வங்கிப் பணியில் சாதனை புரிந்த டி.எஸ்.நாராயணசுவாமி! (கட்டுரை)

ஜூலை 19, 1969ல், 14 பெரிய வங்கிகளை, தேசிய மயமாக்கினார், அப்போதைய பிரதமர் இந்திரா. அந்த எண்ணிக்கை இப்போது 21 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நாற்பது வருடங்களில், இதுவரை யாரும் செய்யாத சாதனையை, டி.எஸ்.நாராயணசுவாமி செய்திருக்கிறார். மூன்று பெரிய வங்கிகளுக்கு, சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் பொறுப்பை வகித்து, வங்கிகளை திறம்பட நடத்தி இருக்கிறார்.
கடந்த 2000 முதல், ஏப்ரல் 2004 வரை, பஞ்சாப் நேஷனல் வங்கியின் எக்சிக்யூட்டிவ் டைரக்டராக, வங்கியில், இரண்டாவது முக்கிய பதவியை வகித்திருக்கிறார்; 2004 ஏப்ரல் முதல், 2005 மே வரை, ஆந்திரா வங்கியின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராகவும்; ஜூன் 2005 முதல், மே 2007 வரை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராகவும்; ஜூன் 2007 முதல், மே 2009 வரை, பாங்க் ஆப் இந்தியாவின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.
மூன்று வங்கிகளுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்று, சிறப்பாக செயல்பட்ட முதல் இந்தியர், டி.எஸ்.நாராயணசுவாமி மட்டும் தான். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது, புதியதாக ஆரம்பிக்கப்பட்ட, “யுனைட்டெட் ஸ்டாக் எக்ஸ்சேஞ்’ தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். இவரது விசேஷ பேட்டி…

வங்கிகளின் எக்சிக்யூடிவ் டைரக்டர், சேர்மன் ஆகிய பதவிகளுக்கு எப்படி தேர்வு செய்கின்றனர்?
அடுத்த ஆண்டு அல்லது 18 மாதங்களில், 21 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், எக்சிக்யூடிவ் டைரக்டர்கள், எவ்வளவு பேர் ஓய்வு பெறுகின்றனர், எவ்வளவு பதவி நிரப்பப்பட வேண்டும் என்று முதலில் தகவல் சேகரித்து, எண்ணிக்கையை முடிவு செய்கின்றனர். ஜெனரல் மேனேஜராக, குறைந்தபட்சம், இரண்டு வருட அனுபவம் பெற்றவராக, ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்று வருட சர்வீஸ் மீதம் இருப்பவர்களை தேர்வுக்கு அழைக்கின்றனர்.
எவ்வளவு பதவிகள் காலியாக போகின்றன என்பதை பொறுத்து, மேலே சொன்ன அடிப்படை விதிகள், வருடங்களைப் பொறுத்தவரை மாறுபடலாம்.
இந்த தேர்வை, “இன்டர்வியூ’ என்று இல்லாமல், “இன்டர் ஆக்ஷன்’ – கலந்து பேசுதல் என்றே அழைக்கின்றனர். மத்திய அரசின் வங்கித் துறை, அடிஷனல் செகரட்டரி, நிதி இலாகாவின் காரியதரிசி, ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னர், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் போன்ற அமைப்புகளிலிருந்து, இரு நிபுணர்கள் அடங்கிய ஐவர் குழு, இன்டர் ஆக்ஷன் நடத்துகிறது. குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் திறமையாக செயல்பட்ட எக்சிக்யூடிவ் டைரக்டர்களிலிருந்து, வங்கி சேர்மன் பதவியை நிரப்ப, இதே முறையில் தேர்ந்தெடுத்து, பதவி உயர்வு அளிக்கின்றனர்.
மேலே குறிப்பிட்டவை, 21 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு பொருந்தும்; பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதை சார்ந்த வங்கிகளுக்கு (ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், திருவாங்கூர் போன்ற வங்கிகள்) பொருந்தாது; அவற்றுக்கு வேறு அமைப்பு.

தேசிய மயமாக்கப்பட்ட மூன்று வங்கிகளின் சேர்மனாக பணிபுரிந்த அனுபவம் பற்றி?
மூன்று, பெரிய, புகழ்பெற்ற வங்கிகளின் சேர்மனாக பணிபுரிந்தது, எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. எக்சிக்யூட்டிவ் டைரக்டராக பணிபுரிந்த பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட நான்கு மாறுபட்ட கலாசாரம், பணி சூழ்நிலை, உடன் பணிபுரிந்த நிபுணர்கள், வங்கிகளின் கிளைகள் அமைந்திருந்த வேறுபட்ட மாநிலங்களில் பணியாற்றியது, எனக்கு கிடைத்த சவாலாக கருதுகிறேன்.
இந்த வங்கிகளின் சேர்மன் பதவிகள் நிரப்பப்பட வேண்டிய நேரங்கள், எனக்கு சாதகமாக அமைந்துவிட்டன.
ஏற்கனவே எனக்கு கிடைத்துள்ள அனுபவத்தில், சமுதாயத்தில், பலதரப்பட்ட மக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், சிறு தொழில் புரிவோர் என்று அனைவரோடும், சுலபமாக பழக முடிந்தது. இந்த பெரும் வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் அறிந்து கொண்டதில், எனக்கு பெரு மகிழ்ச்சி.

வெளிநாடுகளில் இயங்கும் நமது வங்கிகளின் கிளைகளையும், அந்தந்த நாடுகளின் வங்கிகளையும் ஒப்பிட்டு பார்த்தால், உங்கள் கருத்து?
பாங்க் ஆப் இந்தியாவிற்கு, 25 கிளைகள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. லண்டன் கிளை, 60 வருடமாக இயங்குகிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், சிங்கப்பூர் போன்ற இடங்களில், 60 ஆண்டுகளாக கிளைகள் இயங்குகின்றன.
வெளிநாடுகளில் இயங்கும் இந்திய வங்கிகளின் கிளைகளுக்கு, அதிகமான வாடிக்கையாளர்கள், அங்கு வசிக்கும் இந்தியர்களும், அங்கு இயங்கும் இந்திய வியாபார, தொழில் நிறுவனங்கள் தான். 99 சதவீதம் இப்படித்தான். வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வெகு குறைவு.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி போல, அந்தந்த நாடுகளில் இயங்கும் ரெகுலேட்டர்களின் விதிமுறைகளை, நமது வங்கிகள் பின்பற்றி நடக்க வேண்டும்; அப்படித்தான் செயல்படுகின்றன. திடீர் அவசரம் என்றால், இந்திய வங்கிகள், வேண்டிய உதவிகளை தங்களுக்குள் செய்து கொள்கின்றன. அவர்களுக்குள் நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது.
நமது வங்கிகளின் மொத்த வால்யூம், அதாவது, வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் டிபாசிட்டுகள், பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்கள், வெளிநாட்டு வங்கிகளின் வால்யூமை விட ரொம்ப குறைவு.

வங்கிப் பணியில் உங்கள் சாதனைகளாக கருதுவது…
என் தனிப்பட்ட சாதனை என்பதைவிட, நான் தலைவராக செயல்பட்ட வங்கிகளின் சாதனைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்…
ஏப்ரல் 2004லிருந்து, மே 2005 வரையான ஒரு ஆண்டின் ஆந்திரா வங்கியின் பிசினஸ், 36 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 45 ஆயிரம் கோடியாக வளர்ந்தது. ஜூன் 2005லிருந்து, மே 2007 வரையான இரு ஆண்டிற்கான ஐ.ஒ.பி.,யின் பிசினஸ் 65 சதவீதம் உயர்ந்தது. 2006 – 07 ஒரு ஆண்டில், ஐ.ஒ.பி.,யில் ரிகார்டு லாபமாக ஆயிரம் கோடியை தாண்டியது. லாபம் 1008 கோடி ரூபாய்.
மேலும், கே.பி.எம்.ஜி., என்ற ஆடிட்டிங் நிறுவனமும், எர்னஸ்ட் அண்டு யங் என்ற ஆடிட்டிங் நிறுவனமும் எடுத்த தனித்தனி சர்வேயில், 2006 – 07 ஆண்டில் சிறப்பாக இயங்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்று அறிவித்திருக்கிறது.
கடந்த 2008 – 09 நிதி ஆண்டில், பாங்க் ஆப் இந்தியாவின் லாபம், 3007 கோடி ரூபாயாக உயர்ந்தது. (2007 – 08 ஆண்டின் லாபம் 2009 கோடி ரூபாய்).
இதுவரை இந்தியாவில், வேறு எந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கியும் செய்யாத மற்றொரு சாதனையை, பாங்க் ஆப் இந்தியா செய்திருக்கிறது. மத்திய அரசு அனுமதியோடு, பதினைந்தே நாட்களில், 1400 கோடி ரூபாய், பெரிய நிறுவனங்களிடமிருந்து பெற்றோம். 10 ரூபாய் பேஸ் வேல்யூ உள்ள பங்கை, 360 ரூபாய்க்கு விற்று, வங்கியின் மூலதனத்தை உயர்த்தினோம்.
பொதுமக்களிடம் பங்குகள் விற்காமல், எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் நிறுவனங்கள், யூனிட்டிரஸ்ட் ஆப் இந்தியா போன்ற சில முக்கிய நிறுவனங்களுக்கு மட்டும் விற்பனை. என்.டி.டி.வி., பிசினஸ் வேர்ல்டு போன்ற ஊடகங்களால், 2007 – 08 ஆண்டில், சிறப்பாக செயல்படும் வங்கியாக, பாங்க் ஆப் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
எந்த விஷயத்திலும், தாமதம் செய்யாமல் முடிவுகள் எடுக்கும் பழக்கம், தேவையான அதிகாரத்தை, செயல்படும் சுதந்திரத்தை தகுதியானவர்களுக்கு அளிப்பது, வங்கிக்கு பொது மக்களிடையே போதுமான விளம்பரம் பெறுதல், அரசு தொழில் துறை, நிர்வாகம், வியாபாரம் என்று பல துறைகளிலும் தேவையான வியாபார தொடர்பை உருவாக்குவது, பப்ளிக் ரிலேஷன்ஸ், வங்கியில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள், தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்குதல் போன்ற என் கொள்கைகளும், பணியில் வெற்றி பெற உறுதுணையாக, உதவியாக இருந்தன; இவை எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும்.

வங்கி செயல்பாடுகளில் அதிகமான விஷயங்கள், அரசு விதிகளின்படி நடக்க வேண்டியிருக்கிறது. அப்படி இருக்க, உங்களுக்கு சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு உள்ளதா?
இந்திய பொருளாதார வளர்ச்சியில், வங்கிகள் பெரும் பங்கு வகிப்பதால், நாட்டின் பொருளாதார நன்மை கருதி, ரிசர்வ் வங்கி, சில, “கெய்ட்லைன்ஸ்’களை பின்பற்றுமாறு வங்கிகளுக்கு வகை செய்கிறது. வங்கிகள், பொது மக்களின் பணத்தை பெற்று, அவற்றை, தேவைப்படும் பிரிவினருக்கு கடனாக கொடுத்து வருகிறது. பொதுமக்களின் பணம் பத்திரமாக இருப்பதற்கும், அவர்களுக்கு அதனால் பலன் கிட்டுவதற்கும் இந்த விதிமுறைகள் அவசியம்.
வங்கி சீர்திருத்தங்களுக்காக நியமிக்கப்பட்ட சந்தானம் கமிட்டி, இப்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், மத்திய அரசு வைத்திருக்கும் 51 சதவீத பங்குகளை மேலும் குறைத்து, 39 சதவீதமாக ஆக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருக்கிறது. சென்ற ஆண்டு வரை, உலகில் சிறந்த ரெகுலேட்டராக, அமெரிக்காவில் இருந்த சிஸ்டம் கருதப்பட்டது. சில அமெரிக்க வங்கிகளின் தடுமாறும் நிலைமையை அடுத்து, வங்கிகளை வழிநடத்தும் ரெகுலேட்டர்களில், நமது வங்கித்துறை, வலுவானதாக கருதப்படுகிறது.

இந்தியாவில், வங்கிகளின் எதிர்காலம் பற்றி…
நமது நாட்டில், வங்கிகளுக்கு, வங்கித்துறைக்கு, பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில், வியக்கத்தக்க அளவு நமது வங்கிகள் வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. வராத கடன் என்ற அளவு கோல், 15 சதவீதத்திலிருந்து ஒன்றரை சதவீதமாக குறைந்திருப்பது, மற்றொரு சாதகமான விஷயம். இது போன்று பல முக்கிய விகிதங்கள், இப்போது சாதகமாகவே உள்ளன.
ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிரா, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது, ஒரு ஆரம்ப கட்டம். மேலும், சில வங்கிகள், பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படும் வாய்ப்புகள் ஏற்படலாம். இந்த மாற்றத்தால் பல நன்மைகள் கிடைக்கின்றன. ரிசர்வ் வங்கியில் தொடர்ந்து செய்யப்படும் மேற்பார்வை, வங்கித்துறையை தொடர்ந்து கவனித்து, வங்கித் துறைக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெகுலேட்டரின் வழிகாட்டுதல், நமது வங்கித் துறை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக, இன்றியமையாததாக உள்ளது.)

%d bloggers like this: