Daily Archives: ஒக்ரோபர் 15th, 2009

ரத்தப் புற்று நோய்க்கு முடிவு!

கொடிய வியாதிகளில் ஒன்றான புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ரத்தப்புற்றுநோய் குறிப்பிடத்தகுந்தது. இதன் பாதிப்பும் எய்ட்ஸ் போலவே ரத்த வெள்ளையணுக்களை அழித்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் செய்து விடும். மேலும் எலும்புகளையும் தாக்கும். நாளடைவில் ரத்த சிவப்பணுக்களையும் தாக்கி அனிமீயா எனப்படும் மற்றொரு வியாதியையும் தூண்டிவிடும்.

ரத்தப் புற்றுநோயானது சீரான முறையில் வளர்ச்சி அடையாமல் தாறுமாறாக பெருகி கோரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இதை கட்டுப்படுத்துவதும் சிரமமாக இருந்து வந்தது.

இங்கிலாந்தில் மட்டும் ஆண்டு தோறும் 7 ஆயிரம் பேர் இந்த கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு சுமார் 4 ஆயிரம் பேர் இறந்து வந்தனர். இதன் பாதிப்பை கட்டுப்படுத்த நடந்து வந்த ஆய்வுகள் தற்போது கைகொடுத்து உள்ளன.

புற்று நோய்க்கான காரணங்கள் இதுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு தெளிவில்லாமலே இருந்து வந்தது. புகைப் பழக்கத்தாலும், கதிர்வீச்சு பாதிப்பாலும், ஒருவித வைரஸ் களின் தாக்குதலாலும் புற்றுநோய் ஏற்படுவதாகவே அறியப்பட்டு இருந்தது. தற்போதுதான் புற்றுநோயோடு தொடர்பு உடைய ஜீன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கேம்ப்பிரிட்ஜ் பல் கலைக் கழகத்துக்கு உட்பட்ட குர்டான் இன்ஸ்டிட் ஆய்வாளர்கள், ரத்தப் புற்றுநோயான லுக்கேமியாவை ஏற்படுத்தும் ஜீன்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்த ஜீன்களுக்கு ஜேக்-2 என்று பெயரிடப்பட்டு உள்ளது.

ஆரம்பத்தில் இந்த ஜேக்2 ஜீன்கள் செல்களின் உட்புறத்தோல் என்றே கருதப்பட்டது. ஆனால் இவற்றுக்கு ரத்தப்புற்றுநோயுடன் தொடர்புடையது தெரியவந்துள்ளது. ஒரு வித நொதி இந்த ஜீன்கள் உருவாக காரணமாக இருக்கின்றன. இந்த ஜீன்கள் மற்ற ஜீன்களின் மேல் ஆதிக்கம் செலுத்தி, புரத மூலக்கூறுகளை ஹிஸ்டோன் என்னும் மூலக்கூறாக மாற்றிவிடுகிறது. ஜேக் 2 ஜீன்களில் ஒழுங்கற்ற மாறுதல் ஏற் படும்போது மற்ற செல்களும் பாதிக்கப்பட்டு புற்றுநோய் உருவாக காரணமாகிறது.

எனவே ஜேக்-2 ஜீன்களை கட்டுப்படுத்தி, ரத்தப் புற்றுநோய்க்கு தீர்வு காணலாம் என்று தெரியவந்துள்ளது. விரைவில் தீர்வு ஏற்படும் என்று நம்பலாம்.

ஐபாட் – இசையை வென்ற இனிய சாதனம்

மியூசிக் ரசிக்க சரியான சாதனம் எது என்று கேளுங்கள் – உடனே ஐ–பாட் என்று எவரும் கூறுவார்கள். அக்டோபர் 21ல் தன் ஒன்பதாவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் ஐபாட் இன்று இசை உலகின் ஓர் அடையாளம். அறிமுகமான எட்டு ஆண்டுகளில் 22 கோடி அளவில் விற்பனையான சாதனம் ஐபாட் தான். அதிகமான எண்ணிக் கையில் விற்பனையான மியூசிக் பிளேயர் என்று மட்டும் இது பெயர் பெறவில்லை; அதிகமான அளவில் விற்பனையான டிஜிட்டல் சாதனம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. எப்படி வனஸ்பதி என்பதற்கு நம்மில் பெரும்பாலானோர் டால்டா என்று அதனைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்கி றோமோ, நகல் காப்பி என்பதற்கு செராக்ஸ் என அதனைத் தந்த நிறுவனத்தின் பெயரைக் கூறுகிறோ மோ, அதே போல இன்று மியூசிக் பிளேயர் என்றால் அது ஐபாட் என்றே பெயர் பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்தும் ரசிகர்கள், கண்களை மூடிக் கொண்டு உரத்த குரலில் இதுதான் உலகிலேயே உயர்ந்த சாதனம் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு அனைத்து நாடுகளிலும், மக்களின் ஏகோபித்த இசை தரும் சாதனமாக ஐபாட் வளர்ந்து வந்துள்ளது.

எப்படி ஐபாட் இந்த அளவிற்குப் புகழைப் பெற்றது? புதிய வழி ஒன்றின் மூலம் இசையைத் தரும் சாதனமாக அறிமுகமான இந்த டிஜிட்டல் தோழன், தனி ஒரு அந்தஸ்தை அடைந்தது எப்படி?

முதன் முதலில் அக்டோபர் 21, 2001 அன்று முதல் ஐபாட் அறிமுகமானது. இப்போது இருக்கும் இதே வடிவத்தினையே அப்போதும் பெற்றிருந்தது. 5 ஜிபி கொள்ளளவும் கொண்டிருந்தது. 1000 பாடல்களைப் பதிவு செய்திட அதனால் முடிந்தது. கிளிக் செய்வதற்கு சிறிய சக்கரமும், பாடல்களை இயக்கவும் நிறுத்தவும் பட்டன்களும் இருந்தன. அதனுடைய திரை 160 x 128 பிக்ஸெல் கொண்ட கருப்பு வெள்ளை திரையாக இருந்தது. கம்ப்யூட்டருடன் பயன்படுத்த பயர்வயர் (Firewire) இன்டர்பேஸினை யே பயன் படுத்தியது. அப்போதிருந்த யு.எஸ்.பி. 1.1 இன்டர்பேஸைக் காட்டிலும் வேகமாக இயங்கியது. ஆனால் முதலில் வந்த ஐபாட், ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டருடன் மட்டுமே இணைந்து இயங்கியது. விண்டோஸ் பயன்படுத்தியவர்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதிருந்தது.
2002 மார்ச்சில் இரண்டாவது வகை ஐபாட் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கொள்ளளவு 20 ஜிபி. இதில் ஒரு டச் வீல் மற்றும் பிளாப் இருந்தன. பாடல்களை வகைப்படுத்த கூடுதல் சாப்ட்வேர் தரப்பட்டது.
2003ல் மூன்றாவது வகை மாடல் வந்தது. இதன் கொள்ளளவு திறன் 20 மற்றும் 40 ஜிபி என்ற அளவில் இருந்தன. முந்தைய மாடல்களைக் காட்டிலும் தடிமன் மற்றும் எடை குறைவாக இருந்தன. சுற்றி வந்த கிளிக் வீலுக்குப் பதிலாக, நிலையான வீல் தரப்பட்டது. இப்போது இருக்கும் ஐபாட் கிளாசிக் மற்றும் நானோ மாடல்களில் உள்ள அதே வீல்தான் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் முதலாக யு.எஸ்.பி. போர்ட் 2 உடன் இணைந்து செயல்படத் தேவையான வசதிகள் தரப்பட்டன.
2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஆப்பிள் நிறுவனம் ஐபாட் சாதனத்திற்கு மாற்றாக ஐபாட் மினி என்ற ஒன்றைக் கொண்டு வந்தது. இதில் 4ஜிபி கொள்ளளவு கொண்ட மைக்ரோ டிரைவ் இருந்தது. முழு வெளிப்பாகமும் அனடைஸ்டு அலுமினியம் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டு, ஐந்து வண்ணங்களில் வந்தன. இதனால் தங்கள் விருப்ப வண்ணங்களில் மக்கள் ஐபாட் சாதனத்தை வாங்கிப் பயன்படுத்தினார்கள். இதில் தான் முதல் முதலாக கிளிக் வீல் அறிமுகமானது. இதற்கு முன் வந்த மாடல்களில் பட்டன்கள் தனித்தனியாக இருந்தன. ஆனால் இந்த மாடலில், வீலிலேயே இவை உள்ளார்ந்து அமைக்கப்பட்டன.

ஜூலை 2004ல், ஆப்பிள் தன் நான்காவது வகை மாடல் போனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. 20 மற்றும் 40 ஜிபி அளவில் இவை இருந்தன. இதன் பின் மூன்று மாதங்கள் கழித்து அக்டோபரில் ஐபாட் போட்டோ என்ற மாடலை ஆப்பிள் வெளியிட்டது. இது 40 மற்றும் 60 ஜிபி அளவில் இருந்தன. கருப்பு வண்ணத்தில் சிகப்பு கிளிக் வீலுடன் இருந்தது. இதுவரை வெள்ளையாக இருந்த ஐபாடினைக் கண்டு சலித்துப் போன ரசிகர்கள் இதனை வரவேற்றனர்.
2005 ஜனவரியில் தன் ஐந்தாவது வகை மாடலைக் கொண்டு வந்தது ஆப்பிள். ஐபாட் ஷப்பிள் (iPod Shuffle) என அழைக்கப்பட்ட இந்த சாதனம் மிகச் சிறிய அளவில், கேபிள் இணைப்பின்றி நேரடியாகக் கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன் படுத்தும் அளவில் இருந்தது. 512 எம்பி மற்றும் 1ஜிபி அளவில் இவை இருந்தன. பிப்ரவரியில் மேலும் சில மாற்றங்களை இதில் ஆப்பிள் ஏற்படுத்தியது. தங்க நிற ஐபாடை எடுத்துவிட்டு, அதன் இடத்தில் வேறு வண்ணங்களைத் தந்தது.
அடுத்து ஐபாட் மற்றும் ஐபாட் போட்டோ சாதனங்களில் 40 ஜிபி மாடலை நீக்கி, ஐபோட்டோ இடத்தில் 30 ஜிபியையும், ஐபாடில் 20 ஜிபியையும் கொண்டு வந்தது. பின் இரண்டு மாடலையும் ஒன்றாக்கியது. கருப்பு –வெள்ளை திரையையும் மூட்டை கட்டியது.
இதே ஆண்டில் ஆப்பிளின் மிகப் பிரபலமான ஐபாட் நானோ வெளியானது. ஆனால் அதே நேரத்தில் நன்றாக விற்பனை செய்யப்பட்டு, மக்கள் மனதில் இடம் பிடித்திருந்த ஐபாட் மினி முடக்கப்பட்டது. புதிய கலர் ஸ்கிரீன் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபான் இன்றும் 32 மற்றும் 40 ஜிபி திறனுடன் கிடைத்துவருகிறது. ஐபாட் நானோ 2 மற்றும் 4 ஜிபி திறனுடனும் கிடைத்தது.
2005 ஆம் ஆண்டிலேயே இன்னொரு ஐபாட் மாடலும் வெளியானது. இதில் புதுமையாக வீடியோ இயக்கும் திறன் அளிக்கப் பட்டது. ஐபாட் சாதனத்தில் இது முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பாகும். இதனை மக்கள் ஐபாட் வீடியோ என அழைத்தனர். 2.5 அங்குல திரை 320 x 420 கலர் ரெசல்யூசனுடன் இருந்தது. வீடியோ பைல்கள் இதில் விநாடிக்கு 30 பிரேம்கள் என்ற வேகத்தில் இயக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஐட்யூன்ஸ் மியூசிக் ஸ்டோர் இயக்கப்பட்டு, ஆடியோ மற்றும் வீடியோ பைல்களைக் கட்டணம் செலுத்தி, டவுண்லோட் செய்து இயக்கும் வசதி தரப்பட்டது. இந்த வகை ஐபாட் ஸ்லிம்மாகவும், சிறியதாகவும் அமைந்திருந்தது. இப்போது இது 30 மற்றும் 60 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது.
2006 ஆம் ஆண்டில் ஐபாட் ஷபிள் விலை குறைக்கப்பட்டது. முந்தைய 2 மற்றும் 4 ஜிபி மாடல்களோடு, ஒரு ஜிபி மாடலும் அறிமுகமானது.

இதே ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், ஐபாட் சாதனங்கள் அனைத்தின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஐபாட் ஷபிள் முந்தையதைக் காட்டிலும் பாதி அளவில் தரப்பட்டது. ஐபாடினை சட்டை மற்றும் பேண்ட்களில் மாட்டிக் கொண்டு கேட்க, கிளிப் ஒன்று சாதனத்திலேயே தரப்பட்டது.
புதிய ஐபாட் நானோ பலவகை வண்ணங்களிலும், கொள்ளளவு திறனுடனும் தரப்பட்டது. அக்டோபர் மாதத்தில் ஐபாட் நானோவின் சிகப்பு எடிஷன் அறிமுகமானது. இதன் விற்பனையில் ஒரு பங்கு பணம் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டில் ஐபாடுக்குப் புதிய வண்ணங்கள் அளிக்கப்பட்டன. ஆரஞ்ச், பிங்க், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் வெளிவந்தன. மொத்தம் ஐந்து வண்ணங்களில் ஐபாட் கிடைத்தது.
இந்த நேரத்தில் தான் ஐபாட் என தொடர்ந்து மைய மாடலாக இருந்த சாதனம் ஐபாட் கிளாசிக் என அழைக்கப்படத் தொடங்கியது. இதில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும், இதன் கொள்ளளவு 160 ஜிபி வரை கொண்ட மாடலும் வெளிவந்தது. இன்றைக்கும் இதுவே ஐபாட் ஒன்றின் அதிக பட்ச கொள்ளளவினதாக உள்ளது. 30 ஜிபி மாடல் கைவிடப்பட்டது.
ஜனவரி 2008ல் ஐபாட் நானோ 8 மாடல் பிங்க் கலரில் வெளியானது. இந்த ஆண்டிலும் செப்டம்பர் மாதத்தில், அனைத்து மாடல்களிலும் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆப்பிள் கிளாசிக் மாடலில் 160 ஜிபி மாடல் எடுக்கப்பட்டது. 80 மற்றும் 120 ஜிபி மாடல்கள் அதிகம் வரத் தொடங்கின. இதே போல ஐபாட் டச் பிளேயரிலும் சிறிய அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஸ்பீக்கர் உள்ளாக அமைக்கப்பட்டது. வால்யூம் கண்ட்ரோல் ஐபோனில் உள்ளது போலத் தரப்பட்டது.
2009ல் ஆப்பிள் உலகின் மிகச் சிறிய மியூசிக் பிளேயரை அறிமுகப்படுத்தியது. இது ஐபாட் ஷபிள் மாடலின் மூன்றாவது வகையாகும். இதுவரை வந்ததைக் காட்டிலும் சிறியதாகவும், ஸ்லிம்மாகவும், எடை மிகக் குறைவாகவும் வடிவமைக்கப் பட்டிருந்தது. இதனுடைய நீளம் ஏறக் குறைய சுண்டு விரல் போலவே இருந்தது. வாய்ஸ் ஓவர் என்னும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பார்வை அற்றவர்கள் பாடல் குறித்த தகவல்கள் பெற்று இயக்க முடிந்தது. இந்த ஆண்டில் ஐபாட் நானோவில் புதிய வசதிகள் தரப்பட்டன. இதில் வீடியோ கேமரா தரப்பட்டு ரெகார்டிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் எப்.எம். ரேடியோவும் இணைந்திருந்தது.

இந்த ஆண்டில் ஐபாட் கிளாசிக் ஆப்பிள் நிறுவனத்தால் கைவிடப்படும் என்று எதிர்பார்த்த நேரத்தில், அதன் நினைவகத்தினை 120லிருந்து 160 ஜிபியாக உயர்த்தி, விலையை அப்படியே வைத்து ஆப்பிள் புதிய மாடலை அறிமுகப்படுத்தியது. அண்மையில் ஐபாட் 32 மற்றும் 64 ஜிபி மாடல்களுடன் தரப்பட்ட இயர்போனில் மைக் மற்றும் பிளே பேக் கண்ட்ரோல்களும் தரப்பட்டன.
ஐபாடின் அளவை சிறியதாக்கி, உள்ளே ஹார்ட் டிரைவின் அளவைப் பெரியதாக்கி, புதிய வசதிகளை இணைத்துத் தரும் பணியில் தொடர்ந்து ஆப்பிள் மேற்கொண்டு வருகிறது. இன்னும் பல மாறுதல்களை நாம் எதிர்பார்க்கலாம்.

இணையம் தரும் இறை வழிபாடு


“நான் இங்கிருந்தே என் அம்பாளை மனதிற் குள் தரிசிக்கிறேன். என் வடபழனி முருகனை வணங்குகிறேன்” என்று பக்தர்கள் கூறுவதனைக் கேட்டுள்ளோம். மனதை ஒருமித்து வணங்கு வோருக்கு ஆண்டவன் அவர்கள் உள்ளத்தில் உறைவான் என்பது ஆன்மிகம். ஆனால் இன்று பல தமிழ்க் கோவில்களில் அங்கு என்ன பூஜை நடைபெறுகிறது என்பதையும், தங்கத்தேர் இழுப்பதையும், இறைபுகழ் பாடும் கச்சேரிகள் நடைபெறுவதனையும் இன்டர்நெட் வழியாகக் காணும் வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. www.edarshan.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் பிரிவி இயங்கும் ஒரு தனியார் நிறுவனம் தமிழகத்தின் முக்கிய ஆலயங்களுக்கு இந்த வசதியினைத் தந்துள்ளது. கோவில் நிர்வாகத்தில் உள்ளவர் களுக்குப் பயிற்சி அளித்து, அங்கு நடைபெறும் முக்கிய திருவிழா, அன்றாட பூஜைகள் ஆகியவற்றை, அங்கு நடக்கும்போதே பக்தர்கள் காணும் வகையில் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்திடுகிறது.
இந்த தளத்தில் போனால் இணைய தள நேரடி ஒளிபரப்பு என்று இதன் முகப்பு பக்கத்தில் காணலாம். இப்போதைக்கு வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோவில், சங்கரன் கோவில், பன்னாரி அம்மன் கோவில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், வடிவுடை அம்மன் கோவில், அழகர் கோவில் ஆகிய ஏழு கோவில்கள் இந்த தளத்தில் கிடைக்கப்பெறுகின்றன.

இந்த ஏழு கோவில்களின் சரித்திரம், ஏற்கனவே நடைபெற்ற நிகழ்வுகளின் வீடியோ காட்சிகள் மற்றும் தற்போது ஒளி பரப்பில் இருந்தால் அப்போதைய கோவில் நிகழ்வுகளைக் காணலாம்.
தளத்தின் வலது மேல் மூலையில் உள்ள Web Live Streaming என்பதில் கிளிக் செய்து பின் எந்த கோவில் நிகழ்ச்சியைக் காண வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்தால் அங்கு இணைய ஒளிபரப்பில் உள்ள காட்சி உங்களுக்குக் கிடைக்கும். இதில் உள்ள போட்டோ கேலரியில் அனைத்து கோவில்களில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் வரிசையாகக் கிடைக்கின்றன. பேண்ட் வேலி டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனம் இந்த இணைய ஒளிபரப்பிற்கான ஏற்பாடுகளை இந்தக் கோவில்களுக்குச் செய்து தந்துள்ளது.
கோவில்களை நேரடியாக மக்கள் மனதிற்குக் கொண்டு வரும் இந்த தொண்டு மற்ற கோவில்களுக்கும் பரவினால் நன்றாக இருக்கும் என இதனைப் பார்த்தவர்கள் விரும்புகிறார்கள்

விண்டோஸ் தொகுப்பிற்கான சில இலவசங்கள்

விண்டோஸ் தொகுப்பில் செயல்படும் சில ஆச்சரியப்படத்தக்க புரோகிராம்கள் சிலவற்றைக் காண நேர்ந்தது. இவை வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட வையாக இருந்ததனால் இங்கு விபரங்கள் தரப்படுகின்றன.

1. ஐகால்சி – iCalcy

உங்களுக்கு ஐபோன் மிகவும் பிடிக்குமா? இந்த புரோகிராமிற்கும் ஐ போனுக்கும் என்ன சம்பந்தம்? ஐ போன் கிடைக்குமா என்ன? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது ஒரு கால்குலேட்டர்; இந்த கால்குலேட்டர் ஒரு ஐபோன் வடிவில் உங்களுக்கு மானிட்டரில் கிடைக்கும். அதனால் தான் இதன் பெயர் iCalcy. இது வழக்கமான, ஒரு சாதாரண கால்குலேட்டர் என்ன செய்திடுமோ அவை அனைத்தையும் செய்து காட்டும். ஐ போன் போல அகலவாக்கிலும் தோற்றம் தரும். ஜஸ்ட், ஒரு மாறுதலுக்கு இதனை இலவசமாக டவுண்லோட் செய்து பதிந்து இயக்கிப் பாருங்களேன். இந்த புரோகிராம் http://aviassin.wikidot.com/icalcy என்ற முகவரியில் இலவசமாக டவுண்லோ செய்து கொள்ள கிடைக்கிறது.
2. விண்டோஸ் 7 சூப்பர் பார்:
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து வெளியான தகவல்களில் அதன் தோற்றங்கள் சிலவற்றில், சிலருக்கு ஆர்வம் இருக்கலாம். இந்த சிஸ்டத்தின் சைட் பார் விஸ்டாவின் டாஸ்க் பார் போல இருப்பதாகப் பலர் கூறியுள்ளனர். இந்த விருப்பத்தின் அடிப்படையில் சீன கம்ப்யூட்டர் பொறியாளர் ஒருவர் டாஸ்க் பாரினைச் சற்று மாற்றி விண்டோஸ் 7 சூப்பர் பார் போல அமைத்துத் தந்துள்ளார். இந்த புரோகிராம் இலவசமாக http://flarejune.deviantart.com/art/ TaskbarResizeToolforVista104078306 என்னும் முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்த்தும் கிடைக்கவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் விசுவல் சி ப்ளஸ் ப்ளஸ் 2008 இல்லை என்று பொருள். அதனை இன்ஸ்டால் செய்து பின் இந்த புரோகிராமினை இயக்க வேண்டும். இந்த விசுவல் சி++ புரோகிராம் கிடைக்க http://www. microsoft.com /downloads /details.aspx? familyid= A5C842753B974AB7A40D3802B2AF5FC2&displaylang=en என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
3. கிளாஸ் சி.எம்.டி.  (GlassCMD)  “டெஸ்க்டாப்பில் கிடைக்கும் விண்டோ எல்லாம், சும்மா பளபளன்னு இருக்கணும்; அடுத்த பக்கம் ஊடுறுவித் தெரியும்படி கண்ணாடியா இருக்கணும்” என்று என் நண்பர் ஒருவர் கதை அடித்துக் கொண்டிருப்பார். அவரைப் போன்ற விருப்பம் உள்ள நபர்களுக்காகவே கிளாஸ் சி.எம்.டி. என்ற புரோகிராம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சின்ன புரோகிராம்; எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்; இதைக் கம்ப்யூட்டரில் பதிந்து, அதன் மீது டபுள்கிளிக் செய்தால், சிஸ்டம் ட்ரேயில், கடிகாரம் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறது.உங்களுடைய கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை, ஊடுறுவிச் செல்லும் கண்ணாடியாக மாற்றுகிறது. இது உங்கள் கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை மாற்ற வில்லை. அதனை பின்புறம் உள்ள பொருட்களைக் காட்டும் கண்ணாடியாக மாற்றுகிறது. இந்த புரோகிராமினை http://komalo.deviantart.com/art/GlassCMDforVista121457868 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். இது ராம் மெமரியில் எடுத்துக் கொள்ளும் இடம் 1 எம்பிக்குக் குறைவாக உள்ளதால், தாராளமாக எடுத்துப் பயன்படுத்தலாம்.

4. பயர்பாக்ஸ் கண்ணாடி (Glassy Firefox):

பயர்பாக்ஸ் பிரவுசரின் மிகப் பெரிய பலம் அது தரும் பாதுகாப்பு; அதற்கு அடுத்தபடியாக, அதன் ரசிகர்கள் கூட்டம். பல கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் தீம்ஸ், எக்ஸ்டென்ஷன்ஸ் என்ற பெயரில் பல அரிய, வேடிக்கையான மற்றும் கூடுதல் பயன்தரும் புரோகிராம்களை உருவாக்கி அவற்றை ஆட் ஆன் தொகுப்புகளாகத் தருகிறார்கள். நியோவின் (Neowin) என்பவர் அம்ப்ரூஸ் (Ambroos)  என்னும் கிளாஸி பயர்பாக்ஸ் தீம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனைப் பதிந்து இயக்க 64 பிட் விண்டோஸ் இயக்கத் தொகுப்பு இருக்க வேண்டும். ஜிமெயில் செக்கர் இருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டால், நீங்கள் இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம். இது பயர்பாக்ஸ் தளத்தில் கிடைக்கவில்லை. கிடைக்கும் முகவரி http://www.neowin.net /forum/index.php?s=ee8053c 1716233beb4b6dcb3715500cc&showtopic=7 46714

5. நோட்பேட் கண்ணாடி (Transparent Notepad): கிளாஸ் சிஎம்டி போல இது இருந்தாலும் சற்று வித்தியாசமான ஊடுறுவும் கண்ணாடியில் இயங்குவது போல நோட்பேடினை இந்த புரோகிராம் அமைக்கிறது. மற்ற புரோகிராம் போல, ஜஸ்ட் ஒரு கண்ணாடி இன்டர்பேஸ் தராமல், மொத்த நோட்பேட் புரோகிராமினையும் ஒரு கிளாஸ் தட்டில் அமைக்கிறது. ஒரு விதத்தில் வேர்ட்பேட் போலவும் செயல்படுகிறது. அனைத்து பைல்களையும் ஆர்.டி.எப். (.rtf)  பார்மட்டில் சேவ் செய்கிறது. இருப்பினும் டி.எக்ஸ்.டி. (.txt)  அல்லது எச்.டி.எம்.எல். (.html)  பார்மட்டில் சேவ் செய்திடும் ஆப்ஷனையும் தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:  http://sourceforge.net /projects/transnote/

6. கிளாஸ் 2கே (Glass 2K):

மற்ற புரோகிராம்கள் போல் கண்ணாடி போன்ற எபக்ட் தராமல், சற்று ஒளி ஊடுருவும் வகையில் இது விண்டோ வினை அமைக்கிறது. ஒவ்வொரு விண்டோவினையும் இவ்வாறு செயல்படுத்துகிறது. தற்போதைக்கு விண்டோஸ் 2000 மற்றும் எக்ஸ்பியில் மட்டும் செயல்படுகிறது. இதைச் செயல்படுத்தும்போது ‘Runtime DLL/OCX File error’ போன்ற எர்ரர் ஏற்பட்டால், இந்த புரோகிராம் கிடைக்கும் தளத்தில் இதற்கான தீர்வுகளும் கிடைக்கின்றன.

பிளாஷ் டிரைவில் அப்ளிகேஷன் புரோகிராம்கள்

எளிதான டேட்டா பரிமாற்றத்திற்கு உதவியபிளாஷ் டிரைவ்கள், தற்போது மேலும் பல பயன்களைத் தரும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சில அப்ளிகேஷன் புரோகிராம்களை, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடாமல் பயன்படுத்த இந்த பிளாஷ் டிரைவ்கள் பயன்படுகின்றன.

பிளாஷ் டிரைவ்களில் காப்பி செய்து அப்படியே கம்ப்யூட்டரில் செருகிப் பயன்படுத்த ஆங்காங்கே இணையத்தில் கிடைக்கும் புரோகிராம்கள் குறித்து சில தகவல்கள் ஏற்கனவே இந்த பக்கங்களில் தரப்பட்டுள்ளன. ஆனால் அண்மையில் ஓர் இணைய தளம் இத்தகைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் பலவற்றை வகை வகையாய் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த இணைய தளத்தின் முகவரி: http://portableapps.com/apps இங்கே நூற்றுக் கணக்கில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் பிளாஷ் டிரைவில் எடுத்துச் சென்று அப்படியே வைத்துப் பயன்படுத்தக் கூடிய தன்மை உடையவை என்பது இவற்றின் சிறப்பு. இவை அனைத்தும் கீழே குறிப்பிடப்படும் தலைப்புகளில் குழுக்களாக அமைத்துத் தரப்பட்டுள்ளன. அவை: Accessibility, Development Education Games Graphics & Pictures Internet Music & Video Office Operating Systems, Utilities.

இவற்றை பிளாஷ் டிரைவில் பதிய முதலில் பிளாஷ் டிரைவினைக் கம்ப்யூட்டரில் இணைக்க வேண்டும். பின் இந்த புரோகிராம் மீது கிளிக் செய்தால்,எங்கு இன்ஸ்டால் செய்திட என்ற கேள்வி கேட்கப்படும். அப்போது பிளாஷ் டிரைவின் டிரைவைக் கிளிக் செய்தால், பிளாஷ் டிரைவில் அந்த புரோகிராம் பதியப்படும். பின் அதனை எடுத்துச் சென்று, கம்ப்யூட்டரில் இணைத்து நேரடியாகப் பயன்படுத்தலாம். புரோகிராமினை கம்ப்யூட்டருக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

பயர்பாக்ஸ் பாதுகாப்பு

இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக பிளாக்குகள் அமைப்பவர்களிடையே, பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. நம் விருப்பங்களுக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளக் கூடிய வசதி, பயன்படுத்த எளிமையான இன்டர்பேஸ், நம்பிக்கை தரும் இயக்க தன்மை ஆகிய இதன் சிறப்புகளே, பலரை இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டு இதனைப் பயன்படுத்தத் தூண்டுகின்றன.  அனைத்து இன்டர்நெட் பிரவுசர்களும் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஏதேனும் ஒரு வகையில் வைரஸ் புரோகிராம்கள் மற்றும் கெடுதல் விளைவிப்பதற்காகவே எழுதப்படும் புரோகிராம்கள் பிரவுசர் வழியாக வந்துவிடுகின்றன. பொதுவாக ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்கையில் அடிப்படை யில் ஒரு சில பாதுகாப்பு முறைகள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை பழகிப் போனதால், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்புபவர்கள் இவற்றை மீறிச் செயல்படும் வகையில் அவற்றை வடிவமைத்து விடுகின்றனர். எனவே தொடர்ந்து பிரவுசரைப் பாதுகாக்கும் வகையில் நாம் அதனைப் பலப்படுத்த வேண்டியுள்ளது.

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர், கம்ப்யூட்டரை, இது வைரஸ் போன்ற தீய செயல்களை மேற்கொள்ளும் தொகுப்புகளிலிருந்து பாதுகாக்கும் புரோகிராம்களை சப்போர்ட் செய்கிறது. அத்துடன் பயர்பாக்ஸ் பிரவுசருக்கென வடிவமைக் கப்பட்டுள்ள பல ஆட் ஆன் தொகுப்புகளும் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றையும் பயர்பாக்ஸ் ஏற்றுக் கொள்கிறது. வங்கிக் கணக்குகள் கையாளுதல், ஆன்லைனில் பொருட்களுக்கு ஆர்டர் செய்து வாங்குதல், அவற்றிற்குப் பணம் செலுத்துதல், சோஷியல் நெட்வொர்க் கிங்கில் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளல், கல்வி கற்றல் போன்ற பணிகளில் நாம் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துவதால், ஒரு பாதுகாப்பான சூழ்நிலை நமக்கு அவசியமாகிறது.
மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசருக்குக் கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் தரப்பட்டுள்ள ஆட்–ஆன் தொகுப்பு களிலிருந்து சிறப்பாகச் செயல்படும் சில தொகுப்புகளின் பட்டியல் இங்கு தரப்படுகிறது.

1.Adblock Plus:  இந்த ஆட் –ஆன் தொகுப்பு வாரந்தோறும் ஏறத்தாழ 8 லட்சம் பேரால் டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. பேனர்கள், விளம்பரங்களைத் தாங்கி வரும் பாப் அப் விண்டோக்களை முற்றிலுமாய்த் தடுக்கிறது. கிடைக்கும் இணையதள முகவரி: http://addons.mozilla.org/enUS/firefox/addon/1865 இந்த தொகுப்பைப் பதிந்த பின்னர், ஏதேனும் பேனர் விளம்பரம் வந்தால், அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் கான்டெக்ஸ்ட் மெனுவில் Adblock Plus என்பதனைத் தேர்ந்தெடுங்கள். அந்த பேனர் மீண்டும் ஒரு முறை அந்த கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்படமாட்டாது. அல்லது தொகுப்பை முதலில் பயன்படுத்தத் தொடங்குகையில் பில்டர் பயன்பாட்டினை இயக்கிவிட்டால் இது போன்ற பேனர் விளம்பரங்களை அண்டவிடாது.

2.Better Privacy:

பொதுவாக குக்கிகளால் நமக்கு சில நன்மைகள் இருந்தாலும், பல குக்கிகள் நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் வேலைக்கே அனுப்பப்படுகின்றன. இவற்றை நம் பிரவுசிங் முடிந்த பின்னர் அழித்துவிடலாம். ஆனால் சில குக்கிகள் அழிக்கப்பட முடியாத வகையில் உருவாக்கப்பட்டு பதிக்கப்படுகின்றன. இவற்றை சூப்பர் குக்கிகள் என அழைக்கின்றனர். இவற்றிலிருந்தும் பாதுகாக்கும் வேலையை இந்த ஆட் ஆன் புரோகிராம் தருகிறது. இந்த ஆட் ஆன் புரோகிராமினை https://addons.mozilla. org/enUS/firefox/addon/6623 என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த பிளாஷ் குக்கிகளை எல்.எஸ்.ஓ. குக்கிகள் எனவும் அழைக்கின்றனர். இவை நம் கம்ப்யூட்டரில் எப்போதும் நிரந்தரமாக இருக்கும் வகையில் பதியப்படும். ஒரு குக்கியின் அளவு 100 கேபி. வழக்கமான சாதாரண குக்கியின் அளவு 4 கேபி மட்டுமே. இந்த குக்கிகளை பிரவுசர்கள் அறிவதில்லை. எல்.எஸ்.ஓ. குக்கிகளை பிரவுசர்களாலும் அழிக்க முடிவதில்லை. இந்த வகை குக்கிகள் சிஸ்டத்தில் பதிந்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை எளிதாகப் பெற்று, நாம் அறியாமலேயே மற்ற கம்ப்யூட்டருக்கு அனுப்பும் தன்மை கொன்டவை.
பிளாஷ் குக்கிகள் எப்போது சென்ட்ரல் சிஸ்டம் போல்டரில் தான் பதியப்படுகின்றன. எனவே இவை நீக்கப்படாது. நீக்குவதும் சிரமம். Better Privacy புரோகிராம் ஒவ்வொரு முறை நீங்கள் பிரவுசரை மூடும்போது, இவை அனைத்தையும் நீக்கிவிடுகிறது. அல்லது ஒவ்வொரு பிளாஷ் குக்கியாக இந்த புரோகிராம் மூலம் பெற்று அவற்றை நீக்குவதா, வைத்துக் கொள்வதா என நீங்கள் தீர்மானிக்கலாம்.

3. No Script:
இணையத்தில் எந்த வகையில் நம்மை அழிக்கும் புரோகிராம்கள் வரும் என்று சொல்ல முடியாத வகையில் பல வகை புரோகிராம்கள் உள்ளன. இவற்றில் ஸ்கிரிப்ட் என்பதுவும் ஒன்று. இதிலிருந்து பாதுகாக்கும் வழிகளை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இந்த புரோகிராமினை https://addons.mozilla. org/enUS/firefox/addon /722 என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
2006 ஆம் ஆண்டின் சிறந்த புரோகிராமாக இது விருது பெற்றது. பிரவுசருக்கான சரியான பாதுகாப்பினைத் தருகிறாது. இந்த புரோகிராம் ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் போன்றவற்றை நாம் அனுமதிக்கும் நேரத்தில், அனுமதிக்கும் தளங்களில் இருந்து வந்தால் மட்டுமே இயங்க வைக்கும். இந்த புரோகிரா மினைப் பயன்படுத்துவது குறித்த மேலதிகத் தகவல்களுக்கு http://noscript. net/faq என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

4. WOT Web of Trust:

இணையப் பயன்பாட்டின் போது, நம்முடைய கம்ப்யூட்டருக்குள் நம் அனுமதியின்றி சிலர் ஊடுருவி, பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முயற்சிப்பார்கள். இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் இந்த புரோகிராம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும். https://addons.mozilla.org/enUS/firefox/addon/ 3456 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆபத்து நிறைந்த இணைய தளங்களுக்கு நீங்கள் செல்கையில் இது பலத்த எச்சரிக்கையினைத் தரும். ஓர் இணைய தளம் ஸ்பேம் மற்றும் மால்வேர்களை அனுப்ப முயற்சிக்கையில் இந்த புரோகிராம் அந்த செயலை மோப்பம் பிடித்து அறிந்து உடனே எச்சரிக்கை கொடுத்து, நம்மை அந்த தளத்தின் இணைப்பைத் துண்டித்துக் கொள்ளச் சொல்லும். இந்த புரோகிராமில் பல லட்சம் தளங்களின் தன்மை குறித்த தகவல் பதியப்பட்டுள்ளது. இந்த புரோகிராம் பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவல்களுக்கும் சப்போர்ட்டுக்கும் http://www.mywot.com/ support என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

5.Stealther: நாம் இணையத்தில் உலா வருகையில், தகவல்களைத் தேடுகையில், இமெயில் களைப் பெறுகையிலும் அனுப்பும்போது நம் இணையப் பயணம் குறித்த பல தடயங்கள் உருவாக்கப்படுகின்றன. பிரவுசர் ஹிஸ்டரி, குக்கீஸ், டிஸ்க் கேஷ், பைல் ஹிஸ்டரி, படிவங்களில் தரப்படும் தகவல்கள் என இவை பலவகைப்படுகின்றன. இது போன்ற எந்த தடயமும் இல்லாமல் இந்த புரோகிராம் பார்த்துக் கொள்கிறது. இதனை https://addons. mozilla.org/enUS/firefox/addon/ 1306 என்ற முகவரியில் பெறலாம். இந்த புரோகிராம் நாம் பிரவுசரை இயக்கியவுடன் தானும் இயங்கி தடயங்களை ஏற்படுத்தும் புரோகிராம் பகுதிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.

6. Roboform Toolbar:  நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இந்த புரோகிராம் உதவுகிறது. https://addons.mozilla.org/enUS/ firefox/addon/750 என்ற தளம் இந்த புரோகிராமைத் தருகிறது.
பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்து நாம் அவற்றை முறையாகவும் தவறின்றிப் பயன்படுத்தவும் உதவுகிறது.

7. Key Scrambler Personal:
நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் மற்றும் பிற முக்கிய தகவல்களை, நாம் அறியாமலேயே நம் கம்ப்யூட்டர் களுக்குள் அமர்ந்து அறியும் புரோகிராம் களில் ஒரு வகை கீ லாக்கர் என்பதாகும். இவை நாம் அழுத்தும் கீகளைப் பதிவு செய்து பின் இதனைப் பதித்தவருக்குத் தரும். இன்டர்நெட் மையங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள பொது கம்ப்யூட்டர்களில் சிலர் இவற்றைப் பதிந்து வைத்துப் பயன்படுத்துவார்கள். ஏன், நம் கம்ப்யூட்டர்களில் பிறரை அனுமதித்தால், நம் அனுமதியில்லா மலேயே அவர்கள் இந்த வேவு பார்க்கும் வேலையை மெற்கொள்ளலாம். இத்தகைய கீ லாக்கர்கள் புரோகிராம்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது இந்த Key Scrambler Personal   புரோகிராம். இதனை https://addons. mozilla.org/enUS/firefox /addon/3383 என்ற முகவரியிலிருந்து பெறலாம்.
பிரவுசர் பாதுகாப்பு என்பது நாம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு தடுப்பு வழியாகும். அப்போதுதான் நாம் நிம்மதியாக இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

விண்வெளியில் விருந்தினர் மாளிகை


இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித் துள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சின் புதிய பரிணாமம்போல அமைந்துவிட்டது. இதையடுத்து நிலவை மையமாக வைத்து பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. அதாவது நிலவு ஒரு விருந்தினர் மாளிகைபோல செயல்பட இருக்கிறது.

முதல்கட்டமாக நிலவை ஒரு மினி ஆராய்ச்சி கூடம்போல பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. விண்வெளி ஓடங்களில் எரிபொருளாக பயன்படுவது ஹைட்ரஜன்தான். எனவே விண்கலங்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் இடமாக நிலவை பயன்படுத்த திட்ட மிடப்பட்டு இருக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சி பயணத்தில் எரிபொருள் தீர்ந்துவிடும்போது நிலவில் இறங்கி எரிபொருளை நிரப்பிக் கொள்ளப் போகிறார்கள். இதனால் மற்ற கிரகங்களைப் பற்றிய ஆராய்ச்சியையும் வேகமாகச் செயல்படுத்த முடியும்.

மேலும் ஏற்கனவே நடந்த ஆய்வின்படி குறிப்பிட்ட ரசாயனத்தை நிலவின் பாறைகள் மீது தெளிப்பதால் ஆக்சிஜன் வெளிப்படும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர். தற்போது நிலவில் ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதால் இதே முறையில் கூடுதலாக ஆக்சிஜனை வெளிப்படச் செய்து செயற்கை முறையில் நீர் உற்பத்தியை பெருக்கவும் முடியும். இதன் மூலம் உயிரினங்களின் தோற்றம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மேலும் மனிதர்களின் புதிய குடியேற்றத் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.

இது குறித்து, ஆய்வாளர் குழுவைச் சேர்ந்த லாரி டெய்லர் கூறும்போது, “நிலவில் காணப்படும் சாதகமான சூழல் சில ஆயிரம் ஆண்டுகளில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய நிலைமையை அடையும். அங்குள்ள ஹைட்ரஜன், விண்கலங்களின் எரிபொருள் தேவையை 85 சதவீதம் பூர்த்தி செய்யும்” என்றார்.

வெற்றிக்கு வழி அமைதி

மகிழ்ச்சியும், நிம்மதியுமே வாழ்க்கையின் லட்சியம். நாம் செய்யும் எல்லா செயல்களும் இதை நோக்கியே அமைந்திருக்கின்றன. இந்த இரு பண்புகளுக்கும் அமைதியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனெனில் நீங்கள் அமைதியை இழந்தால் இவை இரண்டுமே உங்களைவிட்டு தூரத்துக்கு சென்று விடும்.

உங்கள் அனுபவத்தில் இது நிகழ்ந்திருக்கலாம். பிறர் உங்களை காரணமின்றி திட்டுவதாகவும், குறை கூறுவதாகவும் உங்களுக்கு தோன்றி இருக்கலாம். அது உண்மையாகவோ அல்லது மாறாகவோ இருக்கலாம். எப்படி இருந்தாலும் சிக்கலான காலக்கட்டத்தில் அமைதியுடன் இருந்து பொறுமையாக சமாளியுங்கள். அப்போது அமைதியின் சக்தியை நீங்கள் உணருவீர்கள். பிறகு அதன் பலனை அனுபவிப்பீர்கள்.

ஆனால் எல்லா நேரத்திலும் அப்படி இருக்க முடியுமா? பேச வேண்டிய தருணத்தில் பேசாமல் இருப்பதுதான் மிகப்பெரிய பலவீனம். தமிழில் ஒரு பழமொழி உண்டு. `கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு’ என்பது அந்தப் பழமொழி. இதில் வரும் கொக்குபோல காத்திருப்பது அமைதிக்கு எடுத்துக்காட்டு அல்ல. அறிவீனத்தின் வெளிப்பாடு.

அமைதியை இழப்பதே கோபம். துன்பத்தின் ஆரம்பம். பலவீனமானவர்களுக்கே சீக்கிரம் கோபம் வரும் என்பது உண்மைதான். உங்கள் கருத்தை சாந்தமாகவே வெளியிடுங்கள். அப்படியும் மற்றவர், உங்களின் மீது கோபத்தை கொட்டுவதையே குறியாக இருக்கிறார் என்பதை உணர்ந்தால் அங்கே நீங்கள் கண்டிப்பாக அமைதியாகத்தான் இருக்க வேண்டும்.

எங்கே சரியான புரிதல் இருக்கிறதோ, அங்கே கோபம் குறைந்துவிடும். அமைதி சூழ்ந்து கொள்ளும். அமைதி கலையும் இடத்தை நன்றாக கவனித்துப் பாருங்கள். அங்கே எதிரெதிர் கருத்துக்கள் தோன்றியதாலேயே ஆட்சேபணை உருவாகி கோபம் கொப்பளிக்கும். அமைதி கெடும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் கருத்து சரியாகவே இருந்தாலும் அதை வலியுறுத்த வேறு தருணத்தை எதிர்பார்த்து நீங்கள் அமைதி காப்பதே அறிவுடைமை. “அறிவற்றம் காக்கும் கருவி” என்பார் தமிழ்ப்புலவன் வள்ளுவர்.

உங்களுக்கு கோபமூட்டும் தருணங்களில் நீங்கள் சரியான புரிதலோடு அமைதி அடைவீர்களானால், அந்த அறிவுடைமையானது உங்களது நெருங்கிய சுற்றத்தாரான மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நிலைத்திருக்க வைக்கும் என்று இங்கு பொருள் கொள்ளலாம்.

எனவே எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். எந்த நிலைமையிலும் அடக்கமாக இருங்கள். அனைவரிடமும் அன்பு செலுத்தவும், அன்பைப் பெறவும் கற்றுக் கொள்ளுங்கள். பிறர் உங்களை குறை கூறும்போது மவுனமாக இருங்கள். அவர்கள் மீது எந்த விதமான பகைமை உணர்ச்சியும் கொள்ளாதீர்கள். வெளிப்படையாக கோபத்தை காட்டுவதைவிட இது மிகவும் மோசமானது. இது ஒரு மானசீகப் புற்றுநோய் எனலாம்.

மறப்போம், மன்னிப்போம். இது வெறும் லட்சியவாத மொழி அல்ல. கோழைச் செயலுமல்ல. உங்கள் அமைதியைப் பாதுகாக்கும் ஒரு வழிதான். அந்த வீண் பழிச்சொற்கள் பொய்யானவை என்பதை நீங்களே அறிவீர்கள். பிறகு ஏன் அதையே மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டும்? குழப்பிக் கொண்டால் உங்களுக்குத் தூக்கம் கெடும். படபடப்பு அதிகரிக்கும். நிம்மதி பறிபோகும். மகிழ்ச்சி மறைந்துவிடும். அமைதி காக்க கற்றுக் கொண்டால் அடக்கத்திலும், தூய்மையிலும் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள்.

வாழ்வில் உங்களை தடுமாற வைக்கும் இத்தகைய சம்பவங்கள் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம். அப்போது உங்களுக்கு விருப்பமான செயலில் மனதை லயிக்கச் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதியும், திருப்தியும் கிடைக்கும்.

எந்த செல்வத்தை காட்டிலும் மன அமைதியே பெரிது. அதை நீங்கள் உணர்ந்தால் அமைதியை கெடுக்கும் கோபத்தை கைவிடுங்கள். இக்கட்டான நிலையில் சரியான புரிதலுடன் அமைதி காத்திடுங்கள். சாதகமான நேரத்தில் உங்களின் கருத்தை வெளியிடுங்கள். அமைதியின் சக்தியை உணருங்கள். உறுதி பலமடங்கு கூடும். எளிதில் வெற்றி காண்பீர்கள்.

தாய்ப்பால் அளவு எல்லோருக்கும் ஒரே மாதிரிதானா?

பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும்? என்பது.

பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்பு காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.

சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாயானவள் எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும்; தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும்.

மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு, மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் உண்டா? என்ற சந்தேகமும் ஏற்படலாம்.

உண்மையில் மார்பகத்தின் அளவிற்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை. சிறிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு அதிக அளவில் தாய்ப்பால் சுரப்பதும், பெரிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு குறைவான அளவில் தாய்ப்பால் சுரப்பதும் நடைமுறையில் நாம் காணும் ஒன்றுதான்.

மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்தே ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட அந்த பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடலாம்.