இணையம் தரும் இறை வழிபாடு


“நான் இங்கிருந்தே என் அம்பாளை மனதிற் குள் தரிசிக்கிறேன். என் வடபழனி முருகனை வணங்குகிறேன்” என்று பக்தர்கள் கூறுவதனைக் கேட்டுள்ளோம். மனதை ஒருமித்து வணங்கு வோருக்கு ஆண்டவன் அவர்கள் உள்ளத்தில் உறைவான் என்பது ஆன்மிகம். ஆனால் இன்று பல தமிழ்க் கோவில்களில் அங்கு என்ன பூஜை நடைபெறுகிறது என்பதையும், தங்கத்தேர் இழுப்பதையும், இறைபுகழ் பாடும் கச்சேரிகள் நடைபெறுவதனையும் இன்டர்நெட் வழியாகக் காணும் வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. www.edarshan.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் பிரிவி இயங்கும் ஒரு தனியார் நிறுவனம் தமிழகத்தின் முக்கிய ஆலயங்களுக்கு இந்த வசதியினைத் தந்துள்ளது. கோவில் நிர்வாகத்தில் உள்ளவர் களுக்குப் பயிற்சி அளித்து, அங்கு நடைபெறும் முக்கிய திருவிழா, அன்றாட பூஜைகள் ஆகியவற்றை, அங்கு நடக்கும்போதே பக்தர்கள் காணும் வகையில் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்திடுகிறது.
இந்த தளத்தில் போனால் இணைய தள நேரடி ஒளிபரப்பு என்று இதன் முகப்பு பக்கத்தில் காணலாம். இப்போதைக்கு வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோவில், சங்கரன் கோவில், பன்னாரி அம்மன் கோவில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், வடிவுடை அம்மன் கோவில், அழகர் கோவில் ஆகிய ஏழு கோவில்கள் இந்த தளத்தில் கிடைக்கப்பெறுகின்றன.

இந்த ஏழு கோவில்களின் சரித்திரம், ஏற்கனவே நடைபெற்ற நிகழ்வுகளின் வீடியோ காட்சிகள் மற்றும் தற்போது ஒளி பரப்பில் இருந்தால் அப்போதைய கோவில் நிகழ்வுகளைக் காணலாம்.
தளத்தின் வலது மேல் மூலையில் உள்ள Web Live Streaming என்பதில் கிளிக் செய்து பின் எந்த கோவில் நிகழ்ச்சியைக் காண வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்தால் அங்கு இணைய ஒளிபரப்பில் உள்ள காட்சி உங்களுக்குக் கிடைக்கும். இதில் உள்ள போட்டோ கேலரியில் அனைத்து கோவில்களில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் வரிசையாகக் கிடைக்கின்றன. பேண்ட் வேலி டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனம் இந்த இணைய ஒளிபரப்பிற்கான ஏற்பாடுகளை இந்தக் கோவில்களுக்குச் செய்து தந்துள்ளது.
கோவில்களை நேரடியாக மக்கள் மனதிற்குக் கொண்டு வரும் இந்த தொண்டு மற்ற கோவில்களுக்கும் பரவினால் நன்றாக இருக்கும் என இதனைப் பார்த்தவர்கள் விரும்புகிறார்கள்

%d bloggers like this: