பி.எஸ்.என்.எல். – எச்.சி.எல். ஒப்பந்தம் சலுகைக் கட்டணத்தில் கம்ப்யூட்டர் + பிராட்பேண்ட்

கிராமப் புறங்களில் பிராட்பேண்ட் பயன்பாட்டினை அதிக அளவில் சலுகைக் கட்டணத்தில் மக்களுக்கு வழங்கி, இன்டர்நெட் பயன்பாட்டில் நகர்ப்புற மக்களுக்கும் கிராமப் புற மக்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை உயர்த்த பி.எஸ்.என்.எல். நிறுவனமும், எச்.சி.எல். நிறுவனமும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் பிராட்பேண்ட் இணைப்பை 10 கோடியாக உயர்த்தும் இந்திய அரசின் நோக்கத்துடன் இவை இணைந்துள்ளன. மத்திய அரசின் தொலை தொடர்பு துறை கிராமப் புறங்களில் பிராட்பேண்ட் இணைப்பை பழக்கப்படுத்த ஒவ்வொரு இணைப்பிற்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ரூ.4,500 சலுகையாக வழங்குகிறது. விநாடிக்கு 512 கே.பி.பி.எஸ். வேகத்தில் பிராட்பேண்ட் இணைப்பினை பி.எஸ்.என்.எல். வழங்குகிறது. இந்த தொகை கிராமப் புறங்களில் இயங்கும் 27,789 பி.எஸ்.என் .எல். தொலைபேசி நிலையங்களுக்கு வழங்கப்படுகிறது. கிராமப் புற மக்கள் பிராட்பேண்ட் இணைப்பைப் பெற்று பயன்படுத்த இவ்வாறு சலுகை வழங்குவதன் மூலம், நகரத்தில் உள்ளவர்களுக்கும் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கும் பிராட் பேண்ட் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவதில் உள்ள வேறுபாட்டினைக் களைய அரசு திட்டமிடுகிறது.

இந்த சலுகையை பி.எஸ்.என்.எல். மற்றும் எச்.சி.எல். நிறுவனங்கள் இணைந்து மக்களிடையே கொண்டு செல்ல ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, எச்.சி.எல். நிறுவனம் ரூ.2,250 முதலில் செலுத்துபவர்களுக்கு பிராட்பேண்ட் இணைப்புக்குத் தயார் செய்திட்ட கம்ப்யூட்டரை மக்களுக்கு வழங்கும். இதன் பின் கம்ப்யூட்டருக்கு மாதம் ரூ.300 செலுத்த வேண்டும். பிராட்பேண்ட் இணைப்பிற்குச் சலுகை கட்டணமாக ரூ. 99 அல்லது ரூ.150 செலுத்த வேண்டும்.
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து முன்னேறி வரும் இன்றைய நிலையில் அதற்கான சூழ்நிலையை அமைக்க வேண்டியது அனைவரின் கடமை யாகும். குறிப்பாக கிராமங்களில் இந்த சூழ்நிலை கட்டாயம் அமைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இன்றைய சூழலில் அனைத்து நாடுகளிலும், ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அங்கு பயன்படுத்தப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் இணைப்புகளையும் சார்ந்தே உள்ளது. எனவே அத்தகைய சூழ்நிலையை அமைத்து அதன் செயல்பாட்டினைத் தொடர்ந்து வேகப்படுத்த, இது போன்ற திட்டங்கள் நிச்சயம் உதவிடும் என எச்.சி.எல். நிறுவன அதிகாரி அஜய் சவுத்ரி தெரிவித்தார்.

பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் பராமரிப்பினை எச்.சி.எல். நிறுவனம் மேற்கொள்ளும். ஏற்கனவே எச்.சி.எல். நிறுவனம் இயக்கி வரும் ” எச்.சி.எல். டச்(HCL Touch) என்னும் திட்டம் இதற்கு உதவிடும் வகையில் இயங்கும். 4,000 க்கும் மேற்பட்ட பணி மையங்கள் மூலம், 11 மாநில மொழிகளில் பராமரிப்பு சேவை வழங்கப்படும். மேலும் இதற்கென இரண்டு கால் சென்டர்களை அமைக்க இருப்பதாக எச்.சி.எல். நிறுவன தலைமை அதிகாரி, அஜய்சௌத்ரி தெரிவித்துள்ளார். இந்த சென்டர்களுக்கு உதவி வேண்டுவோர் கட்டணமில்லாத இரண்டு போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

கவலைக்குள்ளாக்கும் இன்டர்நெட் பாதுகாப்பு
இன்டர்நெட் வலை அமைப்பின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் தன்மை குறித்து பல அமைப்புகள் நிறுவப்பட்டு அவை மக்களுக்குப் பல தகவல்களைத் தொடர்ந்து அளித்து வருகின்றன. இன்டர்நெட் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து Websense Security Lab என்னும் அமைப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தன் அறிக்கையை வெளியிடும். இதில் வெப்சைட்டுகளில் ஏற்பட்டு வரும் அனைத்து மாற்றங்கள் குறித்த தகவல்கள், அவற்றின் பாதுகாப்பின் நிலை ஆகியன சார்ந்த தகவல்கள் வெளியிடப்படும். பொதுவாக இன்டர்நெட்டில் உள்ள ஸ்பாம் மெயில்கள், ஹேக்கர்கள் நுழையக் கூடிய இடங்கள் அதிகரிப்பு போன்ற தகவல் தொடர்ந்து உயர்ந்து வருவதனை இந்த அறிக்கை சுட்டிக் காட்டும். ஆனால் இந்த முறை வெளியிட்ட அறிக்கை மிகவும் மோசமான நிலையில் இன்டர்நெட் இருப்பதனைக் காட்டுகிறது. மோசமான கெடுதல் தரும் இணைய தளங்களின் எண்ணிக்கை கடந்த ஆறு மாதங்களில் 230% அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு முழுமைக்குமான கணக்கெடுப்பில் இது 640% ஆக இருந்தது. மிகவும் பாதுகாப்பான வெப்சைட்கள் எனக் கருதப்பட்ட தளங்களில் 80% தளங்கள் கெடுதல் தரும் குறியீடுகளைக் கொண்டிருந்தன. அதாவது, மிகவும் பாதுகாப்பானது என்று கருதப்படும் பல தளங்கள் பலவீனமாகவே இருந்திருக்கின்றன.

மெசேஜ் போர்ட், சேட் ரூம்கள் மற்றும் பிளாக்குகளில் உள்ள குறிப்புகள் 95% ஸ்பேம் வகைத் தகவல்களாகவே இருந்து வருகின்றன. 86% ஸ்பேம் இமெயில்கள், கெடுதல் விளைவிக்கும் தளங்களிலிருந்தே அனுப்பப்பட்டுள்ளன. எனவே மெயில்கள் கிடைக்கையில், அது நம்பகத் தன்மை உடைய நண்பரிடமிருந்து வந்தால் மட்டுமே திறக்க வேண்டும். அதில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்திட வேண்டும். உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாக்கப்படாத வகையில் இருந்தால் நிச்சயம் இத்தகைய மெயில்கள், கம்ப்யூட்டர் பயன்பாட்டினை முடக்கிவிடும். சென்ற ஜூன் மாதத்தில் மட்டும் இத்தகைய வைரஸ்களைத் தூக்கி வந்த மெயில்களின் எண்ணிக்கை 600% உயர்ந்துள்ளது. இந்த புள்ளிவிபரங்களைப் பார்க்கை யில் இன்டர்நெட் உலகம் என்பது எதிர்பாராத நேரத்தில் விபத்துக்களைத் தரக்கூடிய அடர்ந்த காடு என்பது போல் உள்ளது. எனவே நாம் தான் ஜாக்கிரதையாக அதில் பயணம் செய்திட வேண்டும்.

%d bloggers like this: