17ல் விக்கிபீடியா மிகச் சிறந்த வெற்றி இலக்கை அடைந் துள்ளது. இதில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தொட்டது. இதன் பின்னணியில் ஆயிரக்கணக் கானவர்களின் அயரா உழைப்பு உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் இது நிறைவேறி உள்ளது. மனித இனத்தின் அறிவுசார் முன்னேற்றம் அனைத்தையும் கொண்டு வருவதே இந்த விக்கிபீடியாவின் இலக்காக, நோக்கமாக அறிவிக்கப்பட்டு அதனை அடைவதற்காகத் தொடர்ந்து உழைத்து வருகிறது விக்கிபீடியா.

விக்கிபீடியா தளத்தில் பதிந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல். இவர்களால் ஒரு கோடியே 70 லட்சம் பக்கங்களில் தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரைகள் 32 கோடியே 60 லட்சம் முறை எடிட் செய்யப்பட்டுள்ளன.

முதல் மாதத்தில் விக்கிபீடியாவில் 12 கட்டுரைகளே இடம் பெற்றன. அப்போது இதற்கான சாப்ட்வேர் மற்றும் சர்வர் உதவியினை பொமிஸ் நிறுவனத்தின் ஊழியர் களே தந்தனர். இவ்வகையில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், இதன் பெயருக்கேற்ப மிக விரைவாக அனைத்து பிரிவுகளிலும் வளரத் தொடங்கியது. 2001 பிப்ரவரியில் இதன் கட்டுரைகள் 1000 ஐத் தாண்டின. தொடர்ந்த செப்டம்பர் மாதத்தில் இது 10,000 ஆக உயர்ந்தது. இவ்வாறாக முதல் ஆண்டின் முடிவில் இதன் கட்டுரைகள் 20 ஆயிரத்தைத் தாண்டி இருந்தன. இதுவே 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 40 ஆயிரமாக முன்னேறியது.

தொடங்கிய ஆண்டிலேயே இந்த விக்கிபீடியா திட்டம் உலக மக்களைக் கவர்ந்தது. முதல் ஆண்டிலேயே வேறு மொழி களிலும் விக்கிபீடியா தொடங்கப் பட்டன. மார்ச் 16, 2001ல் deutsche.wikipedia.com  தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகின் முன்னணி மொழிகளில் விக்கிபீடியாக்கள் உருவாக்கப்பட்டன.  ஆங்கிலத்தை அடுத்து இரண்டாவதாக இடம் பெறுவது ஜெர்மன் மொழியில் உள்ள விக்கிபீடியா. இந்த கலைக் களஞ்சியத்தில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை விரைவில் தாண்ட உள்ளது. இதில் அடுத்த நிலையில் பிரெஞ்சு மொழி விக்கிபீடியா உள்ளது. இதில் 8 லட்சம் கட்டுரைகள் உள்ளன. அடுத்ததாக ஜப்பானியம், போலிஷ், மற்றும் இத்தாலிய மொழிகளில் உள்ள விக்கிபீடியா தளங்கள் 6 லட்சத்திற்கும் மேலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

மொத்த விக்கிபீடியா தளங் களையும் எடுத்துக் கொண் டால், ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளில் தான் 75% கட்டுரைகள் உள்ளன.

யார் வேண்டுமானாலும், எந்த மொழியிலும், தங்களுக்குத் தெரிந்த பொருள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதி இதில் வெளியிடலாம். அல்லது ஏற்கனவே உள்ள கட்டுரைகளின் வரிகளை எடிட் செய்திடலாம். புதிய விவரங்கள் மற்றும் தகவல்கள் இருப்பின் அவற்றை இணைக்கலாம்.

விக்கிபீடியா தமிழ் மொழியிலும் உள்ளது. 2003 ஆம் ஆண்டில் செப்டம்பர் 30 அன்று தொடங்கப்பட்டது. தொடங்கியவர் தன் பெயரை வெளியிடவில்லை. “மனித மேம்பாடு’ என்ற கட்டுரையை இவர் வெளியிட்டார். ஆனால் அதன் பின் தமிழ் சமுதாயம் குறித்த ஒரு சில ஆங்கிலக் கட்டுரைகளே வந்தன. பின் நவம்பர் 2003ல் மயூரநாதன் என்பவர் இதன் முகப்பு பக்கம் முழுவதையும் தமிழில் கொண்டு வந்தார். இவரே பின்னர் தொடர்ந்து கட்டுரைகளை அளித்து வரத் தொடங்கினார். இன்றைய அளவில் மிக அதிகமாகக் கட்டுரைகளை எழுதியவர் இவரே. தமிழில் 2,760 கட்டுரைகளைத் தந்துள்ளார். இவர் இலங்கையில் பிறந்து வளைகுடா நாடு ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரைப் போலவே வெளிநாடுகளில் வாழும் பலர் தமிழ் விக்கிபீடியாவிற்குப் பங்களிப்பு செய்துள்ளனர். கனடாவிலிருந்து நிரோஜன், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வாழும் பேராசிரியர் வி.கே. (188 கட்டுரைகள் – பெரும்பாலும் கணிதம், வானவியல் மற்றும் தத்துவம்) மற்றும் ஜெர்மனியிலிருந்து எழுதும் இலங்கைத் தமிழ்ப் பெண் சந்திரவதனா ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். தமிழ் நாட்டிலிருந்து தமிழ் விக்கிபீடியாவினை வளர்ப்பவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

தமிழ் தளத்தைக் காண ta.wikipedia.org என்ற முகவரிக்குச் செல்லவும். அங்கு சென்று புதிய அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கவும். கட்டுரைகளை எப்படி எழுதலாம் என்று அறிந்து உங்கள் பங்களிப்பினையும் வழங்கவும். இதுவரை இதில் பதிவு செய்தவர்களின் எண்ணிக் கை ஏறத்தாழ பத்தாயிரத்தைத் தொட உள்ளது. ஆனால் பங்களிப்பவர்கள் என்ன வோ மிகவும் குறைவு தான். தமிழ் விக்கிபீடியா வளர வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர்கள் பலர், ஆங்காங்கே அறிவிப்பு கொடுத்து இதற்கான பயிலரங் கங்களை இலவசமாக நடத்தி வருகின்றனர். இந்தப் பயிலரங்கங்களில் எப்படி விக்கிபீடி யாவில் கட்டுரை எழுதுவது, உள்ளீடு செய்து பதிவது எப்படி, படங்கள், அட்டவணைகளை உருவாக்கிப் பதிவது எப்படி என்ற விபரங்கள் சொல்லித் தரப்படுகின்றன. இதில் கலந்து கொண்டு பயன்பெற்று இந்த உலக அறிவுத் தேடலில் நீங்களும் உங்கள் தடத்தைப் பதிக்கலாம்.

விக்கிபீடியா வரலாறு

2000: நுபெடியா (Nupedia)  திட்டம் லாரி சாஞ்சர் துணையுடன் தொடங்கப்பட்டது.

2001: Wikipedia.com, Wikipedia.org ஆகிய டொமைன் பெயர்கள் ஜனவரி 12, 13ல் பதிவு செய்யப்பட்டன. ஜனவரி 15ல் விக்கிபீடியா உதயமானது
2001 மார்ச் மற்றும் மே : பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் உட்பட பிற மொழிகளில் விக்கிபீடியாக்கள் தொடங்கப்பட்டன. ஆகஸ்ட் 2001ல் இந்த தளங்கள் குறித்து செய்திகள் உலகெங்கும் வெளியாகத் தொடங் கியதால் மக்கள் இவற்றின் மேல் ஆர்வம் அடைந்தனர்.
2002: இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிதி சிக்கல் ஏற்பட்ட போதும் பல தொழில் நுட்ப மேம்பாடுகள் புகுத்தப்பட்டன.
2003: தொடக்கத்திலேயே விக்கிபீடியாவின் கட்டுரைகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. நிர்வாகத்திற்கென விக்கிமீடியா பவுண்டேஷன் தொடங்கப்பட்டது.
2004: உலகளாவிய தன்மையுடன் ஓராண்டில் விக்கிபீடியாவின் கட்டுரைகள் இரு மடங்கு வளர்ச்சியை மேற்கொண்டு, கட்டுரைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது. ஏறத்தாழ 100 மொழிகளில் உருவானது.
2005: பன்னாட்டு மொழிகளில் விக்கிபீடியா உருவானதால் அதற்கான போர்ட்டல்கள் உருவாக்கப் பட்டன. சிஸ்டங்களை மேம் படுத்த நிதி திரட்டியதில் ஒரு லட்சம் டாலர் கிடைத்தது. அக்டோபர் மாதத்தில் கட்டுரைகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியது. சிலர் இதன் கட்டுரைகளின் தகவல்களை வேண்டுமென்றே சிதைத்ததனால் பாதுகாப்பு முறைகள் வடிவமைக்கப்பட்டன.
2006: கட்டுரைகள் 15 லட்சம் எண்ணிக்கையத் தாண்டின. விக்கிமீடியா பவுண்டேசனின் பதிவு பெற்ற வர்த்தக அடையாளமாக விக்கிபீடியா உரிமை பதிவு பெற்றது. இந்த ஆண்டில் நடந்த விக்கிமேனியா 2006 என்ற கருத்தரங்கில் ஜிம்மி வேல்ஸ், விக்கிபீடியா கட்டுரைகள் தரத்துடன் இருக்க வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டார்.
2007: அனைத்து மொழிகளிலும் உள்ள விக்கிபீடியா தளங்களில் 174 கோடி சொற்கள் இருந்தன. ஏறத்தாழ 250 மொழிகளில் 75 லட்சம் கட்டுரைகள் உருவாகி பதியப் பட்டிருந்தன. ஆங்கில மொழியில் அமைக்கப் பட்ட விக்கிபீடியாவிற்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,700 கட்டுரைகள் வரத் தொடங்கின.
2008: பல்வேறு விக்கிபீடியா திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன. ஏப்ரல் மாதம் இதன் ஒரு கோடியாவது கட்டுரை வெளியானது. இது ஹங்கேரியன் விக்கி பீடியாவில் பதியப்பட்டது. இதற்குப் பின் சில மாதங்கள் கழித்து ஆங்கில விக்கிபீடியாவின் கட்டுரைகள் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தாண்டியது.
2009: மார்ச் 20 ஆம் நாள் ஆங்கில விக்கிபீடியாவின் கட்டுரை எண்ணிக்கை 28 லட்சத்தை எட்டியது. ஜூன் 4ல் இது 29 லட்சம் ஆனது. ஆகஸ்ட் 17 காலை 4 மணிக்கு கட்டுரைகளின் சரியான எண்ணிக்கை 30,03,379ஐத் தொட்டது.