Daily Archives: நவம்பர் 19th, 2009

அகாசியின் கேசம் நிஜமானதல்ல!


முன்னாள் சாம்பியன் டென்னிஸ் வீரர் ஆந்ரே அகாசி, தான் போதைப்பொருள் பயன்படுத்தியது உண்டு என்று சமீபத்தில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் மனம் திறந்திருக்கும் மற்றொரு விஷயம், தனது `கேசம்’ பற்றிய விஷயம்.

தான் 1990-களில் `வைத்திருந்த’ சிங்கப் பிடரி பாணி கேசம் உண்மையில் ஒரு `டோப்பா’ என்ற உண்மையைத் தெரிவித்திருக்கிறார் அகாசி.

அவர் எழுதியிருக்கும் சுயசரிதையின் சில பகுதிகள் இங்கிலாந்து பத்திரிகைகளில் அண்மையில் வெளிவந்திருக்கின்றன. அதில் மேற்கண்ட விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியின்போது தன் தலைமுடியுடன் கூடுதலாகக் கொஞ்சம் முடியை `பின்’னைக் கொண்டு சேர்த்திருந்ததாக எழுதியுள்ளார் அகாசி. அது 1990-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டி. அப்போட்டியில் தான் தோற்றதற்கு தலைமுடியைப் பற்றிய தனது கவலையும் ஒரு காரணம் என்று அகாசி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அந்தப் போட்டிக்கு முன்னதாக வெற்றிக்காக அல்லாமல், போட்டியின்போது தலைமுடி கீழே விழுந்துவிடக் கூடாது என்றே தான் பிரார்த்தித்ததாகக் கூறுகிறார் அகாசி.

தனது தலைமுடி இழப்பைச் சரிகட்டும் விதமாக `டோப்பா’ அணியத் தொடங்கியதாகத் தெரிவிக்கும் அகாசி, “ஒவ்வொரு நாள் காலையில் எழுந்ததும் நான் எனது வேறொரு அடையாளத்தைக் காண்பேன். முகம் பார்க்கும் கண்ணாடி… அங்கு இங்கு என்று. அப்போது என்னை நானே கேட்டுக்கொள்வேன். நீ ஒரு `டோப்பா’வை அணிய வேண்டுமா? அதிலும் டென்னிஸ் களத்தில்?’ என்று. அதற்கு நானே, `வேறு என்ன செய்வது?’ பதில் கேள்வியும் கேட்பேன்.

பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முந்தைய நாள் இரவு அகாசி `டோப்பா’வுடன் குளிக்க, அது சிதைய ஆரம்பித்தது. சிக்கலும் தொடங்கியது. அது குறித்து, “அனேகமாக நான் அப்போது `டோப்பா’வை தவறாக அலசியிருக்கலாம்” என்கிறார் அகாசி.

அந்த நேரத்தில் பயந்துபோன அவர், தனது சகோதரர் பில்லியை அறைக்கு அழைத்தார். இருவரும் சேர்ந்து `டோப்பா’வை `கிளிப்’கள், `பின்கள்’ கொண்டு ஒரு மாதிரி அகாசியின் தலையில் பொருத்தினர்.

தற்போது 39 வயதாகும் அகாசி மேலும் இதுகுறித்து எழுதுகையில், “நான் `டோப்பா’ இல்லாமல் விளையாடியிருக்கலாம்தான். ஆனால் நான் ஆரம்பத்திலிருந்தே `டோப்பா’தான் அணிந்திருக்கிறேன் என்று அறிந்தால் பத்திரிகையாளர்கள் என்ன எழுதுவார்கள்? ஆட்டத்துக்கு முந்தைய சிறுபயிற்சியின்போது நான் பிரார்த்தனை செய்வேன். போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக அல்ல, தலைமுடி பறந்துவிடக் கூடாது என்பதற்காக.

ஒவ்வொரு தாவலின்போதும் `டோப்பா’ பறந்து தரையில் விழுவதாகக் கற்பனை செய்வேன். கோடிக்கணக்கான ரசிகர்கள் டிவிக்கு முன்னால் நன்றாக நகர்ந்து, கண்கள் விரியப் பார்த்து, எனது தலைமுடி எப்படி என் தலையிலிருந்து பறந்தது என்பதை ஆச்சரியத்துடன் பேசிக்கொள்வதை நான் மனக்கண்ணில் காண்பேன்.

`டோப்பா’வுடன் விளையாடும் போது…
அகாசியை முதலில் மொட்டைத் தலையுடன் தோன்ற வைத்தவர் அவரது முன்னாள் மனைவியான புரூக் ஷீல்ட்ஸ்தானாம். “நான் எஞ்சியிருக்கும் எனது முடிகளை மொட்டையடித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்தான் கூறினார். அது, நான் எனது பற்களை எல்லாம் உதிர்த்துவிட வேண்டும் என்பதைப் போல இருந்தது. எப்படியோ, அதைப் பற்றி நான் சில நாட்கள் யோசித்தேன். அது எனக்கு ஏற்படுத்திய சங்கடங்கள், அதை நான் மறைத்தது, அதற்காக நான் கூறிய பொய்கள் எல்லாம் என் நினைவுக்கு வந்தன.

ஆனால் நான் ஒரு முடிவுக்கு வந்தபோது, மொட்டைத் தலையுடன் ஒரு `புதியவன்’ என் முன் கண்ணாடியில் தோன்றி என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்” என்று முடிக்கிறார் அகாசி.

வீட்டுக் கடன் `டிப்ஸ்’!

உங்களுக்கு என்று ஒரு வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்வது தற்போது கொஞ்சம் எளிது. அதற்கு, வீட்டுக் கடனுக்குத்தான் நடுத்தர மக்கள் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் எந்த விவரமும் தெரியாமல் வீட்டுக் கடனுக்கு முயற்சிப்பது சரியல்ல. பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளிவந்தாலும், நீண்ட காலமாக நம்பிக்கையாகத் திகழும் வீட்டு வசதி நிறுவனம் அல்லது வங்கியைத் தேர்வு செய்வது நல்லது.

வீட்டில்தான் இதயம் இருக்கிறது! பெரும்பாலானவர்களுக்கு சொந்த வீடு என்பது வாழ்நாள் கனவு. சிறிது காலத்துக்கு முன்புதான் பொதுஜனத்துக்கு அது எட்டாத கனவாகத் தோன்றியது. நிலம், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை விண்ணை விசாரித்துக் கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.

ஆனால் தற்போது வீட்டுக் கடன்கள் மற்றும் வீட்டுவசதிக் கடன் நிறுவனங்களின் வளர்ச்சி காரணமாக, சராசரி வருமானமுள்ள எல்லோரும் சொந்தமாக ஒரு நிழலுக்கு ஆசைப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

வீட்டுக்கடன் எளிதாகக் கிடைக்கிறது என்பது மட்டுமல்ல, வீட்டு வசதித் துறையில் ஏற்பட்டுள்ள தீவிரப் போட்டி காரணமாக, தகுதிவாய்ந்த வாடிக்கையாளரை ஈர்ப்பதற்காக நிறுவனங்கள் எல்லா வகையிலும் இறங்கிவரத் தொடங்கியிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. பல புதுமையான வீட்டுவசதிக் கடன் திட்டங்கள் சந்தைக்கு வந்துள்ளன.

சரி, வீட்டுக் கடன் பெறுவதில் உதவும் `டிப்ஸ்’கள் என்னென்ன?

* வீட்டுக் கடன் பெறுவதற்கு பொதுவான `பார்முலா’ என்ற ஒன்று இல்லை. உங்களுக்கு நல்லதாக இருக்கக்கூடிய ஒன்று, மற்றொருவருக்கு நல்லதாக இருக்காமல் போகலாம். அதே மாதிரி, உங்களுக்கு நல்லதாக இல்லாத ஒரு திட்டம், இன்னொருவருக்கு அற்புதமானதாக இருக்கலாம். எனவே உங்கள் தேவைக்கு எந்தத் திட்டம் சரியாகப் பொருந்தும் என்று நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

* நீங்கள் உங்கள் தேவைகள், பணம் செலுத்துவதற்கான ஆதாரம், எதிர்காலத் திட்டம் ஆகியவற்றை வரையறுத்தபின், முக்கியமான கட்டம் வருகிறது. அது வீட்டு வசதி நிறுவனத்தைத் தேர்வு செய்வது. அதீத கவனத்துடனும், சரியான ஆலோசனையுடனும் வீட்டுக்கடன் நிறுவனத்தைத் தேர்வு செய்வது முக்கியமானது. நீங்கள் ஒரு வீட்டுவசதி நிறுவனம் அல்லது வங்கியுடன் நீண்ட காலத் தொடர்பு வைக்கப் போகிறீர்கள் என்பதால் அதன் பழைய கால வரலாற்றைப் பரிசோதிக்க வேண்டும். முடிந்தால், ஏற்கனவே குறிப்பிட்ட நிறுவனத்தில் கடன் பெற்ற சிலருடன் பேசி, அங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்படும் விதம் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

* ஒருவர் சொத்து விவகாரம் தொடர்பான பணிகளில் ஈடுபடும்போது, `ரியல் எஸ்டேட்’ மற்றும் `வீட்டுக் கடன்’ தொடர்பான துறை வார்த்தைகளால் மூச்சுத் திணற நேரிடும். முறையற்ற சக்திகளால் ஏமாற்றப்படாமல் தவிர்ப்பதற்கு ஒருவர் அந்த தொழில்ட்ப வார்த்தைகளுடன் நல்ல பரிச்சயத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியம். அந்த வார்த்தைகளை அறிந்த பின்னால், அவற்றுக்குப் பின்னால் பொதிந்துள்ள மறைமுக அர்த்தங்களை அறிவதும், அந்தக் கடினமான வணிக வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை அறிவதும் சற்று எளிது.

* வீடு வாங்குவது பெரும்பாலானோரின் கனவு. வீடு, நிலங்களின் விலை உயர்ந்துவந்த நிலையில், சராசரி வருமானம் உள்ள ஒருவருக்கு வீடு கட்டத் தேவையான பெருந்தொகையைத் திரட்டுவது என்பது கடினமே. அதனால் வீட்டுக்கடன் என்ற முறை உருவானது. தற்போது எண்ணற்ற வீட்டுவசதி நிறுவனங்களும், அவற்றுக்கு இணையான வங்கிகளும் வீட்டுக்கடனை வழங்கி வருகின்றன.

* சொந்த வீடு என்பது வாழ்வில் ஒரு பாதுகாப்பான உணர்வை அளிக்கிறது. ஒரு தைரியம், சாதித்த திருப்தி, பெருமித உணர்வை தருகிறது. சரியான வீட்டுக்கடன் நிறுவனத்தைத் தேர்வு செய்து, சரியான முறைகளை மேற்கொண்டு கடன் பெற்று வீட்டுக் கனவை நனவாக்கிக்கொண்டால் அது நிச்சயம் ஓர் இனிய அனுபவமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையே!

————————————————————-
சுருக்கக் குறிப்புகள் சில…

வீட்டுக்கடனை எளிதாகப் பெறுவதை உறுதிப்படுத்தும் சில சுருக்கமான குறிப்புகள் இங்கே…

* நீங்கள் மாதச்சம்பளம் பெறும் வேலையில் இருந்தால், அந்த வேலையில் குறிப்பிட்ட காலம் வரையிலாவது நீடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அடிக்கடி வேலை மாறுவது, வீட்டுக் கடன் பெறும் உங்களின் வாய்ப்பைப் பாதிக்கும்.

* அதிகமாகக் கடன் பெறுவதைத் தவிருங்கள். ஏற் கனவே கடன்கள் இருக்கும் நிலையில், புதிதாக ஒரு கடனை உங்களால் திருப்பிச் செலுத்த முடியா? என்ற சந்தேகத்தை எழுப்பும். காரணம் நீங்கள் பழைய கடனுக்கு கொடுத்தது போக மீதி உள்ள குறைவான பணத்தைக் கொண்டு வீட்டுக் கடனைச் செலுத்த வேண்டும்.

* நீங்கள் பெருந்தொகையைக் கடனாகப் பெற வேண்டுமானால், சீரான வருமானம் உள்ள ஒருவரை இணை விண்ணப்பதாரராகச் சேர்த்துக்கொள்வது பலன் தரும்.

* ஆடம்பரமாகச் செலவழிப்பதையும், வங்கியிலிருந்து பெருந்தொகையை எடுப்பதையும் தவிருங்கள். ஒரு நல்ல `பாலன்ஸை’ பராமரிப்பது உங்களின் வலுவான பொருளாதார நிலையையும், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனையும் எடுத்துக் கூறும்.

* விதிவிலக்குகள் உள்ளன என்றபோதும், 23 முதல் 48 வயதுக்கு இடைப்பட்டவர்களின் விண்ணப்பங்களை வங்கிகள் விரும்புகின்றன. ஓய்வுபெறும் வயதை நெருங்குபவர்களும், புதிதாக சம்பாதிக்கத் தொடங்கியிருப்பவர்களும் கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினம் என்று கடன் நிறுவனங்கள் நினைக்கின்றன.

* உங்களின் வருமானம், வயது, தகுதிகள், பொருளாதார நிலை, மற்ற கடப்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்து வங்கி உங்களுக்கு ஒரு தொகைக்கு ஒப்புதல் அளிக்கும்.

* வீடு அல்லது நிலம் அமைந்துள்ள இடம், கடன் பெறுவதற்குத் தகுதியை நிர்ணயிக்கும் மற்றொரு விஷயமாகும். மிகவும் தொலைதூரத்தில் உள்ள சொத்துக்குக் கடன் அளிப்பதற்கு சில வங்கிகள் விரும்புவதில்லை.

* உங்களுக்கான அடையாள அட்டை, முகவரிச் சான்று, சம்பளப் பட்டியல், `பான் கார்டு’ நகல், முதலீட்டு விவரங்கள், கடந்த ஆறு மாத காலத்துக்கான வங்கி அறிக்கை உட்பட சரியான ஆவணங்களைச் சமர்ப்பியுங்கள்.

* `டவுன் பேமண்டு’க்காக சொத்தின் மதிப்பில் 10 முதல் 15 சதவீதத் தொகையைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

மழைக்காலத்திலும் ஜொலிக்கலாம் அழகாக!


மழைக்காலம் தொடங்கி விட்டது. எப்போதும் `நசநச’வென மழை பெய்துகொண்டே இருக்கிறது. இந்தக் காலத்தில் பலரும் சளி பிடித்து அவதிப்படுவர். சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் நடப்பவர்களுக்கு சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.

மழை பெய்யும் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளித்தால் போதுமானது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளித்தால் தோலின் நிறம் மாறாமல் இருக்கும். குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தேங்காய் எண்ணையை தடவிக் கொள்ளவும். அதேபோல், முழங்காலில் இருந்து கணுக்கால் வரை தேவையற்ற முடிகளை அகற்றும் கிரீமைத் தடவி மசாஜ் செய்தால், அந்த இடங்களில் பூஞ்சையின் தாக்குதல் இருக்காது.

தினமும் இரவு படுக்கப்போகும் முன்பு, ஒரு ட்ரேயில் சிறிது வெந்நீரை ஊற்றி, அதில் உங்கள் பாதங்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து கைவிரல்களால் மசாஜ் செய்யுங்கள். இப்படிச் செய்வதால் உடல் முழுவதும் உள்ள இறுக்கம் விடுபட்டது போல் இருக்கும். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது சுத்தமான தண்ணீரால் கால்களை நன்கு கழுவி, சுத்தமான துணியால் ஈரத்தை துடையுங்கள்.

குளிக்கும் நீரில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை போட்டு வைத்திருந்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம். பெண்கள் மழை நாட்களில் தவறாமல் மஞ்சள் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏனெனில், கிருமிநாசினியான மஞ்சள் சருமத்தைப் பாதுகாக்கும்.

ஈரமான துணிகளை அணிந்து கொள்வதால் தோல் எரிச்சல், பூஞ்சை பாதிப்பு போன்றவை ஏற்படலாம். எனவே, ஈரத்துணியைக் கழற்றியவுடன் அந்த இடத்தில் தேங்காய் எண்ணை தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.

அடிக்கடி அய்யோ அம்மாவா? -இடுப்பு வலி


சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக் கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும். பெருமாள் கோவில்களுக்கு சென்றாலும் துளசித் தீர்த்தம் கொடுப்பார்கள்.

* தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.

இளமையில் உழைப்போம்-கிருபானந்த வாரியார்


* எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.
* எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.
* சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.
* நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய உணவையும் உண்டு திருப்தி கொள்ளுங்கள்.
* தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுங்கள். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.
* இளமையில் வளையா விட்டால் முதுமையில் அல்லல்படவேண்டி வரும். இளமைப்பருவம் <உழைப்பதற்கு ஏற்றது. அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள்.
* உடம்பில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தாலும் கண் மிக முக்கியமானது. கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம். கண்ணைப் பார்த்தாலே ஒருவனின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.
வாரியார்