Daily Archives: ஒக்ரோபர் 9th, 2009

மென்மையான சருமத்துக்கு உணவே முக்கியம்!


மிளிரும், மென்மையான, புத்துணர்ச்சியான மற்றும் மிருதுவான என, பல்வேறு வகையான சருமங்கள் இருக்கின்றன. இத்தகைய சருமங்களை பெறுவதற்காக, ஏராளமான அழகு சாதனப் பொருட்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், நாம் சாப்பிடும் உணவின் மூலமே, சருமத்தை அழகாகவும், ஒளிரும் தன்மை உடையதாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
பொதுவாகவே, சரும ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ, பி, சி, இ, ஆன்டி ஆக்சிடன்ட்கள், சிங்க் மற்றும் செலேனியம் ஆகியவை மிகவும் அவசியம். அதிகளவு தண்ணீர் குடிப்பது மற்றும் தோலுக்கு ஈரப்பதத்தை வழங்கும் அத்தியாவசிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் முக்கியமானது. பருப்பு வகைகள், எண்ணெய் சத்துக்கள் நிறைந்த மீன்கள் மற்றும் ஆளிவிதை போன்றவற்றில் இந்த அத்தியாவசிய கொழுப்புக்களான, ஒமேகா-3 கொழுப்பு சத்துக்கள் காணப்படுகின்றன. மிளிரும் சருமம் பெற விரும்புபவர்கள், காபின் போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது. இதோ ஒருவரின் சரும வகைகளுக்கு ஏற்பட சில ஆரோக்கிய டிப்ஸ்கள்…

சென்சிடிவ் சருமத்தினர்:
* உணவு முறைகளை திட்டமிட்டுக் கொள்வதோடு, ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
* பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரை நிறைந்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* சென்சிடிவ் சருமத்தினருக்கு தோலில் எரிச்சல் மற்றும் வைட்டமின் பி பற்றாக்குறையால், வறட்சி, செதில்கள் உதிர்தல் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, அவர்கள் வைட்டமின் பி சத்து அதிகம் நிறைந்த பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

எண்ணெய் பசை சருமத்தினர்:
* எண்ணெய் பசை சருமத்திற்கு ஹார்மோன்களே காரணம். எனவே, இத்தகைய சருமத்தினர், ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்துவது முக்கியம்.
* பழங்கள், காய்கறிகள் மற்றும் போதுமான அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
* எண்ணெய் பசை சருமத்திற்கும் வைட்டமின் பி2 மற்றும் பி5 பற்றாக்குறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, இந்த வைட்டமின்கள் அதிகளவு நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* புரோக்கோளி, முட்டைகோஸ் மற்றும் காலிபிளவர் ஆகிய காய்கறிகள், அதிகளவு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இவை ஹார்மோன் சமநிலை ஏற்பட உதவுகிறது.
* மாசுமருவற்ற சருமம் பெற, அதிகளவு “சிங்க்’ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காளானில் அதிகளவு “சிங்க்’ சத்துக்கள் நிறைந் துள்ளன.
* பிளாஸ்டிக் கன்டெய் னர்களில் உணவுப் பொருட்களை வைத்து மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். இவற்றால், செனஸ்ட்ரோஜென் எனும் ரசாயனம் உருவாகி, அவை ஹார்மோன் மாற்றங்கள் நிகழ வழி வகுத்துவிடும்.
* உணவுப் பட்டியலில் இருந்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவை நீக்கிவிடுங்கள்.

வறண்ட சருமத்தினர்:
* சருமம் நெகிழ்வு தன்மையுடனும், ஈரப்பதத்துடனும், இருக்க உதவுவது, வைட்டமின் இ சத்து. பாதாம் பருப்பு, முட்டை, பச்சை காய்கறிகள், பருப்புகள், கோதுமை ஆகியவற்றில் வைட்டமின் இ சத்து அதிகளவு நிறைந்துள்ளது.
* சருமம் எப்போதும் இளமையுடன் வைத்திருக்க உதவும் சல்பர் நிறைந்த உணவுகளான முட்டை, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவக் காப்பீடு மிக மிக அவசியம்!

நோயால் படுத்துக் கிடக்கும்போது, எக்கச்சக்கமாய் செலவாகிறதே என்று தோன்றுமே தவிர, நோய் தீவிரம் சற்று குறைந்ததும், செலவு குறைந்தது என்று கணக்கு போடும் மனசு. ஆனால், அந்தப் பணத்தை அப்படியே திரும்பப் பெற வழி உள்ளது என்பது தெரியுமா உங்களுக்கு?

நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்ப உறுப்பினர் நோயில் படுத்தாலும், அதற்குரிய தொகையை நீங்கள் பெறலாம். எப்படி? மருத்துவக் காப்பீடு செய்து கொள்வதன் மூலம்!
உங்கள் பட்ஜெட்டில் மிகவும் இன்றியமையாததாய் ஒதுக்க வேண்டிய தொகை, இதற்கு தான். சேமிப்பு, இன்சூரன்ஸ் ஆகிய இரண்டுமே மிக மிக முக்கியம். பெரிய அளவில் நோய்வாய்ப்படும்போது, நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும், கையில் ரொக்கப் பணம் இல்லாமல் திண்டாடுகின்றனர். சம்பளப் பணத்தில் 10 சதவீதம் மருத்துவச் செலவுக்கு என்று எடுத்து வைத்து விட வேண்டும். அதேபோல், “மெடிக்கல் இன்சூரன்ஸ்’ செய்து கொண்டு, அதற்குரிய பிரீமியம் தொகையையும் கட்டவேண்டும். இதுபோகதான் மற்ற செலவுகளைக் கணக்கிட வேண்டும்.

மருத்துவமனையில் சேரும் நிலை ஏற்பட்டால், நம் பாடு திண்டாட்டம் தான். தினமும் ரூம் வாடகை, நம்மைப் பார்த்துக் கொள்ள வரும் நபருக்கான போக்குவரத்துச் செலவு, டாக்டர் கட்டணம், மருந்துக் கட்டணம், நோயிலிருந்து மீண்டு வீடு செல்லும்போது ஆகும் செலவு என எக்கச்சக்கமாய் பதம் பார்த்து விடும்.
எனவே, “மெடிக்கல் இன்சூரன்ஸ்’ மிக மிக அவசியம். பல நிறுவனங்கள், பல்வேறு நோய்களுக்கு இன்சூரன்ஸ் செய்து கொடுக்கின்றன. நீரிழிவு, இதய நோய் உட்பட பல நோய்களுக்கு, “இன்சூர்’ செய்து கொள்ளலாம்.
நல்ல நிறுவனமாய் பார்த்து, இன்சூரன்ஸ் ஏஜென்டுகளையோ அல்லது நேரடியாக அலுவலகம் சென்றோ, விசாரித்து தெரிந்து, உங்களால் எவ்வளவு பிரீமியம் தொகை கட்ட முடியுமோ, அதற்கேற்ற இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள்.

குருத்தெலும்பு கிழிந்தால்…? ‘செல்’ எடுத்து மாற்றும் நவீன சிகிச்சை ரெடி

சிறிய வயதினரை பாதிக்கக்கூடிய பொதுவான கோளாறு இது; பெயர் குருத்தெலும்பு சிதைவு. விளையாடும் போது ஏற்படலாம்; விபத்தினால் ஏற்படலாம். இதனால், குருத்தெலும்பு கிழிதல் ஏற்படும் போது, மூட்டு பாதிப்பு அதிகமாகும். ஆரம்பத்திலேயே இதை கவனித்தால், பெரிய அளவில் மூட்டு பாதிப்பை தவிர்க்கலாம்.  மூட்டுகளுக்கு இடையே “குஷன்’ போன்று இருக்கும் தசைநார்கள் தான் குருத்தெலும்பு. எந்தவித அதிர்வையும் மூட்டு எலும்பை பாதிக்காவண்ணம் காப்பது இது தான். இந்த குருத்தெலும்பு தேய்ந் தாலோ, கிழிந்தாலோ மூட்டு வலிக்கு ஆரம்பம் என்று பொருள்.

நிரந்தர பாதிப்பு: மூட்டு பாதுகாப்புக்கு முக்கியமான குருத்தெலும்பு பாதிப்பு இல்லாமல் இருப்பது மிக அவசியம். அதனால் தான் விபத்து , விளையாட்டில் அடிபடுதல் போன்ற காரணங்களால் குருத்தெலும்பு பாதிப்பு ஏற்படும் போது, அலட்சியம் காட்டக்கூடாது. அதை அப்படியே விட்டு விட்டால், போகப்போக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். சிறிய அளவில் குருத்தெலும்பு பாதிப்பு இருந்தால் அதற்கு சில சிகிச்சைகள் உள்ளன. பெரிய அளவில் பாதிப்பு இருந்தால், அறுவை சிகிச்சை தான் ஒரே வழி. சில சமயம், உலோக தகடு மூலம் மூட்டு இணைப்பு ஏற்படுத்தவும் செய்யப்படுகிறது. இன்னும் சிலருக்கு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

யாருக்கு வரும்: விளையாட்டு வீரர்களுக்கு இது ஏற்பட வாய்ப்பு அதிகம். அதுபோல, இயந்திரத்தில் வேலை செய்பவர்கள், தச்சு வேலை உட்பட சில உடல் உழைப்பு வேலைகளில் இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிக அளவு உடல் எடை உள்ளவர்களுக்கு சமீபகாலமாக பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், மூட்டு வலி, சிறிய வயதிலேயே ஆரம்பமாகி விடுகிறது.
ஆரம்பத்தில் குருத்தெலும்பு சிதைவு அறிகுறியே தெரியாது. மூட்டில் வீக்கம், வலி ஏற்படும் போது தான் தெரியும். ஆண், பெண் கள் இருவருக்கும் இந்த பாதிப்பு வரும். சாதாரண எக்ஸ்ரேயில் இந்த பாதிப்பு தெரியாது. எம்ஆர்ஐ., மூலம் தான் தெரியவரும்.

தவிர்க்கலாமா: சத்தான உணவு சாப் பிட்டு வந்தாலே, குருத் தெலும்பு திடமாக இருக்கும். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், எடையை குறைக்க பயிற்சி செய்வது முக்கியம். அஜாக்கிரதையாக இருந்து குருத்தெலும்பு சிதைவுக்கு காரணமாகி விடக் கூடாது.இளைஞர்கள், க்ளூகோசாமைன் போன்ற சத்து டானிக்குகளை வாங் கிச் சாப்பிடலாம். இதையெல்லாம் மீறி பாதிப்பு வந்தால், அறுவை சிகிச்சை இருக்கவே இருக்கிறது.

நவீன சிகிச்சை: மூட்டை திறந்து சுரண்டியெடுப்பது, ட்ரில் செய்வது போன்றவை இப்போதுள்ள அறுவை சிகிச்சைகள். மைக்ரோ ப்ராக்சர், மொசாய்பிளாஸ்டி ஆகிய இரு வகை சிகிச்சைகள், சிறிய அளவு பாதிப்புகளை சரி செய்ய உள்ளன. இதையெல்லாம் விட நவீன சிகிச்சை இப்போது சென்னையில் வந்து விட்டது. அது தான் “ஆட்டோலாக் கார்டிலேஜ் செல் டிரான்ஸ் பிளான்ட்’ என்பது. இளம் நோயாளிகளின் உடலில் எங்காவது உள்ள குருத்தெலும்பு செல்லை எடுத்து குருத்தெலும்பை மீண்டும் உருவாக்குவது தான். வயதானவர்களுக்கு இது சரிப்படாது; அவர்களுக்கு மாற்று மூட்டு அறுவை சிகிச்சை தான் வழி என்கிறார் சென்னையை சேர்ந்த பிரபல மூட்டு சிகிச்சை நிபுணர் ஏ.கே.வெங்கடாச்சலம்.
2,000 ஜீன்கள்; 5,000 நோய்கள்
மனித உடலில் ஒவ்வொருவரிடமும் ஏதாவது மரபணுக்கள் இருக்கும். இப்படி மொத்தம் 2,000 மரபணுக்கள் (ஜீன்) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் தான், 5,000 நோய்கள், கோளாறுகள் ஏற்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்கு பிறக்கும் போதே ஏற்படும் குறைபாடுகள் எல்லாம் இப்படி ஜீன்கள் மூலம் தான் ஏற்படுகின்றன. மரபணுக் கோளாறுகள், சிறிய வயதில் தெரியாது; வயதாக ஆகத்தான் ஏதாவது ஒரு நோயாக தலைதூக்கும்.
எலும்பும் குருத்தெலும்பும் எலும்பு முறிவு ஏற்பட்டால், அறுவை சிகிச்சைக்கு பின், பிசியோதெரபி அளிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு விடும். ரத்தம் கசிவு ஏற்பட்டு, பின்னர் கட்டிப்போய், கடைசியில் சீராகி விடும். தோலில் ஏற்படும் காயங்களும் இப்படித்தான் ஆறிவிடும்.
ஆனால், குருத்தெலும்பு சிதைவு ஏற்பட்டால், அதற்கு செயற்கை வழியிலும், உயிரியல் வழியிலும் அறுவை சிகிச்சை செய்ய முடியும். உயிரியல் ரீதியாக என்றால், இறந்தவரின் உடலில் இருந்து குருத்தெலும்பை எடுத்து, மாற்று அறுவை சிகிச்சை செய்வது. இப்படி செய்வதால், எந்த பாதிப்பும் இல்லாமல் குருத்தெலும்பு திடமாகி விடும்.

வந்துவிட்டது புரட்சி தீர்வு
மரபணு கோளாறுகளுக்கு நிரந்தர சிகிச்சை இல்லை இதுவரை; ஆனால், மருத்துவ நிபுணர்களின் தீவிர ஆராய்ச்சிகளால் இதற்கு இப்போது தீர்வு நெருங்கி வருகிறது. மரபணுக்களை பிஞ்சு வயதிலேயே மாற்றி, அதன் மூலம் உருவாகும் கோளாறுகளை வேரறுக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஆஸ்துமா போன்று பல நோய்கள், பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றன. இவற்றுக்கு ஜீன்கள் தான் காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளன. வருங்காலத்தில், ஆஸ்துமா நோயை அறவே போக்க வழி கிடைத்து விடும்.

35 வயதுக்கு மேல் கருத்தரித்தால்…
பரம்பரையாக ஏற்படும் மரபணு கோளாறுகள் ஒரு பக்கம் இருந்தாலும், சில மருத்துவ வரலாறுகளை பார்க்கும் போது, வேறு சில காரணங்களையும் நிபுணர்கள், குழந்தைகளின் கோளாறுகளுக்கு காரணமாக கூறுகின்றனர்.
அந்த வகையில், 35 வயது அதற்கு மேல் திருமணம் செய்த பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய மரபணு கோளாறு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்கின்றனர். மரபணு கோளாறு ஏற்பட்ட குழந்தைகளில் இரண்டு சதவீதம் பேர், இப்படிப்பட்ட தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

மூன்று தலைமுறை மரபணு சிகிச்சை
மரபணு கோளாறு ஏற்படுவதை கண்டுபிடிக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் மூன்று தலைமுறை வரையாவது குறிப்பிட்ட சில பரிசோதனைகள் செய்ய வேண்டும். டி.என்.ஏ., என்ற மரபணு சோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள், சிறுநீரக பரிசோதனை போன்ற சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம். கர்ப்பணிப் பெண்களுக்கும் சில சோதனைகள் நடத்தி பிறக்கப் போகும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் முழு அளவில் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கலாம்.

திசு பாதுகாக்க சட்டம் தேவை
வெளிநாடுகளில் உள்ளது போல, இறந்தவர்களின் உறுப்புகளை கொள்முதல் செய்ய இந்தியாவில் சட்டம் இல்லை. அப்படி இருந்தால், திசுக்களை பெற்று, உறைபனியில் உறைய வைத்து சேமித்து, தேவையானவர்களுக்கு பயன்படுத்த முடியும். அப்படி ஒரு நிலை வந்தால், குருத்தெலும்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிய வகையில் சிகிச்சை அளிக்க முடியும். இந்தியாவில் இப்போது தான் கண் தானத்துக்கு விழிப்புணர்வு பரவி வருகிறது. உறுப்புகள் தான விழிப்புணர்வும் ஆரம்பித்துள்ளது. எதிர்காலத்தில் இது இன்னும் அதிகரிக்கும்.

லட்சத்தில் ஒருவருக்கு!”ஹிமோபீலியா’

ரத்தம் கசிந்து உடல் உறுப்புகளை பாதிக்கும் நோய் இந்தியாவில் சரிவர சிகிச்சை இதுவரை இல்லை  மரபு வழி நோய்கள் பலவற்றுக்கும் இன்னமும் கூட போதிய மருந்தில்லை; சிகிச்சை இல்லை. குழந்தைப்பருவத்தில் இருந்து பாதிக்கப்படும் இத்தகைய நோய் கள், பின்னாளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நோய் தான் “ஹிமோபீலியா’
இது ஒரு ரத்தப் போக்கு நோய்; உடலுக்குள் ரத்தம் கசிந்து, முக்கிய உறுப்புகளை பாதிக்கும். அவற்றின் செயல்பாட்டை தடுக்கும். சிறிய வயதில் இதன் அறிகுறி கூட தெரியாது. ஆனால்,போகப்போக, மூட்டு வலியில் ஆரம்பிக்கும்; கடைசியில் மூளையை பாதிக்கும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

1,00,000 :1 பேர் வீதம்: ஒரு லட்சத்தில் ஒருவருக்கு தான் இத்தகைய கோளாறு வருகிறது; இப்போது இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கும் பல்வேறு நிலைகளில் இந்த கோளாறு உள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 13 ஆயிரம் மட்டுமே என்றாலும், கண்ணுக்கு தெரியாமல், சிகிச்சைக்கே வராமல் இருப்பவர்கள் அதிகம்.

முதல் அறிகுறியே மூட்டு: வெளியில் தெரியும் முதல் மோசமான அறிகுறி மூட்டு வலி தான். முழங்கால் மூட்டுப்பகுதியில் ரத்தம் கசிந்து, அதன் செயல்பாட்டை தடுக் கும். மூட்டு வலி அதிகமாக இருக்கும். இது பல ஆண்டாக மூட்டுகளில் ரத்தம் கசிந்ததன் பாதிப்பு தான். மூட்டுப்பகுதியை பாதித்தால் மூட்டு வலி ஏற்படுகிறது; மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டால், பக்கவாதம் ஏற்படும்.
பரிசோதனை மூலம் இதை கண்டறிய இந்தியாவில் இன்னும் போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இதனால், இதுவரை 12 சதவீத நோயாளிகள் தான் கண்டறியப்பட்டுள்ளனர்.

மற்றவர்கள் கதி: பரிசோதிக்க சூழ்நிலை ஏற்படாமல், தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகள், நடுத்தர வயதை அடையும் போது, ஹெபடைடிஸ் பி, சி, மற்றும் எச்.ஐ.வி.,கிருமிகளாலோ, இரண்டினாலோ பாதிக்க வாய்ப்பு உள்ளது.
“மனித ரத்தத்தின் மூலம் தான் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த நோயை பொறுத்தவரை தீரக்கூடியது அல்ல; ஆனால், போதுமான சிகிச்சை பெற்று வந்தால், பாதிப்பின்றி வாழலாம்’ என்று டில்லியில் உள்ள அகில இந்திய அறிவியல் மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர் ரேணு சக்சேனா கூறியுள்ளார்.

அரசு கவனிக்குமா? உலக சுகாதார அமைப்பு, உலக ஹிமோபீலியா கழகம் ஆகியவை இப்போது இது தொடர்பாக தீவிர பிரசாரம் செய்து வருகிறது. மத்திய அரசும் தனி அக்கறை காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாவிட்டால், எதிர்காலத்தில் இதன் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதே நிபுணர்களின் எச்சரிக்கை.

இந்த வார இணையதளம்: மனதிற்கு இதமான இயற்கை

ஏன் மலை வாசஸ்தலங்களுக்கும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கும் சுற்றுலா செல்கிறோம். அவற்றின் அருகே, அவற்றோடு இணைந்து இருக்கையில் நம் மனது லேசாகிறது; நாம் நம் கவலைகளை மறக்கிறோம். பல்வேறு பிரச்சினைகளில் நம் மனது அல்லாடுகையில் நமக்கு இலவசமாக இதம் தரும் இடங்கள் இந்த இயற்கை தானே. இந்த இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், நேரம் இல்லாதவர்கள் எழில் கொண்ட அந்த காட்சிகளை நல்ல போட்டோக்களாகப் பெற்று, அவற்றைப் பார்த்து பரவசம் அடைகின்றனர். அத்தகைய அழகு கொழிக்கும் இடங்களை ஓர் இணைய தளம் நமக்குத் தருகிறது. நாம் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே, தேர்ந்தெடுத்து இந்த உலகின் அற்புத இயற்கைக் காட்சிகளை பதிந்து வழங்குகிறது. ஒரு போட்டோ காலரியாக, வரிசையாக இல்லாமல், ஒரு பிளாக் போல, பல பக்கங்களில் இது அமைந்துள்ளது.

மொத்தம் 9935 பக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 10 படங்கள் உள்ளன. எத்தனை பக்கங்களில் இது இருக்கும் என்று எண்ணுகிறீர்கள். ஆச்சரியப்பட வேண்டாம். ஏறத்தாழ 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளாக்காக இது நீண்டு இருக்கிறது. இவற்றை வகை வகையாகப் பிரித்தும் காணலாம். அண்மையில் மக்களிடையே பிரபலமானவை, புதிதாக சேர்க்கப்பட்டவை, இன்று அதிகமாகக் காணப்பட்டவை, அதிக வோட்டுகள் பெற்றவை, குறிப்புகள் எழுதப்பட்டவை, மிக அதிகமாக மக்களிடையே இடம் பெற்றவை எனப் பல வகைகளில் இவை பிரிக்கப்பட்டும் தரப்படுகின்றன. ஒவ்வொரு போட்டோ அருகேயும் இந்த வகைப் பிரிவுக்கான டேப்கள் தரப்பட்டுள்ளன. இந்த போட்டோக்களைப் பார்ப்பது மட்டுமின்றி, இவற்றின் அழகு குறித்து வோட்டும் போடலாம். உங்களிடம் மிக அழகான போட்டோ ஒன்று உள்ளதா? அதனை இந்த தளத்திற்கு அனுப்பலாம். அதற்கான அப்லோட் படிவம் ஒன்று இதில் தரப்பட்டுள்ளது.
இந்த தளத்திற்குள் நுழைந்தால் நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்த தளம் கிடைக்கும் முகவரி: http://pixdaus.com

பயர்பாக்ஸ் – சில ஆட் ஆன் தொகுப்புகள்

பயர்பாக்ஸ் பிரவுசர் வடிவமைக்கப்பட்டதற்கான புரோகிராம் குறியீடுகளை யாரும் பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதே அதன் முக்கிய சிறப்புக்குக் காரணம். இதனையே ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கிறோம். இதனால் தான் பல இணைய ஆர்வலர்களாக உள்ள புரோகிராமர்கள் பல ஆட் ஆன் தொகுப்புகளை இந்த பிரவுசரில் இயக்குவதற்கென எழுதி, வடிவமைத்து வழங்கி வருகின்றனர். அண்மையில் பார்த்து, பயன்படுத்திய சில ஆட்–ஆன் புரோகிராம்களை இங்கு தருகிறோம்.
1. Foxy Tunes: உங்களுடைய பிரவுசர் விண்டோவிலேயே ஒரு மீடியா பிளேயர் வேண்டுமானால், இந்த ஆட் ஆன் தொகுப்பினைப் பதிந்து கொள்ளவும். அதாவது இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு பாடலுக்கான லிங்க் தரப்படுகிறது. அல்லது பாடல் அதிலேயே கிடைக்கிறது. இதற்கென இன்னொரு விண்டோவில் ஆடியோ பிளேயரை இயக்கிப் பார்க்க வேண்டியதில்லை. பிரவுசரிலேயே மீடியா பிளேயரை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது.இந்த புரோகிராம் அவ்வப்போது அப்டேட் செய்யவும் படுகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/addon/219

2. Image Zoom: இணைய தளத்தில் உள்ள இமேஜ்களை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதாக இருந்தால், இந்த புரோகிராம் உங்களுக்கு மிக முக்கியம். படங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும், பின் வழக்கமான நிலைக்குக் கொண்டு வந்து சிறியதாக்கிப் பார்க்கவும் உதவுகிறது. இந்த ஆட் ஆன் தொகுப்பு புரோகிராம் கிடைக்கும் இணைய தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/ addon/139

3.Visual Bookmarks: நீங்கள் அமைத்திட்ட புக்மார்க்குகள், அளித்த பெயருடன் உங்களுக்குப் பட்டியல் இடப்படுகிறது. புக்மார்க்குகள் அதிகமாக, அதிகமாக இவை எதனைக் குறிக்கின்றன என்பதே மறந்து போகும். இதற்கு ஓரளவிற்கு உதவும் வகையில் இந்த ஆட் ஆன் செயல்படுகிறது. ஓரளவிற்கு என்ன, முழுமையான உதவியை அளிக்கிறது. வெப்சைட்டுகளில் நீங்கள் அடையாளம் கொள்ளக்கூடிய ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தால், அந்த பகுதி புக் மார்க் பட்டியலாகக் காட்டப்படும். இந்தப் பட்டியல் தனியே இருக்கும். இதனைப் பெற நீங்கள் அணுக வேண்டிய முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/addon/5396

4. FoxSaver: உங்களுடைய பயர்பாக்ஸ் பிரவுசரின் தோற்றம் உங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதா? அல்லது அதில் கிடைக்கும் சில இணைய தளங்களின் தோற்றம் உங்களின் விருப்பமாக உள்ளதா? அதனை உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொள்ள ஆசையா? கவலையே பட வேண்டாம். உங்கள் விருப்பத்தை இந்த பாக்ஸ் சேவர் ஆட் ஆன் புரோகிராம் நிறைவேற்றி வைக்கிறது. https://addons.mozilla.org/enUS/firefox/addon/5276 என்ற முகவரியில் உள்ள இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், பிரவுசரின் தோற்றம் மட்டுமல்ல, இணையத்தில் உங்களுக்கு விருப்பமான இமேஜஸ், ஆர்.எஸ்.எஸ். பீட்ஸ், ஏன் உங்களுடைய போட்டோ ஆகியவற்றை ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொள்ள இந்த தொகுப்பு உதவுகிறது.

5. Clipmarks: கிளிப் மார்க்ஸ் ஏறத்தாழ காப்பி செய்திடும் வேலையை மேற்கொள்கிறது. ஆனால் ஒரு கத்தரிக்கோல் கொண்டு இந்த வேலையைச் செய்கிறது. இதன் மூலம் ஓர் இணைய தளத்தில் நீங்கள் தனித்துப் பார்க்க விரும்பும் பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். பின் அதனை வேறு ஒரு இடத்தில் காப்பி செய்திடலாம். சேவ் செய்து வைக்கலாம். நண்பர்களுக்கு அனுப்பலாம். உங்கள் பிளாக்குகளில் பதியலாம். இதனை https://addons.mozilla.org/enUS/firefox/addon/1407 என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்.
6.Videodownloader: இந்த பெயர் என்ன கூறுகிறதோ அதையே சிறப்பாக மேற்கொள்கிறது இதில் உள்ள ஆட் ஆன் தொகுப்பு. ஆம், நீங்கள் வீடியோ கிளிப்கள் உள்ள தளங்களுக்குச் செல்கையில் உங்களுக்கு ஒரு செய்தி கொடுக்கிறது. இங்கிருந்து நீங்கள் வீடியோ கிளிப்களை டவுண்லோட் செய்திடலாம் என்ற செய்தியே அது. யு–ட்யூப், கூகுள் வீடியோஸ், மெட்கேப் போன்ற தளங்களுக்குச் செல்கையில் இதில் இருந்தெல்லாம் வீடியோ டவுண்லோட் செய்திடலாம் என்ற செய்தி கிடைக்கும். அதற்கான மெனுவினைக் கிளிக் செய்து வீடியோவினை டவுண்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம். பின் இன்டர்நெட் இணைப்பு இல்லாதபோதும் பார்க்கலாம் இதனை http://www.download.com /VideoDownloader/ 300011745_410546007. html?tag=bestff3_hed என்ற முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
7. Gspace: இணைய வெளியில் உங்களுக்கென்று ஓர் இடத்தை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. கூகுள் மெயில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்கள் தங்களுடைய பேஜ் பார்க்கையில் கீழாக இவ்வளவு இடம் உங்களுக்கு உள்ளது; அதில் இவ்வளவுதான் பயன்படுத்தி வருகிறீர்கள் என்ற செய்தி கிடைக்கும். இந்த இடமானது நீங்கள் கூகுள் அக்கவுண்ட் தளத்தைப் பயன்படுத்துகையில் உயர்ந்து கொண்டே போகும். அப்படியானால் கூகுள் உங்களுக்குக் கூடுதலான இடத்தையே கொடுக்கிறது. அந்த கூடுதல் இடத்தை என்ன செய்யலாம்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா! அதற்கான பயன்பாட்டினை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இந்த ஜிஸ்பேஸில், இடத்தில், நீங்கள் உங்கள் பைல்களைச் சேவ் செய்து வைக்கலாம். அவ்வாறு சேவ் செய்து வைத்த இடத்தில் உள்ள பைல்களை இன்டர்நெட் இணைப்பு உள்ள எந்த இடத்தில் இருந்தும் பெற்று பயன்படுத்தலாம். நீங்கள் மட்டுமின்றி நீங்கள் அனுமதி கொடுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தலாம். இதனை https://addons. mozilla.org/enUS/firefox/addon/1593 என்ற முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

8. Downthemall: இதன் மூலம் ஓர் இணைய தளத்தில் உள்ள படம், வீடியோ மட்டுமின்றி அனைத்தையும், டெக்ஸ்ட் மற்றும் லிங்க் உட்பட அனைத்தையும், மொத்தமாக டவுண்லோட் செய்திட இந்த ஆட் ஆன் தொகுப்பு உதவுகிறது. இதனை https://addons.mozilla. org/enUS/firefox/addon/201 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

பயர்வால் தொல்லையை எப்படி சமாளிக்கலாம்?

பயர்வால் – கம்ப்யூட்டர்களைத் தாக்க வரும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை நிறுத்தி நுழையவிடாமல் செய்து சிஸ்டங்களைக் காக்கும் ஒரு சிறப்பான புரோகிராம். பல இணைய தளங்கள் இத்தகைய பயர்வால் புரோகிராம்களை நமக்கு இலவசமாகத் தந்து உதவுகின்றன. கூடுதலாக வசதிகள் உள்ள பயர்வால் புரோகிராம்களை கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இந்த பயர்வால் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் வேகத்தை மட்டுப் படுத்துகிறது என்று நீங்கள் எண்ணினால் அதன் இயக்கத்தினை தேவையற்ற போது நிறுத்தி வைக்கலாம்; பின் தேவைப்படும்போது இயக்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.
1. Start மெனு சென்று Control Panel செல்லவும்.
2. பின் Network Connections என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. பாப் அப் ஆகும் விண்டோவில் Local Area Connection என்பதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Properties டேப் மீதுகிளிக் செய்திடவும். நீங்கள் Local Area Connection  பயன்படுத்தாமல் விர்ச்சுவல் பிரைவேட் நெட் வொர்க் வி.பி.என். அல்லது டயல் அப் இன்டர்நெட் பயன்படுத்தினால் அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் டேப்களில் Properties  டேப் தேர்ந்தெடுத்து பின் Advanced Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. இனி பயர்வால் தேவை என்றால் “Protect my computer and network by limiting or preventing access to this computer from the Internet’ என்பதில் செக் செய்திடவும். பயர்வால் தேவை இல்லை என்றால் இந்த டிக் மார்க்கை எடுத்துவிடவும். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.
5. நீங்கள் விண்டோஸ் பயர்வால் பயன்படுத்துபவராக இருந்தால் கண்ட்ரோல் பேனலில் உள்ள விண்டோஸ் பயர்வால் ஐகானில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் On (Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பயர்வால் இயக்கம் தேவை இல்லை என்றால் Off (Not Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டி.வி. வாங்கப் போறீங்களா? எல்சிடியா? பிளாஸ்மாவா?

தீபாவளி மற்றும் பண்டிகைக் காலங்களில் வீட்டிற்கு மகிழ்ச்சி சேர்க்கும் பொருட்களை வாங்குவது நம் பழக்கமாகும். அந்த வகையில் டிவி வாங்கப் பலரும் திட்டமிட்டிருப்பீர்கள். இப்போது பழைய மாடல் சி.ஆர்.டி. வகை வாங்குவது குறைந்து, ப்ளாட் பேனல் டிவிக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. இந்த வகையில் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பிளாஸ்மா டிவிக்கள் மார்க்கட்டில் உள்ளன. இதில் அதிகம் உள்ளது எல்.சி.டி. டிவிதான். ஆனால் சில கடைகளில் நம்மைப் பல்வேறு சொற்களைச் சொல்லி குழப்பி விடுகிறார்கள். எனவே ப்ளாட் பேனல் டிவி வாங்குவதில் எதனை வாங்கலாம் என்று பார்ப்போம்.

ஸ்கிரீன் அளவு: முதலில் நாம் வாங்க இருக்கும் டிவியின் அளவை அதன் திரை அளவை வைத்துத்தான் கூறுகிறார்கள். பணம் உள்ளது என்பதற்காக மிகப் பெரிய திரை உள்ளதை வாங்கக்கூடாது. அல்லது பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்பதற்காக மிகச் சிறிய திரை உள்ளதை வாங்கக்கூடாது.
சரியான திரை அளவு என்பது டிவியை வைத்துப் பார்க்க இருக்கும் அறையின் விஸ்தீரணத்தைப் பொறுத்தது. நாம் எவ்வளவு தூரத்தில் வைத்து வாங்க இருக்கும் டிவியை இயக்கிப் பார்க்கப் போகிறோம் என்பதே, அந்த டிவியின் திரை அளவினை நிர்ணயம் செய்திடும். திரையின் அளவை (அங்குலத்தில்) 1.8 ஆல் பெருக்கினால், உங்கள் டிவியைக் கண்டு ரசிக்க நீங்கள் எவ்வளவு தூரத்தில் அமரலாம் என்பது தெரிய வரும். எடுத்துக் காட்டாக 32 அங்குல டிவி எனில், அதனைப் பார்க்க அமரும் தூரம் 5 அடியாகும். பெரிய அறையில் சிறிய அளவிலான டிவியையும், சிறிய அளவிலான அறையில் பெரிய டிவியையும் வைத்துப் பார்ப்பது கூடாது.

எல்.சி.டி/எல்.இ.டி./ பிளாஸ்மா
அனைத்து நாடுகளிலும் இது குறித்து பட்டிமன்றம் நடக்காத குறையாக கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் ஒரு தொழில் நுட்பத்தைக் குறிக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றவற்றைக் காட்டிலும் சிறந்தது என்பதற்கான வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன.
பொதுவாக 42 அங்குல அகலத் திரை வரை எல்.சி.டி. டிவி மற்றதைக் காட்டிலும் சிறந்தது என்றும் , அதைக் காட்டிலும் பெரிய அளவிலான டிவிக்குச் செல்கையில் பிளாஸ்மா டிவி சரியானது என்றும் சொல்கின்றனர். இது தொழில் நுட்பத்தின் அடிப்படையில் சொல்லப் பட்ட பழைய தகவல்கள். இப்போது தொடர்ந்து இந்த இரண்டு தொழில் நுட்பங்களும் மாறி வருவதனால், இந்த கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய தில்லை. இதில் இரண்டு நிரூபிக்கப்பட்ட தகவல்களை மனதில் கொள்ள வேண்டும். நன்றாக வெளிச்சம் கொண்ட அறைகளில் எல்.சி.டி. டிவி சிறப்பாகச் செயல்படும்.

பிளாஸ்மா டிவிக்கள் ஸ்போர்ட்ஸ் போன்ற வேகமான இமேஜஸ் கொண்ட காட்சிகளைச் சிறப்பாகக் காட்டும். இரண்டு வகை டிவிக்களும் பயன்படும் வாழ்நாள் ஒரே அளவுதான். இந்த போட்டியில் புதிதாக வந்துள்ளது எல்.இ.டி. டிவி. இது ஒரு எல்.சி.டி. டிவி; ஆனால் இதற்கான பேக் லைட்டிங் எல்.இ.டி.யால் வழங்கப்படுகிறது. இந்த எல்.இ.டிக்களுக்கெல்லாம் கூடுதலாகச் செலவழித்துக் கொண்டிருக்க வேண்டாம். எனவே மீதமிருக்கும் இரண்டில் எது வாங்கலாம்? இரண்டு வகையையும் பல்வேறு வெளிச்சங்களில் போட்டுப் பார்த்து உங்களுக்குப் பிடித்ததனை வாங்கலாம்.
அடுத்து இன்னொரு தகவலையும் சொல்கின்றனர். அது எச்.டி. ரெடி டிவி (HD Ready TV) மற்றும் புல் எச்.டி. டிவி (Full HD) நம்மை அதிகம் குழப்புவது இந்த வகைகள் தான். எச்.டி. ரெடி டிவிக்களின் திரை ரெசல்யூசன் 1366 x 768 அல்லது 1366 x 768 பிக்ஸெல்கள் இருக்கும். Full HD டிவியில் 1920 x 1080 பிக்ஸெல்கள் இருக்கும். நீங்கள் எச்.டி. வீடியோ வகை படங்கள் எக்ஸ் பாக்ஸ் 360, புளு–ரே, பி.எஸ்.3, உயர்வகை மீடியா பிளேயர்கள், எச்.டி. சாடலைட் பாக்ஸ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக இருந்தால் Full HD டிவி வாங்கவும்.

இவ்வாறு இல்லாமல், உங்கள் நோக்கம் சாடலைட் டிவி இணைப்பில் பொழுது போக்கு நிகழ்வுகள் மற்றும் சினிமா பார்ப்பதாக இருந்தால் HD Ready TV போதும்.
நம் ஊரில் இயங்கும் டி.டி. எச். ஆப்பரேட்டர்கள் நேரடியாகத் தரும் டிவி நிகழ்ச்சிகள் இணைப்பு அனைத்தும், சாதாரண பிக்ஸெல் திறன் கொண்ட திரைகளில் நன்றாகவே தெரியும். வழக்கமான டிவிக்களைக் காட்டிலும் எல்.சி.டி. டிவிக்கள் சற்று விலை கூடுதல்தான். எனவே கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை, நல்ல சாதனங்களில் முதலீடு செய்திடுங்கள். பிரபலமான நிறுவனங்கள் வழங்கும் டிவிக்களையே வாங்கவும். டிவி பேனலின் தன்மை, விற்பனைக்குப் பின் பராமரிப்பு சேவை ஆகியவற்றை நல்ல நிறுவனங்களே தர முடியும். எனவே கிரே மார்க்கட்டில் விற்பனை செய்யப்படும் டிவிக்கள் மற்றும் சொற்ப அளவிலே பெயர் பெற்ற டிவிக்களை, அவை எவ்வளவு டிஸ்கவுண்ட் தந்தாலும், வாங்க வேண்டாம். அதிக அளவில் டிஸ்கவுண்ட் தரும் எந்த டிவியையும், சற்று சந்தேகத்துடனே பார்க்கவும். குறிப்பாக வாரண்டிக்கான சரியான வழி காட்டாத டிவிக்களை அறவே ஒதுக்கவும்.

காண்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் ரெஸ்பான்ஸ் டைம்
காண்ட்ராஸ்ட் ரேஷியோ இதில் அதிகம்; அதனால் விலை கூடுதல் என்றெல்லாம் சொல்வதை டிவி விற்பனை மையங்களில் கேட்கலாம். இந்த விகிதங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் வித்தியாசத்தினை ஏற்படுத்தாது. இதனை ஒவ்வொரு நிறுவனமும் ஒரு முறையில் அளந்து தெரிவிக்கின்றன. ஒவ்வொரு டிவிக்கும் அதனைப் பார்க்கும் சூழ்நிலை வேறுபடுவதால்,காண்ட்ராஸ்ட் ரேஷியோவினை ஒரு பெரிய அடிப்படை விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஆனால் ரெஸ்பான்ஸ் டைம் என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு பிக்ஸெல் முழு கருப்பிலிருந்து முழு வெள்ளை நிறத்திற்கு மாறும் நேரமே ரெஸ்பான்ஸ் டைம் ஆகும். பிளாஸ்மா டிவிக்களில் இந்த ரெஸ்பான்ஸ் டைம் மிக வேகமாக இருக்கும். ஆனால் எல்.சி.டி. டிவிக்களில் அவை 8 மில்லி செகண்டுகளுக்கும் குறைவாக இருந்தால் நல்லது. (ஆனால் இந்த வித்தியாசத்தை நம் கண்களால் கண்டறிய முடியாது). வேகமான விளையாட்டுகள், வேகமான நிகழ்வுகளைக் கொண்ட திரைப்படங் களைப் பார்க்கும்போதும், கன்ஸோல் வழியாக விளையாடுகையிலும் இந்த வேறுபாடு தெரிய வரலாம்.

சுவருடனா? டேபிளிலா?
இந்த வகை டிவிக்கள் அனைத்துமே சுவர்களில் இணைத்துப் பார்க்கும் வகையில் வெளிவருகின்றன. இவற்றை டேபிளில் வைத்துப் பார்க்கவும் ஸ்டாண்ட் வழங்கப்படுகிறது. இதற்கான சரியான வால் மவுண்ட் ஸ்டாண்ட் கொண்டு, அதற்கான பயிற்சி பெற்றவரைக் கொண்டு சுவற்றில் மாட்டுவதற்கான சிறிய ஸ்டாண்ட் அமைக்கப்பட வேண்டும். ஆனால் நீங்கள் டிவியை அப்படி, இப்படி சிறிது தூரம் நகர்த்தி வைத்துப் பார்ப்பவர் என்றால், பாதுகாப்பான டேபிளில், உரிய ஸ்டாண்டில் வைத்து இணைத்துப் பயன்படுத்துவது நல்லது. இப்படி வைக்கும் போது 20% திருப்பிக் கொள்ளலாம்.

இணைப்புகள்:
இன்றைக்கு வீடியோ இணைப்புகள் நிறைய வகைகளில் கிடைக்கின்றன. HDMI, Component, Composite, PC எனப் பலவகை இணைப்புகளை டிவிக்களில் பயன்படுத்தலாம். பெர்சனல் கம்ப்யூட்டர்களையும் இணைக்கலாம். இப்போது வரும் டிவிக்களில் குறைந்தது 10 வீடியோ இணைப்புகள் உள்ளன. இவற்றிற்கான சரியான கேபிள்களை தேர்ந்தெடுத்து, அதற்கான ஸ்லாட்டுகளில் பயன்படுத்துவது சிறப்பான வெளிப்பாட்டினைத் தரும். புதிய வசதியாக யு.எஸ்.பி. போர்ட்களும் இந்த டிவிக்களில் தரப்படுகின்றன. யு.எஸ்.பி. டிரைவ்களில் இருந்து பாடல்கள் மற்றும் வீடியோக்களை இயக்கலாம் இந்த இணைப்புகளில் பெரும்பாலானவை டிவிக்களின் பின்புறம் தரப்பட்டுள்ளன. எனவே சுவர்களில் மவுண்ட் செய்யப்படும் டிவிக்களில், மாட்டிய பின்னர் இணைப்புகளைச் செருகுவது சிக்கல் நிறைந்ததாக மாறுகிறது. சுவரில் பொருத்தும் முன்பே, சரியான நீளமுள்ள கேபிள்களை இணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது எப்படி கவனமாகச் சேதம் ஏற்படாமல் டிவியைக் கழட்டி பொருத்துவது என்று தெரிந்து கொள்ள வெண்டும். டிவிக்களை வாங்கு முன் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் இணைய தளம் சென்று மேலே சொல்லப்பட்ட தொழில் நுட்ப வசதிகள் நீங்கள் வாங்க இருக்கும் டிவியில் எந்த அளவில் உள்ளது என்று பார்க்கவும். இது மற்ற டிவிக்களுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க உதவும். கடைகளில் விற்பனையாளர்கள் சொல்வதை மட்டும் கேட்டு வாங்குவதைத் தவிர்க்கலாம்.

டிவி- தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்
திரை அளவு: இந்த அளவானது திரையின் குறுக்காக ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை உள்ள நீளம். பொதுவாக அங்குல அளவிலேயே இது சொல்லப்படுகிறது. எல்.சி.டி. டெலிவிஷன் 15 முதல் 52, பிளாஸ்மா மற்றும் புரஜக்ஷன் டிவிக்கள் 37 முதல் 70 மற்றும் வழக்கமான சி.ஆர்.டி. டிவிக்கள் 14 முதல் 34 அங்குல அளவிலும் இந்தியாவில் கிடைக்கின்றன.
பிளாக் ஸ்ட்ரெட்ச்: டிவி திரையில் தோன்றும் காட்சிகளைச் செம்மைப்படுத்த டிவிக்களில் பலவித தொழில் நுட்பங்கள் கையாளப்படுகின்றன. கருப்பு சிக்னல்களைத் திறன் ஏற்றி காட்சிகளைச் சீராக்குவது பிளாக் ஸ்ட்ரெட்ச் என அழைக்கப்படுகிறது. பொதுவாக வெள்ளை மற்றும் கருப்பு சிக்னல்கள் அடுத்தடுத்து அமையும் போது கருப்பு அதன் தன்மையிலிருந்து சிறிது குறைவாகக் காட்டப்படும். காட்சி இதனால் சற்று வெளிறித் தெரியலாம். இந்தக் குறையை பிளாக் ஸ்ட்ரெட்ச் நீக்குகிறது.
பி.ஐ.பி.: பிக்சர் இன் பிக்சர் என்பதன் சுருக்கம் இது. இதில் டிவி ட்யூனர்கள் கூடுதலாக இருக்கும். ஒரு சேனலைப் பார்க்கயில் அதே திரையில் சிறிய கட்டத்தில் இன்னொரு சேனலையும் பார்க்கலாம். சிறிய கட்டத்தில் உள்ளதைப் பார்க்க விரும்பினால் அதனைப் பெரிதாக்கி பெரிய அளவில் தோன்றியதனைச் சிறிய திரையாக மாற்றலாம். சில டிவிக்கள் 9 சிறிய கட்டங்களை ஒரே திரையில் கொண்டு வரும் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளன.
ஷார்ப்னெஸ் கண்ட்ரோல்: படக் காட்சியின் தெளிவு மற்றும் கூர்மையினை இதன் மூலம் பெறலாம். ரிமோட் கண்ட்ரோலிலும் இந்த வசதி உண்டு. இரவு இருட்டில் டிவி பார்க்கையில் படக்காட்சி அதிக ஒளியுடனும் ஷார்ப்பாகவும் தோன்றி கண்களை எரிச்சல் அடையச் செய்யலாம். தேவையான லைட் வெளிச்சம் உள்ள அறையில் காட்சிகள் இன்னும் ஷார்ப்பாக இருக்கலாமே என்று தோன்றும். இதற்கான மாற்றத்தை ஷார்ப்னெஸ் கண்ட்ரோல் மூலம் மேற்கொள்ளலாம்.
ரெசல்யூசன்: திரையில் காட்சிகளைக் காட்டும் புள்ளிகளின் எண்ணிக்கையை இது தருகிறது. எவ்வளவு கூடுதலாக இந்த புள்ளிகள் உள்ளனவோ அந்த அளவிற்கு காட்சிகளின் ஆழம் மற்றும் தெளிவு இருக்கும். பின்வருமாறு: வி.ஜி.ஏ. (Video Graphics Array) 640 x 480, சூப்பர் விஜிஏ 800 x 600, எக்ஸ் ஜி.ஏ. (எக்ஸெடெண்டட்) 1024 x 768, சூப்பர் எக்ஸ்.ஜி.ஏ. 1280 x 1024, டபிள்யூ எக்ஸ்.ஜி.ஏ. (வைட் எக்ஸெடெண்டட்) 1366 x 768 மற்றும் இறுதியாக ட்ரூ எச்.டி. ரெசல்யூசன் 1980 x1080.

பிரைட்னெஸ் சென்சார்: அறையில் உள்ள ஒளிக்கேற்ற வகையில் டிவி தன் திரைக் காட்சியின் ஒளி அளவை மாற்றி கண்ணுக்கு இதமான காட்சியைத் தருவதே பிரைட் சென்சார் வசதி.
காண்ட்ராஸ்ட் ரேஷியோ: பிரைட் மற்றும் டார்க் கலர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டு விகிதத்தினை இது குறிக்கிறது.
ஆஸ்பெக்ட் ரேஷியா: காட்டப்படும் தோற்றத்தின் அகலம் மற்றும் உயரம் குறித்த விகிதம். வழக்கமான டிவிக்களில் இது 4:3 என்ற விகிதத்தில் இருக்கும். அதாவது 4 பங்கு அகலம், 3 பங்கு உயரம். அகலத்திரையின் இந்த விகிதம் 16:9 என்று உள்ளது.
கோம்ப் பில்டர்: வண்ணங்களையும் ஒளியையும் பிரித்து சரியான ரெசல்யூசனைத் தரும் தொழில் நுட்பம். படக் காட்சி திரித்துக் காட்டப்படுதல், இடையே புள்ளிகள் தோன்றுதல், நடுங்குவது போல் காட்சி அளித்தல் போன்றவற்றை இது நீக்கும்.

பி.எம்.பி.ஓ: பீக் மியூசிக் பவர் அவுட்புட்: (Peak Music Power Output) ஒரு டெலிவிஷன் எந்த அளவிற்குக் கூடுதலாக ஒலி அளவைத் தர முடியும் என்பதனை இது குறிக்கிறது. சிறிய அறையில் தெளிவாக ஒலியைக் கேட்டு மகிழ 30 வாட்ஸ் போதுமானது.
ஸ்டீரியோ பிளே பேக்: டிவியிலிருந்து சவுண்ட் சிக்னல்களை ஆடியோ சிஸ்டத்திற்கு மாற்றுவதனை மேற்கொள்ளும் தொழில் நுட்பம். இதனால் தெளிவான டைனமிக் ஸ்டீரியோ ஒலியை தனி ஸ்பீக்கர்களில் கேட்டு மகிழலாம்.
ரெஸ்பான்ஸ் டைம்: டிவியின் திரை ஒரு கட்டளையை ஏற்றுச் செயல்படுத்தும் கால அவகாசம். பொதுவாக லட்சத்தில் ஒரு பகுதி நேரம் என்று இதனைச் சொல்வார்கள். ஒரு பிக்ஸெல் கருப்பிலிருந்து வெள்ளைக்கும் பின் மீண்டும் கருப்புக்கும் மாறும் கால அவகாசம் இது. இந்த தொழில் நுட்பம் எல்.சி.டி.,டிவியை வாங்குகையில் அதிகம் கவனிக்க வேண்டிய ஒன்று. ரெஸ்பான்ஸ் டைம் திறன் கொண்டது இல்லை என்றால் காட்சி சிதறும்.

வேர்ட்/எக்ஸெல் சில குறிப்புகள்

வழக்கமான சில டிப்ஸ்கள் இல்லாமல், சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. வேர்ட், எக்ஸெல் பயன்பாட்டில் இவையும் நமக்கு மிகவும் உதவியாக இருக்கக் கூடிய தகவல்களே. இப்படியெல்லாம் எக்ஸெல் தொகுப்பு நமக்கு உதவுகிறதே என்று இவற்றைப் பயன்படுத்திப் பார்த்த பின்னர் எண்ணுவீர்கள்.

ஒர்க்புக் ஒன்றை எக்ஸெல் புரோகிராமில் திறக்க விரும்பி அதற்கான மெனு கட்டளை கொடுக்கையில் நமக்கு Open டயலாக் பாக்ஸ் விண்டோ கிடைக்கும். மற்ற ஆபீஸ் புரோகிராம்களில் கிடைக்கும் விண்டோ போலவே இதுவும் இருக்கும். இதில் காணப்படும் பைல்களைப் பார்க்கையில், இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுவோம். அவ்வாறே பைல்களைக் காட்டுமாறு இதனை செட் செய்திடலாம். எப்படி அவற்றை நாம் விரும்பியபடி பெறலாம் என்று பார்ப்போம்.
1. முதலில் Open டூல் பாக்ஸைக் கிளிக் செய்திடவும். இதனால் Open டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது.
2. இதில் view டூல் வலது பக்கம் கீழ் நோக்கி இருக்கும் அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். உடன் கீழ் விரி மெனு கிடைக்கும்.
3. இதில் கிடைக்கும் Arrange ஐகானை தேர்ந்தெடுக்கவும். இங்கு எக்ஸெல் தன் தொகுப்பில் பைல்களை எப்படியெல்லாம் பிரித்து வைக்கலாம் என்று காட்டும்.
4.நீங்கள் எந்த வகையில் பைல்கள் பிரிக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த வகையினைத் தேர்ந்தெடுக்கவும். பின் நீங்கள் விரும்பியபடி பைல்கள் உங்களுக்குக் காட்டப்படும்.
சில சிஸ்டங்களில் இந்த Arrange ஐகான் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம். அந்த சிஸ்டங்களில் Open டயலாக் பாக்ஸில் உள்ள பைல் டேப் மீது ரைட் கிளிக் செய்திடவும். அதில் இந்த பைல்களை பிரிக்கும் வசதி தரப்பட்டிருக்கும். அதனைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் மட்டுமே அந்த எக்ஸெல் தொகுப்பைப் பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் செட் செய்த ஏற்பாட்டினை எக்ஸெல் நினைவில் வைத்து, நீங்கள் ஒவ்வொரு முறை Open டயலாக் பாக்ஸைத் திறக்கும்போதும் அதே வகையில் பைல்களைப் பிரித்துக் காட்டும்.

எக்ஸெல்: இடையே காலி இடம்
எக்ஸெல் தொகுப்பில் சிலர் வரிசையாக அனைத்து படுக்கை வரிசைகளில் உள்ள செல்களில் டேட்டாவினை நிரப்ப மாட்டார்கள். ஒன்று விட்டு ஒன்று நிரப்புவார்கள். இடையே உள்ள காலி செல்களில் பின்னர் ஏதேனும் கணக்கிட்டு டேட்டாவினை நிரப்புவார்கள். இது நாமாக நிரப்புகையில் சரியாக இருக்கும். எக்ஸெல் தொகுப்பே டேட்டாவை நிரப்புவதாக இருந்தால் முடியாதே? அப்போது என்ன செய்யலாம் என்று பார்ப்போமா? எடுத்துக்காட்டாக பில் ஹேண்டில் என்ற ஒன்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏதேனும் டேட்டாவை அப்படியே கீழ் உள்ள அனைத்து செல்களிலும் காப்பி செய்திட வேண்டி இருந்தாலும் அல்லது அடுத்தடுத்து சீரியல் வரிசையில் 1,2,3,4 என நிரப்ப வேண்டி இருந்தாலும் இந்த பில் ஹேண்டிலைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் நிரப்ப வேண்டிய செல்களில் ஹேண்டிலைப் பிடித்து இழுத்தாலே டேட்டா வரிசையாக நாம் தேர்ந்தெடுத்தபடி நிரப்பப்படும். இதில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை நிரப்ப வேண்டும் என்றால் என்ன செய்யலாம்? இதற்கு முதலிலேயே ஒரு சிறிய அட்ஜஸ்ட்மென்ட் செய்திட வேண்டும். பொதுவாக பில் இன் செய்வதற்கு முதலில் டேட்டா உள்ள செல்லை தேர்ந்தெடுக்கிறோம். பின் பில் ஹேண்டில் (செல் செலக்ஷன் அவுட்லைனில் வலது மூலையில் உள்ள சிறிய கருப்பு கட்டம்) பற்றி இழுக்கிறோம். ஒன்று விட்டு ஒன்று நிரப்ப டேட்டா செல் மற்றும் அதன் கீழே இருக்கும் செல்லினையும் சேர்த்து ஹை லைட் செய்து பின் பில் ஹேண்டிலை இழுங்கள். கீழே காலியாக உள்ள செல்லினையும் தேர்ந்தெடுத்ததால் டேட்டா ஒன்றிலும் அடுத்தது காலியாகவும் தொடர்ந்து நிரப்பப்படும். ஒரு சின்ன வேலை செய்வதனால் எவ்வளவு தலைவலி, கூடுதல் வேலை மிச்சமாகிறது.

வேர்டில் டேபிள் தலைப்புகள்
வேர்டில் டேபிள் உருவாக்குகையில் ஒவ்வொரு நெட்டு வரிசைக்கும் ஒரு தலைப்பு கொடுப்போம். அந்த நெட்டு வரிசையில், எந்த பொருள் குறித்த தகவல்கள் உள்ளன என்று அறிவதற்காக இந்த ஏற்பாட்டினை நாம் மேற்கொள் வோம். சில டேபிள்கள் பல பக்கங்கள் வரை நீண்டு செல்லலாம். அப்போது ஒவ்வொரு பக்கத்திலும் அதன் நெட்டு வரிசை தலைப்புகள் இருந்தால் தான், அவற்றைப் படித்தறிய வசதியாக இருக்கும். இதற்கென ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பிலும் அவற்றின் தலைப்பை டைப் செய்ய முடியாது. மேலும் டேபிளில் உள்ள டேட்டாவினை எடிட் செய்கையில், கூடுதல் டேட்டா அமைக்கும் போதோ, டேட்டாவினை நீக்கும் போதோ, அடுத்த பக்க தலைப்புகள் இடம் மாறி முன்னதாக உள்ள பக்கத்திற்கோ அல்லது பக்க நடுவிலோ சென்றுவிடும்.
இந்த பிரச்சினைக்கு வேர்ட் முடிவு ஒன்று தருகிறது. எந்த தலைப்பு உள்ள படுக்கை வரிசை, ஒவ்வொரு பக்கத்திலும் வர வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த வரிசைக்குக் கர்சரைக் கொண்டு செல்லவும். பின் டேபிள் மெனுவில் Heading Rows Repeat என்று இருப்பதனைக் கிளிக் செய்திடவும். இனி ஒவ்வொரு பக்கத்திலும் இந்த தலைப்பு தானாக அமைக்கப்படும்.

நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துவதாக இருந்தால், முதலில் எந்த வரிசையில் உள்ள தலைப்புகள், அடுத்தடுத்து வர வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதற்கு முதலில் கர்சரை எடுத்துச் செல்லவும். அடுத்து ரிப்பனில் லே அவுட் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு டேட்டா குரூப்பில் Repeat Header Rows என்பதில் கிளிக் செய்திடவும்.
என்ன, இவ்வாறு செட் செய்த பின்னரும், உங்கள் டேபிளில் மட்டும் தலைப்புகள் அடுத்தடுத்த பக்கங்களில் தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள். நீங்கள் என்ன வியூவில் வேர்ட் டாகுமென்ட்டைப் பார்க்கிறீர்கள் என்பதனைக் கவனிக்கவும். நார்மல் வியூவில் இருந்தால் இந்த தலைப்புகள் அடுத்த பக்கத்திற்குச் செல்லாது. எனவே வியூவினை மாற்றுங்கள்.

எக்ஸெல் – எப்2 கீயின் பயன்பாடு
எக்ஸெல் தொகுப்பில் நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கையில் செல் ஒன்றில் உள்ள பார்முலா ஒன்றை எடிட் செய்திட விரும்புகிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? முதலில் செல்லில் கிளிக் செய்து பின் அந்த பார்முலாவில் கிளிக் செய்து கர்சரைக் கொண்டு சென்று எடிட் செய்திட முனைகிறீர்கள். எத்தனை மவுஸ் கிளிக்குகள்? உங்கள் டேபிளில் கச்சடா பொருட்கள் நிறைய இருந்து மவுஸ் நகர்த்த சரியான இடம் இல்லாமல் போனாலோ அல்லதுமவுஸ் வைத்திருக்கும் பேட் சரியாக இல்லாமல் போனாலோ இந்த கிளிக்குகள் எல்லாம் எரிச்சலைத் தரும். இதனைக் கீ போர்டு வழியாக எப்படி செய்வது என்று பார்ப்போம். பேஜ் அப் பேஜ் டவுண் மற்றும் ஆரோ கீகளை அழுத்தி முதலில் திருத்த வேண்டிய செல்லுக்குச் செல்லுங்கள். சென்ற பின்னர் F2 கீயை அழுத்துங்கள். செல்லில் பார்முலா இருந்தால் அங்கு உங்கள் பார்முலாவினை அல்லது டெக்ஸ்ட்டை எடிட் செய்திட கர்சர் சிமிட்டிக் கொண்டிருக்கும். எடிட் செய்து முடித்தவுடன் என்ன செய்யலாம்? ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். அவ்வளவு தான் எடிட்டிங் ஓவர்!

டாகுமெண்ட்டில் மாதம்:
வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட் ஒன்றில் இந்த மாதம் என்ன என்று எழுதப்பட வேண்டுமா? எடுத்துக் காட்டாக ஒவ்வொரு மாதமும், ஒரு ரிபோர்ட் ஒன்றை உங்கள் நிறுவனம் உருவாக்குகிறது. அதற்கான டேட்டாவை தினந்தோறும் ஒரு டேபிளில் அமைக்கலாம். அல்லது டெக்ஸ்ட்டில் இணைக்கலாம். அப்போது அந்த மாதத்தின் பெயர் அமைய வேண்டும் என நீங்கள் விரும்பலாம். இதற்கு டேட் என்ற பீல்டைப் பயன்படுத்த வேர்ட் வசதி அளிக்கிறது. கீழ்க்காணும் முறையில் அதனை செட் செய்திடவும்.
1. எந்த இடத்தில் மாதத்தின் பெயர் வரவேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரை நிறுத்தவும். இந்த இடத்தில் பீல்டு உருவாக்க வேண்டும்.
2. பீல்டுக்கான வளைவான அடைப்புக் குறிகளை அமைக்க Ctrl +F9 (கண்ட்ரோல் +எப் 9)டைப் செய்திடவும். வளைவு பிராக்கெட் குறிகள் ஏற்படுத்தப்படும். உங்கள் கர்சர் இதனுள் இருக்க வேண்டும்.
3. இதில் date\@MMMM என டைப் செய்திடவும்.
4. பின் அப்டேட் செய்வதற்காக F9 அழுத்தவும்.
ஒவ்வொரு முறையும் எப் 9 அழுத்துகையில் அந்த மாதம் கிடைக்கும்.

பி.எஸ்.என்.எல். – எச்.சி.எல். ஒப்பந்தம் சலுகைக் கட்டணத்தில் கம்ப்யூட்டர் + பிராட்பேண்ட்

கிராமப் புறங்களில் பிராட்பேண்ட் பயன்பாட்டினை அதிக அளவில் சலுகைக் கட்டணத்தில் மக்களுக்கு வழங்கி, இன்டர்நெட் பயன்பாட்டில் நகர்ப்புற மக்களுக்கும் கிராமப் புற மக்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை உயர்த்த பி.எஸ்.என்.எல். நிறுவனமும், எச்.சி.எல். நிறுவனமும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் பிராட்பேண்ட் இணைப்பை 10 கோடியாக உயர்த்தும் இந்திய அரசின் நோக்கத்துடன் இவை இணைந்துள்ளன. மத்திய அரசின் தொலை தொடர்பு துறை கிராமப் புறங்களில் பிராட்பேண்ட் இணைப்பை பழக்கப்படுத்த ஒவ்வொரு இணைப்பிற்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ரூ.4,500 சலுகையாக வழங்குகிறது. விநாடிக்கு 512 கே.பி.பி.எஸ். வேகத்தில் பிராட்பேண்ட் இணைப்பினை பி.எஸ்.என்.எல். வழங்குகிறது. இந்த தொகை கிராமப் புறங்களில் இயங்கும் 27,789 பி.எஸ்.என் .எல். தொலைபேசி நிலையங்களுக்கு வழங்கப்படுகிறது. கிராமப் புற மக்கள் பிராட்பேண்ட் இணைப்பைப் பெற்று பயன்படுத்த இவ்வாறு சலுகை வழங்குவதன் மூலம், நகரத்தில் உள்ளவர்களுக்கும் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கும் பிராட் பேண்ட் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவதில் உள்ள வேறுபாட்டினைக் களைய அரசு திட்டமிடுகிறது.

இந்த சலுகையை பி.எஸ்.என்.எல். மற்றும் எச்.சி.எல். நிறுவனங்கள் இணைந்து மக்களிடையே கொண்டு செல்ல ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, எச்.சி.எல். நிறுவனம் ரூ.2,250 முதலில் செலுத்துபவர்களுக்கு பிராட்பேண்ட் இணைப்புக்குத் தயார் செய்திட்ட கம்ப்யூட்டரை மக்களுக்கு வழங்கும். இதன் பின் கம்ப்யூட்டருக்கு மாதம் ரூ.300 செலுத்த வேண்டும். பிராட்பேண்ட் இணைப்பிற்குச் சலுகை கட்டணமாக ரூ. 99 அல்லது ரூ.150 செலுத்த வேண்டும்.
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து முன்னேறி வரும் இன்றைய நிலையில் அதற்கான சூழ்நிலையை அமைக்க வேண்டியது அனைவரின் கடமை யாகும். குறிப்பாக கிராமங்களில் இந்த சூழ்நிலை கட்டாயம் அமைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இன்றைய சூழலில் அனைத்து நாடுகளிலும், ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அங்கு பயன்படுத்தப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் இணைப்புகளையும் சார்ந்தே உள்ளது. எனவே அத்தகைய சூழ்நிலையை அமைத்து அதன் செயல்பாட்டினைத் தொடர்ந்து வேகப்படுத்த, இது போன்ற திட்டங்கள் நிச்சயம் உதவிடும் என எச்.சி.எல். நிறுவன அதிகாரி அஜய் சவுத்ரி தெரிவித்தார்.

பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் பராமரிப்பினை எச்.சி.எல். நிறுவனம் மேற்கொள்ளும். ஏற்கனவே எச்.சி.எல். நிறுவனம் இயக்கி வரும் ” எச்.சி.எல். டச்(HCL Touch) என்னும் திட்டம் இதற்கு உதவிடும் வகையில் இயங்கும். 4,000 க்கும் மேற்பட்ட பணி மையங்கள் மூலம், 11 மாநில மொழிகளில் பராமரிப்பு சேவை வழங்கப்படும். மேலும் இதற்கென இரண்டு கால் சென்டர்களை அமைக்க இருப்பதாக எச்.சி.எல். நிறுவன தலைமை அதிகாரி, அஜய்சௌத்ரி தெரிவித்துள்ளார். இந்த சென்டர்களுக்கு உதவி வேண்டுவோர் கட்டணமில்லாத இரண்டு போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

கவலைக்குள்ளாக்கும் இன்டர்நெட் பாதுகாப்பு
இன்டர்நெட் வலை அமைப்பின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் தன்மை குறித்து பல அமைப்புகள் நிறுவப்பட்டு அவை மக்களுக்குப் பல தகவல்களைத் தொடர்ந்து அளித்து வருகின்றன. இன்டர்நெட் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து Websense Security Lab என்னும் அமைப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தன் அறிக்கையை வெளியிடும். இதில் வெப்சைட்டுகளில் ஏற்பட்டு வரும் அனைத்து மாற்றங்கள் குறித்த தகவல்கள், அவற்றின் பாதுகாப்பின் நிலை ஆகியன சார்ந்த தகவல்கள் வெளியிடப்படும். பொதுவாக இன்டர்நெட்டில் உள்ள ஸ்பாம் மெயில்கள், ஹேக்கர்கள் நுழையக் கூடிய இடங்கள் அதிகரிப்பு போன்ற தகவல் தொடர்ந்து உயர்ந்து வருவதனை இந்த அறிக்கை சுட்டிக் காட்டும். ஆனால் இந்த முறை வெளியிட்ட அறிக்கை மிகவும் மோசமான நிலையில் இன்டர்நெட் இருப்பதனைக் காட்டுகிறது. மோசமான கெடுதல் தரும் இணைய தளங்களின் எண்ணிக்கை கடந்த ஆறு மாதங்களில் 230% அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு முழுமைக்குமான கணக்கெடுப்பில் இது 640% ஆக இருந்தது. மிகவும் பாதுகாப்பான வெப்சைட்கள் எனக் கருதப்பட்ட தளங்களில் 80% தளங்கள் கெடுதல் தரும் குறியீடுகளைக் கொண்டிருந்தன. அதாவது, மிகவும் பாதுகாப்பானது என்று கருதப்படும் பல தளங்கள் பலவீனமாகவே இருந்திருக்கின்றன.

மெசேஜ் போர்ட், சேட் ரூம்கள் மற்றும் பிளாக்குகளில் உள்ள குறிப்புகள் 95% ஸ்பேம் வகைத் தகவல்களாகவே இருந்து வருகின்றன. 86% ஸ்பேம் இமெயில்கள், கெடுதல் விளைவிக்கும் தளங்களிலிருந்தே அனுப்பப்பட்டுள்ளன. எனவே மெயில்கள் கிடைக்கையில், அது நம்பகத் தன்மை உடைய நண்பரிடமிருந்து வந்தால் மட்டுமே திறக்க வேண்டும். அதில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்திட வேண்டும். உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாக்கப்படாத வகையில் இருந்தால் நிச்சயம் இத்தகைய மெயில்கள், கம்ப்யூட்டர் பயன்பாட்டினை முடக்கிவிடும். சென்ற ஜூன் மாதத்தில் மட்டும் இத்தகைய வைரஸ்களைத் தூக்கி வந்த மெயில்களின் எண்ணிக்கை 600% உயர்ந்துள்ளது. இந்த புள்ளிவிபரங்களைப் பார்க்கை யில் இன்டர்நெட் உலகம் என்பது எதிர்பாராத நேரத்தில் விபத்துக்களைத் தரக்கூடிய அடர்ந்த காடு என்பது போல் உள்ளது. எனவே நாம் தான் ஜாக்கிரதையாக அதில் பயணம் செய்திட வேண்டும்.