Daily Archives: நவம்பர் 10th, 2009

கோபத்தை கொண்டாட வேண்டாம்


மனிதனுடைய உணர்ச்சிகளில் மிகவும் அபாயகரமானது கோபம். இது உறவுகளுக்குள் சிக்கலை ஏற்படுத்துகிறது. நபர்களை எதிரிகளாக மாற்றுவதுடன், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும், நம்முடைய சொந்த விஷயங்கள், குடும்பம், சமுகம் மற்றும் தொழிலில் தாக்குதலை ஏற்படுத்துகிறது. தவிர, முரட்டுத்தனம், துன்பம், நாசம், அழிவு போன்ற தீய காரியங்களுக்கு இட்டுச் செல்கிறது.

ஆனால், மனநல மருத்துவர்கள் கோபத்தை தவறாக கருதக்கூடாது என்கிறார்கள். ஏனெனில், கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கருத்து. கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும். உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். உங்களின் நன்மதிபை உயர்த்திக் கொள்ளுங்கள்: தங்களுடைய நன்மதிப்பை மேம் படுத்திக் கொள்வதே, கோபத்தைக் கையாளுவதற்கான சிறந்த வழியாகும். சிறந்த முறையில் கையாண்டால், கோபத்தாலும் உலகில் மாற்றங் களை ஏற்படுத்த முடியும். ஏனெ னில், நியாயமான மனித உரிமைகளை பெறுவதற்கு இது உதவும். மதிப்பு குறைவாக இருந்தால் மகிழ்ச்சிக்குலைவு, மன அழுத்தம், தவறான விமர்சனம் உள்ளிட்ட பல தீயவைகளுக்கு காரணமாகி விடும். உங்களை நீங்களே சரிபடுத்திக் கொள்ளுங்கள்: நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றி உள்ளவர் களின் குறைகளைக் கண்டுபிடித்து, அதைத் திருத்திக் கொள்ளுமாறு கூறுகிறோம் அல்லது திருத்த முற்படுகிறோம். ஆனால், நாம் செய்ய வேண்டியது முதலில் நம்முடைய குறைகளை நாமே சரிசெய்து கொள்வதுதான். கோபத்தைக் குறைக்க வேண்டுமென்றால், நம்முடைய கோபத்திற்கான உண்மையான காரணத்தை ஆராய வேண்டும். தவறு நம் மீது இருந்தால் கோபப்படுவதில் அர்த்தமே இல்லை. உடனடி முடிவு எடுக்க வேண்டாம்: நீங்கள் கோபத்தில் இருந்தால், கண்களை முடி முச்சை மெதுவாக இழுத்து விட்டு ரிலாக்ஸ் செய்யுங்கள். சில நிமிடங்களில் கோபம் காணாமல் போயிருக்கும். அதுபோல் கோபமான சூழ்நிலையில் எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம். பிரச்சினைக் கான காரணத்தை ஆராய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தீர்வு எளிதில் கிடைக்கும். அமைதியானவராக இருங்கள் நீங்கள் கோபமாக இருக்கும்போது, உங்களுக்கு எதிரில் இருபவரின் பேச்சை உற்றுக் கவனிங்கள். அப்போதுதான் உங்கள் கோபத்திற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ள முடியும். அதுபோல், நம் மீது தவறு இருக்கும்போது எந்தவித உணர்ச்சியைம் வெளிக்காட்டாமல் அமைதியாக இருபதும் அவசியம். பண்புடன் பழகுங்கள்: முறையான பழக்க வழக்கம் இல்லாவிட்டால் கோபத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும். அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளும், கட்டுபடுத்தபட்ட உணர்வுகளும் ஒருநாள் அழுத்தம் தாங்காமல் வெடித்துக் கொண்டு வெளியேறும். எனவே, நீங்கள் நம்புகின்ற ஒருவரிடம் ப்ரீயாக மனம் விட்டு பேசுங்கள். மன்னித்தலும், மறத்தலும்: ஏதாவது ஒரு தவறான விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அந்த விஷயத்தை அப்போதே மறந்து விடுவதே உங்களுடைய கோபத்தைக் கட்டுபடுத்துவதற்கான சிறந்த வழியாகும். மன்னித்தலையும், மறத்தலையும் பண்பாகக் கொண்டவர்களே தற்போது இந்த உலகத்திற்குத் தேவை. ஆத்திரத்தில் இருக்கும்போது மறப்பதும், மன்னிபதுமே கோபத்தை ஒழித்து வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும். பிறரை நம்புங்கள்: மற்றவர்களை நம்பினால் நிங்கள் கோபப்பட வழியே இருக்காது. எனவே, மற்றவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். எப்போதும் கோபப்பட்டுக் கொண்டே இருந்தால் நம்மால் வெற்றியடைய முடியாது. ஒரு நொடி கோபப்பட்டால் அறுபது விநாடிகள் சந்தோஷத்தை இழக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, பிறரின் மேல் நம்பிக்கை வைத்து கோபத்தை வெற்றி கொள்ளுங்கள். பிறருடன் நட்பாய் இருங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.

இந்த வார இணைய தளம்

ஒவ்வொரு நாளும் நாம் இந்த உலகின் சக்தியைத் தான் பயன்படுத்தி வருகிறோம். சக்தியானது நம்மைச் சுற்றி இருக்கிறது. ஒளி, வெப்பம், மின்சக்தி எனப் பல வகைகளில் உள்ளது. நம்முடைய உடம்பு இந்த சக்தி அடங்கி உள்ள பொருட்களைப் பயன்படுத்துகிறது. கார்போஹைட்ரேட், புரொட்டீன் உள்ள பொருள்கள் என்று கூறுவது எல்லாமே நமக்கு சக்தியைத் தருவன ஆகும். இவற்றைப் பயன்படுத்தித்தான் நாம் சுவாசிக்கிறோம்; அலைகிறோம்; வளர்கிறோம்; சிந்திக்கிறோம். வேலை பார்ப்பதற்கும் விளையாடுவதற்கும் இந்த சக்தியைத் தானே பயன்படுத்துகிறோம்.

அடிப்படையில் நாம் பயன்படுத்துவது வெப்பம் மற்றும் மின்சாரம். இரண்டு பொருட்கள் ஒன்றை ஒன்று உராய்வதிலிருந்து கிடைக்கிறது. எவ்வளவு வேகமாக இவை அசைகின்றனவோ, அந்த அளவிற்கு சூடு அதிகமாகிறது. அதே போல மின்சாரம்; எலக்ட்ரான் வேறு ஒரு வயர் போன்ற பொருளில் நகரும்போது மின்சக்தி கிடைக்கிறது. ஆனால் இவை எத்தனை நாட்களுக்கு நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்த உலகம் தன் இயற்கைச் சக்தியைச் சிறிது சிறிதாக இழந்து கொண்டு வருகிறதே. என்றாவது ஒரு நாள் நாம் எந்த சக்தியும் கிடைக்காமல் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுமோமே. அதனால் தான் நாம் பல்வேறு நிலைகளில் நம் இயற்கை சக்திக்கு புத்துணர்ச்சி தரும் வழிகளைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சூரிய ஒளி பயன்படுத்தி அடுப்புகள் போன்றவை நம் முயற்சிகளின் ஓர் எளிய வெளிப்பாடு. காற்றாலைகளைப் பயன்படுத்தி மின்சாரம், ஓடும் நீரைப் பயன்படுத்தி மின்சாரம், இயற்கை தாவரக் கழிவு மற்றும் மனிதக் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் போன்றவை அடுத்த நிலையில் உள்ளன. மேலே சொல்லப்பட்ட முறைகளின் அடிப்படை பொருளான சூரிய ஒளி, காற்று, கழிவு போன்றவை நமக்கு இலவசமாகக் கிடைக்கும் பொருள்களாகும். இவற்றை எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம் என்பதே இன்று நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

இது குறித்து இணையத்தில் தேடிய போது, அருமையான தளம் ஒன்று நமக்குக் கிடைத்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொறுப்புள்ள குடிமக்கள், எதிர்கால சந்ததியினரைப் பற்றி சிந்தித்து செயலாற்றுபவர்கள் என அனைவரும் ஆழமாகப் படித்துச் செயல்பட வேண்டிய பல வழிகளை இந்த தளம் சுட்டிக் காட்டுகிறது. இந்த தளத்தின் இணைய முகவரி: http://www.reenergy.ca இதில் நுழைந்தவுடனேயே இதன் பல்வேறு பிரிவுகள் நம்மை வரவேற்று வியப்பில் ஆழ்த்துகின்றன. ஏனென்றால் அனைவருக்கும் ஏற்ற வகையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. நீங்கள் ஓர் ஆசிரியர் என்றால் அவர்கள் மாணவர்களுக்கு புதுப்பிக்கக் கூடிய சக்தி குறித்து என்ன தர வேண்டும் என ஒரு தளப்பிரிவு காட்டுகிறது.
மாணவர்கள் என்ன மாதிரி திட்டங்களை மேற்கொள்ளலாம் என இன்னொரு பிரிவு காட்டுகிறது.
பொதுவான தகவல்கள் பல தலைப்புகளிலும், குறிப்பிட்ட பிரிவுக்குண்டான தகவல்கள் அவற்றின் தலைப்புகளிலும் தரப்பட்டுள்ளன. Renewable Energy Basics, Solar Electricity, Solar Heat, Wind Energy, Water Power, Biomass Energy, Clean Energy Techniques எனப் பல பிரிவுகள் நம்மை புதிய தளப்பிரிவுகளுக்கு எடுத்துச் சென்று தகவல்களைத் தருகின்றன.
நாம் எதிர்கொள்ளும் காலத்தின் தேவையை மிகச் சிறப்பாக விளக்குகின்றன. அனைவரும் பார்த்து, அறிந்து சிந்திக்க வேண்டிய தகவல்களைக் கொண்டுள்ள இந்த தளம் ஒரு சிறப்பான தளமாகும்.

உடல் பருமனை குறைக்கும் கரிசலாங்கண்ணி

* வெங்காயத்தை நறுக்கும்போது நம் கண்ணுக்குப் புலப்படாத ஆவி வெளியாகும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண்கள் மீது படும்படி வைத்தால் விரைவில் புண் ஆறும். வெங்காயச் சாற்றில் அமிலத் தன்மை இருப்பதே இதற்குக் காரணம்.

* தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும்.

* காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் ரத்தசோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை.

* பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெருங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது.

* கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

* விவசாயிகளுக்கும், சலவைத் தொழிலாளிகளுக்கும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் காலில் சாதாரணமாக வரக்கூடியது சேற்றுப்புண். இதை குணமாக்க, கால்களை ஈரம் போகத் துடைத்துவிட்டு, மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் போதும். சேற்றுப்புண் ஆறிவிடும்.

* சிலருக்கு தோல் நோய்கள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். அவர்கள், கொத்தமல்லி இலையை நன்றாக அரைத்து அந்த சொரசொரப்பான இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே நல்ல குணம் பெறலாம். சொரசொரப்பான தோலும் மிருதுவாகும்.

வந்துவிட்டது கிளவ்ட் கம்ப்யூட்டிங்

செலவைக் குறைத்து, பல்வேறு வசதிகளை எங்கும், எப்போதும் தரக்கூடிய கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை இந்தியாவில் தொடங்கிவிட்டது. இன்டர்நெட் வழியாகத் தரப்படும் எந்த சேவையையும் கிளவுட் கம்ப்யூட்டிங் என அழைக்கலாம் என்றாலும், இன்டர்நெட் வழி கம்ப்யூட்டிங் பணிகளுக்குத் தேவையான கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் வசதிகளைத் தருவதே கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகும். அடிப்படைக் கட்டமைப்பு சேவை, கம்ப்யூட்டர் இயக்க மேடை சேவை மற்றும் சாப்ட்வேர் தொகுப்பு பயன்பாடு வழங்கும் சேவை என கிளவ்ட் கம்ப்யூட்டிங் மூன்று பிரிவுகளாக இயங்குகிறது.

அடிப்படைக் கட்டமைப்பு (InfrastructureasaService): சேவையில் நிறுவனம் ஒன்று மற்ற நிறுவனங்களுக்குத் தேவையான சர்வர்களை நிறுவி, கட்டணம் பெற்றுக் கொண்டு அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கும். இதனை சேவைக் கட்டணம் செலுத்தி எடுக்கும் நிறுவனம் இதில் தனக்குத் தேவையான புரோகிராம்களை அந்த சர்வர்களில் பதிந்து இயக்கிக் கொள்கிறது. நாம் மின்சாரம், குழாய் வழி கேஸ், தண்ணீர் போன்றவற்றைப் பயன்படுத்துவதைப் போன்றது. இயக்க மேடை சேவை (Platformasaservice) என்பது கட்டணம் செலுத்தும் நிறுவனத்திற்குத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களையும், சாப்ட்வேர் உருவாக்கிப் பயன்படுத்தத் தேவையான டூல்களையும், சேவை வழங்குபவர் தன் சர்வர்களில் நிறுவி வழங்குவது. இன்டர்நெட் வழியாக இந்த சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் தொகுப்புகளை இந்த மேடை அமைப்பில் உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்ளும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சாதனங்களையும் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்துவது போன்றது இந்த சேவை.
சாப்ட்வேர் தொகுப்பு (Softwareasaservice) பயன்பாடு வழங்கும் சேவை என்பது, இந்த சேவையை வழங்குபவர் கம்ப்யூட்டர் கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களைத் தன் சர்வரில் அமைத்து, அவர்களுக்குத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அனைத்து உதவிகளையும் தருவது. ஒரு நிறுவனத்திற்கான இமெயில் சேவை, ஸ்டாக் இயக்கம், டேட்டா கணிப்பு போன்ற சேவைகள் அனைத்தும் இதில் அடக்கம்.
இவற்றில் என்ன வசதி என்றால், ஒரு வாடிக்கையாளர் கட்டணம் செலுத்தியபின் எந்த நேரத்திலும் சேவையைப் பெற முடியும். கம்ப்யூட்டர் கிராஷ் அல்லது டவுண் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. அது சேவையைத் தருபவர் பொறுப்பு. வாடிக்கையாளருக்கு சர்வர், கம்ப்யூட்டர், சாப்ட்வேர் போன்றவற்றிற்கான முதலீட்டுச் செலவு இல்லை. தேவையான அளவிற்கு சேவையைக் கேட்டுப் பெறலாம். எவ்வளவு பயன்படுத்துகிறோமோ அதற்கு மட்டும் கட்டணம் செலுத்திப் பயன்படுத்திப் பின் விட்டுவிடலாம்.
தற்போது இத்தகைய கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்கும் நிறுவனங்கள் மாதக் கட்டணம் பெற்றுக் கொண்டு அந்த காலத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை வழங்கி வரும் பழக்கத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சேவையை வழங்குபவரும் ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேரினைப் பதிந்து அதனைப் பல வாடிக்கையாளருக்கு வழங்க முடியும். எனவே இங்கு குறைவான செலவில் இரு தரப்பினரும் பயனடைய முடிகிறது. இன்றைய இன்டர்நெட் வசதி இதற்கு ஆதாரமாகவும், அடிப்படை இயக்கத்தைத் தருவதாகவும் அமைகிறது. இரு தரப்பினரும் எந்த நேரத்திலும் தங்கள் ஒப்பந்தத்தினை முடிவிற்குக் கொண்டு வர முடியும். இதனால் இருவருக்கும் நஷ்டம் ஏற்படப் போவதில்லை.
பயன்படுத்துபவருக்கென எந்த கம்ப்யூட்டரும் சாப்ட்வேரும் தேவையில்லை. அதனை இயக்கும் அறிவு மற்றும் தொழில் நுட்பம் தேவையில்லை. சிஸ்டம் என்னவாகுமோ என்ற பயம் தேவையில்லை. எங்கு சென்றாலும் உறுதியாகவும் நம்பிக்கையாகவும் சேவையைப் பயன்படுத்தித் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும். இத்தகைய சேவை சிறிய அளவில் இயங்கும் அனைத்து பிரிவு நிறுவனங்களுக்கும் உகந்ததாகும். இந்த வகையில் இதுவரை மேற்கொண்டு வந்த முதலீட்டுச் செலவு, தேய்மானச் செலவு ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.
கிளவ்ட் கம்ப்யூட்டிங் சேவையைப் பயன்படுத்தும் ஒரு விற்பனை நிறுவனம், தான் விற்பனை செய்த பொருளுக்கான பில்லைக் கூட இந்த சேவை மூலம் தயாரித்து வழங்க முடியும். அதே நேரத்தில் வாடிக்கையாளரின் முகவரியைத் தன் விற்பனைப் பொருள் சேமிப்புக் கிடங்கிற்கு அனுப்பி குறிப்பிட்ட இடத்தில் டெலிவரி செய்திடவும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம். பொருள்கள் விற்பனையாவதை மொத்தமாக அறிந்து, காலியாகும் பொருட்களைக் கொள்முதல் செய்திட நினைவூட்டும் செய்தியையும் இந்த சேவை மூலம் பெறலாம்.
தொழிற்சாலை ஒன்றில், பணிபுரிபவர்களின் வேலை நாட்கள், ஊதியம், வேலைத் திறன், தொடர்புடைய உற்பத்தித் திறன் என அனைத்தையும் இன்டர்நெட் இணைந்த ஒரு கம்ப்யூட்டர் மூலம் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வழி பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவை இந்தியாவில் தற்போது கிடைக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணையுடன் இந்தியாவில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் சேவையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பிரிவான ரிலையன்ஸ் டேட்டா சென்டர், “ரிலையன்ஸ் கிளவ்ட் கம்ப்யூட்டிங் சர்வீசஸ்” என்ற பெயரில் இந்த சேவையை வழங்குகிறது.
இன்றைய அளவில் இந்தியாவில் மூன்றரைக் கோடி வர்த்தகர்களும், உற்பத்தியாளர்களும் தங்கள் வருமானத்தில் 0.5 முதல் 4 சதவிகிதம் வரை தகவல் தொழில் நுட்ப சாதனங்களில் முதலீடு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிதியை அவர்களின் தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுத்த கிளவுட் கம்ப்யூட்டிங் உதவுகிறது. அண்மையில் எடுத்த ஆய்வில் வரும் 2011 ஆம் ஆண்டில் 40 சதவிகித தகவல் தொழில் நுட்ப வேலைகள், கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் தான் மேற்கொள்ளப்படும் என்று தெரிய வந்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் இந்த கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் கட்டமைப்பு மற்றும் சாப்ட்வேர் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. இதற்கென மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஏன், இந்த சேவைக்கு கிளவ்ட் கம்ப்யூட்டிங் எனப் பெயர் வந்தது? அனைத்து சேவைகளும் இன்டர்நெட் வழியே மேற் கொள்ளப்படுவதால், இணைய வைய வெளியில் மேகமே பிரதானமாக உள்ளதால் இது கிளவ்ட் கம்ப்யூட்டிங் எனப் பெயர் பெற்றது

ஆபத்தில்லாத ‘ஆர்கானிக்’-பழசுக்கு வருது மவுசு

பாக்கெட்களில் அடைக்கப் பட்ட உணவுப்பொருட்கள் விற்கப்படும் “மால்’ கலாசாரத் துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. “மால்’ கலாசாரம் தவறில்லை தான்; ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.
அமெரிக்காவில் எழுந்த ஆர்கானிக் கோஷம் இப்போது, இந்தியாவில் பரவி வருகிறது. ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது.

எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.
உப்பு: இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்பு தான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இது தான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவை தான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்னை தான்.
ரீபைண்ட் ஆயில்: செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப் போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்கு பார்த்தாலும் பாக் கெட் உணவு எண்ணெய் தானே. அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண் ணெய் இன்னமும் சில இடங் களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண் ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இது தான் நிபுணர்கள் கருத்து.
வெண்ணெய், நெய், வனஸ்பதி: மூன்றுமே கொழுப்பு சார்ந்தது தான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால் தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் தான் மிக நல்லது.
உலர்ந்த தானியங்கள்: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள் தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு , தானியங்கள் தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்பு தான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
பாலிஷ் அரிசி: அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம் தான் மிக நல்லது என்பது இப்போது தான் பலருக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில் தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.
சந்தை காய்கறி,பழங்கள்: உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக் கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம்; விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல் தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.
பால்: பால் உடலுக்கு நல்லது தான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்பு சத்து நீக்கப் பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில் தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.
கோலா, காபி, டீ: இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கது தான். அதிலும் , பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள் தான்.
மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.
சர்க்கரை: சர்க்கரைக்கு பதில், வெல்லத்தை பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.
ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலை யே விண்ணை தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.

குழந்தைகளை `எரிக்கும்’ தின்பண்டங்கள்!


டி.வி.யில் காட்டப்படும் அநேக விளம்பரங்களில் குழந்தைகளே நடிக்கிறார்கள். விளம்பரங்களில் காட்டபடும் உணவு பொருட்களில் பெரும்பாலும் குழந்தைகளை குறி வைத்தே தயாரிக்க படுகின்றன.

அப்படி காட்டபடும் பெரும்பாலான தின்பண்டங்கள், எண்ணையில் பொரிக்கபட்ட… உருவாக்கபட்ட ஸ்நாக்ஸ் அயிட்டங்களே. இவை அனைத்துமே குழந்தைகளின் உடலை கெடுக்கக் கூடியவை. இன்றைய நாகரீக உலகின் நவீன தின்பண்டங்களான இவை, புதிய வடிவங்களில் பாக்கெட் செய்யப்பட்டு பல நாட்கள் கடைகளில் தொங்கவிட படுகின்றன. ரசாயனக் கலவையின் துணையோடுதான் உற்பத்தி செய்யப்படுகிறது.

குளிர்பானங்களில் பூச்சி மருந்து தன்மை இருந்ததை மீடியாக்கள் முன்பு வெட்ட வெளிச்சமாக்கின. அதன்பின்னர், குளிர் பான நிறுவனங்கள், தங்கள் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முன்வந்தன. ஆனால் தற்போது லிற்பனையாகும் உணவு பொருட்களான நொறுக்குத் தீனிகள் பலவும் குழந்தைகளின் உடலை கெடுக்கும் உணவுகளாக இருந்தும் அவை பெருமளவு தயாரிக்கபடுகின்றன.

தற்போது மருத்துவர்கள் இந்த மாதிரியான ஸ்நாக்ஸ் அயிட்டங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். இதற்கு காரணமாக அவர்கள் சொல்லுவது, `இந்த நொறுக்குத் தீனிகள் அனைத்தும், மெழுகு கலவையால் உற்பத்தி செய்யப்படுகின்றன! இதை குழந்தைகள் சாப்பிடுவதால் சுகாதாரத்தை சிதைத்து விடும். மேலும் இந்த உணவு பொருட்கள் புதிய பல்வேறு நோய்களை உற்பத்தி செய்யும் விஷத் தன்மையுள்ளவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.’ என்கிறார்கள்.

ஆனால், டிவியில் வரும் விளம்பரங்களின் கவர்ச்சியை நம்பி, குழந்தைகள் அந்த உணவுகளை கேட்டு அடம் பிடிக்கும். பெரியவர்களும் நம்பி ஏமாறுவார்கள். உதாரணமாக, அந்த தின்பண்டங்களை எரித்தால் நீங்களே அதை கண்கூடாக பார்க்க முடியும். மெழுகுவர்த்தி போல் அவை எரியும்! இதை குழந்தைகள் சாப்பிட்டால் என்னவாகும் என்பதை நினைத்து பாருங்கள்.

இந்தமாதிரியான தின்பண்டங்களுக்கு பதிலாக நீங்களே வீட்டில் வித விதமாக, கலர் கலராக தின்பண்டங்களை தயாரித்து குழந்தைகளுக்கு கொடுத்து சாப்பிட வையுங்கள். குறிப்பாக சத்தான உணவுகளை தயாரித்துக் கொடுத்து, சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொடுங்கள்.

உறுதியான உடலும், சுறுசுறுபான மனமும் இருக்க உணவு அவசியமாகிறது. ஆனால் அந்த உணவில் மாவு பொருள், புரதம், கொழுப்பு ஊட்டச் சத்துகள், தாது பொருட்கள் அளவான நிலையில் சமச்சீர் உணவாக இருக்க வேண்டும்.

சமச்சீர் உணவு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய நரம்பு பாதைகளை ஊக்குவித்து உடலுக்கும், மனதிற்கும் இன்பமளிக்கிறது. பட்டாணி, அவரையில் கிடைக்கும் வைட்டமின் பி குறைந்தால் மனச் சோர்வு, நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கீரை வகைகளில் கிடைக்கும் இரும்புச்சத்து குறைந்தால் ஞாபக மறதி, உடல் சோர்வு, மனச்சோர்வு உண்டாகும்.

சோயாபீன்ஸ் போன்ற பொருட்களில் கிடைக்கும் தையாமின் மன அமைதி, நல்ல தூக்கத்தை கொடுக்கும். இவை குறைந்தால் மனத் தளர்ச்சி ஏற்படும். அரிசி, கோதுமை மற்றும் இனிப்புகளில் உள்ள மாவு பொருட்கள் உடலுக்கு சக்தியைக் கொடுத்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.