அபராதம் விதிப்பது சரியா? -வங்கிகள் `அபராதம்

வாடிக்கையாளர்கள் தங்கள் கடனை குறிப்பிட்ட காலத்துக்கு முன்னால் திருப்பிச் செலுத்தினால் வங்கிகள் `அபராதம்’ விதிப்பதற்குத் தனது அதிருப்தியை இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடனைக் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னால் முடித்தால் வங்கிகள், குறிப்பாகத் தனியார் வங்கிகள், அடிப்படைத் தொகையில் 2 முதல் 5 சதவீதம் வரையிலான தொகை அல்லது ஒரு கணிசமான தொகையை அபராதமாக விதிக்கின்றன.

கடன் விஷயத்தில் அளவுக்கு அதிகமான கவனத்துடன் இருக்கும், குறிப்பிட்ட காலத்துக்கு முன் கடனைச் செலுத்தி முடிக்கும் வாடிக்கையாளரை பல வங்கிகள் தண்டிக்கவே நினைக்கின்றன.

இந்த நியாயமற்ற முறை குறித்த புகார்கள் ரிசர்வ் வங்கிக்குக் குவிந்துள்ளன. அவற்றுக்குப் பதிலளிக்கும் விதமாக வங்கிகள், தாங்கள் ஒரு கடனை அளித்து, வருடக்கணக்கில் அதற்கு வரும் வட்டி வருமானத்தைக் கணக்கிட்டுள்ள நிலையில், கடனை முன்னதாகவே செலுத்துவது தங்களின் திட்டங்களைப் பாதிக்கின்றது என்கின்றனர்!

புதிய வாடிக்கையாளரைப் பிடிப்பதற்கு வங்கிக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்ப்பது, கடன் பெற்ற வாடிக்கையாளர் கடனை முன்னதாகச் செலுத்தி வங்கியின் பணிச்சுமை போன்றவற்றை அதிகரிப்பதைத் தடுப்பது ஆகிய நோக்கங்களின் அடிப் படையில் தண்டத் தொகை விதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஆச்சரியமூட்டும் வகையில், ரிசர்வ் வங்கி இவ்விஷயத்தில் கவலையையும் வருத்தத்தையும்தான் தெரிவித்துள்ளது. அதற்கு ஒரு காரணம், வங்கிகளின் ஒப்பந்த ஆவணங்களில் விதிக்கும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்.

ஒப்பந்தத்தில் முக்கியமாக, அபராதத் தொகை பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு தனிப்பட்ட ஒப்பந்தத்தில் தலையிடுவதில்லை என்ற நடைமுறையில் மாற்றம் செய்ய அதிகார வட்டம் விரும்பவில்லை.

ஆனால் இந்திய ஒப்பந்தங்கள் சட்டப்படி, ஓர் ஒப்பந்தத்தின் ஒரு பிரிவானது `நெறிமுறைகள் அல்லது பொதுக் கொள்கைக்கு எதிரானது’ என்றால் அதை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கி அந்த விதியைப் பயன்படுத்துவதற்கு இது சரியான நேரம், வெறுமனே அறிவுரை கூறிக்கொண்டிராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

<span>%d</span> bloggers like this: