Daily Archives: நவம்பர் 20th, 2009

கிருபானந்த வாரியார்- முருகனுக்குள் பிள்ளையார்


* இறைவன் ஒருவன் தான். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னார் திருமூலர். கடவுளை நாம் தான், நமக்குப் பிரியமான வடிவத்தில் குழந்தையாகவும், தாயாகவும், பெருமானாகவும் வைத்து வணங்குகிறோம். இஷ்டப்பட்ட ஒரு வடிவம் மனத்தில் தங்கி விடுகிறது.
* நெருப்பு என்று எடுத்துக் கொண்டால் அது சிவபெருமானின் வடிவம். அதன் சூடு பராசக்தி. அதன் செம்மை மகாகணபதி. அதன் ஒளி முருகப்பெருமான். எல்லாமே ஒன்று தான். ஆனால், அந்த ஒரே பொருளை வெவ்வேறு வாயிலாக நாம் உணர்கிறோம். நெருப்பு  சுடுகிறது. பிரகாசமாக இருக்கிறது. சிவந்த நிறத்தில் இருக்கிறது. ஆனால், நெருப்பு என்பது என்னவோ ஒரே பொருள் தான்!
* மலர் என்று எடுத்துக் கொண்டால் அதன் வண்ணம் கணபதி. வடிவம் பார்வதி. வாசனை முருகன். தாயிடம் இரண்டு குழந்தைகளும் இரு பண்புகளாக இருக்கின்றன. இதில், நமக்கு உகந்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். அதை இஷ்டமுடன் வழிபாடு செய்கிறோம். அதுவே இஷ்ட தெய்வம்.
* உங்களுடைய இஷ்ட தெய்வத்தை நீங்கள் எந்த உருவிலும் காணலாம். முருகனிடம் கூட நீங்கள் பிள்ளையாரைக் காணமுடியும். “”பிடித்தால் பிள்ளையார்” என்று சொல்லுகின்றனர் அல்லவா? அது இது தான்.

அபராதம் விதிப்பது சரியா? -வங்கிகள் `அபராதம்

வாடிக்கையாளர்கள் தங்கள் கடனை குறிப்பிட்ட காலத்துக்கு முன்னால் திருப்பிச் செலுத்தினால் வங்கிகள் `அபராதம்’ விதிப்பதற்குத் தனது அதிருப்தியை இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடனைக் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னால் முடித்தால் வங்கிகள், குறிப்பாகத் தனியார் வங்கிகள், அடிப்படைத் தொகையில் 2 முதல் 5 சதவீதம் வரையிலான தொகை அல்லது ஒரு கணிசமான தொகையை அபராதமாக விதிக்கின்றன.

கடன் விஷயத்தில் அளவுக்கு அதிகமான கவனத்துடன் இருக்கும், குறிப்பிட்ட காலத்துக்கு முன் கடனைச் செலுத்தி முடிக்கும் வாடிக்கையாளரை பல வங்கிகள் தண்டிக்கவே நினைக்கின்றன.

இந்த நியாயமற்ற முறை குறித்த புகார்கள் ரிசர்வ் வங்கிக்குக் குவிந்துள்ளன. அவற்றுக்குப் பதிலளிக்கும் விதமாக வங்கிகள், தாங்கள் ஒரு கடனை அளித்து, வருடக்கணக்கில் அதற்கு வரும் வட்டி வருமானத்தைக் கணக்கிட்டுள்ள நிலையில், கடனை முன்னதாகவே செலுத்துவது தங்களின் திட்டங்களைப் பாதிக்கின்றது என்கின்றனர்!

புதிய வாடிக்கையாளரைப் பிடிப்பதற்கு வங்கிக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்ப்பது, கடன் பெற்ற வாடிக்கையாளர் கடனை முன்னதாகச் செலுத்தி வங்கியின் பணிச்சுமை போன்றவற்றை அதிகரிப்பதைத் தடுப்பது ஆகிய நோக்கங்களின் அடிப் படையில் தண்டத் தொகை விதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஆச்சரியமூட்டும் வகையில், ரிசர்வ் வங்கி இவ்விஷயத்தில் கவலையையும் வருத்தத்தையும்தான் தெரிவித்துள்ளது. அதற்கு ஒரு காரணம், வங்கிகளின் ஒப்பந்த ஆவணங்களில் விதிக்கும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்.

ஒப்பந்தத்தில் முக்கியமாக, அபராதத் தொகை பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு தனிப்பட்ட ஒப்பந்தத்தில் தலையிடுவதில்லை என்ற நடைமுறையில் மாற்றம் செய்ய அதிகார வட்டம் விரும்பவில்லை.

ஆனால் இந்திய ஒப்பந்தங்கள் சட்டப்படி, ஓர் ஒப்பந்தத்தின் ஒரு பிரிவானது `நெறிமுறைகள் அல்லது பொதுக் கொள்கைக்கு எதிரானது’ என்றால் அதை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கி அந்த விதியைப் பயன்படுத்துவதற்கு இது சரியான நேரம், வெறுமனே அறிவுரை கூறிக்கொண்டிராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா வேகமாக மீள்கிறது

இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது என்று சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தப் பிராந்தியத்தின் மற்ற நாடுகளை விட குறிப்பிட்ட நாடுகளில் நிதிக் கொள்கைகளை நெருக்கிப் பிடிக்க அதிகார வட்டத்தினர் மீதான அழுத்தத்தை இது காட்டுகிறது என்று ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.

“சில சிறப்பு பிரிவுகளில், மீட்சியானது மிக வேகமாக முன்னேற்றம் அடைகிறது. எனவே வளர்ச்சித் தேக்கத்துக்கான இடைவெளி விரைவாகக் குறைந்து வருகிறது” என்று சியோலில் ஐ.எம்.எப். வெளியிட்ட பிராந்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளைத்தான் `சிறப்பு பிரிவு’கள் என்று ஐ.எம்.எப் குறிப்பிட்டுள்ளது.

ஐ.எம்.எப்.பின் கருத்தின் விளைவாக, வளர்ந்து வரும் பெரும் பொருளாதார நாடுகள் வட்டி விகிதங்களை அதிகரிக்கக்கூடும், பொருளாதாரத்துக்கான ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளை வாபஸ் பெறக்கூடும், வளர்ந்த நாடுகளுக்கு முன்னதாக அது நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உலக வர்த்தகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான அடிப்படைப் பணியாக வணிக சொத்துப் பிரிவுக்குக் கடன் வழங்குவதை இறுக்கமாக்கியுள்ளது.

வாழ வைக்கும் வைட்டமின்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.

அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும், எவற்றில் அந்த வைட்ட மின்கள் உள்ளன என்பது பற்றி பார்ப்போம் :

வைட்டமின் `ஏ’ : இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.

முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ’ அதிகம் காணப்படுகிறது.

வைட்டமின் `பி’ : இது குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.

கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

வைட்டமின் `சி’ : இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

வைட்டமின் `டி’ : வைட்டமின் `டி’ இல்லாவிட்டால் எலும்புகள் வலு
விழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.

போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி’ அதிகம் உள்ளது.

வைட்டமின் `ஈ’ : இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்தன்மையையும் உண்டாக்கும்.

கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

தாயினும் சிறந்தவர் கடவுள்-கிருபானந்த வாரியார்

* கண்ணால் பார்க்க முடியாது என்பதால் “கடவுள் இல்லை’ என்று சொல்லக்கூடாது. இந்த உடம்புக் குள்ளே உறைந்திருக்கும் உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? கண்ணால் காணமுடியாது என்பதால், நாம் உயிர் இல்லாதவர்கள் என்று கூறுவது சரியா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் இறைவனும் உறைந்திருக்கின்றனர்.
* சின்னஞ்சிறு உதவியைச் சரியான நேரத்தில் செய்தவர்களையே நாம் நன்றியோடு நினைக்க வேண்டும். ஆனால், இறைவன் செய்தது சிறு உதவியா? இல்லை பேருதவியாகும். தாயினும் சாலப் பரிந்து நம் மீது அன்பு காட்டுபவன் இறைவன். பெற்ற தாய் இப்பிறவிக்கு உரியவள் ஆவாள். ஆனால், இறைவனோ என்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் நமக்கு தாயாக இருக்கிறான்.
* கடவுள் அங்கு இங்கு என்று குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி, பிரகாசமாய் அருளுடன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். பாலில் உறையும் நெய் போல, இறைவன் இப்பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கிறார். இவ்வுலகத்தை மட்டுமே காணும் கண்களுக்கு கடவுள் தெரிவதில்லை. கடவுளை மட்டுமே காணும் கண்களுக்கு உலகம் புலப்படுவதில்லை.