Daily Archives: நவம்பர் 15th, 2009

இந்த நாட்களையும் கண்டுக்குங்க!-உலக டயபடீஸ் நாள்

தீபாவளி, பொங்கல் மட்டுமல்ல: இதய, டயபடீஸ் நாளையும் தான்
நேற்று என்ன நாள் தெரியுமா? உலக டயபடீஸ் நாள்.
தீபாவளி, பொங்கல் போல இப்போதெல்லாம் மாதத்துக்கு ஒரு நாளாவது, இப்படி இதய நாள், டயபடீஸ் நாள், மூட்டு பாதுகாப்பு நாள் என்று ஏதாவது ஒரு நாள் வந்தபடி உள்ளன. இதையெல்லாம் கொண்டாடவா முடியும் என்று நீங்கள் கேட்கலாம். முன்பெல்லாம், இந்த நாட்கள் பற்றி வெளியே தெரியாது. இப்போது, புதுப்புது நோய்கள் பற்றிய தகவல்கள் வருகிறதே தவிர, நம்மில் பலரிடம் விழிப்புணர்வுதான் இல்லை. அதனால் தான், இந்த நாட்களில் உடல் பரிசோதனைகளுக்கு சலுகை வேறு தருகின்றன மருத்துவமனைகள்.
“எனக்கெல்லாம் ஷுகர், பி.பி., வராது’ என்று அலட்சியம் வேண்டாம்; இதுவரை இல்லாவிட்டாலும், கண்டிப் பாக “டெஸ்ட்’ பண்ணுங்க. வருமுன் தடுக்கலாமே.
பண்டிகை நாட்களை மட்டுமல்ல, ஆரோக்கியம் தரும் இந்த நாட்களையும் இனி நாம் கண்டுகொள்ளலாமே.
டைப் 1 டயபடீஸ்: உடலில் இன்சுலின் இல்லாமல் இருப்பது; டைப் 1 டயபடீஸ் என்பது, பெரும்பாலும் குழந்தைகளுக்கு தான் வரும். அதனால் தான் இதை “ஜுவனைல் டயபடீஸ், சைல்டுஹுட் டயபடீஸ்’ என்பர். கணையத்தில் இன்சுலின் சுரப்பி வேலை செய்யாது. இன்சுலின் கிடைக்காததால், ரத்தத்தில் ஷுகர் ஏறிவிடும்.
டைப் 2 டயபடீஸ்: இன்சுலின் சுரந்தும், பயன்படுத்த முடியாத நிலை வரும் போது, அதற்கு மருந்து சாப்பிட வேண்டியிருக்கிறது. பெற்றோரில் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைகளுக்கு 80 சதவீதம் வரை சர்க்கரை நோய் வர வாய்ப்புண்டு.
ஜெஸ்டேஷனல் டயபடீஸ்: நோயாளிக்கு நோயாளி இது மாறுபடும். அடிக்கடி பசி எடுப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உடல் எடை குறைவது, சிறுநீர் , தோல் போன்றவற்றில் “இன்பெக்ஷன்’ ஏற்படுவது போன்றவற்றால் வரும்.
ப்ரீ டயபடீஸ்: உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது தான் “ப்ரீ டயபடீஸ்.’ அது வந்த பத்தாவது ஆண்டில் டயபடீஸ் வரும் என்பது தான் உண்மை. ப்ளாஸ்மா டெஸ்ட், ஓரல் டெஸ்ட் என்று டெஸ்ட்கள் உள்ளன.
என்ன செய்யலாம்: ப்ரீ டயபடீஸ் இருந்தால் உடற்பயிற்சி முக்கியம். வாக் கிங், மாடிப்படி ஏறுவது, ஏரோபைக்ஸ், நடனம் ஆடுவது, சைக் கிள் ஓட்டுவது, ஸ்கேட்டிங், ஸ்கையிங், டென்னிஸ், கூடைப்பந்து, வாலிபால் போன்ற விளையாட்டுக்களையும் விளையாட முடியும்.
அதிகமானால்: டயபடீஸ் அதிகமானால், பற்கள், ஈறுகளை பாதிக்க வழி உண்டு. பல் தேய்க்கும் போது, ரத்தம் வருவது தான் அதன் அறிகுறி. வாயையும் பாதிக்கும். கண்கள் பாதிக்கும். இப்படி ஒவ்வொன்றாக பாதிக்க ஆரம் பிக்கும். கடைசியில் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும்.
பெண்களுக்கு: டைப் 2 சர்க்கரை நோய் உள்ள பெண் களுக்கு, உடல் எடையும் அதிகமாக இருந்தால், கருத் தரிப்பு பாதிக்கப்படும். அதனால், கருத்தரிக்கும் முன் மூன்று மாதங்கள், ரத்த ஷுகர் கட்டுப்பாடு மிக அவசியமாகிறது.
யாருக்கு எச்சரிக்கை: முப்பது வயதுக்கு மேல் ஆகி விட் டால், உடல் எடை அதிகமாக இருந்தால், பரம்பரையாக சர்க்கரை நோய் தொடர்ந்தால், லைப் ஸ்டைல் மாறி விட் டால், ரத்த அழுத்தம் இருந்தால் கண்டிப்பாக பரிசோதனை தேவை.

என்னென்ன “டெஸ்ட்கள்?’
* பாஸ்டிங் ப்ளட் ஷுகர்: 8 முதல் 12 மணி நேரம் , சாப்பிடாமல் இருந்து, காலையில் எழுந்தவுடன் எடுக்கும் டெஸ்ட். 70 – 110 மில்லிகிராமுக்குள் ரத்த ஷுகர் இருந் தால் நார்மல்.
*போஸ்ட் ப்ராண்டியல் ப்ளட் ஷுகர்: சாப்பிட்ட 1, 2 மணி நேரத்தில் எடுக்கப்படும் டெஸ்ட். 100 – 140 மில்லிகிராம் வரை நார்மல்.
* ரேண்டம் ப்ளட் ஷுகர்: எப்போதும் எடுக்கும் டெஸ்ட். 70 -140 க்குள் இருக்கும். அதை தாண்டினால் டயபடீஸ் தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
* ஓரல் க்ளூக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்: க்ளூக்கோஸ் சொல்யூஷன் தந்து எடுக்கப்படும் டெஸ்ட். இதில், 2 மணி நேரத்துக்கு பின், நார்மலான ஷுகர் என்று தெரிந்தால் சரி, அதிக ஷுகர் இருந்தால், சிகிச்சை ஆரம்பிப்பது முக்கியம்.
* க்ளைகேட்டட் ஹெமோக்ளோபின்: ஆரம்பக்கட்டத் தில் இந்த டெஸ்ட் தேவையில்லை. சர்க்கரை நோய் அதிகமாக இருக்கிறதோ என்ற சந்தேகத்தில் எடுக்கப்படும் டெஸ்ட் இது.
* வாயை கட்டுங்க: எதை பார்த்தாலும் சின்னக்குழந்தை போல “சப்பு’ கொட்டாதீங்க. இதோ இவற்றில் உஷாராக இருங்க போதும்.
* சர்க்கரை, தேன், வெல்லம், இனிப்புகள் கூடவே கூடாது.
* மைதா உணவுகள் டின்களில் அடைக்கப்பட்ட உணவு அறவே கூடாது.
*தானியங்கள், சோயாபீன்ஸ், சாலட் போன்றவை சாப்பிட்டு வரலாம்.
*புரோட்டீன் சார்ந்த காய்கறி வகைகள் சாப்பிடுவது முக்கியம். மீன், சாதாரண மாமிசம் கொழுப்பு நீக்கிய பால் பரவாயில் லை.
* இனிப்பு இல்லாத சில வகை பழங்கள் சாப்பிடலாம்.
* கேழ்வரகு, ஓட்ஸ் நல்லது. நார்ச்சத்துள்ள உணவுகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
*உப்பு, ஊறுகாய், அப்பளம், சட்னி, உப்பு சார்ந்த உணவுகள் மிக மிக குறைவாகவே சாப்பிடலாம். முடிந்தவரை விடுவது நல்லதே.

காலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்!

காலை உணவை, தவிர்க்க கூடாது. இன்றைய அவசர உலகத்தில், பெரும்பாலானவர்கள், காலை உணவை ஒழுங்காக சாப்பிடாமல், தவிர்த்து விடுகின்றனர் என்பது தான் உண்மை. இதற்கு நேரமின்மையே காரணமாக பலரும் தெரிவிக்கின்றனர்.
இரவு சாப்பிட்ட பின், 6 முதல் 10 மணி நேரங்கள் வரை, எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பின், காலையில் உணவு சாப்பிடுகிறோம். எனவே, காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
காலை உணவு சாப்பிடுவதால், குழந்தைகளின், நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, ஒருமுகத்தன்மை, பிரச்னைகளை தீர்க்கும் திறன் மற்றும் சுறுசுறுப்பான மனநிலைகள் ஆகியவை மேம்படும். குறிப்பாக, குளுகோசை அளிக்கும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாக சாப்பிடுவது மூளை திறனை அதிகரிக்கும். சிலர், உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல் எடையை குறைக்கிறேன் என, சாப்பாட்டை குறைப்பது அல்லது சில வேளை சாப்பிடாமல் இருப்பது போன்ற தவறுகளை செய்கின்றனர். சாப்பிடாமல் இருந்தால் தான் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மூன்று வேளையும் முறையாக சாப்பிடுபவர்கள், இயல்பான எடையுடனே காணப்படுவர்.
ஏனென்றால், காலை உணவை தவிர்ப்பவர்கள் வேறு விதமான உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை சாப்பிடுவதால், அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது.

காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த <உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அது ஜீரண சக்தியை அதிகரிக்கும். காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும். எனவே, ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக சாப்பிட திட்டமிட்டு கொள்ளுவோம்.

அழகில்லையா? கெட்-அவுட் டேட்டிங் வெப்சைட் தடா

கோபன்ஹேகன்:”டேட்டிங்’ செல்லப் போகிறீர்களா? அப்படியானால் முதலில் உங்கள் புகைப்படத்தை அனுப்புங்கள். அழகாக இருந்தால் அனுமதி. அழகில்லை என்றால் “கெட் அவுட்’ இப்படியொரு வெப்சைட் விளம்பரப்படுத்தியுள்ளது.

டேட்டிங் என்பது தனக்குப் பிடித்த பிறரிடம் தன்னைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆரம்பித்து, ஷாப்பிங், ஓட்டல், சுற்றுலா என்றெல்லாம் சுற்றிக் கடைசியில் வேறெங்கோ போய் முடிவது நமக்குத் தெரிந்ததுதான். மேற்கத்திய கலாசாரம், இப்போது நம்மவர்களையும் பீடித்துள்ளது.

இந்த டேட்டிங் குக்கு அழகானவர்கள் மட்டுமே தங்கள் புகைப்படங்களை அனுப் பிப் பதிவு செய்ய வேண்டும் என்று சொன்னால் எப்படியிருக்கும்? ஆம், டென்மார்க்கில் தான் இப்படியொரு வெப்சைட்டை ஆரம்பித்துள்ளனர்.அந்த வெப்சைட்டில் இணைபவர்கள், உலகளாவிய அளவில் தங்கள் “நண்பர்களோடு’ அளவளாவி, தங்கள் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

இதில் பல மொழி வசதி, சுற்றுலாத் தகவல்கள், நவீன வீடியோ தொடர்பு போன்ற பல வசதிகள் உள்ளன.அதோடு, “கவர்ச்சியானவர்கள், உலகளாவிய தொடர்பு, உறுதியான ஒப்பந்தம், தலைசிறந்த மாடலிங் நிறுவனங்களின் தொடர்பு’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தியுள்ள அந்த வெப்சைட், கடைசியாக, “அழகில்லாதவர்கள் தயவு செய்து அணுக வேண்டாம்’ என்றும் தெரிவித்துள்ளது.இதில் பதிவு செய்பவர்களில் 20 சதவீதம்தான் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.

புறக்கணிக்கப்படுபவர்கள் வெறுத்துப் போய், வெப்சைட்டை நிறுவிய டேட்டிங் ஏஜென்சிக்கு கொலை மிரட்டல் விடுமளவுக்கு வெப்சைட் பிரபலமாகியுள்ளது.இதன் நிறுவனர் ராபர்ட் ஹின்ட்சே கூறுகையில், ” தன்னை ஈர்ப்பவர்களோடு நெருக்கமாக இருப்பதை ஒவ்வொருவரும் விரும்புவர். அதுதான் “பியூட்டிபுல்பீப்பிள்.காம்’ (http://www.beautifulpeople.com)மின் கொள்கை. ஏனெனில் அழகை விரும்புவது இயற்கைதானே’ என கூலாக சொல்கிறார். இப்போது இந்த வெப்சைட் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பரவிவிட்டது.

ஆதிக்கத்தை இழக்கிறது அமெரிக்க டாலர், இனி அடுத்தது என்ன… ?

அமெரிக்க டாலருக்கு வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இனி உலகிலேயே முன்னணி கரன்சி என்ற அதீத கவுரவம் இனி தொடருமா என்று அலசப்படும் அளவிற்கு, நிலைமை கீழிறங்கி வருகிறது.உலகப் பொருளாதாரத்திற்கு தரப்படும் ஊக்குவிப்புகளால், அடுத் தடுத்து ஓரளவு நிலைமை சீராகும் என்ற கருத்து பேசப்பட்டாலும், அது அமெரிக்க கரன்சியான டாலரின் ஸ்திரத்தன்மைக்கு வலு சேர்க்கவில்லை.

பல்வேறு நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, கடந்த பதினைந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கையிருப்பு கரன்சியாக 64 சதவீதம் அமெரிக்க டாலர் இருக்கிறது. அப்படியிருக்கும் போது யூரோ கரன்சி, அல்லது அந்தந்த நாட்டின் கரன்சி எப்படி முன்னுக்கு வரும் என்ற கேள்வி எழும்.

சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விஜயம் மேற்கொள்ளும் போது, அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பரிவர்த்தனையில் அமெரிக்க டாலர் வீழ்ச்சி அடையாமல், ஏற்பாடுகள் செய்வார் என்ற பேச்சு இருக்கிறது.நெருடல் உறவு :அதிக அளவு அமெரிக்க டாலரை கையிருப்பாக வைத்திருக்கும் நாடுகளில் சீனாவுக்கு முதலிடம் உண்டு.

அமெரிக்காவின் பொருளாதார வெற்றி சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி எதிர்பார்த்த வெற்றி ஏற்படவில்லை என்றால், அது அமெரிக்க – சீன பொருளாதார உறவை பாதிக்கும். வேண்டுமென்றே தன் கரன்சியான யுவானை சற்று மதிப்புக் குறைவாக சீனா வைத்திருப்பதின் மூலம், அமெரிக்காவுக்கு தன் பொருட்களை அதிக ஏற்றுமதி செய்யப் பார்க்கிறது என்ற பேச்சும் இருக்கிறது. இந்த நெருடல்களை எப்படி அமெரிக்காவும், சீனாவும் பேசித் தீர்க்கப் போகின்றன என்பது இனி தான் முடிவாகும்.

கடந்த சில வாரங்களில் ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கரன்சிகள் அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் மதிப்பு கூடி நிற்கின்றன. இதில், மற்றொரு கரன்சியான யூரோ அதிக நம்பிக்கை தரும் கரன்சியாக பிரிட்டன் ஸ்டெர்லிங் பவுண்டை விட முந்தி நிற்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பில் மட்டும் உள்ள பொருட்கள் மவுசு குறைந்து வருகிறது.

இவை எல்லாம் பார்க்கும் போது, என்னதான் வளர்ந்த நாடுகள் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அதிகப் பணத்தை ஊக்குவிப்புகள் என்ற பெயரில் கொட்டினாலும், மேலும் ஏதாவது அபாயம் வந்து விடுமோ என்ற அச்சம் வந்து விட்டது. அதன் எதிரொலியாக, அதிக அளவு நிதி வைத்திருப்பவர்கள் வழக்கத்திற்கு மாறாக தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர்.

ஐரோப்பாவில் எந்த ரசீதும் இல்லாமல் தங்கக் கட்டிகளை வாங்கி சேமிப்பாக வைக்கின்றனர். இதுவரை இல்லாத வகையில், வெள்ளிக்கும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. நூறு கிராம் எடையுள்ள தங்கக்கட்டி உள்ளங்கையில் அடங்கிவிடும், அதன்விலை 3,500 டாலர், அதாவது அதன் மதிப்பு 1.60 லட்சம் ரூபாய். உலக கோல்டு கவுன்சில் தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை 20 சதவீதம் தங்கம் விற்பனை அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் ரிசர்வ் வங்கியும், கையிருப்பில் உள்ள டாலரைக் கொண்டு 200 டன் தங்கத்தை சர்வதேச நிதி நிறுவனமான ஐ.எம்.எப்.,மிடம் இருந்து வாங்கியிருக்கிறது. மத்திய நிதியமைச்சர் பிரணாபோ, “பணம் இருந்ததால் தங்கம் வாங்கினோம்: இன்னமும் அன்னியச் செலாவணிக்கு போதிய கையிருப்பு இருக்கிறது’ என்றிருக்கிறார்.ஆஸ்திரேலிய நாடு, தொழில்துறைக்கு தேவையான கச்சாப் பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு. இங்கே, அந்த நாட்டு டாலர் மதிப்பு கூடியிருக்கிறது. அடுத்தாற்போல் தங்கள் நாட்டு டாலர் மதிப்பு சரியவிடாமல் இருக்க யுக்தியை வகுக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்.

முக்கியமாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் மத்தியில் டாலர் மதிப்பு வீழ்ச்சி கவலை தருகிறது. அமெரிக்காவின் நெருக்கமான நாடான சவுதி எண்ணெய் வர்த்தகம் டாலர் கரன்சியில் தொடர்ந்து இருக்க விரும்புகிறது. ஆனால், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் ( ஒபெக்) கூட்டத்தில் வெனிசூயலா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும், கடந்த இரு ஆண்டுகளாகவே கேள்வி எழுப்புகின்றன.

கச்சா எண்ணெயை விற்று டாலராகப் பெற்று, அதை வைத்து நமக்குத் தேவையான பொருட்கள் வாங்கும் போது டாலர் வீழ்ச்சியால் அப்பொருட்கள் கூடுதல் விலை மதிப்பு பெறுகின்றன. இதைத் தடுக்க யூரோ, யென் போன்ற கரன்சிகளுக்கும் வர்த்தகம் செய்தால் என்ன என்பது இவர்கள் கேள்வி. இதற்கு இன்னமும் விடை காணவில்லை.

ஆனால் ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்குள் நடக்கும் வர்த்தகத்தில் டாலர் தேவையின்றி, பரஸ்பரம் இருநாட்டு கரன்சிகளை பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்து ஒப்பந்தமும் ஆகியிருக்கிறது. இப்பாணியில் பிரேசில், இந்தியா பேச்சு நடைபெறுகிறது.

இவைகளை எல்லாம் பார்க்கும் போது, அடுத்த சில மாதங்களில் டாலர் வலுப்பெறும் தன்மை அதிகரிக்காத பட்சத்தில், உலக நாடுகள் பலவும் தங்களது கரன்சியை சரிய விடாமல் காக்க, புதிய அணுகுமுறைகளை அமல் படுத்த நேரிடும் நிலைக்கு தள்ளப்படும் புதிய சூழ்நிலை உருவாகி வருகிறது.

எதற்கும் துணிந்தவர்கள்! (ஆன்மிகம்)

உலகில், நல்லவர்கள், தீயவர்கள் என்ற இரு வகையினரும் உள்ளனர். பிறருக்கு, நன்மை செய்வதிலேயே நாட்டமுள்ளவர்களாக இருப்பர் நல்லவர்கள்; இவர்கள், பிறருக்கு சிறு உதவியாவது செய்ய விரும்புவர். பிறருக்கு என்ன துன்பம் உண்டாக்கலாம் என்றே தீயவர்கள் சிந்தித்துக் கொண்டிருப்பர்; ஒருவர், மற்றொருவருக்கு ஏதாவது நன்மை செய்வதாகத் தெரிந்தாலும், அதை கெடுப்பதற்கே முயற்சி செய்வர்.
“இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயார். இந்த நல்ல காரியம் நடக்கக் கூடாது…’ என்று, அவனுடைய தீய புத்திக்குத் தோன்றினால், பணம் செலவழித்தாவது அதை தடுத்து விடுவர். இந்த குணம் இன்று மட்டுமல்ல; அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது!
பரீட்சித்து மகாராஜாவுக்கு, ஒரு முனிவரின் சாபம் ஏற்பட்டது. “இன்று முதல், ஏழாவது நாள் தட்சகன் என்ற நாகம் கடித்து மரணம்!’ என்பது சாபம். இதையறிந்த ராஜா, ராஜ்ஜியத்தை விட்டு, கங்கை கரைக்கு வந்து புண்ணியம் சேர்க்க, பாகவத புராணம் கேட்டான்.
சாபத்தின்படி, ராஜாவை கொத்திக் கொல்ல காத்திருந்தது தட்சகன் என்ற நாகம். இந்த விபரமறிந்த காசியபர் என்ற முனிவர், ராஜாவைக் காப்பாற்ற வந்து கொண்டிருந்தார். இவருக்கு எந்தவிதமான விஷத்தையும் இறக்கிவிடக் கூடிய மந்திரம் தெரியும்.அதனால், ராஜாவை காப்பாற்றி விடவேண்டும் என்று வந்து கொண்டிருந்தார்.
இவரை பார்த்து விட்டான் தட்சகன். அவரைப் பின் தொடர்ந்து வந்து, “ஓய்… பிராமணரே! நீர் யார், எங்கே போகிறீர்?’ என்று கேட்டான். காசியபரும், “ராஜாவை, தட்சகன் கடிக்கப் போகிறானாம். அப்படி நடந்தால், அந்த விஷத்தை என் மந்திர சக்தியால் முறித்து, ராஜாவை காப்பாற்றப் போகிறேன்…’ என்றார்.
உடனே, “ஐயா! நான் தான் அந்த தட்சகன். உமக்கு தெரிந்த அந்த மந்திர சக்தி என் கடுமையான விஷத்தை முறியடிக்குமா?’ என்றான் தட்சகன். “முடியும்!’ என்றார் காசியபர்.
“அப்படியானால் இதோ இந்த மரத்தை நான் கடிக்கிறேன். என் விஷத்தால் அது பட்டுப் போகும். தங்கள் மந்திர சக்தியால் அதை மீண்டும் துளிர்க்கச் செய்ய முடியுமா?’ என்றான்; “முடியும்!’ என்றார் முனிவர்.
அந்த மரத்தை, தட்சகன் கடிக்க, மரம் உடன் சாய்ந்து கருகியது. தன் மந்திர சக்தியால் அந்த மரத்தை மீண்டும் துளிர்விட்டுப் பூத்துக் காய்த்து நிற்கச் செய்தார் காசியபர். ஆச்சரியப்பட்டான் தட்சகன். இருந்தாலும், துஷ்ட புத்தி போகவில்லை. “ஓய், பிராமணரே… நீர் ராஜாவின் விஷத்தை இறக்கினால் என்ன கிடைக்கும்?’ என்று கேட்டான்.
“நிறைய பொன்னும், பொருளும் கிடைக்கும்!’ என்றார் காசியபர். “சரி! அப்படியானால் அதைவிட பத்து மடங்கு அதிகமாக நான் பொன்னும், பொருளும் உம்மால் சுமக்க முடியாத அளவுக்கு தருகிறேன்…’ என்றான் தட்சகன்.
அதன்படியே அவருக்கு பொன்னும், பொருளும் கொடுத்து திருப்பி அனுப்பிவிட்டு, சாபத்தின்படி பரீட்சித்து மன்னனை கடித்து விட்டான் தட்சகன். பரீட்சித்தும் வைகுண்டம் சேர்ந்தார் என்பது சரித்திரம்.
தங்கள் தீய எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள எது வேண்டுமானாலும் செய்வர் துஷ்டர்கள்; எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிப்பர். பிறர் கெட்டுப் போவதில் இவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம்! இன்றும் சிலர் அப்படியே இருக்கின் றனர். இது போன்ற துர் குணம் இல்லா மல், பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நற் குணத்துடன் நாம் இருக்க வேண்டும்.

அல்லி பூ


அழகான பூக்களை ரசித்தால் மனம் புத்துணர்வடையும். இது அனைவரும் அறிந்த உண்மை. பூக்கள் நறுமணத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும் தன்மை கொண்டவை. இந்த பூக்களில் அபூர்வமான மருத்துவக் குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன. அல்லி மலரின் மருத்துவக் குணத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தாமரையைப் போல் நீரில் பூக்கும் பூ தான் அல்லி. இந்த மலர் இறைவனுக்கு படைக்கும் மலராகும். மாலைப் பொழுதில் தான் அல்லி மலர் மலரும். அல்லிக்கு ஆல்பம், குமுதம், கைவரம் என்ற பெயர்களும் உண்டு.

Tamil – Alli

English – Water lily

Sanskri – Kumudam

Malayalam – Neerampal

Telugu – Alli-kada

Botanical Name – Nymphaea alba

இது இந்தியாவில் குளங்களிலும், குட்டைகளிலும் பயிராகும் கொடி வகுப்பைச் சேர்ந்தது.

சிவப்பு, வெண்சிவப்பு நிற பூக்களைக் கொண்டது. குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் இது ஏராளமாய்ப் பூக்கும்.

மேகமறும் புண்ணாறும் விட்டேகும் நீரிழிவு

தாகந் தணியும் தழலகலும் – வாகான

மெல்லியலே! ஆயுள்மறை வேதிய ரெலாமுரைக்கும்

அல்லி மலரால் அறி
(அகத்தியர் குணபாடம்)

உடல் சூடு தணிய

உடல் சூட்டால் பல வியாதிகள் தொற்றிக் கொள்ளும். கண்கள் பாதிப்படையும். ஈரல் பாதிப்படைந்து பித்த நீர் அதிகரிக்கும். மேலும் மலச்சிக்கல், சரும நோய்கள் உண்டாகும். இரத்த ஓட்ட மண்டலம் பாதிக்கப்படும். இதனால் சிறுநீரக பாதிப்பு உண்டாகும். தூக்கமின்மை, அதிக வெப்பமுள்ள இடங்களில் வேலை செய்தல், சூட்டை அதிகரிக்கக்கூடிய உணவுகள் இவற்றால் உடல் சூடு அடைகிறது. இவர்கள் வெள்ளை அல்லியின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடித்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். உடல் சூட்டினால் உண்டாகும் நோய்களின் தாக்கமும் குறையும்.

நீரிழிவு பாதிப்பு நீங்க

சர்க்கரை நோயானது பாரபட்சமின்றி அனைத்து தர மக்களையும் பாதிப்படையச் செய்கிறது.

இந்த பாதிப்பு நீங்க வெள்ளை அல்லி மலரின் இதழ்களை காயவைத்துபொடித்து கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வர நீரிழிவு நோயின் பாதிப்பு நீங்கும்.

சிறுநீர் எரிச்சல் குறைய

சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும். இவர்கள் வெள்ளை அல்லியின் இதழ்களை கஷாயம் செய்து அருந்தி வந்தால் நீர் எரிச்சல் நீங்கும்.

தாகம் தணிய

சிலருக்கு அடிக்கடி நாவறட்சி உண்டாகும். எவ்வளவுதான் நீர் அருந்தினாலும் தாகம் தணியாது. இவர்கள் வெள்ளை அல்லி மலரின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வந்தால் தாகம் தணியும்.

செவ்வல்லியின் மருத்துவக் குணங்கள்

செவ்வல்லிப் பூவுக்குச் சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ

டொவ்வுமே கப்பிணியும் ஓய்வதன்றி இவ்வுலகிற்

கண்ணின்நோய் தீரும் கனத்தபித்த ரத்தமொடு

புண்ணின் நோய் பன்னோயும் போம்

-அகத்தியர் குணபாடம்.

கண்ணோய்கள் நீங்க

கண்கள் உடலின் பிரதான உறுப்புகளுள் ஒன்று. இன்று கணினி முன்பு அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வதால் கண் பார்வை நரம்புகள் நீர்கோர்த்து கண் சம்பந்தமான நோய்களை உண்டாக்குகின்றன.

இதனைப் போக்க செவ்வல்லியின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.

இரத்தம் சுத்தமாக

உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். செவ்வல்லியின் இதழ்களை காயவைத்து பொடி செய்து காலை மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

இறைவன் விரும்பும் நைவேத்யம்


* உயர்ந்த வழிபாட்டை “சமாராதனை’ என்று குறிப்பிடுவர். “சம்’ என்றால் “நல்ல’, “ஆராதனை’ என்றால் “வழிபாடு’ என்பது பொருள். ஏழைக்குச் சேவை செய்வது சமாராதனை எனப்படும்.
* கோயிலில் ஆடம்பரத்துடன் படைக்கும் பொங்கலை இறைவன் ஏற்கிறானா என்பது சந்தேகமே. ஆனால், ஏழைகளுக்காக தானம் செய்வதற்காக தயாரிக்கப்படும் பொங்கலை, இறைவன் மிக விருப்பத்தோடு உகந்து ஏற்பான்.
* நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் என்னும் சித்தர், கோயிலில் இருக்கும் இறைவனை “படமாடும் கோயில்’ (சிற்பம்) என்றும், ஏழை எளியவர்களை “நடமாடும் கோயில்’ என்றும் குறிப்பிடுகிறார்.
* தபால்களை நேரே தபால் நிலையத்தில் சேர்த்தால், வீதிகளில் இருக்கும் தபால் பெட்டிகளுக்கு அவை வரத் தேவையில்லை. ஆனால், வீதிகளில் உள்ள தபால் பெட்டிகளில் இட்ட தபால் தலைமை தபால் அலுவலக்ததிற்கு வர வேண்டியது அவசியம். தபால் பெட்டி ஏழை எளியவர்களைப் போன்றது. அஞ்சல் நிலையம் ஆண்டவன் வாழும் கோயில்.
* ஆலயங்களில் செய்யப்படும் வழிபாட்டைக் காட்டிலும் ஏழைகளுக்குச் செய்யும் தொண்டுகள் மூலம் இறைவனை அடைவது சிறந்தது. அதனால் தான் இறைவழிபாட்டை “ஆராதனை’ என்றும், ஏழைகளுக்குத் தானம் செய்வதை “சமாராதனை’ என்றும் குறிப்பிடுகிறார்கள்.
-வாரியார்