வீட்டுக் கடன் `டிப்ஸ்’!

உங்களுக்கு என்று ஒரு வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்வது தற்போது கொஞ்சம் எளிது. அதற்கு, வீட்டுக் கடனுக்குத்தான் நடுத்தர மக்கள் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் எந்த விவரமும் தெரியாமல் வீட்டுக் கடனுக்கு முயற்சிப்பது சரியல்ல. பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளிவந்தாலும், நீண்ட காலமாக நம்பிக்கையாகத் திகழும் வீட்டு வசதி நிறுவனம் அல்லது வங்கியைத் தேர்வு செய்வது நல்லது.

வீட்டில்தான் இதயம் இருக்கிறது! பெரும்பாலானவர்களுக்கு சொந்த வீடு என்பது வாழ்நாள் கனவு. சிறிது காலத்துக்கு முன்புதான் பொதுஜனத்துக்கு அது எட்டாத கனவாகத் தோன்றியது. நிலம், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை விண்ணை விசாரித்துக் கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.

ஆனால் தற்போது வீட்டுக் கடன்கள் மற்றும் வீட்டுவசதிக் கடன் நிறுவனங்களின் வளர்ச்சி காரணமாக, சராசரி வருமானமுள்ள எல்லோரும் சொந்தமாக ஒரு நிழலுக்கு ஆசைப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

வீட்டுக்கடன் எளிதாகக் கிடைக்கிறது என்பது மட்டுமல்ல, வீட்டு வசதித் துறையில் ஏற்பட்டுள்ள தீவிரப் போட்டி காரணமாக, தகுதிவாய்ந்த வாடிக்கையாளரை ஈர்ப்பதற்காக நிறுவனங்கள் எல்லா வகையிலும் இறங்கிவரத் தொடங்கியிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. பல புதுமையான வீட்டுவசதிக் கடன் திட்டங்கள் சந்தைக்கு வந்துள்ளன.

சரி, வீட்டுக் கடன் பெறுவதில் உதவும் `டிப்ஸ்’கள் என்னென்ன?

* வீட்டுக் கடன் பெறுவதற்கு பொதுவான `பார்முலா’ என்ற ஒன்று இல்லை. உங்களுக்கு நல்லதாக இருக்கக்கூடிய ஒன்று, மற்றொருவருக்கு நல்லதாக இருக்காமல் போகலாம். அதே மாதிரி, உங்களுக்கு நல்லதாக இல்லாத ஒரு திட்டம், இன்னொருவருக்கு அற்புதமானதாக இருக்கலாம். எனவே உங்கள் தேவைக்கு எந்தத் திட்டம் சரியாகப் பொருந்தும் என்று நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

* நீங்கள் உங்கள் தேவைகள், பணம் செலுத்துவதற்கான ஆதாரம், எதிர்காலத் திட்டம் ஆகியவற்றை வரையறுத்தபின், முக்கியமான கட்டம் வருகிறது. அது வீட்டு வசதி நிறுவனத்தைத் தேர்வு செய்வது. அதீத கவனத்துடனும், சரியான ஆலோசனையுடனும் வீட்டுக்கடன் நிறுவனத்தைத் தேர்வு செய்வது முக்கியமானது. நீங்கள் ஒரு வீட்டுவசதி நிறுவனம் அல்லது வங்கியுடன் நீண்ட காலத் தொடர்பு வைக்கப் போகிறீர்கள் என்பதால் அதன் பழைய கால வரலாற்றைப் பரிசோதிக்க வேண்டும். முடிந்தால், ஏற்கனவே குறிப்பிட்ட நிறுவனத்தில் கடன் பெற்ற சிலருடன் பேசி, அங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்படும் விதம் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

* ஒருவர் சொத்து விவகாரம் தொடர்பான பணிகளில் ஈடுபடும்போது, `ரியல் எஸ்டேட்’ மற்றும் `வீட்டுக் கடன்’ தொடர்பான துறை வார்த்தைகளால் மூச்சுத் திணற நேரிடும். முறையற்ற சக்திகளால் ஏமாற்றப்படாமல் தவிர்ப்பதற்கு ஒருவர் அந்த தொழில்ட்ப வார்த்தைகளுடன் நல்ல பரிச்சயத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியம். அந்த வார்த்தைகளை அறிந்த பின்னால், அவற்றுக்குப் பின்னால் பொதிந்துள்ள மறைமுக அர்த்தங்களை அறிவதும், அந்தக் கடினமான வணிக வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை அறிவதும் சற்று எளிது.

* வீடு வாங்குவது பெரும்பாலானோரின் கனவு. வீடு, நிலங்களின் விலை உயர்ந்துவந்த நிலையில், சராசரி வருமானம் உள்ள ஒருவருக்கு வீடு கட்டத் தேவையான பெருந்தொகையைத் திரட்டுவது என்பது கடினமே. அதனால் வீட்டுக்கடன் என்ற முறை உருவானது. தற்போது எண்ணற்ற வீட்டுவசதி நிறுவனங்களும், அவற்றுக்கு இணையான வங்கிகளும் வீட்டுக்கடனை வழங்கி வருகின்றன.

* சொந்த வீடு என்பது வாழ்வில் ஒரு பாதுகாப்பான உணர்வை அளிக்கிறது. ஒரு தைரியம், சாதித்த திருப்தி, பெருமித உணர்வை தருகிறது. சரியான வீட்டுக்கடன் நிறுவனத்தைத் தேர்வு செய்து, சரியான முறைகளை மேற்கொண்டு கடன் பெற்று வீட்டுக் கனவை நனவாக்கிக்கொண்டால் அது நிச்சயம் ஓர் இனிய அனுபவமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையே!

————————————————————-
சுருக்கக் குறிப்புகள் சில…

வீட்டுக்கடனை எளிதாகப் பெறுவதை உறுதிப்படுத்தும் சில சுருக்கமான குறிப்புகள் இங்கே…

* நீங்கள் மாதச்சம்பளம் பெறும் வேலையில் இருந்தால், அந்த வேலையில் குறிப்பிட்ட காலம் வரையிலாவது நீடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அடிக்கடி வேலை மாறுவது, வீட்டுக் கடன் பெறும் உங்களின் வாய்ப்பைப் பாதிக்கும்.

* அதிகமாகக் கடன் பெறுவதைத் தவிருங்கள். ஏற் கனவே கடன்கள் இருக்கும் நிலையில், புதிதாக ஒரு கடனை உங்களால் திருப்பிச் செலுத்த முடியா? என்ற சந்தேகத்தை எழுப்பும். காரணம் நீங்கள் பழைய கடனுக்கு கொடுத்தது போக மீதி உள்ள குறைவான பணத்தைக் கொண்டு வீட்டுக் கடனைச் செலுத்த வேண்டும்.

* நீங்கள் பெருந்தொகையைக் கடனாகப் பெற வேண்டுமானால், சீரான வருமானம் உள்ள ஒருவரை இணை விண்ணப்பதாரராகச் சேர்த்துக்கொள்வது பலன் தரும்.

* ஆடம்பரமாகச் செலவழிப்பதையும், வங்கியிலிருந்து பெருந்தொகையை எடுப்பதையும் தவிருங்கள். ஒரு நல்ல `பாலன்ஸை’ பராமரிப்பது உங்களின் வலுவான பொருளாதார நிலையையும், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனையும் எடுத்துக் கூறும்.

* விதிவிலக்குகள் உள்ளன என்றபோதும், 23 முதல் 48 வயதுக்கு இடைப்பட்டவர்களின் விண்ணப்பங்களை வங்கிகள் விரும்புகின்றன. ஓய்வுபெறும் வயதை நெருங்குபவர்களும், புதிதாக சம்பாதிக்கத் தொடங்கியிருப்பவர்களும் கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினம் என்று கடன் நிறுவனங்கள் நினைக்கின்றன.

* உங்களின் வருமானம், வயது, தகுதிகள், பொருளாதார நிலை, மற்ற கடப்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்து வங்கி உங்களுக்கு ஒரு தொகைக்கு ஒப்புதல் அளிக்கும்.

* வீடு அல்லது நிலம் அமைந்துள்ள இடம், கடன் பெறுவதற்குத் தகுதியை நிர்ணயிக்கும் மற்றொரு விஷயமாகும். மிகவும் தொலைதூரத்தில் உள்ள சொத்துக்குக் கடன் அளிப்பதற்கு சில வங்கிகள் விரும்புவதில்லை.

* உங்களுக்கான அடையாள அட்டை, முகவரிச் சான்று, சம்பளப் பட்டியல், `பான் கார்டு’ நகல், முதலீட்டு விவரங்கள், கடந்த ஆறு மாத காலத்துக்கான வங்கி அறிக்கை உட்பட சரியான ஆவணங்களைச் சமர்ப்பியுங்கள்.

* `டவுன் பேமண்டு’க்காக சொத்தின் மதிப்பில் 10 முதல் 15 சதவீதத் தொகையைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

%d bloggers like this: