பேராசைப் பட்டாலும் மாரடைப்பு வருமாம்!

உடல் பருமன் அதிகம் கொண்டவர் களுக்குத்தான் மாரடைப்பு ஏற்படும் என்ற பொதுவான கருத்து இப்போதெல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. சராசரி உடல் எடை கொண்டவர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படுகிறது.

அதேநேரம், கடுமையான உடல் உழைப்பை வெளிப்படுத்துபவர்கள், கவலை இல்லாதவர்கள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மிக மிக குறைந்த அளவே மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகின்றனர் டாக்டர்கள்.

இவர்களது கணிப்பின்படி, கடுமையாக கோபத்தை வெளிப்படுத்துபவர்கள், அடுத்தவர்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படுபவர்கள், பேராசை கொண்டவர்கள், தேவையில்லாமல் மன உளைச்சலை வரவழைத்துக் கொள்பவர்கள் ஆகியோருக்குத்தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பொதுவாக, பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிக அளவில் மாரடைப்பு பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மெனோபாஸ் என்கிற மாதவிலக்கு சுழற்சி காலம் நின்றபிறகு ஆண்களுக்கு இணையாக பெண்களும் இந்த பாதிப்பிற்கு ஆளாகுகிறார்கள்.

இந்த பாதிப்பிற்கு எவை எல்லாம் காரணமாக அமைகின்றன?

* மரபணுவின் மூலம் பரம்பரை பரம்பரையாக இந்த நோய் பாதிப்புக்கான காரணிகள் கடத்தப்படுகின்றன.

* வயது ஏற ஏற முதுமையில் இயற்கையாகவே மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

* உரிய தடுப்பு முறைகளையும், சிகிச்சையையும், பராமரிப்பையும் மேற்கொள்ளாத பட்சத்தில் நீண்ட நாளைய ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கும் மாரடைப்பு எளிதில் ஏற்படுகிறது. நீண்ட நாளைய நீரிழிவு பாதிப்பு, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக காணப்படுதல் போன்ற காரணிகளும் மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.

* அதிக உடல் பருமன் கொண்டவர்கள், குறிப்பாக பெரிய அளவில் தொப்பை கொண்டவர்கள், அளவுக்கு அதிகமாக உணவுகளை எடுத்துக்கொள்ளும் உடல் உழைப்பு இல்லாதவர்கள், அளவுக்கு அதிகமாக புகை பிடிப்பவர்கள், தொடர் மனஉளைச்சலுக்கு ஆளாகுபவர்கள், எதற்கெடுத்தாலும் பதட்டப்படுபவர்கள் ஆகியோரும் மாரடைப்பு ஏற்படுவோர் பட்டியலில் முன்னணியில் இருக்கின்றனர்.

நீங்களும் இந்த பட்டியலில் இருந்தால் இப்போதே உஷாராகிவிடுங்கள்.

%d bloggers like this: