இந்தியாவின் இரும்பு மனுஷி’-இந்திரா காந்தி

`இந்தியாவின் இரும்பு மனுஷி’ என்று ஆதரவாளர்களாலும், எதிர்பாளர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்டவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. இந்திரா காந்தி காலமாகி கால் நுற்றாண்டாகிவிட்ட நிலையில், அவருடன் நெருங்கி பழகிய சிலர், அவருடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

சித்தார்த்த சங்கர் ரே:

1923-ம் ஆண்டு, இந்திரா காந்தியின் தாத்தா மோதிலால் நேருவைச் சந்திப்பதற்காக எனது தாத்தா சித்தரஞ்சன் தாஸ் என்னை அலகாபாத்துக்கு ரெயிலில் அழைத்துச் சென்றார். மோதிலால் நேரு எனக்கு ஒரு பொம்மை வாங்கிக் கொடுத்தார். அப்போது ஐந்து வயதுச் சிறுமியான இந்திரா, பொம்மை கேட்டு என்னிடம் சண்டையிட்டார். கடைசியில் இநதிரா பொம்மையின் ஒரு காலோடு ஓடிவிட, என் கையில் தலை மட்டும் எஞ்சியிருந்தது. மீதமுள்ள பாகம் அந்தக் களேபரத்தில் எங்கோ போய் விழுந்துவிட்டது.

இந்திரா தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் ஒரு போராளியாகவே இருந்தார். ஒருமுறை ஒரிசாவில் ஒரு கலவரக்காரன் இந்திராவின் மீது கல்லை எறிந்து அவர் முக்கை உடைத்துவிட்டான். அவரை `பாண்டேஜ்’ போட்ட முக்குடன் பார்த்த நான், “நீங்கள் உங்களின் நீளமான முக்கை எல்லோருடைய விஷயங்களிலும் நுழைத்தால் இன்னும் நிறைய காயப்பட வேண்டி வரும்” என்று நகைச்சுவையாகக் கூறினேன். அதற்கு பதிலடியாக இந்திரா சொன்னார்: “எனது நீண்ட முக்கைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அது நீளமானது என்பதால் என்னால் தொலைவில் நடப்பதைக் கூட மோப்பம் பிடிக்க முடியும்! என்றார். இந்த சமயோசிதம் என்னைக் கவர்ந்தது”

எழுத்தாளர் குஷ்வந்த்சிங்:

இந்திரா அவரது தந்தை நேருவிடமிருந்து வேறுபட்டவர். ஜவகர்லால் நேருவுக்கு இந்தியாவை பற்றி ஒரு மாபெரும் தொலைநோக்கு இருந்தது. ஐந்தாண்டுத் திட்டங்கள் அவரது யோசனைதான். அவர் தனது கனவுகளில் இலேசாகத் தவறு புரிந்தார். உறவினர், நண்பர்களுக்குச் சலுகை அளிக்கும் பலவீனமும் நேருவுக்கு இருந்தது.

ஆனால் இந்திரா, உறவினர், நண்பர்களுக்குச் சலுகை அளிக்கவில்லை. எனவே அவரால் தனது தந்தையின் நிழலிலிருந்து மீண்டு வர முடிந்தது. இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தி. இந்திராவின் கணவராக இருந்தும் அவருக்கென்று தனி முக்கியத்துவம் எதுவும் கிடைத்ததில்லை.

1971-ம் ஆண்டு நடந்த போர் இந்திராவுக்கு ஒரு பெரும் தோற்றத்தை உருவாக்கித் தந்தது.

இந்திரா ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது அவரை நான் நன்கு அறிந்தேன். அந்தக் காலகட்டத்தில் நான் ஏறக்குறைய தினந்தோறும் அவரை பார்ப்பேன். அப்போது அவரது சில குறைபாடுகளையும்,

அரசியல் உச்சத்தை அடைவதற்காக அவர் மேற்கொண்ட வழிகளையும் கண்டேன்.

அவர் மிகவும் அழகான தோற்றம் கொண்ட பெண். ஆனால் மிகவும் இறுக்கமானவர். பெண்களுக்கே உரிய குணமான, அழகான மற்ற பெண்களை விரும்பாத பலவீனம் இந்திராவுக்கும் இருந்தது.

மருமகள் மேனகா குறித்து இந்திரா தானாக ஒரு முடிவு எடுத்ததால் இந்திராவுடனான எனது உறவு பாதிக்கபட்டது. நான் மேனகாவின் பக்கம் இருப்பதாக இந்திரா நினைத்தார். ஆனால் அது உண்மையில்லை. ஆனால் யார் உண்மையை இந்திராவிடம் எடுத்துச் சொல்வது? மேனகாவையோ, அவரது அம்மாவையோ இந்திராவுக்குச் சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்களுக்கு இடையிலான உறவு முறிவு மிக மோசமாக இருந்தது. இப்போதைய தலைவர்கள் எவரைம் இந்திராவுடன் ஒப்பிட முடியாது.

ஆர்.கே. தவான்:

1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி மாலையில் இந்திரா காந்தி ஒரிசாவிலிருந்து திரும்பினார். நாடு முழுவதிலும் இருந்து வருபவர்களை தனது சதர்ஜங் இல்லத்தில் காலை 8 மணிக்கு பார்ப்பது இந்திராவின் வழக்கம். ஆனால் அவர் மாலையில் வெளியிலிருந்து திரும்பி வந்தால் மறுநாள் காலை சந்திப்பை ரத்து செய்வது என்பது ஒரு விதியானது. அதன்படி மறுநாள் காலை சந்திப்பை ரத்து செய்துவிட்டு ஓய்வெடுக்கும்படி நான் அவருக்கு ஆலோசனை கூறினேன். ஆனால் தான், பி.பி.சி.யின் பீட்டர் உஸ்டினோவுக்கு அப்பாயிட்மென்ட் கொடுத்துவிட்டதாகவும், அவர் ஏற்கனவே ஒரிசாவில் ஒரு பகுதியை பதிவு செய்திருப்பதால் மாற்ற முடியாது என்றும் கூறி விட்டார்.

எனவே தனது இருப்பிடத்தில் பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு பதிலாக அக்பர் ரோடு 1-ம் எண் இல்லத்தில் உஸ்டினோவைச் சந்திப்பது என்று முடிவானது. நான் வழக்கம்போல் அக்டோபர் 31 அன்று சதர்ஜங் 1-ம் எண் வீட்டை அடைந்தேன். ஒரு நல்ல சிகையலங்காரக் கலைஞர் வேண்டும் என்று இந்திரா காந்தி கேட்டதால் அவரது உதவியாளர் நாது ராம் அதற்கு ஏற்பாடு செய்தார்.

நான் இந்திரா காந்தியின் அறைக்குள் நுழைந்தபோது அவருக்குச் சிகை ஒழுங்குபடுத்தபட்டுக் கொண்டிருந்தது. அவர் தனது தனிபட்ட அலங்காரத்தில் மிகவும் கவனமானவர். அவரது தலையில் ஒரு முடி விலகியிருந்தாலும் நான் எனது தலையில் கைவைத்து அதைச் சைகையால் சுட்டிக் காட்டுவது வழக்கம். சிகையலங்காரக் கலைஞர் இந்திராவின் தலைமுடியை ஒழுங்குபடுத்திக் கொடிருந்தபோதே அவர் என்னை நோக்கித் திரும்பினார். ஜனாதிபதி ஜயில்சிங் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டு அன்றுதான் நாடு திரும்பினார்.

அன்று மாலை தனது வீட்டில் இளவரசி ஆன்னேவுக்கு டின்னர் அளிக்க இந்திரா திட்டமிட்டிருந்தார். விருந்தினர்கள் பற்றிய சில குறிப்பான விஷயங்களை அவர் என்னிடம் கூறினார். நான் தேவையானவற்றைக் குறிப்பெடுத்துக் கொண்டேன்.

சில நிமிடங்களிலேயே இந்திரா பேட்டிக்குத் தயாராகிவிட்டார். தொலைக்காட்சி பேட்டிகளின்போது எப்போதும் இந்திராவுடன் இருக்கக்கூடிய சாரதா பிரசாத், அக்பர் ரோடு இல்லத்திலிருந்து ஒரு செய்தியை அனுப்பினார்.

அதாவது, அங்கு வெடித்த தீபாவளி பட்டாசுக் காகிதங்களை இன்னும் சுத்தம் செய்யவில்லை, எனவே பேட்டியைத் தொடங்க மேலும் சில நிமிடங்கள் ஆகும் என்று தெரிவித்தார். அது இந்திராவுக்கு பிடிக்கவில்லை. காமிரா ஓடத் தொடங்கும்போது புல்வெளி சுத்தமாக இருக்கும்படி என்னை அதைக் கவனிக்கச் சொன்னார்.

9 மணிக்கு இந்திரா பேட்டிக்குத் தயாராகி, சதர்ஜங் வீட்டை அக்பர் ரோடு வீட்டுடன் இணைக்கும் சிறுகதவை நோக்கி நடக்கத் தொடங்கினார். வழக்கம்போல் அவருக்கு பின்னால் சில அடிகள் தள்ளி நான் நடந்தேன். அவர் சுறுசுறுப்பாக நடக்கக்கூடியவர். சிலசமயங்களில் அவரது வேகத்துக்கு ஈடுகொடுத்து நடப்பதே கஷ்டம். நாங்கள் நடந்து சென்றபோது, ஓர் உதவியாளர் ஒரு தட்டில் `கப் அண்ட் சாசருடன்’ சென்று கொண்டிருந்தார்.இந்திரா அவரை நிறுத்தி, எங்கே அவற்றைக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் என்று கேட்டார். நேர்முகத்தின்போது ஒரு டீ- கப் செட்டை இந்திராவுக்கு முன் வைத்திருக்க வேண்டும் என்று உஸ்டினோவ் கூறியதாக அவர் தெரிவித்தார். உடனடியாக அந்த டீ- செட்டை வேண்டாம் என்று நிராகரித்த இந்திரா, வேறு நல்லதாகக் கொண்டுவரும்படி கூறினார். பின்னர் அவர் தொடர்ந்து நடந்தார். அந்தக் கணம் பல யுகங்கள் போல எனக்குத் தோன்றுகிறது. வரலாறு அதன் அனைத்து சோகமான வடிவங்களிலும் என் கண் முன் விரிவதை நான் கண்டேன்.

அவர் சிறுகதவை எட்டியதுமே, பாதுகாவலர்களுக்கு கரம் குவித்து `நமஸ்தே’ தெரிவித்தார். அப்போது பியாந்த் சிங் தனது பிஸ்டலை உயர்த்தி இந்திராவைச் சுடுவதை நான் கண்டேன். அவர் சுருண்டு தரையில் விழுந்தார். இந்திரா விழுந்தபின்னும் சத்வந்த் சிங் தனது இயந்திரத் துப்பாக்கியால் அவரைச் சுட்டார். சத்வந்த் சிங் சுட்டபோது இந்திரா நின்றுகொண்டிருக்கக்கூட இல்லை. அவ்வளவு கொடூரமானது அது.

நான் என்னவென்றே புரியாது திகைத்து போனேன். நான் அப்போது பார்த்ததை இன்றும் மறக்க முயல்கிறேன். நான் ஒருநிலைக்கு வர முயல, பியாந்த் சிங் பஞ்சாபி மொழியில் கத்தினார், “நாங்க செய்ய வேண்டியதை நாங்க செஞ்சுட்டோம். இப்போ நீங்க செய்ய வேண்டியதை நீங்க செய்யலாம்!”-என்றார்.

இந்திராகாந்தியை நாடு இழந்துவிட்டாலும், அவர் இந்த நாட்டிற்காக செய்த தியாகங்கள் மறக்கமுடியாதவை. அவரால் இந்தியா பல துறைகளில் தலைநிமிர்ந்தது.

%d bloggers like this: