Daily Archives: ஒக்ரோபர் 14th, 2009

ஆயுளை நீட்டிக்கும் சுறுசுறுப்பு


சிலரைப் பார்த்தால் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அவர்களது முகத்திலும் ஒரு பிரகாசம் தெரியும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்; என்னத்த செஞ்சு… என்னத்த நடக்க… என்று எப்போதும் படுசோம்பேறிகளாக இருப்பார்கள்.

இந்த இரு தரப்பினரில் யாருக்கு ஆயுள் அதிகம் என்று அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கையறைக்கு செல்லும் வரை என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது பற்றிய கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.

ஆய்வின் முடிவில், நீங்கள் எதிர்பார்த்தது போலவே சுறுசுறுப்பாக செயல்படுபவர்களுக்குத்தான் ஆயுள் அதிகம் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சோம்பேறிகளாக திரிபவர்களைக் காட்டிலும் 4 ஆண்டுகள் அதிகம் உயிர் வாழ்கிறார்களாம்.

இந்த ஆய்வின் மூலம் சுறுசுறுப்பாக இருப்பவர்களின் ஆயுள் ரகசியம் எது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரகசியம் உடற்பயிற்சிதான்!

தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதும், அதன் காரணமாக ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் மூளைக்கு அதிகமாக கொண்டு செல்லப்படுவதும், இதனால் ஞாபக சக்தி அதிகரித்து சுறுசுறுப்பு கிடைப்பதும் ஆய்வில் தெரிய வந்தது.

மேலும், தினமும் உடற்பயிற்சி செய்து வருபவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது பெரும்பாலும் தடுக்கப்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீங்களும் சுறுசுறுப்பாக வேண்டும் என்றால், தினமும் உடற்
பயிற்சி செய்யுங்கள். எடுத்தவுடன் மணிக்கணக்கில் செய்ய முயற்சிக்க வேண்டாம். முதலில் 5 நிமிடங்கள் செய்யுங்கள். அதன்பிறகு படிப்படியாக நேரத்தை அதிகரியுங்கள்.

எல்லோருக்கும் அவசியம் திராட்சை!


திராட்சைப் பழத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. திராட்சையை அப்படியே சாப்பிட யோசிப்பவர்கள் அதை ஜூஸாக சாப்பிடலாம். எல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

ஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத கலோரிச் சத்தும் உள்ளது. இதனுடன், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. உடலை `ஸ்லிம்’ ஆக வைத்துக்கொள்ள `டயட்’டில் இருப்பவர்கள் இதை தாராளமாக குடிக்கலாம்.

பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

`ரெஸ்வெரட்டால்’ என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் அதிகமாக காணப்படுகிறது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பதுடன், தேவையில்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

மேலும், ரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும், ஆங்காங்கே ரத்தம் உறைவதை தடுப்பதிலும் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட திராட்சையை மதிய உணவுக்குப் பின் 200 மில்லி அளவுக்கு ஜூஸாக எடுத்துக்கொள்வது நல்லது என்பது இயற்கை மருத்துவர்களின் அட்வைஸ்!

செயற்கை கண்


மனிதனுக்கு பார்வைத்திறன் இல்லையென்றால் ஏராளமான விஷயங்களை அறிந்து கொள்வதில் மிகுந்த பாதிப்பு ஏற்படும். இதற்கு சிகிச்சை அளிப்பதும் கடினம். தற்போது இந்தக் குறையை போக்கும் வகையில் செயற்கை கண்ணை அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தினர் உருவாக்கி உள்ளனர்.

இந்த செயற்கை கண்ணை இரு வகை பார்வைத் திறன் அற்றவர்கள் பயன்படுத்த முடியும். இந்த செயற்கை கண், இரண்டு கம்ப்ட்டர் சிப்கள் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இவை ரெட்டினா செய்யும் வேலையை செய்யும்.

இதில் உள்ள ஒரு ஜோடி கண்ணாடிகள் சுற்றுப்புறத்தையும், ஒளியின் தன்மையையும் புகைப்படம்போல பதிவு செய்து கொள்ளும். இந்த தகவல்கள் சிப்களின் உதவியுடன் எலக்ட்ரிக் நரம்புகள் மூலமாக மூளைக்கு கடத்தப்படுகிறது.

அதன்பிறகு மூளை தானாக ஒரு படத்தை உருவாக்கி அறிந்து கொள்ளாது. அது குறிப்பிட்ட பொருளாக ஏற்றுக்கொள்ளும். அதை ஒரு இடமாகவோ, குறியீடாகவோ அறிந்து கொள்ள முடியும். இதனால் இந்த கருவியை பொருத்தி இருப்பவர்கள் வழிகாட்டி இல்லாமலே தங்கள் இலக்கை நோக்கி ஆபத்தின்றி செல்ல முடியும்.

ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:-

“இந்த செயற்கை கண் பார்வைத்திறனை முழுமையாக மீட்டுத் தராவிட்டாலும், கண்ணில் உள்ள கோச்சலா போல செயல்பட்டு ஒலி அதிர்வுகளை நரம்புகளின் கடத்தும் தன்மைக்கு மாற்றிக் கொடுக்கும். இதன்மூலம் பார்வையற்றவர்கள் அன்றாட வாழ்க்கையை எளிய வகையில் சமாளிக்க முடியும்.

20 வருட முயற்சியின் பலனாக ரெட்டினாவுக்கு பதிலாக எலக்ட்ரிக் கருவியை பயன்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இது பார்வை நரம்புகளாக செயல்படும். இந்தக் கருவி தற்போது பன்றிக்கு மட்டுமே பொருத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. 3 ஆண்டுகளுக்குள்ளாக மனிதர்களிடத்திலும் இந்த சோதனையை வெற்றிகரமாக செய்து முடிப்போம்”.

இவ்வாறு அந்த ஆய்வாளர் கூறினார்.

ஏப்பம் ஏற்படுவது ஏன்?

புளி ஏப்பம், ஒரு முக்கியமான பிரச்னை. நாம் சாப்பிடும் உணவு வாயிலிருந்து உணவுக் குழாய்க்கு போய், இரைப்பையை அடையும்போது, இந்த இரண்டு உறுப்புகளுக்கும் இடையே உள்ள வால்வு திறக்கிறது.

உணவு இரைப்பைக்குள் சென்றவுடன், இந்த வால்வு மூடுகிறது. சில சமயம் இந்த வால்வு மூடாமல் இருந்தால், ஏப்பம் வருகிறது.

ஏனெனில் இந்த வால்வு மார்பு மற்றும் வயிற்றை பிரிக்கும் உதரவிதானப் பகுதியில் உள்ளது. உதரவிதானத்தின் மேற்பகுதியில் குறைந்த அழுத்தம் ஏற்பட்டு, இந்த வால்வு சரியாக மூடாமல் இருந்தால் அதிக அழுத்தப் பகுதியான இரைப்பையினுள் இருக்கும் அமிலத்துடன் கலந்த உணவு, அந்த வால்வு வழியாக குறைந்த அழுத்தப் பகுதியான உணவுக் குழாயை அடைகின்றன.

இந்த அமிலத்துடன் கலந்த உணவை உணவுக்குழாயில் தாங்க முடியாமல், “புளிச்ச ஏப்பம்’ என்ற பிரச்னையை நோயாளி உணர்கிறார்.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உணவுக் குழாய் மற்றும் இரைப்பைக்கு இடையே இருக்கும் வால்வு பிறவியிலேயே மார்பு பகுதியில் இருந்தால் இந்தப் பிரச்னை வரலாம்.

ஆனால் வேறு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மன உளைச்சல் மற்றும் பிரச்னை மிகவும் முக்கியமானது. எண்ணெய், பொரித்த உணவுகள் உண்பதால் இந்த பிரச்னைகள் வரலாம்.

மேலும் மதுப் பழக்கம், புகைப் பழக்கம், அதிக காபி மற்றும் டீ உண்பதாலும், ஐஸ்கிரீம் மற்றும் மிட்டாய் வகைகள் உண்பதாலும் இந்த பிரச்னைகள் வரலாம்.

எனவே அதிக புளி ஏப்பம் வருபவர்கள் அதற்குக் காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு, ஏப்பம் மீண்டும் வருவதை தடுத்து விடலாம்.

ஆனால் தொடர்ந்து புளி ஏப்பம் இருந்தால், தேவையான பரிசோதனைகள் செய்து மாத்திரைகள் சாப்பிட வேண்டி இருக்கலாம். சில சமயங்களில் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.

குருமுனிக்கு உபதேசித்த குமரன்

முருகனுக்கு உகந்த மரம் குரா மரம், உகந்த மலர்கள் முல்லை, கடம்பு, காந்தள், வெட்சி மற்றும் குரா. இளவேனிற் காலத்தில் பூக்கும் குரா மலர்களால் குமரனை அர்ச்சித்து வழிபட்டால் குறைவில்லாத வளங்கள் பெறலாம் என்பர் பெரியோர்.

சங்க இலக்கியமான அகநானூறு, “”குரவு மலர்ந்து அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்” என்று இந்த மலரைப் பற்றி குறிப்பிடுகின்றது. அரிய வகை மரமான குரா மரம் திருவிடைக்கழி, பழநி போன்ற சில தலங்களில் மட்டுமே தற்போது காணப்படுகிறது. பழநி மலையின் நடுவில் குரா மரத்தின் கீழ் கோயில் கொண்டுள்ள முருகனுக்கு “குரா வடிவேலன்’ என்றே பெயர். அந்த வேலனைப் பற்றிய செய்தியை இங்கு காண்போம்…

பழநி தல புராணம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். சிவபெருமானால் அகத்தியருக்கு அளிக்கப்பட்ட சிவகிரியில் உள்ள குரா மரத்தின் கீழ் குழந்தை ஒன்று நின்று கொண்டிருப்பதைப் பார்க்கின்றான், அதைச் சுமந்து வந்த இடும்பன். அம்மலையை அகத்தியரிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருந்ததால், நின்றிருப்பது யாரென்று அறியாத இடும்பன், குழந்தையை மலையை விட்டு கீழே இறங்கிச் செல்லுமாறு கூறுகின்றான்.

அக்குழந்தையோ சிரித்துக் கொண்டு, “இந்த மலை எனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாடுகின்றது. இதைக் கேட்ட இடும்பன், கோபம் கொண்டு குழந்தையைத் தாக்க முயன்றான்; முடிவில் அதன் கையில் இருந்த தண்டத்தால் அடிபட்டுக் கீழே சாய்ந்தான்!. இதைப் பார்த்து பதறிப் போன அவன் மனைவி இடும்பி, நடந்தவற்றை நேரே அகத்தியரிடம் சென்று முறையிட்டாள். குறுமுனியாகிய அகத்தியர், “வந்திருப்பது சிறு குழந்தை அல்ல, சிவகுமாரன்’ என்பதை உணர்ந்தார். கந்தவேளை வணங்கி, இடும்பனின் பிழை பொறுத்தருள வேண்டினார். குமரனும் இடும்பனை உயிர்ப்பித்து எழச் செய்தார்.

அகமகிழ்ந்த அகத்தியர், முருகப் பெருமானை அர்ச்சித்து வழிபட்டார். அப்போது குமரன், குறுமுனிக்கு தமிழ் உபதேசம் செய்தார். உபதேசம் பெற்ற முனிவர், “அகத்தியம்’ என்று அழைக்கப்படும் முதல் தமிழ் இலக்கண நூலை உலகுக்கு அருளியதாகச் சான்றோர் உரைக்கின்றனர். இத்தலத்தில் அகத்தியர் முருகப் பெருமானை வழிபட்டு தமிழ் உபதேசம் பெற்ற செய்தியை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார். அழிந்த பழைய நூல்களில் அகத்தியமும் ஒன்று.

இது தொல்காப்பியர் காலத்திற்கும் முந்தையது.

இத்தகைய பெருமை பெற்ற குரா வடிவேலன் சந்நிதி, பழநி மலையின் நடுவே அமைந்துள்ளது. பாண்டியர்களால் கட்டப்பட்ட கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபத்துடன் கூடிய சிறு கோயிலாக இது திகழ்கின்றது. இதனருகில் சங்க காலத்தில் பழநியை ஆட்சி செய்த கடையெழு வள்ளல்களில் ஒருவனான வையாவிக் கோப்பெரும் பேகனுக்கான சிறு கோயிலும், கும்பினி வேலாயுதர், சர்ப்ப விநாயகர், அகத்தியர் மற்றும் இடும்பன் சந்நிதிகள் காணப்படுகின்றன.

இங்கு வேறு எந்தத் தலத்திலும் இல்லாத அபூர்வ வடிவமாகிய இடும்ப சம்ஹார மூர்த்தியின் திருவுருவம் உள்ளது. மகா மண்டபத்தில் மயில் வாகனமும், வாயிற் காவலர்களும் இருக்க… கருவறையில் குமரன் குழந்தை வடிவினனாய் வலக்கையில் தண்டாயுதம் தாங்கியும், இடக்கையை இடுப்பில் வைத்தும், சடைமுடியுடன் அழகாகக் காட்சியளிக்கின்றான்.

பழநி மலை மீதுள்ள முருகனை தரிசிக்கச் செல்லும் முன் இந்தக் குரா வடிவேலனை வழிபட வேண்டும் என்பது மரபு. அதனால் பழநி செல்லும்போது குறுமுனிக்குத் தமிழ் அருளிய இக்குமரனையும் தரிசித்து இகபர வாழ்வில் குறைவில்லாத வளங்கள் பெறுவோமாக!

இடர் களையும் யக்ஞ விநாயகர்!

ஸ்ரீ யக்ஞ விநாயகர், ஸ்ரீ நீலாம்பிகை ஸமேத சனீஸ்வர பகவான், ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேயர் ஆகியோர் ஒன்றாகக் குடி கொண்டு அருளாட்சி செய்யும் ஒரு அற்புதத் திருத்தலம்தான் சென்னை மேற்கு மாம்பலம், வெங்கடாசலம் தெருவில் கிழக்குப் பார்த்து அமைந்த “அருள்மிகு சனீஸ்வர-ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேயர் ஆலயம்’ ஆகும்.
ஆதியில் இந்த இடம் “புலியூர் கிராமம்’ என்று வழங்கப்பட்டு, ஒரு ஜமீன் பராமரிப்பில் இருந்து வந்தது. இந்தப் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் ஐயர் என்பவர், மேற்படி ஜமீனிடம் இருந்து சிறிது நிலத்தைப் பெற்றார்; பின்னர் 65 வருடங்களுக்கு முன்பு அவ்விடத்தில் பஞ்ச முக ஆஞ்சநேயரைப் பிரதிஷ்டை செய்தார். அதன் பின்னர் திருநள்ளாற்றுக்குச் சென்றார். அங்கு சனீஸ்வர பகவான், நீலாம்பிகை மூர்த்திகளை வடித்துப் பெற்று, இக்கோயிலில் மற்றொரு சந்நிதியில் பிரதிஷ்டை செய்தார்.
மேற்படி வெங்கடாசலம் ஐயர் அவர்கள் பெயரில் இந்தத் தெரு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ காஞ்சி பரமாச்சார்யார் ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 1962ல் சென்னைக்கு விஜயம் செய்தபோது இக்கோயிலுக்கு எழுந்தருளியதாகக் கூறுகின்றனர்.
வெங்கடாசலம் ஐயர் காலத்திற்குப் பிறகு பல்வேறு சூழ்நிலை மற்றும் காரணங்களால் கோயிலை நிர்வகிப்பதில் சிறிது தொய்வு ஏற்பட்டது. பின்னர் இக்கோயிலை, புதியதொரு டிரஸ்டு, சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன் ஏற்றுக் கொண்டுள்ளது. கோயிலைச் செப்பனிட்டு, நித்ய பூஜைகளைச் செவ்வனே நடத்தி வருகிறது.
இந்தக் கோயிலில் விநாயக சதுர்த்தி, ஹனுமத் ஜெயந்தி, சனிப்பெயர்ச்சி, ஸ்ரீராம நவமி ஆகிய நான்கு விசேஷங்களை ஒட்டி திருவிழா நடந்து வருகிறது. அந்த உத்ஸவங்களில் திரளான மக்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு, தெய்வ அருளாசி பெறுகின்றனர்.

சனீஸ்வரர்
நவக்கிரஹ நாயகர் சனி பகவான், நவக்கிரஹ மண்டலத்தில் சூரியனுக்கு மேற்கே அசுர கிரகமாக விளங்குபவர். மானுடராய்ப் பிறந்த அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அற்புத சக்தி படைத்த இவர், அண்டினவர்க்கு அருள் புரியும் வள்ளல்! சூர்ய பகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த சனி பகவானை “சனைச்சரன்’, “சனீஸ்வரன்’ என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். காசியில் சிவனை குறித்து கடும் தவம் இயற்றி, லிங்கப் பிரதிஷ்டை செய்து கிரஹ பதவி அடைந்து “சனீஸ்வரன்’ என்ற பெயரை இவர் பெற்றதாகச் சொல்கின்றனர்.
சனி பகவானை “ஆயுஷ்காரகன்’ என ஜோதிட நூல்கள் வர்ணிக்கின்றன. “சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை’ என்பது பழமொழி. சனியின் பிடியில் சிக்கித் தவிக்காமல் வாழ, இவரை விசேஷமாக வழிபடுதல் அவசியம்.

பஞ்ச முக ஆஞ்சநேயர்
சனியின் பிடியிலிருந்து தப்பியவர்கள் ஸ்ரீ விநாயகரும், ஸ்ரீ ஆஞ்சநேயரும் என்பது வழக்கு. அதிலும் பஞ்ச முக ஆஞ்சநேயரின் சிறப்பே தனி! தன் பக்தனைக் காக்க உடனே எழுந்தருளிய நரஸிம்ம மூர்த்தியின் அருள், விஷத்தை அடக்கி விரட்டும் கருட மூர்த்தியின் அருள், எதையும் புனருத்தாரணம் செய்து நிலை நிறுத்தும் சக்தி பெற்ற வராஹ மூர்த்தியின் அருள், பக்தர்களின் ஸர்வ மந்திர சுலோக முறையீடுகளையும் சித்தியாக்கும் ஹயக்ரீவ மூர்த்தியின் அருள், ராமநாம ஜெபம் செய்வோரைப் பாதுகாக்க உடன் தோன்றும், சகல சக்தி படைத்த ஆஞ்சநேய மூர்த்தியின் அருள் என இவ்வைந்து மஹா சக்திகளின் வடிவத்தை ஐந்து முகங்களாகக் கொண்டு ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேய மூர்த்தியாக அற்புதத் தோற்றத்துடன் திகழ்கிறார். இம்மூர்த்தத்தை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு அழகு!
ஸ்ரீ சனிபகவானுடன், அரச மரத்தடியில் எழுந்தருளிய இந்தப் பஞ்ச முக ஆஞ்சநேயரையும் சேவிப்பதால் சனி தசை, சனி புக்தி, அஷ்டம சனி, ஏழரை நாட்டு சனி ஆகியவற்றால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கி ஆயுள் ஆரோக்கியம், மன நிம்மதி, காரிய சித்தி, வழக்குகளில் சாதகம், குடும்ப சுகம் ஆகியவை ஏற்படும்.

யக்ஞ விநாயகர்
இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, அரச மரத்தடியில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ யக்ஞ விநாயகர்.
எந்தச் சுப காரியம் என்றாலும் நாம் விநாயகரை துதிக்காமல் தொடங்குவது இல்லை. யாகத்தில் (யக்ஞம், வேள்வி) நாம் அக்னி தேவனையும், இதர தெய்வங்களையும் ஆராதனை செய்யும் முன்னர் விநாயகரை பூஜித்து, சுப காரியங்கள் தடங்கலின்றி நடந்தேறப் பிரார்த்திக்கின்றோம். அதை முன்னிட்டே இங்குள்ள பிள்ளையாருக்கு “யக்ஞ விநாயகர்’ என்னும் திருநாமம் சூட்டப்பட்டது. இன்று வரை இவர் சந்நிதியில் அநேக ஹோமங்கள் நடந்து வருகின்றன.
அன்பர்கள் அனைவரும் இக்கோயிலுக்கு வந்து, இம்மூன்று மூர்த்திகளின் அருள் பெற்று மகிழ்வோமாக!
– வி.பி.என்.

சிவநாமமே வேத நெறி!


குருவருளின்றி திருவருளைப் பெறுவது கடினம். இந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களுக்கும் குருநாதராக விளங்குபவர் சிவபெருமான். அவரே உலக மக்கள் உய்வு பெறும் பொருட்டு நான்கு வேதங்களையும் வெளியிட்டருளினார். இதை முன்னிட்டே அப்பர் பெருமான், “வேதியா! வேத கீதா’ என்று சிவபெருமானை போற்றுகின்றார்.
இறைவன் வேதமாகவும் இருக்கின்றார்! அதே நேரத்தில் வேதங்களால் புகழப்படுபவராகவும் இருக்கின்றார்! அப்படியெனில் தன்னைத்தானே இறைவன் புகழ்ந்து கொள்கின்றாரா எனில் அதுவுமில்லை. மனிதர்களுக்கு அவரது அருமை, பெருமைகள் தெரிய வாய்ப்பே இல்லை. எனவே தன்னைப் பற்றி வேதங்கள் மூலம் தானே உணர்த்தி அருள்கின்றார் பரமேஸ்வரன். இதையே, “அவனருளால் அவன் தாள் வணங்கி’ என்கிறார் மாணிக்க வாசகர்.
ஆனால் வேதங்களோ யாராலும் அளந்துவிட முடியாத பெருங்கடல். அது கூறும் நுட்பமான பொருளைப் புரிந்து கொள்வதற்கு பேரறிஞர்களும் திணற வேண்டி வரும். அதனாலேயே வேதங்களுக்கு “மறை’ என்ற பெயரும் உண்டு.
இப்படி வேதத்தின் தொன்மையும், பெருமையும், பொருளும் அளப்பரியதாக இருப்பினும் கருணைக் கடலான சிவபெருமான், தன்னை அனைவரும் வந்தடைவதற்கான ஓர் எளிய வழியை வேதத்திலேயே வைத்துள்ளார். அதுவே “நம: சிவாய’ என்னும் ஐந்தெழுத்தாகும். இந்தத் திருநாமம், யஜுர் வேதத்தின் மையப் பகுதியில், வேதத்தின் இதயப் பகுதியில் உள்ளது.
“நம: சிவாய’ என்னும் ஐந்தெழுத்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, ஆண்களோ பெண்களோ எவராயினும், எல்லா நேரத்திலும் ஓதி உய்வடையலாம் என்பதில் துளியளவும் ஐயம் இல்லை. திருமூலர் அருளிய திருமந்திரம், “சிவ நாமத்தால் சிவ கதி கிடைக்கும்’ என்று உறுதிபடச் சொல்கிறது.
“வேதத்தின் சாரம் ஐந்தெழுத்து’ என்று சமயச் சான்றோர்கள் அனைவரும் கூறுகின்றனர். எந்தவொரு மந்திரத்தையும், அதில் உள்ள அட்சரத்திற்கு ஒரு கோடி என்ற கணக்கில் ஜபிப்பதன் மூலம் இறைவனின் கருணையை எளிதாகப் பெற முடியும்! இதனை “அட்சர கோடி’ என்பார்கள். அட்சர கோடி ஜபித்து, ஊழ்வினைப் பளு அதிகமும் இல்லாத புண்ணிய ஆத்மாக்களுக்கு “சிவ தரிசனமே’ கிடைக்கும் பெரும் வாய்ப்பும் உண்டு. ஒரு வேளை “பிராரப்தம்’ எனப்படும் ஊழ்வினை அதிகமிருப்பின் அவர்கள் மேலும், மேலும் சிவ நாமங்களைச் சொல்ல வேண்டி வரும்; காலப்போக்கில் சிவ தரிசனம் அவர்களுக்கும் கை கூடும். எவ்வாறாயினும் சிவ நாம ஜபம் செய்பவர்கள், தனது அந்திமக் காலத்திலாவது சிவ தரிசனம் பெற்றே தீருவர் என்கின்றன புராதன கிரந்தங்கள். எனவே சிவ நாமம் சொல்லி, வினைகளை வேரறுத்து சிவகதி அடைவோம். இதுவே வேத நெறி!
– விட்டல்

தீபாவளி -லட்சுமி பூஜை செய்வது எப்படி?


“தீவாலி’ என்று வட இந்தியர்களால் அழைக்கப்படும் “தீபாவளி’, அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்யும் திருநாளாகும். இந்தியா முழுவதும் அக்டோபர் / நவம்பரில் அமாவாசை அன்று, மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் புனிதத் திருநாளாகத் தீபாவளி திகழ்கிறது.

வட இந்தியாவில் தீபாவளி ஐந்து நாள்கள் பண்டிகையாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் – தனத்ரயோதசி , அதனைத் தொடர்ந்து நரக சதுர்தசி , அமாவாசை லட்சுமி பூஜை , கோவர்தன் பூஜை ((பசுக்களைக் கொண்டாடும் பூஜை), நிறைவாக ஐந்தாம் நாள் பய்யா தூஜ்  என்று தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தென்னிந்தியாவில் நரக சதுர்தசியும், அமாவாசை லட்சுமி பூஜையும் கடைபிடிக்கப்படுகின்றன.

ஹிந்து மத வழக்கப்படி, விளக்கு அதாவது ஒளி, அறிவைக் குறிக்கிறது. தன்னைத் தான் உணர்தலால் அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு மெய்ஞானமாகிய இறைவனுடன் ஒருங்கிணையலாம் என்பதை இந்த விளக்கு ஒளி உணர்த்துகிறது. மேலும், மக்களின் வாழ்வில் ஒளி பெருகும் திருநாளாக தீபாவளி கருதப்படுகிறது.

இந்து மதப் புராணங்களின்படி, செல்வத்துக்கான தெய்வம் லட்சுமி தேவி என்று கருதப்படுவதால், தங்கம் வாங்குவதற்கு உகந்த மங்கள நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஒளி விளக்குகளின் திருவிழா என்று கருதப்படும் தீபாவளி இந்தியாவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனென்றால், மக்களின் வாழ்க்கையில் வறுமையாகிய இருளை விரட்டி, செழிப்பாகிய ஒளியைக் கொண்டு வருவதால் இது எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து மத நூல்களின்படி செழிப்பின் தெய்வமாக லட்சுமி தேவி திகழ்கிறாள்.

புதிதாகத் திருமணமான மணமக்களுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக தீபாவளி கருதப்படுகிறது. அந்த நாளில் புதிய தம்பதிகளுக்கு புத்தாடைகளையும், தங்க நகைகளையும் அளித்து அவர்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடச் செய்கிறார்கள். மேலும் அவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று குடும்பத்தின் பெரியோர்கள் ஆசி கூறும் நன்னாளாகவும் தீபாவளி திகழ்கிறது. விருந்துகளும், இனிப்புகளும், கார தின்பண்டங்களும் தாராளமாக பரிமாறப்பட்டு அவர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு செல்லும் நன்னாள் இது.

வாழ்க்கையின் அக மதிப்புகளை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக வாழ்வின் பல்வேறு தேவைகளைக் கருதி, அவற்றுக்குரிய தெய்வங்களை வணங்குவதை ஹிந்துக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அந்த முறையில் வளத்தையும், நலத்தையும் பெருக்கும் திருமகளாக லட்சுமி தேவி திகழ்கிறாள். எனவே, தீபாவளி அன்று குடும்பத்தின் செழிப்பைப் பெருக்குவதற்காக லட்சுமி பூஜை செய்து பக்திப் பரவசம் அடைகிறார்கள். இந்நன்னாளைக் கொண்டாட ஒவ்வோர் ஆண்டும் தங்க நாணயங்கள், தங்க நகைகள் ஆகியவற்றை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதன் மூலம் குடும்பத்தின் செல்வத்தைப் பெருக்குவதற்கு லட்சுமியை வீட்டில் நிரந்தரமாக தங்க வைப்பதற்கு இதனை ஒரு வாய்ப்புத் திருநாளாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அமாவாசை அன்று லட்சுமி பூஜையானது கடைபிடிக்கப்படுகிறது. அன்று பெண்கள் முறையாகக் குளித்து, தங்கள் வீடுகளை இம்மி அளவு கூட அழுக்கில்லாமல் துப்பரவு செய்து தூய்மையைப் பெரிதும் விரும்பும் தெய்வமான லட்சுமியை வீட்டுக்கு வரவழைக்கிறார்கள். அதன் வாயிலாக நன்மையையும், வளத்தையும் வீட்டிலுள்ள எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்ய இந்த லட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது. அன்று வீட்டின் முற்றங்கள், தாழ்வாரங்களிலெல்லாம் அழகான கோலங்கள் / ரங்கோலிகள் முதலியவை இடப்பட்டு பொலிவூட்டப்படுகின்றன. லட்சுமி தேவி வரும் வழியெல்லாம் பிரகாசமாக இருக்க வேண்டுமென்ற நம்பிக்கையில் வீட்டைச் சுற்றி விளக்குகளை வரிசை வரிசையாக அடுக்கி வைத்து பெண்கள் மகிழ்கிறார்கள். வீட்டிலுள்ள பெண்கள் லட்சுமி தேவியாகக் கருதப்படுவதால், அவர்கள் பட்டு ஆடைகள் உடுத்தி, தங்க வளையல்களையும், தங்கச் சங்கிலிகளையும், பொன் ஆரங்களையும் அணிந்து லட்சுமி அவதாரமாகவே மாறிவிடுகிறார்கள்.

இந்த லட்சுமி பூஜை தொடக்கம் விநாயக வழிபாடாகும். முதற் கடவுளாகிய விநாயகப் பெருமானை வழிபட்டு இந்தப் பூஜை தொடங்குகிறது. பொதுவாக எல்லா ஹிந்துப் பண்டிகைகளுமே விநாயக வழிபாட்டோடு தொடங்குவதுதான் வழக்கம். விநாயகரின் அளப்பரிய சக்தியால் எல்லாத் தடைகளையும் மக்களகர சதுர்த்தி நாயகனாகிய விநாயகப் பெருமான் உடைத்தெறிந்து தன்னுடைய பக்தர்களுக்கு வேண்டும் அருளையெல்லாம் வழங்குவார். மேலும், எடுத்த காரியங்கள் எல்லாம் இனிதே நிறைவேற்றிக் கொடுக்கும் தெய்வமாக விநாயகர் அமைவதால், விநாயகர் வழிபாடு முதலிடம் பெறுகிறது.

அதனைத் தொடர்ந்து லட்சுமி வழிபாட்டுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முதலில் ஒரு புத்தம் புதிய பட்டுத் துணியை மரத்தினாலான மேடையில் விரித்து அதில் கொஞ்சம் நெல் மணிகளைப் பரப்பி, அதன் மேல் கலசம் வைக்கப்படுகிறது. இந்தப் புனிதக் கலசம் வழக்கமாக வெள்ளியினால் ஆனதாக இருக்கும். அதன் மீது குங்குமம், மஞ்சள், பொட்டு இட்டு பூக்களால் அலங்கரிக்கப்படும். இந்த கலசத்தின் உள்ளே முக்கால் பங்கு மஞ்சள் நீரால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் உள்ளே தங்க நாணயங்களையும் நெல் மணி அல்லது அரிசியைப் போட்டு வைப்பார்கள். அதன் பிறகு மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு அந்தக் கலசத்தின் வெளிப்புறத்தில் நூலால் வலைப்போன்று அழகுறச் சுற்றி அலங்கரிப்பார்கள்.

கலசமாகிய அந்தச் சொம்பின் வாய்ப் பகுதியில் தேங்காயும், அதைச் சுற்றி மாவிலைகள் செருகப்படும். இந்தக் கலசம் வளத்தையும், புனிதத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அதற்கு எதிரில் வழிபாடு செய்வதற்கான லட்சுமி தேவியின் சிலை வைக்கப்பட்டு அது மஞ்சள் நீர், பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும்.

அதற்குப் பின்னர் லட்சுமி தேவியின் சிலை அழகாக ஜோடிக்கப்படும். பூக்கள், பழங்கள், பூஜைப் பொருள்கள், தங்க நாணயங்கள், வீட்டில் காலம் காலமாக சேமிக்கப்பட்டிருக்கும் தங்கக் காசுகள் ஆகியவற்றுடன் வியாபாரக் கணக்குகளுக்கான குறிப்பேடுகள், புத்தகங்கள் போன்றவற்றையும் அதன் எதிரில் அழகாக அடுக்கி வைத்து வழிபாடு செய்வார்கள். அதன் பின்னர் குத்துவிளக்கு ஏற்றப்படும். லட்சுமி பூஜைக்கென்று உள்ள சிறப்பு மந்திரங்களை ஓதி லட்சுமி தேவியை மகிழ்வித்து, அதன் மூலம் நிறைந்த செல்வமும், வணிகத்தில் லாபமும் முழுமையாகக் கிடைப்பதற்கு லட்சுமி தேவியின் அருளை வேண்டி வழிபாடு செய்வார்கள்.

இந்தப் பூஜை முடிந்ததும் சுவாமிக்குப் படைத்த இனிப்புகள், பிரசாதங்கள் ஆகியவற்றை அனைவருக்கும் வழங்கி மகிழ்வார்கள். பின்பு நிறைந்த மன திருப்தியோடு தங்கள் வாழ்க்கையில் எடுத்த காரியங்கள் யாவும் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கையோடும், மனநிறைவோடும் அவரவர் தங்களுடைய பணிகளுக்குத் திரும்புவார்கள். நிறைவாக லட்சுமி பூஜை என்பது நிறைந்த வளமும், பொங்கும் மகிழ்ச்சியும், தங்கும் நிகழ்வாக இந்திய மரபில் ஊன்றி நிலைத்துவிட்டது.