Daily Archives: ஒக்ரோபர் 18th, 2009

தலையங்கம்: அப்படி என்ன தேவை?

மரபீனி மாற்றுக் கத்தரிக்காயின் வர்த்தக உற்பத்திக்கு மத்திய அரசின் மரபீனி பொறியியல் அங்கீகாரக் குழுமம் (GEAC) அனுமதி அளித்துவிட்டது என்றும், இது குறித்து அரசு இன்னும் முடிவு மேற்கொள்ளவில்லை என்றும் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

அங்கீகாரக் குழுமம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே இதற்கு அனுமதி அளித்துவிட்டது என்பதும், தற்போது அமைச்சர் முன்னிலையில் நடந்த கூட்டம், வெளிப்படையாக அறிவிக்கும் முன்பாக நடந்த ஆய்வுக்கூட்டம் என்பதும் சொல்லப்படாத உண்மை. இந்த அறிவிப்பை மத்திய அரசு ஏப்ரல் மாதமே அறிவிப்பு செய்திருக்கும். ஆனால், கிரீன்பீஸ் அமைப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காய் குறித்து மைக்கோ சமர்பித்த களஆய்வு அறிக்கைகளைப் பெற்று, ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து கருத்து அறிந்தன. அதில் உள்ள குறைபாடுகள் பற்றிப் பேசத் தொடங்கின. அதனால் அரசு இத்தனை மாதங்களாக இந்த அறிவிப்பைத் தள்ளி வைத்து வந்தது.

மைக்கோ சமர்ப்பித்த ஆய்வுக்கூட அறிக்கைகள் முறையாகத் தயாரிக்கப்பட்டவை அல்ல என்பதும், பல முடிவுகள் சாதகமாக காட்டப்பட்டுள்ளன, அறிவியல்பூர்வமானவை அல்ல என்பதும் கிரீன்பீஸ் அமைப்புகளின் வாதங்கள். அவற்றில் அவர்கள் குறை சொல்லும் முக்கியமான மூன்று விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை:

அ) மரபீனி மாறுதல் புகுத்தப்பட்ட இந்தக் கத்தரிக்காய், அதன் புரதத்தில் எத்தகைய மாற்றத்தைப் பெறுகிறது என்பதற்கும், இந்தப் புரதம் மனிதருக்குத் தீமையாக அமையாது; நச்சுத்தன்மை கட்டுக்குள் இருக்கிறது என்பதற்கும் ஆய்வு முடிவுகள் இணைக்கப்படவில்லை.

ஆ) மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காயை உண்போருக்கு இனப்பெருக்கக் கோளாறுகள் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு முடிவுகள் இணைக்கப்படவில்லை.

இ) இந்த ஆய்வு 90 நாள்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. நீண்டகால ஆய்வுகள் இருந்தால்தான், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான காரணியாக மரபீனி கத்தரிக்காய் மாறுகிறதா என்பதை அறிய முடியும்.

கிரீன்பீஸ் அமைப்பினர் சுட்டிக்காட்டிய இந்தக் குறைபாடுகள் குறித்து மறுஆய்வுகள் செய்யப்பட்டனவா இல்லையா என்ற எந்தத் தகவலும் இல்லாமல், மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மட்டுமே அமைச்சர் கூறியிருக்கிறார். அங்கீகாரக் குழுவின் பரிந்துரையை ஏற்று அனுமதிப்பதைத் தவிர அரசு செய்யப்போவது ஏதுமில்லை என்பது மட்டும் நிச்சயம்.

உலக நாடுகளில் உற்பத்தியாகும் கத்தரிக்காயில் 26 சதவீதம் இந்தியாவில் விளைகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. மொத்தம் 4.72 லட்சம் ஹெக்டேரில் 76 லட்சம் டன் கத்தரிக்காய் விளைகிறது. பூச்சிகள் பாதிப்பால் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காயால் இந்திய மக்களுக்கும் இந்திய வணிகத்துக்கும் எந்த வகையிலும் லாபம் இல்லை.

அமெரிக்கா மட்டுமே மரபீனி மாற்றுப் பயிர் நிறுவனங்களை ஆதரிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த மரபீனி மாற்றப்பட்ட உணவுப்பொருள்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உலக வர்த்தக நிறுவனத்தின் (ரபஞ) சட்ட திட்டத்துக்கு எதிரானது. இருந்தாலும்கூட, தைரியமாகத் தடை விதித்துள்ளது. தடையை நீக்க வேண்டும் என்று மான்சான்டோ, மைக்கோ உள்ளிட்ட அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இந்தியாவில் 56 உணவுப் பயிர்களுக்கு மரபீனி மாற்றுப் பயிர் களஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் நெல், சோளம், தக்காளி, உருளை ஆகியனவும் உள்ளன. இதில் முதல் வர்த்தக உற்பத்தி அனுமதியைப் பெறுவது மரபீனி மாற்றுக் கத்தரிக்காய்.

இந்தியாவில் மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காய் சந்தைக்கு வரும்போது, அவற்றின் மீது லேபிள் ஒட்டப்படுமா என்பது குறித்து இன்னும் மத்திய அரசு விளக்கம் சொல்லவில்லை. அத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டாலும், உற்பத்தி அதிகம்; விலை மலிவு என்ற காரணத்தால் நாட்டுக் கத்தரிக்காயுடன் கலந்து விற்கப்படும் ஆபத்து நிறையவே இருக்கிறது.

மரபீனி மாற்றுக் கத்தரிக்காயின் வர்த்தக உற்பத்திக்கு அப்படியென்ன தேவை இருக்கிறது? என்று கேட்டால் அதற்கு கிரீன்பீஸ் அமைப்பினர் சொல்லும் முதல் காரணம், இதன் மூலம் காப்புரிமை என்கிற பெயரில் விதைகளை இந்திய விவசாயி பயன்படுத்தும்போதெல்லாம் இதை அறிமுகப்படுத்திய பன்னாட்டு நிறுவனத்துக்கு “ராயல்டி’ செலுத்தியாக வேண்டும். இரண்டாவதாக, அமெரிக்காவில் மரபீனி மாற்றப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரவேற்பில்லை. அங்குள்ள விவசாயிகளும் அதை விரும்புவதில்லை. ஆகவே அவர்களது தொழில்நுட்பத்தை இந்தியாவில் விற்க முயற்சிக்கிறார்கள்.

உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரில் “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ என்கிற கதையாகிவிட்டது இந்தியாவின் நிலைமை. திட்டமிட்டு விவசாயத்தை அழிக்க முனைந்து செயல்படுகிறார்கள். என்ன அரசோ? என்ன ஆட்சியோ?

நன்றி- தினமணி

சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம்

சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உதவும் வகையில் புதிய இணையதளம் (www.sugarbp.org) சென்னையில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

மியாட் மருத்துவமனை சிறுநீரக மருத்துவ நிபுணர் ராஜன் ரவிச்சந்திரன் நடத்தி வரும்’பாலாஜி மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வி அறக்கட்டளை’ சார்பில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

‘சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவை நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு வழி வகுக்கும். தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத உயர் ரத்த அழுத்த நோய் காரணமாக சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

நாள்பட்ட சிறுநீரக நோய்களைப் பொருத்தவரை, தொடக்கத்தில் அறிகுறிகள் எதுவும் தெரியாது. சிறுநீரக நோய் இருப்பது தெரியவரும் நிலையில், அதிக மருத்துவச் செலவு செய்யக்கூடிய அளவுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது.

எனவே சிறுநீரக நோயின் தொடக்க கால அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தும் வகையில் இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய நோயாளிகளின் தேவையைக் கருத்தில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக நோய்கள் குறித்து பொது மக்கள் முன்கூட்டியே உஷார் அடைந்து, உரிய நேரத்தில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுநீரகச் செயலிழப்பைத் தவிர்க்க முடியும்” என்றார் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன்.

”சிறுநீரக நோய்த் தடுப்புக்கான உடல் நலப் பரிசோதனைகளை அனைவரும் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு ஆகியவற்றைத் தவிர்க்க முடியும்” என்றார் நடிகர் கமல்ஹாசன்.

கௌடி ஆர்த்தரைட்டிஸ் நோய்க்கு பஞ்சகர்மா சிகிச்சை


கௌடி ஆர்த்ரைட்டிஸ் பற்றி 4600 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் அறிந்திருந்தார்கள். 2400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க மருத்துவ மேதை ஹிப்போகிராட்டிஸ் தனது குறிப்புகளில் இந்த நோயைப் பற்றி எழுதியுள்ளார்.

கொஞ்சம் கொஞ்சமாக மனிதனை முடக்கக்கூடிய ஒரு நோய் கௌடி ஆர்த்தரைட்டிஸ். காலின் பெருவிரலை முதலில் பாதித்து படிப்படியாக உடலின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கும். இரவில் அதிக வலி இருக்கும்.

ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாவதால் வருவதுதான் கௌடி ஆர்த்தரைட்டிஸ். இந்த அமிலத்திலுள்ள மோனோ சோடியம் எலும்பு மூட்டுகளில் உள்ள இணைப்புத் தசைகளிலும் திசுக்களிலும் படியும். இதனால் வலி அதிகமாகும்.

இந்த நோயால் மூட்டுகளில் திடீரென எரிச்சலூட்டும் வலி ஏற்படும். சிவப்பு நிற வீக்கங்கள் வரும். இந்த வீக்கங்கள் சூடாக இருக்கும்.. இதனால், மூட்டுகளை அசைப்பது சிரமமாக இருக்கும். இரவில் தூங்கும்போது கால் கட்டை விரலுக்கு மேலே வலி ஏற்படும். இதுவே இந்த நோய்க்கான அறிகுறி. கால் மூட்டு, இடுப்பு போன்ற பெரிய எலும்பு இணைப்புகளில் இந்த நோய் முதலில் தாக்கும். சில நோயாளிகளுக்குக் காய்ச்சல் வரும். பாதிக்கப்பட்ட எலும்பு மூட்டுகளில் ஆடைகள் பட்டால்கூட வலி ஏற்படும்.

எலும்பு இணைப்புகளில் உப்பு படிந்து அதிக வலியை ஏற்படுத்தும். இதே யூரிக் அமிலம் சிறுநீரகத்தில் படிந்து சிறுநீரக கல் ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு. நவீன மருத்துவத்தில் உடலிலுள்ள யூரிக் அமிலத்தைக் குறைப்பதற்கான மருந்துகள் தரப்படுகின்றன.

ஆயுர்வேத சிகிச்சை

கோகிலாட்ஷக கசாயம், குளூஜ்யாதி கசாயம், சதாவராதி கசாயம் ஆகியவற்றை முதலில் கொடுக்க வேண்டும். பிண்ட தைலம், கொட்டஞ் சுக்காதி குழம்பு போன்றவற்றை உடலின் வெளிப்பகுதியில் தடவ வேண்டும். கோகிலாட்சத கசாயம் முதலில் தர வேண்டும். சதாவதியாதி, குளூஜ்யாதி, உலர் திராட்சை ஆகியவற்றை இந்தக் கசாயத்துடன் சேர்த்துத் தரலாம். இதன் பிறகு நெய் கொடுக்க வேண்டும். பின்னர் பேதிக்கு மருந்த தர வேண்டும். இதன் பிறகு எண்ணெய் சிகிச்சையளிக்க வேண்டும்.

உணவு

கௌடி ஆர்த்தரைட்டிஸ் நோயால் தாக்கப்பட்டவர்கள், குறைந்த கொழுப்பு மற்றும் புரதம் இருக்கும் உணவுகளையே சாப்பிட வேண்டும். மாட்டு இறைச்சியையும், கடல் உணவுகளையும் இவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பால் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் நோயைக் கட்டுப்படுத்த முடியும். குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். மது பானங்களைத் தொடவே கூடாது.

சென்னையைச் சேர்ந்த காது,மூக்கு,தொண்டை நிபுணர் ஒருவர் கௌடி ஆர்த்தரைட்டிஸ் நோயால் அவதிப்பட்டார். கோகிலாட்சத கசாயம், வெள்ளைப் பூசணிச் சாறு ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டு வந்த அவருக்கு, ஆறே மாதத்தில் நோய் குணமானது.

-டாக்டர். ஷாஜி ராஜ்

e-mail: shajiraj@punarjanis.com

அதிவேக ஆப்பரா பிரவுசர் வெளியானது

பிரவுசர் போட்டியில் பல்வேறு புதிய வசதிகளுடன் எப்போதும் ஆப்பரா அறிமுகமாகும். இருந்தாலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் பிரவுசர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் மற்றும் பரபரப்பு இதற்குக் கிடைப்பதில்ல. ஆனால், இன்று பிரவுசர்களில் அதிகம் பேசப்படும் பல புதிய வசதிகளை ஆப்பரா தான் முதலில் வடிவமைத்தது என்பது அதன் சிறப்பு. டேப் பயன்பாடு, பக்கங்களுக்கான தம்ப்நெயில் உருவாக்கம், இணைய பக்கங்களில் எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பம் போன்ற புதிய வரைமுறைகள் ஆகியவற்றை ஆப்பரா தான் முதலில் கொண்டு வந்தது. இதே போல் இப்போது வெளியிடப்பட்ட பிரவுசரிலும் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.

ஆப்பரா தனக்கென பல வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து இவர்கள் ஆப்பராவினையே பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வெளியாகியுள்ள ஆப்பரா 10 நிச்சயம் இதன் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாகவே இருக்கும். இதன் சிறப்புகளை இங்கு பட்டியலிடலாம். முதலில் இதன் வேகத்தைக் கூற வேண்டும். இது செயல்படும் தன்மை முதன் முதலில் கூகுள் குரோம் பிரவுசரை இயக்கிய போது ஏற்பட்ட உணர்வைத் தருகிறது. மிக வேகமாக இது இயங்குகிறது. சூப்பர் பாஸ்ட் என்று கூடச் சொல்லலாம். இதற்கு முன்னால் வந்த பதிப்பு 9.6 பதிப்பைக் காட்டிலும் 40% வேகம் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மற்றபடி இன்றைக்கு வருகின்ற பிரவுசர்களில் இருக்கும் புதிய வசதிகள் பல இதிலும் உள்ளன. பாப் அப் பிளாக்கர், ப்ளக் இன் வசதிகள், ஆர்.எஸ்.எஸ். ரீடர், பிஷ்ஷிங் தடுக்கும் வசதி எனப் பல வசதிகள் இதில் கிடைக்கின்றன. மற்ற சில பிரவுசர்களில் இல்லாத இமெயில் கிளையண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதில் பி.ஓ.பி.3 மற்றும் ஐமேப் மெயில் வசதி உள்ளது. இதனால் நீங்கள் உங்கள் பி.ஓ.பி. 3 மெயில்களை இந்த பிரவுசர் மூலமாகவே கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம்.
அனைத்து வசதிகளையும் பயன்படுத்த எளிதான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது இதன் இன்னொரு சிறப்பு.

இதன் டேப்களை அமைக்கும் வசதி சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு டேப்பின் மேலாக அதன் தளக் காட்சியினை ஒரு தம்ப்நெயில் படமாக அமைத்துக் கொள்ளலாம். இது ஒரு புதிய உத்தி ஆகும். இதற்கு முன் கர்சரை அந்த டேப்பின் மேலாகக் கொண்டு செல்கையில் மட்டும் இந்த படம் தெரியும். மேலும் இவை அமைந்துள்ள டேப் பாரின வலது இடதாக இழுத்து அமைத்துக் கொள்ளலாம். இப்போது கிடைக்கும் மிக அகல மானிட்டர் வைத்திருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
அடுத்த சிறப்பு இதன் ஸ்பீட் டயல் வசதியாகும். நீங்கள் அடிக்கடி திறந்து பார்க்க விரும்பும் டேப்பிற்கான தளத்தினை அடுத்துப் பார்க்கும் 4 முதல் 24 தளங்களின் மேலாக, ஒரு தம்ப் நெயில் படமாக வைத்துக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அத்தளத்தைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அப்போது அதனைக் கிளிக் செய்து, தளத்திற்குச் செல்லலாம். இந்த வசதி டிபால்ட்டாகக் கிடைக்கிறது.

இதன் இன்னொரு குறிப்பிடத்தக்க வசதி இதிலுள்ள இன் – லைன் ஸ்பெல் செக்கர் வசதி. இது பிளாக்குகளை அமைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் புதுமையாக ஆப்பரா டர்போ என்ற பேஜ் கம்ப்ரஸ்ஸன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் டயல் அப் வகை இன்டர்நெட் இணைப்பில் கூட, வேகமாக பிரவுசிங் செய்திட முடியும். இணைய இணைப்பின் வேகம் குறையும்போது, இந்த தொழில் நுட்பம் அதனைக் கண்டறிந்து, இணைய தளங்களை ஆப்பராவின் சர்வர்களில் கம்ப்ரைஸ் செய்து பின் தருகிறது. இதனால் டேட்டா குறைவாக இறக்கம் செய்யப்பட்டாலும் நமக்குப் பின்னணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பக்கங்கள் கிடைக்கும். இவை தவிர இணையப் பக்கங்களை வடிவமைப்பவர்களுக்குத் தொழில் ரீதியான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆப்பரா தந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு முக்கியமான வசதி இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இப்போதைய பிரவுசர்கள் தரும் பிரைவேட் பிரவுசிங் வசதி இதில் இல்லை. இந்த வசதி இருந்தால் நாம் பிரவுசிங் செய்த தளங்கள் குறித்த குறிப்புகள் பிரவுசரில் தங்காது. பிரவுசரை மூடியவுடன் நீக்கப்படும். இந்த வசதியை ஆப்பரா பிரவுசர் தரவில்லை. எனவே இந்த வசதி கட்டாயம் வேண்டும் என்பவர்கள் இதன் பக்கம் போக வேண்டாம். வேண்டாதவர்கள் தாராளமாக ஒரு முறை பயன்படுத்திப் பார்த்து, பிடித்திருந்தால் இதனையே வைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு ஆப்பரா பிரவுசர் தேவை என்றால் கீழ்க்காணும் முகவரிக்குச் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம். அனைத்து வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குமான பைல் இங்கு இலவசமாகக் கிடைக்கிறது.
http://www.opera.com /browser/download/

டிப்ஸ் கதம்பம்

எக்ஸெல் துல்லியம்

நாம் ஒரு எண்ணை எழுதுகையில் எப்படி எழுதுகிறோமோ, அதே அளவில் அப்படியே நம் நினைவில் கொள்கிறோம். எடுத்துக் காட்டாக, 2.76 என எழுதினால் இந்த எண் இரண்டு தசம ஸ்தானத்துடன் (டெசிமல் பிளேஸ்)மட்டுமே கொள்கிறோம். ஆனால் எக்ஸெல் நீங்கள் எத்தனை ஸ்தானங்களை எழுதினாலும் அது மொத்தமாக 15 தசம ஸ்தானங்களை உருவாக்கிக் கொள்ளும். அதாவது 2.76 என்பதற்குப் பின்னால் மேலும் 13 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளும். இதனால் தான் சில வேளைகளில் நமக்கு மிகத் துல்லியமாக பல தசமஸ்தானங்களில் விடை கிடைக்கிறது.

வேர்ட் பார்மட்டிங் நீக்கல்
வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட போல்டு, அடிக்கோடு, சாய்வு மற்றும் சில பார்மட்களில் அமைத்திருப்போம். இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால், இதனைத் தேர்வு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம். இதற்குப் பதிலாக இரண்டு ஷார்ட் கட் கீகளைப் பயன் படுத்தலாம். பார்மட்டிங் நீக்கி எளிமையான டெக்ஸ்ட் மட்டுமே தேவைப்படும் சொற்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + ஷிப்ட்+இஸட் (Ctrl+Shft+Z) அழுத்துங்கள். மொத்தமாக பார்மட்டிங் அனைத்தும் நீக்கப்படும். வேர்ட் ResetChar என்ற கட்டளையை இந்த இடத்தில் அமல்படுத்துகிறது. இதனை கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தியும் மேற்கொள்ளலாம். இதே போல ஏதேனும் பாரா பார்மட்டிங் செய்திருந்தால், அந்த பார்மட்டினை நீக்க பாராவினை செலக்ட் செய்து கண்ட்ரோல் + க்யூ (Ctrl+Q) அழுத்துங்கள். டெக்ஸ்ட் ஒன்றுக்கு சாதாரண நார்மல் ஸ்டைல் இருந்தால் போதும் என்று எண்ணினால், உடனே அதனைத் தேர்ந் தெடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+என் (Ctrl+Shft+ N) அழுத்தவும்.

வேர்டில் டூல்பார் ஐகானில் படம், டெக்ஸ்ட் மாற்ற
வேர்டில் மெனு பார் பல டூல் பார்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை நம் விருப்பப்படி அமைத்திடும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மையினை வேர்ட் அளித்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, டூல்பாரில் உள்ள படத்தை மாற்றி அமைக்கலாம். அதில் உள்ள சொற்கள் வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம்.

இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
1.வேர்ட் தொகுப்பை இயக்கியபின், ஸ்கிரீனில் தெரியும் டூல்பாரில், மாற்ற விரும்பும் டூல் பாரில் அல்லது டூல் ஜகானில் ரைட்கிளிக் செய்திடவும். வேர்ட் உடனே ஒரு கான்டெக்ஸ்ட் மெனு (Context Menu) ஒன்றை அளிக்கும்.
2.இந்த மெனுவில் கீழாக உள்ள Customize  என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் வேர்ட் கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் Toolbars என்ற டேப் செலக்ட் செய்யப்பட்டிருக்கும்.
3. இனி மீண்டும் வேர்ட் மெனு பார் சென்று மாற்ற விரும்பிய டூல்பார் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். இவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
4. இப்போது வேறு வகையான காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். இதில் Change Button Image என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் வேர்ட் நீங்கள் தேர்ந்தெடுக்க பல கிராபிக் இமேஜ்களைக் காட்டும்.
5. எந்த கிராபிக் இமேஜைத் தற்போதுள்ள படத்திற்குப் பதிலாகப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக் கவும்.
6.இனி அதில் உள்ள டெக்ஸ்ட் உங்களுக்கு வேண்டாம் என்றால் தொடர்ந்து கீழே தரப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றவும். இல்லை என்றால் 9ல் தரப்பட்டுள்ள செயலுக்குச் செல்லவும்.
7.மீண்டும் மாற்ற விரும்பும் டூல்பார் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். Context Menu  கிடைக்கும்.
8. Context Menu  வில் Default Style என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி டூல்பார் பட்டனில் இமேஜ் மட்டும் இருக்கும்.
9.Customize  டயலாக் பாக்ஸிலிருந்து வெளியேற குளோஸ் பட்டனை அழுத்தவும். இனி நீங்கள் மேற்கொண்ட மாற்றங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டிருப் பதனைக் காணலாம்.

அனைத்து பைல்களையும் குளோஸ் செய்திட
எக்ஸெல் தொகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களைத் திறந்து பயன்படுத்திய பின்னர், எக்ஸெல் விட்டு வெளியேறாமல் அனைத்து பைல்களையும் குளோஸ் செய்திட விரும்பினால், ஷிப்ட் கீ அழுத்தியவாறு பைல் மெனு கிளிக் செய்திடவும். இவ்வாறு கிளிக் செய்திடுகையில் சாதாரணமாக ஒரு பைலைக் கிளிக் செய்திட கிடைக்கும் குளோஸ் கட்டளை குளோஸ் ஆல் எனத் தெரிவதனைக் காணலாம். அதே போல சேவ் கட்டளை சேவ் ஆல் என்று கிடைப்பதைக் காணலாம். அனைத்தையும் மொத்தமாக சேவ் செய்துவிட்டு மொத்தமாக மூடிவிடலாம்.

எக்ஸெல் – மற்றவர்கள் மாற்றாமல் இருக்க
எக்ஸெல் தொகுப்பில், நீங்கள் தயாரிக்கும் ஒர்க் புக்கினை நீங்கள் மட்டுமே பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் எண்ணலாம்; கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்ற யூசர்கள் அதில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடாது என்று எண்ணினால், அதனை அவ்வாறே செட் செய்திடலாம்.

Tools  மெனுவில் Share Workbook என்பதனைத் தேர்ந்தெடுத்தால் எக்ஸெல் ஷேர் ஒர்க்புக் டயலாக் பாக்ஸைக் காட்டும். அதில் Allow Changes என்ற வரிக்கு முன் உள்ள பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

வேர்ட்–பார்மட் மட்டும் பேஸ்ட்
குறிப்பிட்ட சில சொற்களை டாகுமெண்ட் முழுவதும் நீங்கள் விரும்பும் பார்மட்டில் மாற்ற விரும்புகிறீர்கள். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட் ஒன்றில் நிறுவனங்கள் பெயர் தொடர்ந்து வருகின்றன. இவை அனைத்தையும் குறிப்பிட்ட பாண்ட் வகையில் அடிக்கோடுடன் அமைக்க விரும்புகிறீர்கள். இதனை ஒரு நிறுவனத்தின் பெயரில் மாற்றி அமைக்கவும். பின்னர் இதனை அப்படியே காப்பி செய்தால் இதே நிறுவனத்தின் பெயர் அப்படியே பார்மட்டிங் சேர்ந்து காப்பி ஆகி அடுத்த இடத்தில் உள்ள நிறுவனத்தின் பெயருக்குப் பதிலாக பேஸ்ட் செய்திடுகையில் உட்கார்ந்துவிடும். அதற்குப் பதிலாக நாம் விரும்புவது பார்மட்டிங் மட்டும் அந்த புதிய இடத்தில் உள்ள நிறுவனப் பெயருக்கு அப்ளை ஆக வேண்டும். இப்படியே அனைத்து நிறுவனங்களின் பெயருக்கு அப்ளை ஆக வேண்டும். இதற்கான ஷார்ட் கட் கீகளைப் பார்க்கலாம்.
1.முதலில் என்ன வகையில் பார்மட்டிங் செய்திட வேண்டுமோ அதனை மேற்கொள்ளவும். முதல் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்து அதில் பார்மட்டிங் வேலைகளை மேற்கொள்ளவும். எடுத்துக் காட்டாக இவற்றை இன்னொரு பாண்ட்டில், போல்ட் மற்றும் சாய்வாக அமைக்கலாம். 2.அமைத்த பின்னர் அதனைத் தேர்ந்தெடுத்து பின் கண்ட்ரோல் + ஷிப்ட்+சி (Ctrl+Shift+C) அழுத்தவும். இப்போது பார்மட்டிங் சமாச்சாரங்கள் மட்டும் காப்பி செய்யப்படும்.
3. பின் இந்த பார்மட்டிங், எந்த சொற்களில் வேறு இடத்தில் அமைய வேண்டுமோ, அந்த சொற்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த பின்னர் கண்ட்ரோல் + ஷிப்ட்+வி (Ctrl+Shft+V)  அழுத்தவும். அந்த சொற்கள் மாற்றப்படாமல் பார்மட்டிங் மட்டும் அதில் ஏற்றப்படும். இப்படியே டாகுமெண்ட் முழுவதும் மாற்ற வேண்டிய அனைத்து சொற்களையும் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+வி அழுத்தி பார்மட்டிங் மாற்றலாம்.

வேர்ட் – பாராவினை நகர்த்தி அமைக்க
பெரிய டாகுமெண்ட் ஒன்றைத் தயார் செய்கிறீர்கள். அதன் பின் சில பாராவை அதன் இடத்திலிருந்து நகர்த்தி இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். இதற்கு பாராவை செலக்ட் செய்து இழுக்க வேண்டாம்; காப்பி அல்லது கட் செய்து பேஸ்ட் செய்திட வேண்டாம். எந்த பாராவினை மாற்ற வேண்டுமோ அதில் ஊடாகக் கர்சரைக் கொண்டு நிறுத்தி ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்திக் கொண்டு நீங்கள் விரும்பும் திசை நோக்கிய ஆரோ கீகளை அழுத்தவும். பாரா அப்படியே நகர்ந்து சென்று நிற்கும். எந்த சூழ்நிலையிலும் பழைய படி இருக்க வேண்டும் என எண்ணினாலும் அப்படியே கொண்டு வரலாம். அல்லது கண்ட்ரோல் + இஸட் பயன்படுத்தலாம்.

வேர்டில் தேதியும் கிழமையும்
வேர்ட் டாகுமெண்ட்டில் தேதியும் கிழமையும் அமைக்கவும், அவை தாமாக அவ்வப்போது அப்டேட் செய்திடவும் இத்தொகுப்பில் வழி உள்ளது. இதற்கு தேதியையும் கிழமையினையும் டைப் செய்திடத் தேவையில்லை. டாகுமெண்ட்டைத் திறந்து எங்கு தேதி மற்றும் கிழமை அமைய வேண்டுமோ, அங்கு கர்சரை நிறுத்தவும். பின்னர் மெனு பார் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Date and Time” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது “Date and Time”   டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் தேதியும் கிழமையும் எந்த பார்மட்டில் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் 16 வகைகள் தரப்பட்டிருக்கும். சில பார்மட்டுகளில் நேரமும் அமைக்கப்படும் வகையில் தரப்பட்டிருக்கும். இதில் நீங்கள் விரும்பும் பார்மட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் பார்க்கும் போது என்ன தேதி, கிழமை மற்றும் நேரம் உங்கள் கம்ப்யூட்டர் படி உள்ளதோ, அவை பார்மட் தேர்வில் காட்டப்படும்.
இதில் இன்னொரு அருமையான வசதியும் உள்ளது. நீங்கள் உங்கள் டாகுமெண்ட்டில் அமைக்கப்படும் தேதி தானாக அப்டேட் செய்யப்பட வேண்டும் என எண்ணினால் கீழாக “Update automatically”  என்று இருக்கும். இதில் டிக் அடையாளத்தினை அமைத்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறலாம். பின் அந்த டாகுமெண்ட்டில் தேதியும் கிழமையும், நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் நேரமும் அமையும்.

இரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் அதிக பயனுள்ள செயல்பாட்டினை லேப் டாப் கம்ப்யூட்டர் தருவதாகப் பலர் கருதுகின்றனர். இதற்குக் காரணம் எங்கும் எடுத்துச் சென்று இதனைப் பயன்படுத்த முடிவதே. இருப்பினும் மற்ற வழிகளில் லேப்டாப், டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் குறைவான செயல்பாட்டுக்கே வழி அமைக்கிறது.

லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை இன்னும் கூடுதலாக முழுமையாக்கும் வகையில், இரு மானிட்டர்கள் இணைந்த லேப் டாப் ஒன்று இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. ஸ்பேஸ்புக் என அழைக்கப்பட இருக்கும் இந்த லேப் டாப் வடிவத்தினை ஜிஸ்கிரீன் (gscreen) என்னும் அலாஸ்கா தொழில் நுட்ப நிறுவனம் தந்துள்ளது. இதில் 15.4 அங்குல அளவிலான இரு ஸ்கிரீன்கள் இருக்கும். இதனால் பல வேலைகளை ஒரே நேரத்தில், ஒரு கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு மேற்கொள்ள முடியும். இதன் மூலம் கம்ப்யூட்டரின் திறனை முழுமையாகப் பயன்படுத்த முடியும். 13, 16 மற்றும் 17 அங்குல அகலத்தில் ஸ்கிரீன் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களையும், இந்நிறுவனம் வெளியிடத் திட்டமிடுகிறது.

தேவைப்படும்போது இரண்டாவது ஸ்கிரீன் ஸ்லைடிங் போன் போல வெளியே இழுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும். தேவையில்லாத போது மடக்கி வைக்கப்பட்டு ஒரு திரையுடன் இது பயன்படும். இந்த இரு திரை லேப் டாப் கம்ப்யூட்டர், இன்டெல் கோர் 2 டுயோ சிப், 4 ஜிபி ராம், 320 ஜிபி திறன் கொண்ட 7200 ஆர்.பி.எம். ஹார்ட் டிஸ்க், டிவிடி டிரைவ் மற்றும் பல வழக்கமானவற்றுடன் அமைக்கப்படுகிறது. வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் இது அமேசான் இணைய தளம் வழியாக வெளியிடப்படலாம். விலை இன்னும் முடிவாகவில்லை என்றாலும் ஜிஸ்கிரீன் நிறுவனம் இதனை 3,000 டாலருக்குள் இருக்கும்படி அமைக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளது.

சேவலும், மயிலும் காவல்! (ஆன்மிகம்)


அக்., 18, கந்தசஷ்டி ஆரம்பம்!

முருகப்பெருமானை, “சேவலும் மயிலும் காவல்’ என்று சொல்லி, பக்தர்கள் வணங்குகின்றனர். இதற்கு காரணம் தெரியுமா? பக்தி, அன்பை வளர்ப்பதாக இருக்க வேண்டும்; அதாவது, நமக்கு இவ்வுலகில் எதிரிகளே இருக்கக்கூடாது; எதிரிகள் இருந்தாலும் கூட, அவர்களிடமும் கருணை காட்டி, இன்னா செய்தாரையும் வெட்கப்படச் செய்ய வேண்டும் என்பதையே கந்தசஷ்டி விரதம் உணர்த்துகிறது. தான் பெற்ற வரத்தால், தேவர்களுக்கு தொல்லை செய்து வந்தான் சூரபத்மன் என்ற அசுரன். தேவர் தலைவன் இந்திரனின் மகன் ஜெயந்தனைக் கடத்தி சிறைவைத்தான். அவனை மீட்கவும், தேவர்களைப் பாதுகாக்கவும் அனைவரும் சிவனைச் சரணடைந்தனர். அவர், தன் நெற்றிக்கண்ணில் இருந்து உருவாக்கிய குழந்தையே முருகப்பெருமான்.
திருச்செந்தூரில் ஜெயந்தன் சிறை வைக்கப்பட்டிருந்ததை அறிந்த முருகன், அங்கு சென்று சூரபத்மனுடன் போரிட்டார். யுத்தம் பல நாட்களாக தொடர்ந்தது. யாருக்கும் வெற்றி, தோல்வியற்ற நிலை.

மேலும், தன்னை ஒரு மாமரமாக உருமாற்றி, கடற்கரையில் நின்றான் சூரபத்மன். அப்போது, தன் தாய் பார்வதியிடம் இருந்து வாங்கிச் சென்ற வேலை அந்த மரத்தின் மீது எய்தார் முருகன். மரம் இரண்டு கூறானது; ஆனால், மீண்டும் இணைந்து கொண்டது.
எனவே, மரத்துண்டுகளை இடம் மாற்றிப்போட்டார் அந்த ஞானப்பண்டிதன்; மரம் ஒட்டவில்லை. சூரனின் மரணம் நிச்சயமானது. ஆனாலும், சூரனைக் கொல்ல அவர் விரும்பவில்லை; அறியாமல் பிழை செய்த அவனை ஆட்கொள்ளவே விரும்பினார். எதிரியாக இருந்தாலும் அவனை திருத்த வேண்டுமென்பதே அவரது நோக்கம்.
தன் உடலில் வேல் பட்டதும், தான் செய்வது தவறு என்ற ஞானம் சூரபத்மனுக்கும் பிறந்தது. உலகில், கடவுளே உயர்ந்தவர் என்பதைப் புரிந்து கொண்டான். முருகப்பெருமானின் பாதங்களைப் பணிந்தான். இரண்டு கூறாகி நின்ற சூரனின் ஒரு பகுதியை மயிலாகவும், ஒரு பகுதியை சேவலாகவும் மாற்றினார். சேவலைத் தன் கொடியில் பொருத்திக் கொண்டார்; மயிலைத் தன் வாகனமாக்கிக் கொண்டார்.
சேவல், விடியலை அறிவிப்பது. முருகப்பெருமானை வணங்குபவர்களின் துன்பங்களுக்கு, அவரது கொடி தரிசனம் விடியலைத் தரும். சூரன் என்பவன் ஆணவத்தின் சின்னம். மயிலை வாகனமாக்கி, அதில் அமர்ந்ததன் மூலம், நம் மனதில் தோன்றும், “தான்’ என்னும் ஆணவ உணர்வை அடக்க வேண்டும் என்பது மனித சமுதாயத்துக்கு உணர்த்தப்படுகிறது.

கந்தசஷ்டி விரதம், ஆறுநாட்கள் அனுஷ்டிக்கப்பட வேண்டும். எந்த முருகன் கோவி லிலும் தங்கி இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம் என்றாலும்,
திருச்செந்தூர் முக்கியத் தலமாக கருதப்படுகிறது.
இந்த நாட்களில் பால், பழம் நீங்கலாக, எதுவும் சாப்பிடக்கூடாது என்பது விதி. குறிப்பாக, குழந்தை யில்லா பெண்கள் இவ்விரதம் மேற்கொண்டால், அவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. விரதநாட்களில் கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
ஆறாம் நாளான சூரசம்ஹாரத்தன்று மாலையில் சம்ஹார நிகழ்ச்சி முடிந்ததும், நீராடிவிட்டு, தயிர் சேர்த்த பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்பும், சாத்வீகமும் மனதில் பெருக கந்தசஷ்டி விரதத்தை அனுஷ்டியுங்கள்.

தலையங்கம்: ‘நோபல்’ சிந்தனைகள்!

உலகின் தலைசிறந்த விருது என்று கருதப்படும் நோபல் பரிசு இந்த ஆண்டு ஓர் இந்தியருக்கும், அதிலும் குறிப்பாக, தமிழருக்குக் கிடைத்திருக்கிறது என்பது நமக்குப் பெருமை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பற்றிய ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.

யார் இந்த ஆல்பிரட் நோபல்? சுவீடன் நாட்டுக்காரரான ஆல்பிரட் நோபல் அமெரிக்காவில் குடியேறுகிறார். 1862-ம் ஆண்டு நைட்ரோ கிளிசரினில் தனது ரசாயன ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் மூலம் “டைனமைட்’ வெடிமருந்தை 1867-ல் கண்டுபிடித்து 40 வயதில் உலக மகா கோடீஸ்வரராகிறார். இத்தாலியில் உள்ள தனது வீட்டில் 1896-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி ஆல்பிரட் நோபல் ஓர் உயில் எழுதி வைத்துவிட்டு மரணமடைகிறார்.

அந்த உயிலின் அடிப்படையில் நோபல் விருது உருவாக்கப்பட்டு 1901 முதல் வழங்கப்படுகிறது. உலக அழிவுக்குப் பிள்ளையார் சுழி போடும் டைனமைட் என்கிற வெடிமருந்தைக் கண்டுபிடித்த குற்ற உணர்வுதான் ஆல்பிரட் நோபலை இப்படி ஒரு விருது வழங்கத் தூண்டியது என்று கூடக் கூறுவார்கள். அதெல்லாம் இருக்கட்டும். இந்த ஆண்டு நோபல் விருதைப் பற்றிய விவாதத்துக்கு வருவோம்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருப்பது அவரையே வியப்பில் ஆழ்த்தி இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? ஒபாமா ஒரு மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர். தேர்ந்த அரசியல்வாதி. அவரது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் பாராட்டுக்குரியவை. அமெரிக்க சரித்திரத்திலும், உலக வரலாற்றிலும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளையர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது முக்கியமான திருப்புமுனை, சந்தேகமே இல்லை.

ஆனால், நோபல் விருது என்பது, குறிப்பாக உலக சமாதானத்துக்கான நோபல் விருது என்பது மேலே குறிப்பிட்ட சாதனைகளுக்காகத் தரப்படுவதல்ல. மார்டின் லூதர் கிங் ஜூனியருக்கு நிகரான இனவெறிக்கு எதிரான போராட்டம் எதையும் ஒபாமா தலைமையேற்று நடத்தினாரா என்றால் கிடையாது. சரி, முதலாவது உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகளின் இணையம் ஏற்படுத்தி உலக ஒற்றுமைக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு நிகரான பங்களிப்பு எதுவும் ஒபாமா செய்திருக்கிறாரா என்றால் இல்லை. அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மனித உரிமைக்காக ஜிம்மி கார்ட்டர் உலகம் முழுவதும் சுற்றி வந்து பாடுபட்டதுபோல, ஒபாமாவுக்கு நோபல் பரிசு பெறத் தகுதி இருக்கிறதா என்றால் அப்படி எதையும் குறிப்பிட முடியவில்லை.

இப்போதும், இராக்கும், ஆப்கானிஸ்தானமும் அமெரிக்காவின் மறைமுகக் கட்டுப்பாட்டில், அமெரிக்கப் படைகளின் கண்காணிப்பில்தான் இருக்கின்றன. அமெரிக்காவால் பேச முடிகிறதே தவிர, பாலஸ்தீனப் பிரச்னையில் சுமுகமான முடிவு எதையும் கொண்டுவர முடிந்திருக்கிறதா என்றால் கிடையாது. இப்போதும் உலகிலேயே மிக அதிகமான அணு ஆயுதக் குவியல் அமெரிக்காவிடம்தான் இருக்கிறது. அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதும், தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை மெல்ல மெல்ல அழிப்பதும் தனது குறிக்கோள் என்று அதிபர் ஒபாமா கூறியிருப்பதை அவரது ஆதரவாளர்களும், அமெரிக்க நிர்வாகமும் ஆதரிக்குமா என்பதும் சந்தேகம்தான்.

இப்படியொரு சூழ்நிலையில், என்ன அடிப்படையில் அதிபர் ஒபாமாவுக்கு உலக சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருக்கிறது? அவரை உலக சமாதானத்துக்காகப் பாடுபட ஊக்குவிப்பதற்காக இந்த விருது என்று சொன்னால் அதைவிடக் கேலிக்கூத்து எதுவும் இருக்க முடியாது. ஊக்கமளிப்பதற்காக விருது வழங்குவார்களா என்ன? ஒபாமாவின் பத்து மாத சாதனை என்ன என்று கேட்டால், எதுவுமே செய்யாததற்காக நோபல் விருது பெற்றதாகத்தான் இருக்கும்.

அடுத்தபடியாக, நம்ம ஊர் “வெங்கி’ என்று செல்லமாக அழைக்கப்படும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு விஞ்ஞானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருப்பதற்கு வருவோம். சிதம்பரம்தான் பூர்வீகம் என்றாலும், குஜராத் மாநிலம் வதோதராவும், பிறகு அமெரிக்க யேல் பல்கலைக்கழகமும்தான் அவரது விருதுக்குப் பின்னணியில் இருந்தவை என்பதுதான் உண்மை.

பௌதீகம் படித்த ராமகிருஷ்ணனுக்கு உயிரியலில் நாட்டம் வந்தது. தனது படிப்பை மாற்றிக் கொண்டு, இப்போது மூலக்கூறு இயலுக்காக, ரசாயனத்துக்கான நோபல் விருதை தாமஸ் ஸ்டீட்ஸ் மற்றும் யெடா யோனத் இருவருடனும் ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொள்கிறார்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், ராமகிருஷ்ணன் கணினி அறிவியலோ, பொறியியல் படிப்போ படிக்கவில்லை. அடிப்படை விஞ்ஞானமான பௌதீகம் படித்திருக்கிறார். இதற்கு முன் நோபல் விருது பெற்ற இன்னொரு இந்தியரான அமார்த்ய சென் பொருளாதாரம் படித்தவர். கலை (பி.ஏ.) மற்றும் அறிவியல் (பி.எஸ்ஸி) என்று சொன்னாலே முகம் சுளித்து, லட்சக்கணக்கில் நன்கொடை வழங்கிப் பொறியியல் படிக்கப் பைத்தியமாய் அலையும் இளைஞர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். என்ன படிக்கிறோம் என்பதைவிட, எப்படிப் படிக்கிறோம் என்பதையும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சாதனையாளராக உயர முடியும் என்பதையும் ராமகிருஷ்ணனுக்குக் கிடைத்திருக்கும் நோபல் விருது நமக்கு உணர்த்துகிறது.

ராமகிருஷ்ணன் அமெரிக்கா போகாமல் இந்தியாவில் இருந்திருந்தால் இந்த உலக சாதனையைப் படைத்திருக்க முடியுமா? நமது நிர்வாக அமைப்பு அதற்கு உதவி இருக்குமா? இளங்கலை பௌதீகம் படித்த ஒருவர் மேற்படிப்பில் உயிரியலுக்கு மாறுவதற்கும், ரசாயனத்தில் ஆராய்ச்சி செய்வதற்கும் நமது அமைப்பு அனுமதி அளிக்குமா? திறமை என்பது தண்ணீரைப் போலத் தனது பாதையையும், தளத்தையும் நிர்ணயித்துக் கொண்டுவிடும் என்பதும், தடைகள் அதற்கு ஒரு பொருட்டல்ல என்பதும் ராமகிருஷ்ணனால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். இப்போதும் இந்தியர்களுடனும், இந்தியப் பல்கலைக்கழகங்களுடனும் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது நோபல் விருது அவருக்குக் கிடைத்ததைவிட மகிழ்ச்சியை அளிக்கிறது!

நன்றி- தினமணி

கங்கையின் மடியில்…. (கட்டுரை)டில்லிக்கு சுற்றுலா வரும் அனைவருக்குமே அவசரம். ஏதாவது ஒரு டிராவல்ஸ் பஸ்சில் இரவு 9 மணிக்கு ஏறி, ஹரித்துவார், ரிஷிகேஷில் கங்கையில் குளித்து, மறுநாள் இரவு 10 மணிக்கு டில்லி திரும்பி விடுகின்றனர்.
“ஒரு மணி நேரம் தான் உங்கள் டைம். அதற்குள் திரும்பி விட வேண்டும்; இல்லையென்றால், பஸ் கிளம்பி விடும்!’ என்று கட்டளையிடுவார் டிரைவர். இரண்டாயிரம் மைல் கடந்து வந்தவர்கள், புனித நதி கங்கையில் அமைதியாக குளிக்கக் கூட முடியாது; கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே தான் குளிக்க வேண்டும்.
கங்கையில் நீராடுவது, தினந்தோறும் நடப்பது அல்ல; எனவே, கங்கையில் அமைதியாக நீராடி, சில மணி நேரங்களை கழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதோ ஒரு வழி…
ரிஷிகேஷில் உள்ள தயானந்த சுவாமி ஆசிரமம், அதற்கான வழியை ஏற்படுத்தி தந்துள்ளது. கங்கை கரையில் அமைந்துள்ள இந்த ஆசிரமம், அனைத்து வசதிகளையும் செய்து தருகிறது.

தங்குவதற்கு அருமையாக, காற்றோட்டமுள்ள 125 அறைகள், அனைத்திலும் வெந்நீர் வசதி, துவைக்கும் துணிகளை உலர்த்த வசதியும் உண்டு. ஒரு மாத காலம் தங்குபவர்கள், சமையல் செய்து கொள்ள சமையல் அறையும் உண்டு. இவை அனைத்தும் இலவசம். ஆனால், இங்கே தங்குபவர்களிடம் பணம் வாங்குவதில்லை; அவர்களாக விரும்பி கொடுக்கும், “டொனேஷன்’ மட்டுமே வாங்கப்படுகிறது.
ஆசிரமத்தில் உள்ள, பூச்செடி, மரங்களும் மனதை குளிர வைக்கின்றன. உள்ளே கங்காதீசுவரர் கோவிலும் உண்டு. காலை 5 மணிக்கு கங்காதீசுவரருக்கு அபிஷேகம் உண்டு. கோவிலைத் தாண்டினால், கங்கை பிரவாகமாக ஓடுகிறது. அபிஷேகம் நடைபெறும் போது, மந்திரத்துடன் கங்கையின், “சோ’வென்ற சப்தமும் மந்திரமாக ஓலிக்கிறது.
ஆசிரமத்தின் கடைசியில் கோவில் உள்ளது. அங்கே நின்று, கங்கையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்; நேரம் போவதே தெரியாது. இக்காட்சியை உட்கார்ந்து ரசிக்கவும், வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கங்கை, அதையடுத்து பெரிதாக நிற்கும் பச்சைப் பசேலென்று தெரியும் மலை. இயற்கை அன்னையை ரசித்து, கங்கையின் மடியில் அமர்ந்து இளைப்பாற, இந்த ஆசிரமம் சிறந்த இடம். பவுர்ணமி நிலவு ஒளியில் கங்கை இன்னும் பிரகாசமாக இருப்பதை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ஆசிரமத்திற்குள் சுவாமி தயானந்த சுவாமி மற்றும் அவரது சீடர்களின் புத்தகங்கள் மற்றும் சொற்பொழிவுகள் அடங்கிய, “சிடி’க்கள் கிடைக்கின்றன; லைப்ரரியும் உள்ளது.
காலையில் யோகா பயிற்சி செய்ய, ஒரு தனி ஹாலும் உள்ளது. பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இங்கே வருகின்றனர். இந்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு என்று, பல மொழிகள் இங்கே ஒலிக்கின்றன.
இங்கு அறைகளை, “புக்’ செய்வது மிகவும் சுலபம். www.dayananda.org என்ற வெப் சைட்டில், “விசிட் ஆசிரமம்’ என்று, “க்ளிக்’ செய்தால் வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள், “புக்’ செய்த அன்று மாலையே உங்களுக்கு, “இ-மெயிலில்’ பதில் வந்து விடும். ரயில் மற்றும் பஸ் நிலையத்திலிருந்து ஆசிரமத்திற்கு வருவதற்கு வண்டிகளும் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன.
ஆசிரமத்தில் எல்லாமே நேரப்படி தான்; நேரம் தவறினால், சாப்பாடு கிடைக்காது. காலை 5 மணிக்கு காபி – டீ, 7.30க்கு டிபன், மதியம் 12 மணிக்கு சாப்பாடு, இரவு 7.30க்கு சாப்பாடு. எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வருகின்றனரோ, அதற்கேற்ப சாப்பாடு தயாராகிறது. வட மாநிலத்தவர் அதிகம் என்றால், சப்பாத்தி, தால், காய்கறி சாதம்; நம்ம ஊர் என்றால் சாம்பார் உண்டு. இரவு சாப்பாட்டை முடித்து, ஆசிரமத்தின் கோவிலுக்கு அருகில் உள்ள பெஞ்சில் அமர்ந்து, “ஓ’வென்ற சப்தத்துடன் ஓடும் கங்கையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
கிராமங்களில் படிக்க வாய்ப்பில்லாத குழந்தைகளுக்காக, “எய்ம்’ என்ற பொது நலத் தொண்டு நிறுவனத்தையும் ஆசிரமம் நடத்துகிறது. ஐந்து மாநிலங்களில், “சாத்ராலயா’ என்றழைக்கப்படும் 17 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதில், 18 ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக படிப்பு, தங்க இடம், சாப்பாடு என அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. தமிழகத்தில் மஞ்சக்குடி என்ற கிராமத்தில் ஒரு பள்ளி உள்ளது.

நீங்கள் முக்தி பெற வேண்டுமா? (ஆன்மிகம்)


மனிதர்களாகப் பிறந்தவர்களின் ஆசை, முக்தி பெற வேண்டும் என்பதுதான்; ஆனால், இந்த முக்தி ஒரு சிலருக்கு தான் கிடைக்கிறது. சில ஷேத்திரங்கள், முக்தி ஸ்தலம் என்று சொல்லப்பட்டுள்ளது. கமலையில் (திருவாரூரில்) பிறந்தால், முக்தி; சிதம்பரத்தை (நடராஜரை) தரிசித்தால், முக்தி; திருவண்ணாமலையை (அண்ணா மலையை) நினைத்தாலே முக்தி; காசியில் இறந்தால், முக்தி என்றெல்லாம் கூறுகின்றனர்.

இதில், கமலையில் பிறப்பது இவன் கையில் இல்லை; அது, அவன் தாயாரின் விருப்பத்தைப் பொறுத்தது. அடுத்து, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. எத்தனையோ தடவை சிதம்பரம் வழியாகப் போவர்; ஆனால், இறங்கி, நடராஜ தரிசனம் செய்ய நேரமிராது. அடுத்தது, ரொம்ப சுலபம். அண்ணாமலையை நினைத்தாலே போதும், முக்தி கிடைக்குமாம். எவ்வளவோ வேலைகள், தொல்லைகள். அருணாசலத்தை, அது தான், திருவண்ணாமலை யாரை நினைக்க நேரமிராது. அடுத்தது, காசியில் மரிப்பவருக்கு முக்தி; ஆனால், அது எல்லாருக்கும் கிடைத்து விடாது. காசியில் மரிக்க வேண்டிய புண்ணியம் உள்ளவர்களை அழைத்து வரவும், புண்ணியமில்லாதவர்களை வரவிடாமல் தடுத்தும், அப்படி, யாராவது தங்கியிருந்தாலும், அவர்களை வெளியூருக்குக் கிளப்பி விடவும் தனித்தனியாக பூத கணங்களை அங்கே பகவான் வைத்திருப்பாராம்.

புண்ணியமில்லாதவன், காசிக்குப் போகிறேன் என்று, எத்தனை தடவை புறப்பட்டாலும் போக முடியாது; அதே போல், புண்ணியமில்லாதவன் அங்கிருந்தாலும் கடைசி காலத்தில் அங்கே மரிக்க முடியாது. புண்ணியமுள்ளவன் அங்கே இருந்தால் அது பாக்கியம் அல்லது வேறு எங்கேயாவது இருந்தாலும் மரண காலத்தில் அவன் அங்கே வந்து சேர்ந்து விடுவான். இது ஈ, எறும்பு முதல் எல்லா ஜீவன்களுக்கும் பொருந்தும். காசியிலுள்ள அனைத்து ஜீவன்களுக்கும் முக்தி!
காசி செல்ல ஏற்பாடு செய்கிறாள் ஒரு பாட்டியம்மா. எத்தனையோ சாமான்களை சேகரம் செய்து வைத்துக் கொள்கிறாள். கூடவே, ஒரு டின் நிறைய முறுக்கு எடுத்துக் கொள்கிறாள். காசியில் போய் டின்னைத் திறந்து பார்க்கிறாள். அதற்குள்ளே கட்டெறும்பு ஒன்று முழிச்சு, முழிச்சு பார்க்கிறது. “அட, சீ… கட்டெறும்பு, வந்துடுத்தே!’ என்று சொல்லி, எறும்பை எடுத்து கீழே தரையில் போட்டு காலால் மர்த்தனம் செய்கிறாள்.
கட்டெறும்பு புண்ணியம் செய்திருந்தது. டிக்கட் கூட வாங்காமல், சாப்பாட்டு செலவும் இல்லாமல் காசியில் மரணம்; முக்தி! இது எல்லாருக்கும் கிடைத்துவிடாது.
அங்கே யாராவது மரணமடைந்தால், அழமாட்டார்கள்; காசி விசுவநாதன் அழைத்துக் கொண்டு விட்டான் என்பர்.

இறந்தவனுடைய அஸ்தியில் (எலும்புத் துண்டு) ஒன்றையாவது கங்கையில் போட வேண்டுமாம். இறந்தவனுக்கு புண்ணியலோக வாசம் கிடைக்கும். நாம் பாரதத்தில் எத்தனையோ ஷேத்திரங்கள், புண்ணிய நதிகள். என மனிதன் நற்கதி பெற பல மார்க்கங்கள் உள்ளன. இவைகளிலும் நம் கவனம் செல்ல வேண்டும்.