Daily Archives: ஒக்ரோபர் 17th, 2009

தலையங்கம்: நோய் நாடி நோய் முதல் நாடி…

மேலைநாட்டுப் பொருளாதார சிந்தனைகளின்படி, நகர்ப்புற மேம்பாட்டுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்கு நேரெதிரான சிந்தனையை முன்வைத்தவர் அண்ணல் காந்தியடிகள். வளமான கிராமப்புறம் அமைந்தால் மட்டுமே நிலையான முறையான நகர்ப்புரம் செயல்பட முடியும் என்பதை மனதில்கொண்டு மகாத்மா காந்தி வெளிட்ட திட்டம்தான் ‘கிராம ஸ்வராஜ்’ என்பது.

அதேபோல சந்தைப்பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட முதலாளித்துவமும், தனிமனித ஊக்கத்துக்கு மரியாதை தராத பொதுவுடைமை சித்தாந்தமும் இந்தியாவுக்குப் பொருந்தாது என்று கருதி, ‘கலப்புப் பொருளாதாரம்’ என்ற பெயரில் ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை வகுத்து அதன்மூலம் ஏழை, பணக்கார இடைவெளியை குறைக்கும் முயற்சிக்கு முன்னுரிமை அளித்தார் பண்டித ஜவாஹர்லால் நேரு.

இப்போது ‘கிராம ஸ்வராஜ்’ என்பது அண்ணல் காந்தியடிகள் விரும்பியதுபோல அமையாமல் அதன் சிதைந்த பதிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. கலப்புப் பொருளாதாரம் என்பது ஒட்டுமொத்தமாக கைகழுவப்பட்டு, சந்தைப்பொருளாதாரம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இதன் விளைவுகளை சமீப காலமாக இந்தியா சந்திக்கத் தொடங்கியிருக்கிறது.

கிராமப்புறங்களில் கல்வியறிவு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம், ஆனால், விவசாயிகளும் சரி, விவசாயத்தொழிலாளர்களும் சரி தங்களது குழந்தைகளை படித்து பட்டணம் செல்லவேண்டும் என்று விரும்பிகிறார்களே தவிர, அவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தத் தயாராக இல்லை. படித்த இளைஞர்களும் சரி, சட்டையின் மடிப்புர் கலையாமல் மின்விசிறிக்குக் கிழே அமர்ந்து வேலை பார்ப்பதற்குத்தான் தயாராக இருக்கிறார்கள்.

விளைவு? விவசாயம் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. கிராமப்புற மக்கள் பட்டணம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். நகரங்கள் நிரம்பி வழிகின்றன. பலதடவை தயைங்கத்தில் தெரிவித்திருப்பதைப்போல முன்பெல்லாம் பெருநகரங்களான மும்பை, தில்லி, கோல்கத்தா மற்றும் சென்னையில் மட்டும் காணப்பட்ட குடிசைப்பகுதிகள் இப்போது தாலுகா தலைநகரம் வரை காளன்கள்போல உருவாகியிருகின்றன. பெருநகரங்களின் நிலைமையைக் கேட்கவே வேண்டாம்.

வேலைத்தேடிப் பெருநகரங்களுக்கு வருபவர்களில் பெரும்பாலோர் பள்ளிப்படிப்பை முடித்தவர்களாகவும் கல்லூரியில் கலை இலக்கியப் பட்டத்தாரிகளாகவும்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் நகரங்களில் என்த அளவுக்கு வேலை கிடைத்துவிடும்? கணவனும், மனைவியும் வேலைக்குப் போனாலும் பத்தாயிரம் ரூபாய் வருமானத்தைத் தாண்டாதவர்கள்தான் இந்தியாவில் 60 சதவீதம் குடும்பங்கள்.

ஆங்காங்கே அரசியல் தாதாக்களின் ஆசீர்வாதத்துடன் உருவாகும் குடிசைப்பகுதிகளில்கூட ஆயிரம் ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படுகிறதே தவிர சுகாதார நிலைமை அவலத்திலும் அவலம். குறிப்பாக, சென்னையில் கூவத்தின் கரைகளிலும், பக்கிங்ஹாம் கால்வாய் ஒரமாகவும் அமைந்த குடிசைப்பகுதிகளிலும் வாழும் மனிதர்களின் நிலைமையை மனித உரிமை ஆணையம் ஏன் பொருட்படுத்துவதில்லை என்று தெரியவில்லை.

ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தை மத்திய வாட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் அடிப்படை நோக்கம் குடிசைவாழ் மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அழர்களுக்கு நிரந்தரமான சிகாதார வசதிகளுடன் கூடிய வீட்டு வசதி செய்து கொடுப்பது.

முதலில், அமைச்சகத்திடம் குடிசைப்பகுதிகளைப் பற்றிய முறையான புள்ளிவிபரம் இருக்கிறதா என்பதேகூட சந்தேகம்தான். இப்போதுதான் பெரு நகரங்களில் உள்ள குடிசைப்பகுதிகள் பற்றிய அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சகத்தின் செயல்பாட்டு அறிக்கையின்படி, ஜவாஹர்லால் நேருõ தேசிய நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்பகீழ் 4.5 லட்சம் வீடுகள் குடிசைப்பகுதியில் வாழ்வோருக்காக 2012-க்குள் கட்டத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதில் 1.03 லட்சம் வீடுகள் கட்டப்பட்டடுள்ளதாக அந்த செயல்பாட்டு அறிக்கை தெரிவிக்கிறது. காலம் தாழ்த்தப்பட்டால் கட்டுமானச் செலவு அதிகரித்து, உத்தேசித்த இலக்கை அடையமுடியாது என்ரும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

குடிசைவாழ் மக்களுக்கு வீட்டு வசதி என்பது நல்ல விழயம். தேவையான விழயம். பணக்கார மற்றும் உயர் மத்திய தர வகுப்பினர் அவர்களே தங்களது வாட்டு வசதித் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டு விடுகிறார்கள். கீழ் மத்திய தர வகுப்பினருக்கு வீடு கட்டித்தர அரசின் வீட்டு வசதி வாரியங்களுக்கும் கடன் தந்து உதவ வங்கிகளுக்கும் தனியார் நிறுவனங்களும் முன்வருகின்றன. குடிசைவாழ் மக்களின் கதிதான் என்ன?

இந்த பிரச்சனையில் நகர்ப்புற குடிசைப்பகுதியில் வாழ்பவர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே முக்கியத்துவம் கிராமப்புற வளர்ச்சியிலும் விவசாய முன்னேற்றத்திலும் காட்டாமல் போனால் நகர்ப்புறம் நோக்கி நகரும் கிராமவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கும். எத்தனை வீடுகள் கட்டினாலும் தேவை அதிகரிக்குமே தவிர குறையாது.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் அதேநேரத்தில் விவசாயத் தொழிலாளிகளுக்கும் அதிகரித்த கூலியும், விவசாயிகளுக்கு அதிக லாபமும் அடைய வழி காண்பது மட்டுமே உழைப்பின் மரியாதையை உயர வைத்து கிராமப்புற வளர்ச்சியை உறுதிப்படுத்தும். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்க நினைக்கிறார்களே..!.

நன்றி- தினமணி

முகத்தில் முடிகளை நீக்க வேண்டுமா?


சில பெண்களுக்கு முகத்தில் முடிகள் காணப்படும். இவை சிலருக்கு அடர்த்தியாக தெரியும் வகையிலும், சிலருக்கு மெல்லிய இழைகளாகவும் இருக்கும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்த முடிகளின் தன்மையும் மாறுபட்டு காணப்படும்.
முகத்தில் முடிகள் தோன்ற காரணம்:
பெண்களுக்கு முகத்தில் முடிகள் தோன்ற முக்கிய காரணமாக அமைவது ஹார்மோன் சமநிலையின்மை பிரச்னை. பெண்களின் உடலில், பெண்களுக்கான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்களுக்கான ஆண்ட்ரோஜன் ஆகிய இரண்டு ஹார்மோன்களுமே இருக்கும். வயது அதிகரிக்கும் போது, இந்த இரண்டு வகை ஹார்மோன்களின் அளவிலும் மாறுபாடு ஏற்பட்டு, ஹார்மோன் சமநிலையின்மை தோன்றுகிறது. இதனால், சில நேரங்களில், ஆண்களுக்கான ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகளவில் சுரப்பதாலும், சில பெண்களுக்கு முகத்தில் அடர்த்தியான முடிகள் தோன்றுவதுண்டு. சில பெண்களுக்கு பரம்பரை ரீதியாகவும், முகத்தில் அடர்த்தியான முடிகள் உருவாவது உண்டு. இதற்கு சிறந்த தோல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சில மருந்துகளின் பக்கவிளைவுகளாலும், முகத்தில் முடிகள் தோன்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.

முகத்தில் தோன்றும் முடிகளை நீக்க: கருவி கொண்டு நீக்குதல்: முகத்தில் உருவாகும் முடிகளை, “ட்வீசர்’ என்னும் கருவி கொண்டு நீக்கும் முறையில், மிக விரைவாகவும், குறைவான விலையிலும் நீக்கலாம். போதிய வெளிச்சத்தில், முகத்தின் தாடை மற்றும் கன்னப்பகுதிகளில் காணப்படும் முடிகளை, “ட்வீசர்’ மூலம் எடுத்து விடலாம். அதன் பின், அந்த பகுதிகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் திரவத்தால் சுத்தப்படுத்த வேண்டும். ஆனால், இத்தகைய முறையால், அப்பகுதிகளில் எரிச்சல் உ<ண்டாகும் வாய்ப்பு உள்ளது.

ஹேர் ரிமூவிங் கிரீம்: ஏதேனும் பார்ட்டி அல்லது வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய அவசர நேரத்தில், மிக விரைவாக முடிகளை நீக்க, ஹேர் ரிமூவிங் கிரீம்கள் பயன்படுகின்றன. இந்த கிரீம்கள், கைகள், கால்கள் மற்றும் அக்குள் ஆகிய பகுதிகளில் உள்ள முடிகளை நீக்குவதில் சிறப்பான முறையில் செயல்படுகின்றன. இத்தகைய கிரீம்களை பயன்படுத்துவதற்கு முன், அவற்றால் அலர்ஜி ஏதேனும் ஏற்படுமா என்பதை சோதனை செய்து கொள்ள வேண்டும்.
வாக்சிங்: தேவையற்ற முடிகளை நீக்குவதற்காக பயன்படுத்தும் மிகப் பிரபலமான முறை வாக்சிங். ஏனென்றால், இதற்கு மிக குறைவாக செலவாவதுடன், மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு பலன் அளிக்கிறது. வாக்சிங் செய்து முடித்த பின், செய்யப்பட்ட பகுதிகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் திரவம் பயன்படுத்தி சுத்தப்படுத்துவதுடன்,குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வெதுவெதுப்பான நீரால், சருமத்தின் துளைகள் திறந்திருப்பதால், தொற்று ஏற்பட வழிவகுக்கும்.

ப்ளீச்சிங்: முகத்தில் முடிகள் தோன்றும் பிரச்னையை சமாளிக்க ப்ளீச்சிங் செய்து கொள்ளலாம். ப்ளீச்சிங் செய்வதால், முகத்தில் காணப்படும் முடிகள் வெளுத்து, அவை எளிதில் மற்றவர்கள் பார்வைக்கு தெரியாது. ப்ளீச்சிங் சருமத்தை வறண்டு போக வைப்பதால், நல்ல மாய்ச்சரைசர் கிரீமை அப்ளை செய்ய வேண்டும்.
மருத்துவ முறைகள்:
எலக்ட்ரோலிசிஸ்: இந்த முறையில், ஊசியை தோலில் செலுத்தி, குறைந்த அளவிலான மின்சாரத்தை பாய்ச்சி, அதன் மூலம், முடிகளின் வேர் முடிச்சுகள் அழிக்கப்படுகிறது. ஆனால், இச்சிகிச்சை சிறியளவிலேயே பலன் தருவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
லேசர் சிகிச்சை: லேசர் முறையில், முகத்தில் தோன்றும் முடிகளை வலியின்றி நீக்கலாம். இதன் பலன் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். ஒரு தடவை, நூற்றுக்கும் மேற்பட்ட முடிகள் நீக்கப்படும். இச்சிகிச்சைக்கான செலவு அதிகம். இச்சிகிச்சையால் சில விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது

விபூதி மகிமை! (ஆன்மிகம்)

பெண்கள், நெற்றியில் வகிடு ஆரம்பிக்கும் இடத்தில் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்திரீகளின் தலை வகிட்டில், “அம்பாள்’ இருப்பதாக சொல்கின்றனர்.
ஆண்கள், நெற்றியில் விபூதி, திருமண், சந்தனம் இவைகளில் ஒன்றை தரிக்க வேண்டும். “நீரில்லா நெற்றிபாழ்’ என்பது வாக்கு! விபூதி, திருமண் இட்டுக் கொள்வதால், தேஜஸ் உண்டாகும்.
விபூதியாலோ, சந்தனத்தாலோ, நெற்றியில் மூன்று கோடுகள் அகலமாக இட்டுக் கொள்ள வேண்டும். மேல் கோடு சாம வேதம், நடுவில் உள்ளது யஜுர் வேதம், கீழே உள்ளது அதர்வண வேதம் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
முக்தி என்னும் கன்னிகையை வசம் செய்ய, விபூதி ஒரு மருந்து என்றனர். ராஜ சின்னம் அணிந்தவனை எப்படி அரசன், “இவன் நம்மைச் சார்ந்தவன்’ என்று தெரிந்து கொள்கிறானோ, அதே போல, விபூதி அணிந்தவனை சிவனும், திருமண் அணிந்தவனை விஷ்ணுவும், மஞ்சள் பூசி, குங்குமம் அணிந்த பெண்ணை மகாலட்சுமியும் இவர் நம்மைச் சேர்ந்தவர் என்று எண்ணி அனுக்ரகம் செய்கின்றனர்!

விபூதி அணியும்போதும், குங்குமம் அணியும்போதும் அது கீழே சிந்தாமல் இருக்க வேண்டியது முக்கியம். கூர்ம புராணத்தில், “சிவனை, என் பக்தன் நிந்தித்தாலும், சிவபக்தன், என்னை நிந்தித்தாலும் இருவரும் நரகத்தையடைவர்!’ என்று சொல்லியிருக்கிறார் மகாவிஷ்ணு. விபூதியை ஐஸ்வர்யம் என்பர். செல்வத்தை அளிப்பது விபூதி! நம்மை ரட்சிப்பதால், “ரட்சே’ என்ற பெயரும் அதற்கு உண்டு. விபூதியில் உயர்வானது, “அக்னி ஹோத்ரம்’ செய்து கிடைக்கும் விபூதி. இது அக்னிஹோத்ரிகளிடம் கிடைக்கும்.
அவரவர் வீட்டில் சவுபாசனம் செய்த விபூதி, அந்தந்த குடும்பங்களில் உபயோகிக்கலாம். அதற்கடுத்து, பசுஞ் சாணத்தால் வரட்டி தட்டி, பசு மாட்டின் கோமியத்தால், “விரஜா’ ஹோமம் செய்து, வீட்டிலேயே மந்திரத்துடன் தயாரிக்கப்படும் விபூதி உயர்ந்தது.
இது,வேதோத்தமமான மந்திரத்தைச் சொல்ல ஹோமம் செய்யப்பட்டு தயாரிக்கப்படுவதால் ரொம்பவும் விசேஷமானது. எந்த விபூதியானாலும் சரி, நெற்றிக்கு விபூதி இடவேண்டியது முக்கியம்!
சின்ன பையனுக்கு நெற்றியிலே விபூதியிட்டு, குங்குமப் பொட்டு வைத்து, இடுப்பிலே நாலு முழம் பட்டுவேட்டி கட்டி, கழுத்திலே ஒரு உத்திராட்ச மாலைப் போட்டு பார்த்தால், சாட்சாத் முருகன் மாதிரி தெரியும். நீங்களும் நெற்றி, மார்பு, கைகள், புஜம் ஆகிய இடங்களில் பட்டை, பட்டையாக விபூதியணிந்து, ருத்திராட்ச மாலை போட்டு, பஞ்சகச்ச வேஷ்டியுடன் நின்று பாருங்கள்! சாட்சாத், சிவபழம் என்பர்! பரமேஸ்வரன் மகிழ்ச்சியடைவான். முக்திக்கு வழி பிறக்கும்!

முத்தான பத்து தளங்கள்

1.www.quotedb.com   நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெரிய தலைவர்களின் கூற்றுக்களை கோடிட்டுக் காட்ட வேண்டுமா! அப்படி யானால் அதற்கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில் ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன. சிறந்த பேராசிரியராக, மாணவர்களிடத்தில் நற்பெயர் விரும்பும் ஆசிரியர்களுக்கும் இது உகந்த தளம்.
2. www.photonhead.com டிஜிட்டல் கேமரா வாங்கிப் பயன்படுத்தாத வாசகர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக சிறுவர்கள் கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால் முழுமையாக அதன் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால், இல்லை என்றே கூற வேண்டும். டிஜிட்டல் கேமராவின் வசதிகள் என்ன? எதனைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்று விலாவாரியாகத் தரும் தளம் இது. அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள்ளன. சிமுலேட்டர் முறையில் ஒரு கேமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் பழமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. நவீன தொழில் நுட்பம் தான் எனக்கு வேண்டும் என எண்ணுபவர்கள் www.slrgear.com  என்ற தளத்திற்குச் செல்லலாம்.

3. www.downloadsquad.com  சாப்ட்வேர் மற்றும் வெப் புரோகிராம்களில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த தளத்தில் தகவல்கள் அப்டேட் செய்யப்படும். மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதுடன் வேடிக்கையாகவும் சில சமயம் செய்திகளைத் தரும்.

4. www.stopbadware.org  இது பக்கத்துவீட்டு காவல்காரன் போல செயல்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இது போன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக்கிறது.

5.www.techcrunch.com இன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது. குறிப்பாக வெப்2.0 குறித்த அண்மைக் காலத்திய செய்திகள் ஏராளம்.

6.www.gmailtips.com : கூகுள் மெயில் பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன.

7.www.thegreenbutton.com  விண்டோஸ் மீடியா சென்டர் எடிஷன் குறித்த அனைத்து தகவல்களுக்கும் இந்த கிரீன் பட்டன் தளம் உதவிடும். லேட்டஸ் அப்டேட் பைல்களைத் தருவதோடு, டவுண்லோட் செய்திட சில புரோகிராம்களையும் தருகிறது.

8. www.tweakguides.com  உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்த தளம் மூலம் மேம்படுத்தி கம்ப்யூட்டர் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.

9.www.ilounge.com இதனுடைய பெயர் தெரிவிப்பது போல இது ஐ–பாட் மற்றும் ஐ–ட்யூன் ஆகியன குறித்த தகவல்களைத் தரும் தளம். இந்த இரண்டு குறித்து உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எப்படி பயன்படுத்துவது என்ற டுடோரியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளன. இந்த இரண்டைப் பொறுத்தவரை இந்த தளத்தை ஒரு கடல் எனலாம். இதில் ஐ–பாட் 2.2 வழிகாட்டி இபுக்காக உள்ளது. இதில் 202 பக்க தகவல்கள் ஐ – பாட் குறித்து உள்ளன.

10.www.goaskalice.com அமெரிக்க கொலம்பியா பல்கலைக் கழகம் நடத்தும் மெடிக்கல் இணைய தளம். சிலர் கேட்க கூச்சப்படும் கேள்விகளைத் தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல் இங்கு கேள்விகளை இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்.