நல்லதையே எண்ணுவோம்! (ஆன்மிகம்)


நவ., 2 – சிவாலய அன்னாபிஷேகம்!

பால், தேன், பஞ்சாமிர்தம், திருநீறு என பல பொருட்களில் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வர்; ஆனால், ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவன் கோவில்களில் உள்ள சிவலிங்கங்களுக்கு சாதத்தால் அபிஷேகம் செய்கின்றனர்.
மற்ற பொருட்களை விட நம் அன்றாட வாழ்வில் சாதம் முக்கியத்துவம் பெறுகிறது. நாம் சாப்பிடும் போது, “சாதம்’ என்று பெயர் பெறும் இப்பொருள், இறைவனுக்கு படைக்கப்பட்டால், பிரசாதம் ஆகிறது. “ப்ர’ என்ற சொல்லுக்கு, கடவுளுடன் சம்பந்தமுள்ளது’ என்று பொருள்.
அரண்மனைக்கு வந்தார் ஒரு மகான். அவரை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினான் ராஜா. குருவும் சாப்பிட்டார். ஒரு அறையில் ஓய்வெடுக்கச் சென்றார். அங்கே ஒரு முத்துமாலை தொங்கியது. என்ன காரணத்தாலோ அதை எடுத்துக் கொள்ள வேண்டுமென மகானுக்கு தோன்றியது.
சந்நியாசத்துக்கு முற்றிலும் மாறாக அதை ஒளித்து வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். மறுநாள் முத்துமாலை காணாமல் போனது தெரிய வந்தது. மகானை யாருமே திருடன் என சந்தேகப்படக் கூட இல்லை. மற்றவர்களிடம் கடும் விசாரணை நடந்தது. அடித்தும் பார்த்தனர்; எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
ஆசிரமத்துக்குப் போன மகானின் மனம் சங்கடப்பட்டது. “இப்படி திருடிவிட்டோமே, அப்பாவிகள் அடிபடுவரே…’ என வருந்தினார். சற்றுநேரத்தில், அவருக்கு வயிற்றுப்போக்கு ஆரம்பித்து விட்டது. ஐந்தாறு முறை போனதில் மிகவும் சோர்ந்து போனார். அதன் பின், ராஜாவிடம் வந்து நடந்ததைச் சொல்லி, தண்டனை தரும்படி கேட்டார்; ஆனால், ராஜா நம்பவில்லை.

“யாரோ ஒரு திருடனைக் காப்பாற்ற, நீங்கள், உங்கள் மீது பழிபோட்டுக் கொள்கிறீர்கள்…’ என்று சொல்லி, அவரைத் தண்டிக்க மறுத்து விட்டான். திரும்பத்திரும்ப தன் நிலையை மகான் சொல்லவே, ஒரு வழியாக நம்பிய ராஜா, “எதற்காக இந்த திருட்டு புத்தி இவருக்கு வந்தது?’ என ஆராய்ந்தான்.
அரண்மனையில் விசாரித்த போது, சில திருடர்கள் கடத்திச் சென்ற அரிசியை அரண்மனைக் களஞ்சியத்தில் வைத்திருந்ததும், அதைக் கொண்டு சமையல் செய்து மகானுக்கு உணவளித்ததால், இத்தகைய மனநிலை அவருக்கு ஏற்பட்டது என்பதும் தெரிய வந்தது. எனவே, உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே, சிவபெருமானுக்கு மிக முக்கியமான அன்னத்தால் மதிய நேரத்தில் அபிஷேகம் செய்வர். வெள்ளை சாதம் சமைத்து சிவலிங்கத்தை மூடுமளவு செய்து விடுவர். பின்னர் இதனுடன் கறிவகைகள் சேர்த்து பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுப் பர்.
இவ்வாண்டு அன்னாபிஷேக நாளில், சமையல் செய்யும் போதும், விவசாயம் செய்யும் போதும் நல்ல எண்ணங்களை மனதில் எண்ணியபடியே பணியில் ஈடுபட வேண்டும் என்பதைக் கடைபிடிப்போம். நல்ல சிந்தனையுடன் சமைக்கப்படும் உணவு நம் உடலுக்கு சிறந்த மருந்தாக அமையும்.

%d bloggers like this: