Daily Archives: நவம்பர் 2nd, 2009

தமிழ்நாட்டில் கூல்பேட் டூயல் மொபைல்


ரிலையன்ஸ் வெப்ஸ்டோர் மற்றும் கூல்பேட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து கூல்பேட் 2938 என்னும் டூயல் மோட் ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளன. இது ஒரு சீன நிறுவனத்தயாரிப்பு ஆகும். இந்த போனில், ஒரு சி.டி.எம்.ஏ. மற்றும் ஒரு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். தமிழகம் முழுவதும் உள்ள 150 ரிலையன்ஸ் வெப் ஸ்டோர்களில் மட்டுமே இவை விற்பனை செய்யப்படும். விரைவில் மேலும் நான்கு புதிய மாடல் கூல் பேட் போன்கள் அறிமுகப்படுத் தப்படும் என்று தெரிகிறது. கூல்பேட் 2938 இரு வகை தொழில் நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் போனாக இருந்தாலும் விலை ரூ.10,999 எனக் குறியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜி.எஸ்.எம். வகையில் மூன்று அலைவரிசைகளில் செயல்படுகிறது. சி.டி.எம்.ஏ. வகை 800 மெஹா ஹெர்ட்ஸில் செயல்படுகிறது. இரண்டிற்கும் தனித்தனியே அழைப்பு கீகள் தரப்பட்டுள்ளன.
இது ஒரு டச் ஸ்கிரீன் போன். 2.4 அங்குல வண்ணத்திரை கொண்டது. ஆனால் அதிக சூரிய வெளிச் சத்தில் திரைக் காட்சி கொஞ்சம் தடுமாறுகிறது. டச் ஸ்கீரினாக இருந்தாலும் பல செயல்பாடுகளுக்கு ஸ்டைலஸ் தேவைப்படுகிறது. போன் ஸ்லிம்மாக இருந்தாலும் 110 கிராம் எடை கொண்டுள்ளது. ஒரு புறம் வாய்ஸ் ரெகார்டர் மற்றும் கேமராவிற்கு தனித்தனி கீகள் தரப்பட்டுள்ளன. இன்னொரு புறத்தில் வால்யூம்/ஸூம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்ட்ஜ் போர்ட் அமைக்கப்பட்டுள்ளன. கீகள் அனைத்துமே பெரியதாக அமைக்கப்பட்டு நம் வேலையை எளிதாக்குகின்றன.

இதன் இன்னொரு சிறப்பு இதன் தோற்றம். கருப்பு வண்ணத்தில் கிளாஸ் பளபளப்புடன் மிக அழகாக உள்ளது.
இந்த போனில் ஹேண்ட் ரைட்டிங் ரிகக்னிஷன் வசதியும் உள்ளது. மியூசிக் பிளேயரும் கிடைக்கிறது. ஈக்குவலைசர் வசதி தரப்பட்டுள்ளது. இணைந்துள்ள எப்.எம். ரேடியோ, ஒலிபரப்புகளை எந்த இடத்திலும் நன்றாக பிக் அப் செய்கிறது. போனில் வாய்ஸ் ரெகார்டர் தரப்பட்டுள்ளது.
இதில் நெட்வொர்க் இணைப்பிற்கு GPRS தரப்படவில்லை. WAP தரப்பட்டுள்ளது. பிரவுசர் பெறவும், டவுண்லோட் செய்திடவும், இமெயில் பார்க்கவும் சி.டி.எம்.ஏ. சிம் வழி செல்ல வேண்டியதுள்ளது. இதனை புளுடூத் அல்லது யு.எஸ்.பி. வழியாக பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைத்து மோடமாகவும் பயன்படுத்தலாம். இவ்வகையில் அ2ஈக இணைந்த புளுடூத் சிறப்பாகச் செயல்படுகிறது.
நம் தொடர்புகளுக்கான பாதுகாப்பினைப் பொறுத்தவரை மிகச் சிறப்பான சில அம்சங்கள் இதில் தரப்பட்டுள்ளன. பிரைவேட் மோட் என்ற வகையில் இதனைப் பயன்படுத்தினால் நாம் தனியே காண்டாக்ட் முகவரிகளையும் எண்களையும் ரகசியமாகப் பதிந்து வைக்கலாம். அழைத்த எண்கள், பெற்ற எண்கள், எஸ்.எம்.எஸ். ஆகிய அனைத்தும் மற்றவருக்குத் தெரியாமல் பதிந்து வைக்கப்படுகின்றன. செக்யூரிட்டி மோட் இயக்கிவிட்டால், பிரைவேட் மோடில் உள்ள எதனையும் யாரும் பார்க்க முடியாது. போன்புக், எஸ்.எம்.எஸ்., அழைப்பு பட்டியல், ஸ்பீட் டயல், மெமோ ஆகிய அனைத்திற்கும் தனித்தனியே பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்க முடியும். ஸ்பீட் டயலில் ஏறத்தாழ 50 எண்களைப் போட்டு வைக்க முடியும்.
இதில் 2 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது. நைட் மோட், செல்ப் டைமர் உட்பட பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரியும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 36 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தக் கூடிய திறனைத் தருகிறது.
வேக நெட்வொர்க் இணைப்பிற்கு சி.டி.எம்.ஏ. சிம்மையும் மற்ற அழைப்புகளுக்கு ஜி.எஸ்.எம். சிம்மையும் பயன்படுத்தும், தொழில்துறை சார்ந்தவர் களுக்கு இந்த ஸ்மார்ட் போன் நிச்சயம் நல்ல தேர்வாக அமையும் என்று இதனை அறிமுகப்படுத்திய விழாவில் ரிலையன்ஸ் வெப்ஸ்டோர் நிறுவனத்தின் தமிழகப் பிரிவின் தலைவர் ராஜீவ் சந்திரவால்வி தெரிவித்தார்.

Save மற்றும் Save As என்ன வேறுபாடு?

எம். எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள பல்வேறு பயன்பாட்டு சாப்ட்வேர் தொகுப்புகளில் பைல் மெனுவில் நாம் காணும் இரு வேறு பயன்பாடுகள் Save மற்றும் Save As ஆகும். இரண்டுமே ஒரு பைலை கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாப்பி டிஸ்க்கில் நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் பைலை பதிவு செய்கின்றன? அப்படியானால் இரண்டு பயன்பாட்டிற்கும் வேறுபாடு இல்லையா? ஒரே பயன்பாட்டிற்கு ஏன் இரண்டு வெவ்வேறு கட்டளைகள் என நீங்கள் எண்ணலாம்? இரண்டு கட்டளைகளும் பைலைப் பதிந்தாலும் இரண்டின் செயல்பாட்டில் சற்று வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் Save கட்டளை பயன்படுத்தும்போது அப்போது பயன்பாட்டில் உருவாக்கப்படும் பைல் அதே பெயரில் சேமிக்கப்படுகிறது. அந்த பைலுக்கு அதற்கு முன் பெயர் கொடுக்கவில்லை என்றால் பெயர் கொடுக்குமாறு கம்ப்யூட்டர் கேட்கும். பெயர் கொடுத்தவுடன் அது பதிவு செய்யப்படும். மீண்டும் அதே பைலில் பணியாற்றுகையில் Save கட்டளை கொடுத்தால் அதே பெயரில் சேவ் ஆகும். புதிய பெயர் கொடு என்றெல்லாம் கம்ப்யூட்டர் உங்களைக் கேட்காது. ஆனால் Save As கட்டளை கொடுக்கையில் அந்த பைலை ஒரு புதிய பைல் போன்று மற்றொரு பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம். அதாவது ஒரு டாகுமெண்ட்டில் எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். ஆனால் அந்த மாற்றத்துடன் உள்ள ஆவணத்தை வேறு ஒரு பெயரில் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் அப்போது Save As என்ற கட்டளை கொடுத்து சேமிக்கலாம். இவ்வாறு சேமித்த பின் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் சென்று பைல் டைரக்டரியைப் பார்த்தால் உங்கள் பைல் முந்தைய பெயரிலும் புதிய பெயரிலுமாக இரண்டு இருக்கும்.

கூகுள் வழிதான் இன்டர்நெட் இயங்குகிறது

பெரும்பாலான இன்டர்நெட் போக்குவரத்து, கூகுள் வழி தான் இயங்குகிறது என்பது சற்று மிகைப் படுத்திக் கூறப்படும் செய்தியாகத் தெரியலாம்; ஆனால், அதுதான் உண்மை என இது குறித்து ஆய்வு நடத்திய பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேனல்கள் வழியாகத்தான் இன்டர்நெட் டிராபிக் ஏற்படுகிறது. ஜிமெயில், ஆர்குட், யு–ட்யூப், நால் எனப் பல இருந்தாலும், பெரும்பாலான இன்டர்நெட் பயன்பாடு யு–ட்யூப் வழியாகவே ஏற்படுகிறது. மொத்த இன்டர்நெட் ட்ராபிக்கில் 6% கூகுள் வழி உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், இன்டர்நெட் என எடுத்துக் கொண்டால் அது பல்லாயிரக்கணக்கான நெட்வொர்க் வழி இருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இன்டர்நெட் பயன்பாட்டில் 50 சதவிகிதத்தை 15 ஆயிரம் நெட்வொர்க்குகள் மேற்கொண்டன. இப்போது அதே 50 சதவிகிதத்தினை 150 நெட்வொர்க்குகள் மட்டுமே மேற்கொள்கின்றன. பேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் வழி 30% இன்டர்நெட் டிராபிக் ஏற்படுகிறது. இப்போதைய மாற்றம் வீடியோ ஸ்ட்ரீமிங் வழியில் அதிகம் ஏற்பட்டுள்ளது. மொத்த வெப் டிராபிக்கில் 20% வீடியோ சார்ந்ததாகவே உள்ளது. தகவல்களுக்காக இணைய தகவல் தளங்களைத் தேடுவது இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10 சதவிகிதத்திலிருந்து 52 % ஆக உயர்ந்துள்ளது. மற்றவை இமெயில் மற்றும் தனியார் நெட்வொர்க் சார்ந்து உள்ளன.

அரைக்கீரை

அரைக்கீரை

இக்கீரை சற்று தித்திப்புச் சுவையுடையது. உஷ்ண சக்தி கொண்டது. அரைக்கீரையுடன் சிறிது நெய் சேர்த்து உண்டால் உஷ்ணத்தை உண்டாக்காது. மருந்துகள் உண்ணும் காலத்தில் இக்கீரை பத்தியமாகப் பயன்படுகிறது.

அரைக்கீரையைத் தொடர்ந்து உண்டு வந்தால் ஜலதோஷம், சளி, இருமல், கப ஜீரம், குளிர் ஜீரம், வாத ஜீரம், ஜன்னி, பாத ஜீரம், போன்றவை குணமாகும்.

அரைக்கீரை தேகத்தில் அழகை அதிகரித்து பொலிவுறச் செய்யும். தாது விருத்தி ஏற்பட்டு ஆண்மை அதிகரிக்கும். உடலுக்கு வலிமை சேர்க்கும். அரைக்கீரையை நெய்யில் வதக்கி நாள்தோறும் காலை ஒரு வேளை மட்டும் தொடர்ந்து உண்டு வந்தால் நாற்பது நாட்களில் ஆண்மை பெருகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் நீங்கிய பின் உடலில் இருக்கும் பலவீனத்தை அகற்றி, புது ரத்தம் பெருக அரைக்கீரை உதவும்.

வாத நீர்களைக் கட்டுப்படுத்தும் இக்கீரை நரம்புகளையும் பலப்படுத்தும். உடல்வலி நீக்கும். நீர்க் கோர்வை, சளிப்பிடிப்பு, இருமல் விலகும்.

பெண்களுக்குத் தலைமுடியை நன்றாகக் கருத்தும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும். இளநரையை நீக்கும். இக்கீரையுடன் புளி சேர்த்து சாப்பிட நாக்கிற்கு நல்ல ருசி ஏற்படும். பசி மந்தமும் நீங்கும்.

ஈஸ்ட்ரோஜன் இழப்பை இயற்கை முறையில் ஈடு கட்டிக்கொள்ளலாம்

ஒருவரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில், ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்களால் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளான கர்ப்பப்பையின் உள்படலம் வெளிவளர்தல், மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் மற்றும் சினைப்பை கட்டிகள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதாலேயே ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில தகவல்கள்…

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும்:
பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து காணப்படுகிறது. தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது.

இயற்கை உணவுகள்:
ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகள்:
உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோபிளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.

நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள்:
ஒமீகா – 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த <உணவுகளில் காணப்படுகிறது.

அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
நமது உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:
பெண்களுக்கான ஹார்மோன் களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது.

"சென்ஈஸ்ட்ரோஜன்களை' தவிர்க்க வேண்டும்:
ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' சேருகின்றன என்பதை மறக்கக் கூடாது. எனவே, ஆரோக்கிய உணவு முறை மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

சில குறிப்பிட்ட மொபைல் வைரஸ்கள்

1. Cabir.A: தெரிந்த காலம் – ஜூன் 2004. சிம்பியன் 60 சிஸ்டத்தில் பரவும் வகையில் தயாரிக்கப்பட்டது. புளுடூத் வழி பரவியது. சேதம் விளைவிக்கவில்லை. மேலும் தகவல்களுக்கு http://www.fsecure. com/vdescs/cabir.shtml

2. Skulls.A: தெரிந்த காலம் – நவம்பர் 2004. பல சிம்பியன் சிஸ்டங்களில் பரவும் வகையில் தயாரிக்கப்பட்டது. இன்டர்நெட் டவுண்லோட் வழி பரவியது. அழைப்பு அனுப்புதல் மற்றும் பெறுதல் தவிர, பிற அனைத்து வசதிகளையும் தான் சென்றடைந்த மொபைல் போனில் முடக்கியது. மேலும் தகவல்களுக்கு http://www.fsecure.com/vdescs/skulls.shtml

3.Commwarrior: தெரிந்த காலம் – ஜனவரி 2005. சிம்பியன் 60 சிஸ்டங்களில் பரவும் வகையில் தயாரிக்கப்பட்டது. புளுடூத் மற்றும் எம்.எம்.எஸ். வழி பரவியது. அட்ரஸ் புக்கில் உள்ள அனைத்து முகவரிகளுக்கும் பெரிய அளவில் எம்.எம்.எஸ். செய்திகளை அனுப்பி போன் கட்டணத்தை அதிகமாக்கியது. மேலும் தகவல்களுக்கு http://www.fsecure.com/vdescs/commwarrior. shtml

4. Locknut.B: தெரிந்த காலம் – மார்ச் 2005. சிம்பியன் 60 சிஸ்டங்களில் பரவும் வகையில் தயாரிக்கப்பட்டது. சிம்பியன் 60 சிஸ்டங்களுக்கான பேட்ச் பைல் போல தயாரிக்கப்பட்டது. இன்டர்நெட் டவுண்லோட் வழி பரவியது. போனில் உள்ள சிஸ்டம் பைல்களை சிதைக்கும் வேலையை இது மேற்கொள்ளும். மேலும் மற்ற மால்வேர் ரோகிராம்களையும் பதிந்து வைக்கும். மேலும் தகவல்களுக்கு http://www.fsecure. com/vdescs/locknut_b.shtml

5. Fontal.A : தெரிந்த காலம் – ஏப்ரல் 2005. சிம்பியன் 60 சிஸ்டங்களில் பரவும் வகையில் தயாரிக்கப்பட்டது. இன்டர்நெட் டவுண்லோட் வழி பரவியது. போன் தொடங்கும்போது இயங்கும் சிஸ்டம் பைல்களை முடக்கும். போனை முழுவதுமாக சிதைக்கும் வேலையை மேற்கொள்ளும். மேலும் தகவல்களுக்கு http://www.fsecure.com/vdescs/fontal_a.shtml

காணாக்கடியால் தோலில் அரிப்பா? மூலிகை கட்டுரை

நமது உடலை பாதுகாக்கும் தோலுக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால், உடனே தோல் முழுவதும் ரணகளமாகிவிடும். சாதாரணமாக உடலில் தோன்றும் லேசான அரிப்புகூட உடல்முழுவதும் பரவி வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.நமக்கு பரிச்சயமான அல்லது பெயர் தெரியாத பலவகையானபூச்சிகள் இரவு நாம் போர்த்தாமல் விட்டிருக்கும் பாகங்களான முழங்கால் மற்றும் முழங்கைக்கு கீழ் உள்ள பகுதிகள், கழுத்து, முகம் போன்ற இடங்களில் இவை கடித்து காயம் ஏற்படுத்துகின்றன. இதனால் ஏற்படும் அரிப்பு காணாக்கடி என்று அழைக்கப்படுகிறது.

நாம் உண்ணும் உணவிலுள்ள கத்தரிக்காய், தக்காளி, புளி, கடுகு,நல்லெண்ணெய், காலிபிளவர், கருணைக்கிழங்கு, காளான், பீர்க்கு போன்ற பொருட்களும், மாம்பழம், கொய்யா போன்ற பழங்களும், மீன், கருவாடு, நண்டு, வறுத்த கோழி, முட்டை போன்ற பொருட்களும் தோல் நோய் உள்ளவர்களுக்கு அரிப்பை அதிகப்படுத்துகின்றன. இவற்றை தவிர்ப்பதுடன் அரிப்பு குணமாகும்வரை அதிகளவு நீர் அருந்துவது அவசியம்.

பூச்சிக்கடியால் ஏற்படும் தடிப்பு, வீக்கம், கீறல், அரிப்பு போன்றவை பகலில் குறைந்தும், மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகரித்தும் விடுகின்றன. இவை சில நேரங்களில் சிகிச்சைக்கு கட்டுப்பட்டோ அல்லது தானாகவோ குணமடைகின்றன. பல நேரங்களில் நோய் தீவிரமடைந்து தோலில் கறுப்பு, சிவப்பு புள்ளிகளையும் தோல் மாற்றத்தையும் உண்டாக்குகின்றன. நாம் உண்ணும் உணவிலுள்ள ஒவ்வாத பொருட்களும் அரிப்பு அதிகமாக காரணமாகின்றன. காணாக்கடியால் தோன்றும் ஒவ்வாமையை நீக்கி தோலுக்கு பொலிவை தரும் அற்புத மூலிகை தேள்கொடுக்கு.

ஹீலியோடிரோபியம் இன்டிகம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போராஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த தேள்கொடுக்கு செடியில் இன்டிசின், எகினேட்டின், சுபினின்,ஹீலியூரின், ஹீலியோட்ரின், லியோடிரின், லேசியோகார்பின் போன்ற ஆல்கலாய்டுகள் ஏராளமாக காணப்படுகின்றன. இவை பூச்சிக்கடியால் தோன்றும் விஷத்தை முறிக்கும் தன்மை உடையன. தேள்கொடுக்கில் சிறு தேள்கொடுக்கு, பெருந்தேள்கொடுக்கு என இரண்டு வகைகள் உள்ளன. இவை இரண்டும் ஒரே மருத்துவ குணத்தை உடையதாக கருதப்படுகிறது.

தேள்கொடுக்கு இலை மற்றும் பூங்கொத்துகளை உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 20 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்துவர வேண்டும். இலையை கசக்கி பூச்சிகடித்த இடங்களிலும், தடிப்புள்ள இடங்களிலும் தடவிவர தடிப்பு மாறும். நாட்டுப்புற மருத்துவத்தில் தேள்கொடுக்கு செடியின் இலைகள் தேள்கடி விஷத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன. தேள் கடித்த இடத்திலுள்ள தோல் பகுதியில் இதன் இலைச்சாறை பிழிந்து தடவுவது வழக்கமாக உள்ளது.