விண்டோஸிலிருந்து லினக்ஸ் மாறலாமா?

லினக்ஸ் – இது மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயங்குதளம் என ஒரு லினக்ஸ் ரசிகர் கூறுவார். இந்த கூற்று முற்றிலும் உண்மையானதே. லினக்ஸிற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. பொது நோக்கத்தோடு பலர் எழுதிய பல நோக்கு புரோகிராம்கள் இணைந்த தொகுப்பே லினக்ஸ்.

விண்டோஸ் விஸ்டா தொகுப்பு தந்த சில கசப்பான அனுபவங்களுக்குப் பின், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் பலர் ஏன் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அதன் இடத்தில் பயன்படுத்திப் பார்க்கக் கூடாது என்று எண்ணி வருகின்றனர். மீண்டும் எக்ஸ்பிக்குத் திரும்பினாலும், லினக்ஸ் அனுபவத் தினையும் மேற்கொள்ள எண்ணுகின்றனர். இது வாடிக்கையாளர்களின் எதிர்செயல் மட்டுமன்று. சில கம்ப்யூட்டர் நிறுவனங்களே, விஸ்டாவை ஒதுக்கி வைத்து லினக்ஸ் சிஸ்டத்திற்குத் தாவின. எடுத்துக்காட்டாக டெல் கம்ப்யூட்டர் நிறுவனத்தைப் பார்க்கலாம். தொடக்கத்தில் டெல் தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் எக்ஸ்பியிலிருந்து விஸ்டாவிற்கு மாற்றியது. இருந்தாலும் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க பல கம்ப்யூட்டர்களிலும் எக்ஸ்பி பதிந்தே விற்பனை செய்து வந்தது. இதனால் சென்ற 2007 ஏப்ரல் முதல் மீண்டும் எக்ஸ்பிக்கு தாவியது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சற்று வருத்தம் தான்.
ஆனால் டெல் அடுத்த மே மாதத்தில் இன்னொரு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வந்தது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் உபுண்டு லினக்ஸ் பதிப்பு 7.04 ஐப் பதிந்து தருவதாக அறிவித்தது.

உலகின் முன்னணி நிறுவனமான டெல் இவ்வாறு விடுத்த அறிவிப்பு பலரையும் லினக்ஸ் நிறுவனத்தின் பெருமைகள் பக்கம் திருப்பியது. அப்போது தான் லினக்ஸ் தொகுப்பு பிரபலமாகத் தொடங்கியது. பல நாடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் சிஸ்டம் வல்லுநர்களும் லினக்ஸ் குறித்து சிந்தித்துச் செயல்படத் தொடங்கினர். லினக்ஸ் ஒரு திறந்த புத்தகமாய், யாரும் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் தன் குறியீட்டு வரிகளைக் கொண்டதாய் அமைந்ததால், பல வல்லுநர்கள் இதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை அமைத்துத் தரத் தொடங்கினார்கள். லினக்ஸ் சிஸ்டத்திலும் பல மேம்பாடுகள் உருவாக்கப்பட்டு, பல்வேறு பெயர்களுடன் இணைந்த லினக்ஸ் வெளிவரத் தொடங்கின. தற்போது விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டரிலேயே, இன்னொரு டிரைவில் லினக்ஸ் தொகுப்பினையும் பதித்து இயக்கும் பயன்பாட்டினைப் பலரும் மேற்கொண்டுள்ளனர்.

பொதுவாக ஒரு சிஸ்டத்திற்குப் பழகிய நாம், இன்னொரு சிஸ்டத்திற்கு மாறுவதற்குத் தயங்குவோம். புதிய சிஸ்டத்தின் பயன்களைக் கண்டு, அதனால் அதிகச் செலவு அல்லது செலவே இருக்காது என்று நம்பிய பின் அது குறித்து யோசிப்போம்.
பொதுவாக நம் விற்பனைச் சந்தை, பொருளின் விலை அடிப்படையில் இயங்குவதால், லினக்ஸ் இலவசம் என்ற கூற்றும், மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆபீஸ் தொகுப்புகளுக்கான நகல் பதிப்புகளின் பயன்பாட்டினை நெருக்கு கிறது என்ற நிலை வந்ததாலும், பலர் லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துவது குறித்து ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கி உள்ளனர். இங்கே லினக்ஸ் பயன்படுத்துவதால், அல்லது அதற்கு மாறுவதால் நாம் பெறக் கூடிய பயன்களைப் பார்க்கலாம்.
1. லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்பு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பாகும். விண்டோஸ் போல இதனைப் பணம் செலுத்திப் பெற வேண்டிய அவசியமில்லை. இன்டர் நெட்டிலிருந்து லினக்ஸ் சிஸ்டத்திற்கான ஐ.எஸ்.ஓ. பைலை டவுண்லோட் செய்து, அதனை சிடி அல்லது டிவிடியில் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் பதியும் போது விண்டோஸ் தொகுப்பிற்கு பணம் செலுத்த வேண்டும். லினக்ஸிற்குக் கிடையாது.
2. லினக்ஸ் தொகுப்பு இறக்கிப் பதியும் போது, பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் இணைந்தே இலவசமாகக் கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக பி.டி.எப். ரீடர், வெப் சர்வர், கம்பைலர், ஐ.டி.இ. போன்றவற்றை எடுத்துக் காட்டாகக் கூறலாம். இவை எல்லாவற்றைக் காட்டிலும் உபுண்டு லினக்ஸ் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தால் ஓப்பன் ஆபீஸ் என்ற ஆபீஸ் தொகுப்பும் கிடைக்கிறது. இது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் அனைத்து செயல்பாடுகளுக்குமான மாற்று தொகுப்பாக, இலவசமாகக் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராமாகும்.
3. அடுத்தது பாதுகாப்பு. லினக்ஸ் சிஸ்டம் இயக்கும் பைல்களை, கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர், ஆட்வேர் போன்ற கெடுக்கும் புரோகிராம்கள் பாதிப்பதில்லை. இதனால் இவற்றிற்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் போன்ற புரோகிராம்களை விலை கொடுத்து வாங்கிப் பதிய வேண்டியதில்லை. தொடர்ந்து அதனை அப்டேட் செய்திட காசு கட்ட வேண்டியதில்லை. பதிந்தபின்னும் பயத்துடன் இருக்க வேண்டியதில்லை.
4. விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா பயன்படுத்த, கூடுதலான அளவில் ராம் மெமரி எனப்படும் நினைவகம் தேவைப்படும். ஆனால் உபுண்டு லினக்ஸ் போன்ற சிஸ்டம் புரோகிராம்கள் இயங்க அந்த அளவிற்கு ராம் தேவைப்படாது.
5. அடிக்கடி கிராஷ் ஆகி, நீல நிறத்தில் “உங்கள் கம்ப்யூட்டர் போச்சே! மீண்டும் ரீ பூட் செய்திடுங்கள்’ என்றெல்லாம், லினக்ஸில் செய்தி வராது. இதனால் தான் தொடர்ந்த கம்ப்யூட்டர் இயக்கம் வேண்டுபவர்கள் (சர்வர் பயன்படுத்துபவர்கள்) லினக்ஸ் இயக்கத்தினை நாடுகிறார்கள்.
6. பல்வேறு கம்ப்யூட்டர் மொழிகளில் (சி மற்றும் அதன் குடும்பத்தைச் சேர்ந்த புரோகிராம் மொழிகள்) புரோகிராம் எழுத லினக்ஸுடன் கம்ப்பைலர்கள் இலவசமாகவே தரப்படுகின்றன. பைத்தன் (கதூtடணிண) மொழியைக் கற்று புரோகிராம் எழுதவும் லினக்ஸில் வழி உண்டு.
7. தொடர்ந்து லினக்ஸ் மேம்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட தொகுப்புகள் பல புதிய வசதிகளைத் தந்து கொண்டிருக்கின்றன. மேலும் இவையும் இலவசமாகவே கிடைக்கின்றன.
8. விண்டோஸ் என்னும் ஏக போக ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம் இருந்து விடுதலை கிடைத்ததால், லினக்ஸ் சிஸ்டம் ரசிகர்கள் தங்களுக்கென பல இணைய தளங்களை உருவாக்கி, உலகெங்கும் லினக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல்களைத் தீர்க்கும் தீர்வுகளை இலவசமாகவும் சேவையாகவும் தந்து வருகின்றனர். உங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும், அதனை சர்ச் இஞ்சினில் போட்டால் அதற்கான தீர்வு ஏற்கனவே இருக்கும்; அல்லது உடனே எங்கிருந்தாவது கிடைக்கும். லினக்ஸ் பயனாளர்களுக்கு உதவிட, தமிழ் மொழி உட்பட, பல மொழிகளில் உதவி தரும் தளங்கள் இயங்குகின்றன.
நீங்கள் லினக்ஸ் பயன்படுத்தினால் விண்டோஸ் இருக்கும் கம்ப்யூட்டரிலேயே, லினக்ஸ் தொகுப்பினையும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். பின் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என அறிந்தால் லினக்ஸோடு மட்டும் தொடரலாம். அப்படியும் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தவா என்று பயந்தால், லினக்ஸ் சிஸ்டம் தரும் டீலர்கள் பலர் லைவ் சிடி என்ற ஒன்றைத் தருகின்றனர். இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் லினக்ஸ் தொகுப்பினை நிறுவாமல், லினக்ஸ் சிஸ்டத்தை இயக்கிப் பார்க்கலாம்.
9. லினக்ஸ் இயக்கம் முழுவதும் எளிமையான இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இது கம்ப்யூட்டர் பழக்கத்தை ஒரு பிரிய நண்பனாகக் காட்டுகிறது.
10. கிராஷ் ஆகாமல் இருப்பதால், எந்தவித பயமும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தலாம்.
சென்னையில் லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் ஒரு குழு அமைத்துத் தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதுடன், பயன்படுத்துபவர்களுக்கான அனைத்து உதவிகளையும் தந்து வருகின்றனர். இந்த குழு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. http://www.chennailug.org என்ற முகவரி உள்ள இணைய தளத்தில் இது குறித்த தகவல்களைக் காணலாம். இதன் மின்னஞ்சல் குழுவிலும் சேரலாம்.

இன்னொன்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், சில ஆர்வலர்களின் முயற்சியின் மூலம் தமிழிலேயே கிடைக்கிறது. ww.thamizhlinux.org, http://www.thamizha.org ஆகிய முகவரிகளில் இது குறித்த தகவல்களைக் காணலாம்.
லினக்ஸ் தொகுப்பு இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தாலும் ஏன் பிரபலமாகவில்லை? என்ற ஒரு கேள்வி எழலாம். ஏற்கனவே குறிப்பிட்டது போல, நாம் அடிப்படை விஷயங்களில் மாற்றங்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை.

அடுத்ததாக, லினக்ஸ் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள சற்றுப் பொறுமை வேண்டும். படித்து நாமாக நம் அனுபவத்தின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டியது உள்ளது. எல்லாமே ரெடியாக நாம் பயன்படுத்த இருப்பதில்லை. சிலவற்றைக் கற்றபின்னரே பயன்படுத்தமுடியும். இந்த வகையில் http://foogazi.com/2006/11/24/20mustreadhowtosandguidesforlinux/ / என்ற முகவரியில் உள்ள தளத்தில் சொல்லப்பட்டிருப்பதனைப் பார்க்கவும்.

புதிதாக வரும் சில ஹார்ட்வேர் சாதனங்களை, லினக்ஸ் சிஸ்டம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் லினக்ஸ் சிஸ்டத்திற்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருந்தால், ஒருவேளை, நமக்கு புதிய ஹார்ட்வேர் சாதனங்களுக்கான பேட்ச் பைல் கிடைத்துக் கொண்டே இருக்கும். அது இல்லாத நிலை பல வேளைகளில் ஏற்படுகிறது. இதனால் தான் விண்டோஸ் தொகுப்பிற்கு முழுமையான மாற்று சிஸ்டமாக லினக்ஸை ஏற்றுக் கொள்ளப் பலர் தயங்குகின்றனர்.
இன்னும் விண்டோஸ் இயக்கத்தில் பயன்படுத்தப்படும் சில புரோகிராம்களுக்கு இணையான லினக்ஸ் புரோகிராம்கள் உருவாக்கப்படவில்லை. இது சற்று தயக்கத்தினை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இப்போது நீங்கள் லினக்ஸ் தரும் பயன்களை அறிந்து கொண்டதனால், அதனைப் பயன்படுத்திப் பார்க்கும் முயற்சியில் இறங்கலாமே!

லினக்ஸ் தொகுப்பினைப் பல நிறுவனங்கள் சில வேறுபாடுகளுடன் தருகின்றன. Linspire, Red Hat, SuSE, Ubuntu, Xandros, Knoppix, Slackware, Lycoris போன்றவை இவற்றில் முக்கியமானவை. இதுவரை வந்த விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளை “Win9x” எனவும், “NT class” எனவும் இரண்டு பெரிய வகைகளாகக் குறிப்பிடுகிறோம். மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது விண்டோஸ் என்.டி. 3, என்.டி. 4 மற்றும் அனைத்து 9எக்ஸ் தொகுப்புகள் குறித்துக் கண்டு கொள்வதே இல்லை. லினக்ஸ் தொகுப்பின் பல்வேறு பதிப்புகளை “distros” என அழைக்கின்றனர். டிஸ்டிரிப்யூட்டர்ஸ் என்பதன் சுருக்கமே இது. பல நிறுவனங்களால் இது டிஸ்டிரிப்யூட் செய்யப்படுவதால் இந்த சுருக்கப் பெயர் உள்ளது.

பொதுவாக அனைத்து லினக்ஸ் தொகுப்புகளுக்குமான அடிப்படை இயங்கு தளம் (Kernel) ஒரே மாதிரியாகவே இருக்கும். உடன் தரப்படும் ஆட் ஆன் தொகுப்புகள் தான் வேறுபடும். லினக்ஸ் மற்றும் விண்டோஸ் – இரண்டுமே எப்போதும் டெஸ்க்டாப் மற்றும் சர்வர் என இரண்டு வகை தொகுப்புகளைத் தருகின்றன.

4 responses

  1. லினக்ஸ் ஒரு அருமையான மென்பொருள்
    லினக்ஸ் os எல்லோரும் பயன்படுத்த வேண்டிய ஒன்று
    மேலும் எளிமையாக உள்ளது

  2. லினெக்ஸ் பல தீர்வுக்கு விடை கான நல்லதோர் வழி

  3. Really good article, My friends and neighbours are afraid to use Linux.
    We always say them to install. But they are afraid, what can do? haha……

  4. i want லினக்ஸ் download url thank u

%d bloggers like this: