தீபத்திருநாளைக் கொண்டாடுவோம்

தர்மம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்பதை எடுத்துச் சொல்லும் திருநாள் தீபாவளி நன்னாள். நரகாசுனை வதம் செய்த நாளையே தீபாவளியாகக் கொண்டாடி மகிழ்கிறோம். திருமால் வராக அவதாரம் எடுத்தபோது, அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்த பிள்ளை தான் நரகாசுரன். மனிதர்களிலேயே மிக கொடியவன் என்னும் பொருளில் நரகாசுரன் என்று அழைக்கப்பட்டான். இவனுக்கு பூமாதேவி இட்டபெயர் பவுமன். “பவுமன்’ என்றால் “பூமியின் புதல்வன்’ என்று பொருள். பெற்ற தாயைத் தவிர வேறு யாராலும் தன்னைக் கொல்ல முடியாது என்ற வரம் பெற்ற நரகாசுரன் தேவர்களுக்குப் பல கொடுமை செய்துவந்தான். அண்டசராசரங்களையும் நடுங்கச் செய்தான். புராணகாலத்தில் “காமரூபம்’ என்று அழைக்கப்பட்ட (இப்போதைய அசாம்) பகுதியில் ஜோதிஷ்புரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான்.தேவர்களின் தலைவன் இந்திரன் பெருமாளிடம் நரகாசுரனிடமிருந்து தங்களை காப்பாற்றும்படி முறையிட, பூமாதேவியான சத்தியபாமா சாரதியாக தேர் செலுத்த போருக்குப் புறப்பட்டார் கிருஷ்ணர். தன் பிள்ளை தான் நரகாசுரன் என்பது அப்போது சத்தியபாமாவுக்குத் தெரியாது. அங்கு சென்றதும் கிருஷ்ணருக்கும் நரகாசுரனுக்கும் கடும் போர் நடந்தது. ஒரு கட்டத்தில் கிருஷ்ணர் நரகாசுரனிடம் அடிபட்டு மயக்கமடைவது போல நடித்தார். தன் கணவரைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சத்தியபாமா, தன் பிள்ளை மீது அம்பு எய்து கொன்றாள். “அம்மா!’ என்று நரகாசுரன் கதறித் துடித்தபோது அவளுக்கு முற்பிறவிகள் ஞாபகம் வந்தன. இருந்தாலும் அதர்மத்தை அழித்து தர்மத்தை வாழ வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக சத்தியபாமா மூலம் கிருஷ்ணர் இந்த லீலையை நிகழ்த்தினார். இறந்தது தன் மகன் என தெரிந்த பிறகு, தன் பிள்ளையின் நினைவாக மக்கள் இந்நாளினை பண்டிகையாக கொண்டாடி மகிழ வேண்டும் என்ற வரத்தினை பெருமாளிடம் பெற்றாள். மக்களும் அசுரன் அழிந்த நாளை தீபமேற்றிக் கொண்டாடினர். அந்நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடி மகிழ்கிறோம். தீபாவளிக்குளியல் பற்றி காஞ்சிப்பெரியவர் விளக்கம் தந்துள்ளார். * தீபாவளியன்று நமக்கு இருவிதமான குளியல் செய்யும்படி சாஸ்திரம் குறிப்பிடுகிறது. இந்நன்னாளில் செய்யும் நீராடலில் கங்கையோடு சேர்ந்து காவிரிக்கும் சம்பந்தம் இருக்கிறது. அன்று வெந்நீரில் அதிகாலைப் பொழுதில் ஒன்றரை மணிநேரம் கங்கை நதி இருப்பதாக ஐதீகம். அதனால் அந்த நேரத்தில் எண்ணெய் ஸ்நானமாக வெந்நீரில் குளிக்க வேண்டும். அப்போது நரகாசுரன், சத்தியபாமா, கிருஷ்ணர், பூமாதேவி நினைவு நமக்கு வரவேண்டும்.இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். * வெந்நீர் குளியலுக்குப்பின், சூரியன் உதித்த பின் இரண்டு மணி நேரம் 24 நிமிடம் வரை காவிரி உட்பட எல்லா புனித நதிகளும் குளிர்ந்த நீரில் இருப்பதாக ஐதீகம். அப்போது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதற்கு துலாஸ்நானம் என்று பெயர். இரண்டாம் ஸ்நானத்தில் பரமேஸ்வரன் நினைவு வரவேண்டும். தீபத்திற்கும் தீபாவளிக்கும் மிகுந்த சம்பந்தம் உண்டு. தீபாவளி என்ற சொல்லுக்கு தீபங்களின் வரிசை என்பது பொருள். அதனால், தீபாவளியன்று காலையிலும் மாலையிலும் பூஜையறையில் அவசியம் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். வீடு முழுவதும் அகல்விளக்குகளை ஏற்றி வைப்பது இன்னும் சிறப்பு. வீட்டில் செய்த பலகாரங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாக படைக்க வேண்டும். புத்தாடைகளுக்கு மஞ்சள், குங்குமமிட்டு அணிந்து கொள்ள வேண்டும். பெற்றோரிடம் அல்லது வீட்டு பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது நல்லது. பூஜித்த பின் புத்தாடை அணிந்து கொண்டு பலகாரங்களை சாப்பிட்டு மகிழ வேண்டும். இந்நாளில் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் வயது வித்தியாசமின்றி பட்டாசு வெடித்து மகிழ்வர். பட்டாசு, புத்தாடை, இனிப்பு வகைகள் என்று அன்றைய நாள் முழுக்க மகிழ்ச்சியும் குதூகலமும் இல்லங்களிலும் நம் உள்ளங்களிலும் வழிந்தோடும் என்றால் மிகையில்லை. மாலையில் செல்வச் செழிப்பு வேண்டி, குபேர லட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும். இந்நாளில் செய்யப்படும் திருமகள் வழிபாட்டினால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.

%d bloggers like this: