Daily Archives: ஒக்ரோபர் 23rd, 2009

அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை


முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும்.சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்…

பொதுவான ஆலோசனைகள் :

தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.

தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.

லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.

தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.

இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.

உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வாஷ் அல்லது தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.

உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் :

முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.

லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்..                                       லிப்ஸ்டிக் போடும் போது  லிப்ஸ்டிக்களின் நிறத்திற்கு ஏற்றதாக லிப் லைனரின் நிறம் இருக்க வேண்டும். இல்லையென்றால் உதட்டின் அழகு கெட்டுவிடும். அதற்காக ஒவ்வொரு லிப்ஸ்டிக் வாங்கும் போதும் அதற்கேற்ற லிப்லைனர் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. லிப்ஸ்டிக்கின் நிறத்தைச் சார்ந்த நிறமாக இருந்தாலும் போதுமானது.

சிவப்ப நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு சிவப்பு நிற லிப்லைனரும், பிரவுன் நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு பிரவுன் லிப்லைனரும் உபயோகிக்கலாம்.

தேவைப்பட்டால் லிப் லைனரைக் கூட லிப்ஸ்டிக்காக பயன்படுத்தலாம்.

மாய்ஸ்சுரைசர் இல்லாத லிப்லைனரை லிப்ஸ்டிக்காக பயன்படுத்தினால், மறக்காமல் சிறிதளவு க்ரீம் தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும்.

வெற்றிக்கு வழி அமைதி

மகிழ்ச்சியும், நிம்மதியுமே வாழ்க்கையின் லட்சியம். நாம் செய்யும் எல்லா செயல்களும் இதை நோக்கியே அமைந்திருக்கின்றன. இந்த இரு பண்புகளுக்கும் அமைதியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனெனில் நீங்கள் அமைதியை இழந்தால் இவை இரண்டுமே உங்களைவிட்டு தூரத்துக்கு சென்று விடும்.

உங்கள் அனுபவத்தில் இது நிகழ்ந்திருக்கலாம். பிறர் உங்களை காரணமின்றி திட்டுவதாகவும், குறை கூறுவதாகவும் உங்களுக்கு தோன்றி இருக்கலாம். அது உண்மையாகவோ அல்லது மாறாகவோ இருக்கலாம். எப்படி இருந்தாலும் சிக்கலான காலக்கட்டத்தில் அமைதியுடன் இருந்து பொறுமையாக சமாளியுங்கள். அப்போது அமைதியின் சக்தியை நீங்கள் உணருவீர்கள். பிறகு அதன் பலனை அனுபவிப்பீர்கள்.

ஆனால் எல்லா நேரத்திலும் அப்படி இருக்க முடியுமா? பேச வேண்டிய தருணத்தில் பேசாமல் இருப்பதுதான் மிகப்பெரிய பலவீனம். தமிழில் ஒரு பழமொழி உண்டு. `கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு’ என்பது அந்தப் பழமொழி. இதில் வரும் கொக்குபோல காத்திருப்பது அமைதிக்கு எடுத்துக்காட்டு அல்ல. அறிவீனத்தின் வெளிப்பாடு.

அமைதியை இழப்பதே கோபம். துன்பத்தின் ஆரம்பம். பலவீனமானவர்களுக்கே சீக்கிரம் கோபம் வரும் என்பது உண்மைதான். உங்கள் கருத்தை சாந்தமாகவே வெளியிடுங்கள். அப்படியும் மற்றவர், உங்களின் மீது கோபத்தை கொட்டுவதையே குறியாக இருக்கிறார் என்பதை உணர்ந்தால் அங்கே நீங்கள் கண்டிப்பாக அமைதியாகத்தான் இருக்க வேண்டும்.

எங்கே சரியான புரிதல் இருக்கிறதோ, அங்கே கோபம் குறைந்துவிடும். அமைதி சூழ்ந்து கொள்ளும். அமைதி கலையும் இடத்தை நன்றாக கவனித்துப் பாருங்கள். அங்கே எதிரெதிர் கருத்துக்கள் தோன்றியதாலேயே ஆட்சேபணை உருவாகி கோபம் கொப்பளிக்கும். அமைதி கெடும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் கருத்து சரியாகவே இருந்தாலும் அதை வலியுறுத்த வேறு தருணத்தை எதிர்பார்த்து நீங்கள் அமைதி காப்பதே அறிவுடைமை. “அறிவற்றம் காக்கும் கருவி” என்பார் தமிழ்ப்புலவன் வள்ளுவர்.

உங்களுக்கு கோபமூட்டும் தருணங்களில் நீங்கள் சரியான புரிதலோடு அமைதி அடைவீர்களானால், அந்த அறிவுடைமையானது உங்களது நெருங்கிய சுற்றத்தாரான மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நிலைத்திருக்க வைக்கும் என்று இங்கு பொருள் கொள்ளலாம்.

எனவே எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். எந்த நிலைமையிலும் அடக்கமாக இருங்கள். அனைவரிடமும் அன்பு செலுத்தவும், அன்பைப் பெறவும் கற்றுக் கொள்ளுங்கள். பிறர் உங்களை குறை கூறும்போது மவுனமாக இருங்கள். அவர்கள் மீது எந்த விதமான பகைமை உணர்ச்சியும் கொள்ளாதீர்கள். வெளிப்படையாக கோபத்தை காட்டுவதைவிட இது மிகவும் மோசமானது. இது ஒரு மானசீகப் புற்றுநோய் எனலாம்.

மறப்போம், மன்னிப்போம். இது வெறும் லட்சியவாத மொழி அல்ல. கோழைச் செயலுமல்ல. உங்கள் அமைதியைப் பாதுகாக்கும் ஒரு வழிதான். அந்த வீண் பழிச்சொற்கள் பொய்யானவை என்பதை நீங்களே அறிவீர்கள். பிறகு ஏன் அதையே மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டும்? குழப்பிக் கொண்டால் உங்களுக்குத் தூக்கம் கெடும். படபடப்பு அதிகரிக்கும். நிம்மதி பறிபோகும். மகிழ்ச்சி மறைந்துவிடும். அமைதி காக்க கற்றுக் கொண்டால் அடக்கத்திலும், தூய்மையிலும் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள்.

வாழ்வில் உங்களை தடுமாற வைக்கும் இத்தகைய சம்பவங்கள் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம். அப்போது உங்களுக்கு விருப்பமான செயலில் மனதை லயிக்கச் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதியும், திருப்தியும் கிடைக்கும்.

எந்த செல்வத்தை காட்டிலும் மன அமைதியே பெரிது. அதை நீங்கள் உணர்ந்தால் அமைதியை கெடுக்கும் கோபத்தை கைவிடுங்கள். இக்கட்டான நிலையில் சரியான புரிதலுடன் அமைதி காத்திடுங்கள். சாதகமான நேரத்தில் உங்களின் கருத்தை வெளியிடுங்கள். அமைதியின் சக்தியை உணருங்கள். உறுதி பலமடங்கு கூடும். எளிதில் வெற்றி காண்பீர்கள்.

கவரிங் நகைகள் வாங்கும் போது

நாம் எவ்வளவு தான் தங்க நகை வைத்திருந்தாலும் விதவிதமான கவரிங் நகைக்கு பல நூறுகள் செலவு செய்து வாங்கத்தான் செய்கிறோம்.

ஆடைக்கு ஏற்ற நிறங்களில் கற்கள் வைத்தும், எனாமல் எனப்படும் நிறச் சேர்ப்பு செய்தும் இவை வருவதால் பெண்களிடையே இதுபோன்ற நகைகளுக்கு அதிக மவுசு உண்டு.

அப்படி வாங்கிய கவரிங் நகை சில நாட்களில் கறுக்கத் தொடங்கிவிடும். இதனை வாங்கிய கடையில் கொடுக்கவும் முடியாது, நாம் அணிந்து கொள்ளவும் முடியாது. இப்படி வீணாகிப் போவதைத் தடுக்க ஒரு நல்ல திட்டம் உள்ளது.

புதிதாக கவரிங் நகை வாங்கியவுடன் அதன் மீது நெயில் கலர் நெயில் பாலிஷ் ஒரு கோட்டிங் கொடுக்கவும். அதாவது நிறமில்லாத நெயில்பாலிஷ் வாங்கி அதனை உங்கள் நகை மீது தடவி வைக்கவும்.

இப்படி செய்வதால் நகை தண்ணீரில் பட்டு வெளுத்துப் போவது தவிர்க்கப்படும். எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும். பொதுவாக தங்க நகைகளை விட கவரிங் நகைகளை பத்திரமாக பாதுகாத்தால் அதிக நாட்களுக்கு வைத்திருந்து அணிந்து கொள்ளலாம்.

கவரிங் நகைகளை தங்க நகையுடன் போடாவேக் கூடாது. இது தங்க நகையையும் சேர்த்து பாழாக்கிவிடும். கவரிங் நகையும் கெட்டுப் போகும்.

கவரிங் நகைகளை அணிந்து விட்டு எடுத்து வைக்கும் பொழுது அதனை நன்றாக மெல்லிய காட்டான் துணிவைத்து துடைத்து பாக்ஸில் வைக்கவும்.இப்படி செய்வதால் கவரிங் நகையில் ஊறி இருக்கும் உங்கள் வியர்வை அகற்றப்படும். நகை கருக்காமல் இருக்கும்.

எக்ஸெல்: டிப்ஸ்

எக்ஸெல் விநோதம்

நீங்கள் எப்படியோ தெரியாது; ஆனால் நான் எக்ஸெல் ஒர்க்புக்கில் டேட்டாவினை வேகமாக என்டர் செய்திட முயற்சிப்பேன். வேகமாக டேட்டாவினை தொடர்ந்து என்டர் செய்வேன். ஒரு படுக்கை வரிசை அல்லது நெட்டுவரிசை முடிந்த பின்னர் அடுத்த வரிசைக்குச் செல்வேன். எடுத்துக் காட்டாக, என் வாடிக்கையாளர்களின் முகவரி மற்றும் சில டேட்டாவினை அமைக்க வேண்டும். A,B,C என மூன்று நெட்டு வரிசைகளில் டேட்டாவினை அமைக்கிறோம். அடுத்ததாக படுக்கை வரிசை 2லிருந்து 15 வரை டேட்டாவினை என்டர் செய்திட வேண்டும்.
படுக்கை வரிசையில் அனைத்தும் என்டர் செய்த பின், என்டர் செய்வதனை நிறுத்தி, மீண்டும் நெட்டு வரிசை அ செல்ல வேண்டும். டேட்டா என்டர் – நிறுத்தம் – அடுத்த ரோ – டேட்டா என்டர் – நிறுத்தம் .. எனச் செல்ல வேண்டும். இது சற்று ஏமாற்றமாகவும் எரிச்சலாகவும் உள்ளதா?
இதற்கு ஒரு தீர்வினை அண்மையில் கண்டறிந்தேன்.
முதலில் எந்த செல்களில் எல்லாம் டேட்டா என்டர் செய்திட வேண்டுமோ, அந்த செல்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கவும். இப்போது A Column முதல் C Column வரை Row 1  முதல் 15 வரை நான் பயன்படுத்தப் போகிறேன். எனவே செலக்ஷனை A2 முதல் தொடங்குகிறேன். இப்போது அனைத்து செல்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நான் டேட்டா என்டர் செய்கிறேன். இங்கு ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்குச் செல்ல என்டர் அல்லது டேப் பயன்படுத்துகிறேன். இங்கு ஆரோ கீ பயன்படுத்தக் கூடாது. அது செல் செலக்ஷனை காலி செய்துவிடும். இப்போது டேட்டா என்டர் ஆகிக் கொண்டு இருக்கும். டேட்டா, டேப், டேட்டா, டேப் அல்லது என்டர், டேட்டா –– அடுத்து ஆஹா! இதோ கர்சர் அடுத்த நெட்டுவரிசை அல்லது படுக்கை வரிசையின் முதல் செல்லுக்குத் தானாகவே வந்துவிடுகிறது. இப்படியே போனால் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களில் இறுதி செல்லுக்குப் போன பின் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள். ஆம்! நீங்கள் நினைப்பது சரிதான். மீண்டும் தொடக்கத்தில் உள்ள முதல் செல்லுக்குக் கர்சர் செல்லும். அதாவது நாம் தேர்ந்தெடுத்த செல்கள் மட்டுமே ஒர்க் ஷீட்டின் மொத்த செல்கள் என எடுத்துக் கொள்ளப்பட்டு கர்சர் அதற்குள்ளாக மட்டும் மூவ் ஆகிறது.
நேரத்தை மணி, நிமிடக் கணக்கில் சொல்கையில் நாம் அனலாக் முறையில் தான் சொல்கிறோம். டிஜிட்டல் முறையில் சொல்வதில்லை. எடுத்துக் காட்டாக, பிற்பகல் 12 மணி 30 நிமிடம் என்பதை நாம் 12:30 என்கிறோம். இது அனலாக். இதனையே டிஜிட்டல் ஆகச் சொல்வது என்றால் 12.5 என்று சொல்ல வேண்டும். நாம் மணி என்ன என்று கேட்டால் மிகத் தெளிவாக பன்னிரண்டரை என்று சொல்வதில்லையா, அது போல.
எக்ஸெல் தொகுப்பில் இது போல அனலாக் அளவில் இருக்கும் நேரக் கணக்கினை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு சில பார்முலாக்கள் உள்ளன. நீங்கள் சோதித்துப் பார்த்துப் பயன்படுத்தலாம்.

முதல் பார்முலா : =(A4INT(A4))*24

இதில் A4  என்பது அனலாக் அளவில் நேரத்தைக் கொண்டுள்ள செல். அந்த செல்லில் 12:35 என நேரத்தைக் கொடுத்து இந்த பார்முலாபடி மாற்றிப் பாருங்கள். விடை 12.58 எனக் கிடைக்கும்.
இன்னொரு பார்முலா: =(HOUR(A1)*60+MINUTE (A1))/60

இதில் A1 என்பது அனலாக் அளவில் நேரத்தைக் கொண்டுள்ள செல்.

எக்ஸெல் வரிசைகளை இடைச் செருக:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டுகளில் அடிக்கடி வேலை பார்ப்பவர்கள் இந்த பிரச்சினையைச் சந்தித்திருக்கலாம். சரியாக நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளை அமைத்து உங்கள் டேட்டாவினை அமைத்திருப்பீர்கள். அப்போது மேலும் ஒன்று அல்லது இரண்டு நெட்டு அல்லது படுக்கை வரிசையினைச் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
உடனே என்ன செய்கிறீர்கள்? இடைச் செருக வேண்டிய இடத்தில் உள்ள வரிசையில் ஏதேனும் ஒரு செல்லை தேர்ந்தெடுக்கிறீர்கள். பின் இன்ஸெர்ட் மெனு சென்று அங்கே ரோ அல்லது காலம் செலக்ட் செய்து கிளிக் செய்து அவற்றைப் பெறுகிறீர்கள். இந்த வேலை எல்லாம் இல்லாமலே நீங்கள் வேறுஒரு எளிய கீ போர்டு வழியில் செயல்படலாம்.
முதலாவதாக, எந்த வரிசைக்கு மேலாக அல்லது நெட்டுவாக்கில் இடைச் செருக வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று வழக்கம்போல அந்த வரிசையினைத் தேர்ந்தெடுங்கள். இவ்வாறு தேர்ந்தெடுப்பதற்கும் நீங்கள் மவுஸ் துணையின்றி செயல்படலாம். அந்த வரிசையில் ஏதேனும் ஒரு செல்லில் கர்சரைக் கொண்டு சென்று வைத்து கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தினால் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும். ஷிப்ட்+ ஸ்பேஸ் பார் அழுத்தினால் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்பினால் ஷிப்ட் கீயையும் ஆரோ கீயையும் சேர்த்து அழுத்தலாம்.
இனி இன்ஸெர்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம். மேலே கூறிய முறையில் செலக்ட் செய்த பின்னர், கண்ட்ரோல் ++ அழுத்தவும். அதாவது கண்ட்ரோல் கீ மற்றும் + கீயையும் சேர்த்து அழுத்தவும். இந்த + அடையாள கீ எழுத்துக்களின் மேலாக உள்ளதாகவோ, அல்லது கீ பேடில் உள்ளதாகவோ இருக்கலாம். இவ்வாறு அழுத்தும் போது உங்கள் கண் முன்னாலேயே திரையில் தோன்றும் ஒர்க் ஷீட்டில் வரிசைகள் இணைக்கப்படுவதனைக் காணலாம்.
சரி, இவற்றை நீக்க வேண்டுமானால் என்ன செய்திடலாம்.மீண்டும் முன்பு தேர்ந்தெடுத்தது போல எந்த வரிசை அருகே உள்ள வரிசைகளை நீக்க வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் கண்ட்ரோல் கீயுடன் மைனஸ் (–) கீயை அழுத்தவும். வரிசைகள் மறையும். எதிர்பாராத வகையில் நீங்கள் நீக்க நினைக்கும் வரிசைக்குப் பதிலாக வேறு வரிசை நீக்கப்பட்டால், கண்ட்ரோல் + இஸட் அழுத்திச் செய்ததை மீட்டுப் பின் தவறு எங்கு உள்ளது என்று பார்த்து, கர்சரை அதன்படி வைத்து கட்டளை கொடுக்கவும்.

டேட்டா வரிசைப்படுத்தல்:
டேட்டாக்களை அமைத்து, நாம் விரும்பும் வகையில், தீர்வுகளைப் பெறும் வகையில் அவற்றை இயக்கவே நாம் எக்ஸெல் தொகுப்பினைப் பயன் படுத்துகிறோம். டேட்டாவினை நாம் எதிர்பார்க்கும் வரிசையில் அமைப்பதுவும் அத்தகைய முயற்சி களில் ஒன்றாகும். பெரிய மதிப்பிலிருந்து சிறிய மதிப்பிற்குப் படிப்படியாக, வரிசைக் கிரமத்தில் அமைக்கவும், அதே போல எதிர் திசையில் சிறிய மதிப்பிலிருந்து பெரிய மதிப்பிற்கு அமைக்கவும் எக்ஸெல் தொகுப்பிலேயே வழி தரப்பட்டுள்ளது. அதே போல சொற்கள் அல்லது பெயர்களையும் நாம் வரிசைப்படுத்தலாம். அகர வரிசையில் அமைக் கலாம். இதனை எப்படிக் கையாள்வது என்று இங்கு பார்க்கலாம்.
முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த வேண்டும் எனச் சொல்ல வேண்டும். இதனை மேற்கொள்ள முதலில் டேட்டா இருக்கும் செல்லினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரே ஒரு செல்லை மட்டும் வரிசைப்படுத்துவதாக இருந்தால் Sort Ascending  அல்லது Sort Descending பட்டனைத் தேர்ந்தெடுக் கவும். எந்த செல்லைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அந்த செல் அந்த பீல்டின் காலத்தில் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இந்த இரு பட்டன்களும் Standard  டூல்பாரில் உள்ளன.

ஒரே வகை டேட்டா இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வகை டேட்டாவினை (எடுத்துக்காட்டாக பெயர் மற்றும் பிறந்த தேதி) வரிசைப்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் எக்ஸெல் தொகுப்பிற்கு வேறு வகையில் இதனைத் தெரியப்படுத்த வேண்டும். எந்த பீல்டுகளை வரிசைப்படுத்த வேண்டும் எனவும் எந்த வகையில் அவற்றை அடுக்க வேண்டும் எனவும் கூற வேண்டும். இதற்கு முதலில் Data  மெனு செல்லவும். அதில் Sort  என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இந்த Sort விண்டோவில் மூன்று வகையில் பிரிப்பதற்கு, அவற்றில் எதற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு என வழிகள் தரப்பட்டிருக்கும். ஒவ்வொன்றையும் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் நீங்கள் விரும்பும் டேட்டா செல்லுக்கான பெயரைத் தேர்ந்தெடுத்து முன்னுரிமைக்கேற்றபடி அமைக்கவும். அவை ஒவ்வொன்றிலும் கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் (உயர்ந்த மதிப்பு/குறைந்த மதிப்பு) அமைக்க ascending அல்லது descending தேர்ந்தெடுக்கவும். வகைப்படுத்த வேண்டிய டேட்டா செல்களுக்கு நீங்கள் தலைப்பு வரிசையாக ஹெடர் வரிசை (“Header row”)  ஒன்று இடையே கொடுத்திருந்தால் அதனைக் குறிப்பிட வேண்டும். இதற்கு கீழாக வசதி தரப்பட்டிருக்கும். இதனை நீங்கள் செலக்ட் செய்யாவிட்டால் எக்ஸெல் ஹெடரிலுள்ள சொல்லையும் எடுத்துக் கொண்டு பிரித்து அதற்கென ஒரு இடம் கொடுத்துப்பிரிக்கும். அல்லது ஹெடர் வரிசை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் “No header row”  என்பதனைத் தேர்ந் தெடுக்க வேண்டும். அனைத்தும் முடிந்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது உங்கள் டேட்டா தொகுப்பு நீங்கள் விரும்பியபடி வகைப்படுத்தப்பட்டு அழகாகக் கிடைக்கும். மீண்டும் வேறு ஒரு செல்லில் உள்ள டேட்டாவினையும் சேர்த்து வகைப்படுத்திடத் திட்டமிட்டால் அதனை மாற்றித் தேர்ந்தெடுத்து வகைப்படுத்தலாம்.

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் என்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் இரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும்.

எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாகக் கிள்ளி விட வேண்டும்.

எண்ணெய் மசாஜ் புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அது அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரவும் வழி செய்கிறது.

தினசரி குளிப்பதற்கு முன்பாகப் புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்து விட்டு, ஊறியதும் குளிக்கலாம். இதுவும் புருவங்கள் அழகாக உதவும்.

புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் கூடும்.

பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் சிலரது பழக்கம். அவசரத்திற்கு அவர்கள் அப்படிச் செய்வதுண்டு. இந்த முறை மிகமிக ஆபத்தானது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது ரொம்பவும் திக்காக கன்னாபின்னாவென வளரும்.

புருவங்கள் நரைத்திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம். மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக் காய வைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐ ப்ரோ பென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது அழகாக, இயற்கையாக இருக்கும்.

கண்களுக்கு அடிக்கடி ஐ பேட் உபயோகிக்கலாம். கண்கள் குளிர்ச்சியாவதுடன், புருவங்களின் சீரான வளர்ச்சிக்கும் உதவும்.

புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி, யிலாங் யிலாங் மாதிரியான அரோமா எண்ணெய்கள்மிகச் சிறந்தவை. அவற்றை சூடு படுத்தாமல் அப்படியே மசாஜ் செய்ய உபயோகிக்கலாம்.

கண்களை அலங்கரியுங்கள் கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்துவிட்டாலே போதும் பாதி அழகு வந்துவிடும். எனவே உங்களைச் சொல்லும் கண்களை அழகாக அலங்கரித்துக்கொள்ளுங்கள். சிலருக்கு ஐ லைனர் போட தெரியாது.
ஆனால் தெரியாது என்று விட்டுவிட வேண்டாம். வீ–ட்டில் இருக்கும் போது போட்டு முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

நாளடைவில் நீங்களே பெரிய ஐ லைனர் கலைஞராக மாறி நண்பிகளுக்கு போட்டிவிட்டு சபாஷ் பெறுவீர்கள்.
சரி கண்களை எப்படி அலங்கரிப்பது என்று பார்ப்போம்:

உங்கள் கண்கள் பெரிய இமைகளை கொண்டிருப்பின் …

கண் இமைகள் சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவும்.

பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தை கொண்டு முடியுங்கள் .

கண்ணின் முனைப்பகுதியில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.

சிறிய கண்களைக் கொண்டவர்கள்..

நன்கு அழுத்தமான ஐ ஷேடோவை கொண்டு இமைகளின் மேற்பரப்புகளில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள்.

இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள் .

சிறிக கண்களும் தற்போது எடுப்பதாகத் தோன்றும் ….

கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும்.

இது உங்கள் கண்களை அழகாக்கும்.

கூந்தலை எப்படி வார வேண்டும்-?

கூந்தலை கலைய விடக்கூடாது, கூந்தலை வாரிவிடும் போது உயரத்துக்கேற்றபடி வாரிவிட்டுக் கொள்ள வேண்டும். சில பெண்களுக்கு இயற்கையாகவே மிக நீளமாக இருக்கும். ஆனாலும் இவர்கள் கூந்தலின் நுனிகளை நன்றாகப் பின்னிவிட வேண்டும். இல்லாவிட்டால் கூந்தல் பிளந்துவிடும்.கூந்தலின் நிறம் பழுப்பு நிறமாக மாறிவிடும்! கூந்தல் கருமை நிறத்தை இழந்து பழுப்பு நிறமாக மாறிவிட்டால் அழகை இழந்து விடும். பழுப்பு நிறமாகி விட்ட கூந்தலின் அடியில் உள்ள உயிர் அணுக்கள் பாதிக்கப்பட்டன என்று பொருள்! குள்ளமாக இருக்கும் பெண்கள் சற்று எடுப்பாக இருக்க தலையை வாராமல் கலைத்து விட்டுக்கொண்டு உயரமாக காட்சி அளிக்கிறார்கள்.

தலை படியாமல் இருக்க இவர்கள் எண்ணெய் தடுவுவதே இல்லை.அடிக்கடி ஷாம்பூவைப் போட்டு தலையைச் சுத்தம் செய்து கூந்தலை படியவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இது தவறு. குள்ளமாக பெண்கள் இலேசாக தலை வாரி உச்சியில் சற்று தூக்கினாற்போல் கொண்டை போட்டுக்கொண்டால் எடுப்பாக இருப்பார்கள்.

கூந்தல் பராமரிப்பு
1. வாரம் ஒரு முறை ஹாட் ஆயில் மசாஜ் செய்து கூந்தலை ஷாம்பூ போட்டு அலசவும். 2. ஹேர் டிரையரை கூந்தலின் வேர்கால்களில் படும்படி உபயோகிக்க கூடாது. வரண்ட கூந்தலுக்கு ஹேர் டிரையரை பயன்படுத்தவே கூடாது.
3. தலைக்கு பயன்படுத்தும் சீப்பு, ப்ரஷ், டவல், ஹேர்பேண்ட் ஆகியவற்றை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.
4. முடி குறைவாக இருந்தால் 1 டீஸ்பூன் விட்டமின் ‘இ’ எண்ணெயை முதல் நாள் இரவில் தலைமுடியில் தடவி அடுத்த நாள் அலசுங்கள்.
5. எலுமிச்சம் சாற்றை ,முட்டையை,அகத்திக்கீரையை அல்லது பொன்னாங்கண்ணி கீரையை (அரைத்து) தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
6. வெந்தயப்பொடியை எண்ணெயில் சிறிதளவு விட்டு குழைத்து தலையில் தடவி ஊறவைத்துக் குளிக்கலாம்.
7. தேன், வெள்ளரிக்காய், ஆப்பிள், அன்னாச்சிப்பழம் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். முடி வளர புரோட்டீன்சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவது அவசியம்.

குளிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1. காலை, மாலை இருவேலைகளும் குளிக்க ஏற்ற நேரங்கள். இடைப்பட்ட நேரங்கள் குளிப்பது நல்லதல்ல.
2. உணவு உண்ட பின்னரும், நன்றாக வியர்த்திருக்கும் போதும் குளிக்கக்கூடாது.
3. அஜீரணக்கோளாறு, கண் நோய், காய்ச்சல் ஆகிவற்றால் அவதிப்படும் நேரங்களில் குளிக்கக்கூடாது.
4. எண்ணெய் தேய்த்து விட்டு சிறிதுநேரம் கழித்து பின்னர் குளிப்பது உடலுக்கு நல்லது. இவ்வாறு குளிப்பதுதான் உடல்நலத்தைத் தரும்.
5. வாசனைப்பொடி, கடலைமாவு போன்றவற்றைத் தேய்த்து கழுவினால் அழுக்கும், எண்ணெய் பசையும் அகன்று போகும்.
6. சோப்பு உபயோகிக்கும்போது கழுத்து, கழுத்தின் பின்புறம், காது, கால்களின் இடுக்குப்பகுதிகள் போன்ற அழுக்கு படியக்கூடிய பகுதிகள் சோப்பை ஒருமுறைக்கு இருமுறை அழுத்தி தேய்த்து குளிக்க வேண்டும்.
7. சோப்பை அதிகமாக பயன்படுத்துவது உடலின் மேற்புறதோலுக்கு நல்லதல்ல. தோலில் இருக்கும் எண்ணெய்த்தன்மை மாறி வறண்டுவிடும்.
8. குளிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாற்றை பிழிந்து குளிக்கலாம். இது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.