மதுமேகத்திற்கு மூலிகை மருந்திருக்கு! மூலிகை கட்டுரை


முதியவர்கள் முதல் இளைய தலைமுறையினர் வரை பெரும்பாலானோரை பாதித்து வரும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். மாறி வரும் பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், சோம்பேறித்தனம் மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றின் பாதிப்பு அனைவரையும் சர்க்கரை நோயாளிகளாக மாற்றிக் கொண்டு வருகிறது.
சர்க்கரை நோய் குறித்து பண்டைய சித்த மருத்துவ நூல்களில் ஏராளமாக குறிப்புகள் காணப்படுகிறது.
முதியவர்கள், உடற்பருமன் மற்றும் தொப்பையுடையவர் கள், உட்கார்ந்த நிலையில் பணி
புரிபவர்கள், உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்யாதவர்கள், காலந்தவறி உணவு உண்பவர்கள், வீட்டு உணவை தவிர்த்து துரித உணவை மற்றும் வெளி உணவக உணவுகளை அடிக்கடி உட்கொள்பவர்கள், மன உளைச்சலுக்கு ஆட்படுத்தக்கூடிய பணிபுரிபவர்கள், குடும்பத்தில் நிம்மதியில்லாதவர்கள், மது மற்றும் புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்,

அன்றாடம் அரிசி சார்ந்த உணவுகளை இரு முறைக்கு மேல் உட்கொள்பவர்கள், தூக்கம் கெட்டு பணிபுரிபவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, கொழுப்புச்சத்து தொல்லைகள் உள்ளவர்கள், அடிக்கடி ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்பவர்கள், கல்லீரலில் ஏராளமான கொழுப்பை சேமித்து வைத்திருப்பவர்கள், உள்ளங்கை, உள்ளாங்கால் எரிச்சல் மற்றும் மதமதப்புடையவர்கள் மற்றும் உடல் சோர்வாக உணர்பவர்கள் சர்க்கரை நோயிற்கு ஆளாகும் வாய்ப்புகள் உண்டு. ஆகவே இவர்கள் தங்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவை அவ்வப்போது சோதனை செய்து நோயின் தீவிரம் மற்றும் கட்டுபாட்டை அறிந்துக் கொள்வது அவசியமாகும்.
சர்க்கரை நோயைப் பற்றி சித்த மருத்துவ நூல்களில் மதுமேகம் என்ற பெயரில் சர்க்கரை நோயிற்கான குறிகுணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மருத்துவ ஆய்வக வசதியில்லாத முந்தைய காலத்தில் நோயாளியின் சிறுநீரை முகர்ந்து பார்த்தும், சிறுநீரை காய்ச்சி அதிலிருந்து ஆவியின் மணத்தை அறிந்தும், சிறுநீர் கழிக்கின்ற இடத்தில் மொய்க்கும் ஈ,எறும்புகளின் எண்ணிக்கையை கொண்டும் சர்க்கரை நோயை கண்டறிந்தனர்.
மதுமேகம் என்னும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தாதவர்கள் 10 வகையான அவதிகளுக்குள்ளாகி உயிரிழப்பர், என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். ஆகவே சர்க்கரை நோய் ஏற்பட்டுவிட்டது பற்றி கவலைப்படாமல் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பதே சர்க்கரை நோயிற்கான முதன்மை சிகிச்சையாகும். ஆரம்பக் கட்ட சர்க்கரை நோய் மற்றும் தீவிரமடையாத சர்க்கரை நோயில் உணவே மருந்தாக விளங்கும் கறிவேப்பிலை, மஞ்சள், கொத்துமல்லி, பூண்டு, சீரகம், கருஞ்சீரகம், வெந்தயம் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இவைத் தவிர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மூலிகை மருந்துகளில் சிறப்புத்தன்மை வாய்ந்த வேங்கை மரக்கட்டையையும் பயன்படுத்தலாம்.
டீரோகார்பஸ் மார்சுபியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த வேங்கை மர கட்டை மற்றும் வேர்களிலுள்ள ஐசோபுளோனாய்டுகள், எபிகேட்சின் என்ற டானின், ஸ்டில்பன்கள், மார்சுபின், புரோபெடிரால் போன்ற பொருட்கள் கணையத்திலுள்ள புரோ இன்சுலினை இன்சுலினாக மாற்றி ரத்த சர்க்கரையளவை குறைக்கின்றன. வேங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து, 50கிராமளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து 100 மி.லி.,யாக சுண்டியப்பின், வடிகட்டி காலை, மாலை உணவுக்கு முன் குடித்து வர, ரத்த சர்க்கரையளவு குறையும்.
வேங்கை, ஆவாரம் பூ, மருதம்பட்டை, பொன்குறண்டி, நாவல்பட்டை, மஞ்சள், வெந்தயம், கடுக்காய் தோல், நெல்லி வற்றல், தான்றிக்காய் தோல் ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து, பொடித்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். 2 முதல் 5 கிராமளவு நோயின் தீவிரத்திற்கு தகுந்தாற்போல் தினமும் இரண்டு வேளை உட்கொள்ள, ரத்த சர்க்கரையளவு கட்டுப்படும். ஏற்கனவே உட்கொள்ளும் பிற மருந்துகளால் சர்க்கரை நோய் கட்டுப்படவில்லை என்றால் அந்த மருந்துகளுடன் இந்த சூரணத்தையும் சேர்த்து சாப்பிட்டு வர முன்னேற்றம் உண்டாகும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், 98421-67567

%d bloggers like this: