கிருஷ்ணர் அளித்த வரம்! (ஆன்மிகம்)

வாழ்நாளில் புண்ணியத்தை சம்பாதிக்க வேண்டும்; பாவத்தை தேடிக் கொள்ளக் கூடாது. மகான்களையோ, பெரியோரையோ நிந்திப்பது, தூஷிப்பது பாவத்தை சேர்க்கும்; அதற்கான பலனை அனுபவிக்க வேண்டி வரும். இது, மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கும் பொருந்தும்.
பலராமன் மற்றும் கிருஷ்ணருக்கு முன் பிறந்த தேவகியின் ஆறு குழந்தைகளையும் கம்சன் கொன்றான். இந்த ஆறு குழந்தைகளை அவன் கொன்றதற்கு ஒரு கதை உண்டு…
மரீசியென்ற பிரஜாபதிக்கு ஆறு புத்திரர்கள் இருந்தனர். ஒருமுறை, பிரம்ம தேவரை, மரீசியின் புதல்வர்கள் பரிகாசம் செய்தனர். இந்த பாவத்தால், இவர்கள், பூமியில் அசுர குலத்தில் பிறந்து, பல ஜென்மங்களுக்குப் பின் தேவகியின் வயிற்றில் பிறந்து அசுரனால் கொல்லப்பட்டு, கிருஷ்ணனுடைய அநுக்ரகத்தால் சாபவிமோசனம் பெற்று நற்கதியடைவர் என்று சபிக்கப்பட்டனர்.
இந்த ஆறு குழந்தைகளின் பெயர்கள், ஸ்மரன், உத்கீதன், பரிஷ்வங்கன், பதங்கன், ஷ�த்ரபூ, கிருணி. பிறந்ததுமே கம்சனால் இந்த குழந்தைகள் கொல்லப்பட்டு விட்டன.
ஒருசமயம், தன் தாயார் தேவகியிடம் கிருஷ்ணன் பேசிக் கொண்டிருக்கும் போது, “அம்மா! உனக்கு என்ன வேண்டும், கேள்!’ என்றார். தேவகிக்கு பழைய ஞாபகம் வந்து விட்டது. அதனால், “கிருஷ்ணா! உனக்கு முன் பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொன்று விட்டான்; அந்த குழந்தைகளை நீ மறுபடியும் இங்கு கொண்டு வர வேண்டும்!’ என்றாள். கிருஷ்ணனும், மாதாவின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக, பாதாள லோகம் சென்று, பலிசக்ரவர்த்தியை சந்தித்தார். கிருஷ்ணனை வரவேற்று உபசரித்து, கிருஷ்ணன் வந்த காரணத்தை கேட்டார்.
கிருஷ்ணன் காரணத்தை சொல்ல, அந்த ஆறு குழந்தைகளையும் அவரிடம் ஒப்படைத்து வழியனுப்பி வைத்தார் பலி சக்கரவர்த்தி.
அந்த குழந்தைகளை தேவகியிடம் ஒப்படைத்தார் கிருஷ்ணன். குழந்தைகளைக் கண்ட தேவகி, தாய்ப்பாசம் பொங்க குழந்தைகளை வாரி அணைத்துக் கொண்டாள். உடன் தாய்ப்பால் பெருகியது. குழந்தைகளும் தாய்ப்பாலை பருகின.
இதில் ஒரு விசேஷம் உள்ளது. ஏற்கனவே தேவகியிடம் தாய்ப்பால் குடித்துள்ளான் கிருஷ்ணன். அதில் மிகுந்தது தான் இந்த ஆறு பேரும் பருகிய பால். அதனால், கிருஷ்ணன் சாப்பிட்ட மிச்சம் பிரசாதமாகி விட்டது.

பிரசாதத்தை ஆறு குழந்தைகளும் சாப்பிட்டதும் சாபவிமோசனம் பெற்று, நாம் தேவ சாபத்தால் பூமியில் பிறந்தோம் என்ற ஞானம் ஏற்பட்டு, கிருஷ்ணன், பலராமன், தேவகி ஆகியோரை நமஸ்காரம் செய்து, தங்கள் இருப்பிடமான தேவலோகம் சென்றனர். இதையெல்லாம் பார்த்த தேவகி, எல்லாம் கிருஷ்ணனுடைய மாயலீலை என்று தெரிந்து பெருமைப்பட்டாள்.
இதிலிருந்து, பெரியோரையும், மகான்களையும் பரிகாசம் செய்தால், அதனால் கிடைக்கும் தண்டனையை தெரிந்து கொள்ளலாம்; அதோடு, தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்யப்பட்டு, மிகுதியான பிரசாதத்தை உண்பதால், சகல பாப, சாபங்கள் நிவர்த்தியாகிறது என்பதையும் அறியலாம்.

%d bloggers like this: