விண்டோஸ் 7 நீங்களும் கண்காட்சி நடத்தலாம்

வரும் அக்டோபர் 22ல் வெளியாக இருக்கும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த கண்காட்சியினை நீங்கள் உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ, அரங்கிலோ நடத்தலாம். இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைத்து உதவிகளையும் தருகிறது. கண்காட்சிக்கு நீங்கள் அழைக்கும் நபர்களுக்கு சிறிய பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். உங்களுக்கு விண்டோஸ் 7 தொகுப்பு பரிசாகத் தரப்படும். என்ன ஆச்சரியாமாக இருக்கிறதா! மேலே படியுங்கள்.

தன்னுடைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை அறிமுகப்படுத்துகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம், சில வேளைகளில் புதிய வகையில் முயற்சிகளை மேற்கொள்ளும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுக சரித்திரத்தைப் பொறுத்தவரை, விண்டோஸ் 95 வெளியான வகைதான் இன்றும் சிறப்பாகப் பேசப்படுகிறது. 1995 ஆம் ஆண்டு இது வெளியானபோது அனைத்து நாடுகளிலும் தொடர்ந்து விளம்பரங்கள் மேற்கொள்ளப் பட்டன. விண்டோஸ் 95 தொகுப்பினை வாங்காதவர்கள் ஏதோ பாவம் செய்தவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் அதற்கான விளம்பரங்கள் இருந்தன.
வர இருக்கும் விண்டோஸ் 7 தொகுப்பினை அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் முற்றிலும் புதிய திட்டம் ஒன்றினை மேற்கொள்ள இருக்கிறது. ஆம்வே மற்றும் டப்பர்வேர் சாதனங்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்திட அந்நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைப் போல மைக்ரோசாப்ட் நிறுவனமும் திட்டமிடுகிறது.

இந்த கண்காட்சியை நீங்கள் நடத்த விரும்பினால் www.houseparty.com என்ற இணைய தள முகவரி சென்று பதிந்து கொள்ளுங்கள். அவ்வாறு பதிகையில் மைக்ரோசாப்ட் உங்களிடமிருந்து பல கேள்விகளுக்குச் சரியான விடைகளை எதிர்பார்க்கிறது. உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டம் விண்டோஸ் 7 தொகுப்பை எதிர்கொள்ளும் அளவிற்கு வடிவமைக்கப்பட்ட ஒன்றா என்றெல்லாம் கணிக்கிறது. பின் உங்களைப் பற்றிய குறிப்புகளை, முகவரியை வாங்கிக் கொண்டு, விரைவில் நீங்கள் கண்காட்சி நடத்த தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறீர்களா என்று அறிவிப்போம் எனச் செய்தி தருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்குத் தேவையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர், அதற்கான குறிப்புகள் எல்லாம் தரப்படும். நீங்கள் இதனை உங்கள் நண்பர்களுக்குப் போட்டுக் காட்டி விளக்க வேண்டும். இது போன்ற சிறிய அளவிலான காட்சி விளக்கக் கூட்டங்களுக்கு வருபவர்களில் ஒரு சிலர் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வாங்குவார்கள் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.

இது போல ஹவுஸ் பார்ட்டி நடத்தி விண்டோஸ் 7 காட்டுவதற்கு இந்தியா உட்பட 12 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 22 முதல் 29 தேதி வரை, ஆங்காங்கே சிறு திருவிழாக்கள் போல் நடத்தி புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து ஓர் எதிர்பார்ப்பினை மைக்ரோசாப்ட் உருவாக்கத் திட்டமிடுகிறது.
இந்த ஐடியாவினை மைக்ரோசாப்ட், மொஸில்லா பயர்பாக்ஸிடமிருந்து பெற்றிருக்கலாம். ஏனென்றால் கடந்த ஜுன் மாதம் தன் பயர்பாக்ஸ் பதிப்பு 3 னை வெளியிட்ட போது, இது போன்ற பார்ட்டிகளை மொஸில்லா நடத்தியது. இந்த பதிப்பினை குறிப்பிட்ட நாளில் டவுண்லோட் செய்திடுமாறு கேட்டுக் கொண்டு அதில் கின்னஸ் சாதனை மேற்கொண்டது. ஜூன் 17 ஆம் நாள், 24 மணி நேரத்தில் 80,02,530 பேர் பயர்பாக்ஸ் தொகுப்பினை டவுண்லோட் செய்து இந்த சாதனை மேற்கொண்டனர்.

விஸ்டா தொகுப்பிற்கு அவ்வளவாக வரவேற்பில்லை. மக்கள் எக்ஸ்பி தொகுப்பிலேயே நின்று விட்டனர். எனவே விண்டோஸ் 7 தொகுப்பிற்கு நல்ல வரவேற்பினைக் காட்ட வேண்டும் என மைக்ரோசாப்ட் திட்டமிடுகிறது. ஏற்கனவே விண்டோஸ் 7 சோதனைத் தொகுப்பினை இயக்கிப் பார்த்த சோதனையாளர்கள் மிகவும் நல்ல முறையில், நவீன வசதிகளை இது கொண்டுள்ளதாக எழுதி உள்ளனர். இந்த சூழ்நிலையில் மக்களிடம் இதனை சரியான முறையில் கொண்டு சேர்க்க மைக்ரோசாப்ட் முயற்சிக்கிறது.
நீங்களும் இந்த திருவிழாவினை நடத்துவதில் பங்கு கொள்ள விரும்பினால் www.houseparty.com தளம் சென்று பதிந்து கொள்ளுங்கள்.

%d bloggers like this: