இனிய எதிரி :இன்று சர்வதேச சர்க்கரை நோய் தினம்

Patient-and-physician-view---blood-sugar-tool

இப்போது எல்லோரும் பயப்படும் ஒரு விஷயமாக “சர்க்கரை நோய்’ உருவாகிவிட்டது. நம் உடலில் கணையம் சுரக்கும் இன்சுலின்தான், ரத்தத்தில் குளுகோஸ் (சர்க்கரை) அளவை சீராக பராமரிக்கிறது. உடலுக்குத் தேவைப்படும் இன்சுலின் உற்பத்தி செய்யப்படாவிட்டாலோ அல்லது உற்பத்தி செய்த இன்சுலினை நம் உடல் சரியாக பயன்படுத்திக் கொள்ளாவிட்டாலோ “சர்க்கரை’ நோய் ஏற்படுகிறது.”டைப்-1’சர்க்கரை நோய் வகையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் “இன்சுலின்’ போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்.

இது குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கே அதிகமாக ஏற்படும். “டைப்-2′ வகை நோயாளிகளுக்கு பொதுவாக இன்சுலின் தேவைப்படாது. வயதானவர்களுக்கு ஏற்படும் நோய் இது. என்றாலும் தற்போது 30 வயதிலேயே இவ்வகை நோய் வந்துவிடுகிறது. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள் வழியாகவே அவர்கள் இவ்வகை நோயை சமாளிக்கலாம். “டைப்-2′ வகை நோயாளிகளில் சிலருக்கு இன்சுலின் தேவைப்படும். இந்தியாவில் “டைப்-2′ வகை சர்க்கரைநோயால்தான் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தண்ணீர் தாகம், தொண்டை வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் சோர்வு, பசி, உடல் எடை குறைதல், ஆறாத புண்கள், பார்வை மங்குதல் ஆகியன சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் அறிகுறிகள்.

சர்க்கரை நோய் இருக்கிறது என்று டாக்டர் சொன்ன உடனே பலர் அதிர்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். தான் ஓர் வாழ்நாள் நோயாளி என்ற எண்ணம் அவர்களிடம் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் வந்தவுடன் மனதில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் நம் வாழ்க்கை முறை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். எண்ணெய், தேங்காய், உள்ளிட்ட கொழுப்புப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கலாம். இனிப்பு, அதிக காரம்,வறுவல் உணவுகளை தவிர்த்துவிட்டு அவித்த பொருட்களுக்கு மாறலாம். ஆட்டுக்கறியிலிருந்து மீன் மற்றும் கோழி சேர்த்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யாதவராக இருந்தால் அதற்கு நேரம் ஒதுக்கலாம். நேரம் தவறாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, முறையான இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். கிழங்கு வகைகள் தவிர, கீரை, காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம். இவ் விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சர்க்கரை நோய் இருக்கிறது என்று டாக்டர் கூறிய உடன், மனம் உடைந்து போகக் கூடாது. 30 – 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கூட, சர்க்கரை நோயுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

புகைபிடிப்பவரா நீங்கள்?நீங்கள் புகைப்பிடிப் பவராக இருந்தால், இன்றே நிறுத்திவிடுங்கள். சர்க்கரை நோய் இருப்பவர்கள் புகை பிடித்தால் அது இதயத்துக்கு ஆபத்தானது. சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கே புகைபிடித்தல் கேன்சர், இதய நோய்கள், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும் ஒரு கோடியே 70 லட்சம் பேர் இதயம் தொடர்பான பிரச்னைகளால் மரணமடைகின்றனர். 2020ம் ஆண்டில் இதயம் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்படுவோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கேட்கவே வேண்டாம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதைதான்.

எச்.பி..ஏ.1.சி.,பரிசோதனை தெரியுமா?உடலில் சரியான விகிதத்தில் குளுகோஸ் அளவு இல்லாவிட்டால், பிரச்னைதான். சர்க்கரை இருப்பதால் குறைத்து சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள் தங்கள் உடலுக்குத் தேவையான சக்தியை (குளுகோஸ்) அளிக்கத் தவறிவிடுகிறார்கள். ஒரு மணிநேரத்துக்கு 5 கிராம் குளுகோசை நம் மூளை பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு நிமிடத்தில் ஒரு லிட்டர் ரத்தம் மூளைக்கு பாய்கிறது. ஆகவே சரியான விகித்ததில் சாப்பிடாவிட்டால் மூளைக்கு செல்லும் குளுகோஸ் அளவு பாதிக்கப்பட்டு மூளை செயல் இழக்கலாம். நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம். சாப்பிட்ட அந்த சக்தியை எப்பஐ எரிக்கிறோம் (அதாவது, வேலை செய்து சக்தியை செலவழிக்கிறோம்) என்பது முக்கியமானது. இரவில் நேரம் கடந்து குடித்துவிட்டு, அதிகமான அளவில் சாப்பிட்டு தூங்குவோருக்கு ரத்தத்தில் அதிக சர்க்கரை ஏற்படும். அதே போல் ஓட்டலில் “பஃபே’யில் சாப்பிடுவதையும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.சர்க்கரை நோய் இருந்தும், முறையாக சாப்பிடாதவர்களுக்கு, திடீர் பசி, வியர்வை, தலைச்சுற்றல், தலைவலி, பார்வை மங்குதல் உள்ளிட்டவை அறிகுறிகள் ஏற்படும்.உணவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்த்தல், அதிகளவில் சர்க்கரை மருந்துகளை சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்வதற்கு தகுந்து உணவு எடுத்துக் கொ ள்ளாமை ஆகியவற்றால் மேற்கூறிய அறிகுறிகள் வரலாம்.

இதுபோன்ற நேரங்களில் பழச்சாறுகள், டீ, காபி உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.எச்.பி.ஏ.1.சி., (கிளைகாசிலேட்டட் ஹீமோகுளோபின்) எனும் ரத்த பரிசோதனை தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இதில் கடந்த 3 மாத காலத்தில் நம் உடலில் இருந்த சர்க்கரை அளவையும் எதிர்காலத்தில் உடல் உறுப்புகள் ஏதும் பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கான பதிலையும் தெரிந்து கொள்ளலாம். ரத்த நாளங்களும் சிறுநீரகங்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றன. சிறுநீரில் ஆல்பமின் அதிகமாக இருந்தால் சர்க்கரை நோய் சிறுநீரகங்களை பாதிக்கத் தொடங்குகிறது என்று அர்த்தம். கிரியேடினைன் யூரியா நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டும் எச்.பி.ஏ.1.சி., பரிசோதனையில் இது தெரிய வரும்.நமக்கு நாமே ரத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது எளிது. தற்போது இதற்கான எளிய சாதனங்கள் கிடைக்கின்றன.

எதற்கெடுத்தாலும் டென்ஷன் : மன அழுத்தம் தான் இன்று சர்க்கரை நோய் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. எந்த ஒரு பிரச்னையையும் ஒரு தனிநபர் எப்படி சமாளிக்கிறார் அல்லது எப்படி கையாள்கிறார் என்பதைப் பொறுத்தே மன இறுக்கம் ஒருவொருக்கொருவர் மாறுபடுகிறது.தீமை விளைவிக்கக்கூடிய, அச்சுறுத்துதல் ஏற்படுத்தக் கூடிய, சவால் தரக்கூடிய சூழ்நிலைகளில் மன அழுத்தம் ஒருவருக்கு ஏற்படுகிறது. சிலர் எந்நேரமும் எதற்கெடுத்தாலும் “நெகடிவாகவே’ சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இதற்கு பதிலாக, பிரச்னையை சமாளிக்கவோ அல்லது ஒரு விஷயத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கவோ திட்டமிட்டு செயல்படலாம். எப்போதும் மிகவும் “சீரியசாக’ இருக்கக்கூடாது. இப்படித்தான் இருக்க வேண்டும், என்ற கட்டாயத் திணிப்புகளையே மனதில் கொண்டு செயல்படாமல் விஷயங்களை எளிமையான அணுகுமுறையுடன் கடைபிடியுங்கள்.

சர்க்கரை வந்தால் “சிறுநீரகம்’ பாதிக்கப்படும், இதயம் பிரச்னைக்குள்ளாகும்… அவர் சொன்னார்… இவர் சொன்னார் என்று பயப்படக்கூடாது. எல்லாவற்றுக்கும் காரணம் நானே என்று எல்லாவற்றுக்கும் தன்னையே நொந்து கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக, “சர்க்கரை நோய் வந்ததால்தான் நான் இப்போது இந்த கட்டுப்பாடுகளையெல்லாம் கடைபிடிக்கிறேன்’ என்று நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினருடன் வெளியில் செல்வது, நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது என்று நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.இளம் வயதினரிடையே அடுத்தவரை குறை கூறுவதும், தன்னையே பழித்துக் கொள்ளும் பழக்கமும் குறைவாகக் காணப்படுகிறது. ஆகவே அவர்கள் “பாஸிடிவாக’ சிந்திக்கிறார்கள். இவ்விஷயத்தில் இளம் வயதினரிடம் கற்றுக் கொள்ளலாமே.

இளம் வயதில் : இளம் வயதில் சர்க்கரை நோய்ஏற்படுவது இந்தியாவில் பொதுவாக காணப்படுகிறது. இது குடும்பத்தினரிடையே மிகப்பெரிய மனக்குழப்பத்துக்கு ஆளாக்குகிறது. திருமண வயதை எட்டியுள்ளவர்களுக்கு சர்க்கரை இருப்பதை, சம்பந்தியிடம் சொல்வதா… வேண்டாமா… என்று வீட்டில் குழம்புகின்றனர்.இன்று வளர்ந்துள்ள மருத்துவ முறைகளால், சர்க்கரை நோய் எளிதில் பராமரித்துக் கொள்ளக் கூடிய ஒரு நோயாக உள்ளது. பெற்றோர்களுக்கு அந்நோய் இருந்திருக்கும் பட்சத்தில், மரபணு வழியாக இந்நோய் இளம் தலைமுறைகளுக்கு வந்துவிடுகிறது.இவர்கள் தொடர்ச்சியாக இந்நோயை கண்காணித்து வருவதும், உரிய மருந்துகளையும் எடுத்துக் கொள்வதும், உடற்பயிற்சி மற்றும் திட்டமிட்ட வாழ்க்கையை நடத்துவதும் முக்கியம்.இளம் வயதில் சர்க்கரை வந்தவர்களைப் பற்றி சமுதாயத்தில் வேறு விதமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது தேவையற்றது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் நோயாளியாகவே இருப்பார்கள் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. மற்றவர்களை விட நோய்க்காக கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டியவர்கள் என்பது மட்டுமே உண்மை.

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் தைரியத்தை அளிக்கக்கூடியது. மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவைத்துக் கொள்ள ஆழ்ந்த, நிம்மதியான 7 மணி நேர தூக்கம் அவசியம்

பெண்கள் கவனிக்க… : குடும்பத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது. பெண்ணாகப் பிறப்பதற்கு பெரும் தவம் செய்திருக்க வேண்டும் என பாரதி கூறியிருக்கிறார். பெண்களிடம் காணப்படும் சர்க்கரை நோய் அறிகுறிகள் கொஞ்சம் வித்தியாசமானவை. அதை அவர்கள் முன்னதாக கண்டறிந்தால் நல்லது. சர்க்கரை நோய்க்கான வழக்கமான அறிகுறிகள் அவர்களுக்கு காணப்படும். அத்துடன், இளம்பெண்களாக இருந்தால் பூப்பெய்தல் தள்ளிப் போகலாம், மாதவிடாய் கோளாறுகள் ஏற்படலாம். குழந்தையின்மை பிரச்னைகளும் வரலாம். “டைப்-1′ நோயாளிகள் மெலிந்தும், “டைப்-2′ நோயாளிகள் குண்டாகவும் காணப்படுவார்கள். பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது. கர்ப்பமடைந்துள்ள பெண்களில் 18 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது.

இவர்கள் எந்நிலையிலும் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையாவது அவர்கள் ரத்த பரிசோதனை செய்து சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும். மார்பக வலி உள்ளவர்கள் அதற்கான பயாப்சி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டாக்டரிடம் முறையாக ஆலோசனை பெறாவிட்டால், மகப்பேறுக்குப் பின்னர் சர்க்கரை நோய் நிரந்தரமாகும் வாய்ப்புள்ளது.மாவுச்சத்து 40 சதவீதம், கொழுப்பு சத்து 35 சதவீதம் மற்றும் புரத சத்து 25 சதவீதம் இருக்கும் படி கர்ப்பிணிகளின் உணவு அமைய வேண்டும். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், இதயம் மற்றும் நரம்பு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வரும் வாய்ப்புள்ளது.கர்ப்பிணிகள் தினமும் 10 நிமிடம் நடைப்பயிற்சி செய்யலாம். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கை தூக்கி பயிற்சி செய்யலாம். வயதானவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில், மாரடைப்பு நோய் 3 அல்லது 4 மடங்கு அதிகமாக வரும். வலியே தெரியாமல் மாரடைப்பு ஏற்படலாம். எலும்பு தேய்மானம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை எடுக்கலாம். கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோய், ஒரு நோயே அல்ல. உங்கள் வாழ்க்கை பயணம் கவலையின்றி அமையட்டும். வாழ்த்துக்கள்.

பொன்னான பாதங்கள் புண்ணாகலாமா : உலகில் சர்க்கரை நோய் பாதிக்காத குடும்பங்கள் கொஞ்சம்தான். 18 கோடி மக்களை பாதித்துள்ள இந்நோய், 2030ல் 37 கோடிப் பேருக்கு ஏற்படும்.இந்தியாவில் தற்பொழுது 4.2 கோடிப் பேர் 2030ல் 8 கோடிப் பேராக உள்ளனர். இந்நோய் ஏற்படும் வயதும் குறைந்து கொண்டே வருகின்றது. இன்று 20 வயதிற்கு கீழள்ள இளைஞர் சமுதாயத்தில் இரண்டாம் வகை சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது. உலகில் கால் இழப்பிற்கு தலையாய காரணம் விபத்தல்ல சர்க்கரை நோயே. உலகில் ஒவ்வொரு 30 நொடிக்கு ஒருவர் இந்நோயால் தன் காலை இழக்க நேரிடுகின்றது. சர்க்கரை உள்ளவர்களுக்கு, நரம்பு பாதிப்பால் கால்களில் உணர்ச்சியின்மை, கால்களில் ரத்த ஓட்ட பாதிப்பினால் புண் குணமாகும் தன்மை குறைதல், சிறுநீரக பாதிப்பினால் புரதசத்து வெளியேறும்போது புண் ஆறும் தன்மை குறைதல் மற்றும்சர்க்கரை நோயினால் கண் பாதிப்பு உண்டாகுமாயின் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.

*சர்க்கரை நோயால் பாத பாதிப்புகள்: கால் ஆணி, பாத வெடிப்புகள்
*தொற்று நோய், ரத்த ஓட்டம், நரம்பு பாதிப்பால் ஏற்படும் புண்கள்
*கால் விரல்கள் அழுகுதல், விரல்கள், பாதங்களை இழத்தல்

இவற்றிலிருந்து தப்பிக்க…செய்யக்கூடாதவை: *கத்தி, பிளேடு கொண்டு நகம் வெட்டுதல்
*வெறும் காலில் நடத்தல்
*நீரின் சூட்டை அறியாமல் பாதங்களை கழுவுவது
*இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பொழுது சைலன்சரில் பாதம் படுதல்
*புகை பிடித்தல்

சர்க்கரை நோயிலிருந்தும் அதனால் ஏற்படக்கூடிய கால் பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்க வருமுன் காப்பதே நலம்.

%d bloggers like this: