உடைந்த இதயம் மரணத்தின் இருப்பிடம்

தனது ரத்த உறவினருக்கு சோக நிகழ்வு ஏற்பட்டால், எனது இதயம் வெடித்து விட்டதே என்பர். உதாரணம்: கணவன் மரணச் செய்தி கேட்டவுடன் அல்லது சில மணி நேரங்களில், சில தினங்களில் மனைவியும் திடீர் மரணமடைவது நாம் பார்க்கும் நிகழ்ச்சிகள் தான். இதற்கு காரணம் உடைந்த உள்ளம், துக்கச் செய்தி கேட்டவுடன் துயரம் அடையும் போது, மனதில் அழுத்தம் ஏற்பட்டு, நமது உடலிலுள்ள சிம்பத்தடிக் சிஸ்டம், ஊர்திகளிலுள்ள வேகத்தைத் தூண்டுவது போல, அதில் உள்ள “கேட்டகால் அமைன்’ வேதியியல் பொருள் சுரந்து, உடலின் செயல்பாட்டை மாற்றும். உலக இதய மையம் இதுபோன்று துக்கத்தில் இருப்பவர்களை ஆய்வு செய்தது. இதன் ஆய்வு முடிவு இதோ

துக்கத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக இதயக் கோளாறு ஏற்பட்டு திடீர் மரணத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்வு இளம் வயதிலிருந்து முதியோர் வரை ஏற்படலாம். நன்றாக எந்தவித கோளாறுமில்லாதவர் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, அதிக கெட்ட கொழுப்புள்ளவர்கள், பை – பாஸ், ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென் சிகிச்சைப் பெற்றவர்கள், மிகவும் கவனமாக துக்க நிகழ்வுகளை அனுசரிக்க வேண்டும். முதியோர்கள் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆணும், பெண்ணும் சரி துக்கத்தை கேட்டவுடனே கவனமாக இருக்க வேண்டும்.

உண்மை சம்பவம்
எனது 30 ஆண்டு நண்பர் சம்பத்; அவரது மனைவி லீலா. இருவரும் ஐகோர்ட் வக்கீல்கள்; இதய நோயாளிகள். மனைவி இறந்தவுடன் சம்பத் என்னிடம் “என் மனைவி காலை எழுந்து காலை கடன் கழிக்கச் சென்றவர் மரணமடைந்துவிட்டார்; எனது இதயம் போய்விட்டது’ என்று கூறினார். “இதுபோலவே, ஈ.வெ.ரா., தனது முதல் மனைவி நாகம்மை இறந்தவுடன்,”எனது இதயம், எனது உயிர், என் சொத்து சுகம் எல்லாம் போய்விட்டது. நான் இதயமில்லாதவன்’ என்று, துக்கத்தை வெளிப்படுத்தி கதறி அழுததாக வரலாறு.
சில ஆண்டுகளுக்கு முன், எனது டாக்டர் நண்பர் சேலத்தில் உள்ளவர், இறந்த செய்தி கேட்டு துக்கம் விசாரிக்கச் சென்றபோது, அவர் மனைவி திடீர் மரணமடைந்தார். டாக்டரது மனைவி மரணத்தின் துக்கத்தை விசாரித்து வந்தேன். இப்படி பல சம்பவங்கள் உண்டு.

என்ன நடக்கிறது?
நெருங்கிய உறவினர் மரணம் அடைந்தவுடன் இவர்கள் அளவில்லாத துயரத்தோடு அழுது கொண்டு இருப்பர். இந்த நேரத்தில், உடலில் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இதயத் துடிப்பு அதிகமாகிறது. ரத்தத்தில் உறையும் தன்மை அதிகமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.. இதனால் மாரடைப்பு அதிகமாக வருகிறது.
இது இளம் வயதினருக்கும் வரும், வயதானவர்களுக்கும் வரும். இது எப்படி? துக்கப்படும் போது ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது. அதே நேரம், ரத்தத்தின் அடர்த்தி தன்மை அதிகமாகிறது. இதனால், ரத்தம் உறைந்து, கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு மரணம் வரும். இது, சர்க்கரை ரத்தக் கொதிப்பு, முன்பே பை – பாஸ், ஸ்டென்ட் சிகிச்சை செய்தவர்களுக்கு மிகவும் எளிதாக வரும்.

துக்கம் ஆட்கொள்ளும் போது
ரத்தக் கொதிப்பு அதிகமாகி ரத்தத்தின் திரவத் தன்மை குறைந்து. சீக்கிரம் உறைந்து கரோனரி ரத்தக் குழாய் அடைத்து மாரடைப்பை உண்டாக்குகிறது. 20 ஆண்டுகளுக்கு முன், நான் கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக பணிபுரிந்த போது, 22 வயதுள்ள இளம் பெண் கூலித் தொழிலாளிக்கு மாரடைப்பு வந்து; ஐ.சி.யூ.,வில் அனுமதித்து வைத்தியம் செய்தேன். இதுபற்றி டாக்டர்களுக்கும், மக்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
இதன் காரணம், அந்த இளம் பெண்ணுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவன் ஓடிப்போய்விட்டான். பெற்றோர் இல்லை. கூலி வேலை செய்து குழந்தையைக் காப்பாற்றி வர வேண்டிய நிலை. எவ்வளவு மனக்கவலை, மன அழுத்தம், சோகமே அவளது வாழ்க்கை. எப்படி அவளது இதயம் சீராக இயங்க முடியும்?

சில வருடங்களுக்கு முன், 28 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு என்னிடம் வந்தார். அவரை சென்னை மையப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து, ஆஞ்சியோகிராம் செய்ததில் கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புள்ளது தெரிந்தது. இரண்டு நாட்கள் கழித்து ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்போன போது, இந்த கரோனரி ரத்தக்குழாய் அடைப்பு இல்லை. எப்படி காணாமல் போனது; இதற்கு காரணம் என்ன?
இந்த இளைஞர் கல்யாணமாகி ஓராண்டில் விவாகரத்து வழக்கு, ஒரு குழந்தையின் தந்தை, நிரந்தரமற்ற ஐ.டி., பணி. இவர் இதயம் எப்படி துயரத்தையும் வேதனையும் தாங்கும்; இவருக்கு ஏற்பட்டது மாரடைப்பு. இது கரோனரி ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்து கட்டியாகி அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தது. குறிப்பிட்ட சில மருந்துகளை ஊசி மூலம் செலுத்தியதால் ரத்த உறைவு குறைந்து. அடைப்பு சீராக்கப்பட்டுள்ளது. இதை முன்கூட்டியே அறிந்து ஆலோசனை செய்பவர் தான், நவீன இதய நோய் நிபுணர்.
பை-பாஸ் கிராப்ட், ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் செய்தவர்கள், மற்றும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோயுள்ளவர்கள், அதிக கொழுப்புள்ளவர்கள் இதயத்தில், சில பகுதிகள் இஸ்கிமியா என்ற ரத்தக் குறைபாடுள்ள இடங்கள் இருக்கும், இந்த இடங்கள், மிகவும் ஆபத்தான இடங்கள். இந்த இடத்திலிருந்து தான், அரித்மியா என்ற, தத்தளித்து தடுமாறும் துடிப்புகளின் உறைவிடம். அதாவது மரணத்தின் இருப்பிடம்.
நீங்கள் உங்கள் இதய நோயின் அறிகுறிகளை தகுந்த நேரத்தில் அறிந்து கொண்டு, தகுந்த மருத்துவரிடம் சிகிச்சை செய்து கொண்டால் நலமுடன் வாழலாம் நோயாளிகளே!
1.டாக்டர் சொல்வதை கேட்டு நடங்கள்.
2.வியாதியைப் பற்றிய பயத்தைப் போக்கி அமைதி காக்கவும்.
3. வியாதியால் நம்பிக்கை சோர்ந்து வாழாதீர்.
4. எதையும் ஏற்காமல் எதிர்பதமாக பேசி வாழாதீர்.

டாக்டர் சு.அர்த்தநாரி, எம்.டி.டி.எம்.,

%d bloggers like this: