Daily Archives: நவம்பர் 6th, 2009

வருமுன் காவாதான் வாழ்க்கை!-கட்டுரைகள்

உலகின் 2-வது மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியா, 1962-ம் ஆண்டு சீனாவுடனான யுத்தத்தில் அவமானகரமான தோல்வியைத் தழுவியது. ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கு நேரிட்ட இந்த அவமானத்தால் இந்திய நாடு, தனக்குச் சொந்தமான 40 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை இழந்தது. மேலும், இந்தியாவுக்குச் சொந்தமான 90 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பை இன்றுவரை சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

இந்துக்களின் மிகப் புனித யாத்திரை தலமாகவும், சிவபெருமானின் உறைவிடமாகவும் கருதப்படும் கைலாச மலை மற்றும் புனித மானசரோவர் ஏரி ஆகியவை சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளன.

1962-ம் ஆண்டு யுத்தத்துக்கு முன்பாகவே இந்தியாவின் மீது திடீர் தாக்குதல் தொடுக்க அனைத்து விதமான ராஜதந்திர நடவடிக்கைகளையும் சீனா மேற்கொண்டது. இந்தியாவாலும், சீனாவாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வரையறுக்கப்பட்ட இந்தியா – சீனா இடையேயான மக்-மோகன் எல்லைக்கோட்டைத் தாண்டி பல்வேறு விதமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது.

திபெத்தை சட்டவிரோதமாக சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக ஆக்கிரமித்துக் கொண்டு திபெத்தியர்களை கொடுமைப்படுத்தியதோடு, திபெத்தியர்களின் மதத் தலைவர் தலாய்லாமாவை திபெத்தை விட்டு விரட்டியடித்தது. அப்போதைய சர்வதேசத் தலைவர்கள் இதுவிஷயத்தில் சீனாவுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தபோதும் நேருவின் தலைமையிலான சுதந்திர இந்திய அரசு இதுவிஷயத்தில் வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே இருந்தது.

இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து, இந்திய மக்களிடம் வரி வசூலித்து வந்தது. இதுவிஷயம் இந்திய மக்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டது. இதுகுறித்து பாரதிய ஜனசங்கத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேருவிடம் கேள்வி எழுப்பினார். இந்திய எல்லையைத் தாண்டி இந்திய நிலப்பரப்பைச் சீனா ஆக்கிரமித்ததை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். அதற்குப் பதில் அளித்த நேரு, சீனா ஆக்கிரமித்துள்ளதாகச் சொல்லப்படும் பகுதி மனிதர்கள் வாழத் தகுந்த பூமி அல்ல என்றும், மண்ணும், கற்களும் நிறைந்த அப்பகுதியில் புல் பூண்டு கூட முளைக்காது என்றும், இதற்காக நாம் சீனாவுடன் சச்சரவுகள் எதுவும் செய்து கொள்ள வேண்டியதில்லை என்றும் பதிலளித்தது நாடாளுமன்றக் குறிப்பில் பதிவாகி இருக்கிறது. இந்தப் பதிலில் கோபம் கொண்ட ஜனசங்க உறுப்பினர் நாடாளுமன்ற அவையில் தனது வழுக்கைத்தலையைக் காட்டி, நேரு அவர்களே! என் தலையில்கூட புல் பூண்டு முளைப்பதில்லை, அதற்காக என் தலையை அன்னியன் ஆக்கிரமிக்க விடலாமா? புல் பூண்டு முளைக்காத பூமியானாலும் அதை அன்னியன் ஆக்கிரமிக்க விடலாமா? சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், “இந்தி – சீனி பாய் பாய்’ என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. இந்தியா வந்த அப்போதைய சீன அதிபர் சூ யென் லாய்க்குச் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு நேரு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பஞ்சசீலக் கொள்கையை பெய்ஜிங்கில் அறிவித்தார். சீனாவுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். ஒருபுறத்தில் நேரு பஞ்சசீலக் கொள்கையில் கையெழுத்திட்ட மை காயும் முன்பே இந்தியாவின் மீது சீனா போர் தொடுத்து, தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

சீனா, இந்தியாவின் மீது 1962-ம் ஆண்டு போர் தொடுக்கும் என முன்கூட்டியே இந்திய நல விரும்பிகள் சொன்னபோது, அதை நேரு காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதனால், இந்திய ராணுவத்தையும், அதற்குத் தேவையான போர் தளவாடங்களையும், இந்திய மக்களையும், இந்திய அரசையும் சீனாவின் ஆக்கிரமிப்புத் திட்டத்துக்கு எதிராகத் தயார்படுத்தி வைத்துக்கொள்ளும் நிலையில் நேருவின் அரசு இல்லை.

எனவே, உலகையே வென்ற அலெக்சாண்டரை விரட்டியடித்த இந்திய நாடு, 1962-ல் அவமானகரமான தோல்வியைத் தழுவியது. 3,800 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதோடு, 40 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பை இந்தியா இழந்தது.

இருந்தபோதும், 1962-ல் இந்திய மக்கள் மத்தியில் ஏற்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு காரணமாகவும், தேசபக்த எழுச்சி காரணமாகவும், தேசபக்தி கொண்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களாலும் சீனா ஆக்கிரமிப்பு ஓரளவுக்கு முறியடிக்கப்பட்டது.

சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து நேரு கருத்துக் கூறும்போது, “சீனா என்னை ஏமாற்றி விட்டது, என் முதுகில் குத்திவிட்டது’ என்று விரக்தியை வெளிப்படுத்தினார். கிருஷ்ணமேனன் ராணுவ அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகுதான், இந்திய ராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை நேரு உணர்ந்து கொண்டார்.

1962-ம் ஆண்டுக்கு முன்பாக எத்தகைய சூழ்நிலை நிலவியதோ அதே நிலைதான் இன்றும் நிலவுகிறது. இப்போதும் சீனா நமது எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி ஆக்கிரமிப்பதோடு நமது நிலப்பரப்பில் உள்ள பாறைகளில் சிவப்பு எழுத்துகளில் சீனா என்ற பெயரை எழுதியுள்ளது.

அருணாசலப் பிரதேசத்தில் திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தைக் கடுமையாக சீனா எதிர்க்கிறது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சுற்றுப்பயணத்தைக்கூட சீனா கடுமையாக எதிர்க்கிறது.

சீனா வெளியிடும் தேச வரைபடங்களில் அருணாசலப் பிரதேசத்தை தனக்குட்பட்ட பகுதியாகக் காட்டிக் கொள்கிறது. காஷ்மீரைத் தனி நாடாக அங்கீகரித்து, அதற்கு சிறப்புத் தூதரை நியமித்துள்ளது.

இந்தியா மீது சீனா மீண்டும் போர் தொடுப்பதற்குண்டான அனைத்து விதமான முன்தயாரிப்புகளையும் திட்டமிட்டுச் செய்து வருகிறது.

சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சம்மேளனம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்கள்படி, இந்தியாவின் பெருநகரங்களைக் குறிவைத்து ஏவுகணைகளை சீனா நிறுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் மூலம் அணுகுண்டு தாக்குதலை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது. ஹைனன் தீவில் அணுஆயுத நீர்முழ்கிக் கப்பல் தளத்தை சீனா ஏற்படுத்தியுள்ளது. இத் தளத்தில் இருபதுக்கும் மேற்பட்ட அணுஆயுதக் கப்பல்களை நிறுத்தி இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது.

இந்தியாவின் விமானப்படை தலைமை மார்ஷல் பாலிஹோமி மேஜர், இந்திய அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், “சீனா, இந்திய எல்லையில் ஏராளமான விமானப்படையைக் குவித்து வருகிறது. அதனால் நாமும் நம் விமானப்படையை சீனாவுக்கு நிகராக வலுப்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் முப்படைத் தளபதிகளும் ராணுவ நிபுணர்களும் ராஜதந்திரிகளும் சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆதரங்களுடன் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். வெளியுறவுத் துறை அமைச்சரும், ராணுவ அமைச்சரும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இதுவிஷயத்தில் நேருவின் பாணியிலேயே செயல்பட்டு வருகின்றனர். இந்திய எல்லையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரை சீனா நிறுத்தியுள்ளது. சீனா- இந்தியா இடையே 3,500 கி.மீ. வரை எல்லைக்கோடு உள்ளது. காஷ்மீர் பகுதியில் மட்டும் 36 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை ஆக்கிரமித்துவிட்டது.

சமீபத்தில் சீனா வெளியுறவுத் துறை அதிகாரிகள் இந்தியாவை 36 துண்டாக உடைத்துப் பிரித்து பலவீனப்படுத்த வேண்டும் என பகிரங்கமாகப் பேசியுள்ளனர். நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் மூலம் மறைமுகமாக ஆட்சியை தன் கையில் வைத்துள்ள சீன அரசு, இந்தியாவுக்கு எதிராக நேபாள நாட்டை உருவாக்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தியாவில் உள்ள நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள், உல்பா தீவிரவாதிகள், மணிப்பூர் போர்க் குழுக்கள், நாகா தீவிரவாதிகள் ஆகிய பயங்கரவாதக் குழுக்களுக்கு மறைமுகமாக சீனா ஆயுத, பொருளாதார உதவிகளைச் செய்து வருகிறது.

சமீபத்தில் அருணாசலப் பிரதேசத்தைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரி கணேஷ் கோயு, இந்தியாவின் சார்பில் சீனாவுக்குச் செல்லும் பயிற்சி அதிகாரிகளின் குழுவில் இடம்பெற்றிருந்தார். சீனா, அவருக்கு மட்டும் விசா வழங்க மறுத்தது. அருணாசலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி, அதனால், கணேஷ் கோயு சீன நாட்டு பிரஜை. அதனால் விசா வழங்கத் தேவையில்லை எனக் கூறிவிட்டது. இதன் காரணமாக, சீனாவுக்கு அனுப்ப இருந்த இந்தியக் குழுவின் பயணத்தையே இந்திய அரசு ரத்து செய்தது.

அருணாசலப் பிரதேசத்தில் இந்திய அரசு ரூ. 3,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியை அணுகியது. இதுவிஷயத்தில் சீனா தலையிட்டு, இந்திய அரசுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கொடுக்க வேண்டிய தொகையை வழங்கக் கூடாதென நிர்பந்தம் செய்தது. அருணாசலப் பிரதேசத்தில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை சீனா தடுக்கிறது.

இந்தியாவின் வற்றாத மிக நீளமான பிரம்மபுத்திரா இந்தியாவில் உற்பத்தியாகி சீனாவுக்குள் புகுந்து, மீண்டும் இந்தியாவுக்குப் பாயும் நதியை சர்வதேச நதி நீர் கொள்கைக்கு எதிராக சீன அரசு, அணை கட்டித் தடுப்பதன் மூலம் இந்தியாவின் நீர் திட்டம், நீர்மின் திட்டங்களை முடக்க  நினைக்கிறது.

இந்தியாவைச் சுற்றியுள்ள சிறிய அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளில் இந்திய விரோத எண்ணங்களை வளர்ப்பதோடு, மேற்கண்ட நாடுகளுக்கு “எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற கருத்துக்கேற்ப சீனா பல்லாயிரம் கோடி ரூபாயை மேற்கண்ட நாடுகளில் முதலீடு செய்து, போக்குவரத்து சாலைகள், துறைமுகங்கள் மின் உற்பத்தி நிலையங்கள், அணுஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றை அமைத்து வருவதோடு ராணுவத் தடவாளங்களையும் ராணுவத் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி வருகிறது.

இந்திய – சீனா போர் ஏற்பட்டால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள வசதிகளை சீன ராணுவம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

பாகிஸ்தானில் கவுடார், வங்கதேசத்தில் சிட்டகாங், மியான்மரில் சிட்வி, இலங்கையில் ஹம்மன்தோட்டா ஆகிய இடங்களில் புதிய துறைமுகங்களை சீனா ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துறைமுகங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் திட்டத்துக்கு “ஆபரேஷன் முத்துமாலை’த் திட்டம் என்று பெயர்.

இந்த முத்துமாலைத் திட்டம் எப்போது வேண்டுமானாலும், ராணுவத் துறைமுகங்களாக மாற்றப்பட்டு, இந்தியாவின் குரல்வளையை நெரிக்கும் திட்டமாக மாறும்.

1950-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது, இந்தியா வாய்மூடி மெüனமாக இருந்த காரணத்தால் – சீனாவின் அடாவடித்தனத்தை இந்தியா வெளிப்படையாகக் கண்டிக்கத் தவறிய காரணத்தால், இன்றுவரை திபெத் விஷயத்தில் சர்வதேச சமூகத்தின் கண்டனங்களில் இருந்து சீனா தப்பி வருகிறது. இதுவிஷயத்தில் சர்வதேச அரங்கில் இந்தியா, சீனாவுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு திபெத் மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.

அதேபோல், இலங்கை சிங்கள அரசுக்கு, சீனா கொடுக்கும் ஒத்துழைப்பு உதவிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கையில் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உகந்த, இந்தியாவுக்கு விசுவாசமான தமிழ் ஈழ மக்களை ஆதரிக்க வேண்டும்.

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்’ என வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார். ஏற்கெனவே, தனது பலவீனமான வெளியுறவுக் கொள்கையால் ஏராளமான நிலப்பரப்பை இந்தியா இழந்துள்ளது. அதைப் போரிட்டு மீட்காவிட்டாலும், இருக்கும் நிலப்பரப்பையாவது நேரு பாணியில் இருந்து விலகி, மன்மோகன் சிங் அரசு பாதுகாக்க வேண்டும் என்பதுதான் தேசபக்தர்களின் வேண்டுகோள்.

நன்றி தினமணி

குரலை மாற்றும் வசதி கொண்ட செல்பேசிகளால் ஆபத்து

தொழில்நுட்ப வளர்ச்சி வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன.

தகவல் தொடர்புக்கான கண்டுபிடிப்புகளில் பெரிய சாதனையாகக் கருதப்படும் தொலைபேசியின் வழித்தோன்றலான செல்பேசி இன்று அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நம்மில் கணிசமானோரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்பேசிகள் உண்டு.

கையடக்க செல்பேசிகளை விதவிதமான வடிவங்களில், நவீன வசதிகளுடன் அறிமுகம் செய்வதில் தனியார் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதன் விளைவாக டார்ச் லைட்டில் தொடங்கி கேமரா, விடியோ என்று ஒவ்வொரு நாளும் புதுப்புது வசதிகள் செல்பேசிகளில் கூடிக் கொண்டே போகின்றன.

இந்நிலையில், சீன நாட்டுத் தயாரிப்பு செல்பேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “வாய்ஸ் சேஞ்சர்’ என்ற வசதி பலரின் தூக்கத்தைக் கெடுப்பதாக மாறியிருக்கிறது. சில முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் இந்த வசதி தற்போது வரத் தொடங்கிவிட்டது.

அதாவது, இந்த வசதியுள்ள செல்பேசிகளில், “வாய்ஸ் சேஞ்சர்’ பகுதியில் முதியவர், நடுத்தர வயது ஆண், இளைஞர், குழந்தை, இளம்பெண், நடுத்தர வயது பெண், மூதாட்டி என்று 7 வகையான குரல் பிரிவுகள் இருக்கும்.

இதில், ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நாம் பேச விரும்பும் நபரைத் தொடர்பு கொண்டால், எதிர் முனையில் இருப்பவருக்கு நம்முடைய குரல் நம் குரலாக ஒலிக்காது; மாறாக, நாம் தேர்ந்தெடுத்த முதியவர் குரலோ பெண் குரலோ ஒலிக்கும் மிகவும் தத்ரூபமாக.

பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காக இந்தத் தொழில்நுட்ப வசதியை செல்பேசி நிறுவனங்கள் வழங்கினாலும், சிலர் தவறான வழியில் இந்த வசதியைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.

உதாரணமாக, நாம் இளம்பெண் குரலைத் தேர்ந்தெடுத்துப் பேசினால், எதிர்முனையில் இருப்பவர் தன்னிடம் பேசுவது இளம்பெண் என்றுதான் நினைத்துக் கொள்வார்.

இந்த வசதியை தவறாகப் பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவு எத்தனை மோசமானதாக இருக்கும் என்பதற்கு அண்மையில் மதுரையில் நிகழ்ந்த பொறியாளர் முத்துவிஜயன் கொலைச் சம்பவம் ஓர் உதாரணம்.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த முத்துவிஜயனிடம் (24) செல்பேசியில் பேசிய ஒருவர் தனது பெயர் பிரியா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கியுள்ளார். முத்துவிஜயனும் அவரை நம்ப, நாளடைவில் இருவரும் அடிக்கடி பேசத் தொடங்கியிருக்கின்றனர். அனைத்து விஷயங்களைப் பற்றியும் மனம்விட்டு பேசியுள்ளனர். பிரியா தனக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, முத்துவிஜயனிடம் இருந்து பணம் பெற்றிருக்கிறார்.

ஒரு நாள் முத்துவிஜயனுக்கு உண்மை தெரிய வந்தது; ப்ரியா என்ற பெயரில் “வாய்ஸ் சேஞ்சர்’ வசதியைப் பயன்படுத்தி தன்னிடம் பேசியது ஓர் ஆண் என்று.

இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்தது. முத்துவிஜயன் கொல்லப்பட்டார். பெரும் சிரமத்துக்குப் பிறகு எதிரிகளை போலீஸôர் கைது செய்தனர்.

முத்துவிஜயன் ஓர் உதாரணம்தான். வெளியே தெரியாமல் எத்தனையோ “வாய்ஸ் சேஞ்சர்’ மோசடிகள் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவமானத்துக்குப் பயந்து இந்த மோசடிகள் அவரவருக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன.

பொதுவாக, தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை பலர் தனக்குள்கூட சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை. ஆதலால், இத்தகைய பிரச்னைகள் சமயத்தில் ஒருவரின் மனநலனையே பாதிக்கக்கூடும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

ஆனால், உளவியல் அடிப்படையிலும், குற்றச் செயல்கள் அடிப்படையிலும் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கும் இத்தகைய தொழில்நுட்ப வசதியைக் கட்டுப்படுத்த நம்முடைய சட்டத்தில் இடமில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியது, “செல்பேசியில் குரலை மாற்றிப் பேசி மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றி புகார்கள் வந்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மற்றபடி தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லை’ என்கின்றனர்.

பிரச்னைக்குரிய இத்தகைய தொழில்நுட்ப வசதிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேபோல, தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுக்கும், இதுபோன்ற வசதிகளைக் கொண்ட செல்பேசிகள் வைத்திருப்பவர்களுக்கும் சுயகட்டுப்பாடு அவசியம்.

பார்த்து ரசித்தது


என்னது, கட்சியில… உள்கட்சிப் பூசலா… எனக்கு… இப்போவெல்லாம் இந்த மாதிரி விஷயங்கள் பத்தி பேசினாலே காது சரியா கேக்கறதில்லை… வேற ஏதாவது விஷயம் இருந்தா சொல்லுங்க…

 


முல்லைப் பெரியாறு புது அணை ஆய்வு விஷயத்தில நான் மாட்டினது இருக்கட்டும்… அடுத்ததா அணை கட்டப் பணம் கேட்டு கேரளாக்காரங்க உங்க கிட்டேதான் வருவாங்க மாண்டேக் சிங் ஜி… அப்போ என்ன செய்யப் போறீங்கன்னு பாக்கத்தானே போறேன்…

 


அடுத்து என்ன செய்யப்போறீங்கன்னு கேட்டா இப்படி “கை” காண்பிக்கறீங்களே… பத்திரிகைக்காரங்க பொல்லாதவங்க… காங்கிரசில் சேரப்போவதாக ராஜ்நாத்சிங் சூசக தகவல்-னு செய்தி போட்டாலும் போட்டிடுவாங்க… ஜாக்கிரதை…

 


இதுலதான் சொர்க்கம் இருக்குதுன்னு எல்லாரும் சொல்றாங்க… நானும் ரொம்ப நேரமாத் தேடறேன்… கண்டுபிடிக்க முடியலியே…!

 


நாங்க ரெட்டி பிரதர்ஸா இல்ல வெட்டி பிரதர்ஸான்னு கேள்வி கேக்கறீங்களே…. மீடியாக்காரங்கன்னா என்ன வேணா கேள்வி கேக்கலாமா…? இதெல்லாம் டூ…..மச்….

 


ஏம்மா, சபா செகரெட்டரி இப்போ என்ன சொல்லிட்டாருன்னு இப்படி வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கறீங்க…?

அக்கரைச் சீமை: தண்ணீருக்குள் நடந்த அரசவைக் கூட்டம்!


மாலத்தீவு அரசு தன்னுடைய அமைச்சரவைக் கூட்டத்தை அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தண்ணீருக்குள் நடத்தியது என்ற செய்தியையும், புகைப்படங்களையும் வெளியிடாத உலக ஊடகங்களே இல்லை எனலாம். அத்தனை முக்கியத்துவம் கொண்ட நிகழ்ச்சியை நாமும் விட்டுவிடக்கூடாது.

உலகம் வெப்பமயமாகிக் கொண்டு வருவதால் பனிக்கட்டிகளும், பாறைகளும் உருகிஉருகி கடல் மட்டத்தை உயர்த்துகின்றன. பூகோளரீதியாக மாலத்தீவு நாட்டுடன் இயற்கை அவ்வளவு கருணையாக நடந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இப்போதைய கணக்குப்படி கடல்மட்டம் அந்தப் பகுதியில் 18 முதல் 60 சென்டிமீட்டர் வரை உயர்ந்தால்கூடப் போதும், மாலத்தீவு கடலுக்குள் போய்விடும். வரைபடத்தில் அப்படி ஒரு நாடு இருந்ததற்கான அடையாளமே அழிந்துவிடும். இந்த அபாயம் 2100 ஆம் ஆண்டு வாக்கில் நடைபெறும் என்கிறது ஆய்வு.

அதற்குள் நாட்டைக் காப்பாற்றியாக வேண்டும். உலக நாடுகளின் கவனத்திற்கு இதைக் கொண்டு போயாக வேண்டும். புதுமையாக என்ன செய்யலாம்?

கடல் பகுதியில் “லகூன்’ என்றழைக்கப்படும் தேக்கத்துக்குள் “கேபினட் மீட்டிங் போடலாம்’ என்று முடிவெடுத்தார்கள்.

தண்ணீரின் தரையில் மேசை, நாற்காலிகள் அழுத்திப் பொருத்தப்பட்டன. மாலத்தீவு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு டைவ் அடிக்கவும், தண்ணீருக்குள் தக்க உபகரணங்களுடன் 45 நிமிடங்கள் தங்கியிருக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதிபர் முகமது நஷ்த் டைவ் அடிப்பதில் தேர்ந்தவர். எனவே அவருக்கு எந்தப் பயிற்சியும் தேவைப்படவில்லை.

சைகை மொழி, வெள்ளை அட்டைகளை வைத்துக்கொண்டே ஒருவருக்கொருவர் தண்ணீருக்குள் “பேசி’க் கொண்டார்கள்.

மாலத்தீவு 800 கி.மீ பரப்பளவில் 100 தீவுகளைக் கொண்ட நாடு, இவற்றில் 90 சதவீதப் பகுதி கடல் மட்டத்துக்கு மேல் ஒரு மீட்டர் உயரத்தில்தான் இருக்கின்றன.

சுனாமியெல்லாம் தேவையில்லை. கடல் கோபித்துக் கொண்டு ஒரு பெருமூச்சி விட்டால் போதும்.

மாலத்தீவு இறந்து போகும்!

சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் செயற்கை சிறுநீரகம்: கல்லூரி மாணவர் சாதனை

சிறுநீரகங்கள் செயலிழப்பதால் பாதிக்கப்படும் நோயாளிகளின் உயிரைக் காக்க உதவும் செயற்கை சிறுநீரகத்தை கண்டுபிடித்து மருத்துவ உலகில் சாதனை படைத்துள்ளார் பெங்களூர் பொறியியல் கல்லூரி மாணவர்.

பெங்களூர் ஞானபாரதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் மருத்துவ மின்னணு பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ள அவரது பெயர் புதாதித்யா சட்டோபாத்யாய (24); கோல்கத்தாவைச் சேர்ந்தவர்.

உலகில் சிறுநீரக செயல் இழப்பால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான மக்களுக்கு புத்துயிர் ஊட்டியுள்ள இந்த கண்டுபிடிப்பு குறித்து புதாதித்யா அளித்த பேட்டி:

நமது உடல் இயல்பாக செயல்பட சிறுநீரகம் மிகவும் முக்கிய பங்கு வகுகிறது. உடலின் தண்ணீர், உப்பின் அளவை முறையாக பராமரிப்பது, ரத்தத்தை சுத்தப்படுத்துவது, கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது போன்ற பணிகளை 2 சிறுநீரகங்களும் செய்கின்றன.

ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சரியாக செயல்படாமல் போனால் மற்றொரு சிறுநீரகம் மூலம் உயிர் வாழலாம். இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டால் நோயாளி இறக்க நேரிடும். சிறுநீரகங்கள் செயலிழக்கும் சமயத்தில் குறிப்பிட்ட நோயாளிக்கு “டயாலிசிஸ்’ சிகிச்சை செய்யப்படும்.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டால் நோயாளியின் ஒரே ரத்த மாதிரியைக் கொண்டவர்கள் அல்லது குடும்பத்தினரின் பொருத்தமான சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை செய்து எடுத்து பொருத்துகிறார்கள். சில நோயாளிக்கு பொருத்தமான சிறுநீரகம் கிடைப்பது சிரமமாக உள்ளது.

டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சையில் பல சிக்கல்களும் ஆபத்தும் உள்ளன. நோயாளியின் வாழ்நாளும் வாழ்க்கைத் தரம் மேம்படுவதும் குறைவே. எனவே, இந்த சிக்கல்கள் இல்லாமல் நோயாளியின் உயிரைக் காக்கும் “மாற்றத்தகுந்த செயற்கை சிறுநீரகத்தை’ கண்டுபிடித்துள்ளோம்.

பயோகம்பேட்டபில் பாலிமர் மெட்டீரியலால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறுநீரகத்தை ஒரு சிறுநீரகமோ, 2 சிறுநீரகங்களுமோ செயலிழந்த நோயாளிக்கு பொருத்திவிட்டால் இயற்கை சிறுநீரகத்தைப் போலவே செயல்படும். அதிகபட்சம் 18 ஆண்டுகள் வரை வெளிப்புற பேட்டரியின் உதவியுடன் இது இயங்கும்.

இதைப் பொருத்திய பிறகு அடிக்கடி சிகிச்சை செய்யத் தேவையில்லை. டயாலிசிஸ் போல வலி ஏற்படாது, சிகிச்சைக்கு அதிக செலவாகாது. நான் 9-ம் வகுப்பு படிக்கும்போது எனது உறவினர் ஒருவர் சிறுநீரகங்கள் செயலிழப்பால் இறந்தார். இதையடுத்து சிறுநீரக நோயாளியை காப்பாற்ற புதிய மருத்துவ சிகிச்சையை கண்டுபிடிக்க வேண்டுமென குறிக்கோள் வைத்து படித்தேன்.

விடா முயற்சியாலும் எங்கள் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் மார்டின் ஜெபராஜ், கோல்கத்தா மருத்துவர் அபிஜித், இந்திய அறிவியல் கழக (ஐஐஎஸ்) விஞ்ஞானி ஏ.ஜி.ராமகிருஷ்ணன், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் முகோபாத்யாய உள்ளிட்டோரின் உதவியாலும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபி.ஜே.அப்துல்கலாம் உள்ளிட்டோரின் ஊக்கத்தாலும் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த முடிந்தது.

உலகிலேயே முதல் முறையாக கண்டுபிடிக்கபட்டுள்ள இந்த செயற்கை சிறுநீரகத்தை விலங்குக்கு பொருத்தி மருத்துவர்கள் செய்த சோதனை முழு வெற்றி அடைந்துள்ளது. அடுத்த கட்டமாக மத்திய அரசு அனுமதிபெற்று, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மனிதருக்கு பொருத்தி சோதனை செய்ய வேண்டும்.

இதுவும் வெற்றி பெற்றுவிட்டால் இந்த செயற்கை சிறுநீரகத்தை வர்த்தக ரீதியில் அதிகம் உற்பத்தி செய்து, சிறுநீரக செயலிழப்பு நோயால் அவதிப்பட்டு வரும் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு பொருத்தி அவர்களது உயிரைக் காப்பாற்றலாம் என்றார் அவர்.

புதாதித்யா தனது கண்டுபிடிப்பு குறித்து ஸ்வீடனில் நடந்த ஐரோப்பிய சிறுநீரக சங்க மாநாடு உள்ளிட்ட சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். பிரபல ஆக்ஸ்போர்டு என்டிடி மருத்துவ இதழிலும் அவரின் கண்டுபிடிப்பு பிரசுரமாகியுள்ளளது.

தனது கண்டுபிடிப்புக்காக சர்வதேச “பேடன்ட்’ எனப்படும் காப்புரிமை பெற்றுள்ள புதாதித்யா, 2012-ல் வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்த செயற்கை சிறுநீரகங்கள் விற்பனைக்கு வரும்; இதற்காக பல்வேறு இந்திய, வெளிநாட்டு நிறுவனத்தார் என்னை அணுகியுள்ளனர் என்றும் கூறுகிறார்.

புங்கை இலையின் மகத்துவம்


புங்கை இலைக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணை போக்கும் சக்தி உள்ளது.

அதாவது, புங்கன் மர இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

மேலும், வெட்டுக்காயம், புண் ஆகியவற்றை ஆற்றும் சக்தியும் இலைக்கு உள்ளது.

புங்கன் இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர காயம் ஆறும்.

இதில்லாமல், புங்கன் இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக்காயம் விரைவில் ஆறும்.

புங்கன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டி வர வீக்கம் குறையும்.

புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை.

தீப் புண்களை ஆற்றும் சக்தி புங்கை மரத்தின் பட்டைக்கு உள்ளது.

புங்கை மரத்தின் பட்டை, ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை -இவை ன்றையும் நன்கு அரைத்து புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.

புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர முல நோய் தீரும்.

புங்கை மரத்திற்கு அந்த காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். பல் துலங்க புங்கை மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தினார்கள்.

அந்த புங்கை மரத்தின் வேருக்கு அதிக மகத்துவம் உண்டு.

புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.

வேர்ட் டிப்ஸ், டிபஸ், டிப்ஸ்-3

கீழே வேர்ட் புரோகிராமில் நாம் எளிதாகவும் அடிக்கடியும் பயன்படுத்தக் கூடிய சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க அதன் மீது கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்திடவும். ஆனால் சொல்லை அடுத்துள்ள வாக்கியக் குறிகள் தேர்ந்தெடுக்கப்படமாட்டாது.
ஒரு வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க அதன் மீது கர்சரை வைத்து கண்ட்ரோல் கீ அழுத்தியவாறு கிளிக் செய்திடவும். வாக்கியம் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு பாரா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட அந்த பாராவில் எங்கேனும் கர்சரை வைத்து மூன்று முறை கிளிக் செய்திடவும்.
வேர்டில் பேக் ஸ்பேஸ் (Backspace) அழுத்தினால் ஒரு எழுத்து அழியும். கண்ட்ரோல் + பேக் ஸ்பேஸ் (Ctrl+ Backspace) அழுத்தினால் ஒரு சொல் அழியும்.
மேல் அம்புக் குறி அழுத்தினால் ஒவ்வொரு வரியாக மேலே செல்லலாம். கண்ட்ரோல் + மேல் அம்புக் குறியினை அழுத்தினால் ஒவ்வொரு பாராவாக மேலே தாவலாம். இதே போல கண்ட்ரோல் + ஷிப்ட்+மேல் ஆரோ அழுத்தினால் ஒரு பாரா முழுவதும் செலக்ட் செய்யப்படும்.
புதிய சொல் பெற: நீங்கள் ஏற்படுத்திய டாகுமெண்ட்களில் ஒரே சொல்லையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அல்லது ஏதேனும் ஒரு சொல் அதில் இடம் பெறுவது உங்களுக்குச் சரியில்லை எனத் தோன்றுகிறதா? குறிப்பிட்ட அந்த சொல் தரும் பொருளை ஒத்த வேறு சொல் பெற, அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் குதூணணிணதூட்ண் சினானிம்ஸ் என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்தால், அந்த சொல்லுக்கான பொருள் தரும் வேறு சொல் பட்டியல் ஒன்று கிடைக்கலாம்.

டாகுமெண்ட் பக்கம் ஒன்றுக்கு பார்டர் அமைக்க வேண்டுமா?
பார்மட் மெனு திறக்கவும். பார்டர்ஸ் அன்ட் ஷேடிங் (Borders and Shading) என்பதைக் கிளிக் செய்திடவும். அதில் பேஜ் பார்டர் (Page Border) என்னும் டேபினைக் கிளிக் செய்திடவும். உங்களுக்குப் பிடித்த பார்டரைக் கிளிக் செய்தால் பார்டர் அமைக்கப்படும். இதற்கு ரெடிமேட் ஆக இன்னொரு வழியும் உள்ளது. இந்த டூல்பாரினை மெனு பாருடன் வைத்துக் கொண்டால், நேரடியாக பிடித்த பார்டரில் கிளிக் செய்து பெறலாம். இந்த பார்டர்கள் அடங்கிய ஐகான் ஆல் பார்டர்ஸ் (All Borders) என்ற தலைப்புடன் குறுக்குக் கோடு போட்ட சிறிய கட்டம் கொண்ட ஐகானாகக் காட்சி அளிக்கும்.
டாகுமெண்ட்களுக்கிடையே செல்ல: பல டாகுமெண்ட்களைத் திறந்து இயக்கிக் கொண்டிருக்கீறீர்களா? அடுத்த டாகுமெண்ட் செல்ல கண்ட்ரோல் + எப்6 (Ctrl+F6) அழுத்தவும். பின்னால் உள்ள டாகுமெண்ட் பெற வேன்டுமா? கண்ட்ரோல் + ஷிப்ட்+ எப்6 (Ctrl+Shift+F6) அழுத்தவும். வேகமாக ஒரு பக்கத்திற்குச் செல்ல கோ டு (Go To) டூல் பார் உதவும். இந்தக் கட்டளை பைண்ட் அண்ட் ரீபிளேஸ் (Find and Replace) என்பதில் கிடைக்கும். இதனை வெகு வேகமாகப் பெற ஸ்டேட்டஸ் பாரினைக் கண்டறியவும். டாகுமெண்ட் கீழாக பேஜ் நம்பர், செக்ஷன், மொத்த பக்கங்களில் இது எத்தனாவது பக்கம், லைன், காலம் எனக் குறிப்புகள் தரப்பட்டுள்ளதல்லவா! அதுதான் ஸ்டேட்டஸ் பார். இதன் இடது ஓரமாகக் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்திடுங்கள். உடனே பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டம் கிடைக்கும். அதுவும் கோடு டேப் அழுத்திய நிலையில் கிடைக்கும். இதில் எந்தப் பக்கம் செல்ல வேண்டுமோ அந்த எண்ணைத் தரலாம். அல்லது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்திலிருந்து நான்கு பக்கங்கள் தள்ளிச் செல்ல வேண்டும் என்றால் +4 எனக் கொடுக்கலாம். நான்கு பக்கங்களுக்கு முன் செல்ல வேண்டும் என்றால் – 4 எனத் தரலாம். மேலும் பல வசதிகள் இருப்பதை இதில் காணலாம்.
புதிய ஸ்டைல் பிடிக்கிறதா? நீங்கள் உருவாக்கிய டாகுமெண்ட்டில் ஒரு பாராவில் அமைத்த பாண்ட், அதன் பார்மட் மற்றும் மொத்த பாரா உங்களுக்கு மிகப் பிடித்துவிட்டதா? இந்த ஸ்டைலை பின் நாளில் பயன்படுத்த எண்ணுகிறீர்களா? அப்படியானால், அதனைத் தேர்ந்தெடுத்து பார்மட்டிங் டூல் பாரினைக்கிளிக் செய்திடவும். அதில் ஸ்டைல்ஸ் அண்ட் பார்மட்டிங் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஸ்டைல்ஸ் அண்ட் பார்மட்டிங் கட்டத்தில் நியூ ஸ்டைல் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அடுத்து நியூ ஸ்டைல் என்ற கட்டம் கிடைக்கும். இதில் இதற்கு ஒரு பெயர் கொடுத்து சேவ் செய்து வைக்கலாம். பின் நாளில் ஏதேனும் ஒரு பாராவிற்கு இந்த ஸ்டைலை அமைக்க வேண்டும் என எண்ணினால் அதனைத் தேர்ந்தெடுத்து, புதிய ஸ்டைல் பெயர் உள்ள கட்டத்தைக் கிளிக் செய்திட வேண்டும்.
மொத்தமாக சேவ் செய்திட: பல டாகுமெண்ட்களை எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள். வேலை முடிந்துவிட்டது. மொத்தமாக அனைத்தையும் சேவ் செய்து குளோஸ் செய்திட வேண்டும். ஷிப்ட் அழுத்தியவாறு பைல் மெனு கிளிக் செய்திடவும். சேவ் ஆல், குளோஸ் ஆல் என இரண்டு பிரிவுகள் கிடைக்கும். இவற்றில் கிளிக் செய்து பைல்களை சேவ் செய்து குளோஸ் செய்திடவும்.
எனக்கு வேண்டாம் இந்த கோடு:
வேர்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ஹைபன்களை டைப் செய்கையில் அது நீண்ட படுக்கைக் கோடாக மாறிவிடும். இதில் என்ன பிரச்னை என்றால் இதனை பேக் ஸ்பேஸ் அல்லது வேறு கீகளால் அழிக்க முடியாது. அப்படியே நிற்கும். ஏனென்றால் அது வேர்டைப் பொறுத்தவரை ஒரு பார்டர் லைன். இதனை நீக்க வேண்டுமென்றால் அந்த கோட்டிற்கு மேலாக இடது தொடக்கத்தில் கர்சரை வைத்துப் பின் Format | Borders and Shading எனச் சென்று None என்பதனை செலக்ட் செய்திடவும். கோடு நீங்கிவிடும். மீண்டும் இந்த பிரச்னை வராமல் இருக்கக் கீழ்க்கண்டபடி செயல்படவும். Tools மெனுவில் AutoCorrect Options தேர்ந்தெடுக்கவும். விரியும் விண்டோவில் AutoFormat As You Type என்ற டேபில் கிளிக் செய்திடவும். இதில் Apply as you type என்ற பிரிவில் Border Lines என்பதற்கு அருகில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் அடிக்கும் ஹைபன்கள் அப்படியேதான் இருக்கும். பார்டர் லைனாக மாறாது.
டாகுமெண்ட்டில் எத்தனை சொற்கள்:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் எத்தனை சொற்கள் உள்ளன என்று கண்டறிய வேர்ட் கவுன்ட் என்ற வசதி தரப்பட்டுள்ளது. முழு டாகுமெண்ட் அல்லது குறிப்பிட்ட பகுதியினைத் தேர்ந்தெடுத்து, டூல்ஸ் மெனுவில் உள்ள வேர்ட் கவுண்ட் என்ற பிரிவில் கிளிக் செய்தால், எத்தனை சொற்கள் என்ற தகவலும், சில கூடுதல் தகவல்களும் கிடைக்கும். ஆனால் இந்த வேலை எதுவும் மேற்கொள்ளாமல், அந்த டாகுமெண்ட்டிலேயே எத்தனை சொற்கள் உள்ளன என்று வேர்ட் புரோகிராமைத் தானாகக் காட்டும்படி செய்திடலாம். நாம் எதனையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. நாம் எடிட் செய்து கொண்டிருந்தாலும், டாகுமெண்ட்டில் அமையும் சொற்களைப் பின்னணியில் எண்ணி, டாகுமெண்ட்டிலேயே நாம் குறிப்பிடும் இடத்தில் காட்டும். இதற்கான செட்டிங்ஸ் வேலையைப் பார்க்கலாம்.
1. நீங்கள் எங்கு இந்த சொற்கள் எண்ணிக்கை வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரை வைத்திடவும்.
2. பின் கண்ட்ரோல் +எப்9 அழுத்தவும். இப்போது வளைவுக்குறி உள்ள அடைப்பு ஏற்படும். இந்த அடைப்புக் குறிகளுக்குள் NumWords என டைப் செய்திடவும்.
3. இனி மீண்டும் எப்9 அழுத்தினால், அடைப்புக் குறிகள் நீக்கப்பட்டு, உங்கள் டாகுமெண்ட்டில் உள்ள சொற்களின் எண்ணிக்கை காட்டப்படும்.

திராட்சையின் மருத்துவ குணம்

ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன.

ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு.

உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம்.

திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், முளை, நரம்புகள் வலுப்பெறும்.

ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.

பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.

திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும்.

சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.