அகாசியின் கேசம் நிஜமானதல்ல!


முன்னாள் சாம்பியன் டென்னிஸ் வீரர் ஆந்ரே அகாசி, தான் போதைப்பொருள் பயன்படுத்தியது உண்டு என்று சமீபத்தில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் மனம் திறந்திருக்கும் மற்றொரு விஷயம், தனது `கேசம்’ பற்றிய விஷயம்.

தான் 1990-களில் `வைத்திருந்த’ சிங்கப் பிடரி பாணி கேசம் உண்மையில் ஒரு `டோப்பா’ என்ற உண்மையைத் தெரிவித்திருக்கிறார் அகாசி.

அவர் எழுதியிருக்கும் சுயசரிதையின் சில பகுதிகள் இங்கிலாந்து பத்திரிகைகளில் அண்மையில் வெளிவந்திருக்கின்றன. அதில் மேற்கண்ட விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியின்போது தன் தலைமுடியுடன் கூடுதலாகக் கொஞ்சம் முடியை `பின்’னைக் கொண்டு சேர்த்திருந்ததாக எழுதியுள்ளார் அகாசி. அது 1990-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டி. அப்போட்டியில் தான் தோற்றதற்கு தலைமுடியைப் பற்றிய தனது கவலையும் ஒரு காரணம் என்று அகாசி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அந்தப் போட்டிக்கு முன்னதாக வெற்றிக்காக அல்லாமல், போட்டியின்போது தலைமுடி கீழே விழுந்துவிடக் கூடாது என்றே தான் பிரார்த்தித்ததாகக் கூறுகிறார் அகாசி.

தனது தலைமுடி இழப்பைச் சரிகட்டும் விதமாக `டோப்பா’ அணியத் தொடங்கியதாகத் தெரிவிக்கும் அகாசி, “ஒவ்வொரு நாள் காலையில் எழுந்ததும் நான் எனது வேறொரு அடையாளத்தைக் காண்பேன். முகம் பார்க்கும் கண்ணாடி… அங்கு இங்கு என்று. அப்போது என்னை நானே கேட்டுக்கொள்வேன். நீ ஒரு `டோப்பா’வை அணிய வேண்டுமா? அதிலும் டென்னிஸ் களத்தில்?’ என்று. அதற்கு நானே, `வேறு என்ன செய்வது?’ பதில் கேள்வியும் கேட்பேன்.

பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முந்தைய நாள் இரவு அகாசி `டோப்பா’வுடன் குளிக்க, அது சிதைய ஆரம்பித்தது. சிக்கலும் தொடங்கியது. அது குறித்து, “அனேகமாக நான் அப்போது `டோப்பா’வை தவறாக அலசியிருக்கலாம்” என்கிறார் அகாசி.

அந்த நேரத்தில் பயந்துபோன அவர், தனது சகோதரர் பில்லியை அறைக்கு அழைத்தார். இருவரும் சேர்ந்து `டோப்பா’வை `கிளிப்’கள், `பின்கள்’ கொண்டு ஒரு மாதிரி அகாசியின் தலையில் பொருத்தினர்.

தற்போது 39 வயதாகும் அகாசி மேலும் இதுகுறித்து எழுதுகையில், “நான் `டோப்பா’ இல்லாமல் விளையாடியிருக்கலாம்தான். ஆனால் நான் ஆரம்பத்திலிருந்தே `டோப்பா’தான் அணிந்திருக்கிறேன் என்று அறிந்தால் பத்திரிகையாளர்கள் என்ன எழுதுவார்கள்? ஆட்டத்துக்கு முந்தைய சிறுபயிற்சியின்போது நான் பிரார்த்தனை செய்வேன். போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக அல்ல, தலைமுடி பறந்துவிடக் கூடாது என்பதற்காக.

ஒவ்வொரு தாவலின்போதும் `டோப்பா’ பறந்து தரையில் விழுவதாகக் கற்பனை செய்வேன். கோடிக்கணக்கான ரசிகர்கள் டிவிக்கு முன்னால் நன்றாக நகர்ந்து, கண்கள் விரியப் பார்த்து, எனது தலைமுடி எப்படி என் தலையிலிருந்து பறந்தது என்பதை ஆச்சரியத்துடன் பேசிக்கொள்வதை நான் மனக்கண்ணில் காண்பேன்.

`டோப்பா’வுடன் விளையாடும் போது…
அகாசியை முதலில் மொட்டைத் தலையுடன் தோன்ற வைத்தவர் அவரது முன்னாள் மனைவியான புரூக் ஷீல்ட்ஸ்தானாம். “நான் எஞ்சியிருக்கும் எனது முடிகளை மொட்டையடித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்தான் கூறினார். அது, நான் எனது பற்களை எல்லாம் உதிர்த்துவிட வேண்டும் என்பதைப் போல இருந்தது. எப்படியோ, அதைப் பற்றி நான் சில நாட்கள் யோசித்தேன். அது எனக்கு ஏற்படுத்திய சங்கடங்கள், அதை நான் மறைத்தது, அதற்காக நான் கூறிய பொய்கள் எல்லாம் என் நினைவுக்கு வந்தன.

ஆனால் நான் ஒரு முடிவுக்கு வந்தபோது, மொட்டைத் தலையுடன் ஒரு `புதியவன்’ என் முன் கண்ணாடியில் தோன்றி என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்” என்று முடிக்கிறார் அகாசி.

%d bloggers like this: