சிவநாமமே வேத நெறி!


குருவருளின்றி திருவருளைப் பெறுவது கடினம். இந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களுக்கும் குருநாதராக விளங்குபவர் சிவபெருமான். அவரே உலக மக்கள் உய்வு பெறும் பொருட்டு நான்கு வேதங்களையும் வெளியிட்டருளினார். இதை முன்னிட்டே அப்பர் பெருமான், “வேதியா! வேத கீதா’ என்று சிவபெருமானை போற்றுகின்றார்.
இறைவன் வேதமாகவும் இருக்கின்றார்! அதே நேரத்தில் வேதங்களால் புகழப்படுபவராகவும் இருக்கின்றார்! அப்படியெனில் தன்னைத்தானே இறைவன் புகழ்ந்து கொள்கின்றாரா எனில் அதுவுமில்லை. மனிதர்களுக்கு அவரது அருமை, பெருமைகள் தெரிய வாய்ப்பே இல்லை. எனவே தன்னைப் பற்றி வேதங்கள் மூலம் தானே உணர்த்தி அருள்கின்றார் பரமேஸ்வரன். இதையே, “அவனருளால் அவன் தாள் வணங்கி’ என்கிறார் மாணிக்க வாசகர்.
ஆனால் வேதங்களோ யாராலும் அளந்துவிட முடியாத பெருங்கடல். அது கூறும் நுட்பமான பொருளைப் புரிந்து கொள்வதற்கு பேரறிஞர்களும் திணற வேண்டி வரும். அதனாலேயே வேதங்களுக்கு “மறை’ என்ற பெயரும் உண்டு.
இப்படி வேதத்தின் தொன்மையும், பெருமையும், பொருளும் அளப்பரியதாக இருப்பினும் கருணைக் கடலான சிவபெருமான், தன்னை அனைவரும் வந்தடைவதற்கான ஓர் எளிய வழியை வேதத்திலேயே வைத்துள்ளார். அதுவே “நம: சிவாய’ என்னும் ஐந்தெழுத்தாகும். இந்தத் திருநாமம், யஜுர் வேதத்தின் மையப் பகுதியில், வேதத்தின் இதயப் பகுதியில் உள்ளது.
“நம: சிவாய’ என்னும் ஐந்தெழுத்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, ஆண்களோ பெண்களோ எவராயினும், எல்லா நேரத்திலும் ஓதி உய்வடையலாம் என்பதில் துளியளவும் ஐயம் இல்லை. திருமூலர் அருளிய திருமந்திரம், “சிவ நாமத்தால் சிவ கதி கிடைக்கும்’ என்று உறுதிபடச் சொல்கிறது.
“வேதத்தின் சாரம் ஐந்தெழுத்து’ என்று சமயச் சான்றோர்கள் அனைவரும் கூறுகின்றனர். எந்தவொரு மந்திரத்தையும், அதில் உள்ள அட்சரத்திற்கு ஒரு கோடி என்ற கணக்கில் ஜபிப்பதன் மூலம் இறைவனின் கருணையை எளிதாகப் பெற முடியும்! இதனை “அட்சர கோடி’ என்பார்கள். அட்சர கோடி ஜபித்து, ஊழ்வினைப் பளு அதிகமும் இல்லாத புண்ணிய ஆத்மாக்களுக்கு “சிவ தரிசனமே’ கிடைக்கும் பெரும் வாய்ப்பும் உண்டு. ஒரு வேளை “பிராரப்தம்’ எனப்படும் ஊழ்வினை அதிகமிருப்பின் அவர்கள் மேலும், மேலும் சிவ நாமங்களைச் சொல்ல வேண்டி வரும்; காலப்போக்கில் சிவ தரிசனம் அவர்களுக்கும் கை கூடும். எவ்வாறாயினும் சிவ நாம ஜபம் செய்பவர்கள், தனது அந்திமக் காலத்திலாவது சிவ தரிசனம் பெற்றே தீருவர் என்கின்றன புராதன கிரந்தங்கள். எனவே சிவ நாமம் சொல்லி, வினைகளை வேரறுத்து சிவகதி அடைவோம். இதுவே வேத நெறி!
– விட்டல்

%d bloggers like this: