நற்கதி பெற… (ஆன்மிகம்)

நம் முன்னோரும், மகான்களும், ரிஷிகளும் மிகுந்த தீர்க்கதரிசிகள். பிற்காலத்தில், அதாவது, இந்தக் கலியுகத்தில் மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பர், அவர்களது வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டனர். இந்த கலியில், தர்மம் குறைந்து விடும்; பாவச் செயல்களில் மனிதர்கள் ஈடுபடுவர்; தெய்வ நம்பிக்கையும் குறைந்துவிடும்; ஆயுளும் குறையும்; நல்ல விஷயங்களில் ஈடுபடவே நேரமிராது என்பதையும் தெரிந்து கொண்டனர்.
“அடடா! கலியுகத்தில் மக்கள் இப்படி ஜென்மாவை வீணடிக்க வேண்டியிருக்குமே…’ என வருந்தியவர்கள், நற்கதி பெற என்ன வழி என்று ஆராய்ந்தனர்.
யுதிஷ்டிரருக்கு பல தர்மங்களை எடுத்துச் சொல்கிறார் பீஷ்மாசாரியார். பிராமண தர்மம், வைசிய தர்மம், இதர தர்மம், பிரம்மச்சாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன், யதி, ஸ்த்ரீ இவர்களுக்கான தர்மம், மோட்ச தர்மம் என்று பல தர்மங்களைச் சொல்கிறார். இதில் ஏதாவது குறை ஏற்பட்டால், அதற்கான பிராயச்சித்தங்களையும் கூறுகிறார். இவைகளையெல்லாம் கேட்டுக் கொண்டார் தர்மபுத்திரர்.

“தாங்கள் சொன்னதெல்லாம் சரி! ஆனால், மனிதர்களுக்கு உபவாசம், பஜனை, பூஜை, ஜெபம் போன்றவைகளைசெய்து கொண்டிருக்க நேரமிருக்காதே! இப்படிப்பட்டவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய சுலபமான, சுருக்கமானதும், அதே பலன்களைக் கொடுக்கக் கூடியதுமான தர்மத்தைச் சொல்ல வேண்டும்…’ என்று கேட்டார்.
இதற்கு பதிலாக —
“ஏசமே சர்வ தர்மாணாம் தர்மோதி கதமோ மத!
யத் பக்த்யா புண்டரீகாசம் ஸ்தவனரர்ச்சேன் நர: சதா!’ என்றார் பீஷ்மாசாரியார். எல்லா தர்மங்களையும் விட சிறந்த தர்மம், தாமரை கண்ணனான ஹரியை பக்தி செய்வதுடன், அனவரதமும் ஸ்தோத்ரம் செய்வது தான் என்பது பொருள்.
இதில் நாராயணனை சதா ஸ்தோத்ரம் செய்தாலே, இந்த சம்சார பந்தங்களிலிருந்து விடுபடுகிறான் என்றால், இது கூட சிலருக்கு சிரமமாக இருக்கும். பகவானை எப்படி ஸ்தோத்ரம் செய்வது… அதற்கு ஆசார அனுஷ்டானம் உண்டா? அப்படியெல்லாம் நம்மால் செய்ய முடியுமா?
இப்படி பீஷ்மாசாரியார் சொன்ன தர்மங்களை பார்வதி, பரமேஸ்வரன், நாராயணன், மகாலட்சுமி உட்பட சகல தேவர்களும், ரிஷிகளும் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மனிதர்கள் மீது இன்னும் கொஞ்சம் கருணை பார்வதி தேவிக்கு ஏற்பட்டது. “மனிதர்கள் இன்னும் சுருக்கமாகவும், சுலபமாகவும், சம்சார பந்தத்திலிருந்து விடுபட வழி என்ன?’ என்று கேட்டாள்.
“மூன்று முறை ராம நாமத்தை எவன் ஒருவன் சொல்கிறானோ, அவன், விஷ்ணு சகஸ்ரநாமத்தைச் சொன்ன பலனைப் பெறுவான்!’ என்கிறார். இவ்வளவு சுலபமாக நமக்கு தர்மங்களை அனுஷ்டிக்கும் வழியையும், ஜென்மா கடைத்தேறும் மார்க்கத்தையும் சொல்லி வைத்திருக்கின்றனர்.

%d bloggers like this: