குருமுனிக்கு உபதேசித்த குமரன்

முருகனுக்கு உகந்த மரம் குரா மரம், உகந்த மலர்கள் முல்லை, கடம்பு, காந்தள், வெட்சி மற்றும் குரா. இளவேனிற் காலத்தில் பூக்கும் குரா மலர்களால் குமரனை அர்ச்சித்து வழிபட்டால் குறைவில்லாத வளங்கள் பெறலாம் என்பர் பெரியோர்.

சங்க இலக்கியமான அகநானூறு, “”குரவு மலர்ந்து அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்” என்று இந்த மலரைப் பற்றி குறிப்பிடுகின்றது. அரிய வகை மரமான குரா மரம் திருவிடைக்கழி, பழநி போன்ற சில தலங்களில் மட்டுமே தற்போது காணப்படுகிறது. பழநி மலையின் நடுவில் குரா மரத்தின் கீழ் கோயில் கொண்டுள்ள முருகனுக்கு “குரா வடிவேலன்’ என்றே பெயர். அந்த வேலனைப் பற்றிய செய்தியை இங்கு காண்போம்…

பழநி தல புராணம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். சிவபெருமானால் அகத்தியருக்கு அளிக்கப்பட்ட சிவகிரியில் உள்ள குரா மரத்தின் கீழ் குழந்தை ஒன்று நின்று கொண்டிருப்பதைப் பார்க்கின்றான், அதைச் சுமந்து வந்த இடும்பன். அம்மலையை அகத்தியரிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருந்ததால், நின்றிருப்பது யாரென்று அறியாத இடும்பன், குழந்தையை மலையை விட்டு கீழே இறங்கிச் செல்லுமாறு கூறுகின்றான்.

அக்குழந்தையோ சிரித்துக் கொண்டு, “இந்த மலை எனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாடுகின்றது. இதைக் கேட்ட இடும்பன், கோபம் கொண்டு குழந்தையைத் தாக்க முயன்றான்; முடிவில் அதன் கையில் இருந்த தண்டத்தால் அடிபட்டுக் கீழே சாய்ந்தான்!. இதைப் பார்த்து பதறிப் போன அவன் மனைவி இடும்பி, நடந்தவற்றை நேரே அகத்தியரிடம் சென்று முறையிட்டாள். குறுமுனியாகிய அகத்தியர், “வந்திருப்பது சிறு குழந்தை அல்ல, சிவகுமாரன்’ என்பதை உணர்ந்தார். கந்தவேளை வணங்கி, இடும்பனின் பிழை பொறுத்தருள வேண்டினார். குமரனும் இடும்பனை உயிர்ப்பித்து எழச் செய்தார்.

அகமகிழ்ந்த அகத்தியர், முருகப் பெருமானை அர்ச்சித்து வழிபட்டார். அப்போது குமரன், குறுமுனிக்கு தமிழ் உபதேசம் செய்தார். உபதேசம் பெற்ற முனிவர், “அகத்தியம்’ என்று அழைக்கப்படும் முதல் தமிழ் இலக்கண நூலை உலகுக்கு அருளியதாகச் சான்றோர் உரைக்கின்றனர். இத்தலத்தில் அகத்தியர் முருகப் பெருமானை வழிபட்டு தமிழ் உபதேசம் பெற்ற செய்தியை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார். அழிந்த பழைய நூல்களில் அகத்தியமும் ஒன்று.

இது தொல்காப்பியர் காலத்திற்கும் முந்தையது.

இத்தகைய பெருமை பெற்ற குரா வடிவேலன் சந்நிதி, பழநி மலையின் நடுவே அமைந்துள்ளது. பாண்டியர்களால் கட்டப்பட்ட கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபத்துடன் கூடிய சிறு கோயிலாக இது திகழ்கின்றது. இதனருகில் சங்க காலத்தில் பழநியை ஆட்சி செய்த கடையெழு வள்ளல்களில் ஒருவனான வையாவிக் கோப்பெரும் பேகனுக்கான சிறு கோயிலும், கும்பினி வேலாயுதர், சர்ப்ப விநாயகர், அகத்தியர் மற்றும் இடும்பன் சந்நிதிகள் காணப்படுகின்றன.

இங்கு வேறு எந்தத் தலத்திலும் இல்லாத அபூர்வ வடிவமாகிய இடும்ப சம்ஹார மூர்த்தியின் திருவுருவம் உள்ளது. மகா மண்டபத்தில் மயில் வாகனமும், வாயிற் காவலர்களும் இருக்க… கருவறையில் குமரன் குழந்தை வடிவினனாய் வலக்கையில் தண்டாயுதம் தாங்கியும், இடக்கையை இடுப்பில் வைத்தும், சடைமுடியுடன் அழகாகக் காட்சியளிக்கின்றான்.

பழநி மலை மீதுள்ள முருகனை தரிசிக்கச் செல்லும் முன் இந்தக் குரா வடிவேலனை வழிபட வேண்டும் என்பது மரபு. அதனால் பழநி செல்லும்போது குறுமுனிக்குத் தமிழ் அருளிய இக்குமரனையும் தரிசித்து இகபர வாழ்வில் குறைவில்லாத வளங்கள் பெறுவோமாக!

%d bloggers like this: