Advertisements

Daily Archives: நவம்பர் 18th, 2009

‘எதிர்த்து பேசாதே…’ என்று குழந்தைக்கு கட்டளையிடுவீங்களா?

உங்கள் வீட்டுக்கு வேலை செய்ய வரும் பெண் சிறுமியா? ரோட்டோர கடைகளில், ஓட்டல்களில் சிறுவர், சிறுமியர் வேலை செய்வதைப் பார்த்துப் பரிதாபப்படுகிறீர்களா? உங்களால் முடிந்த அளவு, ஒரு குழந்தையை அழைத்து, படிப்பு குறித்து, அதன் வாழ்வுரிமை குறித்து, குறைந்தபட்சம் அறிவுரையாவது வழங்குங்கள். நீங்கள் என்னவெல்லாம் எடுத்துரைக்கலாம் அவர்களிடம்… படியுங்கள்:
நவம்பர் 20ம் தேதி, உலகின் குழந்தைகள் அனைவருக்கும் ஒரு கொண்டாட்ட நாள். குழந் தையின் உரிமைகள் ஒப்பந்தத்தை, நவ., 20, 1989ல், ஐ.நா., மேற்கொண்டது.
இது 20வது ஆண்டு. ஐ.நா.,வின், “குழந்தையின் உரிமைகள் ஒப்பந்தத்தில்’ 54 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் முக்கியமான சில, இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
அனைத்துக் குழந்தைகளும் சமமான மதிப்புடையவர்களாகவும், தன் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், கொடுமை, பிறர் நலனுக்காக பயன்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படவும், தன் கருத்தை எடுத்துரைக்க, மரியாதை பெறுவதற்கும் உரிமை போன்றவை இந்த 54 அம்சங்களின் அடிப்படை தத்துவங்களாக உள்ளன.
1: இவ்வுரிமை, உலகிலுள்ள 18 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பொருந்தும்.
2: அனைத்து குழந்தைகளும், சமமானவர்களாகவும், ஒரே மாதிரியான உரிமையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் தோற்றம், நிறம், மொழி, மதங்களை போன்றவைகளால் அவர்களை வேறுபடுத்தி நடத்தக் கூடாது.
3: குழந்தைகளின் நன்மையை கருத்தில் கொண்டு, முடிவுகள் எடுக்க வேண்டும்.
6, 7: வாழ, வளர உரிமையும், பெயர் உரிமையும், நாட்டின் பிரஜையாக இருக்கவும் உரிமை உண்டு.
9: பெற்றோரோடு வாழ உரிமை.
12 முதல் 15: அனைத்துக் குழந்தைகளும், வீடு, பள்ளி, அதிகாரி, நீதிமன்றங்களில் தாங்கள் நினைப்பதை கூறலாம்.
18: வளர்ப்பு, வளர்ச்சிக்கு பெற்றோரே பொறுப்பு.
19: எவ்வித வன்முறை, கொடுமை, புறக் கணிப்பு, தவறாக நடத்தப்படுதலிலிருந்து பாதுகாப்பு. பெற்றோர் அல்லது மற்ற பாதுகாவலரின் சுயநலனுக்காக பயன்படுத்தப்படுவதை நிறுத்துவது.
20 – 21: பெற்றோரை இழந்தோர், தங்களைப் பாதுகாக்க யாரிடமாவது கோர உரிமையுண்டு.
22: நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப் பட்டிருந்தால், மற்ற நாடுகளிலுள்ள எல்லா குழந்தைகளுக்கான உரிமையும், தனியாக இருந்தால், விசேஷ பாதுகாப்பு, உதவி உண்டு. முடிந்தால் உங்கள் குடும்பத்துடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட வேண்டும்.
23: உடல்திறன் குறைந்தவர்களுக்கு கூடுதல் ஆதரவு மற்றும் உதவி பெற உரிமையுண்டு.
24: உடல்நலமின்றி இருந்தால், தேவையான அனைத்து உதவிகளையும் பெறலாம்.
28 – 29: பள்ளி செல்ல, மற்றவர் உரிமைகளுக்கு மரியாதை, மற்ற கலாசாரங்களுக்கு மரியாதை போன்ற விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
30: குழந்தைகளின் எண்ணம், நம்பிக்கைகள் மதிக்க வேண்டும். சொந்த கலாசாரம், சொந்த மொழி, மதத்தைப் பின்பற்ற உரிமை.
31: விளையாட்டு, ஓய்வு நேர உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலில் வாழ உரிமை உண்டு.
32: கல்வி தடை, ஆரோக்கியத்தை குறைக்கும் ஆபத்தான வேலை செய்ய கட்டாயப்படுத்தப் படக்கூடாது.
34: தவறாக பயன்படுத்தவோ, விபசாரத்திற்கோ கட்டாயப்படுத்தினால், பாதுகாப்பு உதவி பெறலாம்.
35: கடத்தவோ, விற்கவோ யாருக்கும் அனுமதியில்லை.
37: கொடூரமான முறையில் தண்டிக்கக் கூடாது.
38: ராணுவ வீரராகவோ, ஆயுதமேந்திய மோதலில் பங்கேற்கவோ தேவையில்லை.
42: இந்த ஒப்பந்தத்தை, அனைத்து குழந்தைகளும் அறிந்து, உரிமைகளை தெரிந்து கொள்வதற்கான உரிமை.
இவ்வளவு உரிமைகள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன. பல குடும்பங்களில், குறிப்பாக பெண் குழந்தைகள், இன்று கூட வாயில்லா பூச்சிக்களாக வளர்க்கப்படுகின்றனர்.
கவனமுடன் வளர்க்க வேண்டும் என்பது நியாயம் தான். ஆனால், அளவுக்கு அதிகமான கட்டுப்பாடு, குழந்தைகளின் சுய சிந்தனையை முறியடித்து விடும். “எதிர்த்துப் பேசாதே… உனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடாதே…’ போன்ற கட்டுப்பாடுகள் அதிகம் காணப்படுகின்றன.
ஒரே குழந்தை உள்ள வீடுகளில் இந்தக் கட்டுப்பாடுகள் அவ்வளவாக பின்பற்றப்படவில்லை என்பது ஆறுதலான விஷயம்.

Advertisements

ஆசிய பசிபிக் நாடுகள் தேடலில் முதல் இடம்


இன்டர்நெட் தேடல்கள் இன்று அறிவியல் தாகத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. அவ்வகையில் சென்ற செப்டம்பர் மாதம் இன்டர்நெட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடல்களின் எண்ணிக்கையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகள் முன்னணியில் இருந்தன.
ஏறத்தாழ 3 ஆயிரத்து 60 கோடி தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இது முந்தைய ஆண்டு, இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்டவற்றைக் காட்டிலும் 33% கூடுதலாகும். சராசரியாக ஒரு பயனாளர் இந்த மாதத்தில் மேற்கொண்ட தேடல்கள் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தேடல்களில் 44% கூகுள் சர்ச் இஞ்சின் வழியாக மேற்கொள்ளப்பட்டன. இதன் வழியாக 1,700 கோடி தேடல்கள் நடந்தன. இது மொத்தத்தில் 44.1 % ஆகும். அடுத்ததாக Baidu.com என்ற தேடுதல் (21.3%)தளம் இடம் பெற்றுள்ளது. மூன்றா வதாக யாஹூ 13.8% பங்குடன் 530 கோடி தேடல் களைக் கொண்டி ருந்தது. ஆனால் ஹாங்காங் மற்றும் தைவானில் அதிக தேடல்கள் யாஹூ தளம் வழியாகவே மேற்கொள்ளப்பட்டன.
மேலே தரப்பட்ட தேடல் தகவல்கள் அனைத்தும் 15 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொண்ட தேடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்தவையாகும். பொது இன்டர்நெட் மையங்கள் மற்றும் பிடிஏ சாதனங்கள் வழி மேற்கொள்ளப்பட்ட தேடல்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.

இந்த வார டவுண்லோட் – மெடிகல் ஸ்பெல் செக்கர்

மருத்துவ உலகில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கான ஸ்பெல்லிங், பின்பற்றவும் அறிந்து கொள்ளவும் மிகக் கஷ்டமான ஒன்றாகும். அந்தத் துறையில் உள்ளவர்களே தடுமாறும் அளவிற்கு இருக்கும். ஏனென்றால் மருத்துவ கலைச் சொற்கள் அனைத்தும் ஆங்கிலவழி வந்தவை அல்ல. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் புரோகிராம்களில் உள்ள ஸ்பெல் செக்கர்கள் என்னும் எழுத்து திருத்தும் டூல், மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து சொற்களின் எழுத்துப் பிழைகளைத் திருத்த இயலாது. ஏனென்றால் இதில் தரப்பட்டுள்ள டிக்ஷனரிகள், சாதாரண அன்றாட ஆங்கிலப் பயன்பாட்டில் உள்ள சொற்களை மட்டுமே கொண்டவையாகும். அப்படியானால் மருத்துவ கலைச் சொற்களை எழுத்துப் பிழையின்றி எப்படி அறிந்து கொள்வது? அதற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது மெடிகல் ஸ்பெல் செக்கர் (Free Medical Spell Checker). இந்த புரோகிராமினை http://download.cnet.com/ FreeMedicalSpellChecker/30002079_410154940.html?tag=lst01 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாக இறக்கிப் பந்து கொள்ளலாம். இது சாதாரண சிறிய அப்ளிகேஷனாகப் பதிந்து அமர்ந்து கொள்கிறது. இந்த சிறிய விண்டோவில் நீங்கள் எழுத்துப் பிழையின்றி காண விரும்பும் மெடிகல் சொல்லை டைப் செய்திடத் தொடங்கலாம். ஒவ்வொரு கீ அழுத்தத்திற்குமாக அடுத்த அடுத்த எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு முழு சொல் கிடைக்கிறது. இதன் மூலம் நமக்கு மருத்துவச் சொற்கள் அடங்கிய நல்லதொரு டிக்ஷனரி கிடைக்கிறது. ஆனால் சொற்களுக்குப் பொருள் கிடைப்பதில்லை.
இந்த மெடிகல் ஸ்பெல் செக்கர் இலவசமாகக் கிடைப்பதால் வேர்ட் போன்ற புரோகிராம்களுடன் இணைந்து இயங்குவதில்லை. தனியே இயக்கித்தான் எழுத்துப் பிழைகளை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இதே போன்று உள்ள மற்ற மெடிகல் ஸ்பெல் செக்கர்கள் வேர்டில் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. ஆனால் அவற்றைக் கட்டணம் செலுத்திப் பெறவேண்டும். அவை கிடைக்கும் தள முகவரி: http://www.notypos. com/downloads.htm இந்த தளத்தில் இலவசமாக சில நாட்களுக்கு சோதனை முறையில் பயன்படுத்திப் பார்க்கவும் தொகுப்புகள் கிடைக்கின்றன.

எல்லா அப்ளிகேஷனுக்கும் அப்டேட்


விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது, மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும் பேட்ச் பைல்களைக் கொண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்வதுதான். அது மட்டுமின்றி இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் மற்றும் பிற அப்ளிகேஷன் புரோகிராம் களும் அவ்வப்போது பேட்ச் பைல் மூலம் அப்டேட் செய்திட வேண்டியுள்ளது. அப்படியானால் நாம் எத்தனை பைல்களுக்கான அப்டேட் பைல்களைக் கண்காணிக்க முடியும். எம்பி3, வீடியோ, தொலைபேசி, டிவி ட்யூனர், கேமரா மற்றும் மொபைல் இணைப்பிற்கான அப்ளிகேஷன் கள் என அனைத்தையும் நாம் கண்காணித்து அப்டேட் செய்வது எளிதா என்ன? சில வேளைகளில் இது போன்ற புரோகிராம்களுக்கு அப்டேட் இருப்பதாகச் சொல்லி, நம்மை ஒரு குறிப்பிட்ட தளத்திற்கு அழைத்துச் சென்று வைரஸ்களை நம் கம்ப்யூட்டருக்குள் தள்ளிவிடும் போலி புரோகிராம்களும் நிறைய உண்டு. இதற்கெல்லாம் விடிவாக நமக்கு ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் Secunia PSI. (PSI Personal Software Inspector) இதனை என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த புரோகிராம் நம் கம்ப்யூட்டரில் உள்ள பழைய புரோகிராம்களுக்கு அவற்றின் நிறுவனங்கள் அப்டேட் தந்தாலும் தரவிட்டாலும், செகுனியா அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. ஸ்கேன் செய்த பின் பாதுகாப்பற்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் என ஒரு பட்டியலை நமக்கு அளிக்கிறது. எந்த புரோகிராம்களுக்கெல்லாம் அப்டேட்டட் பைல்கள் உள்ளனவோ அவற்றின் லிங்க்குகளைப் பட்டியலிட்டு தருகிறது. இந்த லிங்க்குகளில் கிளிக் செய்து நம் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களை அப்டேட் செய்து கொள்ளலாம். இவற்றுடன் எந்த புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்களை அவற்றைத் தயாரித்து அளித்த நிறுவனங்கள் தரவில்லையோ அவற்றையும் சுட்டிக் காட்டுகிறது. செகுனியா சிஸ்டம் தொடங்கும்போதே இயங்கி, கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து புரோகிராம்களையும் ஸ்கேன் செய்கிறது. புதிய புரோகிராம்கள் இருந்தால் அவற்றிற்கான அப்டேட் பைல்களை ஆய்வு செய்கிறது. புரோகிராம்களில் ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் கோட் இருந்தால் அதனையும் சுட்டிக் காட்டுகிறது. செகுனியா பி.எஸ்.ஐ. கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் அல்லது பயர்வால் புரோகிராம்களுக்குப் பதிலியாகக் கொள்ள முடியாது. ஆனால் இவை மேற்கொள்ளாத ஒரு முக்கிய வேலையை மேற்கொண்டு நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது. இந்த அருமையான பாதுகாப்பு புரோகிராமினை http://secunia.com/vulnerability_scanning/personal/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். சென்ற ஆகஸ்ட் மாதம் இதன் அண்மைக் காலத்திய பதிப்பு வெளியானது. பதிப்பு எண் 1.5.0.1. இதன் பைல் சைஸ் 716,320 bytes ஆகும். 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நாளில் சராசரியாக இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3,228.

இந்திய இன்டர்நெட் சந்தையில் போட்டி



தொடர்ந்து வளர்ந்து வரும் இன்டர்நெட் பயன்பாட்டில், இந்திய வாடிக்கையாளர்களைப் பிடித்துப் போட முன்னணி நிறுவனங்களிடையே போட்டி தொடங்கி, நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது.
கூகுள் தன்னுடைய சோசியல் நெட்வொர்க் ஆர்குட் தளத்தினை முழுவதுமாகப் புதுப்பித்துள்ளது. யாஹூ மிகப் பெரிய அளவில் முன்னணி ஆங்கில செய்தித்தாளில் முதல் பக்க விளம்பரம் அளித்துள்ளது. இதெல்லாம் எதற்காக? எப்படி இவர்களுக்கு வருமானம் வரும்?
ஒரு இன்டர்நெட் தளத்தின் பெருமை அதில் மேற்கொள்ளப்படும் கிளிக்குகளின் எண்ணிக்கையில் தான் உள்ளது. எவ்வளவுக்கெவ்வளவு ஹிட்களும் கிளிக்குகளும் அதிகரிக்கின்றனவோ, அந்த அளவிற்கு விளம்பரம் அதிகரிக்கும். வருமானம் பெருகும். எனவே வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க இந்த தளங்களில் நாள்தோறும் ஏதேனும் புதுமை வந்து கொண்டே இருக்கிறது.
ஆர்குட் தளத்தில் புதிய வடிவமைப்பு வரக்காரணம், அதன் போட்டியாளரான பேஸ் புக் மாற்றம் பெற்றதாகும். இதை அந்த நிறுவனம் மறுத்தாலும் உண்மை அதுதான்.
புதிய ஆர்குட் தளம் முழுக்க முழுக்க கூகுள் வெப் டூல் கிட் பயன்படுத்தி அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தளத்தில் பதிந்து இதனைப் பயன்படுத்தி வருபவர்கள், மிக எளிதாக ஹோம் பேஜ் மூலமாகவே தங்கள் பைல்களை அப்லோட் செய்திட முடியும் என கூகுள் இந்திய பிரிவு தலைமை அலுவலர் வினய் கோயல் கூறி உள்ளார். தளத்தின் உள்ளாக அமைந்த சேட் ரூம் வழி ஒரே நேரத்தில் பலருடன் அரட்டை அடிக்கும் வசதி உள்ளது. தானாக போட்டோ முகம் அறிந்து உணரும் வசதி. போட்டோ ஆல்பம் பகிர்ந்து கொள்ளும் வழிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. இவற்றால் ஆர்குட் தளம் பலரை ஈர்க்கத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் விளம்பரங்கள் அதிகரிக்கும் என கூகுள் எதிர்பார்க்கிறது. நுகர்வோர் பொருட்களுக்கான விளம்பரங்கள் இப்போது இதில் வரத் தொடங்கி உள்ளன. இந்தியாவில் நுகர்வோர் பொருட்களுக்கு மட்டுமின்றி, பொதுவாகவே விளம்பரங்களைத் தருவதிலும், அவற்றைப் படிப்பதிலும் மக்களுக்கு ஆர்வம் உள்ளது. இதுவே இப்போதைக்கு ஆர்குட் தளத்தினை நஷ்டத்தில் இல்லாமல் இயங்க வைக்கிறது என்று கூகுள் அலுவலர்கள் கூறுகின்றனர். கூகுள் நிறுவனத்தின் ஆர்குட் தளத்தினை பத்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். பிரேசில் நாட்டுக்கு அடுத்தபடியாக அதிக நேயர்களை இந்தியாவிலிருந்து ஆர்குட் பெற்றுள்ளது.
இன்டர்நெட் வெப்சைட்டையும் பயன்பாட்டையும் தனி ஒருவனுடையதாக்க முடியும் என மக்களிடையே செய்தியைக் கொண்டு செல்ல இந்த சோஷியல் தளங்கள் முயற்சிக்கின்றன. யாஹூ வின் விளம்பரமும் பெரிய அளவில் இதனைத்தான் சொன்னது. உலக அளவில் இந்த விளம்பரத்திற்கு 10 கோடி டாலர் செலவழிக்கப்பட்டது.
இந்த தளங்களில் இப்போது இன்டர்நெட் வீடியோவினைப் பதிந்து மக்களைக் கவரும் வழிகளும் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக ஆர்குட் இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் 20 கோடி பேர் இன்டர்நெட் பிராட்பேண்ட் பயன்படுத்துவார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. எனவே அவர்களை மையமாக வைத்து இந்த தளங்கள் தங்கள் வர்த்தகத்தை வளப்படுத்துகின்றன. ஆனால் வருமானம் என்னவோ மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இன்னும் இருக்கிறது என்று ஒத்துக் கொள்ள வேண்டும். ஆர்குட் மற்றும் பேஸ்புக் ஒரு பயனாளர் வழி ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே ஈட்டுகின்றன. ஆனால் கூகுள் 25 டாலர் ஈட்டுகிறது. இருப்பினும் இந்த சோஷியல் நெட்வொர்க் தளங்கள் தங்கள் முயற்சிகளில் சற்றும் தளராமல் தொடர்ந்து முயன்று வருகின்றன.

குளிர் அறையில் கொதிப்பு-கிருபானந்த வாரியார்

பிறரை ஏமாற்றிப் பிழைப்பது கூடாது. யாசகம் வாங்கி சோம்பேறியாக வாழ்வதும் கூடாது. பிறர் பொருளில் நெய்யும் பாலும் உண்பதைக் காட்டிலும் தன் உழைப்பினால் தண்ணீரும் சோறும் உண்பதே சிறப்பானதாகும். மூன்று பொருள்களை மிச்சமாக வைக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவை நெருப்பு, கடன், பகை என்று குறிப்பிடுகின்றன. நெருப்பு மிச்சமிருந்தால் அந்த இடத்தையே பொசுக்கிவிடும். கடன் மிச்சமிருந்தால் வளர்ந்து சுமையாகி விடும். பகைவன் மிச்சமிருந்தால் சமயம் பார்த்து நம்மை அழித்து விடுவான். எந்த நேரம் இறைவனுடைய திருநாமம் நினைக்கப் பட்டதோ அந்த நேரம் எல்லாம் நம்முடைய நேரமாகும். எந்த பணம் தர்மத்திற்காக செலவழிக்கப்பட்டதோ அது நம்முடைய பணமாகும். இவ்விரண்டும் எப்போதும் உதவ நமக்காக காத்துக் கொண்டிருக்கும். மகிழ்ச்சி என்பது செல்வச் செழிப்பிலோ அல்லது பெரியமாட மாளிகையிலோ கிடைப்பதில்லை. ஏர்கண்டிஷன் அறையில் இருக்கும் ஒருவன் மனக்கொதிப்புடன் இருக்கக்கூடும். ஆனால், உச்சி வெயிலில் விறகினைப் பிளப்பவனின் மனம் மகிழ்ச்சியோடு இருக்கும். மகிழ்ச்சி என்பது மனநிலையைப் பொறுத்ததே தவிர பணத்தைப் பொறுத்தது அல்ல.